23 February 2014

குளிரவன் போவதெங்கே?
தோகுளிரவன்!
தூரத்து மலைமுகட்டு மரங்களுக்குப் பின்னே
மெளனமாய்ப் பதுங்கி நழுவிப் போவதெங்கே?

வசந்தமென்னும் பருவப்பெண் பச்சையம் பூசி
ஓடைக் கண்ணாடியில் ஒப்பனை செய்வதை
வழியில் பார்த்தவன், வெளிறிய தன் முகத்தை
வேறுதிசையில் திருப்பிக்கொண்டு
திரும்பிப் பாராமல் போகிறான்.

ஆனால் எனக்குத் தெரியவேண்டும்
அவன் சென்ற வழி எதுவென்று
அவனைக் கண்டுபிடிக்க இதுவரை
எவரும் முயன்றாராவென்று

இடிமுழக்கத்தால் விண்ணுக்கு இழுத்துவரப்பட்டு
மேகப் பஞ்சணையில் துஞ்சவைக்கப்பட்டிருக்கிறானோ?
சமுத்திரத்துக்குள் சென்றிருப்பானாயின்
சதிராடும் அலைகளால் சுழற்றியெறியப்பட்டிருப்பானோ?

அலைக்கழிக்கப்பட்டு ஆறாத ரணங்களுடன்
உயிர் ஊசலாடியபடி கரையோரம் ஒதுங்கி
காட்சியளிக்கிறானா மீனவர் எவருக்கேனும்?
ஆளரவமற்றத் தீவொன்றில் அசைவற்று
விறைத்துக் கிடக்கிறானா எங்கேனும்?

சாம்பல் நிறத் தலையைக் கவிழ்ந்தபடி
நித்தமும் சூரியன் மறையும் நீலமலைகளுக்கப்பால்
எவருமறியாப் பொழுதுகளில் சென்று
கல்லறையொன்றைத் தோண்டுகிறானோ?

தன் வெளிர்வண்ண ஆடையுடன்
தானே வெட்டிய கல்லறைக்குழிக்குள்
கரங்களை மார்பில் கோர்த்தபடி படுத்துக்கொண்டு
என் மறைவுக்காய் கண்ணீர் சிந்துவார் யார்?
மாறாய் மகிழுமே வசந்தத்தின் வருகையால் ஊர்!
என்றெண்ணி மருகுகிறானோ?

ஐயோகுளிரவனே
என் கண்கள் சிந்துகின்றனவே கண்ணீர்,
உனக்கு மகிழ்வளிக்கப் போதுமானதா
ஒரு குழந்தையின் கண்ணீர்?

வசந்தம் தொலைவில் வரும்போதே
உன் ஆடைநுனியை இறுகப் பற்றிக்கொண்டு
உன்னை அழைத்தபடியே தொடர்ந்தேன்.
உன் கரங்களில் முத்தமிடுகிறேன்.
உன் வேதனையைப் புரிந்துகொண்டேன்,
தொய்ந்துபோன உன் தலையை இதமாய்த் தடவுகிறேன்.

…. என்னால் பாட இயலாது
குளிரவன் இங்கே வெளிறிச் சாகிற வேளையில்
வசந்த கானமிசைத்திட என்னால் எப்படியியலும்?

<><><><><><><><><><>


(Where does the Winter go? By Ethel Turner) 
10/2/14  அன்று வல்லமை இதழில் வெளியானது.

20 February 2014

இன்றைய சினிமாவின் போக்கும் சமூக பாதிப்புகளும்
இன்றைய சினிமாவின் போக்கும் சமூக பாதிப்புகளும் என்னும் 
தலைப்பே கட்டுரையின் சாராம்சத்தை சொல்லிவிடுகிறது. இன்றைய சினிமாவின் போக்கால் சமூகம் பாதிப்புக்காளாகிறது என்பது எவரும் மறுக்கவியலாத உண்மை. தலைப்பில் சினிமா என்று பொதுவாக இருப்பதால் அது குறிப்பது தமிழ்த் திரைப்படங்களையா? இந்தியத் திரைப்படங்களையா? அல்லது உலகத் திரைப்படங்களையா? என்று ஆரம்பம் முதலே ஒரு தடுமாற்றம் இருந்தது. ஒரு தமிழ் இணையதளத்தில் நடத்தப்படும் ஒரு போட்டி என்பதாலும் உலக சினிமா பற்றிய அலசலை முன்வைக்கும் தகுதி எனக்கில்லை என்பதாலும் தமிழ்த் திரைப்படங்களைக் குறிப்பதாகவே எண்ணிக்கொண்டு களத்தில் இறங்கிவிட்டேன்.

திரைப்படம் என்பதே சமூகத்தின் பிரதிபலிப்புதானே என்று ஒருசிலர் வாதிடலாம். அதில் ஓரளவு உண்மை இருந்தாலும் முற்றிலும் உண்மையாகிவிடாது. சமூகத்தைப் பிரதிபலிக்கும் எத்தனையோ நல்ல சிறப்பான அம்சங்கள் இருக்க, சமூகத்தைப் பாதிக்கும் அம்சங்கள் மட்டுமே பிரதானப்படுத்தப்படுவது வருத்தத்துக்குரிய விஷயம். எங்கோ நம் கண்ணுக்குத் தெரியாமல் நடந்துகொண்டிருக்கும் சமுதாயச் சீர்கேடு ஒன்றைக் காட்டுகிறேன் என்று துவங்கி, இறுதியில் ஒட்டுமொத்த சமுதாயமும் சீர்கெட்டது என்ற தீர்ப்பை வழங்குதல் நியாயமன்று. எல்லாத் திரைப்படங்களும் அப்படித்தானா என்றால் இல்லை, ஆனால் நூற்றுக்கு தொண்ணூறு படங்கள் அப்படித்தான் உள்ளன. அவற்றைப் பற்றிய என் பார்வையே இது.

இன்றைய பல திரைப்படங்கள் தவறான உதாரணங்களை முன்வைத்து இளைஞர்களைத் தவறான பாதைகளில் திசைதிருப்பிவிடுகின்றன. இன்றைய இளைஞர்களுக்கு அவர்கள் ஆண்களாகட்டும், பெண்களாகட்டும்எதையும் நின்று நிதானித்து யோசிக்க அவகாசமில்லை. அவசர யுகத்தில் வாழ்கிறார்கள். சரியான புரிதல்களும் தெளிவான சிந்தனைகளும் காலங்கடந்தபின்னரே கவனத்துக்கு வருகின்றன. ஆனால்அதற்காக அவர்கள் கொடுக்கும் விலை மிக அதிகம். உடல்நலம் கெட்டு, மனநலம் கெட்டு, கைப்பொருள் இழந்து, நிம்மதி இழந்து, உறவுகளை இழந்து, இறுதியில் தங்கள் வாழ்க்கையையே தொலைத்து நிற்கிறார்கள். அதற்கு சினிமா போன்ற ஊடகங்களின் பங்கு பெரும்பான்மை என்றால் அது மிகையில்லை. திரைகளில் அவர்கள் தங்களையே பார்க்கிறார்கள். எப்படி ஒரு இல்லத்தரசி மெகா தொடர்களைப் பார்த்து மனம் பேதலித்து அதில் தன் வாழ்க்கையைப் பிணைத்துக்கொண்டு மன நிம்மதி இழந்து தவிக்கிறாளோஅதற்கு துளியும் குறைவிலாத அவலம் திரைப்படங்கள் மூலம் இளைய தலைமுறைக்கு நேர்கிறது.

இன்றைய தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகனைப் பற்றிய ஒரு மோசமான சூத்திரம் உருவாகிக்கொண்டிருக்கிறது என்பதை சமீபகாலமாக நாம் பார்க்கும் சில திரைப்படங்கள் மூலம் உணரமுடிகிறது. பழைய திரைப்படங்களில் கதாநாயகன் என்பவன் அன்பு, பண்பு, பாசம், தியாகம், லட்சியம், வள்ளன்மை போன்ற பல உயரிய குணங்களைக் கொண்டவனாக இருந்தான். ஒருசில படங்களில் ஆரம்பத்தில் கெட்டவனாக இருக்கும் கதாநாயகன், ஏதோவொரு சந்தர்ப்பத்தில் திருந்தி, நல்லவனாக மாறிவிடுவான். சில வருடங்களுக்கு முன்பு வரையிலும் கூட, கதாநாயகன் என்பவன் உத்தமனாய் இல்லாவிடினும், ஓரளவு நல்லவனாய், மனசாட்சிக்குப் பயந்தவனாய், சந்தர்ப்ப சூழலினால் மட்டுமே தவறிழைப்பவனாய் காட்டப்பட்டுக்கொண்டிருந்தான்.

ஆனால் இப்போது….  கதாநாயகன், உலகத்திலுள்ள அனைத்து அயோக்கியத்தனங்களும் கொண்டவனாக இருக்கிறான். வில்லனை விடவும் மோசமானவனாக சித்தரிக்கப்படுகிறான். எந்த சிக்கலும் இல்லாத ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் கதாநாயகி, அவனுடைய அயோக்கியத்தனத்தாலேயே ஈர்க்கப்பட்டு விரட்டி விரட்டி காதலிக்கிறாள். இது போன்ற திரைப்படங்களைப் பார்க்கும் விடலைகள் மனத்தில்ஓஹோஇப்படியிருந்தால்தான் பெண்பிள்ளைகளுக்குப் பிடிக்கும்போலும் என்னும் எண்ணம் வேர்விட ஆரம்பித்துவிடலாம். இல்லாத பழக்கங்களைக் கற்றுக்கொள்ள இத்திரைப்படங்கள் ஒரு தூண்டுதலாக அமைந்துவிட பெரும் வாய்ப்பு உள்ளது.

காதல் என்ற சொல்லுக்கு இந்த திரைத்துறையினர் கொடுக்கும் விளக்கங்களும் வியாக்கியானங்களும் இருக்கிறதேஅப்பப்பாரம்யமான அந்த உணர்வை ரம்பத்தால் அறு அறு என்று அறுத்து குருதி வடியத் தொங்கவிட்டுவிடுகிறார்கள். காதலைக் கடைபரப்பி விற்கிற அந்த வியாபாரிகளிடம் எல்லாம் இருக்கிறது, காதலைத் தவிர என்பது விநோதம். காதல் மீதான மதிப்பைக் கூட்டுவதாக இல்லையென்றாலும் பரவாயில்லை, இழிவுபடுத்துவது போல் எத்தனைப் படங்கள்!
காதல் மட்டுமா? காதலும் நட்பும்தான் இன்றைய திரைத்துறை கையிலெடுக்கும் கருக்கள். அவற்றைத் தாண்டிய உணர்வுகளும் வாழ்க்கையும் ஒரு பொருட்டே இல்லை அவர்களுக்கு.

காதலைப் போலவே நட்பையும் கொச்சைப்படுத்தும் திரைப்படங்கள் ஏராளம். கூடிக் குடிப்பதும், கும்மாளமிட்டுக் களிப்பதும், ஒருவரை ஒருவர் கவிழ்ப்பதும் காட்டிக்கொடுப்பதும்தான் தான் நட்பின் இலக்கணங்களென்று இன்றைய தமிழ்த் திரைப்படங்கள் வரையறுத்து வைத்திருக்கின்ற போலும்.

பெரும்பான்மைத் திரைப்படங்களில் இளைஞர்கள் எப்படிப்பட்டவர்களாகக் காட்டப்படுகிறார்கள்? குடிப்பதும், புகைப்பதும்தான் நாகரிகம், அதுதான் வாழ்க்கை என்று காட்டி, எந்தவிதக் கெட்டப் பழக்கங்களும் இல்லாத ஒருவனுக்கு, தான் வாழவே தகுதியில்லாதவன் என்ற தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும் இழிசெயலைப் பெரும்பாலான திரைப்படங்கள் தவறாமல் செய்கின்றன. அரிதிலும் அரிதாய் ஒருசில நல்ல திரைப்படங்கள் வந்து நட்பின் பெருமை காட்டி ஆறுதல் தருகின்றன.

இன்றைய நாட்களில் மதுவருந்தும் காட்சி இல்லாத திரைப்படத்தைக் காண்பதே அரிதாகிவிட்டது. உணவுண்ணுதல், புத்தகம் வாசித்தல், ஒட்டடை அடித்தல் போன்று அதுவும் வாழ்க்கையில் ஒரு அங்கம் என்பதுபோல் வெகு அலட்சிய மனோபாவத்துடன் காட்டப்படுவது கூட நமக்கும் பழகிவிட்டது என்றே நினைக்கிறேன். அதுபோன்ற காட்சிகளில் மதுவருந்துவது/புகைப்பது உடல்நலத்துக்குக் கேடு என்று ஒரு ஸ்லைடு போடுவார்கள். அவனோ அவர்களோ புகைத்துக்கொண்டிருக்கிறான்/கிறார்கள் என்பது அதுவரை நம் கவனத்துக்கு வந்திருக்காது. ஸ்லைடைப் பார்த்தவுடன்தான் தோன்றும். அடஆமால்ல…..

ஒன்றல்ல, இரண்டல்ல, பல திரைப்படங்களில் பார்த்த காட்சி ஒன்று. ஐந்து பேர் குடிக்கையில் ஒருத்தன் மட்டும் வேண்டாம் என்று சொல்லிவிட்டால் மற்ற நால்வரும் சேர்ந்து அவனால் ஆண்வர்க்கத்துக்கே அவமானம் என்பதுபோல் அவனைக் கேலி பேசி எப்படியும் குடிக்கவைத்துவிடுவார்கள். அதன் மூலம் குடிப்பதுதான் ஆண்பிள்ளைக்கு அழகு என்று ஒரு தவறான கற்பிதம் இளைஞர்களின் மனத்தில் ஆழமாக பதியவைக்கப்படுகிறதல்லவா?

இந்த இடத்தில் நான் ஒன்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும். குடி குடி என்று குடி முழுகிப் போவது போல் புலம்புகிறாயேமேலை நாடுகளில் எல்லோரும்தான் குடிக்கிறார்கள். குடிப்பதென்ன அவ்வளவு பெரிய குற்றமா என்று கேட்பீர்களாயின் ஒருசில வார்த்தைகளை உங்களுடன் பகிரவிரும்புகிறேன்.

மேலை நாடுகளில் நிதானம் தெரியாமல் வயிறு முட்டும் அளவுக்கு குடித்துவிட்டு வாந்தி எடுப்பதும், தெருக்களில் விழுந்து கிடப்பதும், போதையோடு வாகனங்களை ஓட்டி விபத்து உண்டாக்குவதுமான நிகழ்வுகள் மிக சொற்பமே. அதற்கான சட்டங்களும் கடுமையாக இருப்பதால் மக்களிடம் பயம் இருக்கிறது. அதுபோல் ஒரு அலுவலக சந்திப்புகளிலோ, நட்புக் குழுமத்திலோ எவரும் எவரையும் குடிக்கச் சொல்லி வற்புறுத்துவதில்லை. மரியாதை நிமித்தம் குடிப்பதும் குடிக்காதிருப்பதும் அவரவர் விருப்பம். குடிப்பழக்கம் இல்லாதவர்களும், தாங்களே வாகனத்தை ஓட்டிக்கொண்டு வீடு திரும்பவேண்டியிருப்பவர்களும் பழரசங்களைப் பருகியபடி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது சர்வ சாதாரணம் அங்கு.

அடுத்து இன்றைய திரைப்படங்களில் நம்மை நெளியச்செய்யும் நெருடலான விஷயம் ஆபாசம். பாலியல் வேட்கையைத் தூண்டும்படியான வக்கிரக் காட்சிகளுக்குக் குறைவே வைப்பதில்லை பெரும்பான்மைப் படங்கள். பெண்கள் என்றாலே ஒரு போகப்பொருளாகக் காட்டப்படுவதன் விளைவுதான்  பாலியல் பலாத்காரங்களும், கழுத்தறுப்புகளும், அமில வீச்சுகளும். பெண்கள் மதிக்கப்படும்வண்ணம் திரைப்படங்கள் வெளிவரவேண்டும். ஆபாச வர்ணனைகள், இரட்டை அர்த்த வசனங்கள், அருவறுப்பான அங்க அசைவுகள் போன்றவை தவிர்க்கப்படவேண்டும். தரமான திரைப்படம் என்று சொல்லப்படுபவற்றில் கூட ஆபாசமான இடையசைவுகளும், அங்கக் குலுக்கல்களும், உதட்டுச் சுழிப்புகளும் கொண்ட பாடலொன்று இடைச்செருகலாக செருகிவிடப்படுகிறது. வியாபார நோக்கத்துக்காக என்னும் ஒரு காரணத்தை முன்வைத்தால்…. அது நம்மை நாமே பேரம் பேசும் இழிநிலையைத்தான் காட்டுகிறது.

இளம்பெண்களுக்கு அரைகுறை ஆடைகளும் நுனிநாக்கு ஆங்கிலமும் தான் அழகென்று திரைப்படங்கள் அறிவுறுத்துகின்றன. ஆடவருக்கிணையாய் குடிப்பதிலும், நள்ளிரவு நடனக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதிலும்தான் சம உரிமை இருக்கிறதென்னும் அறியாமை அவர்களுள் தலைதூக்குகிறது. இப்படித்தான் வாழவேண்டுமென்ற வரைமுறையெல்லாம் காற்றில் பறக்கவிடப்பட்டு எப்படியும் வாழலாம் என்று போதிக்கப்படுகிறது.

பொது நிகழ்ச்சிகளில் குடும்பப்பெண்கள் குத்தாட்டம் போடுவதைப் பற்றி சில நாட்கள் முன்பு சில பதிவுகளில் வாசிக்க நேர்ந்தது. இதுவும் திரைப்படத்தின் தாக்கம் என்று சொல்லாமல் வேறென்ன சொல்வது? ஊரே தலையில் வைத்துக் கொண்டாடும் அளவுக்குப் பெரிய மனிதர், செல்வந்தர், செல்வாக்குடையவர்அவ்வளவு ஏன், நாட்டாண்மை என்றே வைத்துக்கொள்வோமே. ஊர்த்திருவிழாவின்போது பாட்டுப்பாடி ஆட்டமாடிக் கொண்டாடும் ஊராரின் மத்தியில் அந்த பெரிய மனிதரின் மனைவியும் ஒரு கட்டத்தில் தன்னை மறந்து குத்தாட்டம் போட்டுவிட்டு பிறகு வெட்கப்பட்டுக்கொண்டு நிற்பதையெல்லாம் ரசிப்புடன் ஏற்றுக்கொள்ளும் சனம் தங்களையும் ரசிக்கும் என்ற எண்ணம் அப்பெண்களுக்குத் தோன்றியிருக்கலாம்.

அடுத்து குழந்தைகளிடம் வருவோம். குழந்தைகளும் திரைப்படங்களைப் பார்க்கிறார்கள் என்பதை உணர்ந்து சமூகப் பொறுப்புடன் படமெடுப்பவர்கள் யாராவது இருக்கிறார்களா? ஒரு திரைப்படத்தை தியேட்டருக்குப் போய்த்தான் பார்க்கவேண்டும் என்ற அவசியம் இப்போது இல்லை. எவ்வளவு புதிய திரைப்படமாயிருந்தாலும் உலகத் தொலைக்காட்சிகளிலேயே முதன்முறையாக ஏதாவதொரு சானலின் மூலம் வீட்டுக்குள் வந்து தன்னைத் தானே திரையிட்டுக்கொள்கிறது. ரேட்டிங் பற்றிய சிந்தனையின்றி குழந்தைகள் முதல் பெரியவர் வரை கூடியமர்ந்து பார்த்துக் களிக்கிறோம். அதில் வரும் வன்முறைக் காட்சிகள் குழந்தைகள் மனத்தில் எந்த அளவுக்கு பாதிப்பை உண்டாக்குமென்று என்றைக்காவது எண்ணிப்பார்த்திருக்கிறோமா
   
கையை காலை வெட்டுவதும், கழுத்தறுப்பதுமான காட்சிகளை கொஞ்சமும் விவஸ்தையின்றி குளோசப் காட்சிகளாக வேறு காட்டுகிறார்கள். இலை மறை காய் மறைவாக காட்டவேண்டியவற்றையெல்லாம் தலை முதல் கால் வரை காட்டி அருவறுப்பை உண்டுபண்ணும் போக்கை என்னவென்பது?

வன்முறை பற்றி சொல்லும்போது ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. தங்கள் படங்களில் வன்முறையை வரைமுறையின்றிக் காட்ட நினைப்பவர்களுக்கு ஒரு சப்பைக்கட்டுதான் மதுரை சப்ஜெக்ட். கதைக்களம் மதுரை என்று வைத்துவிட்டால் போதும், யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் வெட்டலாம், குத்தலாம், கொல்லலாம். மதுரைக்காரர்களே கையெடுத்துக் கும்பிட்டு, “ஐயாஎங்களை விட்டுவிடுங்கள். மதுரையைப் பற்றியும், மதுரை மக்களைப் பற்றியும் இப்படி அநியாயமாக அவதூறு பரப்பாதீர்கள்என்று கெஞ்சியும் விடுவதாக இல்லை மதுரையை வைத்து காசு பார்ப்பவர்கள். புதிதாக தமிழகம் வருபவர்கள் மதுரைக்குப் போகுமுன் இதுபோன்ற இரண்டு திரைப்படங்களைப் பார்த்தால் போதும். மதுரைப் பக்கம் தலைவைத்தும் படுக்கமாட்டார்கள்.

அளவுகடந்த வன்முறைக் காட்சிகளைப் பார்த்துப் பார்த்து ஒரு கசாப்புக்காரனின் மனநிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம் நாம். முன்பின் அறிந்திராத ஒருவரின் மரண ஊர்வலம் கூட நம் மனத்துள் மெல்லிய அதிர்வை உண்டாக்கும். ஆனால்மரண வீட்டிலும் குத்துப்பாட்டு போட்டு சிரிக்கவைக்க முயற்சி செய்கிறார்கள் இன்றைய இயக்குநர்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ரசிப்பதைப் பார்க்கும்போது உள்ளுக்குள் எழுகிறது ஒரு கேள்வி. மரணத்தின் மதிப்பு அவ்வளவுதானா?

அன்றைய திரைப்படங்கள் சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து மக்களை ஒன்றாக வாழவைக்கும் முயற்சியை செய்தன. இன்றைய சில திரைப்படங்களோ, ஒற்றுமையாய் வாழ்ந்துகொண்டிருக்கும் மனங்களில் பிரிவினையை உண்டாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன.   

திரைப்படங்கள் என்பவை வாழ்வியலின் அழகைக் கூட்டுவதாக, வாழ்க்கைத் தத்துவத்தைக் காட்டுவதாக இருக்கவேண்டும். உறவுகளுக்கிடையிலான மெல்லிய மனவோட்டங்களைச் சொல்வதாக, சமுதாய அமைப்பின் சிக்கல்களை உணரச் செய்வதாக, வாழ்ந்த வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கத் தூண்டுவதாக, சிறந்த பொழுதுபோக்கம்சம் கொண்டதாக, நெகிழவைப்பதாக, மகிழவைப்பதாக, ரசிக்கத்தக்கதாக,  புத்துணர்வூட்டுவதாக, புரட்சிகரமானதாக, மாறுபட்ட சிந்தனைகளை உருவாக்குவதாக, முரண்பட்ட களங்களை மையப்படுத்துவதாகஎன்று வித்தியாசமான ரசனைகளை ரசிகனுக்கு அறிமுகப்படுத்தவேண்டும். ஐந்து நிமிடக் குறும்படங்களிலேயே மேற்சொன்ன அனைத்தையும் சாதித்துக் காட்டமுடிகிறது என்னும்போது இரண்டுமணி நேரத் திரைப்படங்களில் எவ்வளவு சாதிக்க முடியும்?   

மாறாகசமூக நடவடிக்கைகளுக்குப் புறம்பான பல காட்சிகளை யதார்த்தம் என்ற போர்வையில் காட்டும் திரைப்படங்கள், சமூகம் பற்றிய ஒரு மாயையை மக்கள் மனத்தில் சிருஷ்டிக்க முனைகின்றன. மிகையெது, யதார்த்தமெது என்று பிரித்துணர இயலாது மயங்கி நிற்கும் இளைய சமுதாயத்தை எளிதில் வெற்றிகொள்கிறது மிகையாளுமை. படாடோபமற்ற யதார்த்தங்கள் புறக்கணிக்கப்பட்டு மதிப்பற்றுப் போதலும்  பளபளக்கும் ஜரிகை வேலைப்பாட்டுடனான மிகைப்படுத்தல்களும் அசாதாரணக் கற்பனைகளும் பிரதானத்துவம் பெறுதலும் காலத்தின் கோலம். இந்நிலை மாறவேண்டுமெனில், குறைந்தபட்சம் திரைப்படங்கள் வேறு, சமூக அமைப்பு வேறு என்று பிரித்தறியும் மனப்பாங்காவது நம்மிடையே உருவாதல் வேண்டும். 

**************

(தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு ரூபனின் எழுத்துப் படைப்புகள் தளத்தில் நடைபெறும் மாபெரும் கட்டுரைப் போட்டியில் பங்கேற்பதற்கான கட்டுரை) 


(படம் நன்றி: இணையம்)

10 February 2014

ஒப்பேற்றுதலும் ஒரு வாழ்வாமோ?
ஒல்லுமோவென்று ஓயாத்தயக்கமேலிட
ஒன்றுஞ்செய்யாமல் ஒதுங்கிநின்று
ஒப்பேற்றுதலும் ஒரு வாழ்வாமோ?

வெறும்பேச்சிலே வீரமணைத்துங்காட்டி
செயல்தனிலே சுணக்கங்காட்டுவாரோடு
இணக்கங்கொள்வாரும் இச்சகத்திலுண்டோ?

எள்ளளவும் முயலாது, என்னாலிது இயலாதென
வெள்ளத்தில் மூழ்கும் வேளையிலும் கைகட்டி
வேதாந்தம் பேசி வீழ்வாரும் உண்டோ?

துடிப்புள்ளவனுக்குத் துரும்புமாயுதமாமென்றே
வருந்துயரங்கண்டு வெம்பாது, வருந்தாது,
வெல்லுவோமென்று வீறுகொண்டெழுதலே
வல்லாளனுக்கு வாழும் வழியன்றோ? 4 February 2014

எக்கிட்னா – ஆஸ்திரேலியாவின் அதிசயம் (6)

ஆஸ்திரேலியாவிலும் நியூகினியாவிலும் மட்டுமே காணப்படும் மற்றொரு அதிசய உயிரினமான எக்கிட்னா பற்றி இன்று அறிந்துகொள்வோமா

முள்ளம்பன்றி போன்ற உடலமைப்பும் எறும்புத்தின்னி போன்ற உணவுப்பழக்கமும் இணைந்த எக்கிட்னாவை முள்ளெறும்புத்தின்னி என்று சொல்வது மிகப்பொருத்தம்.

எக்கிட்னாக்கள் பூமியின் மிகப்பழமையான உயிரினவகையைச் சார்ந்தவை. மோனோட்ரீம்ஸ் எனப்படும் முட்டையிடும் பாலூட்டி வகையில் உலகில் இருந்த ஐந்து பிரிவுகளில் இரண்டு அழிந்துபோய்விட இப்போது இருப்பவை மூன்று பிரிவுகள்தாம். ஒன்று பிளாட்டிபஸ். மற்ற இரண்டு எக்கிட்னாவின் இரண்டு பிரிவுகள்.
சுமார் 110 மில்லியன் (11 கோடி) வருடங்களுக்கு முன்பு டைனோசார் காலத்தில் வாழ்ந்த பிளாட்டிபஸ் போன்ற ஒரு உயிரினத்திலிருந்து பரிணாமவளர்ச்சிபெற்றுப் பிரிந்ததுதான் இன்றைய எக்கிட்னா என்று மூலக்கூறு கடிகாரமும் புதையெலும்புப் படிமங்களும் தெரிவிக்கின்றன. நினைத்தாலே மலைப்பாக உள்ளதல்லவா?

பிளாட்டிபஸ்ஸைப் போலவே முட்டையிட்டுக் குட்டிக்குப் பால் கொடுத்தாலும், ஒருவிஷயத்தில் எக்கிட்னாவும் பிளாட்டிபஸ்ஸூம் வேறுபடுகின்றன. அதாவது, எக்கிட்னாக்கள் மார்சுபியல் இனத்தைச் சேர்ந்தவை. மார்சுபியல் என்பது வயிற்றில் பையுள்ள விலங்கென்று அறிவோம்.
எக்கிட்னா இனத்தில் ஆண், பெண் இரண்டுக்குமே வயிற்றில் பை உண்டு என்பது ஒரு விநோதம். உண்மை என்னவெனில் எக்கிட்னாவுக்கு நிரந்தரமான வயிற்றுப்பை கிடையாது. முட்டையிடும் சமயத்தில் தசைகளை விரித்துச் சுருக்கி ஒரு தற்காலிக பையை உருவாக்கிக்கொண்டுவிடும். பெண் எக்கிட்னாவுக்கு மட்டுமல்லாது ஆண் எக்கிட்னாவுக்கும் இது போன்ற வயிற்றுத் தசைமடிப்புகள் இருப்பதால் எது பெண் எது ஆண் என்று பார்த்தவுடனேயே கண்டறிவது கடினம்.

எக்கிட்னா பொதுவாக 30 செமீ முதல் 45 செமீ வரை நீளத்துடனும் இரண்டு முதல் ஐந்து கிலோ வரை எடையுடனும் இருக்கும். எக்கிட்னா ஒரு இரவு மிருகம் என்றாலும் குளிர்காலங்களில் பகல் நேரங்களிலும் உணவு தேடி வெளியில் வரும்.

எக்கிட்னாவில் இருபிரிவுகள் உள்ளதென்று பார்த்தோம் அல்லவாபார்ப்பதற்கு ஒரே மாதிரி இருக்கும் அவற்றை நீள் அலகு எக்கிட்னாகுட்டை அலகு எக்கிட்னா என அலகின் அளவைக் கொண்டுதான் அடையாளம் காண்கிறோம்அலகு என்பது இங்கே மூக்கையும் வாயையும் சேர்த்தே குறிக்கிறது.


நீள அலகு எக்கிட்னா


குட்டை அலகு எக்கிட்னா

பிளாட்டிபஸ்களைப் போலவே இவற்றின் அலகிலும் மின்னேற்பிகள் இருந்தாலும் எண்ணிக்கை அளவில் மாறுபடுகின்றன. இவற்றின் அலகிலுள்ள மின்னேற்பிகள் உணவு இருக்குமிடத்தை நுகர்திறனாலும் தொடுதிறனாலும் துல்லியமாய் அறிந்துகொள்ள உதவுகின்றன

பிளாட்டிபஸ்ஸின் அலகில் 40,000 எண்ணிக்கை மின்னேற்பிகள் என்றால் நீள் அலகு எக்கிட்னாவினுடையதில் இருப்பவை 2,000 தான். குட்டையலகு எக்கிட்னாவுக்கோ இன்னும் குறைவு. வெறும் 400 என்ற எண்ணிக்கையில்தான் உள்ளன. அவையும் எக்கிட்னாவின் அலகு நுனியில் மாத்திரமே அமைந்திருக்கும். ஆண் பிளாட்டிபஸ்ஸைப் போல எக்கிட்னாவுக்கும் பின்னங்காலில் விஷேச முட்கள் உண்டு என்றாலும் அவை விஷ முட்கள் கிடையாது. முள்ளின் முனையும் கூராக இல்லாமல் மழுங்கிக்காணப்படும்.

குழாய் போன்று மிகச்சிறிய வாயும் பற்களற்ற தாடையும் கொண்ட எக்கிட்னா, காய்ந்த மரத்துவாரங்கள், எறும்புப்புற்று, கறையான் புற்று போன்றவற்றுள் கிட்டத்தட்ட 18 செ.மீ நீளமான, பசையுள்ள நாக்கை நுழைத்துத் துழாவும். நாக்கில் ஒட்டிக்கொள்ளும் எறும்பு, கறையான், புழு, பூச்சி போன்றவற்றைத் தின்னும். எறும்பு கறையான் பூச்சிகளைத் தின்னும்போது பெருமளவு மண்ணையும் உட்கொள்வதால் எக்கிட்னா கழிக்கும் கழிவின் அளவும் அதிகமாக இருக்கும். எறும்பு கறையான்களோடு சின்னச்சின்ன பூச்சிகளையும் புழுக்களையும் வண்டுகளையும் கூட தின்னும்.
இவை குட்டையான கால்களையும் மண்ணைத் தோண்டுவதற்கு ஏற்ற  வலிமையான மூட்டுகளையும், பெரிய கூரிய நகங்களையும் கொண்டவை. எக்கிட்னாவின் பின்புறம் வளைந்த பின்னங்கால்கள் மண்ணைத் தோண்ட உதவுவதோடு, அதன் உடலில் உள்ள முட்களுக்கிடையில் சொரிந்துகொள்ளவும், சுத்தம் செய்யவும்கூட உதவுகின்றன.

எக்கிட்னாவின் இனப்பெருக்கக் காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான சமயத்தில் மிகவும் வேடிக்கையான காட்சியொன்றைக் காணலாம். ஒரு பெண் எக்கிட்னாவைக் கவரசங்கிலியால் கோர்த்தாற்போல் பத்துப்பன்னிரண்டு ஆண் எக்கிட்னாக்கள் அது போகுமிடமெல்லாம் பின்தொடரும் காட்சிதான் அது. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராது வெற்றி பெற்ற ஆண் எக்கிட்னா, பெண் எக்கிட்னாவுடன் இணையும்

இரண்டு வாரங்களுக்குப் பிறகு பெண் எக்கிட்னா ஒரு திராட்சையின் அளவில் மெல்லிய தோல்முட்டை ஒன்றை இட்டு தன் வயிற்றுப் பைக்குள் பத்திரப்படுத்திக்கொள்ளும். பத்துநாட்களுக்குப் பிறகு முட்டையை உடைத்துக்கொண்டு 12 மிமீ அளவே உள்ள குட்டி எக்கிட்னா வெளிவரும்

முட்டைக்குள்ளிருக்கும் குட்டி எக்கிட்னாவுக்கு முட்டையைக் கிழித்துக்கொண்டு வெளியேற உதவுவதற்கென்றே ஒரு பல் வளரும். எக்கிட்னாவின் வாழ்க்கையில் அதற்கு வளரும் ஒரே ஒரு பல் அதுதான். அதுவும் முட்டையிலிருந்து வெளிவந்த மறுநாளே விழுந்துவிடும்.பிறக்கும்போது முட்களோ, ரோமங்களோ அற்று வெற்றுடலோடு பிறக்கும் குட்டிக்கு பியூகுள் (puggle) என்று பெயர். எக்கிட்னாவுக்கும் பிளாட்டிபஸ்ஸைப் போன்று பாலூட்டும் முலைகள் கிடையாது. அதன் உடலில் உள்ள சுரப்பி மூலம் வயிற்றுப்பைக்குள் உள்ள இரு திட்டுகளில் கசியும் பாலை, குட்டி நக்கிக் குடிக்கும். கங்காரு, போஸம் இவற்றைப் போலவே எக்கிட்னாவுக்கும் குட்டியின் வயதுக்கும் வளர்ச்சிக்கும் ஏற்ப பாலை உற்பத்தி செய்யும் வசதி உண்டு என்பது வியப்பாக உள்ளதல்லவா?இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு குட்டி தாயின் வயிற்றுப் பையைவிட்டு கட்டாயம் வெளியில் வந்தேயாகவேண்டும். ஏனெனில் அந்தசமயத்தில் குட்டியின் உடலில் முட்கள் வளர ஆரம்பித்துவிடும். பிறகெப்படி அம்மாவின் வயிற்றுக்குள் வசிக்க முடியும். அப்போது தாய் தன் குட்டியை வளைக்குள் விட்டுவிட்டு இரைதேடிப்போகும். நான்கைந்து நாட்களுக்கு ஒருமுறை வந்து பாலூட்டும்.


ஆறு மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் தாய் தன் குட்டிக்கு கடைசி முறையாகப் பால் கொடுத்துவிட்டு வளையிலேயே விட்டுவிட்டு திரும்பிப்பாராமல் சென்றுவிடும். அதன்பின் மீண்டும் அந்தக் குட்டியைத் தேடி தாய் வராது. ஏனெனில் அது தன் அடுத்த வாரிசை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும். குட்டி தன் வாழ்க்கையைத் தானே பார்த்துக்கொள்ளும்.

எக்கிட்னாக்கள் நன்றாக நீந்தக்கூடியவை. நீந்தும்போது மூக்கும் ஒருசில முட்களும் மட்டுமே வெளியில் தெரியும். ஆபத்து சமயங்களில் மண்ணில் அவசர அவசரமாகக் குழிபறித்து, முட்கள் மட்டும் வெளித்தெரியும் வகையில் அதில் அமர்ந்துகொள்ளும். கடினத் தரையெனில் தன்னுடலை ஒரு முட்பந்துபோல் சுருட்டி எதிரிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ளும்.
குளிர்பிரதேசங்களில் வசிக்கும் எக்கிட்னாக்களுக்கு குறைந்த அளவு முட்களும் அடர்த்தியான ரோமங்களும் இருக்கும். எக்கிட்னாவின் முள் என்பதே அதன் ரோமம்தான் என்பது வியப்பைத் தருகிறது அல்லவாமுட்கள் ஒவ்வொன்றும் 5 செமீ நீளம் வரை வளரக்கூடியவை.
எக்கிட்னாக்களுக்கு முட்கள் பாதுகாப்பு என்றாலும் முட்களையும் தின்னும் டாஸ்மேனியன் டெவில்களும் கழுகுகளும் எதிரிகளாகும். பூர்வகுடி மக்களின் விருப்ப உணவாக இருந்த எக்கிட்னாக்கள் இப்போது சட்டத்தின் தயவால் பாதுக்காக்கப்பட்டு வருகின்றன.ஆஸ்திரேலியாவின் ஐந்து சென்ட் நாணயத்தில் எக்கிட்னா உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. 2000 ஆம் ஆண்டில் சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக்கின் அடையாளச்சின்னங்களாக சிட் (syd) என்னும் பிளாட்டிபஸ், ஓலி (Ollie) என்னும் குக்குபராவுடன் மில்லீ (millie) என்னும் எக்கிட்னாவும் இடம்பெற்றமை சிறப்பு.
எக்கிட்னா என்றால் என்ன? கிரேக்கமொழியில் பெண்பாம்பு என்று பொருளாம்.  கிரேக்கப் புராணக்கதையில் வரும் பாதி பெண்ணுடலும் பாதி பாம்புடலும் கொண்ட எக்கிட்னா என்னும் அரக்கி, அரக்கர்குல அன்னை என்று அறியப்பட்டவளாம். சாதுவான, கூச்ச சுபாவமுள்ள உயிரினமான எக்கிட்னாவுக்கு ஏன் அந்த அரக்கியின் பெயர் இடப்பட்டது என்பது வியப்பளிக்கும் கேள்வியே. சரி, எக்கிட்னா என்று பெயரிடுமுன் அதன் பெயர் என்ன? ஒன்றல்ல, ஏராளம். ஆஸ்திரேலியப் பூர்வகுடி மொழிகளில் Nynghan, biggie-billa or bigibila, ganyi, thargomindah, inga linga என்றெல்லாம் பலவாறாகக் குறிப்பிடப்பட்டதாம். 

ஆஸ்திரேலிய பூர்வகுடி வரலாற்றில் எக்கிட்னாவுக்கு முக்கிய இடம் உண்டு. பூர்வகுடி மக்களின் பல ஓவியங்களில் எக்கிட்னா இடம்பெற்றுள்ளது.எக்கிட்னாவுக்கு பழங்காலத்தில் முட்கள் கிடையாது என்பது அவர்களது நம்பிக்கை. அவற்றுக்கு முட்கள் உருவான அதிசயத்தை பழங்கதையொன்று பகிர்கிறது. அந்தக்கதை என்னவென்று அறிந்துகொள்வோமா இப்போது? ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பிக்கிபில்லா (biggie-billa)  என்பவனைப் பற்றியது அக்கதை.

பிக்கிபில்லா வயதானவன். பழங்குடியினத்தைச் சேர்ந்தவன். அவனுடைய நண்பர்கள் ஒவ்வொருவராக இறந்துவிட, அவன் இளைய தலைமுறையினருடன் வாழ்ந்துவந்தான். இளைஞர்கள் மிகுந்த உடல் வலிமையுடன் இருப்பதால் வெயில் நேரங்களிலும் சோர்வடையாமல், வெகுதூரம் வேட்டையாடிச் சென்று தங்களுக்கும் தங்கள் குடும்பத்துக்குமான உணவைத் தேடிக்கொண்டனர்.


பிக்கிபில்லாவுக்கு வயதாகிவிட்டதால் அவனால் அவர்களுக்கு ஈடுகொடுத்து வேட்டையாட இயலவில்லை. அதனால் வேட்டைக்குப் போவதைத் தவிர்த்தான். வேட்டைக்குச் செல்லாத நிலையில் அவனுக்கு யாரும் உணவு கொடுக்க முன்வரவில்லை. ஆனாலும் அவன் திடகாத்திரமாக இருந்தான். வயதாக வயதாக அவன் உடல் வலிமை கூடிக்கொண்டே வந்தது. இதைப் பார்த்த மற்றவர்கள் அவன்மேல் ஐயங்கொண்டனர். அவன் தேகபலத்தின் ரகசியத்தை அறிய ரகசியமாய் அவன் நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் ஆரம்பித்தனர். வருடக்கணக்காக ஏதோ ஒரு ரகசியத்தை அவன் தங்களிடமிருந்து மறைத்துவைத்திருப்பதாக அவர்கள் நம்பினார்கள்.

ஒருநாள் அவன் இருப்பிடத்தை விட்டு வெளியே செல்லும்போது சிலர் அவன்றியாமல் பின்தொடர்ந்தனர். சற்று தூரத்தில் ஒரு பெரிய பாறையின் மறைவில் அவன் எதற்காகவோ காத்து நிற்பதை அவர்கள் புதர்மறைவிலிருந்து ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு இளம்பெண் அந்த வழியே வந்தாள். பிக்கிபில்லா சட்டென வெளிவந்து அம்பால் அவளைக் குத்தி வீழ்த்தினான். யாரும் எதிர்பாராத நொடியில் இது நடந்து முடிந்திருந்தது. கிழவன் பிக்கிபில்லா அவளுடலைப் பாதையிலிருந்து மறைவாக இழுத்துவந்து அவள் கை கால்களைத் தின்ன ஆரம்பித்தான். பார்த்தவர்கள் குலைநடுங்கிக்கொண்டிருக்க, அவனோ மிச்சத்தை மறுவேளை உணவாகப் பதுக்கிவைத்தான்.
தங்கள் பழங்குடியினத்திலிருந்து இதுவரை காணாமற்போனவர்கள் எப்படிக் காணாமற்போனார்கள் என்ற உண்மை அப்போதுதான் அவர்களுக்கு விளங்கியது. பிக்கிபில்லாவைக் கொல்வதென்று ஒரு ரகசியத் தீர்மானம் இயற்றப்பட்டது. பிக்கிபில்லா மிகவும் பலம் பொருந்தியவனாக இருப்பதால் அவனை அவன் எதிர்பாராத போதுதான் கொல்லமுடியும் என்பது தெளிவாயிற்று. அவர்கள் அமாவாசை இரவுக்காக காத்திருந்தனர். 

அந்த இரவில் அவன் நெருப்பை விட்டு வெகுதூரத்தில் மல்லார்ந்து படுத்து உறங்கிக்கொண்டிருந்தான். இளைஞர்கள் சத்தமின்றி அவனைச் சூழ்ந்தனர். அவன் தூக்கத்தில் ஆழ்ந்தபடி, ‘பட்டாம்பூச்சிகள் புல்தரையில் நடக்கும் ஒலி எனக்குக் கேட்கிறதுஎன்று முணுமுணுத்தான். அவன் பட்டாம்பூச்சிகளைப் பற்றிய கனவிலிருக்கும்போது இளைஞர்கள் தங்கள் அம்புகளை அவன் உடலில் பாய்ச்சினர். பிக்கிபில்லா கதறக் கதற அவர்கள் தங்கள் கழிகளால் அவனுடலின் ஒவ்வொரு எலும்பையும் அடித்து நொறுக்கினர். இறுதியில் அந்த நரமாமிசத்தின்னி மூச்சுபேச்சற்று வீழ்ந்தான்.
பிக்கிபில்லாவின் மனைவி கினீபூ (guineeboo), நடந்த பயங்கர நிகழ்வைப் பார்த்து அதிர்ச்சியுற்றாள். அவள் மண்ணைத்தோண்டும் கழியால் தன்னெற்றியில் தானே பலமாகத் தாக்கிக்கொண்டாள். இரத்தம் வழிந்து அவள் மார்பை நனைத்தது. அவள் செம்மார்பு கொண்ட ராபின் பறவையாய் மாறி அவ்விடத்தை விட்டுப் பறந்துபோனாள்.

இளைஞர்கள் நெருப்பைச் சுற்றி நடனமாடி ஆரவாரித்து பிக்கிபில்லாவின் மரணத்தைக் கொண்டாடினர். ஆனால் உண்மையில் பிக்கிபில்லா இறந்திருக்கவில்லை. அவன் பெரும் பிரயத்தனத்துடன் அம்புகள் தாங்கிய தன்னுடலை இழுத்துக்கொண்டு வந்து முர்காமுகை என்னும் சிலந்தி அமைத்திருந்த தரைவளைக்குள் விழுந்தான். காயம் ஆறும்வரை அங்கேயே இருந்தான்.
 
என்னதான் காயங்கள் ஆறினாலும் அவனால் அவன் உடலில் துளைத்த அம்புகளை எடுக்கவும்முடியவில்லை, அடிபட்ட எலும்புகளைக் கொண்டு ஒழுங்காக நடக்கவும் முடியவில்லை. அவன் பதுங்குவளையை விட்டு வெளியே வந்தபோது அவனுடைய கூட்டத்தினரால் அவனை அடையாளம் கண்டுகொள்ள இயலவில்லை. முதுகில் அம்புகளுடனும், பின்னால் வளைந்த கால்களுடனும் ஆடி ஆடி நடந்துவந்தவனுக்கு உணவுக்கு எதுவும் கிடைக்கவில்லை. அவன் மண்ணைத்தோண்டி எறும்புகளையும் புழு பூச்சிகளையும் தின்றான். 


இப்படியாக பிக்கிபில்லா ஒரு எக்கிட்னாவானாம். அவனால் மற்ற விலங்குகளைப் போல உணவு உண்ணமுடியாமைக்கும், எதிரிகளுக்குப் பயந்து, தரைக்கடியில் வளையில் தனித்து வாழ்வதற்கும் இதுதான் காரணமாம். இதுவும் கிட்டத்தட்ட காஸோவரி கதை போலத்தான். ஆனாலும் சுவாரசியம் குறையவில்லை அல்லவா?


*************************************************************************** 
(பிப்ரவரி 2014 மஞ்சரி இதழில் வெளிவந்தது.)

படங்கள் நன்றி: இணையம்