28 July 2014

என் பார்வையில் கண்ணதாசன் - கட்டுரைப் போட்டியில் மூன்றாமிடம்




திரையிசைப்பாடல்கள் வழியாகவே நம்மில் பெரும்பான்மையோருக்கு அறிமுகமானவர் கவிஞர் கண்ணதாசன் என்றாலும் திரைப்பாடலாசிரியர் என்பதைத் தவிரவும் எண்ணற்ற பன்முகங்களைக் கொண்ட அவர் என் பார்வையில் ஆகச்சிறந்ததொரு இலக்கியவாதியாகத்தான் புலப்படுகிறார். இலக்கியங்களிலிருந்து வரிகளையும் கருத்துக்களையும் தான் எடுத்தாள்வதைக் கவிஞரே நேர்மையாக ஒப்புக்கொண்டபடியால், இலக்கியங்களைக் களவாடி கவிதைகளில் புகுத்துகிறார் என்பவர்களின் குற்றச்சாட்டை நாம் பொருட்படுத்தத் தேவையில்லைபந்தியில் பரிமாறப்படும் உணவுக்கான பாராட்டு பரிசாரகரிடம்தான் வழங்கப்படுகிறதுஆனால் அது தனக்கானதில்லை என்பதை அவரும் அறிவார்நாமும் அறிவோம்.

தமிழிலக்கியம் என்பது பாமர மக்களில் சிலருக்கு எட்டிக்காய்சிலருக்கோ எட்டாக்கனி. புலவர்களும் தமிழறிஞர்களும் ஆய்வறிஞர்களுமே  இலக்கியங்களின் நயத்தையும் இன்பத்தையும் மாந்தி மகிழும் பேறு பெற்றவர்களாய் இருக்கிறார்கள். ஆர்வமிருக்கும் பலருக்கு அதற்கான வாய்ப்பு அமைவதில்லை. வாய்ப்பு அமைந்த பலரும் பிறருக்கு அவற்றை அறியத்தரும் முயற்சியில் இறங்குவதில்லை. அதனால் நம்மில் பலர்  வாழ்நாளில் தமிழின் இலக்கிய இன்பங்களை நுகரும் வாய்ப்பு கிட்டாமலேயே வாழ்ந்து மறைந்துபோகிறோம்.

இலக்கியப் பாற்கடலைக் கடைய கதியற்ற பாமரர்களுக்காக கவிஞர், தானே கடைந்தெடுத்துக் கொண்டுவந்த கவி வெண்ணெயை நம் நாவிலும் தடவி ருசிக்கச்செய்கிறார். அத்தன்மையதான அமரத்துவம் வாய்ந்தவைன்றோ இலக்கியஞ்சார்ந்த அவரது அமுதகானங்கள்?

நம்மில் எத்தனை பேர் கம்பராமாயணத்தையும் கலித்தொகையையும் கலிங்கத்துப்பரணியையும் நளவெண்பாவையும் படித்திருக்கிறோம்அந்தப் பெயர்களையாவது கேள்விப்பட்டிருப்பவர்கள் எத்தனை பேர்எத்தனை பேர் திருக்குறளின் அத்தனை அதிகாரங்களையும் வாசித்து அர்த்தம் புரிந்து பரவசப்பட்டிருக்கிறோம்பள்ளியில் படித்திருக்கும் ஒரு சில குறள்கள் தவிர பிறவற்றை நாம் அறிய முனைந்ததே இல்லை. 

பள்ளியிலும் கூட முப்பாலில் மூன்றாம் பாலான இன்பத்தை ஒதுக்கிவிட்டு அறமும் பொருளும்தான் போதிக்கப்படும். காமத்துப்பாலில் காதலின் அத்தனைப் பரிமாணத்தையும் அழகாக அலசியிருக்கும் வள்ளுவரின் திறனை நாம் அறியாமலேயே போய்விடுகிறோம். திருக்குறள்மட்டுமல்லகடலென விரிந்துகிடக்கும் சங்க இலக்கியம்,  கம்பராமாயணம்,  சிலப்பதிகாரம், மணிமேகலை  போன்ற  காப்பியங்கள் பலவற்றுள் இருக்கும் இலக்கியச்சுவை இன்னதென அறியாமலிருக்கிறோம்.

நம்மைப் போன்ற இலக்கியம் அறியாதோருக்காகபல கவிஞர்களும் தங்கள் பாடல்களில் இலக்கியங்களை நயமாகப் புகுத்தி இலக்கிய நயத்தை நாம் அனுபவிக்கத் தந்திருக்கிறார்கள். ஆனால் அனைவரிடத்தும் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பங்கு அலாதியானது. சங்க இலக்கியம் முதல் சிற்றிலக்கியங்கள் வரைபாரதியார் முதல் பட்டினத்தார் வரை யாதொரு தெளிவுரைபதவுரையின் தேவைகளின்றி எளிதில் எவரும் விளங்கிக்கொள்ளும் வண்ணம் இனிய தமிழ் வார்த்தைகளால் திரைப்பாடல்களின் வழியே இலக்கியத்தைப் பகிர்கிறார் இந்த இன்சுவைக் கவிஞர்.

யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்
யானும் நீயும் எவ் வழி அறிதும்,
செம் புலப் பெயல் நீர் போல,
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.

என்ற குறுந்தொகைப் பாடலை அறியாதோர் அநேகருண்டு. ஆனால் கண்ணதாசனின் இப்பாடலை அறியாதோர் யாவர்?

நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
காணும் வரை நீ எங்கே நான் எங்கே
கண்டவுடன் நீ இங்கே நான் அங்கே

இதே பாடலில் காமத்துப்பாலில் குறிப்பறிதல் அதிகாரத்திலிருந்து ஒரு குறளையும் நமக்குச் சுட்டியுள்ளார்.

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.

நம் கவிஞர் என்ன சொல்கிறார்?

உன்னை நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே
விண்ணை நான் பார்க்கும்போது என்னை நீ பார்க்கின்றாயே

இதோ இன்னொரு குறள் அதே குறிப்பறிதலில் இருந்து

இருநோக்கு இவளுண்கண் உள்ளது  ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.

கலையே உன் எழில் மேனி கனியாவதேன் பாடலில் கவி சமைத்த எளிய வரிகள்

இரு வேறு பொருள் கூறும் கண்பார்வை ஏன்
ஒன்று நோய் தந்ததேன் ஒன்று மருந்தானதேன்
பருவத்தின் ஒரு பார்வை நோயாகுமே
எழில் உருவத்தின் துணை சேர மருந்தாகுமே

தமிழிலக்கியம் கற்க எனக்கு ஆர்வமிருந்தும் அதற்கான வாய்ப்பு அமையவில்லை என்பதை தமிழறிஞரான என் மாமனாரிடம் ஆதங்கத்தோடு வெளியிடுவதுண்டு. அவர்களும்  அவ்வப்போது  இலக்கியங்களிலிருந்து  சில  பாடல்களை  எடுத்து  நான்  அறியத் தருவார்கள்.

ஒருநாள் கலித்தொகையில் புலவர் பெருங்கடுங்கோ பாடிய ஒரு பாடலை சிலாகித்து விளக்கினார்கள். தனக்குப் பிடித்தவனுடன் பெண் ஊரைவிட்டுப் போகும் பழக்கத்தை அன்று உடன்போக்கு என்பார்களாம். இன்றைய வழக்கத்தில் ஓடிப்போதல் என்போம். அப்படி உடன்போக்கு போன பெண்ணை அவளுடைய வளர்ப்புத்தாய் தேடிக்கொண்டு போகிறாள். வழியில் எதிர்ப்படுபவர்களைப் பார்த்து இந்த வழியே என் மகள் ஒரு ஆடவனோடு போனதைப் பார்த்தீர்களா?’ என்று அழுதுகொண்டே கேட்கிறாள். அவ்வழியே வந்த பெரியவர்கள் அவளைத் தடுத்து நிறுத்தி அவளுக்கு அறிவுரை சொல்கிறார்கள்.

பலஉறு நறுஞ் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை,
மலையுளே பிறப்பினும்மலைக்கு அவைதாம் என்செய்யும்?
நினையுங்கால்நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை,
நீருளே பிறப்பினும்நீர்க்கு அவைதாம் என்செய்யும்?
தேருங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை,
யாழுளே பிறப்பினும்யாழ்க்கு அவைதாம் என்செய்யும்?
சூழுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே

மலையிலுள்ள காட்டிலிருந்து பெறப்படும் சந்தனத்தால் அதைப் பூசுவாருக்கு அல்லாமல் மலைக்கு என்ன பயன்கடலிலிருந்து கிடைக்கும் முத்தால் அதை அணிபவர்க்கு அல்லாமல் கடலுக்கு என்ன பயன்யாழிலிருந்து கிடைக்கும் இனிய இசைஅதைக் காதால் கேட்பவர்க்கு அல்லாமல் அந்தக் கருவிக்கு என்ன பயனைத் தரும்அதுபோல் உன் மகளும் உரிய காலத்தில் தலைவனைச் சேர்தலே முறை. அவ்வாறின்றி அவளை உன்னோடு தக்கவைப்பதால் உனக்கென்ன பயன்?” என்று கூறி அவளை சமாதானப்படுத்தித் திருப்பி அனுப்பினர்.

ஆஹா.. என்னவொரு அற்புதமான வாழ்வியல் தத்துவம். என் மாமனார் சொல்லிக்கொண்டிருக்கும்போதே எனக்குள் ஏதோ குறுகுறுத்தது. இதை.. எங்கோ கேட்டிருக்கிறேன்.. எங்கே..ஆங்…. அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி என்னும் பாடலில் இந்த வரிகளைக் கவியரசர் இப்படிக் குறிப்பிடுகிறார்.

மலையின் சந்தனம் மார்பின் சொந்தம்
மங்கையின் இதயமோ காளையின் சொந்தம்
நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ
நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ
காலம் மாறினால் காதலும் மாறுமோ...

இப்படித் தொடர்கிறது அப்பாடல்கலித்தொகைப் பாடலைப் புரிந்துகொள்ள எனக்கொரு தமிழறிஞரின் உதவி தேவைப்பட்டது.  ஆனால் கண்ணதாசனின்  பாடலை எவர் உதவியுமின்றி அழகாக ரசித்து மகிழமுடிகிறதே..

மங்கை ஒருத்தி மலர்கொய்வாள் வாள்முகத்தைப்
பங்கயமென் றெண்ணிப் படிவண்டைச் - செங்கையால்
காத்தாளக் கைம்மலரைக் காந்தளெனப் பாய்தலுமே
வேர்த்தளைக் காணென்றான் வேந்து.

புகழேந்திப் புலவர் பாடிய இந்த நளவெண்பா பாடலை நம்மில் எத்தனைப் பேர் அறிவோம்இந்த உவமையின் ஒரு பாதி கையாளப்பட்டத் திரைப்பாடல் இந்நேரம் நினைவுக்கு வந்திருக்கவேண்டுமே... ஆம்அதேதான்.

பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற...

கவியரசரின் இந்தப் பாடல் மூலம் நளவெண்பாவின் அறிமுகம் கிடைத்தது எனக்கு.

புலவர் செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப்பரணியில் ஒரு பாடல். போர் முடிந்து நெடுநாள் கழித்து வீடு திரும்பிய கணவர்களிடம் ஊடல் கொண்டு வாயிற்கதவைத் திறக்க மறுக்கும் மனைவியரின் ஊடல் தீர்க்க புலவர் பாடுவது….

வாயின் சிவப்பை விழிவாங்க
மலர்க்கண் வெளுப்பை வாய்வாங்கத்
தோயக் கலவி அமுதளிப்பீர்
துங்கக் கபாடம் திறமினோ.

இந்த வரிகளின் நயத்தைக் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் வெளிப்படுத்திய திரைப்பாடல் வரிகள்

வாயின் சிவப்பு விழியிலே
மலர்க்கண் வெளுப்பு இதழிலே

கவிஞரை ஈர்த்த கலிங்கத்துப்பரணியின் மற்றுமொரு பாடல்,

கலவிக் களியின் மயக்கத்தால்
கலைபோய் அகலக் கலைமதியின்
நிலவைத் துகிலென் றெடுத்துடுப்பீர்
நீள்பொற் கபாடம் திறமினோ

கவிஞர் நமக்கு வழங்கும் எளிய வரிகள்….

ஆடையிதுவென நிலவினை எடுக்கும் ஆனந்த மயக்கம்
அம்மா குளிரென ஒன்றினை ஒன்று அணைப்பது வழக்கம்

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்

-        -- - இது திருநாவுக்கரசரின் திருத்தாண்டகப் பதிகம்

அன்றொருநாள் அவனுடைய பேரைக்கேட்டேன்
அடுத்தநாள் அவனிருக்கும் ஊரைக்கேட்டேன்
இன்றுவரை அவன் முகத்தை நானும் காணேன் - அவன்
என்னைத்தேடி வரும்வரைக்கும் விடவும் மாட்டேன்

-       ----  இது பதிகத்தைப் பாமரர்க்குக் கவியரசர் கொண்டு சென்ற வ(ழி)ரி..

இலக்கியச் சான்றுகளை ஆங்காங்கே தொட்டுக்காட்டி உள்ளே வாருங்கள்இன்னும் இன்னும் அனுபவிக்கலாம்” என்று ஈர்க்கிறார் தமிழின் சுவையறியத் துடிக்கும் உள்ளங்களை.

நள்ளென் றன்றே யாமஞ் சொல்லவிந்    
தினிதடங் கினரே மாக்கண் முனிவின்று   
நனந்தலை யுலகமுந் துஞ்சும்    
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே.

ஊர் உறங்கிவிட்டதுஉலகம் உறங்கிவிட்டது. உரியவன் அருகில் இன்மையால் நான் மட்டும் உறங்காமல் விழித்துக்கிடக்கிறேனே என்ற பொருள்படும் குறுந்தொகைப்பாடலின் சாரத்தை எடுத்துக்கொண்டார் கவிஞர்தலைவியின் கூடவே நிலவும் உறங்காமல் விழித்திருப்பதாக கற்பனை கூட்டி எளிய வரிகளால் நமக்களிக்கிறார்.

பூ உறங்குது பொழுதும் உறங்குது
நீ உறங்கவில்லை நிலவே
கானுறங்குது காற்றும் உறங்குது
நான் உறங்கவில்லை....

கண்ணதாசன் அவர்களின் மகன் காந்தி கண்ணதாசன் ஒருமுறை தந்தையாரிடம் சென்று,  “நானும் பாட்டுஎழுதலாம் என்றிருக்கிறேன் அப்பா” என்றாராம். பாட்டெழுதுவதில் கஷ்டம் இல்லை. ஆனால்சில விஷயங்கள் கட்டாயம் தெரிந்திருக்கவேண்டும். கம்பராமாயணம் தொடங்கி தமிழிலக்கியம் எல்லாவற்றையும் படிக்கவேண்டும். பிறகு அனுபவங்களுடன் கற்பனையைக் கலந்தால் பாட்டு தானாக வருகிறது” என்று தந்தை பதிலளித்தாராம். பாட்டு எழுதுவது வெகுசுலபம் என்பது போல் சொன்னாலும் தமிழிலக்கியத்தை நன்கு கற்றுணர்ந்திருக்கவேண்டும் என்ற அவரது வார்த்தையில் எவ்வளவு அழுத்தம்! கவியரசரின் பாடல்களில் பலவற்றுள் கம்பராமாயணத்தின் ஈர்ப்பிருப்பதைக் காணமுடியும்.

நதியின் பிழையன்று நறும்புனல் இன்மைஅற்றே
பதியின் பிழையன்றுபயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்றுமகன் பிழை அன்றுமைந்த!
விதியின் பிழைநீ இதற்கு என்னை வெகுண்டது?' என்றான்.

இந்த வரிகள் கண்ணதாசனின் எண்ணத்தில்

நதிவெள்ளம் காய்ந்து விட்டால்
நதி செய்த குற்றமில்லை
விதி செய்த குற்றமின்றி வேறு யாரம்மா?

என்று அழகிய பாடலாய் விரியும்.

கண்ணில் தெரியும் பொருளினைக்
கைகள் கவர்ந்திட மாட்டாவோ?-அட
மண்ணில் தெரியுது வானம்,
அதுநம் வசப்பட லாகாதோ?

என்னும் பாரதியின் வரிகள் கவிஞரின் கவிவண்ணத்தில் மிளிர்கிறது இப்படி!

கண்ணில் தெரிகின்ற வானம் கைகளில் வராதோ?

என் சொந்தக் கருத்துக்களோடு இணையத்திலிருந்து பெறப்பட்ட பல தகவல்கள் இக்கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டிருந்தாலும் இலக்கியத்தின்பால் என்னை வழிநடத்தி அழைத்துச் சென்றவை கண்ணதாசன் பாடல்களில் காணப்பட்ட இலக்கியச்சுவடுகளே. சங்கப் பாடல்களின் பொருளுணர்ந்து அவற்றுள் என்னால் சங்கமிக்க இயல்வதற்கும், நளவெண்பாவையும் கலிங்கத்துப் பரணியையும் கம்ப ராமாயணத்தையும் வாசித்து வாசித்து இன்புற்றுக் களிப்பதற்கும் பத்துப்பாட்டில் ஒன்றான நெடுநல்வாடையை எளிய தமிழில் புதுக்கவிதை பாணியில் எழுதும் துணிவைப் பெற்றமைக்கும் முக்கியக் காரணம் இலக்கியம் சார்ந்த கவியரசரின் இனிய பாடல்களே என்றால் அது கிஞ்சித்தும் மிகையில்லை.

***************************************************************
(வல்லமை இணைய இதழில் நடைபெற்ற 'என் பார்வையில் கண்ணதாசன்' போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற என் கட்டுரை. இக்கட்டுரை குறித்த நடுவர் அவர்களின் கருத்து, இப்பதிவின் நீளம் கருதி அடுத்த பதிவில்...)

56 comments:

  1. அருமை! அருமை!

    அகம் மகிழ்ந்தேன் உங்களின் இனிய பதிவைப் பார்த்து.
    எத்தனை தேடல்கள். திறமைதான்.
    பாடல்களும் மனதில் நிறைந்தவையே.. நல்ல பகிர்வு!

    கட்டுரைப் போட்டியில் மூன்றாம் இடமும் பெற்றிருக்கின்றீர்கள். மகிழ்ச்சி!
    அனைத்திற்கும் இனிய நல் வாழ்த்துக்கள் கீதமஞ்சரி!!

    ReplyDelete
    Replies
    1. தமிழ்மண வோட்டுப் பட்டை வேலை செய்யவில்லையோ?...

      Delete
    2. உடனடி வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி இளமதி. தமிழ்மணத்தில் இப்போது இணைத்துவிட்டேன். நன்றி தோழி.

      Delete
  2. இலக்கியத் தேனை எளியவரும் அருந்தி மகிழ்ந்திட எளிமைப்படுத்தித் தந்த ராணித்தேனீ கண்ணதாசன். அதனை சிறப்பாக அலசிய இந்தக் கட்டுரை பரிசு பெற்றதில் வியப்பொன்றுமில்லை. கூடவே உங்களுக்குள்ளிருக்கும் தீவிர தமிழ்ப்பற்றுள்ள வாசகி வியக்க வைக்கிறாள் என்னை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கணேஷ். கல்லூரியில் தமிழ் இலக்கியம் படிக்காமல் போய்விட்டோமே என்ற ஆதங்கம் இன்னும் உள்ளே இருக்கிறது. அதனால்தான் அவ்வப்போது இலக்கியச் சாகரத்தை எட்டிப் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறேன்.

      Delete
  3. அருமையான கட்டுரை. பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி வெங்கட்.

      Delete
  4. மிக அருமை கீதா. என் நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி ராமலக்ஷ்மி.

      Delete
  5. வல்லமையில் பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள்.!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மேடம்.

      Delete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. கண்ணதாசன் என்ற பொக்கிஷத்துக்கு இணை எவரும் உண்டோ ? பதிவு அருமை சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கில்லர்ஜி.

      Delete
  8. வல்லமை இணைய இதழ் நடத்திய 'என் பார்வையில் கண்ணதாசன்' - போட்டியில் தாங்கள் மூன்றாம் பரிசு பெற்றதற்கு எனது வாழ்த்துக்கள். கட்டுரையில் நிறையவே இலக்கிய மேற்கோள்கள் காட்டி இருப்பது தங்களுக்கு தமிழ் இலக்கியத்தின் மேல் இருக்கும் ஆர்வத்தினை நன்கு வெளிப்படுத்துவதோடு, தமிழின்பம் தரும் கட்டுரையாகவும் இலங்குகிறது.

    த.ம.2

    ReplyDelete
    Replies
    1. இலக்கியத் தகவல்கள் பலவும் இணையத்திலிருந்து திரட்டப்பட்டவையே. அவற்றோடு என் கருத்தைப் பகிர்ந்துள்ளேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  9. கண்ணதாசன்
    எண்ணங்கள் என்றும் நீலைக்கும்...
    சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  10. உள்ளுக்குள் உறங்கிக் கிடக்கும் எழுத்து வேகத்தை வெளியில் கொண்டு வர இந்தப் போட்டி உதவியாய் இருந்திருக்கிறது. நம்மில் பலரும் கண்ணதாசன் பாடல்களை ரசித்திருப்போம். இருந்தாலும் இலக்கிய ரசனையாய் இருந்திருக்க வாய்ப்பு குறைவு. இலக்கிய சுவை குறையாமல் எழுதி இருப்பது பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களது ஊக்கமிகு கருத்துரை கண்டு மிக்க மகிழ்ச்சி. நன்றி ஐயா.

      Delete
  11. வல்லமையில் பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள்.!

    ’என் பார்வையில் கண்ணதாசன்’ என்ற தலைப்பில் கவிஞர் கண்ணதாசன் அவர்களைப்பற்றி மிகச்சிறப்பாக எழுதியுள்ளீர்கள்.

    தங்கள் பார்வை எப்போதுமே மென்மையானது, மேன்மையானது என்பதை இதிலும் நிரூபித்துள்ளீர்கள். மனமார்ந்த பாராட்டுக்கள். மனம் நிறைந்த இனிய அன்பு நல்வாழ்த்துகள்.

    நடுவர் அவர்களின் பாராட்டுத் தொடர்ச்சியைப் படிக்க நினைக்கும் ஆவலுடன் ...... கோபு

    ReplyDelete
    Replies
    1. உற்சாகம் தரும் தங்கள் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் அகமார்ந்த நன்றி கோபு சார்.

      Delete
  12. சிறப்பாக எழுதிருக்கீங்க. இதன்மூலம், இலக்கியங்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்துவிட்டீர்கள். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிக்க நன்றி ஹூஸைனம்மா.

      Delete
  13. தங்கள் ஆழ்ந்த தமிழ் உணர்வைக் கட்டுரையின் ஒவ்வோர் அணுவிலும் காண முடிகிறது. கண்ணதாசன் என்னைப் போலவே தங்களையும் மிகவும் பாதித்திருக்கிறார் என்று தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. இப்போதும் இரவில் சன்னமாக ஒலிக்கும் பழைய பாடல்களைக் கேட்டபடியே உறங்குவதுதான் வழக்கம். மனத்தை ஆற்றுப்படுத்த அதைவிடவும் மேலான வழி உண்டா என்ன? தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  14. மிக அருமை கீதமஞ்சரி!! தமிழ்த்தேனை அருந்த அருந்த மனமும் இனிப்பாகிறது!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கட்டுரையை ரசித்தமைக்கும் மிக்க நன்றி மேடம்.

      Delete
  15. மிக மிக அருமையான ஆராய்ச்சிக்கட்டுரை அக்கா!! வாழ்த்துக்கள்! இத்தனை படியெடுத்து ஆசிரியர்கள் பாடமே எடுக்கலாம்! என்ன அருமையான ஒப்பிட்டு!!

    ReplyDelete
    Replies
    1. ஆராய்ச்சிக்கட்டுரை எல்லாம் இல்லை மைதிலி. பலரும் ஆராய்ந்து எழுதியதை வாசித்ததன் மூலமே இலக்கியத்தின்பால் ஈர்ப்பு உண்டானது. அதையே நானிங்கு குறிப்பிட்டுள்ளேன். அனைத்துப் பெருமைகளும் உரியவர்களைச் சென்றடையட்டும். ரசித்தமைக்கு மிக்க நன்றி மைதிலி.

      Delete
  16. மீண்டும் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  17. மிகவும் அருமையான ஒரு கட்டுரை.
    பரிசு பெற்றதற்கு பாராட்டுக்கள்.
    பரிசு பெறாமல் இருந்தால் தான் ஆச்சிரியம்.

    வாழ்த்துக்கள் .

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சொக்கன். கலந்து கொண்ட ஏராளமான கட்டுரைகளில் பலவும் அற்புதமாக இருந்தன என்பது சிறப்பு.

      Delete
  18. இருபது ஆண்டுகளுக்கு முன்பு திரைப்படப் பாடல்களில் இலக்கியம் எனும் தலைப்பில் கவியரசரைப் பற்றிய ஆய்வுக் கட்டுரையைப் படித்திருக்கிறேன். அதைப்போன்றே அருமையான தொகுப்பு! கட்டுரை அருமை! பரிசு பெற்ற தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்!

    ReplyDelete
    Replies
    1. ஆய்வுக்கட்டுரையோடு இந்தக் கட்டுரையை ஒப்பிட்டது உங்களுடைய பெருந்தன்மையைக் காட்டுகிறது. உண்மையில் எனக்கு முன் ஆய்ந்தறிந்து சொன்னவர்களுடைய கருத்துக்களையே என் கட்டுரையில் பயன்படுத்தியுள்ளேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க சேஷாத்ரி.

      Delete
  19. கட்டுரை அருமை. பரிசுபெற்றமைக்குத் தகுதியானதே.
    வாழ்த்துகளும் பாராட்டுகளும் சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றி ஐயா.

      Delete
  20. Replies
    1. மிக்க நன்றி ஜனா சார்.

      Delete
  21. கண்ணதாசன் பற்றி அருமையாக எழுதியுள்ளீர்கள். பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள். மிகவும் அற்புதமாக தமிழில் விளயாடுகிறீர்கள். கோபு அண்ணா வலைத்தளத்திலும் உங்கள் விமர்சனங்கள் வாசித்து இருக்கிறேன். அங்கும் பரிசுகளைக் குவித்து இருக்கிறீர்கள் எல்லாவற்றிற்கும் வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும். நிலாபக்கம் கவிதைகளையும் வாசித்து மகிழ்ந்து இருக்கிறேன்.
    நன்றி சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் ரசித்து வாசித்ததோடு இங்கு குறிப்பிட்டமை எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது உமையாள். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.

      Delete
  22. அருமையான கட்டுரை ! ரசித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.

      Delete
  23. கட்டுரை மிகவும் அருமை.
    பாராட்டுக்கள். வெற்றி உங்கள் கையில்.
    பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் கீதமஞ்சரி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கோமதி மேடம்.

      Delete
  24. வணக்கம்
    இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
    http://blogintamil.blogspot.com/2014/09/ladies-special.html?showComment=1409788509683#c5894648943052542591

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரூபன். இணையப் பிரச்சனை காரணமாக என்னால் உடனடியாக பதிலளிக்க இயலவில்லை, மன்னிக்கவும்.

      Delete
  25. வாழ்த்துகள் கீதா. ரூபன் சாருக்கும் வலைச்சரத்துக்கும் நன்றி பகிர்ந்தமைக்கு :)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றி தேனம்மை.

      Delete
  26. வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்.!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி மேடம்.

      Delete
  27. அருமையான கட்டுரைத் தொகுப்பு. ஒவ்வொரு வரியிலும் உங்கள் தேடலின் உழைப்பு தெரிகிறது. ஆசையுடன் தமிழ் படிக்க முடியாத போதும் உங்களின் உள்ளார்ந்த முயற்சியால் இலக்கியத்தை சமக்கால எழுத்தோடு கலந்துரைக்க உங்களை அந்த தமிழே உயர்த்தியுள்ளது. உங்கள் வலைப்பக்கத்தை அறிமுகப் படுத்திய வலைச்சரத்திற்கு நன்றி. இனிய தமிழின் முழு சாரத்தையும் பருக தொடரட்டும் உங்கள் தேடல். உங்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கட்டுரையை என் பக்கத்தில் பகிர அனுமதி தாருங்கள்

      Delete
    2. தங்கள் ஆத்மார்த்தமான கருத்துரைக்கு அன்பான நன்றி. அனைத்துப் பெருமையும் கவியரசருக்கும் அவரது பாடல்களில் இலக்கிய இன்பத்தைக் கண்டறிந்தவர்களுக்குமே சாரும். அவற்றைத் தொகுத்தளித்தது மட்டுமே என் பணி. தாங்கள் இக்கட்டுரையை தாராளமாகத் தங்கள் பக்கத்தில் பகிர்ந்துகொள்ளலாம். மிக்க நன்றி தங்களுக்கு.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.