5 May 2014

வல்லமையின் கடித இலக்கியப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற என் கடிதம்




அன்புமகன் மணிமொழிக்கு,

அம்மா எழுதுகிறேன். நலமாக இருக்கிறாயா? நீ எப்போதும் குன்றாக உடல்நலத்தோடும் குறைவிலாத மகிழ்வோடும் வாழவேண்டும் என்பதுதான் பெற்றவர்களாகிய எங்கள் எண்ணமும் ஆசையும். மனத்தாங்கலுடன் ஊருக்குப் புறப்பட்டுச் சென்ற நீ இந்நேரம் வருத்தம் நீங்கி தெளிவடைந்திருப்பாய் என்றும் எப்போதும் போல் தொலைபேசியில் பேசுவாய் என்றும் நாங்கள் காத்திருந்தோம். ஆனால் கடந்த நான்கைந்து நாட்களாக உன்னிடமிருந்து அழைப்பு வரவேயில்லை. நாங்களாக அழைத்தபோதும் நீ வேலையாக இருப்பதாக உன் அறைத்தோழன்தான் பேசினான். உண்மையில் வேலையாகத்தான் இருக்கிறாயா? அல்லது மனவருத்தம் இன்னும் குறைந்தபாடில்லையா? என்ற கவலையோடு எங்கே உனக்கு உடல்நிலை சரியில்லையோ என்ற புதிய கவலையும் சேர்ந்துகொண்டது.

நடந்த விஷயத்தை எண்ணி இன்னும் நீ மருகிக்கொண்டிருக்கிறாயெனில் அதைப் போக்கித் தெளிவேற்படுத்தவேண்டியது பெற்றோரான எங்கள் கடமை. அதன்பொருட்டே இக்கடிதத்தை எழுதுகிறேன். நீ அமைதியான மனநிலையில் இருக்கும்போது இதைப் படிக்குமாறு வேண்டுகிறேன். நீ படித்தவன்; புத்திசாலி. நான் சொல்வதை நிதானமாக யோசித்துப் புரிந்துகொள்வாய் என்று நம்புகிறேன்.

நம் உறவினர்களும் நண்பர்களும் உன் அப்பாவைப் பார்த்து வியக்கும் ஒரு விஷயம்எப்படி ஒருவரால் என்றுமே கடன் வாங்காமல் இப்படியொரு நல்ல வாழ்க்கையை வாழமுடிகிறது என்பதுதான். உச்சபட்சமாய் கலங்கிய நெஞ்சத்துக்கு கடன்பட்டார் நெஞ்சம்போலஎன்றொரு உவமையைக் காட்டுவார் கம்பர். அப்படியொரு கலக்கத்தை இதுவரை உன் அப்பாவும் அனுபவித்ததில்லை. நம்மையும் அனுபவிக்க வைத்ததில்லை.

எனக்கும் உன் அப்பாவுக்கும் திருமணமானபோது வறுமைக் கோட்டுக்கும் கீழேதான் எங்கள் வாழ்க்கை இருந்தது. இப்போது உன் அப்பா மேலாளராய் பணிபுரியும் அதே நிறுவனத்தில்தான் ஒரு கடைநிலைத் தொழிலாளியாய் தன் வாழ்க்கையை ஆரம்பித்தார். ஆனால் தன் உழைப்பாலும் திறமையாலும் கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறி இன்று இந்த நிலையை அடைந்திருக்கிறார். ஆரம்பகாலத்தில் அவருக்குக் கிடைத்த சொற்ப வருமானத்திலும் திட்டமிட்ட வாழ்க்கையை வாழ்ந்தோம். நான் என்னுடைய ஓய்வுநேரங்களில் கைவினைப் பொருட்கள் செய்து விற்று முடிந்தவரை உன் அப்பாவுக்கு உதவினேன். எதிலும் சிக்கனத்தைக் கடைப்பிடித்தோம். அநாவசிய செலவுகளைத் தவிர்த்தோம். மருத்துவம், கல்வி, போன்ற அவசியத் தேவைகளுக்கு சேமித்துவைத்தோம். அதற்காக கஞ்சத்தனமாகவும் இல்லை. விருந்தோம்பல், உறவினர் திருமணம், சுற்றுலா போன்ற மகிழ்வான தருணங்களையும் தவறவிடவில்லை.

யாவும் நீ அறிந்ததுதான். அந்த சூழ்நிலையிலும் உன்னையும் உன் தங்கை மலர்விழியையும் நல்லபடியாகவே வளர்த்தோம். எங்களுக்கு சிரமந்தராமல் நீங்களும் நல்ல பிள்ளைகளாக வளர்ந்தீர்கள்; நீ மணிமொழிச்செல்வன் என்ற உன் பெயருக்கேற்ப மணிமணியாய் பேசுவாய்; அனைவரிடமும் அன்புடனும் மரியாதையுடனும் நடந்துகொண்டாய்; அரசுப்பள்ளியில் படித்தாலும் நன்கு படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல்மாணவனாய்த் தேறினான். சென்னையில் நல்ல கல்லூரியில் இடம் கிடைத்து எங்களை விட்டுப் பிரிந்து சென்றாய். வாழ்க்கைப்பாடத்தைக் கற்றுக்கொள்ள உனக்கு இதைவிடவும் நல்ல வாய்ப்பு அமையாது என்று எங்கள் மனத்தை திடப்படுத்திக்கொண்டு உன்னை விடுதிக்கு வழியனுப்பிவைத்தோம். கல்லூரியிலும் கருமமே கண்ணாக படித்து, நல்மாணாக்கனாய்த் தேறி மும்பையிலிருக்கும் பெரிய நிறுவனமொன்றில் நல்லதொரு உத்தியோகமும் பெற்றுக்கொண்டாய். அதன் பின்னணியிலான உன் கடுமையான உழைப்பை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம்.

நீ வேலையில் சேர்ந்து இந்த மாதத்துடன் ஒருவருடம் ஓடிவிட்டது. நினைத்துப்பார்க்கவே மலைப்பாக உள்ளது. நேற்றுதான் உன்னை முதன்முதலாகப் பள்ளியில் சேர்த்த நினைவு! நீயும் படித்துப் பட்டம் பெற்று நல்ல உத்தியோகமும் கிடைத்து ஒருவருடம் முடிந்துவிட்டது என்றால் நம்பத்தான் முடியவில்லை. இதோஇந்த வருடம் உன் தங்கையும் கல்லூரியில் காலடி எடுத்துவைத்துவிட்டாள்

வேலை கிடைத்தவுடன் அந்தப் பணத்தை என்ன செய்யப்போகிறாய் அண்ணா?” என்று மலர்விழி கேட்டாள். நீ உன் சம்பளப்பணத்தை முழுவதுமாய் அப்பாவிடம் தந்துவிடப்போவதாக சொன்னாய். அப்பா அதை மறுத்துவிட்டு அந்தப் பணத்தை உன் செலவுகளுக்காக பயன்படுத்திக்கொள்ளுமாறும் மீதத்தை உன் பெயரில் வங்கியில் சேமித்துவைக்கும்படியும் சொன்னதோடு அவரே அதற்கான முயற்சிகளையும் செய்து உன் பெயரில் வங்கிக்கணக்கைத் துவக்கியும் கொடுத்தார். மாதமொருமுறை ஊருக்கு வந்துபோகும் நீ ஒவ்வொருமுறையும் மனங்கொள்ளாத அன்புடனும் கைகொள்ளாத அன்பளிப்புகளுடனும் வருவதையே வழக்கமாக்கிக் கொண்டாய்.

நீ உன் முதல்மாத சம்பளத்தில் எனக்கு ஒரு பட்டுப்புடவையும் அப்பாவுக்கு ஒரு கைக்கடிகாரமும் மலர்விழிக்கு ஒரு மடிக்கணினியும் வாங்கித்தந்தாய். அவை ஒவ்வொன்றின் விலையும் மிகவும் அதிகம் என்றபோதும் உன் திருப்திக்காக நாங்கள் அவற்றை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டோம். அதன்பின் தொடர்ந்து உன் சம்பளப்பணத்திலிருந்து எங்களுக்கு, தங்கைக்கு, வீட்டுக்கு அது இது என்று எதையாவது வாங்கித் தந்துகொண்டேதான் இருக்கிறாய். ஒன்றிரண்டு முறை நானும் அப்பாவும் சூசகமாக உன்னிடம் சேமிப்புப் பற்றித் தெரிவித்தோம். நீ அதைப் புரிந்துகொண்டாயா என்று தெரியவில்லை. புரிந்திருந்தால் நீ தேவையற்றப் பொருட்களில் பணத்தைப் போடுவதை நிச்சயம் தவிர்த்திருப்பாய்.

சென்றவாரம் வந்தபோது அதிநவீன கைபேசிகளை ஆளுக்கொன்றாய் வாங்கிவந்திருந்தாய். அதன் விலை என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால் சாதாரண கைபேசியைவிடவும் அதிகமாக இருக்குமென்று தெரியும். அது எங்களுக்குத் தேவைதானா? யோசித்துப் பார்கைபேசியின் முக்கியப் பயன் தொலைவில் உள்ளவர்களோடு தகவல் தொடர்பை பரிமாறிக் கொள்வதுதான். அதற்கு இப்போதிருக்கும் சாதாரண கைபேசியே போதுமானது அல்லவா?

நீ உன் அப்பாவிடம் அந்த கைபேசியைக் கொடுத்தபோது, “எதற்கு இந்த அநாவசியச் செலவு? இனி இதுபோல் தேவையின்றி செலவழிக்காதேஎன்றார். நீ முகம் சுருங்கிப் போனாய். எதுவும் சொல்லாமல் அறைக்குள் சென்று முடங்கிக்கொண்டாய். அதன்பின் நீ எங்களுடன் சரியாகப் பேசவே இல்லை. அண்ணன் எப்போது வருவான் என்று ஆசையாய்க் காத்திருந்த உன் தங்கை மலர்விழியிடம்கூட முகம் கொடுத்துப் பேசவில்லை. சரியாக சாப்பிடவும் இல்லை. நானும் உன் மனநிலை சற்று மாறியதும் உன்னுடன் பேசி தெளிவுபடுத்தலாம் என்று காத்திருந்தேன். நான்குநாட்கள் தங்குவதாகச் சொல்லி வந்திருந்த நீ வேலை இருக்கிறது என்றுசொல்லி மறுநாளே மும்பை கிளம்பிச்சென்றுவிட்டாய்.

மனவருத்தத்துடன்தான் நீ ஊருக்குச் செல்கிறாய் என்று தெரிந்தாலும் நான் தடுக்கவில்லை. நிதானமாக யோசித்தால் நீயே புரிந்துகொள்வாய் என்று விட்டுவிட்டேன். ஆனால் உன் எண்ணத்தில் சிறிதும் மாற்றமில்லை என்று தெரியவரும்போது வருத்தமாய் உள்ளது. பிள்ளைகள் தவறு செய்யும்போது திருத்துவது பெற்றவர் கடமை அல்லவா? மன்னனுக்கே இது பொருந்தும்போதுமகனுக்குப் பொருந்தாதா?

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும் - குறளின் விளக்கம் நீ அறியாததா? 

உழைப்பு, சிக்கனம், சேமிப்பு இவற்றின் மூலமே சீரான, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழமுடியும் என்று வாழ்ந்துகாட்டிக்கொண்டிருப்பவர் உன் அப்பா. ஆரம்பநாட்கள் முதலே அதற்குத் உறுதுணையாயிருந்தவர்கள் நானும் எங்கள் பிள்ளைகளாகிய நீங்களும். ஆம். சிறுகுழந்தையிலிருந்தே பார்க்கும் எதற்கும் ஆசைப்படாதவர்கள் நீங்கள். அதுவேண்டும் இதுவேண்டும் என்று நச்சரிக்காதவர்கள். ஒரு பொருளைக் கேட்டு அது கிடைக்காவிடில் அதற்காக பிடிவாதம் பிடிக்காதவர்கள். மொத்தத்தில் குடும்பத்தின் நிலையை உணர்ந்து பொறுப்புடன் செயல்பட்டவர்கள். முக்கியமாய் நீ!

உனக்கு நினைவிருக்கிறதா? உனக்கு பத்துவயதாயிருக்கும்போது ஒருமுறை திருவிழாவுக்குச் சென்றிருந்தோம். உன் தங்கை ஊதல் வேண்டுமென்று கேட்டாள். அப்பா வாங்கித்தர முன்வந்தபோது நீ சொன்னாய், “ஏன் அப்பா ஊதலுக்கு செலவு செய்கிறீர்கள்? நம் வீட்டு பூவரசு இலையில் நான் அவளுக்கு பீப்பீசெய்து தருகிறேன்என்று சொன்னதோடு, வீட்டுக்கு வந்தவுடனேயே விதவிதமான ஒலியெழுப்பும் ஏராளமான பீப்பீக்களைச் செய்துகொடுத்து அவளை மகிழ்வித்தாய். நானும் உன் அப்பாவும் உன் செயலை எண்ணி வியப்பும் பெருமையும் அடைந்தோம்.

இரண்டு வீடு தள்ளியிருக்கும் கடையில் தேங்காய் வாங்கிவரச்சொன்னால் இரண்டுதெரு தள்ளியிருக்கும் கடைக்குச் சென்று வாங்கிவருவாய். கேட்டால் இந்தக் கடையைவிடவும் அந்தக்கடையில் விலை மலிவு. பொருளும் தரமாக இருக்கும் என்பாய். பன்னிரண்டு வயதில் உனக்கிருந்த பொறுப்பை எண்ணி வியந்தேன்.

சிறுவயதில் அவ்வளவு பொறுப்புடன் இருந்த நீ இப்போது முறையற்ற செலவுகளை செய்வதைப் பார்த்து இப்போதும் வியக்கிறேன். நீ இப்போதுதான் வாழ்க்கையைத் துவங்கியிருக்கிறாய். இனி திருமணம், குடும்பம், குழந்தைகள் என்று பொறுப்புகள் அதிகரிக்கும். செலவுகளும் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகள் எவ்வளவோ ஏற்படலாம். எதிர்காலத்தை எப்போதும் மனத்தில் வைத்து நிகழ்காலத்தில் செயல்படுவதே புத்திசாலித்தனம்.

வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும் - அல்லவா?

எங்களை வசதியாக வாழவைக்கவேண்டுமென்பதுதான் உன் ஆசையென்று அடிக்கடி சொல்வாய். வளர்ந்து பெரியவர்களானதும் பெற்றவர்களைத் திரும்பியும் பார்க்காத பிள்ளைகளுக்கு மத்தியில் இப்படியொரு அற்புதமான பிள்ளையைப் பெற்றதற்காக ஈன்ற பொழுதினும் நாங்கள் பெரிதும் மகிழ்கிறோம். இந்த அன்பு ஒன்றே போதும். வசதியான வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை வாங்கித் தந்துவிட்டாய். இனி ஏதேனும் வாங்குவாயானால் அது ஆடம்பரம்தான். அது நமக்குத் தேவையில்லாத ஒன்று. இனியாவது உன் சேமிப்பில் கவனம் செலுத்து. எந்தவொரு பொருளையும் வாங்குவதற்கு முன் அது நமக்கு அவசியம் தேவைதானா என்று ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து வாங்கு.

சிக்கனமும் சேமிப்பும் பணத்தில் மட்டுமன்றுதண்ணீர், மின்சாரம், எரிபொருள் என்று நமக்கு அத்தியாவசியத் தேவையான எல்லாவற்றிலும் சிக்கனத்தைக் கடைப்பிடித்தால் பின்னாளில் கையைப் பிசைந்துகொண்டு கலங்கிநிற்கவேண்டிய அவசியம் ஏற்படாது.

வருமுன் காப்பவன்தானே அறிவாளி?
வந்தபின் தவிப்பவன் ஏமாளியல்லவா?

நீ அறிவாளியாக இருக்கவிரும்புகிறாயா? ஏமாளியாகப் போகிறாயா? அப்பாவின் சொற்ப வருவாயில் நாம் சந்தோஷமாக வாழ்ந்த காலங்களை நினைத்துப்பார். இப்போது நீ கைநிறைய சம்பாதிக்கிறாய்ஆனால் உன் எதிர்காலத்தைக் குறித்து எங்களை கவலையுறச் செய்திருக்கிறாய்மகனே மணிமொழி! இதுவா நீ எங்களை மகிழ்வாய் வைத்திருக்கச் செய்யும் முயற்சி? நிதானமாக யோசித்துப்பாரப்பா! அடுத்தமுறை நீ நம் வீட்டிற்கு வரும்போது பை நிறைய பரிசுப்பொருள் வேண்டாம். மனம் நிறைக்கும் அன்பை மட்டுமே அள்ளிக்கொண்டுவா! நம் குடும்பத்துடன் குதூகலமாய் உன் விடுமுறை நாட்கள் கழியட்டும்! எங்களுக்கு உண்மையான மகிழ்ச்சி அதுதான் என்பதை உணர்ந்துகொள்!

உன் உடல்நிலையைக் கவனித்துக்கொள். உடல்நிலை சரியில்லையெனில் அலட்சியமாய் இருக்காதே. உடனே மருத்துவரிடம் காட்டு. ஏதேனும் தேவையெனில் எனக்குத் தெரிவி. உன் அறைத்தோழர்களைக் கேட்டதாகச் சொல். நாங்கள் அனைவரும் உன் அடுத்த வருகையை ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறோம்.

என்றும் அன்புடன்,

உன் அம்மா.

*********************************



வல்லமை இணைய இதழில் 
'அன்புள்ள மணிமொழிக்கு' 
என்ற தலைப்பில் நடைபெற்ற கடித இலக்கியப் போட்டியில் 
என்னுடைய இக்கடிதத்துக்கு ஆறுதல் பரிசு என்பதில் 
அளவிலாத மகிழ்ச்சி. 
போட்டியைத் திறம்பட நடத்திய 
வல்லமை இணைய இதழ் குழுவினருக்கும், 
போட்டியை அறிவித்த தேமொழி அவர்களுக்கும்,
நடுவர் இசைக்கவி திரு.ரமணன் அவர்களுக்கும் 
மனமார்ந்த நன்றிகள்.




*****************************
(படங்கள்: நன்றி இணையம்)

41 comments:

  1. Anonymous5/5/14 16:49

    அன்பின் சகோதரி கடிதம் வாசித்தேன்.
    மிக நீண்டதாக இல்லையா!....
    என் கருத்தையே எழுதினேன் போட்டியென்று வேறு எழுதியருந்தீர்கள்...
    எப்படியானாலும் அறிவுரைக் கடிதம்
    இனிய வாழ்த்து.
    வேதா.இலங்காதிலகம்.

    ReplyDelete
  2. Anonymous5/5/14 16:50

    Enoya vaalththu.
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  3. அருமையான கடிதம். நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. அறிவுரைக் கடிதம், அனுபவக் கடிதமாகவும் மிளிர்ந்தது கீதாம்மா. என் வாழ்வில் நான் பெற்ற முக்கிய அறிவுரை கடன் வாங்காமல் வாழ்க்கை நடத்து என்பதுதான். அதை இன்றளவும் பின்பற்றி வருவதால் மகிழ்ச்சியாக இருக்கிறேன். வாழ்வியல் உதாரணமாக அப்பாவை எடுத்துக் காட்டி த்க்க உதாரணங்களுடன் சிக்கனத்தைப் போதித்த கடிதம் வெகு நன்று. நான் ஜட்ஜாயிருந்தால் முதல் பரிசே தந்திருப்பேன்.

    ReplyDelete
  5. வல்லமை இணைய இதழில் பரிசுபெற்றதற்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
  6. இந்தத்தங்களின் கட்டுரையை நிறுத்தி நிதானமாக வாசித்து மிகவும் ரஸித்தேன். இந்தக்கால இளைஞர்களுக்கு இது மிகவும் பயனுள்ள கட்டுரையே.

    என் மூத்தபிள்ளையை நினைத்துக்கொண்டேன். இதை நான் அவனுக்கு எழுதிய கடிதமாகவே உணர்ந்தேன்.

    வல்லமைப்போட்டியில் பரிசு வென்றதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். அன்புடன் VGK

    ReplyDelete
  7. நான் நடுவராக இருந்திருந்தால் இதற்கு முதல் பரிசே கொடத்திருப்பேன்!
    மிகவும் அருமையாக உள்ளது! வாழ்த்து! கீதா!

    ReplyDelete
  8. சிறப்பான கட்டுரைக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தோழி மென்மேலும்
    இது போன்ற பரிசுகளையும் பாராட்டுக்களும் வென்று வாருங்கள் .

    ReplyDelete
  9. பரிசுபெற தகுதியான கடிதமே... சில திருக்குறள் மற்றும் உவமைகளுடன் மகனுக்கு அறிவுறுத்தும் சிறந்த நல்லதொரு கடிதம். அனுபவமோ கற்பனையோ தொய்வில்லாமல் இருந்தது, உண்மையான அக்கறையுடன் இருந்ததும் சிறப்பு

    ReplyDelete
  10. Anonymous6/5/14 00:55

    Very nice.. every youngster needs to know the importance of savings.. real enjoyment of the life.

    ReplyDelete
  11. சிறப்பான கட்டுரை...

    வல்லமை இதழில் பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள்...

    ReplyDelete

  12. வணக்கம்!

    வல்லமை யோடு வடித்த மடல்படித்தேன்!
    நல்லினிமை நல்கும் நடை!

    தமிழ்மணம் 4

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  13. அன்பான ஒரு தாயின் அருமையான ஒரு கடிதம். புத்திசாலியாக இருந்தும், தாய்-தந்தை அன்பின் மிகுதியைத் தனது அன்பளிப்புகளால் காட்டுவதையும் தவிர்க்கக் கோரும் பொறுப்பான கடிதம். அழகான நடை. ஆறுதல் பரிசு என்பது இதன் தனித்தன்மைக்குக் குறைவே.பிற பரிசுபெற்ற கடிதங்களையும் படிக்க இணைப்புத்தந்ததற்கும் நன்றி சகோதரி.. இன்னும் இன்னும் நல்லவற்றை எழுதி இன்னும் இன்னும் பேரும் புகழும் பெற என் இனிய வாழ்த்துகள். தொடரட்டும் உங்கள் தமிழிலக்கியப் பயணம்.

    ReplyDelete
  14. முதலில் பரிசு வென்ற தங்களுக்கு வாழ்த்துக்கள் கீதமஞ்சரி. நமக்கு வந்த கடிதங்களை படிப்பதே ஓர் சுகானுபவம். என் அம்மா எனக்கு எழுதிய கடிதங்களை இன்னும் நான் பத்திரமாக வைத்துள்ளேன். தங்களது கடிதத்தைப் படித்ததும் என் மனதில் ஏற்பட்ட நெகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கண்டிப்பாக தங்களது இந்தக் கடிதத்தை தங்கள் மகனும் நிச்சயம் பாதுகாத்து வைப்பார் என்பதில் ஐயமில்லை. மொத்தத்தில் மிக அருமை. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள் கீதமஞ்சரி. தங்களுக்கு இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. அருமையான கடிதம். பரிசுபெற்றதற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  16. பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள். எழுத் எடுத்துக் கொண்ட பொருளும் அருமை. கடன் அன்பை முறிக்கும். கடன் வாங்கிப் பழகிவிட்டால் அதிலிருந்து வெளிவருவது கடினம்

    ReplyDelete
  17. நற்கருத்து சொல்லும் கடிதம். இப்போதெல்லாம் கடன் வாங்கித் தான் பலருடைய வாழ்க்கை ஓடுகிறது. படிக்கும்போதே படிப்பதற்கான கடன், பிறகு வீடு வாங்க கடன், வாகனம் வாங்க கடன் என்று எல்லாமே கடன் - வாழ்க்கையே கடனாக போய்விட்டது.

    பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  18. எதை வாங்குவது எதை விடுவது என அலம்ப வைக்கும் இன்றைய நுகர்வுகலாச்சார வாழ்க்கைக்கு உங்களின் கடிதம் அருமையான அறிவுரை !

    நேரமிருப்பின் நுகர்வோர் கலாச்சார கடன் கேடுகளை அலசும் என் பதிவை படித்துவிட்டு உங்களின் கருத்துகளை பதியுங்கள்

    " காசு... பணம்... துட்டு ! "
    http://saamaaniyan.blogspot.fr/2014/04/blog-post.html


    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    ReplyDelete
  19. பரிசுக்கு வாழ்த்துகள் தோழி!

    பிள்ளைகளை உட்கார வைத்து உலகியலை புரியவைப்பதே பெற்றோரின் தலையாய கடமை. அப்பா மேல் மனத்தாங்கல் என்றால் அம்மா தக்க விளக்கத்தோடு எடுத்து சொல்வது மிக அவசியம். பல நெருங்கிய உறவுகள் உட்கார்ந்து பேசாமலும் இருபக்கமும் சமாதானம் செய்ய யாருமில்லாமலும் பெரு விரிசல் ஆகிவிடுகின்றன. குழந்தைகளுக்கு முன்மாதிரியாய் வாழ்வதே பெற்றோருக்கும் சிறப்பு. 'நல்ல அம்மா'வின் எழுத்தில் அதே பிரதிபலிப்பு.

    ReplyDelete
  20. நல்லதொரு கடிதம். பரிசு கிடைத்துத்தான் இருக்க வேண்டும் இதற்கு, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. @kovaikkavi

    உடனடி வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழி. கடிதத்துக்கு அளவு வரைமுறை இல்லை என்பதால் மனம் போன போக்கில் கடிதம் நீண்டுவிட்டது. :)

    ReplyDelete
  22. @ராமலக்ஷ்மி

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

    ReplyDelete
  23. @பால கணேஷ்

    கடிதம் உங்களுக்குப் பிடித்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சி கணேஷ். முதல் மூன்று இடங்களைப் பெற்ற கடிதங்களும் பிரமாதமானவை. கிட்டத்தட்ட அறுபதுக்கும் மேற்பட்டக் கடிதங்களிலிருந்து பரிசுக்குரியவற்றைத் தேர்ந்தெடுப்பது எவ்வளவு சிரமம்.
    வருகைக்கும் அழகானக் கருத்துரைக்கும் மிகவும் நன்றி கணேஷ்.

    ReplyDelete
  24. @இராஜராஜேஸ்வரி

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி மேடம்.

    ReplyDelete
  25. @வை.கோபாலகிருஷ்ணன்

    இந்தக்கடிதம் தங்கள் மனத்துக்கு நெருக்கமாக இருப்பது அறிந்து மிகவும் மகிழ்ச்சி கோபு சார். தங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு மனம் கனிந்த நன்றி.

    ReplyDelete
  26. @புலவர் இராமாநுசம்

    முதல் மூன்று பரிசினைப் பெற்றக் கடிதங்கள் இதனினும் சளைத்தவையன்று. இன்னும் சிறப்பானவை. தங்கள் அன்புக்கும் பாராட்டுக்கும் அகமார்ந்த நன்றி தங்களுக்கு.

    ReplyDelete
  27. @அம்பாளடியாள் வலைத்தளம்

    வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் அன்பான நன்றி தோழி.

    ReplyDelete
  28. @முத்துசாமிப் பேரன்

    அனுபவம் கற்பனை இரண்டும் கலந்த கலவை அது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தங்களுக்கு.

    ReplyDelete
  29. @Anonymous

    Thank you very much for your valuable comment.

    ReplyDelete
  30. @திண்டுக்கல் தனபாலன்

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி தனபாலன்.

    ReplyDelete
  31. @கவிஞா் கி. பாரதிதாசன்

    அழகான பாவால் வாழ்த்தப்பெறும் பேறு பெற்றேன். மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  32. @நா.முத்துநிலவன்

    தங்கள் ஆழமானக் கருத்துரை கண்டு மகிழ்ந்தேன். வல்லமையிலும் தங்கள் பின்னூட்டம் கண்டேன். தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் அகமார்ந்த நன்றி ஐயா.

    ReplyDelete
  33. @புவனேஸ்வரி ராமநாதன்

    கடிதங்களை அழகாக நிதானமாக எழுதும் கலை இந்த அவசர யுகத்துக்கு சற்றும் பொருந்தாது என்றாலும் கடிதம் கொடுக்கும் மகிழ்வை ஒரு குறுஞ்செய்தியோ மின்னஞ்சலோ கொடுப்பதில்லை என்பது உண்மை. இளைய தலைமுறையினர் இழந்துவரும் அற்புதங்களுள் இதுவும் ஒன்று. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மேடம்.

    ReplyDelete
  34. @மாதேவி

    வருகைக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றி மாதேவி.

    ReplyDelete
  35. @வெங்கட் நாகராஜ்

    கடன் வாங்குவதிலும் நம்முடைய வரம்பை அறிந்துவாங்கினால் பயமில்லை. அது இல்லாதுபோகும்போது எவ்வளவு இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது.

    வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி வெங்கட்.

    ReplyDelete
  36. @சாமானியன்

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சாமானியன். தங்கள் கட்டுரை சிறப்பு. வாசித்துக் கருத்திட்டேன். பாராட்டுகள்.

    ReplyDelete
  37. @நிலாமகள்

    உங்களது இந்த அழகான பின்னூட்டத்தால் இப்பதிவும் அழகாகிறது நிலாமகள். மனமார்ந்த நன்றி தோழி.

    ReplyDelete
  38. @athira

    வருகைக்கும் ஊக்கம் தரும் கருத்துக்கும் மிக்க நன்றி அதிரா.

    ReplyDelete
  39. @G.M Balasubramaniam

    மிகச்சரியாக சொல்லியுள்ளீர்கள் ஐயா. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி தங்களுக்கு.

    ReplyDelete
  40. இன்றய தலைமுறைக்கு தேவையான அறிவுரை ...
    பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
  41. அம்மா தன் மகனுக்கு சிக்கனத்தையும், சேமிப்பையும் சொல்லித்தரும் அருமையான கடிதம்.
    இப்போது உள்ள பிள்ளைகளுக்கு பரிசு பொருட்கள் அன்பையும் ஆனந்ததையும் கொடுக்கும் என்று நினைக்கிறார்கள். ஆதரவாய் கைகளை பிடித்து அன்பாய் நாலுவார்த்தை பேசினாலே போதும் பெற்றோர்களிடம்.
    அகலக்கால் வைக்காமல், எல்லாவற்றிலும் நிதானமாய் இருப்பதையே பெற்றோர் விரும்புவார்கள் அதை அழகாய் எடுத்து சொல்கிறது கடிதம்.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.