3 June 2014

அவளுக்கும் ஒரு பெயருண்டு!




பட்டுத்தூளியிலிட்டு பாலாடையில் தேன்புகட்டி
அந்நாளில் அவளுக்கும் ஒரு பெயர் சூட்டப்பட்டிருக்கலாம்.
வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும்போதோ,
ரேசன் அட்டை புதுப்பிக்கப்படும்போதோ அன்றி
அவளுக்கென்று ஒரு பெயர் இருப்பது
அவள் நினைவுக்கு வருவதேயில்லை.

தங்கமே வைரமே பவுனே பச்சைக்கிளியே என்று
கொஞ்சுமொழிகளால் கொண்டாடப்பட்டும்
அம்மாடி, கண்ணு, செல்லம், பாப்பாவென்று
ஆசையாயும் அன்பாயும் அழைக்கப்பட்டும்
அடியேய் இவளே…. நாயே பேயே சனியனே என்று
பின்னாளில் பேரெரிச்சலுடன் விளிக்கப்பட்டும்
கடந்துபோன காலத்தின் எந்த முடுக்கிலும்  
தன்பெயர் புழங்கப்படாததில் பெருவருத்தமவளுக்கு.

பள்ளிக்குச் சென்று பழக்கப்படாவாழ்வில்
அவள் பெயர் தாங்கியதொரு அஞ்சலட்டைக்கும்
வழியற்றுப்போனவளின் அந்திமக்காலத்தில்
ஊசலாடிக்கொண்டிருக்கிறது உயிர்க்கூடு,
காலனேனும் அவளைப் பெயரிட்டு அழைக்க
காலத்தே வருவானாவென்ற ஏக்கத்தவிப்போடு!

******************
(12-3-14 வல்லமை இதழில் வெளியானது)
(படத்துக்கு நன்றி: இணையம்)

19 comments:

  1. மனசில் உட்கார்ந்தது கவிதை. சென்ற சில தலைமுறைகளில் பெண்கள் நிறையப் பேரின் ஏக்கம் இதுவாக இருந்திருக்க வேண்டும். அருமை..!

    ReplyDelete
  2. கணேஷை வழி மொழிகிறேன்! அருமை.

    ReplyDelete
  3. பெயரில்லாமலே மறைந்தாளோ . எத்தனை பெண்கள் இப்படி வாடினார்களோ. வாழ்வின் யதார்த்தம் இடிக்கிற்டஹு. நன்றி கீதமஞ்சரி.

    ReplyDelete
  4. Anonymous3/6/14 15:30

    ''..காலனேனும் அவளைப் பெயரிட்டு அழைக்க

    காலத்தே வருவானாவென்ற ஏக்கத்தவிப்போடு...'''
    Eniya vaalththu..
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
  5. /காலனேனும் அவளைப் பெயரிட்டு அழைக்க/ கற்பனை அருமை. ரசித்தேன்.

    ReplyDelete
  6. மனம் கவர்ந்த கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. //பள்ளிக்குச் சென்று பழக்கப்படாவாழ்வில் அவள் பெயர் தாங்கியதொரு அஞ்சலட்டைக்கும் வழியற்றுப்போனவளின் //

    இந்த இடத்தில் எனக்கு உச்சக்கட்ட வருத்தம் ஏற்பட்டது.

    ReplyDelete
  8. ஒவ்வொரு வரிகளிலும் உள்ள உண்மை சுட்டெரிக்கிறது. மனதைப் பிசைகிறது.

    இதுபோல வாழ்ந்து மாண்டவர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காமல் தான் இருந்துள்ளது என்பதும் நாம் மறுப்பதற்கு இல்லை.

    மனதைத்தொடும் அருமையான ஆக்கம். வல்லமையில் வெளிவந்தது மகிழ்ச்சியளிக்கிறது. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.

    பிரியமுள்ள கோபு

    ReplyDelete
  9. வணக்கம்
    மனதை திருடும் கவி அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
    கட்டுரைப்போட்டிக்கான பரிசுகள் அனுப்பட்டுள்ளது பதிவாக என்பக்கம் உள்ளது வாருங்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  10. மிகச்சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. படித்துக்கொண்டிருக்கும் போதே சிலிர்க்கத்தொடங்கி விட்டது.
    குறிஞ்சி மலர் போல் அரிதாகவும் அழகாகவும் இருக்கிறது உங்கள் எல்லா கவிதைகளும் ......

    ReplyDelete
  12. வணக்கம் சகோதரி
    அந்திமக் காலத்தில் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும் ஒரு உயிருக்கு இரங்கும் தங்களின் நல்ல குணம் கண்டு நெகிழ்ச்சியடைகிறேன் சகோதரி. தங்களுக்கே நன்றிகள். இன்னும் மோசமாக பெருசு என்று அழைக்கும் போது வேதனையாக தான் இருக்கிறது. பகிர்வுக்கு நன்றிகள் சகோதரி.

    ReplyDelete
  13. சமூக அவலத்தின் ஓலம் படித்து முடித்த பின்பும், காதில் ஒலிக்கிறது வாழ்த்துக்கள் சகோதரி.

    www.killergee.blogspot.com

    ReplyDelete
  14. @ பால கணேஷ்
    உண்மை. நானறிந்த சென்ற தலைமுறைப் பெண்களை மனத்தில் வைத்தே எழுதினேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கணேஷ்.

    @ ஸ்ரீராம்
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம்.

    @ வல்லிசிம்ஹன்
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

    @ Kovaikkavi
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழி.

    @ G.M.Balasubramaniam
    தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் மிக்க நன்றி ஐயா.

    @ முனைவர் இரா.குணசீலன்
    தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி முனைவரே.

    ReplyDelete
  15. @ Ramani S
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ரமணி சார்.

    @ வை.கோபாலகிருஷ்ணன்
    தங்கள் நெகிழ்வான கருத்துக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி கோபு சார்.

    @ ரூபன்
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரூபன். கட்டுரைப்போட்டிக்கான பரிசை அனுப்பியமைக்கு மிக்க நன்றி.

    @ ‘தளிர்’ சுரேஷ்
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

    @ Mythily Kasthuri rengan
    உங்கள் அழகான பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி. நன்றி மைதிலி.

    @ அ.பாண்டியன்
    மூத்த தலைமுறையினருக்கு உரிய மரியாதையை இளைய தலைமுறையினர் தருவதில்லை என்பது உண்மை. அந்த நிலைக்கு இடைப்பட்ட தலைமுறையும் காரணம் என்பதும் வருத்தம் தரும் உண்மை. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பாண்டியன்

    @ KILLERGEE Devakottai
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

    ReplyDelete
  16. அருமையானதோர் கவிதை. அக்கால பெண்கள் பலர் தனது கணவரால் ஒரு போதும் பெயர் சொல்லி அழைக்கப்பட்டதாக இல்லை! அவர்கள் அனைவரது ஏக்கமும் ஒரு சேர இம்மூதாட்டியின் முகத்தில் இருப்பதாய் தோன்றியது.

    பாராட்டுகள் சகோ.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துரையோடு பாராட்டுக்கும் மிக்க நன்றி வெங்கட்.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.