30 August 2015

பறவைகளுக்கு ஏனிந்த அடையாள அட்டைகள்?


சிட்னியிலுள்ள சில பூங்காக்களிலும் பொது இடங்களிலும் காணப்படும் சில காக்கட்டூ (cockatoo) மற்றும் ஐபிஸ் (ibis) பறவைகளின் இறக்கைகளில் எண் அட்டைகளைப் பார்த்து வியந்திருக்கிறேன். ஐபிஸ் என்பது வேறொன்றும் அல்ல, அரிவாள்மூக்கன் என்றும் அன்றில் என்றும் நம் நாட்டில் குறிப்பிடப்படும் பறவைதான்.

கந்தகநிறக் கொண்டை காக்கட்டூ



ஆஸ்திரேலிய வெள்ளை அன்றில்


பறவைகளுக்கு ஏனிந்த எண் அட்டைகள் என்று தீவிரமாய் யோசித்துப் பார்த்ததில்லை. அதெல்லாம் பறவை ஆய்வாளர்களின் பொறுப்பு என்று இருந்துவிட்டேன். ஆனால் அதில் பொதுமக்களுக்கும் பங்குண்டு என்பதை சமீபத்தில்தான் அறிந்தேன். எண் அட்டை பொருத்தப்பட்ட பறவைகளைப் பார்ப்பவர்கள், அந்த எண் அட்டையின் நிறம், எண் இவற்றோடு பறவையைப் பார்த்த இடம், நாள், நேரம் போன்றவற்றைக் குறிப்பிட்ட இணையப்பக்கங்களில் பதியுமாறு வனத்துறை அலுவலகத்திலிருந்து கோரிக்கை விடப்பட்டுள்ளது.






இத்தகவல்கள், இப்பறவைகளின் வாழ்விடம், புலம் பெயர்வு, இனப்பெருக்கம் போன்றவற்றைக் கண்காணிக்கப் பெரிதும் உதவுவதோடு, மக்கள் புழங்கும் நகர்ப்பகுதிகளில் இவற்றின் நடமாட்டம், இயற்கை சார்ந்த வனப்பிரதேசங்களில் இவற்றின் நாட்டம் போன்றவற்றையும் ஆய்வு செய்ய பயன்படுகிறதாம். பறவைகளின் கால்களில் அடையாள வளையம், கழுத்துப்பட்டை மாட்டி கண்காணிப்பதைப் போன்றதுதான் இதுவும்.




சில காக்கட்டூ பறவைகளின் உடலில் GPS transmitters பொருத்தப்பட்டு, அவற்றின் நடவடிக்கைகள் ஒவ்வொரு பதினைந்து நிமிடத்துக்கொருமுறை பதிவு செய்யப்படுகின்றன. சூரிய சக்தியால் இயங்கும் இந்த அலைபரப்பிகளில் பதிவாகும் பதிவுகள் செயற்கைக்கோள் வழியாக ஒவ்வொருநாளும் பெறப்படுகின்றன.


சூரிய சக்தியால் இயங்கும் ட்ரான்ஸ்மிட்டர்

இயல்புக்கு மாறாய் இறக்கையில் சுமந்திருக்கும் அட்டைகள் பறவைகளுக்கு நெருடலாய் இருக்காதா? இருக்காது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். சுமார் 800 கிராம் எடையுள்ள காக்கட்டூவுக்கு 20 கிராம் எடையிலான ட்ரான்ஸ்மிட்டர்கள் ஒரு பெரிய பாரமாய் இருக்காதாம். மேலும் ஒரு பறவையின் உடலில் அதிகபட்சம் மூன்று மாதங்களுக்குதான் இந்த அலைபரப்பிகள் பொருத்தப்பட்டிருக்குமாம். அதன்பின் அகற்றப்பட்டுவிடுமாம். அது தவிர, இனப்பெருக்கக் காலத்துக்குப்பிறகான இறகுதிர்தலின்போது இறகோடு பிணைக்கப்பட்டுள்ள அட்டைகளும் உதிர்ந்துவிடுமாம்.  
******

28 August 2015

ஊதா உடையணி தினம்





அவனாகவோ… அவளாகவோ….
அவளுமவனுமாகவோ…
அவனுள் அவளாகவோ…
அவளுள் அவனாகவோ…
அவனோடு அவளாகவோ…
அவளோடு அவனாகவோ...
அவனோடு அவனாகவோ..
அவளோடு அவளாகவோ…
எவரோடும் எவராகவோ…
எவரையும் நாடா எவருமாகவோ…
நீ நீயாயிருப்பதன் பெருமை உனது.
அப்பெருமைக்கான உரிமையும் உனது.

****

பாலின ஈர்ப்பு மற்றும் பாகுபாடுகளை முன்னிறுத்தி சகமனிதரை எடைபோடும் மனோபாவத்தை மாற்றும் விழிப்புணர்வு நோக்கோடு ஆஸியில் கொண்டாடப்படும் தினம் – ஊதா உடையணி தினம் (wear it purple day). 2010 ஆம் ஆண்டு இரு ஆஸ்திரேலிய இளைஞர்களால் உருவாக்கப்பட்ட இத்தினம் இன்று உலகளவிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.



தனிமனித உரிமையின்மீதான நம்பிக்கை உடைய அனைவரும் இன்று ஊதா நிற உடையுடுத்தி தங்கள் ஆதரவைத் தெரிவிக்கின்றனர். ஊதா வண்ண உடையில்லாதவர்கள் ஊதா நிற கைவளையங்களையும் ஊதா நிற ரிப்பன்களையும் அணிகிறார்கள். இன்று ஏராளமான ஊதா கலர் ரிப்பன்களைப் பார்க்கமுடியும். ஆனால் யாரையும் பாட்டுப்பாடி கேலி செய்யமுடியாது. ஏனெனில் இந்தக் கொண்டாட்டத்தில் நியூ சௌத் வேல்ஸ் காவல்துறையும் பிரத்தியேக ஊதா நிற சீருடையுடன் உற்சாகமாய்க் களமிறங்கியுள்ளது.





சர்வதேச ஊதா தினத்தோடு இத்தினத்தைக் குழப்பிக்கொள்ளவேண்டாம். world purple day என்பது வலிப்புநோய் பற்றிய விழிப்புணர்வுக்காக வருடந்தோறும் மார்ச் 26-ஆம் நாள் உலகளவில் அனுசரிக்கப்படும் ஒரு தினமாகும். அன்றும் ஊதா நிற உடையணிய ஊக்குவிக்கப்படுகிறது. 





Today is Wear it purple day (August 28)
The message is ‘You have the right to be proud of who you are.’
*****
(படங்கள் உதவி: இணையம்)

19 August 2015

பிளவு முரசு (slit drum)





ஆஸ்திரேலியாவுக்கு கிழக்கே சுமார் 1750 கி.மீ. தொலைவில் உள்ளது வனுவாட்டு குடியரசு. எரிமலைகளால் உருவான எண்பதுக்கும் அதிகமான தீவுக்கூட்டங்களைக் கொண்டிருந்தாலும் அவற்றுள் 65 ஆளரவமற்றவை. வனுவாட்டு குடியரசைச் சார்ந்த, மக்கள் வசிக்கும் தீவுகளுள் ஒன்று அம்பிரைம். தொடர்ச்சியான எரிமலைக் குழம்புகளால் தீவு முழுவதும் கருப்பாக காணப்படுவதால் கருந்தீவு என்ற பெயரும் இதற்குண்டு.

அம்பிரைம் தீவுவாசிகளுடைய பாரம்பரிய இசைக்கருவிகளுள் ஒன்றான atingting எனப்படும் இந்த பிளவு முரசு, அவர்களுடைய பாரம்பரிய விழாக்களின்போதும், நடனங்களின் போதும், தகவல் பரிமாற்றத்துக்காகவும், ஊர்மக்களை ஒன்றுதிரட்டவும் ஒலிக்கப்படுகிறது. Pacific Teak (Intsia bijuga) எனப்படும் இப்பில் மரத்தின் தண்டைக் குடைந்து உருவாக்கப்படும் இந்த இசைக்கருவியின் வெளிப்புறத்தில் மெல்லிய வலுவான குச்சிகளைக் கொண்டு தட்டுவதன்மூலம் அதிர்வொலி எழுப்பப்படுகிறது.  



படத்தில் காட்டப்பட்டிருக்கும் பிளவு முரசு அம்பிரைம் தீவிலிருந்து நட்புறவின் அடையாளமாக இருபத்துமூன்று வருடங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டதாம். சிட்னியின் பிரதான தாவரவியல் பூங்காவில் மரங்களோடு மரங்களாய் இசைப்பாரின்றி நின்றுகொண்டிருக்கிறது, இந்த அழகிய கலைநயம் கொண்ட பிரமாண்ட பிளவு முரசு. 


&&&&&

16 August 2015

வாழ்வின் விளிம்பில் – நூல் அறிமுகம்






எழுத்தாலும் எண்ணங்களாலும் என்னைக் கவர்ந்த பதிவர்களுள் முக்கியமான ஒருவர் ஜிஎம்பி எனப்படும் G.M.பாலசுப்ரமணியம் ஐயா அவர்கள். அவருடைய ‘வாழ்வின் விளிம்பில்’ என்னும் சிறுகதைத் தொகுப்பு என்னை வந்தடைந்து சில மாதங்கள் ஆகியிருந்தாலும் நூலை சமீபத்தில்தான் வாசித்து முடித்தேன். இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளவற்றை சிறுகதைகள் என்பதை விடவும் ஜிஎம்பி ஐயா அவர்களின் எழுபத்தைந்து வருட வாழ்க்கை அனுபவஞ்சார்ந்த புனைவுகள், உள்ளத்தின் உள்ளாடும் எண்ணங்களின் பகிரல்கள்… அவர் அறிந்த, சந்தித்த, பழகிய மனங்களின் விநோத வெளிப்பாடுகள்… கற்பனைகளின் கலந்துருவாக்கம்.. இப்படி பலவும் சொல்லலாம்.

வாழ்வின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ள ஒவ்வொருவருக்குள்ளும் எழும் மன உணர்வுகளை அழகாகப் பிரதிபலிக்கும் கதை வாழ்வின் விளிம்பில். சராசரி மனங்களின் பிரதிநிதியாக ரங்கசாமி காட்டப்படுகிறார். எப்போதுதான் மனித மனத்துக்குப் போதுமென்ற திருப்தி எழுந்திருக்கிறது?  கடமைகளை முடிக்காமல் சாவது தர்மமா என்ற கேள்வி ஒருபக்கம்.. கடமைகள் முடிந்துவிட்டன என்றால் போய்த்தான் ஆகவேண்டுமா என்ற கேள்வி மறுபக்கம். வாழ்க்கையை வாழ் என்று ஒருபக்கம் ஆவல் உசுப்புகிறது. அந்த ஆவல் பூர்த்தியாகிறதா இல்லையா என்பது நம் யூகத்துக்கே விடப்பட்டுவிடுகிறது. இக்கதையின் தொடர்ச்சி என்று சொல்லக்கூடிய அளவிலான கதை விளிம்புகளில் தொடரும் கதை. தலைப்பும் அதை உறுதிப்படுத்துகிறது. ரங்கசாமியின் மனவோட்டம் முந்தைய கதை என்றால் ஐம்பது வருடங்களுக்கு முன் அவன் காதலித்து மணந்த, அவன் மீதான காதல் இன்றும் மாறாத மனைவியின் மனவோட்டம் இந்தக் கதையில்.

சம்பவங்களைப் பின்னிக் கதையாக்கி வாசகரை ஈர்ப்பது ஒரு யுத்தி. இது பெரும்பாலான கதைகளில் பின்பற்றப்படும் யுத்தி. சம்பவங்களைப் பிரதானப்படுத்தாமல் அதன் பின்னணியிலான உணர்வுகளைப் பதிவு செய்வதன் மூலம் வாசகரை தன் உணர்வோட்டத்துக்கு இணையாக அழைத்துச்செல்வது மற்றொரு யுத்தி. ஜிஎம்பி ஐயாவின் கதைகளில் பெரும்பாலும் இந்த இரண்டாவது யுத்தியே கையாளப்பட்டிருப்பது சிறப்பு.

திருமண உறவுக்கு வெளியே உருவாகும் காதலையும் ஈர்ப்பையும் மையப்படுத்திய கதைகள் சிலவும் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. காமஞ்சார்ந்த காதல் அதனால் உருவான விபரீதங்கள் எங்கே ஒரு தவறு கதையில் உடலீர்ப்பு சார்ந்த காதல் அதனால் உருவான சமூக உதாசீனங்கள் நதிமூலம் ரிஷிமூலம் கதையில்... தகாத உறவால் ஏற்படும் தவறான விளைவுகள்… விபரீத உறவுகள் கதையில்.

உடன்பிறந்தவளை, அவளது உடற்குறையின் காரணமாக, அவள் உணர்வுகளைக் கொன்றுபோடும் அண்ணனைப் பற்றி அறியும்போது மனம் வெதும்பிப் போகிறது. இப்படியும் ஒரு கதையில் கோவிந்தனின் நிலையில்தான் வாசிக்கும் நாமும். காலங்காலமாகத் தொடரும் ஒரு முறையற்ற வழக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருகிறது கோவிந்தனின் முடிவு.

கேள்விகளே பதிலாய்… சிறுகதையில் கேள்விகள் கேட்கப்படாமையே வாழ்க்கையின் நிம்மதியைத் தீர்மானிக்கிறது. ஒருவேளை கேள்விகள் கேட்கப்பட்டால்? நூலிழையில் பற்றிக்கொண்டிருக்கிறது வாழ்க்கை பந்தம். கேள்விகளைத் தவிர்க்கலாம்.. மனசாட்சியை? முந்தைய கதையின் கருப்பொருளை மாறுபட்ட கோணத்தில் பதிவு செய்த கதை மனசாட்சி. மனித மனத்தின் மாறுபட்ட குணாதிசயங்களை அப்பட்டமாய்க் காட்டும் சிறுகதை. வறுமையில் தாராளமாய் ஆசைப்படும் மனம், செழிப்பில் கஞ்சத்தனம் காட்டும் முரண் ஒரு கதையில் பதிவு செய்யப்படும் அதே வேளை, ஏறிவந்த ஏணியை மறந்துபோவதான சாத்தியத்தை வெளிப்படுத்துகிறது மற்றொரு கதை.

பேருந்தில் தன் இளமனைவியின் அருகில் அமரும் அடுத்த ஆண்மகனைக் காணப் பொறுக்காமல் துடிக்கும் கணவனை ஒரு கதையிலும் வயதான தன் மனைவியினருகில் தன் பேரன் வயதொத்தவன் அமர்ந்தாலும் அதைக்கண்டு பொங்கும் முதியவரை மற்றொரு கதையிலும் காட்டி கணவர்களின் பொசசிவ் மனப்பான்மையைக் காட்டி சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறார்.

‘எப்பவுமே ஆண்களையே சார்ந்திருக்கும் பெண்கள் அவர்களின் நலனுக்காக என்னவெல்லாமோ செய்கிறார். சோமவார விரதம், காரடையான் நோன்பு, ரக்ஷ பந்தன், இத்தியாதி, இத்தியாதி ஆனால் இந்த ஆண்கள் பெண்களின் நலன் வேண்டி ஏதாவது செய்கிறார்களா என்ன?’ சௌத்வி க சாந்த் ஹோ கதையில் இப்படியொரு கேள்வியை எழுப்பி வாசகரை யோசிக்க வைக்கிறார். 

இத்தொகுப்பில் இடம்பெறும் கதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் எழுத்தாளரின் மன உணர்வுகளைக் கச்சிதமாய்ப் படம்பிடித்துக் காட்டுவதில் தேர்ச்சி பெற்றிருக்கின்றன. எண்ணங்களைக் கோர்வையான எழுத்தால் வெளிப்படுத்தும் வல்லமையும் இவருக்கு வாய்த்திருக்கிறது. நம் குடும்பத்தின் மூத்த உறுப்பினர் ஒருவரின் அருகில் அமர்ந்து அவருடைய வாழ்க்கையில் அவர் கண்ட கேட்ட அறிந்த பல்வேறு சம்பவங்களை... பலதரப்பட்ட மனித குணாதிசயங்களை, முரண்பட்ட வாழ்க்கைமுறைகளை அவர் வாயால் சொல்லிக் கேட்பது போன்ற உணர்வேற்படும் வகையில் சுவாரசியமான எழுத்தோட்டத்தால் பதிவுசெய்திருக்கும் ஜிஎம்பி ஐயா அவர்களுக்கு என் பாராட்டுகள்.  

நூலின் பெயர் – வாழ்வின் விளிம்பில் (சிறுகதைகள்)
ஆசிரியர் – G.M.பாலசுப்ரமணியம்
வெளியீடு – மணிமேகலைப் பிரசுரம்
விலை – ரூ.60/-



13 August 2015

சிட்னி ஓபெரா மாளிகைக்குப் பின்னால்…




ஆஸ்திரேலியாவின் அடையாளச் சின்னமாக குறிக்கப்படும் இந்தக் கட்டடத்தின் பெயர் சிட்னி ஓபெரா மாளிகை (Sydney opera house) என்று பலருக்கும் தெரிந்திருக்கும். இந்தக் கட்டடம் உருவானதற்குப் பின்னால் இழையோடும் ஒரு சோகநிகழ்வு பற்றித் தெரியுமா உங்களுக்கு?
   
நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தின் தலைநகரான சிட்னியில் வளைகுடாப் பகுதியொன்றில் அமைந்துள்ள இதில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், நிகழ்த்து கலைகள் போன்றவை நடைபெறும்வண்ணம் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மேற்கூரைகள் சூரிய ஒளியை மிக அழகாகப் பிரதிபலிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளன. சிட்னியில் வருடாவருடம் கொண்டாடப்படும் விவித் எனப்படும் பிரமாண்ட ஒளித்திருவிழாவின் போது இந்தக் கட்டிடம் வர்ணஜாலம் கொண்டு வசீகரிக்கும்.



ஆஸ்திரேலியாவின் சுற்றுலாத் தளங்களுள் முக்கியமானதாகக் கருதப்படும் சிட்னி ஓபெரா மாளிகைக்கு வருடந்தோறும் தோராயமாக 82 இலட்சம் மக்கள் வந்துபோகின்றனர். அதனால் நாட்டின் பொருளாதார வளம் எக்கச்சக்கமாக உயர்கிறது. 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது இதன் மற்றொரு சிறப்பு. இந்த கட்டிடத்தை வடிவமைத்தவர் ஜான் ஆபெர்க் உட்ஸன் (Jørn oberg Utzon) என்னும் டென்மார்க் கட்டிடக் கலைஞர். விஷயம் அவரைப் பற்றியதுதான்.

John Utson
(படம்: நன்றி இணையம்)

சிட்னி ஓபெரா மாளிகைக்கான கட்டட வடிவமைப்புக்கான போட்டி வெளியிடப்பட்டபோது 32 நாடுகளிலிருந்து 233 விண்ணப்பங்கள் வந்துகுவிந்தனவாம். அவற்றுள் வெற்றிபெற்ற விண்ணப்பதாரர்தான் ஜான் உட்ஸன். கட்டட வடிவமைப்பிலும் நிர்மாணிப்பிலும் தீவிரப்பற்று கொண்டிருந்த அவருக்கு சிட்னி ஓபெரா மாளிகைக்கான வடிவமைப்புக்கான மூலம் எங்கிருந்து கிடைத்ததாம் தெரியுமா? ஒரு ஆரஞ்சின் தோலை உரித்த மாத்திரத்தில் அவர் உள்ளுக்குள் உருவான ஐடியாவாம் அது. ஆம். சிட்னி ஓபெரா மாளிகையில் தனித்தனியாக காட்சியளிக்கும் சிப்பி போன்ற 14 மேற்கூரைகளையும் ஒன்றுசேர்த்தால் ஒரு முழுமையான கோளம் உருவாகுமாம். அந்த அளவுக்கு நுணுக்கமான கட்டடத் தொழில்நுட்பமும் கலைநயமும் கொண்டது இந்த மாளிகை.

1958 இல் துவங்கிய வேலை பதினாறு ஆண்டுகள் கழித்து 1973-இல் தான் முழுமையடைந்தது. இதற்கிடையில் ஏகப்பட்ட பிரச்சனைகள்… குளறுபடிகள். 1965 இல் நியூ சௌத்வேல்ஸில் ஆட்சி மாறியதும் உட்ஸனுக்கு அரசு தரப்பிலிருந்து ஆதரவு குறைந்துபோனது. போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படாமையும் வடிவமைப்பு குறித்த கருத்து முரண்பாடுகளும், எள்ளல் விமர்சனங்களும் 1966 இல் உட்ஸனை இப்பணியிலிருந்து விலகச் செய்தன. அலுவலகத்தை மூடிவிட்டு இனி ஆஸ்திரேலியா பக்கமே தலைவைத்துப் படுக்கப்போவதில்லை என்ற முடிவுடன் தாயகம் திரும்பினார் உட்ஸன். அவர் கைவிட்டபோது கட்டடத்தின் வெளிநிர்மாண வேலை கிட்டத்தட்ட முடியும் நிலையில் இருந்தது. அதுவரை சுமார் 30 மில்லியன் டாலர்கள் செலவாகியிருந்தது. ஆனால் உள்ளரங்குகள், மூல வரைபடத்திலிருந்து பல மாற்றங்கள் செய்யப்பட்டு அமைக்கப்பட்ட பிறகான கணக்கெடுப்பின்படி ஒட்டு மொத்த கட்டடத்திற்கு ஆன செலவு சுமார் 103 மில்லியன் டாலர்கள்.

ஒருவழியாக 1973 இல் கட்டிடம் முழுமையாக முடிக்கப்பட்டு இப்போதைய பிரிட்டிஷ் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கையால் திறந்துவைக்கப்பட்டது. திறப்பு விழாவுக்கு கட்டட வடிவமைப்பாளரான ஜான் உட்ஸனுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. நிகழ்ச்சிகளில் அவர் பெயர் தவறியும்கூட உச்சரிக்கப்படவில்லை.  

காலம் மாறியது. காட்சிகளும் மாறியது. கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்குப் பிறகு உள்ளரங்க வடிவமைப்பில் மாறுதல் தேவைப்பட்டபோது... அதாவது உட்ஸனின் தேவை ஏற்பட்டபோது.. அவரை அணுகினார்கள். அவருக்கு உரிய மரியாதையும் மதிப்பும் அளித்து அவரை அழைத்தார்கள். உட்ஸன் மறுக்கவில்லை. இன்னா செய்தாரை... அவரும் அக்குறள் அறிந்திருப்பார் போலும்.

ஆனால் அவர் நேரடியாகக் களமிறங்காமல் தன் மகன் ஜேன் உட்ஸன் மூலம் சிட்னி ஓபெரா மாளிகையில் மீண்டும் தன் கைத்திறனைக் காட்டினார். அவரது மூல வரைபடத்தின்படி வடிவமைத்த அரங்கொன்றுக்கு அவரது பெயர் இடப்பட்டு கௌரவிக்கப்பட்டது. 1918 இல் பிறந்த ஜான் உட்ஸன் தனது தொண்ணூறாவது வயதில் 2008 இல் மறைந்தார். 2003-ல் சர்வதேச கட்டட நிர்மாணிப்பாளர்களுக்கான உயரிய விருதான Pritzker prize இவருக்கு வழங்கப்பட்டது. 

இன்று ஆஸ்திரேலியப் பயணம் மேற்கொள்ளும் பலரும் சிட்னி ஓபெரா மாளிகையைக் காண்பதே தங்கள் பயணத்தின் மாபெரும் லட்சியமாய்க் கொண்டு கட்டடத்தைக் கண்ணுற்று மகிழ்ந்திருக்க, ஜான் உட்ஸன் தன் இறுதிக்காலம் வரை, தான் கொண்ட சபதத்தில் உறுதியாயிருந்து, தன்னால் வடிவமைக்கப்பட்ட சிட்னி ஓபெரா மாளிகையைப் பார்க்க ஆஸ்திரேலிய மண்ணில் அடியெடுத்து வைக்கவே இல்லை என்பது எவ்வளவு வேதனை தரும் செய்தி.

&&&

2 August 2015

கனவுலக சஞ்சாரி





இரயில், அந்த நிலையத்தில் நின்றிருந்தது. இருளில் மறைந்துநின்ற மரங்களிலிருந்து உதிர்ந்த ஈர இலைகளை சுழற்றிக்கொண்டுவந்த காற்று, அவற்றை இரயில்பெட்டிகளின் மூடிய கதவுகளில் மோதவிட்டுக்கொண்டிருந்தது.

இரயில் நிலையக் காவலன் தனது மங்கிய லாந்தர் விளக்கை பெட்டிகளின் ஒவ்வொரு சன்னலாக உயர்த்திப்பிடித்து, அந்த ஊரின் பெயரை உரக்கக் கூவிக்கொண்டிருந்தான். ஒரே ஒரு பெண் இறங்குவது தெரிந்தது. தொலைதூர நகரங்களிலிருந்து வருபவர்கள் மிகவும் அரிதாகத்தான் இந்த நிலையத்தில் இறங்குவது வழக்கம். அவன் தன் லாந்தர் விளக்கின் ஒளியை பெரிதாய்க் கூட்டி அப்பெண்ணின் பயணச்சீட்டைப் பார்வையிட்டான்.

அவள் அவனைப் பார்த்தாள். ஆனால் யாரென்று பரிச்சயப்படவில்லை. ஒருகாலத்தில் இந்த இரயில் நிலையத்தில் எல்லோரையும் அவளுக்குத் தெரிந்திருந்தது. இப்போது இவன் புதியவனாய்த் தெரிந்தான். அவனுக்கும் இவளைத் தெரிந்திருக்கவில்லை.

அவளுடைய கடிதம் கிடைத்திருந்தால், இந்நேரம் யாராவது கோச்சுவண்டியுடன் வந்து நிலையவாசலில் காத்திருப்பார்கள். அவள் நிலையத்தைக் கடந்து வெளியே சென்றாள். நனைந்து நடுங்கிச் சுருண்டபடி ஒரு மூலையில் படுத்திருக்கும் தெருநாயொன்றைத் தவிர வேறு எதுவும் கண்ணில் தென்படவில்லை.

அவள் வளைந்து வளைந்து ஊருக்குள் செல்லும் ஒழுங்கற்ற பாதையைப் பார்த்தாள். நதிக்கரையோர சவுக்கு மரங்களூடே புகுந்து புறப்பட்ட அசுரக்காற்றின் ஓசையை அலட்சியப்படுத்தியபடி, ஊர் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தது. அதைத்தவிர வேறெந்த சத்தமும் இல்லை. அவள் படுத்திருக்கும் நாயைக் கனிவுடன் நோக்கினாள்.

ஒருவேளை நிலையக் காவலனிடம் தனக்கான தகவல் ஏதேனும் தெரிவிக்கப்பட்டிருக்கலாம். அவள் மீண்டும் நடைமேடையை நோக்கிச் சென்றாள். அலுவலக அறைக்குள் செல்ல முனைந்த இரயில்நிலையக் காவலன், அவள் தன்னிடம் ஏதோ கேட்க விழைவதைக் கண்டு உள்ளே செல்லாமல் காத்திருந்தான்.  அவள் தயங்கிநின்றாள்.

இன்று நல்ல மழை!” அவன் அவளுடைய தயக்கத்தை உடைக்கும்வண்ணம் பேச்சைத் துவக்கினான். அவள் கேட்க வந்த கேள்வியானது, ‘இப்போது நேரம் என்ன?’ என்ற கேள்வியாக மாறிப்போனது. அப்போதைய நேரத்தை அவள் அறிந்திருந்தபோதும் அவனிடமிருந்து பதிலைப் பெற்றுக்கொண்டு அவசரமாக அங்கிருந்து அகன்றாள்.

அவள் தன்னுடைய நீண்ட குளிரங்கியை இறுக்கமாகச் சுற்றிக்கொண்டாள். காற்றின் வேகத்துக்கு அவளுடைய குடையால் ஈடுகொடுக்க முடியவில்லை. காற்றும் மழையும் இருளும் பொதிந்த புதர்க்காட்டுப் பாதையில் மூன்று மைல் தொலைவுக்கப்பால் அவளுடைய அம்மாவின் வீடு இருந்தது. தன் பால்ய காலத்தில் பார்த்திருந்த ஊரின் பாதையின் ஒவ்வொரு அங்குலமும் அவளுக்கு அத்துப்படியாகி இருந்தது.

மழை நசநசவென்று பெய்துகொண்டிருந்தது. உறங்கிக்கிடக்கும் வீதிகளைக் கடந்துசென்றபோது, எங்கும் உயிர்ப்பின் சிறு சலனத்தையும் காணமுடியவில்லை. ஒரு சிறிய கடையின் உள்ளே விளக்கெரிந்து கொண்டிருந்தது. உள்ளே மரமிழைக்கும் சத்தம் கேட்டது. இந்த அகால இரவில் பணிபுரிகிறார்களே என்று நினைத்தாள். அவர்களுடைய திகிலூட்டும் தொழில் நினைவுக்கு வந்தவுடன் யாருக்காக அந்தப் பெட்டியைத் தயாரிக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள அரைமனத்துடன் தயங்கி நின்றாள். ஒருவேளை அவளுக்குத் தெரிந்தவர்களாக இருக்குமோ? ஆனால் இருட்டுப்பாதையும் நெடிய பயணமும் அவளை நிற்கவிடாமல் தொடர்ந்துசெல்லுமாறு அவசரப்படுத்தியது.

வளைந்து நெளிந்து சென்ற இருப்புப்பாதை காரணமா, இரயில் மறுபடியும் அவள் பார்வைக்குத் தென்பட்டு விலகிக் கடந்துசென்றது. காற்றைக் கிழித்துக்கொண்டு செல்லும் ரயிலைப் பார்த்தபடி நின்றிருந்தாள் அவள்குப்குப்என்று அது நீராவியால் மூச்சுவிடும் இரைச்சல் அவள் செவிகளை வந்தடைந்தது. அதன் சிவந்த வாய்ப்புறத்தினூடே மழைச்சாரலைப் பார்க்கமுடிந்தது.

அது கடந்துசெல்லும் வேகத்தைக் கண்டவளுக்கு, தன்னுடைய சோர்ந்த நடை கவனத்துக்கு வர, சட்டென்று நடையைத் துரிதப்படுத்தினாள். புயல் வருவதற்கான அறிகுறி போன்றதொரு அமைதி எங்கும் நிலவிக்கொண்டிருந்தது. தலைக்கு மேலே இருந்த மரக்கிளையில் பதற்றமான பறவைக்குஞ்சுகளின் கீச்சுகளும் அவற்றைத் தேற்றும் தாய்க்குருவியின் கீச்சொலியும் கேட்டன. அந்த தாய்ப்பறவையின் கரிசனம், அவளுக்குள் குழந்தைக்கால நினைவுகளைத் தூண்டிவிட்டது

தாயிடம் அழைத்துச் செல்லும் பாதை, எவ்வளவு தனிமையும் இருளுமாக இருந்தாலும் அதனாலென்ன? அவளுடைய பயமும் கவலையும் விலகிப்போக, முன்னால் தெரியும் பாதையை அலட்சியத்துடன் பார்த்தாள். தாயுடன் நிகழவிருக்கும் சந்திப்பை முன்கூட்டியே மனத்தில் ஓடவிட்டுப்பார்த்து சிரித்துக்கொண்டாள்.

“வாடி என் கண்ணே!”

அம்மா!”

அவளைக் கட்டியணைத்துக்கொள்ளும் அம்மாவின் அன்புக்கரங்களையும் ஆதுரமான முத்தத்தையும் அவளால் உணர முடிந்தது. அவள் மிகுந்த உற்சாகத்துடன் பொறுமையற்று வேகநடை போட்டாள். ஆனால் கோபாவேசக்காற்று அவளை அவ்வாறு செய்யவிடாமல் தடுத்தது. உள்ளுக்குள் இருக்கும் குழந்தைமை முதல்முறையாக அவளைக் கலக்கமடையச் செய்தது. தாய்மையின் உள்ளுணர்வு அவளை உசுப்பியது. நிமிர்ந்திருந்த உடல் குறுக, அவள் மண்டியிட்டு கரங்களை உயர்த்தி கடவுளை நோக்கி இறைஞ்சினாள். ஒரு மின்னல் அவளுடைய தலைக்கு மேலே சீறிக்கொண்டு சென்றது. அவளுடைய உற்சாகம் வடிந்துபோனது. வெகு அருகில் எங்கோ இடி விழுந்தது.

கொஞ்சதூரம் நடந்தவள், சட்டென்று நின்றாள். அவள் சரியான பாதையில்தான் போய்க்கொண்டு இருக்கிறாளா? பறவைக்கூடு இருந்த இடத்தில் இரண்டு பாதைகள் பிரிந்துசென்றன. ஒன்று வீட்டுக்கு அழைத்துச் செல்லும் பாதை, மற்றது பழைய மாட்டுவண்டிப்பாதை. அவள் மாட்டுவண்டிப் பாதையில் போய்க்கொண்டிருப்பதை உணர்ந்தாள். பாதைகள் பிரியும்போது கவனமாக இருந்திருந்தால் சரியான பாதையைத் தேர்ந்தெடுத்திருக்க அவளால் முடிந்திருக்கும். மறுபடி வந்த வழியே வெகுதூரம் திரும்பிச்செல்லவேண்டும்.

சரியான பாதைக்கான பழைய அடையாளக்குறிகளை நினைவுக்குள் மீட்டெடுத்தாள். முதலில் நினைவுக்கு வந்ததுகோணல் மரம்’. அதைத் தொடர்ந்துஅக்கா தங்கை மரங்கள்’. தெற்கிலிருந்து காற்று வீசும்போது தங்கள் கிளைக்கரங்களைக் கோத்துக்கொண்டு பேசுவதால் அவற்றுக்கு அப்பெயர். சமவெளியைப் பிரிக்கும் ஓடைக்கரையில் வளர்ந்திருக்கும் ஆப்பிள் மரங்கள். அந்தப் பகுதியில் எப்போதும் பசுக்களும் கன்றுகளும் காணப்படும். ஆற்றை ஒட்டிச் செல்லும் தவறான பாதையோரம் சவுக்கு மரங்களும் பைன் மரங்களும் செறிந்து வளர்ந்திருக்கும். மின்னல் ஒளிக்கீற்றின் உதவியால் இடங்கள் பளிச்சென்று தெரிந்தாலும் தொடர்ந்துவந்த இடி முழக்கம் அவளைக் கவனிக்கவிடாமல் திசைதிருப்பியது.  

அவள் எதையும் தீர்மானிக்க இயலாமல் திகைத்து நின்றாள். வரக்கூடிய ஆபத்துகளை எதிர்பார்த்து நின்றிருந்தாள். சஞ்சலம் மேலிட, அடுத்த மின்னலுக்காகக் காத்திருந்தாள். அவள் தவறான பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறாள் என்பதை அது உறுதிப்படுத்தியதும் திரும்பி நடந்தாள்

வானத்தில் விரிசலுண்டானதுபோல் மின்னல் வெட்டியது. தடாலென்று இறங்கிய இடி அவளை அதிரச்செய்தது. புயல் பலமாய் வீசத் தொடங்கியது. அவள் பைன் மரங்களுக்குக் கீழே பயத்துடன் நின்றிருந்தாள்.

இன்னதென்று புரியாத அச்சம் அவளைப் பீடித்தது. அவள் இருட்டில் ஒன்றும் புரியாமல், இருகைகளையும் நீட்டிக்கொண்டு வேகமாக நடக்க முயற்சி செய்தாள். ஆனால் எதன்மீதோ மோதிக்கொண்டு வீழ்ந்தாள். கூட்டமாய் மாடுகள் மிரண்டு நிற்பது மின்னல் வெளிச்சத்தில் தெரிந்தது. எழுந்து, விழுந்து தடுமாறி எங்கு ஓடுகிறோம் என்று தெரியாமலேயே ஆனால் மாடுகளின்மேல் வைத்தப் பார்வையைத் திருப்பாமலேயே ஓடினாள். இலக்கில்லாமல் ஓடியவள், தன்னுணர்வு இல்லாமலேயே பாதையை அடைந்தாள். பாதையைக் கண்டுபிடித்ததும் அவளுக்கு மீண்டும் ஒரு சந்தேகம். இதுதான் சரியான பாதை என்றால் வண்டிகள் போய்வந்த வழித்தடம் இருக்கவேண்டுமே. அதைத் தொடர்ந்தால் ஊருக்குள் சென்றுவிடலாம் என்ற எண்ணத்தோடு அவள் மழைநீருக்குள் கைகளால் துழாவினாள். ஆனால் மழையினால் மண்ணிலிருந்த வண்டித்தடங்கள் அழிபட்டிருந்தன.  

அவளை வழிநடத்த அங்கு எதுவுமே இல்லை. இரண்டு பாதைகளும் பிரியுமிடத்தில் பைன் மரங்கள் சிறிய அளவில் கொத்தாய் அடர்ந்து காணப்படும் என்பது நினைவுக்கு வந்தது. சிறுமியாய் இருந்த காலத்தில் அந்த பைன் மரங்களில் படர்ந்து வளரும் பெர்ரிக் கொடியின் பழங்களை சேகரிக்க அவள் அங்கு வந்திருக்கிறாள்.

தான் சரியான பாதையில்தான் செல்கிறோம் என்று அவள் நம்பினாள், எண்ணினாள், பிரார்த்தித்தாள். அது சரியென்றால் இன்னும் சற்று தூரம் போனால் போதும், கோணல் மரம் வந்துவிடும். பல வருடங்களுக்கு முன்னால் ஒரு குதிரை, தன்னை ஓட்டிவந்த குடிகாரனை அந்த கோணல் மரத்தோடு வைத்து நசுக்கிக் கொன்ற சம்பவம் நினைவுக்கு வந்தது. அந்த சம்பவத்துக்குப் பின்னால் அந்த கோணல் மரம் திகிலூட்டுவதாகிப் போயிருந்தது. மின்னல் ஒளியில், தூரத்தில் அந்த கோணல் மரம் தென்பட்டது.

அவள் சரியான பாதையில்தான் போய்க்கொண்டிருக்கிறாள். தொடர்ந்து செல்லவேண்டியதுதான். அவளுடைய பால்யகாலத்து பயம் மறுபடி தலைதூக்கியது. மின்னல் ஒளியில் குதிரையில் யாரோ அதிவேகத்தில் அவளை நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள். அவள் இதயம் வெளியே தெறித்து விழுந்துவிடாதபடி, இரண்டு கைகளாலும் மார்பைப் பற்றியபடி நின்றிருந்தாள். கரிய இருளையும், தலையுரசிப்போகும் காற்றின் ஓலத்தையும் மீறி அலறலும் அதைத் தொடர்ந்து மரத்தில் ஏதோ இடிபடும் சத்தமும் கேட்டது. அவள் எழுப்பிய ஓலம் இடிச்சத்தத்தால் அமுக்கப்பட்டது. அடுத்த மின்னல் ஒளியில் அவள் கண்ணுக்கு மரம் மட்டுமே தட்டுப்பட்டது. “கடவுளே.. என்னைக் காப்பாற்று!” அவள் பிரார்த்தனை செய்தபடியே கனத்த இதயத்தோடு விலகி நடந்தாள்.

பாதை ஓடையில் மூழ்கிபோயிருந்தது. வெள்ள நீர்ப்பெருக்கின் ஆரவாரம் கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரித்துக்கொண்டே போனது. எப்போதுமே வறண்டுகிடக்கும் சிற்றோடை கூட நுரைக்கும் வெள்ளத்தால் பூரித்துக் கிடந்தது.

மழை சற்றுக் குறைந்திருந்த போதிலும் ஓடிக்கொண்டிருக்கும் ஓடைநீரின் சலசலப்பு பயத்தை ஏற்படுத்தியது. அவளுக்காக அக்கறையில் ஒரு ஜீவன் காத்திருக்கிறதே! சென்றமுறை வந்தபோது இரவு மிகவும் இதமானதாக இருந்தது. அவளை அழைத்துச்செல்ல பக்கத்துவீட்டுக்காரரின் மகன் ரயில்நிலையத்துக்கு வந்திருந்தான். அம்மா, அவள் வரவுக்காக, கையில் லாந்தர் விளக்குடன் ஓடைக்கரையில் காத்திருந்தாள்அதுபோல் இன்றும் ஏதேனும் விளக்கு வெளிச்சம் தெரிகிறதா என்று எதிர்பார்ப்புடன் கூர்ந்து பார்த்தாள். எதுவுமில்லை.

பாதை அவளை ஓடைக்கரையில் கொண்டு சேர்த்தது. ஓடையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. கரையின் இருபக்கத்திலிருக்கும் வில்லோ மரங்களின் தாழ்வான கிளைகள் சரம் சரமாய் ஓடைக்கு மேலே தொங்கிக்கொண்டிருக்கும். அவை எப்போதும் வெள்ளமட்டத்தை விடவும் உயர்ந்தே இருக்கும். இன்று அவையும் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டிருப்பது வெள்ளநீரில் கிளைகள் சலம்பும் ஒலியைக் கொண்டு உணரமுடிந்தது. அந்தக் கிளைகளைப் பற்றிக்கொண்டுதான் அவள் அக்கரை சென்றாகவேண்டும்
  
ஒரு சன்ன ஒளிக்கீற்று கூட இல்லாதபடி இருண்டுகிடந்த வானத்தைப் பார்த்தாள். அன்பான கணவனையும் குழந்தைகளையும் நினைத்துப்பார்க்கையில் அவள் உதடுகள் நடுங்கின. ஆனால் அவள் தைரியத்தைக் கைக்கொள்ளத்தான் வேண்டும். மறுகரையில் அவளுடைய வயதான, தலைநரைத்த தாய் அவளுக்காகக் காத்திருப்பாளே! அந்த எண்ணமே இரு கரைகளையும் குறுக்கியது. இவ்வளவு துயரங்களுக்கும் ஆபத்துகளுக்கும் அப்பால் அன்புக்கான உத்திரவாதம் காத்திருக்கிறதுமீண்டும் அவள் வானத்திசை நோக்கினாள். “கடவுளேஆசீர்வதியும், மன்னியும், அரவணையும், வழிநடத்தும், வலிமை தாரும்.” அவளது தாயின் பிரார்த்தனை அது.

வில்லோ மரத்தின் தாழ்ந்திருந்த ஒரு பெரிய கிளையைப் பற்றிக்கொண்டு நீரின் ஆழத்தை ஆராய்ந்தாள். கணுக்கால் வரையிலும் ஓடிக்கொண்டிருந்தது. அடுத்தடுத்த அடிகளில் இன்னும் ஆழம் அதிகரித்தது. பயங்கர வேகத்துடன் வீசிய காற்று அவளுடைய மெலிந்த கைகளால் பற்றியிருந்த கிளையைப் பறித்துப்போனது. தண்ணீர் இப்போது முழங்கால் வரையிலும் ஓடிக்கொண்டிருக்க, எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் பேராபத்துக்குரியதாயிருந்தது.  

அவள் பல்லால் ஒரு மெல்லிய கிளையைக் கவ்விக்கொண்டாள். பேராசை பிடித்த காற்று அவள் தொப்பியைப் பறித்துக்கொண்டு போனது. அணிந்திருந்த நீண்ட மேலங்கி அவளை வேகமாய் முன்னேற விடாமல் அவளுக்கெதிரியாய் மாறியிருந்தது. குளிரில் மரத்து விறைத்துப்போன விரல்கள் அவளுக்கு உதவாமல் போயின.

விரைவிலேயே நீரின் ஆழம் அதிகரிக்கலாம்; மரக்கிளை கைநழுவிப் போகலாம். கிளை அக்கரை வரை வரும் என்றாலும் காற்றின் வேகத்தால் வலுவற்ற நுனிக்கிளை உடைந்துபோகலாம் என்பதால் அதில் நம்பிக்கை வைக்கமுடியவில்லை. இப்போது அவளால் இக்கரைக்கும் திரும்பிப்போகமுடியாது. நுரைத்துக்கொண்டு ஓடும் வெள்ளம் அவளை கிடுகிடுக்க வைக்கையில்... செவியறையும் காற்று அங்குலம் அங்குலமாக அவளைத் தாக்குகையில் திரும்பிப் பார்ப்பது கூட அசாத்தியம்.

வெகுநாட்களுக்கு முன்பே அவள் அம்மாவைப் பார்க்க வந்திருக்கவேண்டும். மனம் செய்யத் தவறிவிட்ட ஒரு செயலுக்கான தண்டனையை இன்று, உடல் அனுபவிக்கிறது. அவள் இதயம் குறுகுறுத்து நகைத்தது.

இப்போது நீரோட்டத்தின் வேகம் அதிகரித்திருந்தது. ஒருவேளை வெள்ளநீரில் வில்லோ மரக்கிளைகள் அடித்துச்செல்லப்பட்டுவிட்டால், அவள் உடைகள் அவளை மூழ்கவிடாமல் மிதக்கச்செய்யலாம். அவள் மூச்சை உள்ளிழுத்துப் பிடித்து, சிறுமியைப் போல்அம்மா….” என்று உரக்கக் கத்தினாள்

நீரின் ஆழம் அதிகரிக்க சுழலின் வேகமும் அதிகரித்தது. கிளையின் பருமன் குறைந்துகொண்டே வருவதிலிருந்து ஓடையின் மத்தியில் இருப்பது புரிந்தது. வில்லோ மரக்கிளையால் காற்றின் பலத்தை எதிர்கொள்ள இயலவில்லை. அங்குமிங்கும் ஊசலாடிக்கொண்டிருந்த எதிர்க்கரையின் வில்லோ மரக்கிளைகளைப் பற்றும் முயற்சி தோல்வியில் முடிந்தது. அவற்றின் நுனிகளைத் தொடமுடிந்ததே தவிர கைகளால் பற்றிக்கொள்ள இயலவில்லை.

அவள் அவநம்பிக்கையும் அதிர்ச்சியும் அடைந்தாள். ஒரு கையால் தூரத்திலிருந்த ஒன்றை எட்டிப் பிடித்தாள். சற்று அருகில் இழுத்து மறுகையால் சர்வ ஜாக்கிரதையோடு எவ்வளவு கிளைகளைப் பற்றமுடியுமோ அவ்வளவு கிளைகளைப் பற்றினாள். காற்று இரக்கமில்லாமல் அவற்றைப் பறித்துப்போனபோது அவை அவள் முகத்தில் சாட்டைபோல் வீசிச்சென்றன.

மேலும் தங்களுடைய வரிக்கரங்களால் அவளுடைய கழுத்தை வளைத்துப் பிடித்துக் காயப்படுத்தின. அவளுடைய அம்மாதான் இந்த வில்லோ மரங்களை இங்கு நட்டுவைத்தவள். மரங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் வளர்வதைக் கண்டு ரசித்தவள் இவள். அவை எப்படி இவளுக்கு விரோதமாய் மாறிப்போகமுடியும்!

அவள் தயங்கும் ஒவ்வொரு நொடியும் வெள்ளத்தின் அபாயம் அதிகரித்துக்கொண்டுதான் போகும். நடுங்கவைக்கும் வெள்ளத்தை விடவும் ஊளையிடும் காற்றுதான் அவளை அதிகமாய் அச்சுறுத்தியது.

எதிர்க்கரை மரங்களின் பலவீனமான கிளைகள் அவள் கைக்கு எட்டியும் எட்டாமலும் வந்துபோய்க்கொண்டிருந்தன. ஏற்கனவே கையில் பிடித்திருக்கும் இக்கரையின் மரக்கிளைகளை விட்டுவிட்டு இரண்டு அடி முன்னே எடுத்துவைத்துவிட்டால் போதும், அக்கரையின் நல்ல வலுவான மரக்கிளை கைக்கு அகப்பட்டுவிடும். “ஆனால் அது உன்னால் முடியுமா?” என்றபடி ஓலமிட்டது காற்று. சட்டென்று வீசிய கடுங்காற்றில் அவள் தூக்கியெறியப்பட்டு சுழலோடு போனாள். அவளுடைய மேலங்கி அவளை பாய்மரம்போல் செலுத்திக்கொண்டு போனது.

உள்ளுணர்வு உந்த வெள்ளத்தை எதிர்த்துக் கடுமையாகப் போராடினாள். முதலில் அவள் நினைவுக்கு வந்தது, அவளுடைய அன்புக் கணவனுக்காக அவள் இட்டு வந்த கடிதமுத்தம். அதுதான் அவளிடமிருந்து அவனுக்குக் கிடைக்கும் கடைசி முத்தமாக இருக்குமோ? அவள் மிதந்துவந்த ஒரு மரக்கிளையைப் பற்றிக்கொண்டு அதன் போக்கிலேயே போனாள். இரண்டு கரைகளில் ஏதொன்றிலும் சேர்ந்துவிட அவள் செய்த முயற்சிகள் பயனற்றுப்போயின. உதவிகோரி குரலெழுப்ப வாயைத்திறந்தாள். காற்று அவள் வாயையும் தொண்டையையும் புனலெனக் கருதி புனல்நீரை அவள் வாய்க்குள் புகட்டியது. அவள் வலுவற்ற நிலையிலும் போராடினாள். காற்று மீண்டும் மீண்டும் வாய்க்குள் சேற்றுநீரை ஊற்ற அவள் அம்முயற்சியைக் கைவிட்டாள்.

திடீரென்று கோணல் மரத்திடமிருந்து எழுந்த விபரீதக் கதறல் காற்றைத் துளைத்து வந்து அவள் காதைத் துளைத்தது. சற்று நேரத்தில் இதமான குரலொன்று அவள் காதருகில் கிசுகிசுப்பாய் சொன்னது, “என்னிடம் வாடீ சின்னப்பெண்ணே!”

மென்மையான வலுவான கரங்கள் அவளைத்  தாங்கிக்கொண்டன. நண்பர்கள் என்றெண்ணிய வில்லோ மரங்கள் கைவிட்டதையும் எதிரியென்று நினைத்து பயந்து ஒதுக்கிய கோணல்மரம் காப்பாற்றுவதையும் எண்ணி வியந்தாள். அவளுடைய கணிப்புகள் யாவும் தவறாகிப் போய்விட்டன என்ற எண்ணம் அவளை பலவீனப்படுத்தியது.

இப்போது காற்றும் கரகரத்தக் குரலில் தாலாட்டு பாடிக்கொண்டிருந்தது. ஆவேசத்துடன் சுழித்தோடிய நீருக்கு மேல் அவளுடைய முகம் அழகாய் எழுந்தது. வேரோடு வீழ்ந்துகிடந்த அந்த பெரிய கோணல் மரம் சொன்னது, “அவ்வளவுதான்.. இன்னும் கொஞ்சம்தான்.” பந்தய வீரனைப் போல் தறிகெட்டு ஓடிய வெள்ளநீர் அவளை அந்த தடுப்பைத் தாண்டி இழுத்துக்கொண்டு ஓட கடுமுயற்சி செய்தது. அங்கிருந்து அவளை மறுபடி தன்னோடு இழுத்துக்கொள்ளப் போராடியது. கூரிய முனைகளைக்கொண்டிருந்த கோணல் மரக்கிளை அவளுடைய மேலங்கியை இறுக்கமாய்ப் பற்றி அவளைத் தன்னோடு சேர்த்துப்பிடித்திருந்தது.    

காயங்களும் அரைமயக்கமுமான நிலையில் அவள் அந்த கோணல்மரத்திடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டாள். வெள்ளநீர் வேறு வழியில்லாமல் அந்த எதிரியின் கீழே மண்டியிட்டு ஓடிக்கொண்டிருந்தது. நம்பிக்கை அவள் இதயத்தைத் தட்டி உசுப்பியது. அந்த சிநேகமரத்தின் முதுகு மேல் ஊர்ந்து அதன் வேர்களைக் கடந்து கரைக்கு வந்தாள். அது சரியாக அவளுடைய அம்மாவின் வீடு இருக்கும் இடம் என்பதை அறிந்து வியந்தாள்.

அவள் மேட்டுநிலத்தில் ஏறிநின்றாள். கடந்துவந்த துயரத்தையும் வேதனையையும் மறக்கச்செய்யும்வண்ணம் அங்கே அவளுடைய அம்மாவின் வீடு காட்சியளித்தது. வீட்டுக்குள் எரிந்துகொண்டிருந்த விளக்கொளி அவளை வரவேற்றது.

அவள் நடையைத் துரிதப்படுத்தினாள். மழை மீண்டும் பெய்யத்தொடங்கியது. காற்று மறுபடியும் வீசத்தொடங்கியது. மூச்சுவிடவும் சிரமமான நிலையில் அவள் வேகமாய் நடந்தாள்வீட்டிற்குள் தெரிந்த விளக்கு வெளிச்சம் அவளுடைய அர்த்தமற்ற பயங்களை விலக்கியிருந்தது.

பயங்கரமான அந்த புயலின் நடுவில் அம்மாவின் குரலைக் கேட்டேன் என்று சொன்னால் அம்மா சிரிப்பாள். சிரித்துவிட்டு அவளுடைய ஈரமான தலைமயிரைக் கோதிக்கொண்டேஅடி என் சின்னப்பெண்ணேஎல்லாம் கனவுதான். வேறொன்றுமில்லை. நீ கனவு கண்டிருக்கிறாய்என்பாள். ஆனால் அம்மாவும் ஒரு கனவுலக சஞ்சாரிதான்.

வெளிக்கதவு மழையால் இறுகிப்போய் திறக்க கடினமாக இருந்தது. சென்ற முறை அம்மாதான் திறந்துவிட்டாள். துரதிஷ்டவசமாக இம்முறை அவளுடைய கடிதம் அம்மாவை வந்துசேர்ந்திருக்கவில்லை போலும். இந்த மோசமான பருவநிலைதான் அஞ்சல் தாமதத்துக்குக் காரணமாக இருக்கும்.

நாயின் குரைப்பைக் கேட்டும் எவரும் வெளியில் வராதது கண்டு அவளுக்கு கலக்கமேற்படவில்லை. பக்கத்தில் எங்கோ பெரும் இரைச்சலுடன் தண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது. அந்த சத்தத்தில் நாயின் குரைப்பு உள்ளே கேட்காமல் போயிருக்கலாம். எங்கிருந்து சத்தம் வருகிறது என்று யோசித்தாள். குழாய் மூலம் தண்ணீர்த்தொட்டி நிரம்பி வழிந்து தோட்டம், நடைபாதை இவற்றை நிறைத்து ஓடிக்கொண்டிருந்தது. தண்ணீர்க்குழாயை அடுத்தத் தொட்டிக்கு மாற்றிவிடாமல் அம்மா என்ன செய்துகொண்டிருக்கிறாள்? 

ஏதோ ஒரு நிச்சயமற்றத் தன்மை அவளை உறுத்தியது. பல வருடங்களுக்கு முன் அவள் அம்மா மழைநீரை சேகரித்து வறண்ட கோடைக்காலங்களில் உபயோகப்படுத்திக்கொள்ள இந்தக் குழாய்களைப் பதித்தது நினைவுக்கு வந்தது. ஓடையிலிருந்து மெனக்கெட்டு கொண்டுவரும் நீரை இப்படி பொறுப்பில்லாமல் ஓடவிடுவது நிச்சயம் அம்மாவாய் இருக்கமுடியாது.

சட்டென்று அவள் இதயம் குளிர்ந்து நடுங்கத்தொடங்கியது. அம்மாவைக் கண்ணால் பார்த்தபிறகுதான் அது சரியாகும் என்று தோன்றியது. ஆனால் அவளால் காத்திருக்க இயலவில்லைகதவை மெதுவாகத் தட்டியபடி குரல் கொடுத்தாள், “அம்மா…”

காத்திருக்கையில் நாயோடு சிநேகம் கொள்ள முயற்சி செய்தாள். நாய் அவள் குரலை மறந்துபோகும்வண்ணம், அவள் தாய்வீட்டுக்கு வந்து பலகாலம் ஆகிவிட்டிருக்கிறது என்று நினைவுறுத்தி இதயம் அவளை உலுக்கியது. பற்கள் கிடுகிடுக்க மறுபடியும் மெதுவாகத் தட்டினாள்.

சட்டென்று கதவு திறந்து வெளிச்சம் பரவ, யாரோ புதியவள் அவள்முன் நின்றாள். வள் சுவரில் சாய்ந்து தன்னை நிதானித்துக்கொண்டு, விரிந்த விழிகளை உள்ளே ஓட்டினாள். மற்றொரு புதியவள் கணப்படுப்பின் அருகில் நின்றிருக்க, குழந்தையொன்று படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்தது. குழந்தையின் தாய் குழந்தையை அள்ளிக் கொள்ள, அந்தப் படுக்கையில் இப்போது மூச்சிறைத்துக்கொண்டிருக்கும் வள் படுக்கவைக்கப்பட்டாள்

ஒரு வார்த்தை கூட பேசப்படவில்லை. இரு பெண்மணிகளின் செய்கைகளும் தூங்குபவரை எழுப்பிவிடக்கூடாதென்ற எச்சரிக்கையுணர்வுடன் இருந்தன. ஏதோ வெதுவெதுப்பான திரவம் அவள் வாயில் புகட்டப்பட்டது. அதுவரையில்தான் அவள் சுயநினைவுடன் இருந்தாள். அவர்களுடைய கண்களில் வெளிப்பட்ட திகைப்பின் கேள்விக்கு இவளுடைய கண்களில் உறைந்திருந்த திகிலே பதிலானது.

விளக்கு வெளிச்சத்தில் நாய் அவளை அடையாளங்கண்டுகொண்டு வாலைக்குழைத்து வரவேற்றது. அவள் கண்விழித்து எழுந்து அமர்ந்தாள். கணப்படுப்பில் விறகு எரிந்து பிளப்பதையும், குழந்தை இவளது நெற்றிக்காயத்தை சுட்டி அதன் தாயிடத்தில் ஏதோ சொல்வதையும், அப்பெண் மெழுகுவர்த்தியை  நெருப்பிலிருந்து பற்றவைப்பதையும் கவனித்தபடி இருந்தாள். 

மெழுகுவர்த்தியை ஏந்திய பெண் இவளை தன் பின்னே வரச்சொல்லி சைகை காட்டி அமைதியாக முன்னே நடந்தாள். இவள் அனிச்சையாய்த் தொடர்ந்தாள். அம்மாவின் அறைக்குச் சென்றதும் அவள் மெழுகுவர்த்தியை உயர்த்திப் பிடித்து இவளைத் திரும்பிப் பார்த்தாள். உறங்குபவளின் முகத்தை மூடியிருந்த துணியை விலக்க, தாயின் முகம் வெளிச்சத்தில் துலங்கியது. கனவுலக சஞ்சாரியான அவள் அம்மா நேற்றிரவு முதல் கனவு காண்பதை நிறுத்திவிட்டிருந்தாள்.

&&&&&&&&

மூலக்கதை: A dreamer by Barbara Baynton

தமிழில் – கீதா மதிவாணன்
பங்குனி, சித்திரை 2015 காற்றுவெளி இதழில் வெளியானது.
(பட உதவி: இணையம்)