29 February 2024

ஜினியாவைத் தேடிவரும் ஜீவன்கள்

 தோட்டத்துப் பிரதாபம் - 28

கோடை முடியப்போகும் இந்த சமயத்தில் அழகழகான ஜினியா பூக்களால் தோட்டம் உயிர்ப்புடன் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. சென்ற வருடத்தை விடவும் இந்த வருடம் நிறையப் பூக்கள். ஸ்பெஷலாக அடுக்கு ஜினியா பூக்களும் பூத்துள்ளன. செவ்வந்தி போல அவை அடுக்கடுக்காகப் பூத்துக்கொண்டே போவது பார்க்க அவ்வளவு அழகாக இருக்கிறது.

 

1. அடுக்கு ஜினியா

ஆச்சர்யமாக எல்லா பூக்களுமே கிட்டத்தட்ட அடர் பிங்க் நிறம். அந்த அழகிய புறவிதழ்களுக்கு நடுவில் குட்டிக் குட்டியாக மஞ்சள் நிறத்தில் உண்மையான பூக்கள். அந்தக் குட்டிப் பூவுக்குள் எவ்வளவு தேன்தான் இருக்குமோ? வண்ணத்துப்பூச்சிகளும் தேனீக்களும் எந்நேரமும் பூக்களை வட்டமிட்டுக்கொண்டே இருக்கின்றன.

2. ஜினியா பூக்கள்

ஜினியா பூக்களில் தேனெடுக்க வண்ணத்துப்பூச்சிகளும், ஈக்களும், தேனீக்களும் மாறி மாறி வருகின்றன. இலைகளையும் பூக்களையும் உணவாக்கிக்கொள்ள வெட்டுக்கிளிகளும், அசுவினிப் பூச்சிகளும் வருகின்றன. அசுவினிப் பூச்சிகளை உணவாக்கிக்கொள்ள பொறிவண்டுகள் வருகின்றன. செடியிலேயே முட்டையிட்டு அவற்றின் லார்வாக்கள் உணவுப்பஞ்சமின்றி வாழ வழி செய்கின்றன. இலைகளுக்கு அடியில் இருக்கும் புழுக்களைத் தேடி குளவிகள் வட்டமிடுகின்றன. போதாதென்று சிலந்திப்பூச்சிகள் ஜினியா செடியின் காம்புகளுக்கு இடையே வட்ட வட்டமாக வலை பின்னிவைத்துக்கொண்டு, தேனெடுக்க வரும் பூச்சிகளைக் கபளீகரம் செய்யக் காத்திருக்கின்றன. 

இந்த ஜினியா செடிகளையும் பூக்களையும் வாழ்வாதாரமாகக் கொண்டு எவ்வளவு ஜீவன்கள் வாழ்கின்றன. இயற்கையின் சார்புத்தத்துவம் வியக்கவைக்கிறது. எங்கள் தோட்டத்து ஜினியாக்களைத் தேடிவரும் எண்ணற்ற ஜீவன்களுள் என் கேமராவுக்குள் சிக்கிய சில மட்டும் இங்கே...  


3. மோனார்க் வண்ணத்துப்பூச்சி

 

4. ப்ளூ மூன் வண்ணத்துப்பூச்சி

5. நீல முக்கோண வண்ணத்துப்பூச்சி


6. கேபேஜ் ஒயிட் வண்ணத்துப்பூச்சி


7. வெட்டுக்கிளி

8. இலைவெட்டித் தேனீ


9. நீல வரித் தேனீ

10. குளவி


11. சிலந்தியும் தேனீயும்

12. நீல வரித் தேனீ

13. மோனார்க் வண்ணத்துப்பூச்சியும் சிலந்தியும்


14. சிலந்தியும் அதற்கு இரையான ஈயும்

15. இலைவெட்டித் தேனீ

16. பொறிவண்டு

17. சிலந்தியும் பொறிவண்டின் லார்வாவும்


ஜினியா பற்றி ‘பூக்கள் அறிவோம்’ தொடரில் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அதை மீண்டும் இங்கே ஒரு முறை பதிவு செய்கிறேன். 

ஜினியா பூ டெய்சி குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் பூர்வீகம் அமெரிக்கா. இம்மலர் குறித்து முதலில் வரையறுத்த ஜெர்மானிய தாவரவியல் வல்லுநர் Johann Gottfried Zinn அவர்களின் நினைவாக இதற்கு zinnia என்று பெயரிடப்பட்டுள்ளது. 

வண்ணத்துப்பூச்சிகளுக்கும் தேனீக்களுக்கும் மிகப் பிடித்தமான பூக்கள் இவை என்பதால் தோட்டங்களை உயிர்ப்புடன் வைத்திருக்கவும் மகரந்தச் சேர்க்கை நடைபெறவும் அவை பெரிதும் உதவுகின்றன. விதைகள் முற்றி வெடித்துச் சிதறுவதன் மூலம் புதிய செடிகள் தாமே உருவாகின்றன. 

நீளமான காம்புகளில் வண்ண வண்ணமாய்ப் பூக்களை மலர்த்துவதாலும், செடியிலிருந்து பறிக்கப்பட்ட பிறகும் ஒரு வாரத்துக்கு வாடாதிருக்கும் தன்மையாலும் ஜினியா பூக்கள், பூச்சாடிகளையும் பூங்கொத்துகளையும் அலங்கரிக்கப் பயன்படுகின்றன. வாடிய பிறகும் கூட உலர் மலரலங்காரத்தில் இடம்பெற்று பிறவிப்பயனை முழுமையாய் அடைகின்றன. 

நட்பின் அடையாளமாக, முக்கியமாக பிரிந்துபோன நட்பின் அடையாளமாக இவை கருதப்படுகின்றன. அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தின் மாநில மலர் என்ற பெருமையும் சில வருடங்கள் (1937 – 1951) இதற்கு இருந்திருக்கிறது.   

இன்று இவ்வளவு கொண்டாடப்படும் ஜினியா பூக்கள் முற்காலத்தில் அசிங்கமான பூக்களென்று அலட்சியப்படுத்தப் பட்டிருந்தனவாம். ஐரோப்பாவில் அறிமுகமான சமயம், எளிதாய் எம்மண்ணிலும் வளரும் தன்மையால் ‘ஏழைவீட்டுப் பூ’ என்று அழைக்கப்பட்டதாம். இதன் பூர்வீகமான மெக்சிகோவில் இதன் பெயர் mal de ojos. அதற்கு ‘கொள்ளிக் கண்’ என்று அர்த்தமாம். என்னவொரு முரண் பெயர்!

ஜினியா பூக்களில் தேனெடுக்கும் வண்ணத்துப்பூச்சிகளை சிறு காணொளியாக என்னுடைய youtube channel-ல் பதிவேற்றம் செய்திருக்கிறேன். விருப்பமுள்ளவர்கள் பார்க்கலாம். 


https://www.youtube.com/watch?v=gJTi2YVpKRs&t=9s&ab_channel=GeethaMathi

பிரதாபங்கள் தொடரும்.

6 comments:

  1. உங்கள் தோட்டமும், தோடத்தில் பூக்களும், பூக்களில் இருக்கும் தேனுக்காக வரும் உயிரினங்களும் எல்லாமே ஈர்க்கின்றன. பதிவு செய்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிக்க நன்றி வெங்கட்.

      Delete
  2. Anonymous29/2/24 21:28

    தோட்டம், ஜினியா பூக்கள் அடுக்கு ஜினியா....அதைத் தேடி வந்த தேனீ, வண்ணத்துப் பூச்சி எல்லாமே மனதைக் கவர்கின்றன. மனதிற்கு மிக நல்ல ரிலாக்ஸ் ஆக்கும் விஷயங்கள்.

    அதை நீங்க மிக அழகாகப் படம் எடுத்திருக்கீங்க கீதா. எல்லாப் படங்களையும் ரசித்தேன் நீல வரித் தேனீ, சிலந்தி அதன் இரை ஈ, பொறி வண்டு லார்வா என்று மிக நுணுக்கமாக எடுத்திருக்கீங்க...ரொம்ப ரசித்துப் பார்த்தேன். புகைப்படக் கலை ரொம்பப் பிடிக்கும்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. உங்களுடைய அழகான பின்னூட்டத்திலிருந்தே உங்கள் புகைப்பட ஆர்வம் தெரிகிறது. மிக்க நன்றி கீதா.

      Delete
  3. மிக அருமையான படங்கள். ஒவ்வொன்றையும் ரசித்தேன். காணொளித் தொகுப்பும், தகவல்களும் நன்று.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் படங்களை ரசித்தமைக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.