 |
| 1. கற்பாலமும் அருவியும் |
மேஃபீல்ட் கார்டன் (Mayfield Garden) பற்றியும் அதன் பருவகால அழகு பற்றியும் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன். விளம்பரங்களிலும் பார்த்திருக்கிறேன். நியூ
சௌத் வேல்ஸ் மாநிலத்தில் சிட்னியிலிருந்து சுமார் 200 கி.மீ. மேற்கே உள்ளது
ஆஸ்திரேலியாவில் பிரசித்தமான மற்றும் பிரமாண்டமான தனியார் பூங்காவான மேஃபீல்ட்
கார்டன். ஆனால் அங்கே போவேன் என்று ஒருநாளும் நினைத்துப் பார்த்ததே இல்லை. யூகலிப்டஸ் மலைக்காடுகளுக்கு அப்பால் எங்கோ இருக்கும் தோட்டத்தைப் பார்க்க
மெனக்கெட்டுப் புறப்பட்டுப் போவதெல்லாம் அசாத்தியம் என்று நினைத்திருந்த
வேளையில்தான் எதிர்பாராதவிதமாக ஒரு வாய்ப்பு அமைந்தது.
 |
| 2. வாசனைத் தோட்டம் |
 |
| 3. வண்ண மலர்கள் |
2026-ஐ வரவேற்கும் முகமாகவும் மூன்றுநாள்
விடுமுறையைக் கழிக்க ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தேடியும் எங்கள் சாகசப் பயணத்தைத்
தொடங்கினோம். வீட்டுப் பறவைகளை வீட்டிலேயே விட்டுவிட்டு நானும் மகளும் மகளின் வளர்ப்பு நாய்களோடு எங்கள் சிறகுகளை விரித்தோம். மகளுடைய முதல் road trip. ப்ளூ
மவுண்டன்ஸ்தான் இலக்கு. நாங்கள் Airbnb-ல் வீடெடுத்துத் தங்கியிருந்ததோ ப்ளூ மவுண்டன்ஸ்க்கு மறுபக்கம் இருந்த மலைகளுள் ஒன்றில். அங்கிருந்து ப்ளூ மவுண்டன்ஸ் போய்வருவதே ஒரு பெரிய சாகசப் பயணம் போல் இருந்தது.
உயிரைப் பணயம் வைத்து நாங்கள் போய்வந்த அந்த சாகசப் பயணத்தைப் பற்றி இன்னொரு பதிவில்
எழுதுகிறேன்.
 |
| 4. ஆங்காங்கே சலசலக்கும் சின்னச் சின்ன அருவிகள் |
 |
| 5. நன்கு பராமரிக்கப்பட்டுவரும் தோட்டம் |
நாங்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து பத்தே
நிமிட தூரத்தில்தான் மேஃபீல்ட் கார்டன் இருக்கிறது என்று அறிந்தபோது எனக்குப் பெரும்
வியப்பு. நாய்களுக்கு அனுமதி உண்டு என்பதும் தெரியவர எங்களுடைய பயணத்திட்டத்தில்
மேஃபீல்ட் கார்டன் சட்டென்று இடம்பிடித்துவிட்டது.
 |
| 6. பெரிய நீர்த்தேக்கம் |
 |
| 7. இயற்கையும் செயற்கையும் இணைந்து... |
மேஃபீல்ட் கார்டனை
மாபெரும் பூங்கா என்பதா,
தோட்டம் என்பதா, சோலை என்பதா, பொழுதுபோக்கிடம் என்பதா, ஓய்விடம்
என்பதா தெரியவில்லை. எல்லாம் கலந்த கலவை என்றுதான் சொல்லவேண்டும். முழுவதையும்
சுற்றிப் பார்க்க ஒரு நாள் போதாது. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் ஒவ்வொரு
பருவகாலத்திலும் பூங்காவின் அழகைக் கண்ணுறும் ஆவலோடு மேஃபீல்ட் கார்டனுக்குப்
படையெடுத்துச் செல்கின்றனர். camping, திருமணங்கள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் போன்றவற்றுக்கு முன்பதிவு செய்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொள்ளலாம்.
.JPG) |
| 8. பக்கத்திலிருந்த மேய்ச்சல்வெளி |
 |
| 9. தடாகத்தில் கருப்பு அன்னமும் நாமக்கோழிகளும் |
வெட்டவெளியும்
வெறும் மேய்ச்சல் நிலமுமாகக் காணப்படும் மலைப்பாங்கான பகுதியில் பாலைவனச் சோலை போல
இப்படியொரு பூங்காவா என்று ஆச்சர்யமாக இருக்கும். அது உருவானதே தனிக்கதை.
 |
| 10. பெரிய குளத்தில் நீர்ப்பறவைகள் |
 |
| 11. குழந்தைகள் ஓடிவிளையாட பரந்த புல்வெளி |
1984-ஆம்
ஆண்டு ஹாக்கின்ஸ் குடும்பத்தார் ஒரு செம்மறிப் பண்ணை நிறுவுதற்பொருட்டு சுமார்
2,100 ஏக்கர் நிலப்பரப்பை வளைத்துப் போட்டபோது அந்த இடம் வெறும்
மேய்ச்சல் நிலமாகத்தான் இருந்தது. மெல்ல மெல்ல பண்ணை வளர்ந்து இன்று சுமார் 5,000
ஏக்கர் பரப்பளவை எட்டியுள்ளது. பண்ணை நிலத்தின் ஒரு சிறு பகுதி அதாவது 160 ஏக்கர்
நிலப்பகுதிதான் இன்று மேஃபீல்ட் கார்டன் என்னும் தனித்துவமான பூங்காவாக
உருவாகியுள்ளது. இல்லை, இல்லை, உருவாக்கப்பட்டுள்ளது.
 |
| 12. இடப்பக்க ஓரத்தில் தெரிவதுதான் ஹாக்கின்ஸ் குடும்பத்தினரின் வீடு |
 |
| 13. பஞ்சுப்பொதி போல் தொலைவில் மேயும் செம்மறிகள் |
கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணப்படும் மேய்ச்சல்
நிலத்தின் நடுவில் வீட்டைக் கட்டி, கால்நடைப் பண்ணையை நிர்வகித்து வாழவேண்டிய வறட்டு வாழ்க்கையை
சுவாரசியமாக்குவதற்காக ஹாக்கின்ஸ் குடும்பத்தார் ஒரு பூங்காவை உருவாக்கினர்.
தங்களது சொந்த உபயோகத்துக்காக என்றாலும் ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து
செதுக்கி, உலகின் பல்வேறு வகையான தாவரவினங்களையும் கொண்டுவந்து நட்டு பராமரித்து, அரண்மனைத்
தோட்டம் போன்ற பிரமாண்டமான பூங்காவை உருவாக்கினர். Chinese Pagoda எனப்படும் அடுக்குத் தூபியும் கற்பாலங்களும், தாமரைக் குளங்களும், அருவிகளும் உருவாக்கப்பட்டு அழகுக்கு அழகு சேர்த்தன.
 |
| 14. தாமரைக்குளம் |
 |
| 15. வண்ண வண்ண இலைகள் |
 |
| 16. ஜப்பானிய மேப்பிள் இலைகள் |
கோடைகாலம், வசந்த காலம், இலையுதிர்
காலம், குளிர்காலம் என பருவகாலங்களுக்கு ஏற்ப புதுப் புது வண்ணம் காட்டி வசீகரிக்கும்
வகையில் தாவர வகைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. ஹாக்கின்ஸ் குடும்பத்தார் மட்டுமே பார்த்து ரசித்து
அனுபவித்து வந்த பூங்கா, 2008-ஆம் ஆண்டு நலநிதி திரட்டுதற் பொருட்டு, ஒரே ஒரு நாள்
பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டது. அவ்வளவுதான். பூங்காவின் அழகில் சொக்கிப்போன
மக்கள், அடிக்கடி திறந்துவிடுமாறு கோரிக்கை விடுக்கத் தொடங்கினர். பலன், இப்போது
வருடத்தில் 363 நாட்கள் பொதுமக்களுக்காகத் திறந்துவிடப்பட்டுள்ளது. ஒருவருக்குக் கட்டணம்
20
ஆஸ்திரேலிய டாலர்கள். மிகுந்த மெனக்கெடலுடன் ஒரு அழகிய பூங்காவை உருவாக்கி
நிர்வகிக்கும் அந்த முயற்சிக்காக தாராளமாகத் தரலாம்.
 |
| 17. இளஞ்சிவப்புவண்ணத் தாமரை |
 |
| 18. அடர்சிவப்புவண்ணத் தாமரை |
 |
| 19. லாவண்டர் தோட்டம் |
 |
| 20. லாவண்டர் பூவில் தேனீ |
நாங்கள் போயிருந்தபோது கோடையின் இறுதி என்பதால் அடுத்து வரவிருக்கும் இலையுதிர் காலத்துக்கு அச்சாரமாக வண்ணபேதம் காட்டி வசீகரித்துக் கொண்டிருந்தன அங்கிருந்த மரங்கள். படகு சவாரிக்கு ஒரு பரந்த குளமும்
உண்டு. நாங்கள் போயிருந்தபோது பராமரிப்புப் பணிக்காக படகு சவாரி
நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. பகோடாவும் கூட சிதிலமுற்றிருப்பதாக சொல்லப்பட்டது.
 |
| 21. யாருடைய சிலை என்று தெரியவில்லை |
 |
| 22. வியக்கவைக்கும் பிரமாண்ட பாறை வளையம் |
சுற்றுலா பயணிகளைக் கவரும் மிக முக்கிய அம்சம் Maze எனப்படும் புதிர்ப்பாதை. 1.8 மீ. உயரமும், 1.4 கி.மீ. நீள சுற்றுப்பாதையும் உள்ள புதிர்ப்பாதைக்குள் நுழைந்துவிட்டால் வழி கண்டுபிடித்து வெளியே வருவது பெரிய சவால். தொலைந்துபோய் மீண்டும் மீண்டும் வந்த வழியே வந்து, பார்த்தவர்களையே மீண்டும் பார்த்து, சிரித்து, அசடு வழிந்து என சுவாரசியமான விளையாட்டு அது.  |
| 23. புதர்ப்புதிரின் ஒரு பக்கம் |
 |
| 23. புதர்ப்புதிரின் இன்னொரு பக்கம் |
 |
| 24. சிங்கங்களும் எங்கள் தங்கங்களும் |
 |
| 25. பந்தலில் படர்ந்து நிழல் தரும் கொடியும் காய்களும் |
பந்தற்காலில் மஞ்சள் பூசிப்
பார்த்திருக்கிறேன். இதென்ன, மரங்கள் தோறும் மஞ்சள்? முதன்முறையாகப் பார்ப்பதால் என்னவென்று தெரியாமல் படம் மட்டும்
பிடித்துக்கொண்டு வந்துவிட்டேன். வழக்கம்போல் தேடும்போதுதான் விடை கிடைத்தது.
மஞ்சள் நிறத்தில் இருப்பவை மஞ்சள் கல்பாசி. அசைவ சமையலுக்கு கல்பாசி என்றொரு
மசாலாப் பொருளைச் சேர்ப்போம் அல்லவா?
அதே இனத்தைச் சேர்ந்ததுதான் இந்த மஞ்சள்
கல்பாசி. இது மரங்களில் படர்ந்து வளர்ந்திருப்பதால் யாரோ மரம் முழுக்க மஞ்சள்
பூசியது போல் அவ்வளவு அழகாகக் காட்சி தருகின்றன.
 |
| 26. மஞ்சள் கல்பாசி வளர்ந்த மரம் 1 |
 |
| 27. மஞ்சள் கல்பாசி வளர்ந்த மரம் 2 |
மேஃபீல்ட் கார்டனுக்கு வருகை தரும் சுற்றுலா
பயணிகளின் வசதியையும் தேவையையும் முன்னிட்டு தோட்டத்துக்குள் நுழையும் இடத்திலேயே
அருமையான உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. சொந்தத் தோட்டத்திலும் அக்கம்பக்கப் பண்ணைகளிலும்
விளையும் விளைபொருட்களையும் இறைச்சிவகைகளையும் கொண்டு பிரத்தியேகமான உணவுகள் தயார்
செய்யப்படுகின்றன. மேஃபீல்ட் கார்டனுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளால் உள்ளூர்
விவசாயிகள்,
கடைக்காரர்கள்,
வாடகை வீடுகளின் உரிமையாளர்கள் என பலரும் பெரிய அளவில் பயனடைகிறார்கள்.
 |
| 28. இறைச்சிக்காக வளர்க்கப்படும் மாடுகள் |
 |
| 29. ரோமத்துக்காக வளர்க்கப்படும் அலபாகாக்கள் |
 |
| 30. ஒன்றாக மேயும் ஆடு, மாடு & அல்பாகாக்கள் |
 |
| 31. வேலியோரம் ஓய்வெடுக்கும் மாடுகள் |
கருப்பு அன்னம், தாழைக்கோழி, நாமக்கோழி, விதவிதமான வாத்துகள், நீர்க்காகம் உள்ளிட்ட பல்வேறு நீர்ப்பறவைகளும், காக்கட்டூ, ரோஸல்லா, லாரிகீட், மேக்பை உள்ளிட்ட பறவைகளும், பாம்பு, நீல நாக்கு அரணை போன்ற ஊர்வனவற்றையும் பூங்காவினுள் பார்த்தோம். போகும் வழியில் கால்நடைகளோடு, நரி, முயல், கங்காரூகள் என வளர்ப்பு மற்றும் காட்டுவிலங்குகள் பலவற்றையும் பார்த்தோம். கேமராவை எடுத்துப் படம்பிடிக்க அவகாசம் இல்லாததால் சிலவற்றை மொபைலில் படம் பிடித்தேன்.  |
| 32. தற்செயலாகப் பார்வையில் பட்ட பாம்பு (Tiger snake) |
 |
| 33. கொஞ்சமும் பயமில்லாமல் நின்று போஸ் கொடுக்கும் நரி |
 |
| 34. வெயில் காயும் நீல நாக்கு அரணைக்குட்டி |
நாங்கள் தங்கியிருந்த இடமும் அமைதியான
அழகான இடம். வீட்டைச் சுற்றி பசுமஞ்சள் புல்வெளிகளும் ஆங்காங்கு மேயும் மாடுகள், செம்மறிகள், வெள்ளாடுகள், குதிரைகள், லாமாக்கள், அலபாகாக்கள் என
கால்நடைகளும், கூட்டம் கூட்டமாய்த் தாவியோடும் கங்காரூக்களும், புதர்களுக்குள்ளிருந்து
தலைகாட்டும் பெருமுயல்களும், நின்று நிதானமாய் நடைபோடும் நரிகளும், காலைநேரத்தில் துயிலெழுப்பும் காகம், குக்குபரா, மேக்பை
பறவைகளும், மாலையானால் படையெடுக்கும் பெயரறியாப் பூச்சிகளின் பட்டாளமும் என
ஒவ்வொரு நாளும் வித்தியாசமான அனுபவம்.
 |
| 35. சாலையோரம் மேய்ந்துகொண்டிருந்த கங்காரூக்கள் |
 |
| 36. திடீர் ரென்று தோன்றி மறையும் பெருமுயல் (Hare) |
 |
| 37. கிரிம்சன் ரோசெல்லா |
வாகனங்களில் பயணிக்கும்போது வெகு கவனமாக
இருக்க வேண்டியது அவசியம். எப்போது எங்கிருந்து கங்காரூக்களும் வல்லபிகளும்
சாலையைக் கடக்குமோ, வாகனத்தில் வந்து மோதுமோ என்று பயந்துகொண்டேதான் காரைச் செலுத்த வேண்டும்.
நல்லவேளையாக எங்களுக்கு அப்படி எந்த மோசமான அனுபவமும் ஏற்படவில்லை. ஆனால்
சாலையோரத்தில் ஆங்காங்கே வாகனங்களில் அடிபட்டு இறந்துபோன ஏராளமான கங்காரூக்களைப்
பார்க்கமுடிந்தது. எப்படியோ துணிகரமான இந்த மலைப்பாதைப் பயணத்தை
முடித்துவிட்டுப் பத்திரமாக வீடு வந்து சேர்ந்து ஆறு மாதங்களும் கடந்துவிட்டன. வேறு
வேறு வேலைகளினாலும் படங்களை எடிட் பண்ண சோம்பல் பட்டும் ஒத்திப்போட்டுக்கொண்டே போய் இப்போதுதான் எழுத வாய்த்திருக்கிறது.
 |
| 38. குப்பென்று பூத்திருக்கும் மஞ்சள் பூக்கள் |
 |
| 39. நாமக்கோழிகள் |
 |
| 40. வளர்ப்புச் செல்லங்கள் |
மொத்தத்தில் பரபரப்பான நகர வாழ்க்கையிலிருந்து விடுபட்டு அமைதியான இயற்கைச் சூழலில் சில நாட்கள் இருந்துவந்தது மனதுக்கு மிகவும் உற்சாகம் தருவதாக இருந்தது. அடுத்த முறை மேஃபீல்ட் கார்டனைப் பார்க்கும் வாய்ப்பு அமைந்தால் வசந்தகாலத்தில் பார்க்கவேண்டும். அப்போதுதான் இயற்கையின் அழகு உச்சத்தில் இருக்கும்.