20 July 2015

பூவாமல் காய்க்கும் ஆலின் ஜாலம்!



அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே என்ற பாடலின் பொருள் புரியும்வரை அப்பாடலில் வரும் காய்கள் அத்திமரக்காயும் ஆலமரக்காயும் என்றுதான் வெகுகாலம் நினைத்திருந்தேன். கண்டு பூப்பூக்கும் காணாமல் காய் காய்க்கும், அது எது என்றால் வேர்க்கடலை என்றும் கண்டு காய் காய்க்கும் காணாமல் பூப்பூக்கும், அது எது என்றால் அத்தி என்றும் விடுகதைகளுக்கு விடை சொல்லிப் பழகிய நாம் அதற்கு மேல் அவற்றைப் பற்றி ஆராய்ந்து பார்த்திருப்போமா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டிவரும். 

அத்தி மட்டுமல்ல Ficus என்ற தாவர குடும்பத்துள் வரும் ஆல், அத்தி, அரசு போன்ற சுமார் எண்ணூறுக்கும் மேற்பட்ட மரங்கள் அனைத்தும் காணாமல் பூப்பூக்கும் மரங்கள்தாம். அதெப்படி காணாமல் பூப்பூக்க முடியும்? அப்படிப் பூக்கமுடியுமென்றால் அவற்றை பூவாத மரங்கள் என்று சொல்வது எப்படி சரியாகும்? நமக்கு சந்தேகங்கள் எழுவது நியாயமே.

பழந்தமிழ்ப் பாடல்களில் பூவாத மரங்கள் பற்றிய பாடல்கள் ஏராளம் உண்டு. அவற்றுள் ஔவையின் நல்வழி சொல்லும் பாடலொன்று…

பூவாதே காய்க்கும் மரமும் உள மக்களுளும்
ஏவாதே நின்றுணர்வார் தாம் உளரேதூவா
விரைத்தாலு நன்றாகா வித்தெனவே பேதைக்கு
உரைத்தாலும் தோன்றாது உணர்வு.

(ஒரு மரத்தின் கடமை காய்த்துக் கனிந்து விதை தந்து அடுத்த சந்ததியை வளர்ப்பது. அத்தகு கடமையை பூக்காமலேயே கூட செய்யும் மரங்களும் உண்டு. அதைப்போல சிலருக்கு இன்னதை செய்ய வேண்டும் என்று சொல்லவேண்டிய அவசியம் இல்லாமலேயே குறிப்பால் உணர்ந்து காரியத்தைக் கச்சிதமாக முடிப்பார்களாம். நீர்பாய்ச்சி நிலத்தை வளப்படுத்தி உரமிட்டு தூவும் விதைகளுள் சில விளையாமல் போவதுண்டு. அதைப்போல அறிவிலிகளிடத்தில் ஒரு பொறுப்பைக் கொடுத்து அதற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்துகொடுத்தாலும் எத்தனை முறை எடுத்துச் சொன்னாலும் பொறுப்பை நிறைவேற்றும் சாதுர்யம் இருக்காதாம்.)

பூக்காமல் மகரந்த சேர்க்கை நடைபெறாமல் எப்படி காய் மட்டும் உருவாகிறது? ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? அதைவிடவும் ஆச்சர்யம் பல காத்திருக்கிறது. வாருங்கள்.


இந்த ஆல் அரசு அத்தி மரங்களில் எல்லாம் திடீரென்று காய்க்க ஆரம்பிக்கும். உண்மையில் அவை எல்லாம் காய்கள் அல்ல.. காய்கள் மாதிரி... நூற்றுக்கணக்கான பூக்களை உள்ளடக்கிய அந்தக் காய்ப்பைக்குள் ஆண்பூ பெண்பூ இரண்டுமே உருவாகின்றன. பெண்பூவில் நெட்டை குட்டை இருவகைகள் உண்டு. சரி. உள்ளே பூத்து என்ன பயன்? மகரந்தச் சேர்க்கைக்கு வழி? அதற்குதான்  ficus வகை மரங்களை மட்டுமே சார்ந்து வாழக்கூடிய fig wasps எனப்படும் ஸ்பெஷல் குளவிகள் இருக்கின்றனவே.

மகரந்தம் சுமந்த உடலோடு பறந்துவரும் பெண்குளவி நேராக காய்க்குள் நுழைகிறது. அதற்கென்றே வாசல் வைத்தது போல் காயின் கீழ்ப்பகுதியில் மிக நுண்ணிய துவாரம் இருக்கிறது. உள்ளே போன குளவி குட்டை பெண்பூக்களில் முட்டைகளை இடுகிறது. மகரந்த சேர்க்கையும் அப்போது நடைபெறுகிறது. நெட்டை பெண்பூக்களில் விதைகள் உருவாகின்றன. குட்டை பெண்பூக்களில் குளவியின் லார்வாக்கள் உருவாகின்றன. கூடு போன்ற அமைப்புகளில் வளரும் அவை சூலகத் திசுக்களைத் தின்று வளர்ந்து கூட்டுப்புழுக்களாகின்றன.

முட்டையிட்ட பெண்குளவி என்னாகும்? அவ்வளவுதான்.. அதன் வாழ்க்கை அங்கேயே முடிந்துவிடும். ஏனெனில் அது உள்ளே நுழைவதற்கான முயற்சியில் தன் இறக்கைகளை இழந்திருக்கும். 




முட்டைகள் ஒரே நேரத்தில் இடப்பட்டாலும் முதலில் வெளிவருவதென்னவோ இறக்கையற்ற ஆண் குளவிகள்தாம். அவற்றின் வாழ்நாள் இலட்சியம் இரண்டே இரண்டுதாம். கூட்டிலிருந்து ஊர்ந்துவெளிவரும் இவை நேராக பெண்குளவிகளின் கூடுகளைத் தேடிச்சென்று பெண்குளவிகள் கூட்டுக்குள் இருக்கும்போதே இனச்சேர்க்கையில் ஈடுபடுகின்றன. வாழ்நாள் இலட்சியத்தில் ஒன்று முடிந்துவிட்டது. அடுத்து கருவுற்ற பெண்குளவிகள் வெளியில் பறந்துபோவதற்கான வழியை உருவாக்கிக் கொடுப்பது. அதற்காக காயின் உட்புறச்சதையைக் கொறித்துக் கொறித்து வழியுண்டாக்கிக் கொடுக்கின்றன. வந்த வேலை முடிந்ததும் மடிந்துபோகின்றன அனைத்தும். அதனால்தான் அத்திப்பழத்தைப் பிட்டுப்பார்த்தால் உள்ளே பூச்சிகளும் புழுக்களுமாக இருக்கிறது.

கூட்டைவிட்டு பெண்குளவிகள் வெளிவரும் முயற்சியின்போது அங்கிருக்கும் ஆண்பூக்களிலுள்ள மகரந்தம் அவற்றின் உடலில் ஒட்டிக்கொள்கிறது. ஏற்கனவே ஆண்குளவிகள் உருவாக்கி வைத்திருக்கும் பாதை வழியே பெண்குளவிகள் அனைத்தும் வெளியேறி அடுத்த மரத்தை நோக்கிப் போகின்றன.

பெண்குளவியின் கதை மீண்டும் துவங்குகிறது. சில பெண்குளவிகள் முட்டையிடுவதற்காக அடுத்த மரங்களைத் தேடி பல மைல்கள் தூரம்கூட பறந்துசெல்கின்றன என்பது ஆராய்ச்சிகளின்மூலம் தெரியவந்துள்ளது. ஒரு ஊசியின் காது துவாரத்துள் நுழைந்துவெளிவரக்கூடிய அளவில் சுமார் 1.5 மி.மீ நீளமே உள்ள இந்த குளவியின் இரண்டுநாள் வாழ்க்கையில் அவ்வளவு தொலைவைக் கடப்பதென்பது மாபெரும் சாகசப் பயணம்தானே! 




ficus வகை மரங்களுக்கும் இந்த fig wasps-களுக்குமான நோக்கம் ஒன்றுதான். இரண்டுக்கும் தங்கள் வம்சம் விருத்தியாகவேண்டும். அதற்காக பரஸ்பரம் இரண்டும் உதவிக்கொள்கின்றன. ஆறுகோடி வருடங்களுக்கும் மேலாக தொடரும் அந்த பந்தத்தில் தற்சமயம் பூச்சிக்கொல்லி மருந்துகளாலும் மாற்று மகரந்தச்சேர்க்கை முயற்சிகளாலும் விரிசல்கள் விழ ஆரம்பித்துள்ளன என்பது அதிர்ச்சி தரும் உண்மை. இயற்கையை நேசித்து இயற்கையோடு ஒன்றிவாழ்ந்தால் மட்டுமே மனிதகுலம் வீழாதிருப்பதற்கான சாத்தியங்கள் உண்டு. 

(படங்கள் உதவி இணையம்)

40 comments:

  1. இயற்கையில்தான் எவ்வளவு ஆச்சர்யங்கள்? வியந்து போனேன்.

    ReplyDelete
  2. 1.5 மி.மீ நீளம் குளவியின் 2 நாள் பயணம் வியக்க வைக்கிறது...!

    ReplyDelete
    Replies
    1. வியப்புதான். நன்றி தனபாலன்.

      Delete
  3. 1.5 மி.மீ நீளமே உள்ள இந்த குளவியின் இரண்டுநாள் வாழ்க்கையில் அவ்வளவு தொலைவைக் கடப்பதென்பது மாபெரும் சாகசப் பயணம்தானே! ///

    உண்மை .

    இயற்கை பந்தத்தில் விரிசல் ஏற்படாமல் இருக்கவேண்டுமே என்ற தவிப்பு வந்து விட்டது.

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி மேடம்.

      Delete
  4. வணக்கம்,
    தங்களின் இயற்கை ஆர்வம் வியக்கவைக்கிறது,
    தாங்கள் தரும் தகவல்கள் அனைத்தும் அருமை,
    தெரியாத தகவல்கள் தெரிந்துக்கொண்டேன்.
    நன்றி.

    ReplyDelete
  5. உரமென்ற பெயரில் உதிரத்தொடங்கியிருக்கும் விபரீதங்களை தங்கள் பகிர்வின் மூலம் தெரியப்படுத்துங்கள் அப்போதாவது உணர்ந்து இயற்கையை அதன் போக்கில் விட்டுப் வாழப்பழகுவோமா ?

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக. நன்றி சசி.

      Delete
  6. நிஜமாக
    ஆச்சரியமாகத் தான் இருக்கிறது
    அறியாத அதிசயத்தை அருமையாகப் பதிவிட்டு
    அறியத் தந்தமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ரமணி சார்.

      Delete
  7. வணக்கம்
    சகோதரி
    தகவல்கள் வியப்பாக உள்ளது அறிந்து கொண்டேன் பகிர்வுக்கு நன்றி த.ம 7
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் நன்றி ரூபன்.

      Delete
  8. ஆய்வு நன்று! பதிவு கண்டு வியந்தேன்!

    ReplyDelete
  9. பெரும்பாலான ஆராய்ச்சிகள் இயற்கைக்கு எதிராகவே இருக்கின்றன், மகரந்த சேர்க்கை சரி, அதன் பின்.... விதைகள் ....?தெரிந்து கொள்ளநிறையவே இருக்கிறது அறியாத செய்திகள் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வெளியில் பூக்களில் மகரந்தச் சேர்க்கை நடைபெற்று விதைகள் உருவாவதைப் போலவே இங்கு உள்ளே உருவாகின்றன. அதுதான் வித்தியாசம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

      Delete
  10. அதிசயத் தகவல்கள்! அருமை!

    ReplyDelete
  11. இரண்டு நாட்கள் வாழும் சிறிய உயிரினத்தின் பயன் எவ்வளவு பெரிது!
    விசயங்களைத் தேடி தரும் உங்களுக்கு நன்றியும் பாராட்டுகளும்!
    //இயற்கையை நேசித்து இயற்கையோடு ஒன்றிவாழ்ந்தால் மட்டுமே மனிதகுலம் வீழாதிருப்பதற்கான சாத்தியங்கள் உண்டு. // இது நடக்குமா? :(

    த.ம.9

    ReplyDelete
    Replies
    1. நடக்கவேண்டும். அதற்கு நம்மாலான முயற்சிகளைத் தொடர்ந்து செய்வோம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கிரேஸ்.

      Delete
  12. கீதா,

    இன்றுதான் தெரியும் ஆல், அரசுகூட பூக்காமல் காய்க்கும் என்று. தெளிவான விளக்கம் தரும் ஒரு தாவரவியல் ஆசிரியரின் வகுப்புக்குள் நுழைந்த மாதிரி இருந்தது உங்கள் பதிவு.

    "அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே " ______ இந்தப் பாடலோடு தொடர்புடைய எல்லோரும் சொல்வது போலவே நீங்களும் சொல்லிட்டீங்க. கீதா, அர்த்தம் தெரிந்துகொள்ள விருப்பம். முடியும்போது சொல்லுங்க.

    ReplyDelete
    Replies
    1. பாடல் விளக்கம் பலரும் சொல்லியிருக்கிறார்கள். நானும் விரைவில் பதிகிறேன். கருத்துக்கு நன்றி சித்ரா.

      Delete
  13. தெரியாத விஷயங்கள் பல அறிந்து கொள்ள முடிகிறது உங்கள் பதிவுகள் மூலம்..... நன்றி.

    ReplyDelete
  14. நமக்கு நன்கு தெரிந்த மரத்தைப் பற்றித் தெரியாத தகவல்கள்! இயற்கை தான் எவ்வளவு அதிசயங்களைத் தன்னுள் பொதிந்து வைத்துள்ளது! புதிய சுவையான செய்திகள்! மிகவும் நன்றி! த ம வாக்கு 11

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் நன்றி அக்கா.

      Delete
  15. வியப்பாக இருக்கும் தகவல்!

    ReplyDelete
  16. வணக்கம்

    தங்கள் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன்

    http://blogintamil.blogspot.fr/2015/07/blog-post_31.html

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete
    Replies
    1. வலைச்சர அறிமுகத்துக்கு மிகவும் நன்றி.

      Delete
  17. அதிசயிக்க வைக்கும் புதுத் தகவல்களைப் பகிர்ந்தமைக்குப் பாராட்டு .

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

      Delete
  18. வணக்கம் சகோ.

    பூத்துக் காய்த்தல், பூவாமல் காய்த்தல், பூத்தும் காய்க்காமல் இருத்தல் பற்றிய ஒரு பாடல் உண்டு.

    “சொல்லாமலே பெரியர் சொல்லிச் செய்வர் சிறியர்

    சொல்லியும் செய்யார் கயவரே, நல்ல

    குலாமாலை வேல் கண்ணாய் கூறு உவமை நாடில்

    பலா, மாவைப் பாதிரியைப் பார்“

    எனும் பாடல் அது.

    பூவாமல் காய்க்கும் பலா.

    பூத்துக் காய்க்கும் மா

    பூத்தும் காய்க்காது பாதிரி

    என்பது அப்பாடல்.

    குளவியின் வாழ்க்கை முறைகளைப் பற்றி நீங்கள் சொன்னவைகளை இது வரை அறிந்ததில்லை.

    புதிதாக ஒன்றை அறிந்து கொள்ளும் போது ஏற்படும் ஆனந்தத்தை இந்தப் பதிவு கொடுத்திருக்கிறது .

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. \\புதிதாக ஒன்றை அறிந்து கொள்ளும் போது ஏற்படும் ஆனந்தத்தை இந்தப் பதிவு கொடுத்திருக்கிறது .\\ உண்மைதான். புதிதாக ஒரு விஷயத்தை அறியும்போது அதை அறியாதோருக்குப் பகிரவேண்டும் என்ற ஆவல்தான் எழுதத் தூண்டுகிறது. என் வியப்பை உங்கள் அனைவரோடும் பகிர்ந்துகொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி. வருகைக்கும் பாடலுடன் கூடிய கருத்துக்கும் மிகவும் நன்றி விஜி சார்.

      Delete
  19. மேலோட்டமாக பலவற்றையும் கடந்து விடுகிறோம். நுணுகிப் பார்க்க வியப்பளிக்கும் இயற்கையின் ஜாலம்.

    ReplyDelete
  20. இயற்க்கை அன்னையைக் கண்டு வியக்கிறேன்.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.