26 April 2014

டாஸ்மேனியன் டெவில் - ஆஸ்திரேலியாவின் அதிசயம் 9டாஸ்மேனியன் டெவில் (Tasmanian Devil) என்றால் Looney Tunes உபயத்தால் நம்மை விடவும் நம் குழந்தைகளுக்கு நன்றாகவே தெரியும். ஒரு குட்டி சூறாவளி போல் சுழன்றடித்து வந்து துறுதுறுவென்று எதையாவது தின்பதிலேயே குறியாயிருக்கும் ஒரு கேரக்டர். கொஞ்சம் முரட்டுத்தனம் கொஞ்சம் அப்பாவித்தனம் கலந்த Taz என்னும் டாஸ்மேனியன் டெவில் செய்யும் அட்டகாசங்கள் காண்போர் எவரையும் ரசிக்கவைக்கும்.


டாஸ்மேனியன் டெவில் ஆஸ்திரேலியாவைச் சார்ந்த தீவுமாநிலமான டாஸ்மேனியாவில் மட்டுமே காணப்படும் விலங்கு என்பது அதன் தனித்துவச் சிறப்பு. ஒரு அடி உயரமும் எட்டு முதல் பத்து கிலோ வரை எடையும், மிகப்பெரிய அகன்ற தலையும், குட்டையான தடித்த வாலும் கொண்ட இதன் உடலானது, ஆப்பிரிக்க கழுதைப்புலிகளைப் போல் முன்பக்கத் தோள்கள் உயர்ந்து உடல் பின்னோக்கி சரிந்து இருக்கும். ரோமம் கருநிறத்திலும் மார்பிலும் முதுகிலும் சிறிய அளவிலான வெண்ணிறத் தீற்றல்களுடனோ அவை இல்லாமலோ காணப்படும். வேகமாக ஓடக்கூடியவையாகவும், மரம் ஏறக்கூடியவையாகவும், நன்றாக நீந்தக்கூடியவையாகவும் இருப்பது இவற்றின் சிறப்பு.

சாதாரணமாக ஒரு மனிதனுடைய தலையின் எடை அவனுடைய உடல் எடையில் 8% இருக்குமாம். ஆனால் நன்கு வளர்ந்த டாஸ்மேனியன் டெவில்களுக்கு அவற்றின் தலை எடை உடல் எடையில் கிட்டத்தட்ட 25% சதவீதம் என்றால் வியப்பாக உள்ளதல்லவா? எண்பது கிலோ மனிதனுக்கு இருபது கிலோ தலை இருந்தால் எப்படியிருக்கும்? ஒவ்வொருவரும் தலைக்கனத்துடன் திரியவேண்டியதுதான்.


டாஸ்மேனியன் டெவில்கள் இரவு விலங்குகள். மலைப்பகுதிகளிலும், யூகலிப்டஸ் காடுகளிலும் விவசாய நிலங்களிலும் வசிக்கும் இவை, பகல் நேரங்களில் வளைக்குள்ளோ, உள்ளீடற்ற மரக்கட்டைகளுக்குள்ளோ படுத்துறங்கிவிட்டு, இரவுகளில் மட்டும் இரைதேடிப் போகும். இரைக்காக ஒவ்வொரு இரவும் தங்கள் இருப்பிடத்திலிருந்து கிட்டத்தட்ட 10 முதல் 50 கி.மீ. தூரம் வரை உலவக்கூடியவை. குளிர் நாட்களில் மட்டும் பகல் நேரங்களில் வெயிலில் படுத்து குளிர்காய்வதைக் காணலாம்.

பூச்சிகள் மீன்கள், பறவைகள், தவளைகள் போன்றவற்றோடு போஸம் போன்ற சின்னச்சின்ன விலங்குகளையும் வேட்டையாடித் தின்னும். கங்காரு இனத்தில் சிறியவைகளான வல்லபிகள் என்றால் மிகவும் இஷ்டம். நீண்ட கூரான கால் நகங்கள் வளை தோண்டவும், வேட்டையாடும் மிருகங்களை இறுகப் பற்றவும் உதவுகின்றன. இல்லையெனில் ஏழு கிலோ எடையுள்ள டாஸ்மேனியன் டெவிலால் முப்பது கிலோ எடையுள்ள வாம்பேட்டை வீழ்த்தமுடியுமா? தனியாக வேட்டையாடினாலும் விருந்தெண்ணவோ சமபந்திதான். ஆம். தனித்தனியாக வாழும் அவை இரையுண்ணும்போது பல ஒன்றாக சேர்ந்து உண்பதும், அனைத்தும் ஒரே இடத்தைப் பொதுக் கழிப்பிடமாக உபயோகிப்பதும் விந்தை!


டாஸ்மேனியன் டெவில்கள் அடிப்படையில் scavengers அதாவது இறந்து அழுகியவற்றைத் தின்று வாழும் விலங்குகள். காட்டுக்குள் எந்த இடத்தில் விலங்குகள் இறந்துகிடந்தாலும் தன் அதீத மோப்பத்திறனால் அந்த இடத்தைக் கண்டறிந்துவிடும். ஒரு இறந்த விலங்கின் உடலை பல டாஸ்மேனியன் டெவில்கள் சூழ்ந்திருப்பதைப் பார்க்கையில் குப்பைத் தொட்டியை நாய்கள் முற்றுகையிட்டிருப்பதைப் போல் இருக்கும். நாய்களைப் போலவே, இவற்றிலும் ஆளுமை மிக்கது மற்றவற்றை விரட்ட முனைவதும், தங்களுக்குள் மூர்க்கமாகச் சண்டையிட்டுக் கொள்வதையும் கூட காணமுடியும். அவற்றின் நீளமான மீசை மயிர்கள் அந்த சமயத்தில் மிகவும் உதவுகின்றனவாம். இறந்துகிடக்கும் மிருகமொன்றை இருளில் பல டாஸ்மேனியன் டெவில்கள் தின்னும்போது தனக்குப் பக்கத்தில் எவ்வளவு தூரத்தில் இன்னொரு டாஸ்மேனியன் டெவில் இருக்கிறதென்பதை மிகுந்த தொடுதிறன் கொண்ட தங்கள் மீசை மயிர் மூலம் அறிந்து எச்சரிக்கையாய் இருக்குமாம்.

டாஸ்மேனியன் டெவிலின் உயிரியல் பெயரான Sarcophilus harrisii என்பதற்கு மாமிச விரும்பி என்று பொருள். கார்ட்டூன்களில் காட்டுவதைப் போன்று எதையும் கடித்துத் தின்னும் வகையில் பலம் வாய்ந்த தாடைகளும் நீண்ட கூரிய பற்களும் கொண்டவை. டாஸ்மேனியன் டெவில்கள் ஒரு விலங்கைத் தின்னும்போது அதன் உடலில் எலும்பு, ரோமம் என்று எதையும் விட்டுவைப்பதில்லை. முள்ளம்பன்றி போன்ற எக்கிட்னாவை அதன் முட்களுடனேயே தின்று முட்களை கழிவோடு வெளியேற்றிவிடக்கூடியவை என்றால் அவற்றின் சீரணத் திறனை வியக்காமலிருக்க முடியுமா?பெரும்பாலான ஆஸ்திரேலிய விலங்குகளைப் போலவே டாஸ்மேனியன் டெவிலும் ஒரு மார்சுபியல் விலங்குதான். இது ஒரு வளைவாழ் உயிரி என்பதால், வளை தோண்டும்போது வயிற்றுப்பைக்குள் மண் புகுந்து குட்டிகளை பாதிக்காமலிருக்க ஏதுவாக இதன் வயிற்றுப்பை பின்னோக்கியத் திறப்பு கொண்டது. இதன் இனப்பெருக்க காலம் மார்ச் முதல் மே வரை.

டாஸ்மேனியன் டெவில்களின் இனப்பெருக்கமுறை விசித்திரமானது. இன்னார்க்கு இன்னாரென்ற எந்த வரைமுறையுமின்றி ஒரு ஆண் பல பெண்களோடும், ஒரு பெண் பல ஆண்களோடும் இணையும். இரண்டு ஆண் டாஸ்மேனியன் டெவில்கள் தங்கள் ஆளுமையை நிரூபிக்க தங்களுக்குள் சண்டையிடும்போது சுமோ வீரர்கள் மல்யுத்தம் புரிவதைப் போன்று பின்னங்கால்களால் நின்றுகொண்டு முன்னங்கால்களாலும் தலையாலும் எதிரியின் தோள்களில் மோதித்தள்ளும். முடிவில் வெற்றி பெற்ற ஆணுடன் பெண் இணையும். அதன்பின் கரு உறுதியாகும்வரை, அதாவது பிறக்கவிருக்கும் குட்டிகளுக்கு தான்தான் தகப்பன் என்பது உறுதியாகும்வரை தொடர்ந்து சில நாட்களுக்கு ஆண், தன் இணையை எங்கும் வெளியில் செல்லவிடாமல் தன் பாதுகாப்பிலேயே வைத்துக்கொள்ளும். இல்லாவிடில் பெண் அந்த ஆணை விட்டு அடுத்த ஆளுமை நிறைந்த ஆணிடம் சென்றுவிடுமாம்.


21 நாள் கர்ப்பத்துக்குப் பிறகு பெண் டாஸ்மேனியன் டெவில் இருபது முதல் முப்பது வரையிலான குட்டிகளை ஈனும். டாஸ்மேனியன் டெவிலின் குட்டிகள் ‘pups, joeys, imps’ என்ற பெயர்களில் குறிப்பிடப்படுகின்றன. இளஞ்சிவப்பு வண்ணத்தில் நெல்மணி அளவிலான புழு போன்ற குட்டிகள் பிறந்த நொடியிலிருந்தே அவற்றின் வாழ்க்கைப் போராட்டம் துவங்கிவிடுகிறது. ஏனெனில் இவற்றுள் நான்கே நான்கு குட்டிகளுக்கு மட்டுமே வாழ்வதற்கான சந்தர்ப்பத்தை அளிக்கிறது இயற்கை. தாயின் வயிற்றுப்பைக்குள் இருக்கும் நான்கு பால்காம்புகளை நோக்கி முட்டிமோதி ஒன்றையொன்று முந்திச் சென்று தங்கள் பிறப்பைத் தக்கவைக்க வேண்டிய நிர்ப்பந்தம்.பந்தயத்தில் வென்ற நான்கு குட்டிகள் பால்காம்புகளைக் கவ்விக்கொள்ள வாய்க்குள் அவை வீங்கி குட்டியைப் பத்திரமாகப் பிடித்துக்கொள்கின்றன. மற்ற குட்டிகளின் கதி? அதோகதிதான். வாழ்க்கைப் போராட்டத்தில் வலிமையுள்ளவை மட்டுமே வாழும் என்ற நியதியை நினைத்து நம் மனத்தை சமாதானப்படுத்திக் கொள்ளமுயன்றாலும் உள்ளே எங்கோ ஓர் ஆழத்தில் வலிப்பதென்னவோ உண்மை.பிறக்கும்போது 0.02 கிராம் எடையுள்ள குட்டிகள் நூறு நாளில் 200 கிராம் எடையளவுக்கு வளர்கின்றன. ஐந்து மாதங்கள் வரை தாயின் வயிற்றுப்பைக்குள் வாழும் குட்டிகள் அதன் பின்னர், வளைக்குள் புல்லால் அமைக்கப்பட்ட மெத்தைப்படுக்கையில் விடப்படுகின்றன. மனிதர்கள் புழங்கும் பகுதியாயிருந்தால் தாய், வீடுகளிலிருந்து துணி, போர்வை, தலையணைகளைத் திருடிவந்து குட்டிக்கு வசதி செய்து தரும். அடுத்த ஐந்தாவது மாதத்தில் குட்டிகள் தன்னிச்சையாய் இயங்க ஆரம்பித்துவிடுகின்றன. இரண்டு வருடங்களில் பருவத்துக்கு வரும் அவற்றின் மொத்த ஆயுட்காலமே ஐந்தாறு வருடங்கள்தாம்.


டாஸ்மேனியன் டெவிலின் கரியநிறமும், கூரிய பற்களும், பிணந்தின்னும் வழக்கமும், முதுகுத்தண்டை சில்லிடச்செய்யும் வண்ணம் வீறிட்டலறும் ஒலியும், அதன் உடலிலிருந்து வெளிப்படும் வீச்சமும், இரையுண்ணுகையில் ஒன்றுக்கொன்று காட்டும் மூர்க்கமும் ஐரோப்பியக் குடியேறிகளை அச்சுறுத்தியதில் வியப்பென்ன? பேய் என்று ஒன்று இருந்தால் இப்படித்தான் இருக்கும் என்று அவர்களை எண்ணவைத்து டெவில்கள் என்று பெயரிடத் தூண்டியுள்ளது. தாமாக அன்பை வெளிப்படுத்தவோ, நாம் வெளிப்படுத்தும் அன்பைப் புரிந்துகொள்ளவோ இயலாத டாஸ்மேனியன் டெவில்களை எவரும் செல்லப்பிராணியாக வளர்க்க விரும்புவதில்லை. டாஸ்மேனியப் பழங்குடியினர் இதற்கு வைத்தப் பெயர்கள் tarrabah, poirinnah,  par-loo-mer-rer, Purinina போன்றவை. ஆனால் இதில் எந்த வார்த்தைக்கும் பேய் என்ற பொருளில்லை என்பது சுவாரசியம்.


டாஸ்மேனியன் டெவில்கள் மனிதர்களைத் தின்னும் என்னும் நம்பிக்கை இன்னும் சில மக்களிடையே உள்ளது. புதர்க்காடுகளில் கொலை, தற்கொலைகள் காரணமாக கிடக்கும் உடல்களை டாஸ்மேனியன் டெவில்கள் தின்னுவதைக் கண்டவர்கள் எழுப்பிய அச்சமாக இருக்கலாம் என்று கூறப்பட்டாலும் எவரும் புதர்க்காடுகளில் தனியே செல்வதற்குத் துணிவதில்லை.

1954 ஆம் ஆண்டுதான் Looney Tunes –ஆல் முதன் முதலில் டாஸ்மேனியன் டெவில் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. 1964 வரை சக்கைப்போடு போட்ட அந்த கேரக்டர் அதன்பிறகு கிடப்பில் போடப்பட்டுவிட்டது. 1990 இல் அந்த கேரக்டரை மறுபடியும் Taz-Mania என்ற பெயரில் அறிமுகப்படுத்த மீண்டும் அது பிரபலமாயிற்று. தங்கள் நாட்டைச் சார்ந்த ஒரு விலங்குக்கு உலகளவில் இருக்கும் மகத்துவம் அறிந்த பல டாஸ்மேனிய நிறுவனங்களும், அமைப்புகளும் தங்களுக்கு இல்லாத உரிமையா என்ற எண்ணத்தில் தங்கள் விளம்பரத்துக்கு இந்த உருவத்தைப் பயன்படுத்த ஆரம்பித்திருந்தன.


1997 இல் ஒரு பத்திரிகை, டாஸ்மேனியன் டெவில் என்ற பெயரும் உருவமும் சட்டப்படி வார்னர் பிரதர்ஸுக்கு உரிமையானது என்று பிரச்சனையைக் கிளப்பிவிட, அது குறித்து வருடக்கணக்காக வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றன. முடிவில் டாஸ்மேனியாவின் பிரதிநிதி ஒருவரும் வார்னர் பிரதர்ஸ் நிறுவனமும் சந்தித்து வாய்மொழி ஒப்பந்தமொன்றை பரிமாறிக்கொணடனர். அதன்படி டாஸ் என்னும் டாஸ்மேனியன் டெவில் சின்னத்தைப் பயன்படுத்துவதற்காக, வருடந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை வார்னர் பிரதர்ஸுக்கு டாஸ்மேனிய சுற்றுலாத்துறை செலுத்திவிடவேண்டுமென்று அறிவிக்கப்பட்டது. ஆனால்சமீப காலமாக, டாஸ்மேனியன் டெவில்களைத் தாக்கும் முகப்புற்றுநோய் ஆராய்ச்சிக்காக டாஸ்மேனிய அரசு ஏராளமாய் செலவழிப்பதை அறிந்த வார்னர் பிரதர்ஸ் நிறுவனம், அந்த ஒப்பந்தத்தை 2006 ஆம் ஆண்டிலிருந்து விலக்கிக்கொண்டுவிட்டதாம். 

மார்சுபியல் தாவர உண்ணிகளில் பெரியது கங்காரு எனில் மார்சுபியல்  மாமிச உண்ணிகளில் பெரியது டாஸ்மேனியன் டெவில். இதற்குமுன் வாழ்ந்த மிகப்பெரிய மார்சுபியல் மாமிச உண்ணி தைலாஸின் (thylacine). 1936 இல் உலகின் கடைசி தைலாஸின் இறந்துபோன பிறகு அடுத்ததாய் அப்பெருமை இதைச் சார்ந்துள்ளது. ஆனால் இவையும் இப்போது அருகிவரும் உயிரினங்கள் பட்டியலில் இடம்பிடித்துவிட்டன. இனம் தழைப்பதற்கான முயற்சி எடுக்கப்படாவிடில் இன்னும் இருபத்தைந்து ஆண்டுகளில் இவ்வினம் முற்றிலுமாய் அழிந்துவிட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


தைலாஸின் எனப்படும் டாஸ்மேனியன் டைகர்

ஆஸ்திரேலியப் பெருநிலப்பரப்பில் கிட்டத்தட்ட 3000 வருடங்களுக்கு முன்புவரை அவை வாழ்ந்திருந்ததாக பெரும்பாலான புதையெலும்புப் படிமச்சான்றுகள் தெரிவிக்கின்றன. தெற்கு ஆஸ்திரேலியாவில் கிடைத்த ஒரு பல் ஆஸ்திரேலியாவில் 450 ஆண்டுகளுக்கு முன்புவரை டாஸ்மேனியன் டெவில்கள் வாழ்ந்திருக்கலாம் என்னும் கருத்தை முன்வைத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் பெருநிலப்பரப்பில் 15000 ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகமான டிங்கோ நாய்களின் பெருக்கம் காரணமாக இவை அங்கு அழிந்துபோயிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

டாஸ்மேனியாவில் டிங்கோ நாயினம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவற்றுக்கு பதில் செந்நரிகள் உண்டு. அவை டாஸ்மேனியன் டெவில்கள் வளையில் இல்லாத நேரங்களில் வளை புகுந்து குட்டிகளைக் கொன்றுதின்றுவிடும். சட்டத்துக்குப் புறம்பான வகையில் டாஸ்மேனியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட செந்நரிகள்  மற்றும் வளர்ப்பாரின்றித் திரியும் நாய்கள், பூனைகள் இவற்றின் எண்ணிக்கை டாஸ்மேனியன் டெவில்களால் மட்டுமே கட்டுக்குள் வைக்கப்படுகிறது.


1990 களின் பிற்பகுதியில் டாஸ்மேனியன் டெவில்களைத் தாக்க ஆரம்பித்த முகப்புற்றுநோய் காரணமாக அவற்றின் இறப்புவிகிதம் பெருமளவில் அதிகரித்து எண்ணிக்கை சரியத் தொடங்கியது. 2008 ஆம் ஆண்டு அவை அருகிவரும் இனமாக அறிவிக்கப்பட்டன. நோய்த்தடுப்பு வழிமுறைகள் பற்றியும் சரணாலயங்கள் அமைத்து நோயற்ற சந்ததிகளை உருவாக்கும் முயற்சிகள் பற்றியும் டாஸ்மேனிய அரசு நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. சுற்றுலாப் பயணிகளைக் கவரும்பொருட்டு டாஸ்மேனியாவில் 19 மீட்டர் உயரமும் 35 மீட்டர் நீளமும் கொண்ட பிரமாண்ட டாஸ்மேனியன் டெவில் சிலையொன்று பல மில்லியன் டாலர்கள் செலவில் நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  

காடுகளிலும் வயற்புறங்களிலும் இறந்துபோன மிருகங்களை உடனுக்குடன் தின்று சுத்தப்படுத்தும் துப்புரவுப் பணியாளர்களான அவை இல்லையென்றால்….? அங்கங்கே நாறிக்கிடக்கும் அழுகிய பிணங்களால் நோய்களும் கிருமிகளும் காட்டு மிருகங்களுக்கு மட்டுமல்ல, கால்நடைகளுக்கும் மனிதர்களுக்கும் கூட பரவும் அபாயம் உள்ளது. காடு வளமாயிருந்தால்தானே நாடு வளம்பெற முடியும்! 

******************************

(படங்கள்:  நன்றி இணையம்)

21 April 2014

மலாக்கி என்றொரு அசடன் - ஆஸ்திரேலியக் காடுறை கதை 6
நெகுநெகுவென்று வளர்ந்த ஒடிசலான தேகமும், கூன் விழுந்தாற்போன்று உட்பக்கம் குழிந்த தோள்பட்டைகளும், பரட்டைத்தலைமயிரும் மலாக்கியை சற்றே அசாதாரணமாய்க் காட்டிக்கொண்டிருந்தன. கால்நடைப் பண்ணையிலிருந்த பையன்கள் அனைவரும் மலாக்கியை மிகப்பெரிய அசடனென்று கருதினோம். அவனொரு மூடன் என்பதிலும் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை

ஒரே ஒருமுறை ஒரு சிறிய பயணமாக சிட்னி நகரத்துக்குப் போய்வந்திருந்ததைத் தவிர, அவன் தன் வாழ்நாளில் தான் பிறந்துவளர்ந்த குறுங்காட்டுப்பகுதியை விட்டு வெளியே எங்கும் சென்றது கிடையாது. நகரத்திலிருந்து அவன் திரும்பிவந்தபோது அவனுடைய நரம்புகளில் ஒருவித அதிர்வை உணர்ந்திருந்தான் என்பது உண்மை. நகரத்துக்குப் போய்வந்த அனுபவத்தைப் பற்றி அவன் வாயிலிருந்து ஒற்றை வார்த்தையைப் பெறுவதென்பது அத்தனை எளிதான காரியமன்று

அவனுக்கு அதைச் சொல்லும் திறமையில்லை என்று சொல்லிவிடமுடியாது. அது அவனுடைய விவரிப்புகளுக்கு அப்பாற்பட்டிருந்தது என்று வேண்டுமானால் சொல்லலாம்அவன் போய்வந்து பல வருடங்களாகிவிட்ட நிலையில், அதைப்பற்றி இப்போது கேட்டாலும் அவன் முகம் மாறிவிடும். கண்களை இடுக்கி, தலையைச் சொறிந்தபடி மிகவும் மெலிதான நிதானமான குரலில் சொல்வான், “ம்சந்தேகமேயில்லைஅபாயத்தின் அறிகுறி அது!” நகரங்கள் இருக்கும்வரைக்கும் மலாக்கியின் வருத்தமும் இருந்துகொண்டுதான் இருக்கும்.

மலாக்கி உணவுக்காகவும் தங்குவதற்காகவும் வாரத்துக்கு ஒரு பவுண்டு செலவழிப்பது போக வேறெதற்கும் செலவு செய்வதில்லை. அவன் எப்போதும் பழைய நைந்துபோன உடுப்புகளையே உடுத்தியிருப்பான். பையன்களாகிய நாங்கள் எங்களுக்கு விருப்பமின்றிக் கொடுக்கப்படும் வேலைகளைக் காலவரையறையின்றி ஒத்திப்போட, “மலாக்கி புதிய உடை வாங்கும்போது….” என்னும் உவமையைக் கையாண்டோம். நாங்கள் எப்போதும் அவனைக் கேலிபேசுவதில் இன்பம் கண்டோம். அவன் 

எங்களுக்காகவே படைக்கப்பட்ட கோமாளியென்றே எண்ணினோம். அவன் மிக அரிதாகவே குறைப்பட்டுக்கொள்வான். அதற்கு மேல் போனால்என்னிடம் வம்பு வளர்க்காதீங்கஎன்பதை திரும்பத் திரும்ப சொல்வதன் மூலமே தன் கண்டனத்தைத் தெரிவிப்பான்நாங்கள் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காவிடில் அவனிடத்தில் மிகவும் கொடூரமான முறையில் வரம்பு மீறி நடந்துகொள்வோம். அப்போது அவன் தன்னைத்தானே நொந்தபடி மிகவும் வருத்தம் தொணிக்கும் குரலில் முணகிக்கொள்வான், “ம்சந்தேகமேயில்லைஅபாயத்தின் அறிகுறி அது!” 

மலாக்கி தூங்கும்போது அவனறியாமல் அவன் கால்சட்டையின் இரு குழாய்களையும் ஒன்றாகத் தைத்துவிடுவது, கட்டிலின் கால்களைக் கழற்றுவது, அவனுடைய புகைபிடிக்கும் குழாயில் வெடிமருந்தை நிரப்பிவைப்பது போன்ற எளிய வேடிக்கைகளில் எங்கள் மனம் திருப்தியடையவில்லை. வேடிக்கை வித்தைகளில் தேர்ந்த கலைஞர்களைப் போன்று நாங்கள் மேலும் முன்னேற விரும்பினோம்மலாக்கிக்கு அதிக எழுத்துக்களைக் கொண்ட நீளமான வார்த்தைகளின் மேல் தீராத வெறுப்பு உண்டு என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். அவன் பெருமதிப்பு வைத்திருக்கும் ஒருவர் அத்தகைய வார்த்தைகளை உபயோகிப்பதொன்றே போதுமானது, அவர்மீதான மதிப்பை இவன் மீளப்பெற்றுக்கொண்டுவிட.

நான் நீளமான வார்த்தைகளை வெறுக்கிறேன்என்பான் அவன். “என்னிடம் ஒரு புத்தகம் இருக்கிறது. எனக்குத் தேவையென்றால் அந்தப்புத்தகத்திலிருந்து வார்த்தைகளை எடுத்து என்னால் உபயோகிக்கமுடியும், ஆனால் நான் அதை விரும்புவதில்லை.” அவன் குறிப்பிடுவது ஒரு பழைய அகராதியைத்தான். நீளமான வார்த்தைகளை வெறுப்பதற்கு நிகராக அவன் எதிர்பாலினத்தினரையும் வெறுத்தான். இதை அறிந்திருந்த நாங்கள் ஒரு பெண்ணின் கையெழுத்தைக் கொண்டு நீள நீளமான வார்த்தைகள் அமைத்து, அவன் மீறிவிட்டதாக பல்வேறு வாக்குறுதிகளைக் குறிப்பிட்டு பயங்காட்டி அவனுக்கு கடிதம் எழுதுவோம்.

இவற்றையெல்லாம் செய்வதன் மூலம், அவனுடைய வாழ்க்கையை அவன் சுமையாக உணர்வதில் நாங்கள் ஆனந்தமும் களிப்பும் அடைந்தோம். நாங்கள் சொல்லும் எல்லாவற்றையும் அவன் நம்பினான். நாங்கள் முகத்தில் எந்த மிகையுணர்வும் காட்டாமல் இயல்பாய் சொல்லும்  நம்பமுடியாத கட்டுக்கதைகளை அவன் ஏற்றுக்கொண்டான். சிலநேரங்களில் எங்கள் கதைகள் அத்தனையும் அபாயத்தின் அறிகுறிகள் என்பான். அவ்வளவுதான், வெறோன்றும் சொல்வதில்லை.

பண்ணைவீட்டுக்கு ஏதோ வேலையாக கொத்தனார் ஒருவர் வந்தபோதுதான் மலாக்கியின் மீதான எங்கள் வேடிக்கைகள் உச்சமாய் அரங்கேறின. கொத்தனார் ஒருவகையில் மண்டையோட்டு நிபுணத்துவம் பெற்றவராயிருந்தார். மண்டையோட்டு நிபுணத்துவம் என்பது ஒருவருடைய மண்டையோட்டின் அமைப்பைக் கொண்டு அவருடைய குணாதிசயங்களைக் கணிப்பது. எதிரிலிருப்பவனின் முகபாவங்களைக் கொண்டும் அவனுடைய குணாதிசயங்களை மிகத்துல்லியமாய் எடைபோடக்கூடியவராயிருந்தார். அவர் ஆவிகளோடும் பேசக்கூடியவராய் இருந்தார். அவருடைய இதுபோன்ற செய்கைகளால் அதிருப்தி அடைந்திருந்த முதிய முதலாளிகள் இருவரும் அவரோடு இனி எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்வதில்லை என்று முடிவெடுத்திருந்தனர்.

கொத்தனாரைக் கண்டாலே பீதியில் உறையும் மலாக்கி, ஆரம்பத்திலிருந்தே அவர் பார்வையில் படாமல் மிகவும் எச்சரிக்கையோடு தவிர்த்துவந்திருந்தான். ஆனால் ஒருநாள் அவர், பையன்களுக்கு ஆவி தொடர்பான சில விநோத வேடிக்கைகளை செய்துகாட்டிக் களிப்பூட்டிக்கொண்டிருந்தபோது அறையில் அவனும் இருக்கநேர்ந்தது. அவர் ஆவிகளோடு பேசும் சமயம், மலாக்கி பயத்தில் உறைந்த முகத்துடன் அமர்ந்திருந்தான். அது முடிந்ததும் நாங்கள் அவரிடம் மலாக்கியின் மண்டையோட்டைப் படித்துச் சொல்லும்படி கேட்டுக்கொண்டோம்

மலாக்கி தப்பியோடிவிடுமுன் அவனைப் பிடித்து அறையின் நடுவில் நாற்காலியில் அமர்த்தினோம். கொத்தனார் தன் விரல்களை அவன் தலை முழுவதும் ஓடவிட்டார்அவரின் கைவிரல்களுக்கு மத்தியில் மலாக்கியின் தலைமுடிகள் ஒவ்வொன்றும் குத்திட்டு நின்றதை என்னால் இன்னும் மறக்கமுடியவில்லை. பலத்த நம்பிக்கையோடு பார்வையாளர்கள் வியந்து ஆர்ப்பரிக்க, பெண்கள் தங்களுக்குள் நகைத்துக்கொண்டனர். சிறிது நேரத்தில் மலாக்கி தனக்குத்தானே முணுமுணுத்தான், “ம்சந்தேகமேயில்லைஅபாயத்தின் அறிகுறிதான் இது!’

மறுநாள் மலாக்கி வேலைநேரத்தில் தன் மண்வாரியில் சாய்ந்தபடி, தொப்பியை ஒருகையால் முன்னிழுத்துக்கொண்டு மறுகையால் பின்மண்டையை அடிக்கடி தொட்டுப்பார்த்துக்கொண்டிருந்தான். நாங்கள் மலாக்கியிடம் ஓடிச்சென்று கொத்தனார் தன் மண்டையோட்டு நிபுணத்துவத்தில் வெறியாக இருப்பதாகவும், ஆராய்ச்சிக்காகப் பலரைக் கொன்று அவர்களது மண்டையோட்டை எடுத்துச்செல்வதாகவும் சொன்னோம். மேலும் மலாக்கியின் மண்டையோடு மிகவும் அபூர்வமானது என்று அவர் குறிப்பிட்டதாகவும் சொல்லி அவனை மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கச்சொன்னோம்

மலாக்கியின் குடிசை பண்ணையிலிருந்து சற்று தொலைவில் இருந்தது. ஒருநாள் இரவு மலாக்கி தன்வீட்டில் கணப்படுப்புக்கு அருகில் அமர்ந்து புகைத்துக்கொண்டிருந்தான். கதவை மெல்லத் திறந்தபடி உள்ளே நுழைந்தார் கொத்தனார். அவர் கையிலிருந்த துணிப்பைக்குள் ஒரு சிறிய பரங்கிக்காய் இருந்தது. அவர் அந்தப்பையை தன் கால்களுக்கிடையில் தொம்மென்று தரையில் வைத்துவிட்டு பலகையில் அமர்ந்தார். மலாக்கி பேரச்சத்தால் பீடிக்கப்பட்டிருந்தாலும் ஒருவாறு சமாளித்துத் திணறியபடிவணக்கம்என்றான்.

வணக்கம்!” என்றார் கொத்தனார்அங்கே பயமுறுத்தும் வகையில் அமைதி நிலவியது. சற்றுநேரத்தில் அமைதியை உடைத்தபடி கொத்தனார் கேட்டார், “எப்படியிருக்கிறாய் மலாக்கி?”

.. நன்றாக இருக்கிறேன்பதிலளித்தான் மலாக்கிசற்றுநேரம் இருவரும் எதுவும் பேசவில்லை. தன் படபடப்பைக் கட்டுப்படுத்தியபடி மலாக்கி கொத்தனாரிடம் அவர் எப்போது பண்ணையை விட்டுப்போவார் என்று கேட்டான்.

நாளை விடியற்காலையில் கிளம்புகிறேன், இப்போது ஜிம்மி நோலெட்டின் வீட்டுக்குப் போய்விட்டு வருகிறேன். வழியில் உன் வீட்டைப் பார்க்கவும் உன்னை விசாரித்துவிட்டு உன் தலையைக் கேட்டுப் போகலாம் என்று வந்தேன்என்றார்.

என்ன?”

நான் உன் மண்டையோட்டுக்காக வந்திருக்கிறேன்.”

மலாக்கி அதிர்ச்சியில் உறைந்துநின்றான்.

இதோ பார், ஜிம்மி நோலெட்டின் தலை இதில்தான் இருக்கிறது” 

அவர் பையைத் தூக்கி, உள்ளிருப்பதை பெரும் ஆர்வத்துடன் தொட்டுக்காட்டினார். அது கிட்டத்தட்ட நாற்பது பவுண்டுகள் எடையுள்ளதாய் இருக்கும்.

நான் கோடரியால் வெட்டும்போது அவனுடைய மண்டையின் ஒருபகுதியை சிதைத்துவிட்டேன். இரண்டுமுறை வெட்டியிருந்திருக்க வேண்டும். ஆனால் போனதை நினைத்து இனி வருந்தி என்ன லாபம்?”

சொல்லிவிட்டு மரப்பிடி கொண்ட சுத்தியலை பையிலிருந்து வெளியே எடுத்து அதிலிருந்த இரத்தம் போன்ற எதையோ தன் சட்டையில் துடைத்துக்கொண்டார். மலாக்கி வெளியில் ஒடும் முயற்சியாக வாசலை நோக்கி விரைந்தான். ஆனால் அவனுக்கு முன் அங்கே அந்த மண்டையோடுவிரும்பி வந்து நின்றார்.

கடவுளின் பெயரால் சொல்கிறேன். நீங்கள் என்னைக் கொன்றுவிடக்கூடாதுதிணறினான் மலாக்கி.

இல்லையென்றால் வேறெந்த வழியில் உன் மண்டையோட்டைப் பெறுவது?”

..” தவித்தான் மலாக்கி. அப்போதுதான் அவனுக்கு அர்த்தமற்றதும் அதேசமயம் வேடிக்கையானதும் விசித்திரமானதுமான ஒரு உபாயம் தோன்றியது. அதை அவன் இயலாமையுடன் தெரிவித்தான்

இங்கே பாருங்கள், நான் சாகும்வரைக்கும் நீங்கள் காத்திருந்தால் என் மண்டையோடு என்ன, என் எலும்புக்கூடு முழுவதையுமே நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.”

எனக்கு இப்போதுதான் வேண்டும்கொத்தனார் அழுத்தமான குரலில் சொன்னார், “என்னை என்ன முட்டாளென்று நினைத்தாயா? இந்த ஏமாற்று வேலையெல்லாம் என்னிடத்தில் ஆகாது. நீ அமைதியாயிருந்தால் வேலை சீக்கிரம் முடியும், இல்லையென்றால்…”

மிச்சத்தை அவர் சொல்லிமுடிக்கும்வரை மலாக்கி காத்திருக்கவில்லை. குடிசையின் பின்புறம் புதிதாய் அடைத்திருந்த பெரிய மரவுரிப்பலகையைப் பெயர்த்துக்கொண்டு பாய்ந்து வெளியில் ஓடினான். “அபாயத்தின் அறிகுறி அது!” அவனுக்குப் பின்னால் எழுப்பப்பட்ட சத்தத்தை அவன் கேட்டிருக்கலாம். ஆனால் ஒரு கலவரப்பட்ட கங்காருவைப் போன்று அவன் காட்டுக்குள் ஓடி மறைந்தான். பண்ணைவெளியை அடையும்வரை அவன் எங்கேயும் நின்றிருக்கமாட்டான்.

ஜிம்மி நோலெட்டும் நானும் அவன் பெயர்த்துக்கொண்டு ஓடிய பின்புற பலகை விரிசல் வழியே எட்டிப்பார்த்தபோது அது எங்கள் மேல் சரிந்துவிழுந்து காயமுண்டாக்கியது. ஆனாலும் எங்கள் வேடிக்கை விளையாட்டு அதனால் சிறிதும் குறைந்துவிடவில்லை. ஜிம்மி நோலெட் மரவுரிப்பலகையின் அடியிலிருந்து தவழ்ந்து வெளியேறி, மலாக்கியின் படுக்கையில் படுத்தபடி சிரித்தான். இவன் செத்துத் தொலையமாட்டானா என்று நாங்கள் எண்ணுமளவுக்கு அதன்பிறகு ஜிம்மி பாதியிரவுகளில் எழுந்தமர்ந்து ஓயாமல் சிரித்துக்கொண்டிருந்தான்.

கதையை இத்துடன் முடித்துவிடத்தான் விரும்புகிறேன், ஆனால் மலாக்கியைப் பற்றிச் சொல்வதற்கு இன்னும் சில மீதம் உள்ளன.
பண்ணை வீட்டில் சிறந்த பசுக்களில் ஒன்று, கன்று ஈன்றிருந்தபோது பெரும் அமளியை உண்டாக்கிக்கொண்டிருந்தது. பொதுவாக அது மிகவும் அமைதியானதும் எளிதில் பழக்குவதற்கு இடந்தரக்கூடியதுமான பசு என்றாலும் கன்று ஈன்றபிறகு அது மூர்க்கமாய் மாறியிருந்தது. யாரும் எதிர்பாராத வகையில் அது எல்லோரையும் முட்டிக் காயப்படுத்திக் கொண்டிருந்தது.

ஒருநாள் பண்ணைமுதலாளியின் மகளும் சிட்னியைச் சேர்ந்த அவளுடைய பகட்டுக் கணவனும் அந்த பசு இருந்த புல்வெளிப்பக்கம் உலவிக்கொண்டிருந்தனர். பகட்டுக்காரனின் அநாகரிக உடையா, பெண்ணின் சிவப்புநிறக் குடையா, அவளது மேடிட்ட வயிற்றை மறைத்திருந்த உடுப்பின் விநோத வடிவங்களா எது அந்தப்பசுவை வெறுப்பேற்றியது என்று தெரியவில்லை. அது அவர்களை நோக்கி ஆத்திரத்துடன் முன்னேறியது. பசுவை முதலில் பார்த்த பகட்டுக்காரன், தன் மனைவியை அம்போவென அங்கேயே விட்டுவிட்டு உடனடியாய் வேலியின் வாயிற்புறத்தை நோக்கி ஓடித் தப்பிவிட்டான். மலாக்கி மட்டும் சமயத்தில் வந்திருக்காவிட்டால் அப்பெண்ணின் கதி அதோகதிதான். அவள்  ஆபத்திலிருப்பதை உணர்ந்தநொடியே நிராயுதபாணியாக முரட்டுப்பசுவை எதிர்கொண்டான் மலாக்கி.

போராட்டம் நெடுநேரம் நீடிக்கவில்லை. ஒரு உறுமல், ஒரு சீறல்…  புழுதிப்படலத்திலிருந்து வெளிவந்த பசு ஒரே பாய்ச்சலில் தன் கன்று மறைந்திருக்கும் குறுங்காட்டுப் பகுதியை நோக்கி ஓடிப்போனது.  

நாங்கள் மலாக்கியை வீட்டுக்குள் தூக்கிவந்து படுக்கவைத்தோம். அடிவயிற்றில் காயம் மிக ஆழமாயிருந்தது. தண்ணீரைப்போல் நிற்காமல் வெளியேறிய குருதி கட்டுக்களை நனைத்துக்கொண்டிருந்தது. நாங்கள் எங்களால் இயன்ற எல்லாவற்றையும் செய்தோம். பையன்கள் குதிரைகளை அடித்துவிரட்டிக்கொண்டு மருத்துவரை அழைக்கச் சென்றார்கள். ஆனாலும் பயனில்லை. மலாக்கியின் வாழ்க்கையின் கடைசி அரைமணி நேரத்தில் நாங்கள் அனைவரும் அவனுடைய படுக்கையைச் சுற்றிக் குழுமியிருந்தோம். அவனுக்கு வயது இருபத்தியிரண்டுதான்.

அவன் சிரமத்துடன் சொன்னான், “என் அம்மா இனி எப்படி சமாளிப்பாள்?”

ஏன்? உன் அம்மா எங்கே இருக்கிறாள்?” யாரோ மென்மையாய்க் கேட்டார்கள்

மலாக்கியை நேசிக்கவும், பெருமிதப்படவும் இந்த உலகத்தில் யாராவது இருப்பார்கள் என்று நாங்கள் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கவில்லை.

பாதர்ஸ்டில் இருக்கிறாள்அவன் தொய்ந்த குரலில் சொன்னான், “அவள் மோசமாக பாதிக்கப்படுவாள். அவள் என்மேல் அளவுகடந்த பிரியம் வைத்திருக்கிறாள், நானும் அவளுமாகத்தான் கடந்த பத்து வருடங்களாக குடும்ப பாரத்தை இழுத்துக்கொண்டிருக்கிறோம். நாங்கள் என் தம்பி ஜிம்முக்கு எல்லாவற்றையும் சரியாக அமைத்துத்தர விரும்பியிருந்தோம். ஆனால்பாவம் ஜிம்!”

 “ஏன், ஜிம்முக்கு என்ன?” யாரோ கேட்டார்கள்.

அவனுக்குப் பார்வை கிடையாது. அவன் வளர்ந்து பெரியவனாகும்போது அவனுக்குத் தேவையான எல்லாவற்றையும் சரியாக அமைத்துக்கொடுக்க வேண்டுமென்று நாங்கள் நினைத்தோம். நான் எப்படியாவது வருடத்துக்கு நாற்பது பவுண்டுகள் அனுப்பிக்கொண்டிருந்தேன். ஒரு சின்ன இடம் வாங்கியிருந்தோம். ஆனால்.. ஆனால்.. நான் இப்போது போகிறேன். ஹாரி.. அவர்களிடம் சொல்.. இது எப்படி நடந்…” 

நான் வெளியே வந்துவிட்டேன். என்னால் இதைத் தாங்கமுடியவில்லை. என் தொண்டைக்குழியில் ஏதோ அடைத்தது. மலாக்கியை வேதனைப்படுத்திய வேடிக்கைகளிலிருந்து என்னுடைய பங்கை அழித்துவிட விரும்பினேன். ஆனால் இப்போது காலம் கடந்துவிட்டிருந்தது

நான் மீண்டும் உள்ளே சென்றபோது மலாக்கி இறந்துவிட்டிருந்தான். அன்றிரவு பண்ணைமுதலாளியின் பணத்தோடு கூடுதலாய் வசூலித்தபடி அவனுடைய தொப்பி அனைவரிடமும் ஒரு சுற்று போய்வந்தது. அதைக்கொண்டு நாங்கள் மலாக்கியின் தம்பி ஜிம்முக்குத் தேவையான எல்லாவற்றையும் சரியாக அமைத்துக்கொடுத்தோம்.

****************

(ஆஸ்திரேலியப் பிரபல கவிஞரும் கதாசிரியருமான ஹென்றி லாசன் (1867-1922) எழுதிய  The Story of Malachi  என்னும் ஆங்கிலக் காடுறை கதையின் தமிழாக்கம்)

(படம்: நன்றி இணையம்)

19 April 2014

கட்டுரைப் போட்டியில் மூன்றாம் பரிசு

வணக்கம் நண்பர்களே...

தைப்பொங்கலை முன்னிட்டு ரூபன் பாண்டியன் இணைந்து நடத்திய மாபெரும் கட்டுரைப் போட்டியில் 'இன்றைய சினிமாவும் சமூக பாதிப்புகளும்' என்ற தலைப்பின் கீழ் எழுதப்பட்ட என் கட்டுரை மூன்றாம் பரிசு பெற்றுள்ளது என்பதை, தொடர்பரிசுகளால் மகிழும் இவ்வேளையில் அறிவிப்பதில் மேலும் மகிழ்கிறேன். 

கட்டுரைக்கான கால அவகாசம் கடைசித்தருணத்தில் கவனத்துக்கு வர அவசர அவசரமாக எழுதிப் பதிவிட்டேன். நான் எழுத நினைத்திருந்த இன்னும் சில விஷயங்கள் கட்டுரையில் விடுபட்டுப்போயின என்பதை நண்பர்கள் பின்னூட்டக் கருத்துரைகளின்மூலம் எடுத்துரைத்தபோது உணர்ந்தேன். அனைவருக்கும் என் அன்பான நன்றி. 


எடுத்துக்கொண்ட தலைப்பை ஒட்டிய என் எண்ணவோட்டங்களைத் தெளிவாகவே முன்வைத்தேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சியும் திருப்தியும் உள்ளது. சிந்தனையை செப்பனிடும் வகையில் சிறப்பான களம் அமைத்துக் கொடுத்து, பலருடைய எழுத்துத் திறமையையும் வெளிக்கொணரும் வகையில் நல்லதொரு நட்புணர்வுடன் நடத்தப்பட்ட இப்போட்டியின் மூலம் வலையுலக நட்புறவு பலப்படுத்தப்பட்டிருக்கிறது என்றால் மிகையில்லை. 

 ஆக்கபூர்வமானதொரு போட்டியை அறிவித்து, 
அதை முன்னிறுத்தி சிறப்பாக நடத்திய 
சகோதரர் ரூபன் அவர்களுக்கும் 
சகோதரர் பாண்டியன் அவர்களுக்கும் 
மற்றும் பின்னணியில் உழைத்த 
திரு. ரமணி சார் அவர்களுக்கும் 
சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் 
மற்றும் பல நண்பர்களுக்கும் 
மனமார்ந்த பாராட்டுகள். 


பொறுப்பினைத் திறம்பட வகித்து
பரிசுக்குரிய கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்துள்ள நடுவர்கள் 
கவிஞர் திரு. முத்துநிலவன் அவர்கள், 
கவிஞர் திரு.இராய செல்லப்பா அவர்கள், 
விஞர் திரு. வித்யாசாகர் அவர்கள் 
அனைவருக்கும் நம் உளப்பூர்வ நன்றி. பரிசு பெற்ற சக பதிவர்களுக்கும், கலந்துகொண்ட அனைவருக்கும் இதயப்பூர்வ நல்வாழ்த்துக்கள். 


பதிவர் திறமையை மேம்படுத்தச் செய்வதான 
முயற்சியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் 
பதிவுலகின் சார்பில் பாராட்டுகள்!
***************
(படங்கள்: நன்றி இணையம்)

14 April 2014

சிறுகதை விமர்சனப் போட்டிகளில் ஹாட்ரிக் பரிசு.

வணக்கம் நண்பர்களே!
அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

பரிசுமழை  பரிசுமழை என்பார்களேஅந்த மழையில்தான் சொட்டச்சொட்ட நனைந்து மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருக்கிறேன். மழையில் நனைந்த பின்னும் மடக்க மனமின்றி தோகை விரித்தாடிக்கொண்டிருக்கிறது மனமயில். திரு.வை.கோபாலகிருஷ்ணன் சார் அவர்களின் தளத்தில் நடத்தப்பெறும் சிறுகதை விமர்சனப் போட்டியை அனைவரும் அறிவீர்கள் அல்லவா? எழுத்துழவர்களான நம்மனைவருக்கும், தனக்கு உரித்தான சிறுகதைகளென்னும் பண்பட்ட நன்னிலத்தை பெருந்தன்மையுடன் வழங்கி, விமர்சனமென்னும் விதைகளை மட்டும் நம்மைத் தூவச்செய்து, ஊக்கமெனும் உரமளித்து, உற்சாகமெனும் நீர்பாய்ச்சி, அக்கறையுடன் வளர்த்து, தானே அறுகூலி தந்து, பரிசெனும் அறுவடைகளை நம்மை அனுபவிக்கச் செய்யும் பதிவுலக மிராசுதாரரான கோபு சார் அவர்களுக்கும் வாராவாரம் சிறந்த விமர்சனங்களை, முகம் காட்டாது தன் அகம் காட்டி செவ்வனே தேர்வுசெய்யும் நடுவர் அவர்களுக்கும் இவ்வேளையில் என் நன்றியையும் பாராட்டுகளையும் இனிதே தெரிவித்து மகிழ்கிறேன்.

இதுவரை நடத்தப்பெற்றுள்ள 10 போட்டிகளில் 8 போட்டிகளில் கலந்துகொண்டு மூன்று முதல் பரிசுகளும் மூன்று இரண்டாம் பரிசுகளுமாக மொத்தம் 6 பரிசுகள் பெற்றுள்ளேன் என்பதோடு கோபு சாரின் சிறப்புப் பரிசு அறிவிப்பான ஹாட்ரிக் பரிசையும் வென்றுள்ளேன் என்பதை நினைக்கையில் எனக்கே வியப்பாக உள்ளது

இந்த விமர்சனப் போட்டியானது எழுதுபவர்களின் எழுத்துத்திறமையோடு தன்னம்பிக்கையையும் வலுப்படுத்துகிறது என்பது உண்மை. இதுவரை விமர்சனப்பாதையில் அடியெடுத்து வைக்கத் தயங்கியிருந்த என்னை வழிநடத்துகின்றன நடுவர் அவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் விமர்சனங்களும் (முக்கியமாய் ரமணி சார் அவர்களின் விமர்சனங்கள்), விமர்சனங்களுக்கான விமர்சனங்களாய் வரும் பின்னூட்டங்களும் (முக்கியமாய் ஜீவி சார் அவர்களின் பின்னூட்டங்கள்).

திரு.வை.கோபாலகிருஷ்ணன் சார் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், விமர்சனங்களுக்குரிய கதைகளின் சுட்டிகளையும் பரிசுகளுக்கு உரியவையாய்த் தேர்ந்தெடுக்கப்பட்ட என் விமர்சனங்களின் சுட்டிகளையும் எனது மீள்பார்வைக்கென ஒரு தொகுப்பாய்த் தொகுக்கவிரும்பியதன் விளைவாகவும் உருவாகியுள்ளது இப்பதிவு.


பல்வேறு அற்புதமான பதிவர்கள் கலந்துகொள்ளும் இப்போட்டியில் எனக்கும் ஒரு சிறப்பான இடம் கிடைத்திருப்பதில் அளவில்லாத மகிழ்ச்சி. பல்வேறு விமர்சனங்களையும், விமர்சனம் குறித்த கருத்துக்களையும் இன்னும் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடிகிறது. சிந்திக்கவும் எழுதவும் ஆயாசமாயிருக்கும் சில தருணங்களில், இப்போட்டியை நடத்தும் கோபு சாரின் கடுமையான உழைப்பையும் கணக்கானத் திட்டமிடலையும், நேர்த்தியான நேரமேலாண்மையையும் நினைத்துக்கொள்வேன். அடுத்தநொடியே ஆயாசமெல்லாம் பறந்துபோய் உற்சாகமாய் உள்ளம் தயாராகிவிடும். 

பதிவுலகில் ஒரு சிறப்பான முன்னுதாரணமாய்த் திகழும் 
கோபு சார் அவர்களுக்கு 
அளவிலாத நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்வதில் மிகவும் மகிழ்கிறேன். 

நம் அனைவரின் சார்பிலும் அவருக்கு ஒரு அழகானப் பூங்கொத்து!வாருங்கள் நட்புக்களே… தொடர்ந்து களமிறங்குவோம்… 
நம் எழுத்துத்திறனை ஏற்றம் பெறச்செய்வோம்.  

**************************

(படங்கள்: நன்றி இணையம், நன்றி கோபு சார்)


தொடர்ந்து வாசிக்க...
இரண்டாவது சுற்று பரிசுகள்

6 April 2014

சிரிக்கும் கூக்கபரா - ஆஸ்திரேலியாவின் அதிசயம் 8யாராவது மனம்விட்டு வாய்விட்டு சிரிப்பதைப் பார்த்தால் காரணம் தெரியாமலேயே நமக்கும் சிரிப்பு வந்துவிடும். குறைந்தபட்சம் சிறு புன்னகையாவது வெளிப்படும். கூக்கபரா பறவையெழுப்பும் கெக்கெக்…கெக்கெக்கே என்ற சிரிப்பொலி கேட்டாலும் அப்படித்தான். நம்மையறியாமல் சிரித்துவிடுவோம்.

சிரிக்கும் கூக்கபரா

சிரிக்கும் கூக்கபரா (laughing kookaburra) என்ற இப்பறவை மனிதர்கள் சிரிப்பது போல் ஒலியெழுப்பினாலும் உண்மையில் அது சிரிப்பல்ல. மற்ற பறவைகளுக்கு தன் எல்லைப்பகுதியை அறிவிக்கும் எச்சரிக்கை ஒலியே அது. இப்பறவைகள் தங்களைப் பார்த்து சிரிப்பதாக எண்ணிய ஐரோப்பியக் குடியேறிகள் ஆரம்பத்தில் இவற்றை வெறுத்தார்களாம். ஆனால் போகப்போக அவற்றின் சிரிப்பொலி அனைவருக்கும் பழகிப்போனதோடு பிடித்தும்போனதாம்.

பெரும்பாலும் விடியலும் அந்தியும்தான் கூக்கபராவுக்குப் பிடித்தப் பொழுதுகள். ஒரு பறவை மெல்ல கெக்கலிக்க ஆரம்பித்துவிட்டால் போதும், அக்கம்பக்கத்திலிருக்கும் மற்ற கூக்கபரா பறவைகளும் உடன் இணைந்துகொள்ள அந்தப் பிரதேசமே கெக்கலிப்பில் கிலுகிலுத்துப்போகும். உனக்கு நான் இளப்பமில்லை என்பதைப் போல் ஒவ்வொன்றும் தங்கள் ஆளுமையை நிரூபிக்கும் முயற்சியில் இறங்கிவிடும். ஆஸ்திரேலியக் காடுகளை அதிரவைக்கும், செவிகிழிக்கும் இவ்வொலியைப் பற்றி முன்பின் அறிந்திராதவர்கள் கேட்க நேர்ந்தால், அதிர்ந்து போவார்கள். இவ்வளவு சுவாரசியமான கூக்கபராவின் சிரிப்பொலியைக் கேட்கவேண்டுமென ஆசையாக உள்ளதுதானே… கீழே இருப்பதைக் கேட்டுப்பாருங்கள். கட்டாயம் சிரிப்பு வரும்.கூக்கபரா மீன்குத்தியினத்தைச் சார்ந்த பறவை. உலகிலுள்ள மொத்தம் 90 வகை மீன்குத்திகளுள் மிகவும் பெரிய பறவை ஆப்பிரிக்காவின் ராட்சத மீன்குத்திப் பறவைதான் என்றாலும் உடல் எடையில் மற்ற எல்லாவற்றையும்விடப் பெரியது ஆஸ்திரேலியாவின் சிரிக்கும் கூக்கபராதான்.


நீலச்சிறகு கூக்கபரா

கூக்கபரா பறவையினத்தில் செம்பழுப்பு மார்பு கூக்கபரா, மினுக்கும் கூக்கபரா, நீலச்சிறகு கூக்கபரா, சிரிக்கும் கூக்கபரா என்று நான்கு வகைகள் இருந்தாலும் பொதுவாக கூக்கபரா என்றால் அது சிரிக்கும் கூக்கபராவையே குறிக்கும். அந்த அளவுக்கு அதன் சிரிப்பு பிரசித்தி பெற்றது. முதலிரண்டு வகைகள் நியூகினி மற்றும் அதைச் சுற்றியுள்ள தீவுகளில் காணப்பட, ஆஸ்திரேலியப் பெருநிலப்பரப்பைச் சார்ந்த பிந்தைய இரண்டுக்கும்தான் அடிக்கடி எல்லைத் தகராறு ஏற்படுவதுண்டு. சிரிக்கும் கூக்கபராவின் ஒலியோடு ஒப்பிடுகையில் நீலச்சிறகு கூக்கபராவின் ஒலி கொஞ்சம் கரடுமுரடுதான்.


பெரிய தலை, பெரிய உருண்டை விழிகள், மேல்பாதி கருப்பாகவும் கீழ்பாதி இளம்பழுப்பு நிறத்திலும் உள்ள மிகப்பெரிய அலகு இவற்றைக் கொண்ட சிரிக்கும் கூக்கபரா பறவையின் உடல், வெள்ளை அல்லது வெளிர்சந்தன நிறத்திலும், இறக்கைகள் அடர்பழுப்பு நிறத்தில் ஆங்காங்கே நீலநிறத் திட்டுக்களுடனும் காணப்படும். சுமார் 45 செ.மீ. நீள உடலில் அலகின் நீளம் மட்டுமே 10 செ.மீ. இருக்கும். ஆண் பெண் இரண்டும் பார்ப்பதற்கு ஒன்றுபோல் இருந்தாலும் பெண் பறவை ஆணைவிடவும் சற்றுப் பெரியதாக இருக்கும். அதன் வாலின்பின்புறம் ஆணைவிடவும் சற்று வெளிர்நீலத்தில் இருக்கும்.

மீன்குத்தி இனத்தைச் சேர்ந்தவையாக இருந்தாலும் கூக்கபரா பறவைகளுக்கு மீன்களைவிடவும் மாமிசம்தான் அதிவிருப்பம். இவை மாமிச உண்ணிகள் மட்டுமல்ல, கழுகு, பருந்து போன்று கொன்றுண்ணிகளும் கூட. எலி, தவளை, பாம்பு, பூச்சிகள், பிற பறவைகள், சிறிய விலங்குகள் என்று பல உயிரினங்களையும் வேட்டையாடி உண்ணக்கூடியவை. இரை சிறியதாயிருந்தால் அப்படியே விழுங்கிவிடும். பெரியதாயிருந்தால் தரையிலோ மரக்கிளையிலோ மோதிச் சாகடித்து பிறகு தின்னும். புதர்க்காடுகளிலும், வயற்புறங்களிலும் மிக நீளமான பாம்புகளை வாயில் கவ்வியபடி காட்சியளிக்கும் கூக்கபரா பறவைகளைக் காண்பது சர்வ சாதாரணம்.கூக்கபரா வசந்தகாலத்தில் மரப்பொந்திலோ கரையான் புற்றிலோ கூடமைக்கும். இரண்டு முதல் நான்கு முட்டைகள் வரை இடும். முட்டைகள் வெண்ணிறத்தில் இருக்கும். இவை ஒருமுறை சோடி சேர்ந்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் இணைபிரியாதிருக்கும் என்று நம்பப்படுகிறது. ஆண் பெண் இரண்டுமே அடைகாப்பது முதல் குஞ்சுகளை வளர்ப்பது வரை ஒன்றுக்கொன்று உதவும். 


25 நாளில் முட்டைகள் பொரிந்து கண்பார்வையற்ற இறகுகளற்ற நிலையில் குஞ்சுகள் வெளிவருகின்றன. ஒருமாதத்துக்குப் பிறகு இறகுகள் முளைக்கின்றன. கூக்கபரா பறவைகள் குடும்பமாய் வாழும். அப்பா அம்மாவுடன் மூத்த பிள்ளைகளும் வேட்டைக்குச் சென்று உணவு கொணர்ந்து தம்பி தங்கைகளுக்கு ஊட்டி வளர்க்கும். பெரிய பறவைகள் முதலில் இரையைத் தாங்கள் விழுங்கி அது அரைவாசி சீரணமான நிலையில் கக்கி குஞ்சுகளுக்கு ஊட்டுகின்றன.கூக்கபரா பறவைகள் மனிதர்களுடன் எளிதில் பழகக்கூடியவை. உணவு கொடுத்துப் பழக்கிவிட்டால் திருடவும் கூடும். பறவைகள் வசிக்க ஏதுவாக மரங்களும் தோட்டமும் அமைத்து உதவலாமே ஒழிய அவற்றுக்கு உணவு தருதல் கூடாது. அது பறவைகளின் உணவுப்பழக்கம், வாழ்க்கைமுறை, உடல்நலம் போன்றவற்றைக் கெடுக்கும் அபாயமிருப்பதால் வனப்பறவைகளுக்கு இயற்கைக்கு மாறாய் உணவளிப்பதை அரசு தடைசெய்துள்ளது.  

   

ஆஸ்திரேலியாவின் அடையாளங்களுள் கூக்கபராவுக்கும் ஒரு சிறப்பிடம் உண்டு. 2000 த்தில் சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டின் மூன்று சின்னங்களுள் ஒன்று ஓலி எனப்படும் கூக்கபரா. மற்ற இரண்டு சிட் எனப்படும் பிளாட்டிபஸ்ஸும் மில்லி எனப்படும் எக்கிட்னாவுமாகும்.


1914 முதல் கூக்கபராவின் உருவம் பொறித்த பல அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன என்பதும் 1990 முதல் வருடந்தோறும் கூக்கபரா உருவம் தாங்கிய தூய வெள்ளியிலான முதலீட்டு நாணயங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன என்பதும் சிறப்பு. 
நடப்பு உலக சாம்பியனான (2010) ஆஸ்திரேலிய ஆண்கள் பிரிவு ஹாக்கி அணியின் பெயர் கூக்கபரா என்பது கூடுதல் சிறப்பு. LINEAGE வீடியோ விளையாட்டிலும் இடம்பெறுகிறதாம் இந்த கூக்கபரா, ஆனால் இரட்டைத்தலையுடன். என்னே ஒரு விநோத கற்பனை!ஒவ்வொருநாளும் நமக்கு கதிரவனின் வருகையை சேவல் ‘கொக்கரக்கோ….’ என்று கூவித்தெரிவிப்பது போல, ஆதிகாலம் முதல் ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களுக்கு ஆண்டவன் அருளிய அதிகாலை அலாரம், இந்த கூக்கபரா குரல்தானாம். வானக்கடவுளால் ஒவ்வொரு நாளின் துவக்கத்திலும் ஆகாயத்தில் சூரியன் என்னும் பெருநெருப்பு மூட்டப்படும் நேரத்தையும், நாளின் முடிவில் நெருப்பு அணைக்கப்படும் நேரத்தையும் பூமியில் உள்ள மக்களுக்கு தங்கள் உரத்தக் குரலொலி மூலம் கூக்கபராக்கள் தெரிவிக்கின்றன என்பது அம்மக்களின் நம்பிக்கை.

அந்தக் கதை என்னவென்று பார்ப்போமா? முன்னொரு காலத்தில் சூரியன் என்று ஒன்று இல்லவே இல்லையாம். வானில் நிலாவும் நட்சத்திரங்களும் மட்டுமே இருந்தனவாம். அரையிருளில்தான் அப்போது வாழ்க்கை. ஒருநாள் ஈமு பறவைக்கும் ப்ரோல்கா என்னும் நாட்டியப் பறவைக்கும் ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையில் முடிந்துவிட்டது. ப்ரோல்கா கோபத்துடன் ஈமுவின் கூட்டிலிருந்த முட்டை ஒன்றை பலங்கொண்ட மட்டிலும் வானத்தை நோக்கி எறிய, அது வானத்தில் இருந்த விறகுக்குவியலின் மீது விழுந்தது. விழுந்த வேகத்தில் முட்டை உடைந்து மஞ்சள் கரு வெளிவந்தபோது விறகுக்குவியலில் தீப்பற்றிக் கொண்டது.நெருப்பின் ஒளியில் பூமி தகதகக்கும் அழகைப் பார்த்த வானக்கடவுள், அந்த அழகைத் தொடர்ந்து ரசிக்க தினமும் தீமூட்ட முடிவெடுத்தார். வானக்கடவுளும் அவரது உதவியாளர்களும் இரவு முழுவதும் விறகுகளை சேகரித்துவைத்துக்கொண்டு நெருப்பு மூட்டக் காத்திருந்தார்களாம். ஆனால் இதை மக்களுக்கு எப்படித் தெரிவிப்பது. எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே… அதனால் விடிவெள்ளியை அனுப்பினாராம். உறக்கத்திலிருப்பவர்கள் விடிவெள்ளியின் வருகையை எப்படி அறிவார்கள்? முயற்சி வீணானது.

என்ன செய்வது என்று கடவுள் யோசித்துக் கொண்டிருக்கையில் ஒருநாள் கூக்கபராவின் கெக்கலிப்பைக் கேட்டாராம். ‘இதை… இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்’ என்று மகிழ்ச்சியுடன் கூக்கபராவை அழைத்து தினமும் அதிகாலையிலும் அந்தியிலும் வானத்தில் தீமூட்டப்படுவதையும் தீ அணைக்கப்படுவதையும் மக்களுக்கு அறிவிக்க வேண்டிய பொறுப்பை ஒப்படைத்தாராம். அன்றிலிருந்து அவை தவறாமல் தங்கள் கடமையைச் செய்துவருகின்றனவாம். எவ்வளவு பொறுப்புமிக்கப் பறவைகள்!
பூர்வகுடி மொழியில் கூக்கபராவின் பெயர் goo-goor-gaga. இந்தப் பெயரைத் தொடர்ந்து வேகவேகமாகச் சொல்லிப்பாருங்கள்… நீங்களும் கூக்கபராவாய் மாறியிருப்பீர்கள்! 

****************************************************************************
(படங்கள், காணொளி யாவும் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை. உரியவர்களுக்கு நன்றி)