23 May 2014

போஸம் - ஆஸ்திரேலியாவின் அதிசய உயிரினம் 11


போஸம் (possum)

ஆஸ்திரேலியாவின் தனித்துவமான விலங்குகளுள் ஒன்றான போஸம் மரவாழ் உயிரினம். பெரும்பான்மையான ஆஸ்திரேலிய விலங்குகளைப் போலவே போஸம்களும் இரவு விலங்குகள்தாம். ஆஸ்திரேலிய விலங்குகளிலேயே மனிதர்களின் வசிப்பிடங்களில் பயமின்றி புழங்கும் இனமும் இவைதாம். தூரிகை வால் போஸம்களும் வளையவால் போஸம்களும் குடியிருப்புகளைக் குறிவைப்பதில் முக்கியமானவை. வீடுகளின் மேற்கூரைகளைப் பிரித்து உள்ளே இறங்கி அடுக்களையை சூறையாடுவதும்தோட்டங்களைப் பாழ்படுத்துவதும், குப்பைத் தொட்டியிலிருந்து குப்பைகளை பீறாய்ந்து வெளியில் எறிந்து அசுத்தப்படுத்துவதும்கண்ட இடங்களிலும் கழிவுகளிட்டு நாறடிப்பதுமாக அவற்றின் தொல்லைகள் நம்மூரில் குரங்குத்தொல்லைக்கு நிகரானவை. ஒரு அங்குல நீளத்துக்கு பென்சில் மொத்தத்தில் கரும்பச்சை நிறத்தில் காணப்படும் புழுக்கைகள் நமக்கு சுகாதாரக்கேடு விளைவிப்பவை. கிட்டத்தட்ட 70 வகையான போஸம்கள் ஆஸ்திரேலியா மற்றும் நியூகினியாவின் மண்ணுக்குரியவை. அங்கிருந்துதான் அவை நியூஸிலாந்து, சீனா போன்ற பிற நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன.

போஸம் இனத்தில் மிகப்பெரியது ஏழு கிலோவுக்கும் அதிகமான எடை கொண்டதும் இந்தோனேஷியாவின் ஒரு சில தீவுகளில் மட்டுமே காணப்படுவதுமான குஸ்குஸ் கரடி (bear cuscus). இரண்டாவது பெரியது தூரிகைவால் போஸம் (brushtail possum), மூன்றாவது வளையவால் போஸம் (ringtail possum). எல்லாவற்றிலும் மிகச்சிறியது பத்தே கிராம் எடையுள்ள டாஸ்மேனியன் பிக்மி போஸம் எனப்படும் குள்ளப்போஸம்  (Tasmanian pygmy possum).

குஸ்குஸ் கரடி போஸம்

குள்ளப் போஸம்
போஸம் இனத்தில் உணவுப்பழக்கம் இனத்துக்கு இனம் வித்தியாசப்படும்.  சாதாரண தூரிகைவால் போஸம் ஒரு அனைத்துண்ணி. யூகலிப்டஸ் இலைகளை மட்டுமே தின்று வாழ்பவை கிரேட்டர் கிளைடர்கள்.  மலைகளில் வாழும் பிக்மி போஸம்கள் பூச்சிகளைத் தின்னும். ஹனி போஸம்கள் பூக்களின் தேனை உண்ணக்கூடியவை.

பழுப்புநிற தூரிகைவால் போஸம் 

தூரிகைவால் போஸம், இலைகள், துளிர்கள், பூக்கள், பழங்கள், கொட்டைகள் போன்ற தாவர பாகங்களை விரும்பி உண்டாலும், பூச்சிகள், பறவைகளின் முட்டைகள், எலி போன்ற சின்னச் சின்ன உயிரினங்கள் போன்றவற்றையும் தின்னக்கூடியது. இதன் வால் தூரிகை போன்று புஸூபுஸூவென்று இருப்பதால் அப்பெயர் பெற்றது. மரங்களில் கிளைக்குக் கிளை தாவுகையில் கிளைகளைப் பற்றிக்கொள்ள வால் பெரிதும் உதவுகிறது. 

வெள்ளை நிற தூரிகைவால் போஸம்

தூரிகைவால் போஸத்தின் மார்பில் உள்ள வாசனை சுரப்பியிலிருந்து சுரக்கும் செந்நிற திரவத்தால் வாசனை பரப்பியும், ஒலியெழுப்பியும் தன் எல்லைக்குட்பட்ட பகுதி என்பதை மற்ற போஸம்களுக்கு உணர்த்துகிறது. தூரிகைவால் போஸம் கிலுக்கம், உறுமல், இரைதல், அலறல், செருமல், கீச்சிடல் போன்று விதவிதமாய் ஒலியெழுப்பக்கூடியது. இவற்றுக்கு மரக்கிளைகளும் பொந்துகளும் பாறையிடுக்குகளும்தான் இயற்கை உறைவிடங்கள் என்றாலும் பெரும்பான்மையானவை வீடுகளின் மேற்கூரைகளையே தங்கள் உறைவிடங்களாக அமைத்துக்கொள்கின்றன.

தாயின் வயிற்றுப்பைக்குள் போஸம்குட்டி

தூரிகைவால் போஸம்களுக்கு இனப்பெருக்க காலம் என்று குறிப்பிட்ட காலம் எதுவும் கிடையாது. வளமான நாட்கள் எனில் வருடத்தின் எந்தக்காலத்திலும் பெருகக்கூடிய இனம் அது. போஸத்தின் கர்ப்பகாலம் பதினாறு முதல் பதினெட்டு நாட்கள்தாம். அதன்பின் 1.5 செ.மீ. அளவும் 2 கிராம் எடையும் கொண்ட பட்டாணி அளவிலான குட்டி ஒன்றை ஈனும். மார்சுபியல் இனங்களின் வழக்கப்படி கண்திறவாத முழுவளர்ச்சியடையாத குட்டி, தானே முன்னேறிப் பயணித்து தாயின் வயிற்றுப் பையை அடைந்து தாயின் முலைகளுள் ஒன்றினைப் பற்றிக்கொள்ளும்.

தூரிகைவால் போஸம் குட்டியுடன்

கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் பைக்குள் பாலைக் குடித்தபடி வளரும். ஐந்தாறு மாதங்களுக்குப் பிறகு வயிற்றுப்பையை விட்டு வெளியில் வந்து தாயின் முதுகில் சவாரி செய்தபடி அடுத்த நான்கைந்து மாதங்களைக் கழிக்கும். ஒரு வயதில் பெண் போஸம் முதிர்ச்சி அடையும். ஆண் முதிர்ச்சி அடைய இரண்டு வருடங்களாகும். மகள் என்றால் தாயின் வசிப்பிடத்துக்கு அருகிலேயே வசிப்பிடத்தை அமைத்துக்கொள்ள அனுமதி உண்டு. மகன் எனில் தொலைவில் வேறு எல்லை தேடிச்செல்லும்படி விரட்டப்படும். காட்டில் வாழும் போஸத்தின் ஆயுட்காலம் தோராயமாக 13 வருடங்கள் என்று ஆய்வு தெரிவிக்கிறது.

வளையவால் போஸம்
வளையவால் போஸம்களின் வாழ்க்கை சற்று வித்தியாசமானது. ஒரு ஆண், ஒன்றிரண்டு பெண்கள், கொஞ்சம் வளர்ந்த குழந்தைகள், கைப்பிள்ளைகள் என்று ஒரு குடும்பமாய் வாழக்கூடியவை. இந்த இனத்தில் பதினெட்டு மாதங்களுக்குப் பிறகே குட்டிகள் முதிர்ச்சி அடைந்து வீட்டை விட்டு விலகிச்செல்கின்றன. குடும்பத்தின் ஆணும் பெண்ணும் இணைந்தே கூடுகட்டுகின்றன. தங்கள் வாலில் கூடு கட்டுவதற்குத் தேவையான பொருட்களைச் சுருட்டி எடுத்துக்கொண்டுவந்து மரக்கிளைகளில் பெரிய கோள வடிவிலான கூட்டைக்கட்டுகின்றன. உள்ளே புற்களையும் மரச்செதில்களையும் கொண்டு மெத்தையமைக்கின்றன.

வளையவால் போஸம் கூடுகள்


தூரிகைவால் போஸத்தை விடவும் குறைந்த அளவிலேயே ஒலியெழுப்பும் என்றாலும் இதன் உச்சத்தாயியிலான கீச்சுக்குரல் பல நகரவாசிகளுக்கும் பரிச்சயமானது. இலைகளைத் தின்னக்கூடியது என்றாலும் பூக்கள், மொட்டுக்கள், துளிர்கள், பழங்கள் எதையும் விட்டுவைப்பதில்லை. ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான இனப்பெருக்க காலத்தில் இரண்டு குட்டிகள் பிறக்கின்றன. தாயின் வயிற்றுப்பைக்குள் இருக்கும் நான்கைந்து மாதங்களுக்குப் பிறகு, ஆறு மாதங்களுக்கு தாய் தந்தை இருவரது முதுகிலும் சவாரி செய்தபடி வலம் வருகின்றன.

போஸம் சாகஸம்

வீடுகளின் கூரைகளிலிருக்கும் விரிசல்களைப் பெரிதாக்கி உள்ளே நுழைவதும் புகைப்போக்கிகள் வழியே வீட்டுக்குள் பொத்தென்று விழுவதும் சர்வசாதாரணம். அம்மாதிரி சமயங்களில் அவற்றை நெருங்குவது ஆபத்து. எனவே அமைதியாகக் கதவைத் திறந்து விட்டு அவை வெளியேற வழி அமைத்துக்கொடுத்தல் வேண்டும். இவை மரவாழ் உயிரினங்கள் என்பதால் மரங்கள் மூலம் வீடுகளின் மேற்கூரைகளை எளிதில் அடைந்துவிடுகின்றன. இவை வீடுகளைத் தஞ்சம் புகுவதைத் தடுக்கவிரும்பினால் வீட்டையொட்டி உள்ள மரக்கிளைகள் வெட்டப்படவேண்டும்.

என்ன செய்தாலும் போஸம்கள் தங்கள் வீட்டு வளாகத்தை விட்டுப் போவதாய்க் காணோம் என்று ஆயாசப்படுபவர்களுக்கு ஒரு ஆலோசனையாய் போஸம் பெட்டிகள் பற்றி அறிவுறுத்தப்படுகின்றது. இப்பெட்டிகளை மரங்களை ஒட்டி அமைத்து போஸம்களுக்கு புதிய குடியிருப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டு வீடுகளின் கூரைகள் பாதுகாக்கப்படுகின்றனவாம். வீட்டின் மேற்கூரைகளில் மின்விளக்குப் பொருத்துவதும் இரவு நேரங்களில் தொடர்ச்சியாய் சில நாட்களுக்கு எரியவிடுவதும் மற்றொரு ஆலோசனை.


குடியிருப்புகளில் தொல்லை தருவதாகவும், இரவில் தூங்கமுடியாமல் கூரைகளில் கொட்டமடிப்பதாகவும் புகார் செய்யப்பட்டால், இவற்றைப் பிடிக்க சட்டபூர்வமான நிறுவனங்கள் நாடுமுழுவதிலும் செயல்படுகின்றன. சில நிறுவனங்கள் போஸம்களைப் பிடிப்பதோடு அவற்றால் பாதிக்கப்பட்ட கூரைகளையும் சீராக்கித் தருவதாக விளம்பரப்படுத்துகின்றன. அவ்வாறு பிடிக்கப்படும் போஸம்களை என்ன செய்வார்கள்?

எதுவும் செய்யமாட்டார்கள். ஏனெனில் அவற்றைப் பிடித்த அன்று மாலையே பிடித்த இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவுக்குள் விட்டுவிடவேண்டும் என்பது ஆஸ்திரேலிய மாநில அரசுகளின் பொதுவிதி. சில மாநிலங்களில் விதிவிலக்கும் உண்டு. விக்டோரியா மாநிலத்தில் பொறிவைத்துப் பிடிக்கப்படும் போஸம்கள் அங்கீகரிக்கப்பட்ட மிருகவைத்தியர்கள் மூலம் கருணைக்கொலை செய்யப்படலாம். தெற்கு ஆஸ்திரேலியாவிலோ அவை முற்றிலும் பாதுகாக்கப்பட்ட உயிரினங்கள். அரசின் அனுமதியின்றி வீடுகளில் பொறிவைத்து போஸம்களைப் பிடித்தலும் கூடாது.


வனவிலங்குகளைப் பிடிப்பதோ, துன்புறுத்துவதோ, கொல்வதோ ஆஸ்திரேலியாவின் வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி குற்றமாகும். அதன்படி குற்றவாளிக்கு இரண்டாண்டு சிறைத்தண்டனை அல்லது 60,000 ஆஸ்திரேலிய டாலர் (நம்மூர் பண மதிப்பில் கிட்டத்தட்ட முப்பது லட்ச ரூபாய்) அபராதம் விதிக்கப்படும். ஆஸ்திரேலியாவில்தான் இந்த சட்டமெல்லாம். அண்டை நாடான நியூஸிலாந்தில் நிலைமை தலைகீழ்.

1840 வாக்கில் நியூஸிலாந்தில் ரோமத்தொழிலுக்காக 200 - 300 என்ற எண்ணிக்கையில் சாதாரண தூரிகை வால் போஸம்கள் ஐரோப்பியக் குடியேறிகளால் அறிமுகப்படுத்தப்பட்டன. அங்கு இந்த போஸம்களுக்கு எதிரியென எந்த விலங்கும் இல்லாமையால் அதன் வளர்ச்சி அபரிமிதமாகப் பெருகி ஒரு கட்டத்தில் பயிரழிக்கும் பிராணியாக மாறிவிட்டது. நியூஸிலாந்தின் சொந்த மண்ணின் மரங்களுக்கும் மற்ற பிராணிகளுக்கும் பாதிப்பு உண்டாக்கியதாலும், பயிர்களை நாசப்படுத்தியதாலும், கால்நடைகளிடம் காசநோய்ப் பரப்பியாக செயல்பட்டதாலும் இவ்வினத்தின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் அரசு தீவிரமாக ஈடுபட்டது. 1980 களில் எழுபது மில்லியன் என்ற எண்ணிக்கையை எட்டிவிட்டிருந்த போஸம்கள் 2009- இல் முப்பது மில்லியன் என்ற அளவுக்குக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. 


1996 வரை வருடத்துக்கு இரண்டு மில்லியன் போஸம்கள் அவற்றின் ரோமங்களுக்காக வேட்டையாடப்பட்டன. தூரிகை வால் போஸத்தின் ரோமத்தோடு மிக நேர்த்தியான ஆட்டுரோமத்தையும் இழைத்து நெய்யப்பட்ட மேலாடைகள், படுக்கை விரிப்புகள், கையுறைகள் போன்றவை மிகப்பெரும் அளவில் விற்பனை செய்யப்பட்டன.

போஸம்கள் ஆஸ்திரேலியா முழுமைக்கும் விரவிக் காணப்படும் இனம் என்றாலும் தாயகமான ஆஸ்திரேலியாவை விடவும் அது அறிமுகப்படுத்தப்பட்ட நியூஸிலாந்தில் அடர் எண்ணிக்கையில் காணப்படுவதற்கு காரணம் நியூஸிலாந்தில் இயற்கை எதிரிகள் இல்லாமையே. ஆஸ்திரேலியாவில் டைகர் க்வோல்கள், நாய்கள், நரிகள், பூனைகள், கோவான்னா எனப்படும் ராட்சதப்பல்லிகள், பாம்புகள், சில வகை ஆந்தைகள் மற்றும் மனிதர்கள் என்று போஸம்களுக்கு நிறைய எதிரிகள். ஆனால் நியூஸியிலோ மனிதர்களையும் பூனைகளையும் தவிர வேறு எதிரிகளே இல்லாமையால் போஸம் பல்கிப்பெருகி வளரத் தடையேதுமின்றிப் போயிற்று.ஆஸ்திரேலியாவில் தங்களுக்கென்று எல்லைகளை வகுத்து வாழும் தூரிகைவால் போஸம்கள் நியூஸிலாந்தில் ஒரே எல்லைப் பகுதியைப் பகிர்ந்துகொண்டு வாழ்கின்றன. நியூஸிலாந்தில் அவற்றின் இனம் பெருக இதுவும் ஒரு காரணம். பொதுவாகவே போஸம்கள் ஒன்றையொன்று காண நேர்கையில் மூர்க்கம் கொண்டு தாக்குவதில்லை. காதுகளை விரைத்தபடி ஒன்றையொன்று முறைத்துக்கொண்டு நிற்கும். பிறகு அது அது தன் வழியே சென்றுவிடும். அவ்வளவே.

நியூஸிலாந்தில் பயிரழிக்கும் பிராணிகளான போஸம்கள், முயல்கள், எலிகள், வல்லபிகள் இவற்றைக் கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாக அவற்றின் வசிப்பிடங்களில் சோடியம் மோனோப்ளூரோ அசிடேட் (1080 நச்சு) என்னும் நச்சு கலந்த காரட் போன்ற உணவுப்பொருட்கள் வான்வழி தூவப்படுகின்றன. பெரும்பாலான நாடுகளில் தடைசெய்யப்பட்ட இந்நச்சை ஒருசில நாடுகள் மட்டுமே விவசாயப் பூச்சிக்கொல்லியாக பயன்படுத்துகின்றன. உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் 1080 என்னும் நச்சில் 90% நியூஸிலாந்தில் மட்டுமே உபயோகிக்கப்படுகிறது. அங்கு ஒரு வருடத்துக்கு உபயோகப்படுத்தப்படும் 4 டன் அளவு 1080  என்னும் நச்சானது, 20 மில்லியன் மக்களைக் கொல்லக்கூடிய அளவுக்கு வீரியமுடையதாம்.இந்நச்சை உட்கொண்ட பிராணிகள் சிலமணிநேரங்களில் துவண்டுவிழுந்து இறந்துவிடுகின்றன. இறந்த போஸம்களின் உடல் முழுவதுமாய் மக்குவதற்கு ஆறுமாத காலம் பிடிக்கும். இறந்துகிடக்கும் அந்த பிராணிகளைத் தின்பதன்மூலம் நாய், பூனை, பறவைகள் போன்ற மற்ற உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன என்பது கூடுதல் தகவல். ஒரு போஸத்தின் இறந்த உடலில் இருக்கும் நச்சானது அது இறந்தபிறகும் கூட வீரியத்துடன், பன்னிரண்டு நாய்களையோ பூனைகளையோ கொல்லப் போதுமானதாக இருக்கும். முதல்நிலை பாதிப்பை விடவும் இரண்டாம் நிலை பாதிப்பு மிக அதிகம் என்பதால் இந்நச்சை உபயோகிப்பதில் பல மாற்றுக்கருத்துகள் இருந்தாலும் இன்றுவரை இதற்கு மாற்றாக வேறெதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

காடுவாழ் உயிரிகளின் வாழ்விடத்தை அழித்து குடியிருப்புகளை அமைப்பதும், இயற்கைக்கு மாறாக உயிரினங்களை இன்னோர் இடத்தில் வாழ்விப்பதுமான தவறுகளை நாம் செய்துவிட்டு இப்போது நிலைமை கைமீறிப்போன பின்பு குத்துகிறதே குடைகிறதே என்று புலம்பி ஆவதென்ன?

**************************************
(படங்களுக்கு நன்றி: இணையம்)

12 May 2014

ஆஸ்திரேலிய மேக்பை - ஆஸ்திரேலியாவின் அதிசய உயிரினம் 10


கசாப்புக்கார பறவைகள் பற்றி அறிந்திருக்கிறீர்களா? கசாப்புக்காரன் தான் வெட்டிய இறைச்சியைக் கொக்கியில் தொங்கவிட்டிருப்பதைப் போன்று தாங்கள் வேட்டையாடிய இரையை மரக்கிளையிலோ  மர இடுக்கிலோ தொங்கவிடுவதால் இப்பறவைகளுக்கு கசாப்புக்கார பறவைகள் (Butcher birds) என்று பெயர். இரையைத் தின்ன ஏதுவாகவோ, நிறைய இரையைச் சேமித்துவைக்கவோ, அல்லது தன் இணையைக் கவரவோ இதுபோன்று செய்யும் இந்த கசாப்புக்கார பறவை இனத்தின் நெருங்கிய உறவுதான் ஆஸ்திரேலியாவிலும் நியூகினியா, நியூஸிலாந்து, ஃபிஜி தீவுகளிலும் காணப்படும்ஆஸ்திரேலிய மேக்பை பறவைகள். 


மேக்பைகள் கருப்பு வெள்ளை நிறத்தில் பார்ப்பதற்கு காக்கைகள் போல் இருக்கும். பொன்பழுப்பு நிறக்கண்களும்,  கூரான கொக்கிபோல் வளைந்த வெளிர்நீலம் மற்றும் கருப்பு கலந்த அலகும் கொண்ட இவற்றுள் ஆண் பெண் பேதமறிதல் அரிது. நீளமான கால்களைக் கொண்டிருப்பதால் மற்ற பறவைகளைப் போல தத்தித் தத்தியோஅசைந்து அசைந்தோ செல்லாமல் அழகாக நடந்து செல்லக் கூடியவை. இவற்றின் ஆயுட்காலம் 25 - 30 வருடங்கள் இருக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பார்ப்பதற்கு காக்கை போல் இருந்தாலும் குரலென்னவோ குயிலை விடவும் இனிமையானது. புல்லாங்குழல் பறவை என்று அழைக்கப்படும் பெருமைக்குரிய மேக்பையின் பாடல்கள் பல சிக்கலான இசைக்கோர்வையைக் கொண்டவை. நான்கு சுரங்களுள் மாறி மாறி இசைபாடும் திறனும் நாற்பதுக்கும் மேற்பட்ட பறவை மிருகங்களின் குரல்களைப் போலவே ஒலிக்கும் திறனும் கொண்ட அதி விநோதப் பறவை இது. இதனால் நாய் போல குரைக்கவும் குதிரை போல கனைக்கவும் முடியும். மனிதர்களோடு நெருங்கிவாழும் சில பகுதிகளில் மனிதர்களின் குரலையும் மிமிக்ரி செய்யக்கூடியது மேக்பை.


ஆஸ்திரேலிய மேக்பை இனத்தில் மூன்று பிரிவுகள் உண்டு. கருநிற முதுகு கொண்ட மேக்பை, வெண்ணிற முதுகு கொண்ட மேக்பை மற்றும் மேற்கு பிராந்திய மேக்பை. இப்பிரிவுகளுக்குள் கலப்புமணம் நடைபெற்று இன்னும் ஒன்பது உப பிரிவுகள் உண்டாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.க்வாடுல் ஊடுல் ஆடுல் வாடுல் டூடுல்….

மேக்பையின் பாடலிசையை தன் கவிதையொன்றில் இவ்வாறுதான் குறிப்பிடுகிறார் நியூஸிலாந்து கவிஞர் டெனிஸ் க்ளோவர். தனித்திருக்கும்போது மேக்பை பாடும் பாடலானது மிகவும் இதமான மெல்லிசையாய் மனம் உருக்கும். அதன் இனப்பெருக்க காலம் முடியுந்தருவாயில் அவ்வின்னிசை மெல்லிய சோக கீதமாக இசைக்கப்படுகிறதாம். 

இனப்பெருக்கக் காலத்தின் ஆரம்பகட்டத்தில் தங்கள் எல்லைப்பகுதியை அறிவிப்பது போல், ஆணும் பெண்ணும் இணைந்து பெருத்த குரலெடுத்து காதல் கீதம் இசைக்கின்றன. குளிர்காலம் மற்றும் வசந்தகாலத்தின் விடியற்காலையிலும், அந்திப்பொழுதிலும் பல மேக்பை பறவைகள் ஒன்றுகூடி கோரஸாகப் பாடும் சேர்ந்திசைப் பாடல்கள் ஆஸ்திரேலியாவில் மிகப் பிரசித்தம். மேக்பைகள் பாடும்போது தங்கள் கழுத்தை ஒருபுறமாய் சாய்த்து, நெஞ்சை நிமிர்த்தி, இறக்கைகளைப் பின்னோக்கித் தள்ளியபடி பாடும். இரைக்காக இறைஞ்சும் குஞ்சுகள் உச்சத்தாயியில் கத்துவதும் ஒரு பாடல்ரகம். ஆபத்து வந்தால் எச்சரிப்பதும் ஒரு வித ராகம்.


இப்பறவையின் கானமும் பயிரழிக்கும் பூச்சிகளைத் தின்னும் வழக்கமும் இவற்றை விவசாயிகளின் நண்பர்களாக்கியிருக்கிறது. தெற்கு ஆஸ்திரேலியாவின் மாநிலப் பறவை அடையாளம் Piping Shrike எனப்படும் வெண்ணிற முதுகு கொண்ட மேக்பையாகும். இது தெற்கு ஆஸ்திரேலியாவின் மாநிலக் கொடியிலும் இடம்பெற்றுள்ள பெருமைக்குரியது.


ஆஸ்திரேலிய மேக்பை பறவைகள் தங்கள் வசிப்பிடமாக பரந்த புல்வெளிகள், வயல்கள், பூங்காக்கள், தோட்டங்கள், கோல்ஃப் விளையாட்டு மைதானங்கள், தெருவோர மரங்கள் போன்றவற்றையே தேர்ந்தெடுக்கின்றன. பெரும்பாலான நேரம் மண்ணைக் கிளறி பூச்சிகளையும் அவற்றின் லார்வாக்களையும் தின்பதிலேயே கழிக்கின்றன. தரையில் வாழும் மண்புழு, பூரான், மரவட்டை, நத்தை, சிலந்தி, தேள், பல்லி, தவளை, எலி, கரப்பான்பூச்சி, எறும்பு, வண்டு, அந்துப்பூச்சி, கம்பளிப்பூச்சி மற்றும் புழுக்கள் ஆகியவைதான் மேக்பையின் பிரதான உணவு. தானியங்கள், கிழங்குகள், பழங்கள் கொட்டைகள் போன்றவற்றையும் தின்னக்கூடியவை. 

ஒருவித விஷத்தவளையைத் தின்னும்போது அதை தலைகீழாய்க் கவிழ்த்துப்போட்டு அடிப்பாகத்தை மட்டும் உண்ணுமளவும்தேனீ மற்றும் குளவிக்களைத் தின்னுமுன் அவற்றின் கொடுக்கை அகற்றிவிட்டுத் தின்னுமளவும் கூர்மதி நிறைந்தது. அலகை மண்ணுக்குள் செலுத்தி உள்ளிருக்கும் மலவண்டின் லார்வாக்களின் இருப்பை மெல்லிய அதிர்வைக் கொண்டே கண்டறிந்து உண்ணக்கூடியது.
 

கூடு கட்ட இடத்தைத் தேர்ந்தெடுப்பது, கூடு கட்டுவது, அடைகாப்பது, குஞ்சுகளுக்கு இரையூட்டுவது அனைத்தும் தாயின் வேலை. கூட்டையும் குஞ்சுகளையும் பாதுகாப்பது தந்தையின் வேலை. உயரமான மரங்களின் உச்சியில், தரையிலிருந்து கிட்டத்தட்ட 15 மீ. உயரத்தில் குச்சிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட கிண்ணவடிவிலான கூட்டில் புற்கள் மற்றும் மென்மையான மரச்செதில்களைக் கொண்டு மெத்தென்று அமைத்து முட்டையிடும். பொதுவாக யூகலிப்டஸ் மரங்களில்தான் கூடு கட்டும் என்றாலும் விதிவிலக்காக சில மேக்பைகள் பைன்எல்ம் போன்ற மரங்களிலும் கூடு கட்டுவதுண்டு. 

மேக்பையின் கூடு இருக்கும் அதே மரத்தில் வேறு சில சிறியபறவைகளும் கூடு கட்டுவதுண்டு.  இன்னும் சில பறவைகள் மேக்பையின் கூட்டுக்கடியில் பொந்து உருவாக்கி திருட்டுத்தனமாய் அதில் முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கும். எல்லாவற்றுக்கும் மேலான திருட்டுத்தனம்,  குயில் இனங்களிலேயே மிகப்பெரியதான Channel-billed Cuckoo எனப்படும் குயில் மேக்பையின் கூட்டில் முட்டையிடுவதுதான். மற்றக் குயில் குஞ்சுகளைப் போன்று முட்டையிலிருந்து பொறிந்தவுடனேயே மற்ற முட்டைகளை வெளித்தள்ளும் வழக்கம் இந்தக் குயில்குஞ்சுக்கு கிடையாது என்றாலும் மேக்பையின் சொந்தக் குஞ்சுகளுக்கான இரையையும் சேர்த்துப் பெற்றுஅவற்றை வீழ்த்தி தான் வளரக்கூடியது அக்குயிற்குஞ்சு.மேக்பை ஒரு ஈட்டுக்கு இரண்டு முதல் ஐந்து முட்டைகள் வரை இடும். முட்டைகள் பார்ப்பதற்கு வெளிர்நீல நிறத்திலோ பச்சைநிறத்திலோ இருக்கும். இருபது நாட்களுக்குப் பிறகு இறகு முளைக்காத கண்திறவாத குஞ்சுகள் வெளிவரும். குஞ்சுகளுக்கு தாய்ப்பறவை உணவூட்டிப் பராமரிக்கும். தாய்ப்பறவைக்கு தந்தைப் பறவை உணவூட்டும். ஆணும் பெண்ணும் இணைந்தே குஞ்சுகளை வளர்க்கும். சில இடங்களில் பல மேக்பைகள் குழுவாக இணைந்தும் குஞ்சுகளை வளர்ப்பதுண்டு.

மேக்பை குஞ்சுகள் கூட்டை விட்டு வெளியேறிய மூன்றாவது வாரத்திலிருந்து உணவைத் தேடியுண்ண கற்றுக்கொடுக்கப்படும். ஆறாவது மாதத்திலிருந்து குஞ்சுகள் தன்னிச்சையாய் செயல்படத்தொடங்கும். முழுவளர்ச்சி அடையும் வரை குஞ்சுகள் சாம்பல் நிறத்தில் காணப்படும். ஒரு வருடத்தில் முழுவளர்ச்சி அடைந்துவிடும். பல மேக்பை குஞ்சுகள் நன்கு வளர்ந்துவிட்ட நிலையிலும் தாய் தந்தையை இரையூட்டச்சொல்லி கெஞ்சல் பாட்டு பாடிக்கொண்டு பின்னாலேயே திரியும். தாயும் தந்தையும் அவற்றைப் பொருட்படுத்தினால்தானேவேறு வழியில்லாமல் முடிவில் தானே இரைதேடி உண்ணும்.


பூர்வகுடி மக்களின் கலாச்சார ஆன்மீக நம்பிக்கைகளில் மேக்பைக்கு முக்கிய இடமுண்டு. மேக்பையின் பாடலானது தீய சக்திகளை விரட்டுவதாகவும் பல நல்ல எண்ண அலைகளை உருவாக்குவதாகவும் அவர்கள் நம்புகிறார்கள். மேக்பை வெற்றியின் அடையாளம் என்பதும், தங்கள் வாழ்க்கையில் வெற்றியை வேண்டுபவர்கள் மேக்பையின் பாடலையும் அதனுள்ளிருக்கும் உற்சாக ஆற்றலையும் முழு சிரத்தையுடன் தியானித்தால் வெற்றி உறுதியென்பதும் அவர்களுடைய அசைக்கமுடியாத நம்பிக்கை.


வருடம் முழுவதும் யாருக்கும் எந்த தொல்லையும் தராமல் தன்பாட்டுக்கு பாடிக்கொண்டிருக்கும் மேக்பைகள் கூடு கட்டிக் குஞ்சு பொறிக்கும் ஆறு வார காலத்தில் முற்றிலும் மாறி மூர்க்கமாகிவிடும். தங்கள் எல்லைக்குள் வரும் எவரையும் தலை, கண், காது, முகம், கழுத்து போன்ற பகுதிகளில் பயங்கரமாய்த் தாக்கும். மேக்பையால் பாதிக்கப்பட்டு சில குழந்தைகள் கண்பார்வை இழந்துள்ளனர். பறவை கொத்தியதன் மூலம் டெட்டனஸ் கிருமித்தாக்குதலால் ஒரு சிறுவன் இறந்த சம்பவமும் உண்டு. மிதிவண்டி ஓட்டிகள் இந்த திடீர்ப் பறவைத் தாக்குதலால் நிலைகுலைந்து வாகனங்களில் அடிபட்டு உயிரிழப்பதும் நேர்வதுண்டு.


மேக்பைகள் தங்களுக்கு ஒருவரால் ஆபத்து என்று உணர்ந்தால் அவரை தங்கள் எல்லைப்பகுதியில் நுழைய விடாமல் கொத்தித் துரத்தும். குறிப்பிட்ட நேரத்தில் அவர் வருகை இருக்குமானால் அந்த நேரங்களில் எல்லாம் காத்திருந்து கொத்தும். மேக்பையின் நினைவாற்றல் அதிகம் என்பதால் வேறு வேறு உடைகளிலும் அவரை அடையாளம் கண்டுகொள்ளும். மிதிவண்டி ஓட்டிகள்தாம் பெரும் எதிரிகள். மேக்பையிடம் பெரும்பாலும் சிக்கிக்கொள்பவர்கள் மிதிவண்டியையும் மெதுஊர்தியையும் உபயோகிக்கும் மிதிவண்டி பயிற்சியாளர்களும், சிறுவர் சிறுமிகளும், தபால் ஊழியர்களும்தான்.


மேக்பை கூடு கட்டும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மேக்பை இருக்கும் பகுதிகளில் புழங்கும் அனைவரையும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கச்சொல்லி அரசு அறிவுறுத்துகிறது. அதற்காக பல முன்னேற்பாடுகளைப் பரிந்துரைக்கிறது. 
 
1. மேக்பையின் தாக்குதல் இருக்கும் இடங்களை மற்றவர்களும் அறியும் வகையில் அறிவிப்புப் பலகைகளை நிறுத்துங்கள்.


2. மேக்பை கூடு கட்டியிருக்கும் இடத்தைக் கூடுமானவரை தவிர்த்து மாற்றுவழியை உபயோகியுங்கள்.

3. மிதிவண்டியில் செல்பவர்கள் மேக்பையின் கூடு இருக்கும் இடத்துக்கு 100 மீட்டர் தூரத்துக்கு முன்பே மிதிவண்டியை விட்டு இறங்கிச் செல்வது நல்லது. நடந்து செல்பவர்கள் வேகமாக அதே சமயம் ஓடாமல் நடந்துசெல்லவேண்டும்.


4. நடக்கும்போது மேக்பை கண்ணில் தென்பட்டால் அதைப் பார்த்தபடியே நடந்து செல்வது, அது நம்மைத் தாக்கும் வாய்ப்பைக் குறைக்குமாம். மேக்பை நேரடியாக எவரையும்  தாக்குவது கிடையாது. பின்புறமாக அல்லது மேலிருந்து ஒரு ஏவுகணை போலப் பாய்ந்து தாக்கும். 

5. குளிர்கண்ணாடியை தலையின் பின்புறமாக அணிவதும், மேல்பக்கம் இரு கண்கள் வரையப்பட்ட பெரிய விளிம்புள்ள தொப்பியோ தலைக்கவசமோ அணிவதும், குடை பிடித்துச்செல்வதும் ஓரளவு பயனளிக்கும்.


6. கைதட்டுதல், குச்சிகளை எடுத்து ஆட்டுதல், பறவைக்கூட்டின் மேல் கல்லெறிதல், உரக்கக் கத்துதல் போன்று மேக்பையை அச்சுறுத்தும் எரிச்சலூட்டும் எந்த செயல்களையும் செய்யாதீர்கள். 


7. ஒரு சின்னக் கயிற்றின் நுனியில் சிறு கல்லைக் கட்டி தலைக்குமேலே ஹெலிகாப்டர் போல் சுழற்றிக்கொண்டு செல்வது ஓரளவு பயன் கொடுக்கும்.


8. மிதிவண்டி ஓட்டிகள் தங்கள் தலைக்கவசத்தின் மேல் குச்சிகள், வயர்களைச் செருகிவைத்திருப்பதன் மூலம் பறவையைக் குழப்பி அருகில் நெருங்கிவர முடியாமல் தவிர்க்கலாம்.


9. மேக்பைகளுக்கு உணவிட்டு அவற்றை நட்புடன் பழக்கப்படுத்திக்கொள்வது தாக்குதலை ஓரளவு குறைக்கலாம். எளிதில் பழக்கப்படுத்தப்படக்கூடிய பறவை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.


10. இறுதியாக…. இப்பறவையைப் புரிந்துகொள்ளுங்கள். குடும்பத்தின்மீது எந்த அளவுக்குப் பற்றும் பிணைப்பும் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு அதற்கு இடையூறு இல்லாத வகையில் நடந்துகொள்வதோடு அவற்றை நேசிக்கவும் பழகுங்கள்.


ஆஸ்திரேலிய மேக்பை பறவைகள் ஆஸ்திரேலிய வனப்பாதுகாப்பு சட்டத்தால் பாதுகாக்கப்படுவதால் கொல்வதோ முட்டைகளை அபகரிப்பதோ சட்டத்துக்குப் புறம்பானதாகும். தற்போதிருக்கும் வனப்பறவைகள் பாதுகாப்பு சட்டப்படி இவற்றை பிறநாடுகளில் அறிமுகப்படுத்துவது சாத்தியமில்லை. ஆனால் 1860 களில் நியூசிலாந்தில் பயிரழிக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்டன. இவற்றின் வளர்ச்சியால் அந்நாட்டின் சொந்தப்பறவைகள் சிலவற்றுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது. ஆனாலும் அங்கும் 1950 முதல் வனப்பறவைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இப்பறவைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அதே சமயம், சாலமன் தீவுகளிலும் இலங்கையிலும் இப்பறவைகளை அறிமுகப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தனவாம். அதனால் இப்பறவைகள் வாழ சாதகமான சூழல் இல்லாதபட்சத்தில் அவை வளர்வது கேள்விக்குறியே. 

********************
(படங்கள்: நன்றி இணையம்)


5 May 2014

வல்லமையின் கடித இலக்கியப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற என் கடிதம்
அன்புமகன் மணிமொழிக்கு,

அம்மா எழுதுகிறேன். நலமாக இருக்கிறாயா? நீ எப்போதும் குன்றாக உடல்நலத்தோடும் குறைவிலாத மகிழ்வோடும் வாழவேண்டும் என்பதுதான் பெற்றவர்களாகிய எங்கள் எண்ணமும் ஆசையும். மனத்தாங்கலுடன் ஊருக்குப் புறப்பட்டுச் சென்ற நீ இந்நேரம் வருத்தம் நீங்கி தெளிவடைந்திருப்பாய் என்றும் எப்போதும் போல் தொலைபேசியில் பேசுவாய் என்றும் நாங்கள் காத்திருந்தோம். ஆனால் கடந்த நான்கைந்து நாட்களாக உன்னிடமிருந்து அழைப்பு வரவேயில்லை. நாங்களாக அழைத்தபோதும் நீ வேலையாக இருப்பதாக உன் அறைத்தோழன்தான் பேசினான். உண்மையில் வேலையாகத்தான் இருக்கிறாயா? அல்லது மனவருத்தம் இன்னும் குறைந்தபாடில்லையா? என்ற கவலையோடு எங்கே உனக்கு உடல்நிலை சரியில்லையோ என்ற புதிய கவலையும் சேர்ந்துகொண்டது.

நடந்த விஷயத்தை எண்ணி இன்னும் நீ மருகிக்கொண்டிருக்கிறாயெனில் அதைப் போக்கித் தெளிவேற்படுத்தவேண்டியது பெற்றோரான எங்கள் கடமை. அதன்பொருட்டே இக்கடிதத்தை எழுதுகிறேன். நீ அமைதியான மனநிலையில் இருக்கும்போது இதைப் படிக்குமாறு வேண்டுகிறேன். நீ படித்தவன்; புத்திசாலி. நான் சொல்வதை நிதானமாக யோசித்துப் புரிந்துகொள்வாய் என்று நம்புகிறேன்.

நம் உறவினர்களும் நண்பர்களும் உன் அப்பாவைப் பார்த்து வியக்கும் ஒரு விஷயம்எப்படி ஒருவரால் என்றுமே கடன் வாங்காமல் இப்படியொரு நல்ல வாழ்க்கையை வாழமுடிகிறது என்பதுதான். உச்சபட்சமாய் கலங்கிய நெஞ்சத்துக்கு கடன்பட்டார் நெஞ்சம்போலஎன்றொரு உவமையைக் காட்டுவார் கம்பர். அப்படியொரு கலக்கத்தை இதுவரை உன் அப்பாவும் அனுபவித்ததில்லை. நம்மையும் அனுபவிக்க வைத்ததில்லை.

எனக்கும் உன் அப்பாவுக்கும் திருமணமானபோது வறுமைக் கோட்டுக்கும் கீழேதான் எங்கள் வாழ்க்கை இருந்தது. இப்போது உன் அப்பா மேலாளராய் பணிபுரியும் அதே நிறுவனத்தில்தான் ஒரு கடைநிலைத் தொழிலாளியாய் தன் வாழ்க்கையை ஆரம்பித்தார். ஆனால் தன் உழைப்பாலும் திறமையாலும் கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறி இன்று இந்த நிலையை அடைந்திருக்கிறார். ஆரம்பகாலத்தில் அவருக்குக் கிடைத்த சொற்ப வருமானத்திலும் திட்டமிட்ட வாழ்க்கையை வாழ்ந்தோம். நான் என்னுடைய ஓய்வுநேரங்களில் கைவினைப் பொருட்கள் செய்து விற்று முடிந்தவரை உன் அப்பாவுக்கு உதவினேன். எதிலும் சிக்கனத்தைக் கடைப்பிடித்தோம். அநாவசிய செலவுகளைத் தவிர்த்தோம். மருத்துவம், கல்வி, போன்ற அவசியத் தேவைகளுக்கு சேமித்துவைத்தோம். அதற்காக கஞ்சத்தனமாகவும் இல்லை. விருந்தோம்பல், உறவினர் திருமணம், சுற்றுலா போன்ற மகிழ்வான தருணங்களையும் தவறவிடவில்லை.

யாவும் நீ அறிந்ததுதான். அந்த சூழ்நிலையிலும் உன்னையும் உன் தங்கை மலர்விழியையும் நல்லபடியாகவே வளர்த்தோம். எங்களுக்கு சிரமந்தராமல் நீங்களும் நல்ல பிள்ளைகளாக வளர்ந்தீர்கள்; நீ மணிமொழிச்செல்வன் என்ற உன் பெயருக்கேற்ப மணிமணியாய் பேசுவாய்; அனைவரிடமும் அன்புடனும் மரியாதையுடனும் நடந்துகொண்டாய்; அரசுப்பள்ளியில் படித்தாலும் நன்கு படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல்மாணவனாய்த் தேறினான். சென்னையில் நல்ல கல்லூரியில் இடம் கிடைத்து எங்களை விட்டுப் பிரிந்து சென்றாய். வாழ்க்கைப்பாடத்தைக் கற்றுக்கொள்ள உனக்கு இதைவிடவும் நல்ல வாய்ப்பு அமையாது என்று எங்கள் மனத்தை திடப்படுத்திக்கொண்டு உன்னை விடுதிக்கு வழியனுப்பிவைத்தோம். கல்லூரியிலும் கருமமே கண்ணாக படித்து, நல்மாணாக்கனாய்த் தேறி மும்பையிலிருக்கும் பெரிய நிறுவனமொன்றில் நல்லதொரு உத்தியோகமும் பெற்றுக்கொண்டாய். அதன் பின்னணியிலான உன் கடுமையான உழைப்பை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம்.

நீ வேலையில் சேர்ந்து இந்த மாதத்துடன் ஒருவருடம் ஓடிவிட்டது. நினைத்துப்பார்க்கவே மலைப்பாக உள்ளது. நேற்றுதான் உன்னை முதன்முதலாகப் பள்ளியில் சேர்த்த நினைவு! நீயும் படித்துப் பட்டம் பெற்று நல்ல உத்தியோகமும் கிடைத்து ஒருவருடம் முடிந்துவிட்டது என்றால் நம்பத்தான் முடியவில்லை. இதோஇந்த வருடம் உன் தங்கையும் கல்லூரியில் காலடி எடுத்துவைத்துவிட்டாள்

வேலை கிடைத்தவுடன் அந்தப் பணத்தை என்ன செய்யப்போகிறாய் அண்ணா?” என்று மலர்விழி கேட்டாள். நீ உன் சம்பளப்பணத்தை முழுவதுமாய் அப்பாவிடம் தந்துவிடப்போவதாக சொன்னாய். அப்பா அதை மறுத்துவிட்டு அந்தப் பணத்தை உன் செலவுகளுக்காக பயன்படுத்திக்கொள்ளுமாறும் மீதத்தை உன் பெயரில் வங்கியில் சேமித்துவைக்கும்படியும் சொன்னதோடு அவரே அதற்கான முயற்சிகளையும் செய்து உன் பெயரில் வங்கிக்கணக்கைத் துவக்கியும் கொடுத்தார். மாதமொருமுறை ஊருக்கு வந்துபோகும் நீ ஒவ்வொருமுறையும் மனங்கொள்ளாத அன்புடனும் கைகொள்ளாத அன்பளிப்புகளுடனும் வருவதையே வழக்கமாக்கிக் கொண்டாய்.

நீ உன் முதல்மாத சம்பளத்தில் எனக்கு ஒரு பட்டுப்புடவையும் அப்பாவுக்கு ஒரு கைக்கடிகாரமும் மலர்விழிக்கு ஒரு மடிக்கணினியும் வாங்கித்தந்தாய். அவை ஒவ்வொன்றின் விலையும் மிகவும் அதிகம் என்றபோதும் உன் திருப்திக்காக நாங்கள் அவற்றை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டோம். அதன்பின் தொடர்ந்து உன் சம்பளப்பணத்திலிருந்து எங்களுக்கு, தங்கைக்கு, வீட்டுக்கு அது இது என்று எதையாவது வாங்கித் தந்துகொண்டேதான் இருக்கிறாய். ஒன்றிரண்டு முறை நானும் அப்பாவும் சூசகமாக உன்னிடம் சேமிப்புப் பற்றித் தெரிவித்தோம். நீ அதைப் புரிந்துகொண்டாயா என்று தெரியவில்லை. புரிந்திருந்தால் நீ தேவையற்றப் பொருட்களில் பணத்தைப் போடுவதை நிச்சயம் தவிர்த்திருப்பாய்.

சென்றவாரம் வந்தபோது அதிநவீன கைபேசிகளை ஆளுக்கொன்றாய் வாங்கிவந்திருந்தாய். அதன் விலை என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால் சாதாரண கைபேசியைவிடவும் அதிகமாக இருக்குமென்று தெரியும். அது எங்களுக்குத் தேவைதானா? யோசித்துப் பார்கைபேசியின் முக்கியப் பயன் தொலைவில் உள்ளவர்களோடு தகவல் தொடர்பை பரிமாறிக் கொள்வதுதான். அதற்கு இப்போதிருக்கும் சாதாரண கைபேசியே போதுமானது அல்லவா?

நீ உன் அப்பாவிடம் அந்த கைபேசியைக் கொடுத்தபோது, “எதற்கு இந்த அநாவசியச் செலவு? இனி இதுபோல் தேவையின்றி செலவழிக்காதேஎன்றார். நீ முகம் சுருங்கிப் போனாய். எதுவும் சொல்லாமல் அறைக்குள் சென்று முடங்கிக்கொண்டாய். அதன்பின் நீ எங்களுடன் சரியாகப் பேசவே இல்லை. அண்ணன் எப்போது வருவான் என்று ஆசையாய்க் காத்திருந்த உன் தங்கை மலர்விழியிடம்கூட முகம் கொடுத்துப் பேசவில்லை. சரியாக சாப்பிடவும் இல்லை. நானும் உன் மனநிலை சற்று மாறியதும் உன்னுடன் பேசி தெளிவுபடுத்தலாம் என்று காத்திருந்தேன். நான்குநாட்கள் தங்குவதாகச் சொல்லி வந்திருந்த நீ வேலை இருக்கிறது என்றுசொல்லி மறுநாளே மும்பை கிளம்பிச்சென்றுவிட்டாய்.

மனவருத்தத்துடன்தான் நீ ஊருக்குச் செல்கிறாய் என்று தெரிந்தாலும் நான் தடுக்கவில்லை. நிதானமாக யோசித்தால் நீயே புரிந்துகொள்வாய் என்று விட்டுவிட்டேன். ஆனால் உன் எண்ணத்தில் சிறிதும் மாற்றமில்லை என்று தெரியவரும்போது வருத்தமாய் உள்ளது. பிள்ளைகள் தவறு செய்யும்போது திருத்துவது பெற்றவர் கடமை அல்லவா? மன்னனுக்கே இது பொருந்தும்போதுமகனுக்குப் பொருந்தாதா?

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும் - குறளின் விளக்கம் நீ அறியாததா? 

உழைப்பு, சிக்கனம், சேமிப்பு இவற்றின் மூலமே சீரான, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழமுடியும் என்று வாழ்ந்துகாட்டிக்கொண்டிருப்பவர் உன் அப்பா. ஆரம்பநாட்கள் முதலே அதற்குத் உறுதுணையாயிருந்தவர்கள் நானும் எங்கள் பிள்ளைகளாகிய நீங்களும். ஆம். சிறுகுழந்தையிலிருந்தே பார்க்கும் எதற்கும் ஆசைப்படாதவர்கள் நீங்கள். அதுவேண்டும் இதுவேண்டும் என்று நச்சரிக்காதவர்கள். ஒரு பொருளைக் கேட்டு அது கிடைக்காவிடில் அதற்காக பிடிவாதம் பிடிக்காதவர்கள். மொத்தத்தில் குடும்பத்தின் நிலையை உணர்ந்து பொறுப்புடன் செயல்பட்டவர்கள். முக்கியமாய் நீ!

உனக்கு நினைவிருக்கிறதா? உனக்கு பத்துவயதாயிருக்கும்போது ஒருமுறை திருவிழாவுக்குச் சென்றிருந்தோம். உன் தங்கை ஊதல் வேண்டுமென்று கேட்டாள். அப்பா வாங்கித்தர முன்வந்தபோது நீ சொன்னாய், “ஏன் அப்பா ஊதலுக்கு செலவு செய்கிறீர்கள்? நம் வீட்டு பூவரசு இலையில் நான் அவளுக்கு பீப்பீசெய்து தருகிறேன்என்று சொன்னதோடு, வீட்டுக்கு வந்தவுடனேயே விதவிதமான ஒலியெழுப்பும் ஏராளமான பீப்பீக்களைச் செய்துகொடுத்து அவளை மகிழ்வித்தாய். நானும் உன் அப்பாவும் உன் செயலை எண்ணி வியப்பும் பெருமையும் அடைந்தோம்.

இரண்டு வீடு தள்ளியிருக்கும் கடையில் தேங்காய் வாங்கிவரச்சொன்னால் இரண்டுதெரு தள்ளியிருக்கும் கடைக்குச் சென்று வாங்கிவருவாய். கேட்டால் இந்தக் கடையைவிடவும் அந்தக்கடையில் விலை மலிவு. பொருளும் தரமாக இருக்கும் என்பாய். பன்னிரண்டு வயதில் உனக்கிருந்த பொறுப்பை எண்ணி வியந்தேன்.

சிறுவயதில் அவ்வளவு பொறுப்புடன் இருந்த நீ இப்போது முறையற்ற செலவுகளை செய்வதைப் பார்த்து இப்போதும் வியக்கிறேன். நீ இப்போதுதான் வாழ்க்கையைத் துவங்கியிருக்கிறாய். இனி திருமணம், குடும்பம், குழந்தைகள் என்று பொறுப்புகள் அதிகரிக்கும். செலவுகளும் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகள் எவ்வளவோ ஏற்படலாம். எதிர்காலத்தை எப்போதும் மனத்தில் வைத்து நிகழ்காலத்தில் செயல்படுவதே புத்திசாலித்தனம்.

வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும் - அல்லவா?

எங்களை வசதியாக வாழவைக்கவேண்டுமென்பதுதான் உன் ஆசையென்று அடிக்கடி சொல்வாய். வளர்ந்து பெரியவர்களானதும் பெற்றவர்களைத் திரும்பியும் பார்க்காத பிள்ளைகளுக்கு மத்தியில் இப்படியொரு அற்புதமான பிள்ளையைப் பெற்றதற்காக ஈன்ற பொழுதினும் நாங்கள் பெரிதும் மகிழ்கிறோம். இந்த அன்பு ஒன்றே போதும். வசதியான வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தந்துவிட்டாய். இனி ஏதேனும் வாங்குவாயானால் அது ஆடம்பரம்தான். அது நமக்குத் தேவையில்லாத ஒன்று. இனியாவது உன் சேமிப்பில் கவனம் செலுத்து. எந்தவொரு பொருளையும் வாங்குவதற்கு முன் அது நமக்கு அவசியம் தேவைதானா என்று ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து வாங்கு.

சிக்கனமும் சேமிப்பும் பணத்தில் மட்டுமன்றுதண்ணீர், மின்சாரம், எரிபொருள் என்று நமக்கு அத்தியாவசியத் தேவையான எல்லாவற்றிலும் சிக்கனத்தைக் கடைப்பிடித்தால் பின்னாளில் கையைப் பிசைந்துகொண்டு கலங்கிநிற்கவேண்டிய அவசியம் ஏற்படாது.

வருமுன் காப்பவன்தானே அறிவாளி?
வந்தபின் தவிப்பவன் ஏமாளியல்லவா?

நீ அறிவாளியாக இருக்கவிரும்புகிறாயா? ஏமாளியாகப் போகிறாயா? அப்பாவின் சொற்ப வருவாயில் நாம் சந்தோஷமாக வாழ்ந்த காலங்களை நினைத்துப்பார். இப்போது நீ கைநிறைய சம்பாதிக்கிறாய்ஆனால் உன் எதிர்காலத்தைக் குறித்து எங்களை கவலையுறச் செய்திருக்கிறாய்மகனே மணிமொழி! இதுவா நீ எங்களை மகிழ்வாய் வைத்திருக்கச் செய்யும் முயற்சி? நிதானமாக யோசித்துப்பாரப்பா! அடுத்தமுறை நீ நம் வீட்டிற்கு வரும்போது பை நிறைய பரிசுப்பொருள் வேண்டாம். மனம் நிறைக்கும் அன்பை மட்டுமே அள்ளிக்கொண்டுவா! நம் குடும்பத்துடன் குதூகலமாய் உன் விடுமுறை நாட்கள் கழியட்டும்! எங்களுக்கு உண்மையான மகிழ்ச்சி அதுதான் என்பதை உணர்ந்துகொள்!

உன் உடல்நிலையைக் கவனித்துக்கொள். உடல்நிலை சரியில்லையெனில் அலட்சியமாய் இருக்காதே. உடனே மருத்துவரிடம் காட்டு. ஏதேனும் தேவையெனில் எனக்குத் தெரிவி. உன் அறைத்தோழர்களைக் கேட்டதாகச் சொல். நாங்கள் அனைவரும் உன் அடுத்த வருகையை ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறோம்.

என்றும் அன்புடன்,

உன் அம்மா.

*********************************வல்லமை இணைய இதழில் 
'அன்புள்ள மணிமொழிக்கு' 
என்ற தலைப்பில் நடைபெற்ற கடித இலக்கியப் போட்டியில் 
என்னுடைய இக்கடிதத்துக்கு ஆறுதல் பரிசு என்பதில் 
அளவிலாத மகிழ்ச்சி. 
போட்டியைத் திறம்பட நடத்திய 
வல்லமை இணைய இதழ் குழுவினருக்கும், 
போட்டியை அறிவித்த தேமொழி அவர்களுக்கும்,
நடுவர் இசைக்கவி திரு.ரமணன் அவர்களுக்கும் 
மனமார்ந்த நன்றிகள்.
*****************************
(படங்கள்: நன்றி இணையம்)