29 February 2024

ஜினியாவைத் தேடிவரும் ஜீவன்கள்

 தோட்டத்துப் பிரதாபம் - 28

கோடை முடியப்போகும் இந்த சமயத்தில் அழகழகான ஜினியா பூக்களால் தோட்டம் உயிர்ப்புடன் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. சென்ற வருடத்தை விடவும் இந்த வருடம் நிறையப் பூக்கள். ஸ்பெஷலாக அடுக்கு ஜினியா பூக்களும் பூத்துள்ளன. செவ்வந்தி போல அவை அடுக்கடுக்காகப் பூத்துக்கொண்டே போவது பார்க்க அவ்வளவு அழகாக இருக்கிறது.

 

1. அடுக்கு ஜினியா

ஆச்சர்யமாக எல்லா பூக்களுமே கிட்டத்தட்ட அடர் பிங்க் நிறம். அந்த அழகிய புறவிதழ்களுக்கு நடுவில் குட்டிக் குட்டியாக மஞ்சள் நிறத்தில் உண்மையான பூக்கள். அந்தக் குட்டிப் பூவுக்குள் எவ்வளவு தேன்தான் இருக்குமோ? வண்ணத்துப்பூச்சிகளும் தேனீக்களும் எந்நேரமும் பூக்களை வட்டமிட்டுக்கொண்டே இருக்கின்றன.

2. ஜினியா பூக்கள்

ஜினியா பூக்களில் தேனெடுக்க வண்ணத்துப்பூச்சிகளும், ஈக்களும், தேனீக்களும் மாறி மாறி வருகின்றன. இலைகளையும் பூக்களையும் உணவாக்கிக்கொள்ள வெட்டுக்கிளிகளும், அசுவினிப் பூச்சிகளும் வருகின்றன. அசுவினிப் பூச்சிகளை உணவாக்கிக்கொள்ள பொறிவண்டுகள் வருகின்றன. செடியிலேயே முட்டையிட்டு அவற்றின் லார்வாக்கள் உணவுப்பஞ்சமின்றி வாழ வழி செய்கின்றன. இலைகளுக்கு அடியில் இருக்கும் புழுக்களைத் தேடி குளவிகள் வட்டமிடுகின்றன. போதாதென்று சிலந்திப்பூச்சிகள் ஜினியா செடியின் காம்புகளுக்கு இடையே வட்ட வட்டமாக வலை பின்னிவைத்துக்கொண்டு, தேனெடுக்க வரும் பூச்சிகளைக் கபளீகரம் செய்யக் காத்திருக்கின்றன. 

இந்த ஜினியா செடிகளையும் பூக்களையும் வாழ்வாதாரமாகக் கொண்டு எவ்வளவு ஜீவன்கள் வாழ்கின்றன. இயற்கையின் சார்புத்தத்துவம் வியக்கவைக்கிறது. எங்கள் தோட்டத்து ஜினியாக்களைத் தேடிவரும் எண்ணற்ற ஜீவன்களுள் என் கேமராவுக்குள் சிக்கிய சில மட்டும் இங்கே...  


3. மோனார்க் வண்ணத்துப்பூச்சி

 

4. ப்ளூ மூன் வண்ணத்துப்பூச்சி

5. நீல முக்கோண வண்ணத்துப்பூச்சி


6. கேபேஜ் ஒயிட் வண்ணத்துப்பூச்சி


7. வெட்டுக்கிளி

8. இலைவெட்டித் தேனீ


9. நீல வரித் தேனீ

10. குளவி


11. சிலந்தியும் தேனீயும்

12. நீல வரித் தேனீ

13. மோனார்க் வண்ணத்துப்பூச்சியும் சிலந்தியும்


14. சிலந்தியும் அதற்கு இரையான ஈயும்

15. இலைவெட்டித் தேனீ

16. பொறிவண்டு

17. சிலந்தியும் பொறிவண்டின் லார்வாவும்


ஜினியா பற்றி ‘பூக்கள் அறிவோம்’ தொடரில் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அதை மீண்டும் இங்கே ஒரு முறை பதிவு செய்கிறேன். 

ஜினியா பூ டெய்சி குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் பூர்வீகம் அமெரிக்கா. இம்மலர் குறித்து முதலில் வரையறுத்த ஜெர்மானிய தாவரவியல் வல்லுநர் Johann Gottfried Zinn அவர்களின் நினைவாக இதற்கு zinnia என்று பெயரிடப்பட்டுள்ளது. 

வண்ணத்துப்பூச்சிகளுக்கும் தேனீக்களுக்கும் மிகப் பிடித்தமான பூக்கள் இவை என்பதால் தோட்டங்களை உயிர்ப்புடன் வைத்திருக்கவும் மகரந்தச் சேர்க்கை நடைபெறவும் அவை பெரிதும் உதவுகின்றன. விதைகள் முற்றி வெடித்துச் சிதறுவதன் மூலம் புதிய செடிகள் தாமே உருவாகின்றன. 

நீளமான காம்புகளில் வண்ண வண்ணமாய்ப் பூக்களை மலர்த்துவதாலும், செடியிலிருந்து பறிக்கப்பட்ட பிறகும் ஒரு வாரத்துக்கு வாடாதிருக்கும் தன்மையாலும் ஜினியா பூக்கள், பூச்சாடிகளையும் பூங்கொத்துகளையும் அலங்கரிக்கப் பயன்படுகின்றன. வாடிய பிறகும் கூட உலர் மலரலங்காரத்தில் இடம்பெற்று பிறவிப்பயனை முழுமையாய் அடைகின்றன. 

நட்பின் அடையாளமாக, முக்கியமாக பிரிந்துபோன நட்பின் அடையாளமாக இவை கருதப்படுகின்றன. அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தின் மாநில மலர் என்ற பெருமையும் சில வருடங்கள் (1937 – 1951) இதற்கு இருந்திருக்கிறது.   

இன்று இவ்வளவு கொண்டாடப்படும் ஜினியா பூக்கள் முற்காலத்தில் அசிங்கமான பூக்களென்று அலட்சியப்படுத்தப் பட்டிருந்தனவாம். ஐரோப்பாவில் அறிமுகமான சமயம், எளிதாய் எம்மண்ணிலும் வளரும் தன்மையால் ‘ஏழைவீட்டுப் பூ’ என்று அழைக்கப்பட்டதாம். இதன் பூர்வீகமான மெக்சிகோவில் இதன் பெயர் mal de ojos. அதற்கு ‘கொள்ளிக் கண்’ என்று அர்த்தமாம். என்னவொரு முரண் பெயர்!

ஜினியா பூக்களில் தேனெடுக்கும் வண்ணத்துப்பூச்சிகளை சிறு காணொளியாக என்னுடைய youtube channel-ல் பதிவேற்றம் செய்திருக்கிறேன். விருப்பமுள்ளவர்கள் பார்க்கலாம். 


https://www.youtube.com/watch?v=gJTi2YVpKRs&t=9s&ab_channel=GeethaMathi

பிரதாபங்கள் தொடரும்.

20 February 2024

வாடாமலரே தமிழ்த்தேனே!

 தோட்டத்துப் பிரதாபம் - 27

வாடாமல்லிப் பூக்கள் (படம் 1)

கதம்பத்தில் கட்டாயம் இடம்பெறும் பூக்களுள் வாடாமல்லியும் ஒன்று. குட்டியாய் குண்டு குண்டாய் பளீரென்று கண்ணைப் பறிக்கும் வாடாமல்லிப் பூக்களுக்கு அவற்றின் நிறமே பிரதானம். இதன் வாடாத தன்மையால் வாடாமல்லி என்று அழைக்கப்பட்டாலும் மல்லிக்கும் இதற்கும் எந்த ஒட்டும் கிடையாது, உறவும் கிடையாது. சொல்லப் போனால் இது அமராந்தேசியே எனப்படும் கீரைக் குடும்பத்தைச் சேர்ந்தது. முளைக்கீரை, அறுகீரை, சிறுகீரை, தண்டுக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, பண்ணைக் கீரை என அமராந்தேசியே குடும்பத்தைச் சேர்ந்த கீரைகளைப் போல இதுவும் சில நாடுகளில் உணவாக உட்கொள்ளப்படுகிறது. வசீகரிக்கும் வண்ணங்களுடன் காணப்படுவதாலும், தேனீக்களுக்கும் வண்ணத்துப்பூச்சிகளுக்கும் உணவாதாரமாக விளங்குவதாலும் வீடுகளிலும் தோட்டங்களிலும் பூங்காக்களிலும் விரும்பி வளர்க்கப்படுகிறது. நானும் இங்கே (சிட்னி) நர்சரியில் வாடாமல்லி விதைப் பொட்டலத்தைப் பார்த்தவுடன் பெரும் ஆவலோடு வாங்கி, விதைகளைத் தொட்டியில் தூவிவிட்டேன்.  

 வெள்ளை & இளஞ்சிவப்பு நிற வாடாமல்லிப் பூக்கள் (படம் 2)

வாடாமல்லிக்கு என்றொரு பிரத்தியேக நிறம் இருப்பதால்தான் 'வாடாமல்லி நிறம்' என்ற வழக்கே பயன்பாட்டில் உள்ளது. ஆனால் பாருங்க, நான்  வளர்த்த செடிகளில் வெள்ளை நிறத்திலும் பிங்க் நிறத்திலும் வாடாமல்லிப் பூக்கள் பூத்து என்னை வியப்பில் ஆழ்த்தின. நானோ வழக்கமான நிறத்தில் வாடாமல்லிப் பூக்களை ஆசையோடு எதிர்பார்த்திருந்தேன். என்னடா இது, வாடாமல்லிக்கு வந்த சோதனை! என்று சற்றே மனம் சுணங்கியிருந்தேன்.  என்னை ஏமாற்றவில்லை என் தோட்டம். சற்றுத் தாமதமாக வளர்ந்த ஒரு செடியில் ஒரிஜினல் வண்ணத்தில் பூக்கள் பூத்து என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டன. 

வாடாமல்லி (படம் 3)

வாடாமல்லி என்கிறாய், இலைகளைப் பார்த்தால் தக்காளிச் செடி போல அல்லவா இருக்கிறது என்று நினைப்பீர்கள். வாடாமல்லி விதைகளைத் தூவிய தொட்டியில் தானாக வளர்ந்திருக்கிறது இந்தத் தக்காளிச் செடி. வாடாமல்லியோடு போட்டி போட்டுக்கொண்டு வளர்ந்து தன் பங்குக்கு தக்காளிப் பழங்களைத் தருகிறது அதுவும்.  

தேனெடுக்க வரும் நீலவரித் தேனீ (படம் 4)

வாடாமல்லி வாசம் என்னை

வாழச் சொல்லிப் போகும் 

என்ற பாடல் வரிகளைக் கேட்டபோது சிரிப்பு வந்தது. வாடாமல்லிக்கு ஏதப்பா வாசம்? எதுகை மோனைக்காக எழுதியிருப்பாங்களோ அல்லது வாடாத மல்லிகை என்பதைத்தான் அப்படிச் சொல்லியிருப்பாங்களோ, தெரியவில்லை.

என்ன சொன்னாலும் வாசமில்லா மலரிது. ஆனாலும் வசந்தத்துக்குக் குறைவு கிடையாது. இந்த வாடாமல்லி மலர்களில் தேனெடுக்க தேனீக்களுக்கும் வண்ணத்துப்பூச்சிகளுக்கும் எவ்வளவு போட்டி! எந்நேரமும் பூக்களை வட்டமிட்டுச் சுற்றிக்கொண்டே இருக்கின்றன நீலவரித் தேனீக்கள். வாடாமல்லியில் தேனா என்று ஆச்சர்யமாக இருக்கும். ஆமாம், இருக்கிறது. வாடாமல்லிப் பூவின் தாள் போன்ற சொரசொரப்பான புற இதழ்களுக்கு நடுவில் வெளிர்மஞ்சள் நிறத்தில் குட்டிக் குட்டியாக இருப்பவைதாம் உண்மையான பூக்கள். அவற்றிலிருந்துதான் தேனீக்களும் வண்ணத்துப்பூச்சிகளும் தேனெடுக்கின்றன. பதில் உபகாரமாக மகரந்தச் சேர்க்கைக்கு உதவிபுரிகின்றன.

தேனுண்ண வந்த நீலவரித் தேனீக்களும் 

தேன் சேகரிக்க வந்த ஐரோப்பியத் தேனீக்களும்

Blue banded bee (Amegilla cingulata) (படம் 5)

Blue banded bee (Amegilla cingulata) (படம் 6)

Blue banded bee (Amegilla cingulata) (படம் 7)

European honey bee (Apis mellifera) (படம் 8)

European honey bee (Apis mellifera) (படம் 9)


தேன் குடிக்க வந்த வண்ணத்துப்பூச்சிகள்

Meadow argus (Junonia villida) (படம் 10)


Meadow argus (Junonia villida) (படம் 11)

Cabbage White Butterfly (Pieris rapae) (படம் 12)


Small palm dart (Telicota augias) (படம் 13)


வாடாமல்லிப் பூக்கள் உருண்டையாக இருப்பதால் ஆங்கிலத்தில் Globe amaranth என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் தாவரவியல் பெயர் Gomphrena globose.  வாடாமல்லிப் பூக்கள் மெஜந்தா, வெள்ளை, பிங்க் நிறங்களில் மட்டுமல்லாது, சிவப்பு, ஆரஞ்சு, கத்தரிப்பூ நிறங்களிலும் காணப்படுகின்றன. 

வாடாமல்லியின் பூர்வீகம் ஆசிய மற்றும் அமெரிக்க நாடுகள். இன்று இவை உலக நாடுகள் பலவற்றிலும் காணப்படுகின்றன. ஹவாய் தீவில் சுற்றுலாப் பயணிகளை பாரம்பரிய முறைப்படி வரவேற்கவும் வழியனுப்பவும் சூட்டப்படும் பலவித மாலைகளுள் இப்பூமாலையும் ஒன்று. நேபாளத்தில் சகோதரர் தினத்தன்று பெண்கள் வாடாமல்லிப் பூக்களைத் தங்கள் கையாலேயே மாலை கட்டி தங்கள் சகோதரர்களுக்கு அணிவிப்பதும் பண்டுதொட்டு தொடர்ந்து வரும் வழக்கம்.

Meadow argus (Junonia villida) (படம் 14)

தோட்டங்களில் அழகு சேர்ப்பதற்கும் வண்ணத்துப்பூச்சிகள், தேனீக்களைக் கவர்வதற்கும் இப்பூச்செடிகள் பெரிதும் உதவுகின்றன. பூக்கள் புதியனவாக இருக்கும்போது மட்டுமல்ல, உலர்ந்த பிறகும் மலர் அலங்காரங்களில் பயன்படுத்தப்படுகின்றன. தென்னாப்பிரிக்காவில் இப்பூக்களின் விதைகளைச் சேகரித்து மாவாக்கி உண்பதுண்டு. இது ஒரு மூலிகைச்செடியாகவும் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. நீரிழிவு, இருமல், வயிற்றுக்கடுப்பு போன்றவற்றுக்கு இப்பூவின் கசாயம் கொடுக்கப்படுகிறது. தினமும் இப்பூவின் தேநீரை அருந்திவந்தால் முதுமை தள்ளிப்போடப்படும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

வெள்ளை வாடாமல்லி (படம் 15)

என்றும் வாடா தன்மையினால் வாடாமல்லிப் பூக்கள் அழியாமையின் அடையாளமாகப் பார்க்கப்படுகின்றன. அழியாக்காதல் வேண்டும் காதலர்கள் இப்பூக்களை ஒருவருக்கொருவர் பரிசளித்து மகிழ்வார்களாம்.

வாடாமல்லி என்றவுடன் எனக்கு வாடாமல்லி மலர்களோடு சு.சமுத்திரம் எழுதிய ‘வாடாமல்லி’ என்ற புதினமும் கூடவே நினைவுக்கு வந்துவிடும். சுயம்பு என்ற கதாபாத்திரத்தின் வாயிலாக, திருநங்கையர் வாழ்க்கை பற்றிய புரிதலை பாமர மக்களுக்கு உண்டாக்கிய முன்னோடிப் படைப்பு அது. ஆனந்த விகடனில் வாரா வாரம் வெளிவந்து பலரது கவனத்தையும் பெற்ற அத்தொடர், பின்னாளில் புத்தகமாக அச்சாகி வெளியானது. 

பிரதாபங்கள் தொடரும்.

13 February 2024

அவகாடோ பிரதாபம்

தோட்டத்துப் பிரதாபம் - 26

அனைவருக்கும் வணக்கம். என்னுடைய தோட்டத்துப் பிரதாபத்தைப் பற்றி எழுதி வெகுகாலம் ஆகிவிட்டது. இந்த முறை அவகாடோ (Avocado) என்கிற வெண்ணெய்ப்பழ மரக்கன்றின் பிரதாபத்தைப் பற்றிதான் சொல்லப் போகிறேன். அவகாடோவின் தாவரவியல் பெயர் Persea americana. தமிழில் ஆனைக்கொய்யா, வெண்ணெய்ப்பழம், வெண்ணெய்ப் பேரி, முதலைப் பேரி என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறது.


வெண்ணெய்ப் பழம் என்ற பெயருக்கு ஏற்றாற்போல் பழத்தின் சதைப்பகுதி வெண்ணெய் மாதிரிதான் இருக்கும். வெண்ணெய் போலவே இதிலும் கொலஸ்ட்ரால் உண்டு. ஆனால் உடலுக்கு நல்ல கொலஸ்ட்ரால். பேலியோ (paleo diet) டயட்டில் இடம்பெறும் ஒரே பழம் இதுமட்டும்தான் என்பதிலிருந்து இதன் நன்மையை அறிய முடியும். இந்தப் பழத்தில் ஏராளமான சத்துகள் இருப்பதால் இது superfruit என்ற பெயரையும் பெற்றுள்ளது.

அவகாடோ கொஞ்சம் விலை கூடுதலான பழமும் கூட. ஆனால் நிறைய பேருக்கு இதன் ருசி பிடிக்காது. ‘இதெல்லாம் ஒரு ருசியா? மண்ணு மாதிரி இருக்கு’ என்றெல்லாம் எங்கள் குடும்பத்தாரிடமிருந்து கமெண்ட் வாங்கிய பழம் இது. அப்படி இருக்கும்போது, இதை எங்கள் வீட்டில் என்னைத் தவிர வேறு யாரும் சாப்பிட மாட்டார்கள் என்று சொல்லத் தேவையில்லை. நானோ அவகாடோவின் பரம ரசிகை. வெளியில்  சாப்பிட நேர்ந்தால்  பெரும்பாலும் அவகாடோ டோஸ்ட் தான் சாப்பிடுவேன். இது உடலுக்கு நல்லது என்பதால் மட்டுமல்ல, இதன் ருசி எனக்கு மிகவும் பிடித்துப் போனதாலும் விரும்பி உண்பேன். 

கெட்ட கொழுப்பைக் குறைக்கும், நல்ல கொழுப்பைக் கூட்டும், இதய நோய்களிலிருந்து காப்பாற்றும், இரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்தும் என அவகாடோ பழத்தின் பயன்கள் பட்டியலிடப்படுகின்றன. இதன் ஏராளமான பயன்கள் காரணமாக, தற்போது உலகச்சந்தையில் பெரும் இடத்தைப் பிடித்துள்ளது.

அவகாடோவின் கொட்டை உள்ளங்கைக்குள் அடங்கும் அளவுக்கு சற்றே பெரிய கோலிகுண்டு மாதிரி அழகாக, உருண்டையாக, கனமாக இருக்கும். இதற்கும் பல மருத்துவ குணங்கள் இருப்பதாக அறியப்படுகிறது.

அவகாடோவை அப்படியே பழமாகவும் சாப்பிடலாம். மில்க் ஷேக், ஸ்மூத்தி, சாலட், ப்ரட் டோஸ்ட், ஆம்லெட், சுஷி போன்றவற்றில் பயன்படுத்தியும் உட்கொள்ளலாம். இதைவிடவும் சுவாரசியமான விஷயம், இது சரும அழகுக்குப் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது என்பதுதான். அவகாடோ பழத்திலிருந்து அவகாடோ எண்ணெய் எடுக்கப்படுகிறது. பொதுவாக கடலை, எள், ஆமணக்கு, சூரியகாந்தி என வித்துக்களிலிருந்து எண்ணெய் எடுப்பதை அறிந்திருக்கிறோம். ஆனால் அவோகாடோவில் அப்படியே தலைகீழ். கொட்டையை விட்டுவிட்டு பழத்தின் சதைப்பற்றான பகுதியைக் காயவைத்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த அவகாடோ எண்ணெய் சரும அழகுக்கும், கூந்தல் வளர்ச்சிக்கும் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.

அவகாடோ பழத்தை நறுக்கும்போதெல்லாம் எனக்கு இரண்டு வலையுலகத் தோழிகளின் நினைவு தவறாமல் வந்துவிடும். ஒருவர் 'காகிதப் பூக்கள்'  வலைப்பூ தோழி ஏஞ்சலின். அவகாடோவைப் பயன்படுத்திய பிறகு கிண்ணம் போன்ற அதன் மேற்தோலை மறுசுழற்சியாக விதை முளைப்புக்குப் பயன்படுத்தலாம் என்று குறிப்பிட்டிருந்தார்.  அதிலிருந்து நானும் அதைச் செய்யத் தொடங்கியிருக்கிறேன். மற்றொருவர் 'இது இமாவின் உலகம்' வலைப்பூ தோழி இமா கிறிஸ். அவர் அவகாடோ கொட்டையை முளைவிட வைக்கும் உத்தியைப் பகிர்ந்திருந்தார். அவகாடோ கொட்டையில் ‘ஃ’ போல மூன்று இடங்களில் பல் குத்தும் குச்சிகளைச் சொருகி அரை டம்ளர் தண்ணீரில் பாதியளவு மட்டும் மூழ்கும்படி வைத்தால் ஒரு சில நாட்களில் வேர் விட்டு முளைவிடும். பிறகு அதை எடுத்து தோட்டத்தில் வைக்கலாம் என்று சொல்லி இருந்தார். நான் ஒரு தடவை அதைப் போல் செய்ய முயற்சி செய்தேன். பலனில்லை. ‘சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்’ என்பது போல, ‘சீச்சீ, அவகாடோ மரம் மாமரத்தைப் போல ஒரு பெரிய மரம், விதையிலிருந்து வளர்ந்து காய்க்க வேண்டும் என்றால் குறைந்தது பத்து வருடமாவது ஆகும், யாரால் அதுவரை பராமரித்துக்கொண்டு, பழத்துக்காகக் காத்திருக்க முடியும்? அதனால் முளைவிடாதது நல்லதுதான்’ என்று சமாதானப்படுத்திக்கொண்டேன்.  

மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் குட்டி ஆரஞ்சு மரத்தின் கீழ் ஒரு அடி உயரத்துக்கு பெரிய இலைகளோடு ஒரு செடியைப் பார்த்தேன். இது என்ன செடி, புதிதாக இருக்கிறதே என்று பார்த்தால் மண்ணுக்கு மேலாகவே அவகாடோ கொட்டை வெடித்து முளைவிட்டு வேரும் விட்டிருந்தது. பார்த்தவுடன் எனக்கு ஒரே இன்ப அதிர்ச்சி. எப்படி இது இவ்வளவு நாட்கள் என் கண்ணில் படாமல் போனது? வாரத்துக்கு இரண்டு என்ற கணக்கில் இவ்வளவு காலமாக அவகாடோவின் கொட்டைகளையும் தோலையும் தோட்டத்திற்கு உரமாகப் போட்டுவருகிறேன். ஆனால் ஒரு தடவை கூட எதுவும் முளைத்ததில்லை இது எப்படி சாத்தியம் என்று ஒரே ஆச்சரியம். ஒரு அடி உயரத்துக்கு செடி இருந்ததால் அதை அப்படியே எடுத்து ஒரு தொட்டியில் வைத்து நட்டு விட்டேன். அதற்கு மேல் அதை என்ன செய்வது என்று தெரியவில்லை.




பெரிய மரமானால்தானே பிரச்சினை! தொட்டியில் இருப்பதை அப்படியே போன்சாய் போல வளர்க்கலாமா என்று ஒரு யோசனை! ஏனென்றால் இருக்கும் குறைந்த இடத்தில் ஏற்கனவே நிறைய மரங்களை வைத்தாகிவிட்டது. மா, கொய்யா, எலுமிச்சை, ஆரஞ்சு, கமலா ஆரஞ்சு, வாழை, மாதுளை என்று வகைக்கு ஒன்று வைத்திருக்கிறேன். இதில் அவகாடோ மரத்துக்கு எங்கே இடம்?



போன்சாய் வளர்ப்பதிலும் ஒரு பரிசோதனை முயற்சியாக இது இருக்கட்டுமே என்று நினைத்தேன். ஆனால் இந்த அவோகாடோ கன்று என் ஆசைக்குக் கட்டுப்படவில்லை. வளர்ச்சி என்றால் அசுர வளர்ச்சி. மாந்தளிரைப் போல செஞ்சாந்து நிறத்தில் துளிர் விட்டு மளமளவென்று இலைவிட்டு கிளை பரப்பி வளர ஆரம்பித்துவிட்டது. வெட்டிவிட வெட்டிவிடக் கூடுதல் கிளை வெடித்து நாலா பக்கமும் பரவி செழிப்பாக வளர ஆரம்பித்துவிட்டது. 

அவகாடோவின் இலைகள் கூட மருத்துவக் குணம் கொண்டவை என்று அறிந்தபோது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. பழத்தை விடவும் இலையில்தான் கூடுதல் antioxidants  இருக்கின்றனவாம். நீரிழிவு, சிறுநீரகக் கல், இரத்த அழுத்தம், சீரணக் கோளாறு, தலைவலி, ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளுக்கு அவகாடோ இலை டீ நல்ல தீர்வு என்று ஆய்வுகள் மூலம் அறிந்த பிறகு நானும் அடிக்கடி அவகாடோ இலை டீ குடிக்க ஆரம்பித்திருக்கிறேன். டீ என்றாலே டீ அல்ல, கசாயம்தான். ஆனால் ருசியான கசாயம். தயாரிப்பதொன்றும் சிரமம் இல்லை. ஒரு டம்ளர் நீரில் இரண்டு அவகாடோ இலைகளைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து சாறு இறங்கியதும் இலைகளை எடுத்துப் போட்டுவிட்டுக் குடிக்கவேண்டியதுதான். அப்புறமென்ன? அடிக்கடி அவகாடோ டீ குடிக்க ஆரம்பித்துவிட்டேன். கசாயம் என்றாலும் கசக்கவில்லை. அவகாடோ வாசத்தோடு நன்றாகவே இருக்கிறது.


ஒரு நாள் ஒரு புதிய வண்ணத்துப்பூச்சி அவகாடோ இலைகளை வட்டமிட்டுக் கொண்டிருந்தது. பூக்கவே இல்லையே, அதற்குள் இங்கே வண்ணத்துப்பூச்சிக்கு என்ன வேலை என்று பார்த்தால். அந்த அழகிய நீல முக்கோண வண்ணத்துப்பூச்சி அவகாடோவின் கொழுந்து இலைகளில் ஆங்காங்கே குட்டிக் குட்டியாக முட்டையிட்டுக் கொண்டிருந்தது. இத்தனை வருடங்களாக நான் பார்த்திராத ஒரு வண்ணத்துப்பூச்சி இனம், அவகாடோ இலைகளில்  முட்டையிடக்கூடிய ஒரு வண்ணத்துப்பூச்சி இனம், இந்தக் குட்டி மரத்தைத் தேடிவந்து முட்டையிட்டது எனக்கு மிகப்பெரிய ஆச்சர்யத்தை அளித்தது.

  



தொட்டியை வீட்டின் புறச்சுவருக்கு சற்று நெருக்கமாக வைத்திருந்தேன். அதனால் சற்று நகர்த்தி வைக்கலாம் என்று நகர்த்தினால் தொட்டியை அங்குலமும் அசைக்க முடியவில்லை. என்னவென்று பார்த்தால், அவகாடோ கன்று, வளரும் வேகத்தில் தொட்டியின் அடியிலிருக்கும் ஐந்து துவாரங்களையும் துளைத்துக்கொண்டு ஐந்து பக்கமும் ஆணிவேர்களை மண்ணுக்குள் ஆழமாக இறக்கியிருப்பது புரிந்தது. தொட்டியை அசைக்கவே முடியவில்லை. பிறகு எங்கே நகர்த்துவது? சரி அப்படியே வளரட்டும் என்று விட்டுவிட்டேன். ஆனால் அது பெரிய மரமாகி வீட்டின் அஸ்திவாரத்தை பாதிக்கும் என்று வீட்டுக்கு வருவோர் எல்லாரும் சொல்லும்போது அதை எப்படி அப்படியே விடுவது என்று மனதுக்குள் ஒரே சஞ்சலம்.


ஆடிக்கொரு தடவை, அமாவாசைக்கொரு தடவை தோட்டத்துப் பக்கம் எட்டிப் பார்க்கும் கணவர், ஒரு தடவை பெரிய பெரிய இலைகளோடு தொட்டியில் இருந்த அவகாடோ மரக்கன்றைப் பார்த்து இது என்ன செடி என்று கேட்டார். அவகாடோ என்றேன். அவருக்கு அவகாடோ மரமா, செடியா, கொடியா என்றெல்லாம் தெரியாது. அதனால் எதுவும் சொல்லவில்லை. இப்போது போய் அவரிடம் அவகாடோ மரம் பற்றிச் சொல்லி பீதியைக் கிளப்ப விரும்பவில்லை. ஏதாவது மாற்று யோசனை கேட்கலாம் என்றால் யாராவது சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்வார்களா
? அதனால் கம்மென்று இருந்துவிட்டேன். ஆனால் எப்படியாவது இந்த அவகாடோ மரக்கன்றை நகர்த்தி வேறு இடத்தில் வைத்து விட வேண்டும் என்று உள்ளுக்குள் ஒரே நச்சரிப்பு.

தோட்டவேலை செய்யும் ஒருவரிடம் அவகாடோ மரத்தை இடம் மாற்றி வைப்பது குறித்துக் கேட்டேன். வயது கேட்டபோது மூன்று முடிந்து நான்காவது என்றேன். நிச்சயமாக நகர்த்தி வைப்பதில் பிரச்சனை இருக்காது. நன்கு ஆழமாகத் தோண்டி எடுத்து வைத்து விடலாம். ஆனால் மறுபடியும் அது வேர் விட்டு பிழைத்துக் கொள்ளுமா என்பதை உறுதியாகச் சொல்லமுடியாது என்றார். எனக்கு மிகவும் ஆற்றாமையாகப் போய்விட்டது.

மூன்றரை வருடங்களுக்கும் மேலாக பார்த்து பார்த்து வளர்த்த மரம். எனக்கு இந்த மரத்திலிருந்து அவகாடோ பழங்களைப் பறித்துத் தின்ன வேண்டும் என்ற பேராசை எல்லாம் இல்லை. என்னுடைய முயற்சி எதுவும் இல்லாமல் தானாகவே வளர்ந்த அது அழிந்துபோவதில் எனக்கு உடன்பாடில்லை.

எத்தனையோ விதைகள் மண்ணோடு மண்ணாய் மக்கிப் போயிருக்கும் போது இந்த ஒரு விதை மட்டும் வளர்வதற்கான வாய்ப்பை எடுத்துக்கொண்டு வளர்ந்து இருக்கிறது. அதுவும் மண்ணுக்கு வெளியிலேயே! ஒரு அடி உயரம் வளரும் வரை என் கண்ணில் படாமல் இருந்திருக்கிறது. தினமும் நான்தான் எல்லாச் செடிகளுக்கும் தண்ணீர் ஊற்றுகிறேன். ஆரஞ்சு மரத்தடியில் இருந்த அது மட்டும் என் கண்ணில் படவில்லையே. அப்படி தன்னை பெரும் முயற்சிக்குப் பிறகு வளர்த்தெடுத்த அந்த விதையை, அந்த விதை உருவாக்கிய கன்றை நான் அலட்சியம் செய்வது முறையல்ல என்று தோன்றியது. எப்படியாவது இந்த மரத்தை வாழ வைத்துவிடவேண்டும் என்று நினைத்தேன்.

தோட்டப் பணியாளர் மரக்கன்றின் மறுவாழ்வுக்கு உறுதியளிக்காத நிலையில், மரக்கன்றை அடியோடு வெட்டிவிடுமாறு கணவர் அறிவுறுத்த ஆரம்பித்துவிட்டார். நான் ஒரு முடிவுக்கு வந்தேன். மரத்திடம், “இவ்வளவு கஷ்டப்பட்டு வளர்ந்திருக்கிறாய். இன்னும் ஒரு கஷ்டத்தைத் தரப்போகிறேன். எப்படியாவது அதிலிருந்தும் மீண்டு வா!” என்று சொல்லிவிட்டு, தொட்டியின் ஐந்து துவாரங்களையும் பொத்துக்கொண்டு அரக்கனின் கரத்தைப் போல களிமண் தரைக்குள் ஆழமாய் இறங்கி தன் இருப்பை இறுகப் பற்றியிருந்த ஐந்து கடினமான வேர்களையும் வெட்டி தொட்டியை மண்ணின் பிடியிலிருந்து விடுவித்தேன். நான்கு வருட இளந்தாரி மரத்தை வேறொரு பெரிய தொட்டிக்கு மாற்றினேன். தொட்டிக்கு அடியில் தட்டு வைத்து வேர்கள் மீண்டும் தரைக்குள் போகாதிருக்க வழி செய்தேன். தினமும் தவறாமல் தண்ணீர் ஊற்றினேன். மறுநாள் தொங்கிப் போயிருந்த இலைகளையும் சிறு கிளைகளையும் 'கவாத்து' செய்துவிட்டேன். கிட்டத்தட்ட ஒரு மாத காலம் கன்று எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருந்தது. தினமும் தண்ணீரோடு அதற்கு நம்பிக்கையையும் ஊட்டி வந்தேன். மரம் காய்க்குமோ காய்க்காதோ தெரியாது. ஆனால் அது சாகக்கூடாது என்பது மட்டுமே என் வேண்டுதலாக இருந்தது.



அவகாடோ கன்று என்னை ஏமாற்றவில்லை. இதோ புத்தம்புது துளிர்கள் விட்டு தன் மறுவாழ்வை மகிழ்ச்சியோடு வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. நேற்று மறுபடியும் ஒரு நீல முக்கோண வண்ணத்துப்பூச்சி அவகாடோ இலைகளை வட்டமிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். 

எத்தனை இடர்கள் வந்தாலும் 'வாழவேண்டும்' என்ற வேட்கையும் வாழ்வின் மீதான நம்பிக்கையும் இருந்தால் எதுவும் சாத்தியமே என்ற பாடத்தைப் புகட்டியபடி அழகாய் நிற்கிறது என் செல்ல அவகாடோ மரக்கன்று. 

(பிரதாபம் தொடரும்)