இன்று எங்கள் குடும்பத்தின் மூத்த உறுப்பினரும் நல்லாசானும் வழிகாட்டியுமான எங்கள் மாமனார் திரு.சொ.ஞானசம்பந்தன் அவர்களுடைய 90-ஆவது பிறந்தநாள். இறகுப்பேனா காலம் தொட்டு இன்றைய கணினிக்காலம் வரை எழுத்தோடு இணக்கமாயிருப்பவர். வாசிப்பின்றி நகராது அவரது நாள் ஒவ்வொன்றும். அவருக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்தினைத் தெரிவித்துக்கொள்வதோடு அவரைப்பற்றிய சிறப்பான தகவல்களை இங்கு அனைவரோடும் பகிர்வதில் பெருமை கொள்கிறேன்.
11-02-1926-ல் புதுச்சேரியின்
காரைக்காலில் பிறந்தவர். பிரெஞ்சு மொழிவழி மேனிலை வரை
பயின்று, அரசு தொடக்கப்பள்ளியில் பிரெஞ்சு
ஆசிரியராய்ப் பணியாற்றியவர். பணியாற்றும்போதே தமிழைக் கற்று, புலவர்
பட்டமும் பெற்று அரசு உயர்நிலைப்
பள்ளியில் தமிழாசிரியராகவும் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி
ஓய்வு பெற்றவர். புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளல்,
ஓய்வுக்குப் பிறகான உளச்சோர்வை விரட்டும்
உத்திகளுள் ஒன்று என்று அறிந்த
அவர், புதிதாய் இந்திமொழியைக் கற்றுத்தேர்ந்ததோடு சமஸ்கிருத மொழிபற்றிய அறிமுக வகுப்புகளுக்கும் ஆர்வமாய்
சென்றுவந்தார். தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு,
லத்தீன், இந்தி ஆகிய மொழிகளில்
தேர்ந்த ஞானம் கொண்ட அவர், தமிழைத் திருத்தமாக எழுதுவது
எப்படி?, லத்தீன் இலக்கிய வரலாறு, பிரெஞ்சு இலக்கிய வரலாறு, மாப்பசான்
சிறுகதைகள், சிங்க வேட்டை, மறைந்த
நாகரிகங்கள் என இதுவரை ஆறு நூல்களை எழுதியுள்ளார்.
எந்த ஒரு செயலையும் செய்வதற்குமுன்
நன்கு திட்டமிடலும் அதன் சாதக பாதகங்களை
ஆராய்ந்து தெளிதலும் அவசியம் என்பதை அறிவுறுத்தியவர்.
வரவுசெலவுகளைத் துல்லியமாய்க் கணக்கிட்டு வரவைக் கூட்டி செலவைக்
குறைக்கும் உத்தியைக் கற்றுத்தந்தவர். சேமிப்பும் சிக்கனமும் சில்லறைகளுக்கு மட்டுமல்ல.. மின்சாரம், தண்ணீர், காகிதம் என்று நாம்
புழங்கும் ஒவ்வொன்றுக்கும் தேவை என்பதை செயலால்
உணர்த்தியவர். விஷச்செடிகளான பார்த்தீனியத்தை அழிக்க சவக்கார நீர்
உதவும் என்று அறிந்த நாள்முதலாய்,
துணி ஊறவைத்த சோப்புநீரை வீணாக்காமல்
வாளியில் சுமந்துகொண்டுசென்று தெருவோரம் மண்டிக்கிடக்கும் பார்த்தீனியச்செடிகளின் மேல் ஊற்றிவருவார்.
குழந்தைகளோடு
விளையாடும்போது குழந்தையாகவே மாறிவிடுவார். பேரப்பிள்ளைகளுக்கு நிகராக… சொல்லப் போனால்
இன்னும் சிலபடிகள் இறங்கி விளையாடுவார். 1+1 எவ்வளவு
என்பாள் பேத்தி. 11 என்பார் தாத்தா. ஐயோ
தாத்தா உங்களுக்கு கணக்கே தெரியல.. இருங்க
நான் சொல்லித்தரேன் என்று கணக்கு சொல்லிக்கொடுப்பாள்.
பேரப்பிள்ளைகளிடத்தில் பயில்வதற்காகவே தன்னை ஏதுமறியாப் பேதையாக்கிக்
கொள்ளும் பெருமைமிகு தாத்தா அவர்.
நேற்று
என்ன குழம்பு என்று என்னைக்
கேட்டாலே பெரிதாய் யோசிப்பேன். ஆனால் பல வருடங்களுக்கு
முன் தன் பால்யத்தில் நிகழ்ந்தவற்றைக்கூடத்
துல்லியமாய் நினைவில் வைத்திருந்து குறிப்பிடும் எங்கள் மாமனாரின் நினைவாற்றலை
வியக்காமல் இருக்கமுடியவில்லை. எங்களோடு பகிர்ந்தவை யாவும் பாழாய்ப்போய்விடக்கூடாதே என்ற எண்ணத்தில்
அவருடைய சம்மதத்துடன் நானும் என் கணவரும் அவருக்கென ஒரு வலைப்பூவைத் துவக்கினோம்.
ஆரம்பத்தில் தாளில் அவர் எழுதித்தர
நான் தட்டச்சு செய்து பதிந்தேன். நாளடைவில்
தானே தட்டச்சு செய்து பதிவை வெளியிடக்
கற்றுக்கொண்டுவிட்டார். இப்போது வாரந்தவறினாலும் வலையில்
அவருடைய பதிவுகள் வரத்தவறுவதில்லை.
வியட்நாம்,
பிரான்ஸ் ஆகிய நாடுகளில் பணியாற்றிய
அனுபவங்கள், ஐரோப்பிய நாடுகளிலும் ஆஸ்திரேலியாவிலும் மேற்கொண்ட பயண அனுபவங்கள், அந்நாளைய
கப்பல் பயணம் முதல் மாட்டுவண்டிப்
பயணம் வரையிலான அனுபவங்கள், அந்தக்கால வாழ்க்கை முறை, அந்நாளைய விளையாட்டுகள்,
அந்நாளைய திருமண முறை, தேர்தல்
முறை, அந்நாளைய பழமொழிகள் இவை தவிர கதைகள்,
நகைச்சுவைப் பதிவுகள், தமிழ் இலக்கியப் பகிர்வுகள்,
ரசிக்கவைக்கும் பல சுவையான பிரஞ்சு
ஆக்கங்களின் தமிழ் மொழிபெயர்ப்புகள் என
பல்சுவைப் பதிவுகளால் நிரம்பியது இவரது தளமான இலக்கியச்சாரல்
எழுத்தயர்வு
எனக்கேற்படும்போதெல்லாம் மாமாவை எண்ணிக் கொள்வேன்.
இந்த வயதிலும் அவர்கள் எழுதுவதையும் வாசிப்பதையும்
தொய்வின்றித் தொடர்வதை நினைத்த மாத்திரத்திலேயே என்
சோர்வெலாம் சொல்லிக்கொள்ளாமல் ஓடிவிடும். நல்லாரோக்கியத்துடனும் நெஞ்சம்நிறை மகிழ்வுடனும் அவர் இன்னும் பலகாலம்
நம்மோடு இனிதே வாழவேண்டும் என்ற
பேராவலோடு என் மனம்நிறைந்த பிறந்தநாள்
நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.




