ஒவ்வொரு வருடமும்
கணவரின் அலுவலகத்தில் கிறிஸ்துமஸ்
பண்டிகைக்கு முன்பாக வார இறுதிநாளொன்றில் ஏதாவதொரு பிரபல இத்தாலிய உணவகத்திலோ.. ஆஸ்திரேலிய
உணவகத்திலோ விருந்து ஏற்பாடு செய்யப்படுவது வழக்கம். மதுவகைகளும் தாராளமாய் உண்டு. விரும்புவோர் விரும்பும்
அளவுக்கு உண்டும் குடித்தும் மகிழலாம். வீட்டுக்குத் திரும்பிச்செல்ல வாடகைக்கார் அலுவலக செலவிலேயே வசதி செய்துதரப்படும். அலுவலகத்தில் பணிபுரியும் அனைவரும் தங்கள்
இணையரோடு அவசியம் அதில் கலந்துகொள்வர். பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு அனுமதி உண்டென்றாலும் எவரும் குழந்தைகளோடு வருவதில்லை.
சென்ற 2016-ஆம்
வருடமும் அப்படி ஏதாவதொரு உணவகத்தில்தான் கிறிஸ்துமஸ் விருந்து இருக்கும் என்று நினைத்திருந்த எனக்கு
இம்முறை ஒரு அதிசயம் காத்திருந்தது. இந்த முறை மது, அசைவம் இவற்றுக்கு இடமில்லை என்று
குறிப்பிடப்பட்டது. இரண்டுமில்லாமல் என்ன கொண்டாட்டம்? என்ற கேள்விக்குக் கிடைத்த விடை வியப்பளித்தது. இயற்கையின் அழகும் அமைதியும் சூழ்ந்ததொரு வனப்பகுதியில் அமைந்துள்ள புத்துணர்வு முகாமில் ஒருநாள் பொழுதைக் கழிப்பது என்பதுதான் திட்டம்.
சிட்னி மாநகரின் பரபரப்பிலிருந்து விலகி வெகுதொலைவில் மலைக்காட்டுப் பகுதியில் வெளியிலிருந்து பார்த்தால் உள்ளிருப்பதே தெரியாமல்
அமைந்துள்ளது அந்த புத்துணர்வு முகாம். உள்ளே பில்லபாங் எனப்படும் நீர்நிலையை ஒட்டி மலைச்சரிவுகளில் ஆங்காங்கே அழகான மரக்குடில்கள்… உணவுடன் தங்கும் வசதியும் உண்டு. பல நாட்டவரும் இங்கு வந்து தங்கி மனத்துக்கும் உடலுக்கும்
புத்துணர்வு ஊட்டிச் செல்கின்றனர். புத்துணர்வு முகாமின் முக்கிய அம்சம் யோகா பயிற்சி
மையம். இந்தியாவின் பெருமையையும் யோகா, தியானப்பயிற்சிகள் குறித்தும் அவர்கள் பேசக்
கேட்கையில் மெய்சிலிர்த்துப்போகிறது.
காலையும் மாலையும்
முறையான யோகா பயிற்சி வகுப்புகள், பிரத்தியேகமான எண்ணெய் மசாஜ், இதமான வெந்நீர்க்குளியல்,
காய்கறி, கீரை, பழங்கள், மூலிகைத்தண்ணீர் என சுவையான இயற்கை உணவு, உயர்ந்தோங்கிய மரங்களின்
நிழலில்.. விதவிதமான பறவையொலி பின்னணியில் இசைக்க… அழகிய வண்ணங்களில் தாமரைகள் மலர்ந்து
காட்சியளிக்கும் தடாகத்தை ரசித்தபடி… காலாற காட்டுப்பாதையில் நடை,
அலுவலக நட்புகளோடு அமைதியான சூழலில் அளவளாவல் என அன்றைய நாள் எங்கள் ஒவ்வொருவருக்கும் மறக்கமுடியாத நாளாகிப்போனது.
சிவப்பு ரோசெல்லா (crimson rosella) |
கிழக்கத்திய மஞ்சள் ராபின் (eastern yellow robin) |
கிழக்கத்திய ரோசெல்லா (eastern rosella) |
பெல் மைனர் பறவையும் ஆலிவ் முதுகு ஓரியோல் பறவையும் (bell miner & olive backed oriole female) |
வோங்கா புறா (wonga pigeon) |
மீன்குத்தி (kingfisher) |
மஞ்சள்முக தேன்குருவி (yellow faced honey eater) |
கிழக்கத்திய வளைமுள்ளலகு சிட்டு (eastern spinebill) |
சாட்டின் போவர் பெண்பறவை (satin bower bird female) |
செம்புருவச் சிட்டு (red browed finch) |
எதை எடுப்பது.. எதை விடுப்பது என்று முடிவெடுக்கமுடியாதபடி ஏராளமான இயற்கைக் காட்சிகள்… பறவைகள்… எல்லாவற்றையும் புகைப்படமெடுக்க முடியாவிட்டாலும் எடுத்தவற்றுள் சிலவற்றை இங்கு பகிர்ந்துள்ளேன்.
வருடத்தின் இறுதியில்.. வரவிருக்கும் புத்தாண்டை நோக்கிய பயணத்தின் ஒரு அங்கமாக இப்புத்துணர்வு முகாம் அமைந்தது என்றால் மிகையில்லை.. அலுவலகத்தின் அழுத்தும் கடமைகளிலிருந்து சற்றே விடுபட்டு மனத்தை ரிலாக்ஸ் செய்யும் உத்தேசத்தோடு புதியதொரு அனுபவத்தை வழங்கிய உயரதிகாரிக்கும் அவர்தம் மனைவிக்கும் நன்றிசொல்லிப் பிரிந்து அனைவரும் அவரவர் இல்லம் திரும்பினோம்.
*********
பின்னூட்டத்தில் தோழி மணிமேகலாவின் வேண்டுகோள்படி புத்துணர்வு முகாமின் முகவரியையும் இணையதளத்தையும் இங்கு பகிர்கிறேன்.
Billabong Retreat
41 Mcclymonts Rd, Maraylya NSW 2765
(approx 57 km from Sydney CBD)
http://www.billabongretreat.com.au/
பதிவைப்படித்ததும் + படங்களைப் பார்த்ததும்,
ReplyDeleteமனதே ரிலாக்ஸ் ஆகிவிட்டது.
பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.
தங்கள் வருகைக்கும் ரசித்து இட்டக் கருத்துக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி கோபு சார்.
Deleteஅவ்வப்போது ஒருவித ரிலாக்சேஷன் தேவைதான்
ReplyDeleteஆம்..ஆனால் இது கொஞ்சம் செலவு கூடுதலான ரிலாக்சேஷன்.. அலுவலக ஏற்பாடு என்பதால்தான் போய்வர முடிந்தது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.
Deleteஉள்ளம் அமைதி கொள்ள
ReplyDeleteஅருமையான பதிவு
மிக்க நன்றி ஐயா.
Deleteமற்றவர்கள் இதுபோன்ற முறையை கடைபிடிக்கலாம். அருமையான பதிவு, அழகான புகைப்படங்களுடன்.
ReplyDeleteஆம். வீணே விருந்துக் கொண்டாட்டத்தில் செலவழிப்பதை விடவும் இதுபோன்ற அமைதியான இயற்கைச்சூழலில் செலவழிக்கும் பணமும் நேரமும் மிகவும் பயனுள்ளதாக இருப்பது உண்மை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.
Deleteபுகைப் படங்கள் ரொம்பவே அழகாக உள்ளன
ReplyDeleteவருகைக்கும் படங்களை ரசித்தமைக்கும் மிகவும் நன்றி அருணா.
Deleteவாவ், அழகான படங்களுடன் பதிவும் அருமை அக்கா. படங்களை பார்க்கும் போதே சூழலின் இனிமை புரிகின்றது.
ReplyDeleteஆமாம் நிஷா... நகரத்தின் பரபரப்பிலிருந்து விலகி மனத்துக்கும் உடலுக்கும் புதிய உற்சாகம் தரும் அழகான இடம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிமா.
Deleteவாவ்....
ReplyDeleteநல்லதொரு கிறிஸ்மஸ் பரிசாக அது அலுவலகத்தாருக்கு இருந்திருக்கும்! அங்கு மிக அதிகமாக அதன் அழகுகளையும் அருமை பெருமைகளையும் கண்டதும் சேமித்துக் கொண்டதும் நீங்களாகத் தான் இருக்கும்.
பறவைகளைப் படம் பிடித்து அவற்றின் பெயர்களையும் தேடி எடுத்து ஒரு ஆவணப்பதிவாக்கி விட்டீர்கள் கீதா. படங்கள் மிக அழகாக இருக்கின்றன.பாருங்களேன் நீலமும் கபில நிறமும் கொண்ட அல்லிப் பூக்களை! எத்தனை அழகு... பட்ட மரத்தினுள்ளே முளைவிடும் சிறு செடிகள்...இவைகளைச் சிறைப்பிடிக்க கலைக்கண்கள் வேண்டும் கமறாவோடு...எல்லாம் ஒன்றாக வாய்த்து நமக்கும் காணக் கிட்டியது நிச்சயமாக ஓர் அரிய வாய்ப்புத் தான்.
பாராட்டுக்கள் கீதா!
இந்த இடத்தினுடய முகவரியையும் பதிந்து விடுங்களேன் கீதா...பயனுடயதாக இருக்கும்...
படத்தில் பார்ப்பது ஒரு பங்கு என்றால் நேரில் இன்னும் பல பங்கு அழகும் ரசனையும் தோழி.. நிச்சயம் நீங்களொருமுறை இங்கு சென்றுவாருங்கள். நிச்சயம் ரசிப்பீர்கள்.. உங்கள் யோசனைப்படி இடத்தின் முகவரியையும் இப்போது பதிவின் இறுதியில் இணைத்துவிட்டேன். பார்க்க விரும்புவோர்க்கு பயனுள்ளதாக இருக்கும்.
Deleteவருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி தோழி.
அழகான படங்கள்....
ReplyDeleteஇப்படி ஒரு Relaxation மிகவும் தேவையான ஒன்று. வருடத்திற்கு ஒரு முறையேனும்.....
ஆமாம்.. ஒரு வருடத்துக்கு தாங்கும் இந்த அழகான அனுபவம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்.
Deleteஉண்மையானதொரு கொண்டாட்டம்! சிறப்பு!
ReplyDeleteவிருந்து கொண்டாட்டம் என்று வழக்கம்போல இல்லாமல் இப்படியொரு இனிய அனுபவம் புதிய முயற்சிதான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நிலாமகள்.
DeleteVery nice! Beautiful pictures as well!
ReplyDeleteவருகைக்கும் பதிவையும் படங்களையும் ரசித்தமைக்கு நன்றிமா மகி.
Delete