31 January 2017

என்றாவது ஒரு நாள்.. வந்ததே அத்திருநாள்...







இந்தியக் குடியரசு தினம் மற்றும் ஆஸ்திரேலிய தினம் என்று என் பிறந்தநாடும் புகுந்தநாடும் கொண்டாடும் சிறப்புநாளில் (26.01.17) 'என்றாவது ஒரு நாள்' என்னும் என் முதல் நூல் மேடை கண்டு மெய்சிலிர்த்துப்போனது. இந்நூலுக்கான வெளியீட்டு விழாவினை கட்டாயம் தான் நடத்தியே தீருவேன் என்று நூலை வாசித்த நாள் முதலாய் எனக்கு உறுதியளித்தபடி இருந்தார் சிட்னிவாழ் தோழியும் உயர்திணை அமைப்பின் அமைப்பாளரும்அட்சயப்பாத்திரம் வலைத்தளத்தின் உரிமையாளருமான மணிமேகலை என்னும் யசோதா பத்மநாதன் அவர்கள்

12 January 2017

தேன் மதுரத் தமிழச்சிக்கு நன்றி


தேன் மதுரத் தமிழால் நம் நெஞ்சங்களை வசீகரிக்கும் தோழி கிரேஸின் தளத்தில் என்னுடைய 'என்றாவது ஒரு நாள்' நூலுக்கான விமர்சனத்தை மிக அழகாக பதிவிட்டுள்ளார். 



அவர்வசமிருந்த புத்தகத்தை அங்கிருக்கும் அவருடைய நட்புகள் சிலரும் வாசித்துவிட்டுப் பாராட்டியதையும் தெரிவித்துள்ளார். தோழி கிரேஸிடமிருந்து கிடைத்துள்ள விமர்சனமும் பாராட்டும் ஒரு பக்கம் மகிழ்வளிக்கிறது என்றால் அவர் மூலம் முகம் அறியாத வாசகர்கள் சிலரையும் பெற்றிருப்பது கூடுதல் மகிழ்வளிக்கிறது. அன்பும் நன்றியும் கிரேஸ்.



ஆஸ்திரேலிய சிறுகதை எழுத்தாளர் ஹென்றி லாஸன் எழுதிய காடுறை மாந்தர்களைப் பற்றிய சிறுகதைத் தொகுப்பின் தமிழ் மொழிபெயர்ப்பு ‘என்றாவது ஒரு நாள்’ என்ற நூலாக அகநாழிகை பதிப்பகம் வாயிலாக வெளியாகியுள்ளது. நூலை வாசிக்க விரும்புவோர் தற்போது சென்னையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் புத்தகக் கண்காட்சியில் நூலைப் பெறலாம்.. கிடைக்குமிடங்கள்…

அரங்கு எண்.35 - புலம்
அரங்கு எண்.409 - நூலகம் பேசுகிறது.
அரங்கு எண்.193 - டிஸ்கவரி புக் பேலஸ்


****** 

தோழி கிரேஸின் சமீபத்திய வெளியீடான 'பாட்டன் காட்டைத் தேடிகவிதைத் தொகுப்பும் சென்னை புத்தகக் கண்காட்சியில் அரங்கு எண்கள் 622 & 623 ஆகியவற்றில் கிடைக்கிறது. கிரேஸின் கவிதைகளை வலைத்தளம் வாயிலாக நன்கறிவோம் என்றாலும் இந்நூல் குறித்த முத்துநிலவன் ஐயாவின் முன்னுரை நூலை வாசிக்கும் ஆர்வத்தை வெகுவாகத் தூண்டுகிறது.. மென்மேலும் உங்கள் படைப்பாக்கங்கள் வெளிவர மனமார்ந்த வாழ்த்துகள் தோழி.




கொசுறு…

நவம்பர் மாத ‘பூவுலகு’ சுற்றுச்சூழல் இதழில் என்னுடைய ‘சிரிக்கும் கூக்கபரா’ கட்டுரை வெளியாகியுள்ளது.










இத்தகு அங்கீகாரங்களே படைப்பாளிக்குப் புத்துணர்வூட்டி எழுதுகோலைத் தொடர்ந்து கரமேந்தியிருக்கச் செய்கின்றன. அவ்வகையில் எனைச் சூழ்ந்திருக்கும் அத்தனை உறவுகளுக்கும் நட்புகளுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள் பல. 





8 January 2017

ஆயிரம் இருந்தும்...




அவள் ஒரு பிச்சைக்காரி.. நான்கு பேர் முன்னால் ஆடிப்பாடி பிச்சையெடுத்து பிழைப்பு நடத்துபவள். அன்றையப் பொழுது அன்றோடு. ஆனாக்கா அந்த மடம்.. ஆகாட்டினா சந்தமடம்.. அதுவும் கூட இல்லாங்காட்டி ப்ளாட்டுபாரம் சொந்த இடம் என்று எந்தக் கவலையுமின்றி, எதிர்காலத் திட்டங்கள் ஏதுமின்றி தனக்கான வாழ்க்கையை மிக இலகுவாக வாழ்ந்துகொண்டிருப்பவள்.. அவளுக்கு ஒரு குட்டித்தங்கை.. 





வாழ்ந்துகெட்ட குடும்பத்தைச் சேர்ந்த ஆடவன் ஒருவன். அவனுக்கு ஒரு குருட்டுத் தம்பி. தானும் வாழத்தெரியாமல் தம்பியையும் வாழ்விக்கும் வழி தெரியாமல் தவிக்கிறான்மீதமிருக்கும் வாழ்க்கை பூதாகரமாய்த் தெரிகிறது.. சாக முடிவெடுக்கிறான்அதுவும் கைகூடாமல் போய்விடுகிறது சர்க்கஸ் நடனப்பெண்ணொருத்தியால். வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில் என்பவளின் கருத்தை ஏற்று பல்பொடி வியாபாரம் செய்கிறான். பிச்சைக்காரியின் அறிமுகம் கிடைக்கிறது.  முதலில் அவள் குடிசையில் அடைக்கலமாகிறான். கொஞ்சம் கொஞ்சமாக அவள் மனத்திலும் அடைக்கலமாகிவிடுகிறான்.






ஆடவன் மேல் சர்க்கஸ் நடனப் பெண்மணிக்கும் ஈர்ப்பு.. காதல்.. இவனோ அவளைத் தேடிவரும் பெரும் புள்ளிகளைக் கொண்டு அவளுடைய நடத்தையை தவறாகவே கணிக்கிறான். அவளுடைய தூய அன்பினை இவனால் புரிந்துகொள்ளமுடியவில்லை. சர்க்கஸ் முதலாளியிடமும் அந்த ஊர் பெரிய மனிதரிடமும் அவள் சிக்கிக்கொண்டு வெளியே வரமுடியாமல் தவிக்கிறாள். அவளிடம் அந்தப் பெரிய மனிதரால் அன்பளிப்பாய் தரப்படுகின்றன இருபது ஆயிரம் ரூபாய் நோட்டுகள். ஆத்திரத்துடன் அவற்றை அறைக்குள் விசிறியடிக்கிறாள். மாடியறை சன்னல் வழியே ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டு மட்டும் காற்றில் பறந்துவந்து தரையிறங்குகிறது.




தரையிறங்கிய அந்த ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டு அபயமான இடம் பிச்சைக்காரியின் கரம். யாருக்கும் தெரியாமல் அவள் அதைப் பத்திரப்படுத்துகிறாள். அதுவரை அமைதியான நீரோட்டமாய் அன்றாடப் பிச்சையிலே ஆனந்தமாய் இருந்த அவளுடைய வாழ்வை  காட்டாற்றுவெள்ளமெனப் புரட்டிப்போடப்போகிறது என்பதை அவள் அப்போது அறியவில்லை.





ஐந்து காசுக்கும் பத்து காசுக்கும் பிச்சை எடுப்பவளிடம் வந்து சேர்ந்த ஆயிரம் ரூபாயைக் கொண்டு அவள் வாழ்க்கையை எவ்வளவு அழகாக மாற்றிக்கொள்ள முடியும்.. கற்பனை இனிக்கிறது. ஆனால் யதார்த்தம்படுத்தவுடன் குறட்டை விடும் அவளது தூக்கம் முதலில் பறிபோகிறது. களங்கமற்ற மனத்தில் கள்ளம் குடிகொள்கிறது. நாளைய கவலையற்று வாழ்ந்தவளுக்கு நாளுக்குநாள் பயமும் படபடப்பும் வந்துசேருகிறது. மறைக்கும் முயற்சியில் காதலனின் சந்தேகத்துக்காளாகி காதலனைப் பிரிகிறாள். பத்திரப்படுத்தும் முயற்சியில் தங்கையை உயிருக்கு ஆபத்தான நிலையில் தள்ளிவிடுகிறாள். தவறுணர்ந்து தங்கையின் உயிரைக் காக்கப் போராடும் போராட்டமும் தோல்வியில் முடிகிறது. போகுமிடமெல்லாம் அவள் நம்பிக்கையில் இடி விழுகிறது.  




பிச்சைக்காரியின் கையில் ஆயிரம் ரூபாய்த்தாளைக் கண்டால் இந்த பாழாய்ப்போன சமுதாயம் சும்மா இருக்குமா? சந்தேகப்படாது? வயிற்றெரிச்சல் படாது? திருடி என்கிறது.. மூர்க்கத்துடன் அடித்துத்துரத்துறது..  முகத்தில் வெந்நீரை வீசுகிறது..


ஆயிரம் ரூபாய்த்தாளின் மீதான மோகத்தால், கண்ணுக்குக் கண்ணான தங்கையை இழந்து, சித்தமிழந்து, கண் நிறைந்த காதலனை இழந்துஇனி தன்னிடம் இருப்பது உயிர்மட்டும்தானே என்று அதையும் இழக்கத் துணிந்தவளைத் தடுத்துநிறுத்தி வாழ்வின் மீதான பிடிப்பை உண்டாக்குகிறது சூழல். இதோ ஒரு பிஞ்சை வாழவைக்க அவள் மறுபடி பிச்சைப்பாத்திரத்தை ஏந்திவிட்டாள். தூரத்தில் ஒலிக்கிறது அவள் குரல்.. ஆனாக்கா அந்த மடம்.. ஆகாட்டினா சந்தமடம்







1964-இல் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் சாவித்ரி, ஜெமினி கணேசன், ராகினி, எம்.ஆர்.ராதா ஆகியோர் நடித்து வெளிவந்த ஆயிரம் ரூபாய் என்னும் இத்திரைப்படத்தை இரண்டொரு மாதங்களுக்கு முன்பு பார்த்தவுடன் எழுதிய பதிவு இது. ஏனோ அப்போது பதியத் தோன்றவில்லை.. இப்போது இருக்கும் சூழலோடு ஒப்பிடுகையில் முடவனின் எதிரிலிருக்கும் கொம்புத்தேனைப் போல கையில் பணமிருந்தும் செலவழிக்க இயலாமல் அந்தப் பிச்சைக்காரியின் நிலைமைதானே பலருக்கும் இப்போது..  

திரைப்படத்தை காண விரும்புவோர்க்கு youtube இணைப்பு இதோ..




(படங்கள் உதவி - இணையம்)

6 January 2017

புத்துணர்வு முகாம்...






ஒவ்வொரு வருடமும் கணவரின் அலுவலகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக வார இறுதிநாளொன்றில் ஏதாவதொரு பிரபல இத்தாலிய உணவகத்திலோ.. ஆஸ்திரேலிய உணவகத்திலோ விருந்து ஏற்பாடு செய்யப்படுவது வழக்கம். மதுவகைகளும் தாராளமாய் உண்டு. விரும்புவோர் விரும்பும் அளவுக்கு உண்டும் குடித்தும் மகிழலாம். வீட்டுக்குத் திரும்பிச்செல்ல வாடகைக்கார் அலுவலக செலவிலேயே வசதி செய்துதரப்படும். அலுவலகத்தில் பணிபுரியும் அனைவரும் தங்கள் இணையரோடு அவசியம் அதில் கலந்துகொள்வர். பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு அனுமதி உண்டென்றாலும் எவரும் குழந்தைகளோடு வருவதில்லை.








சென்ற 2016-ஆம் வருடமும் அப்படி ஏதாவதொரு உணவகத்தில்தான் கிறிஸ்துமஸ் விருந்து இருக்கும் என்று நினைத்திருந்த எனக்கு இம்முறை ஒரு அதிசயம் காத்திருந்தது. இந்த முறை மது, அசைவம் இவற்றுக்கு இடமில்லை என்று குறிப்பிடப்பட்டது. இரண்டுமில்லாமல் என்ன கொண்டாட்டம்? என்ற கேள்விக்குக் கிடைத்த விடை வியப்பளித்தது. இயற்கையின் அழகும் அமைதியும் சூழ்ந்ததொரு வனப்பகுதியில் அமைந்துள்ள புத்துணர்வு முகாமில் ஒருநாள் பொழுதைக் கழிப்பது என்பதுதான் திட்டம்.








சிட்னி மாநகரின் பரபரப்பிலிருந்து விலகி வெகுதொலைவில் மலைக்காட்டுப் பகுதியில் வெளியிலிருந்து பார்த்தால் உள்ளிருப்பதே தெரியாமல் அமைந்துள்ளது அந்த புத்துணர்வு முகாம். உள்ளே பில்லபாங் எனப்படும் நீர்நிலையை ஒட்டி மலைச்சரிவுகளில் ஆங்காங்கே அழகான மரக்குடில்கள்… உணவுடன் தங்கும் வசதியும் உண்டு. பல நாட்டவரும் இங்கு வந்து தங்கி மனத்துக்கும் உடலுக்கும் புத்துணர்வு ஊட்டிச் செல்கின்றனர். புத்துணர்வு முகாமின் முக்கிய அம்சம் யோகா பயிற்சி மையம். இந்தியாவின் பெருமையையும் யோகா, தியானப்பயிற்சிகள் குறித்தும் அவர்கள் பேசக் கேட்கையில் மெய்சிலிர்த்துப்போகிறது.








காலையும் மாலையும் முறையான யோகா பயிற்சி வகுப்புகள், பிரத்தியேகமான எண்ணெய் மசாஜ், இதமான வெந்நீர்க்குளியல், காய்கறி, கீரை, பழங்கள், மூலிகைத்தண்ணீர் என சுவையான இயற்கை உணவு, உயர்ந்தோங்கிய மரங்களின் நிழலில்.. விதவிதமான பறவையொலி பின்னணியில் இசைக்க… அழகிய வண்ணங்களில் தாமரைகள் மலர்ந்து காட்சியளிக்கும் தடாகத்தை ரசித்தபடி… காலாற காட்டுப்பாதையில் நடை, அலுவலக நட்புகளோடு அமைதியான சூழலில் அளவளாவல் என அன்றைய நாள் எங்கள் ஒவ்வொருவருக்கும் மறக்கமுடியாத நாளாகிப்போனது. 


 
சிவப்பு ரோசெல்லா
(crimson rosella)


கிழக்கத்திய மஞ்சள் ராபின்
(eastern yellow robin)


கிழக்கத்திய ரோசெல்லா
 (eastern rosella)


பெல் மைனர் பறவையும்
ஆலிவ் முதுகு ஓரியோல் பறவையும்
(bell miner & olive backed oriole female)

வோங்கா புறா (wonga pigeon)


மீன்குத்தி (kingfisher)


மஞ்சள்முக தேன்குருவி
(yellow faced honey eater)

கிழக்கத்திய வளைமுள்ளலகு சிட்டு
 (eastern spinebill)

சாட்டின் போவர் பெண்பறவை
 (satin bower bird female)

செம்புருவச் சிட்டு (red browed finch)

எதை எடுப்பது.. எதை விடுப்பது என்று முடிவெடுக்கமுடியாதபடி ஏராளமான இயற்கைக் காட்சிகள்… பறவைகள்… எல்லாவற்றையும் புகைப்படமெடுக்க முடியாவிட்டாலும் எடுத்தவற்றுள் சிலவற்றை இங்கு பகிர்ந்துள்ளேன். 

வருடத்தின் இறுதியில்.. வரவிருக்கும் புத்தாண்டை நோக்கிய பயணத்தின் ஒரு அங்கமாக இப்புத்துணர்வு முகாம் அமைந்தது என்றால் மிகையில்லை.. அலுவலகத்தின் அழுத்தும் கடமைகளிலிருந்து சற்றே விடுபட்டு மனத்தை ரிலாக்ஸ் செய்யும் உத்தேசத்தோடு புதியதொரு அனுபவத்தை வழங்கிய உயரதிகாரிக்கும் அவர்தம் மனைவிக்கும் நன்றிசொல்லிப் பிரிந்து அனைவரும் அவரவர் இல்லம் திரும்பினோம்.

*********

பின்னூட்டத்தில் தோழி மணிமேகலாவின் வேண்டுகோள்படி புத்துணர்வு முகாமின் முகவரியையும் இணையதளத்தையும் இங்கு பகிர்கிறேன். 

Billabong Retreat
41 Mcclymonts Rd, Maraylya NSW 2765
(approx 57 km from Sydney CBD)
http://www.billabongretreat.com.au/