29 November 2011

தாய்மை


இடுப்பு நோகுதம்மா என்று
இயல்பாய்ச் சொன்னபோதும்,
துடித்துப் பதறித் தொடுக்கிறாள்,
தொடர்க் கேள்விக் கணைகளை!

வலிகளைத் தரம்பிரித்துச் சொல்லி,
வந்த வலி எந்த வலி என்கிறாள்;
பொய்யோ மெய்யோவென்று அறிய
பெருஞ்சீரகக் கஷாயம் தந்து,
பெரிதொரு ஆராய்ச்சி செய்கிறாள்!
மெய்யென்றறிந்த பின்னோ....
செய்வதறியாது கைபிசைந்துநிற்கிறாள்!

விண்ணென்று தெறிக்கும் வேதனையை,
விளக்கிச் சொல்ல இயலாது,
அம்மா, அம்மாவென அரற்றும் என்னை,
ஆதரவாய்த் தழுவிக் கொள்கிறாள்!

கூந்தல் அலசவும் அதுநாள்வரை
குளியலறைக்குள் அனுமதித்திராத அவளை,
கூடவே இருக்கச் சொல்லி,
கரம் பற்றிக் கொண்டபோது,
காணச் சகியாமல் கண்ணீரை உகுக்கிறாள்!

அன்றொருநாள் அவளுற்றதும்
இதே துயரம் என்றறிந்தபோதும்,
இன்றென் குறுக்குவலி பொறுக்காது,
முந்தானையால் முகம்பொத்திக் குலுங்குகிறாள்!

சுகமாய்ப் பிரசவிக்க வேண்டுமென்று,
குலதெய்வத்தை வேண்டுகிறாள்;
போதாதென்று கூடவே அழைக்கிறாள், அவள்
பார்த்தேயிராத பல தெய்வங்களை!

அப்பாவின் செல்லமென்று இருந்தவள்,
அம்மாவின் பெண்ணானேன்,
அழகிய என் தேவதை
அவதரித்தக் கணம் முதலாய்!

என்னிலும் பன்மடங்கு தவித்து,
வேதனையில் வியர்த்து நின்ற
என் அம்மாவின் ஆர்ப்பாட்டம் கண்டு
பரிகசிப்பது போல்
சின்ன இதழ் கோணி,
கன்னக் கதுப்பில் குழி விழ,
புன்னகைக்கும் மென்பூவைக் கையிலேந்தி,
என்ன பாடு படுத்திவிட்டாயடி,
என் பெண்ணை? என்று
செல்லமாய்க் கடிகிறாள்!

என்னவோ புரிந்ததுபோல்
அழுகைக்கு ஆயத்தமாய்
உதடு பிதுக்கும் மகளின் துன்பம்
காணப்பொறுக்காமல்,
முகம் திருப்பிக் கொள்கிறேன், நான்!

27 November 2011

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? (25)சுந்தரி தனக்கென்று அந்த வீட்டில் மட்டுமல்ல, நாகலட்சுமியின் மனதிலும் ஒரு இடத்தை உருவாக்கிக்கொண்டாள். இப்போதெல்லாம் நாகலட்சுமிக்கு விக்னேஷை  விடவும் சுந்தரியின் தயவே அதிகம் தேவைப்பட்டது.
அந்தரங்கமாய் தன் உடல் வேதனைகளை அவளிடம் பகிர்ந்துகொள்ள முடிந்தது. சுந்தரியும் அவருக்குத் தன்னாலான உதவிகள் செய்தாள்.
நாகலட்சுமிக்கு ஷவரில் குளிக்கப்பிடிக்காது. குவளையில் முகர்ந்து ஊற்றிக்குளிப்பதே விருப்பம். அவருக்கு வசதியாக முக்காலியொன்றில் வெந்நீர் அண்டாவை வைத்து அவர் நீரை முகர்ந்து ஊற்றிக்குளிக்க உதவினாள். மேற்கத்திய கழிவறையானாலும் ஒவ்வொருமுறையும் உட்கார்ந்து எழ அவர் பட்ட சிரமத்தை அறிந்து, பிடித்துக்கொண்டு எழ உதவியாக தலைக்குமேல் உறுதியான கயிற்றுப்பிடிமானம் ஒன்றை ஏற்பாடு செய்தாள். இத்தனை நாள் தங்களுக்கு இந்த உபாயம் தோன்றவில்லையே  என்று நாகலட்சுமியும் விக்னேஷும் அதிசயித்தனர்.  
சுந்தரி தன்னை ஒரு வேலைக்காரியாய் நினைத்திருந்தாலும், நாகலட்சுமி அவளைத் தன் மகளாய் தோழியாய் எண்ணத் தொடங்கியிருந்தாள்.  விக்னேஷுக்கு அம்மாவின் இந்த புதிய அவதாரம் இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தது.
சுபா, எந்நேரமும் விக்னேஷைப் பற்றியிருந்தாள். இதனால் நாகலட்சுமிக்கு கோபம் உண்டாகவில்லை என்பதும் விக்னேஷை ஆச்சர்யப்படுத்திய இன்னுமொரு விஷயம்.
இதற்கெல்லாம் காரணம் சுந்தரிதான் என்பது தெரியவந்தபோது, சுந்தரிக்கு மனமார நன்றி சொன்னான். இத்தனைக்காலம் தானும் மருந்து மாத்திரைகளும் செய்ய முடியாததை சுந்தரி இந்த ஒரு மாதத்தில் செய்துவிட்டாளே என்று வியந்தான்.
சுந்தரிக்கு நாகலட்சுமியின் இந்த மாற்றம் வரவேற்கத்தக்கதாயிருந்தாலும், அவள் இன்னமும் சற்று எச்சரிக்கையுடனேயே இருந்தாள். நாகலட்சுமியைக் கேட்காமல் குழம்புக்கு கறிவேப்பிலையும் கிள்ளிப்போடுவதில்லை என்ற முடிவில் உறுதியாய் இருந்தாள்.
நாகலட்சுமியே ஒரு கட்டத்தில் சலித்துக்கொண்டார்.
"என்ன பொண்ணு நீ? இதுக்கெல்லாமா என்கிட்ட அனுமதி கேப்பாங்க? இவ்வளவு நாள் பழகியிருக்கேல்ல....? நீயே முடிவெடுத்து செய்யி!"
சுந்தரிக்கு எதுவும் செய்யத் தெரியாமல் இல்லை. அந்த வீட்டில் சுந்தரியின் வருகையால் நாகலட்சுமியின் முக்கியத்துவம் குறைந்துவிட்டதாய் அவர் எண்ணிவிடக்கூடாது என்பதில் கவனமாய் இருந்தாள்.
நாகலட்சுமிக்கு தன்னால் வேலைகளை செய்யமுடியவில்லை என்ற சுயபச்சாதாபம் இருந்துகொண்டிருந்ததால், எல்லா வேலைகளையும் சுந்தரி செய்யும்போது அவருக்கு அந்த எண்ணம் தீவிரமாய் வந்துவிடக்கூடாது என்று பயந்தாள். அதனால் சுந்தரி வேலை செய்யும்போது, சுபாவைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை அவர் விருப்பமில்லாமலேயே அவரிடம் தந்தாள்.
சுபாவின் விஷயத்தில் முதலில் அவர் அவ்வளவாய் ஆர்வம் காட்டவில்லை என்றாலும், நாளடைவில் சுபாவின், துறுதுறுப்பும், பொக்கைவாய்ச்சிரிப்பும் அவரைக் கவர்ந்துவிட்டன.
சுபா அப்போதுதான் குப்புற விழப் பழகியிருந்தாள். அதனால் எதிர்பாராத நேரத்தில் குப்புற விழுந்து மூக்கு அடிபட்டுத் துடிப்பாள். சிலசமயம் தொடர்ந்தாற்போல் கொஞ்ச நேரம் குப்புறப்படுத்திருந்துவிட்டு வலியெடுத்து அழுவாள். அவள் விழித்திருக்கும்போது, யாராவது ஒருவர் அவள் கூடவே இருந்து கண்காணிக்க வேண்டியிருந்தது. அதனால் சுந்தரி, எப்போதும்  நாகலட்சுமியின் அருகில்  தலையணைகளை பரப்பி அவளைப் படுக்கவைத்துவிடுவாள்.
படித்துக்கொண்டோ, தொலைக்காட்சி பார்த்துக்கொண்டோ இருக்கும் நாகலட்சுமியின் கவனத்தைக் கவர சுபா என்னென்னவோ பிரயத்தனங்கள்  செய்வாள்.
'ஆங்....ஊங்....' என்று ஏதோ பேசுவாள். ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்…………’ என்று எச்சிலைத் தெளிப்பாள். 'கெக்க்கெக்க்க்' என்று தானே சிரிப்பாள். கையில் கிடைத்ததை வாயில் வைத்து வாயிலெடுப்பாள்.
நாகலட்சுமியின் கவனத்தை எப்படியும் தன்பக்கம் திருப்பிவிடுவாள். அவரும் இவளுடன் கொஞ்சிப் பேசத்தொடங்க, கண்ணுக்குத் தெரியாத அன்புச்சங்கிலியொன்று  இருவரையும் பிணைக்கத் தொடங்கியது.
"சுந்தரி, விக்னேஷுக்கு விவா கலந்து கொடுத்திட்டியாம்மா?"
"குடுத்திட்டேம்மா....உங்களுக்குக் கொஞ்சம் பால் கொண்டுவரவா?"
"எனக்கெதுக்கு அதெல்லாம்? "
"அன்னைக்கு டிவியில டாக்டர் சொன்னாரில்ல...எலும்பு வலுவா இருக்கணும்னா தெனமும் பால் சேத்துக்கணும்னு! உங்களுக்குதான் அடிக்கடி மூட்டுவலி வருதே! பால் குடிச்சா சரியாயிடுமில்ல...."
நாகலட்சுமி சிரித்தார்.
"நல்ல பொண்ணு! இது பால் குடிச்சு சரி பண்ற நோயில்ல. மூட்டு தேஞ்சுபோயிடுச்சி. ஆபரேஷன் பண்ணி செயற்கை மூட்டுப் பொருத்தணும். லட்சரூபா ஆகும். எல்லாம் அனுபவிக்கணும்னு என் தலையில் எழுதியிருக்கு."
"அப்படியா? ஆபரேஷன் பண்ணிதான் சரியாவுமா?"
"ஆமாம்! ஆபரேஷனுக்கப்புறம் குனிய நிமிர முடியும்கிறாங்க, கீழ கூட உக்கார முடியுமாம்."
"அப்ப பண்ணிக்க வேண்டியதுதான?"
"பண்ணிக்கலாம், பாழாப்போன சர்க்கரை வியாதி இல்லைனா...."
நாகலட்சுமி சலித்துக்கொண்டார்.
"கவலப்படாதீங்கம்மா! சீக்கிரம் குணமாகி நல்லா நடமாட ஆரம்பிச்சிடுவீங்க."
சுந்தரி அவரைத் தேற்றினாள்.
"ஹும்! அந்த நம்பிக்கையிலதான் இருக்கேன்.
தைலத்தை எடுத்து அவர் கால்களில் தடவி நீவ ஆரம்பித்தாள். நாகலட்சுமி மறுக்கவில்லை. அப்போதைக்கு அவருக்கு அவளது உதவி தேவைப்பட்டது.
நாகலட்சுமியின் கால்களை தன் மெல்லிய கரங்களால் அழுந்தப் பிடித்துவிட்டுக்கொண்டிருந்தாள், சுந்தரி. விக்னேஷ் பிடிப்பதற்கும் இவள் பிடிப்பதற்கும் நிறைய வேறுபாடு இருந்தது. விக்னேஷ் எவ்வளவு மெதுவாகப் பிடித்தாலும் அதில் லேசான முரட்டுத்தனம் வெளிப்படும். இவளிடம் அது இல்லாததால் இதமாக இருந்தது.
நாகலட்சுமிக்கு சுந்தரியைப் பார்க்க பாவமாய் இருந்தது. இந்தப் பெண் தன் அன்பால் என்னை வசியம் செய்துவிட்டாளே? இவளுடைய களங்கமற்ற அன்புக்கு ஈடாய் நான் எதைத்தான் தருவது? விக்னேஷ் சொன்னதுபோல் இவளுக்கும் குழந்தைக்கும் நல்லதொரு எதிர்காலத்தை அமைத்துத்தருவதே என்னால் முடிந்த கைம்மாறு!
சுந்தரி, நீ எனக்கு மகளாய் பிறந்திருக்கவேண்டியவள்! உன்னைத் தவறாய் நினைத்த என்னை மன்னிச்சிடு, அம்மா!
நாகலட்சுமியின் மனம் சுந்தரியின் காலடியில் கிடந்து மன்றாடியது.
ஆனால் சுந்தரியின் மனமோ பிரபுவின் நினைவுகளில் தஞ்சமடைந்திருந்தது. இப்படிதான் அவனும் அவளுக்கு இதமாகக் கால்பிடித்துவிடுவான்.
மாதம் ஏற ஏற, வயிற்றின் பாரம் தாங்காமல் கால்வலி வந்து மிகவும் சிரமப்பட்டாலும், அவள் அதை வெளியில் சொல்லமாட்டாள். பிரபு தூங்கியதும் அவனைறியாமல் தைலம் எடுத்துத் தானே தடவிக்கொள்வாள். வாசம் உணர்ந்து விழித்துவிடுவான். பின் என்ன? அவள் தடுக்கத் தடுக்க, அவள் தூங்கும்வரை அவளுக்குக் கால்பிடித்துவிடுவான்.
எத்தனை அன்பு வைத்திருந்தான்? இவ்வளவு சீக்கிரம் போவோம் என்று தெரிந்துதான் இருந்த கொஞ்ச நாளிலேயே திகட்டத் திகட்ட அன்பைப் பொழிந்தானோ? அந்த அன்புக்கு ஈடே கிடையாது. னி ஒருவர் என் வாழ்வில் அதே அன்பைத் தரவே முடியாது.
பிரபுவின் நினைவுமின்னல் தாக்கியதும், சுந்தரி நிலைகுலைந்துபோனாள். சட்டென்று விழிகள் கண்ணீரை உகுத்தன. நாகலட்சுமி திடுக்கிட்டார்.
"என்னம்மா, சுந்தரி?"
"ஒண்ணுமில்லைம்மா...அவர் நெனப்பு வந்திடுச்சு!"
"சுந்தரி, உன் வேதனையை என்னால் முழுசாப் புரிஞ்சுக்க முடியுதும்மா....நானும் ஒரு காலத்தில் உன் நிலையில் இருந்தவதான். என்னைப் பத்திதான் உனக்கு சொல்லியிருக்கேனே! ஆனா.... நீ தைரியமான பொண்ணு!  நீயே இப்படி கலங்கலாமா? கவலைப்படலாமா? "
"உங்க ஆதரவு இருக்கிறவரைக்கும் நான் கவலைப்படமாட்டேன்மா!"
கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்துசென்றாள்.
அடுத்தநாளே சுந்தரியின் கவனம்  நாகலட்சுமியின் உணவு விஷயத்தில் நிலைகொண்டது. விக்னேஷுக்குப் பிடித்தது, நாகலட்சுமிக்கு ஏற்றது என சமையலில் இருவிதம் செய்தாள். நாகலட்சுமிக்கென்று செய்யும் சமையலில் எண்ணெய் அதிகம் சேர்க்காமல், தேங்காயையே கண்ணில் காட்டாமல், உப்பின் அளவைக் குறைத்து என்று ஏகப்பட்ட மாற்றங்கள் செய்தாள்.
இனிப்பு செய்தாலும் இரண்டாகச் செய்தாள். செயற்கை சர்க்கரை இட்டு நாகலட்சுமிக்கென்று தனியே செய்தாள். இதனால் சுந்தரிக்கு வேலை இரட்டிப்பானாலும், அலுப்பில்லாமல் செய்தாள்.
சுந்தரி பட்ட பாட்டுக்கு கைமேல் பலன் கிடைத்தது. மாதாந்திர ரத்தப் பரிசோதனையின் முடிவைப் பார்த்து டாக்டரே ஆச்சரியப்பட்டார். "என்ன மாயாஜாலம் செஞ்சீங்க?" என்றார்.
நாகலட்சுமி சுந்தரியைக் கைகாட்ட, டாக்டர் அவளைப் பெரிதும் பாராட்டினார். தொடர்ந்து சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருந்தால் விரைவிலேயே அறுவை சிகிச்சை செய்து செயற்கை மூட்டுப் பொருத்திவிடலாம் என்று நம்பிக்கை தெரிவித்தார். நாகலட்சுமி சுந்தரியின் கைகளைப் பற்றிக் கொண்டு ஆனந்தக்கண்ணீர் விட்டார்.
******************************************************************************
எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியர்
திண்ணியர் ஆகப் பெறின்.
மு.வ உரை:
எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக இருக்கப்பெற்றால் அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்.
-----------------------------------------
தொடர்ந்து வாசிக்க

22 November 2011

அவர்கள் குழந்தைகள்! (தொடர்பதிவு)


குழந்தைகள் பற்றிய தொடர்பதிவெழுத என்னை அழைத்த சாகம்பரி அவர்களுக்கும், அழைக்கவிரும்பிய ஆச்சி அவர்களுக்கும் என் அன்பான நன்றி. 

குழந்தைகளின் உலகம் பற்றிப் பலரும் பல கோணங்களிலும் தங்கள் சிறப்பான பார்வையைப் பதித்து மேலான கருத்துக்களை வழங்கியபின் விடுபட்டதைச் சொல்ல எனக்கு வாய்ப்பில்லை. 

இரு வளர்ந்த குழந்தைகளின் தாய் என்னும் வகையில் குழந்தைகள் பற்றிச் சொல்ல எஞ்சியுள்ளது ஒரு வாய்ப்பு. அது என் சொந்த அனுபவம். 

குழந்தைகள்தானே என்று அலட்சியமாக இல்லாமல் அவர்கள் சொல்வதையும் காதுகொடுத்துக் கேட்கும் வழக்கத்தையும், குழந்தைகளுக்குப் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஏமாற்றாமல் நம்மால் நிறைவேற்றக்கூடியவற்றை மட்டுமே சொல்லி அவர்களுடைய மனத்தில் நம்மீதான நம்பிக்கையை வலுப்படுத்தவும் என் மாமனாரிடமிருந்து கற்றுக்கொண்டேன். எங்கள் வீட்டுக் குழந்தைகளை சரியான முறையில் வளர்க்க அவருடைய இந்த அறிவுரைகள் பெரிதும் உதவின, இன்றும் உதவுகின்றன.


தவறு செய்யும் குழந்தைகளை அடித்தும் மிரட்டியும்தான் திருத்தமுடியும் என்று பெரும்பாலான பெற்றோர் நம்புவதைப் போலவே நானும் என் ஆரம்பக் கட்டத் தாய்மையின்போது நம்பியிருந்தேன். நாளடைவில் என் தவறுணர்ந்து பிள்ளைகளை அடிக்காமலும் திருத்தமுடியும் என்ற ஞானம் பெற்றபின் குழந்தைகளை அடிப்பதை அடியோடு(?) நிறுத்திவிட்டேன். அது ஆகிறது ஒரு மாமாங்கம்!
அடியை நிறுத்தியபின்னர் எனக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. அடிக்கும்போது  குழந்தைகளிடம் இருந்த முரட்டுக்குணம் அடியை நிறுத்தியபின் காணாமற்போனது. எப்படியெல்லாம் என் பிள்ளைகள் வளரவேண்டுமென்று விரும்பினேனோ அப்படியே என் பிள்ளைகள் வளர்ந்தார்கள்.
ஒரு பழமொழி சொல்வார்களே...நகத்தால் கிள்ளியெறிய வேண்டியதைக் கோடரி கொண்டு வெட்டுவார்களா என்று. நான் இத்தனை நாள் அதைத்தான் செய்திருக்கிறேன் என்பதை உணர்ந்து வருந்தினேன். வார்த்தைகளே போதும் என்னும் சூழலில் வன்முறைப் பிரயோகம் எதற்கு?

இந்தக் கருத்தை வைத்து சில நாட்களுக்கு முன் நான் எழுதிய கதை ஒன்றை இங்குப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இந்தத் தொடர்பதிவில் நான் சொல்ல நினைத்தக் கருத்துக்களையே இக்கதை பிரதிபலிப்பதால் இக்கதையை இங்கு பதிவதில் தவறேதுமில்லையென்று கருதிப் பதிகிறேன்.

****************************

கரைப்பார் கரைத்தால்....காய்கறிகளை எடுத்துவைத்துக் கொண்டு கழுவுவதற்கு குழாயைத் திறந்தால் காற்றுதான் வந்தது.

'என்ன இது? ஏதேனும் அடைப்பு இருக்கிறதா? காலையில்தானே மோட்டர் போட்டு தண்ணீர்த்தொட்டியை முழுவதுமாய் நிரப்பினேன். அதற்குள் எப்படி காலியாகும்? வேறு ஏதாவது குழாய் திறந்திருக்கிறதா?'

"வினீத்தம்மா! கொஞ்சம் வெளியில வந்து பாருங்க, இந்த அட்டகாசத்தை!"

தெருவோடு போகிற யாரோ போகிறபோக்கில் புகார் கொடுத்துவிட்டுப் போக,வினீத்தம்மா என்றழைக்கப்பட்ட மாதவி, சிந்தனை கலைந்தவளாய்,  இந்த முறை என்ன பிரச்சனையோ என்று கலவரத்துடன் கைவேலையை அப்படியே போட்டுவிட்டு வெளியில் ஓடினாள்.

அந்தத் தெருவில் குழந்தைகள் அதிகம். அதிலும் வினீத்தின் வயதையொத்த சிறுவர்கள் நிறைய இருப்பதால் எல்லாம் சேர்ந்து விளையாடி ஏதாவது ரகளை உண்டாக்குவது நித்தமும் நடைபெறும் செயலாயிற்று. தெருவோடு போகிற நாயைக் கல்லால் அடித்துத் துன்புறுத்துவது, பின் என்றாவது அது கடிக்கவந்தால் மூச்சிரைக்க ஓடி ஒளிவது, (சிலசமயங்களில் கடிபடுவது), கிரிக்கெட் விளையாடுகிறேன் என்று ஜன்னல் கண்ணாடிகளை உடைப்பது, தெருவில் இருசக்கரவாகனங்கள் போகும்போது குறுக்கும் நெடுக்கும் பாய்ந்து ஓட்டுபவர்களைப் பதற்றமடையச் செய்து, பின் அவர்களிடம் செம்மையாக வாங்கிக் கட்டிக்கொள்வது, இவைதவிரவும்......அவர்களுக்குள்ளேயே அடிதடி, தகராறு, உன்னுடையது, என்னுடையது என்ற உரிமைப்பிரச்சனை......அப்பப்பா! எத்தனைப் பிரச்சனைகள்!

விடுமுறை நாட்களிலோ ஒருநாள் போவது ஒரு யுகம் போவது போலத்தான். எந்நேரமும் வீட்டுக்குள் முடங்கிக்கொண்டு, கணினி விளையாட்டிலும், தொலைக்காட்சியிலும் காலத்தைக் கழிக்காமல் இப்படி ஓடியாடி விளையாடினால் நல்லதுதானே என்று வெளியில் அனுப்பினால் ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை யாராவது வந்து வினீத்தின் பேரில் கொடுக்கும் புகாருக்கு நடவடிக்கை எடுப்பதிலேயே அவள் பொழுது கரைந்துவிடுகிறது.

எத்தனை முறை அவனைக்  கண்டித்தாயிற்று! அடித்தும் பார்த்துவிட்டாள். அதுவும் மாதவிக்குக் கோபம் வந்துவிட்டால் கண்மண் தெரியாது. புகார் கொடுத்தவர்கள் முன்னிலையிலேயே மகனைத் துவைத்தெடுத்துவிடுவாள். மற்றவர்கள் மேலிருக்கும் கோபமெல்லாம் மகன்மேல் திரும்பிவிடும். அவனைப் பற்றிப் புகார் சொன்னவர்களே கண்கலங்கும் அளவுக்கு அவனைக் காயப்படுத்திவிட்டுதான் ஓய்வாள். ஆனாலும் அது ஒரு தொடர்கதைபோல் தினமும் நடக்கலாயிற்று.

வயது பத்து ஆகிறது. ஒருமுறை சொன்னால் புரிந்துகொள்ளவேண்டாமா? இப்படியே தான்தோன்றித்தனமாக வளர்ந்தால் பிற்காலத்தில் எப்படி உருப்படமுடியும்? ஒருநாளாவது மற்றவர்கள் மெச்சும்படி ஒரு காரியம் செய்ததுண்டா? படிப்பிலும் சராசரிதான். மற்றப் பிள்ளைகள் எல்லாம் எப்படி சாமர்த்தியமாக நடந்துகொள்கிறார்கள்! இவனுக்கு ஏனோ அந்தத் திறமையும் இல்லை.

வாசலுக்கு வந்தவளுக்கு எவரும் சொல்லாமலேயே விவரம் புரிந்துவிட்டது. காலையில் பெருக்கிக் கோலமிட்டிருந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் சேறும் சகதியுமாய்க் கிடந்த வாசலைப் பார்த்து அதிர்ந்தாள்.

தற்காலிகமாய் உருவாகியிருந்த செம்மண் குட்டைக்கு தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்று பார்த்தாள். சந்தேகமேயில்லை. அவள் வீட்டுக் கொல்லைப்புறத்துக் குழாயிலிருந்துதான் தண்ணீர் விநியோகம் ஆகிக்கொண்டு இருந்தது. பதறியவள், ஓடிச்சென்று குழாயை அடைத்தாள்.  

தோட்டத்து மலர்கள் அத்தனையும் கிளைகளோடு ஒடிக்கப்பட்டு எல்லாம் பரிதாபத்தோற்றம் காட்டின. அங்கிருந்த பல பூக்கள் தன் வீட்டில் இல்லாதவை.  யார்யார் வீட்டுத் தோட்டமெல்லாம் சூறையாடப்பட்டனவோ என்று நினைக்கையிலேயே அடுத்தடுத்தப் புகார்களுக்காக தன்னை ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டுமென்று தோன்றியது.

அப்படியே பார்வையைத் திருப்பினால்.......வினீத், சரத், பாபு மற்றும் தெருப்பையன்கள் அத்தனைப் பேரும் தலை கலைந்து, உடை நனைந்து, மேலெல்லாம் சேற்றுச்சந்தனம் பூசி, பார்ப்பதற்கு ஏதோ காட்டுவாசிகளைப் போல் ஆளுக்கொரு கோலமாக  நின்றுகொண்டிருந்தனர்

அய்யோ! இத்தனைப் பேரின் தாய்மார்களும் வந்துவிடுவார்களே. ஏனென்றால் இந்தக் குரங்குப் பட்டாளத்திற்கு வினீத் குரங்குதானே தலைவன்.  எப்போதும் முதற்புகார் மாதவிக்கு வருவதில் வியப்பென்ன?

யாரோ சொல்லி அங்கு வந்த கமலா, தன் மகன் பாபுவை நேரடியாகவும், வினீத்தையும், அவனைப் பெற்றவளையும் மறைமுகமாகவும் சாடிக்கொண்டே அவன் காதைப் பிடித்து தரதரவென்று இழுத்துச் சென்றுவிட்டாள்.

மற்றக் குழந்தைகள் செய்வதறியாது திகைத்து நிற்க, வினீத் சற்றுத் துணிச்சலோடு,  “அம்மா! நாங்க கோயில் கட்டி சாமி கும்புடறோம். நல்லாயிருக்கா?"  என்றான்.

மாதவியின் கோபம் வினீத்தின் கேள்வியால் உச்சத்தை அடைந்தது. தோட்டத்தைப் பாழ் படுத்தியதோடு, தண்ணீர்த் தொட்டியையும் காலி செய்துவிட்டு ஒன்றும் அறியாத பச்சைக் குழந்தைபோல் அவளிடமே கேள்வி கேட்கிறது! அவள் கணவனோ வேலை வேலை என்று சதா வெளியூரில் சுற்றிக்கொண்டிருக்க,  இந்தக் குட்டிச்சாத்தானுடன் தான் தான் தினம் தினம் போராடவேண்டியுள்ளது. வந்த ஆத்திரத்தில் பளாரென்று அறையத் தோன்றியது. கையை ஓங்கிய அதே நொடி,

"வாவ்! " என்ற வாய்பிளந்த சத்தம் கேட்டுத் திரும்பினாள். எதிர்வீட்டு மாடிக்குப் புதிதாய்க் குடிவந்தவள் அங்கு நின்றிருந்தாள்.

"என்ன அழகு பாருங்களேன்! நமக்குக்கூட இப்படி ஒரு கலையுணர்வு இருக்காது போலிருக்கு! பையன்கள் எவ்வளவு அழகாக் கட்டியிருக்காங்க! பிரமாதம்! குழந்தைகளா! அப்படியே ஒரு நிமிஷம் நீங்க கட்டிய கோயிலுக்குப் பக்கத்தில வந்து நில்லுங்க! ஒரு போட்டோ எடுத்திடறேன்!" என்றபடியே தன் கைபேசியை எடுத்து அதிலிருந்த காமிராவினால் படம்பிடித்துக் கொண்டாள். அப்போதுதான் மாதவி, பிள்ளைகள் கட்டிய கோயிலை நிதானமாய்ப் பார்த்தாள்

அந்த செம்மண் மேடு மிகவும் நேர்த்தியாக குவிக்கப்பட்டிருந்தது. மலையின் உச்சியில் விரிந்த இதழுடன் ஒரு சிகப்புச் செம்பருத்தி செருகப்பட்டிருந்தது. சுற்றிலும் தும்பை, ஆவாரம் போன்ற காட்டுப்பூக்களும், ஜினியா, ரோஜா, பவளமல்லி போன்ற தோட்டப்பூக்களும் மாறிமாறி கலைநயத்துடன் இணைக்கப்பட்டிருந்தன. இடையிடையே சோழிகளும், கிளிஞ்சல்களும் பதிக்கப்பட்டு அழகுபடுத்தப் பட்டிருந்தன.

 இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே அலங்கரிக்கப்பட்டிருந்த சேற்றுமலையின் அடிவாரத்தில் முருகக்கடவுளின் சிறிய படம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. குன்றுகளின் உச்சியில் குடியிருக்கும் முருகன் இக்குழந்தைகளுக்காக மனமிரங்கிக் கீழே இறங்கிவந்துவிட்டார் போலும் என்று நினைத்துக் கொண்டாள். பார்க்கும்போதே கையெடுத்துக் கும்பிடத் தோன்றியது.

எதிர்வீட்டுக்காரி  வாய் ஓயாமல் சிறுவர்களையும், அவர்கள் கட்டிய கோயிலையும் புகழ்ந்துகொண்டிருந்தாள். பேச்சினூடே,
"குழந்தைகளா! விளையாடி முடிச்சதும் இந்த இடத்தைச் சுத்தம் செய்துடுவீங்கதானே? இல்லைன்னா, வினீத்துடைய அம்மாவுக்குதான் வேலை. அவங்க பாவமில்லையா? நீங்க விளையாடி முடிச்சதும் சொல்லுங்க, நானும் வந்து ஹெல்ப் பண்ணறேன். சரியா?"  என்றதும் சிறுவர்கள் கோரஸாக, "சரிங்க ஆன்ட்டி!" என்றனர்.

"வினீத்தம்மா! மன்னிச்சிடுங்க! உங்க பேர் எனக்குத் தெரியலை. அதான் எல்லார் மாதிரியும் உங்களைக் கூப்பிடறேன்! என் பேர் காவியா! இவன் என் மகன் ராம்!" என்று தன்னையும், பக்கத்தில் குறுகுறுவென்று நின்றிருந்த எட்டுவயதுச் சிறுவனையும் அறிமுகப்படுத்திக்கொண்டாள்.

காவியாவின் நிதானப்போக்கைக்  கண்டு வியப்பு மாறாதவளாய் மாதவி நின்றுகொண்டிருந்தாள். ஒருவேளை இவள் வீட்டு வாசலில் இப்படிச் செய்திருந்தால் இதுபோல் நடந்துகொள்வாளா என்றும் எண்ணினாள்.

இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போதே சிறுவர்கள் மளமளவென்று குப்பைகளைக் களைந்து சுத்தம் செய்து, தேங்கியிருந்த நீரில் மண்ணைக் கொட்டி சமப்படுத்தி, சற்றுமுன் களேபரமாய்க் காணப்பட்ட இடம் இதுதானா என்று ஆச்சரியப்படும் வகையில் சீர்படுத்தியிருந்தனர். ராமும் அவர்களுடன் இணைந்துகொண்டான்.

மாதவியால் தன் கண்களையே நம்பமுடியவில்லை. அதிலும் வினீத் துடைப்பம் எடுத்துப் பெருக்கிச் சுத்தம் செய்ததைப் பார்த்து அவள் கண்களில் நீரே வந்துவிட்டது.

நன்றியுடன் காவியாவின் கைகளைப் பற்றியவள்,
"என்னால் நம்பவே முடியலைங்க, எப்பவும் இந்தப் பசங்க போட்டது போட்டபடி ஓடிடுவாங்க, நான் தான் புலம்பிகிட்டே சுத்தம் செய்வேன். வினீத்துக்கு ரெண்டு அடியும் கிடைக்கும். என்னவோ மந்திரம் போட்டது மாதிரி நீங்க சொன்னவுடனே எல்லாரும் சேர்ந்து எப்படி செய்யறாங்க பாருங்க! எல்லாத்துக்கும் ஒரு ராசி வேணும் போலிருக்கு!" என்றாள்.
 காவியா சிரி சிரியெனச் சிரித்தாள்.
  
"ராசியெல்லாம் ஒண்ணும் இல்லைங்க, மாதவி! மந்திரம்னு சொன்னீங்களே, அதை வேணுமின்னா ஒத்துக்கறேன். குழந்தைகள் கிட்டே சொல்றவிதத்தில் சொன்னாதான் எடுபடும். நீங்க அவங்க செய்யற நல்ல விஷயங்களை மனந்திறந்து பாராட்டுங்க! பராட்டுறதையும் மற்றவங்க முன்னிலையில் செய்யுங்க, கண்டிக்கிறதை தனிமையில் செய்யுங்க, கண்டிக்கிறதுன்னு நான் சொல்றது கூட திட்டுறது இல்லை. எடுத்துச் சொல்றது.


 நீ இப்படிச் செய்யறதை விட வேறமாதிரியாய்ச் செய்திருந்தால், இன்னும் நல்லாயிருக்கும். பொருள் வீணாகாது, அப்படி உனக்குத் தெரியலைன்னா யாராவது பெரியவங்களைக் கேட்டுச் செய்! நானும் உனக்கு உதவத் தயாரா இருக்கேன்னு சொல்லிப்பாருங்க, அப்புறம் பாருங்க அவங்களுடைய முன்னேற்றத்தை.

எதையுமே ஆரம்பிக்கும்போதே தடைபோடாதீங்க! நாலுவிதமான வாய்ப்புகள் கொடுங்க, அதில எது நல்லது, எதில் என்ன பாதகங்கள் இருக்குன்னு சொல்லி அவங்களையே அலசிப்பாத்து முடிவெடுக்கச் சொல்லுங்க. நீங்களே அசந்துபோற அளவுக்கு அவங்க செயல்பாடு இருக்கும். என்னடா நேத்து வந்தவள் நமக்கு அறிவுரை சொல்றாளேன்னு நினைக்காதீங்க. என்னை ஒரு தோழியா நினைச்சுக்கங்க.

நான் இந்த வீட்டுக்குக் குடிவந்த பத்துநாளாப் பாக்கறேன், நீங்க எதற்கெடுத்தாலும் என்ன ஏதுன்னு விசாரிக்காமல் வினீத்தை அடிக்கிறதை. வினீத் ரொம்பவும் நல்ல பையன். அவனிடம் விட்டுக்கொடுக்கிற குணம், மற்றவர்களுக்கு உதவுற குணம், எதையும் முதல் ஆளா செய்யணும்கிற உத்வேகம், தலைமைப் பொறுப்பை தான் எடுத்துக்கிற தன்னம்பிக்கை அப்படின்னு நிறைய நல்ல குணங்கள் இருக்கு. அதையெல்லாம் ஒழுங்குபடுத்தி நல்ல விஷயங்களுக்காக செயல்படவைக்கவேண்டியது ஒரு பெற்றோரா உங்க கடமை. அதனால்தான் சொல்றேன்.  மாதவி, என்னைத் தவறா நினைக்கமாட்டீங்கதானே?"

'என் மகனிடம் இருக்கும் நல்ல குணங்கள் இன்னன்ன என்று இன்னொருத்தி பட்டியல் போடுகிறாள். நானோ அவனை எந்நேரமும் குறை சொல்லியே வாழ்கிறேன்.'

முதன்முதலாக மகனை மற்றவர் மெச்சக் கண்டு அவள் தாயுள்ளம் நெகிழ்ந்தது. காவியா சொல்வது அத்தனையும் உண்மை என்பதைக் கண்கூடாகக் கண்டுணர்ந்த மாதவி, முதலில் தன் பக்கத் தவறைச் சரிசெய்து கொள்ளவேண்டும் என்று முடிவெடுத்தாள்.

சிறு புன்னகையுடன் காவியாவிடம்,  "காவியா! உங்களைப் போல ஒரு நல்ல தோழி கிடச்சதுக்கு நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்! நன்றி, காவியா!" என்றவள், வினீத்தையும் அவன் நண்பர்களையும் அழைத்து,  "குழந்தைகளா! எனக்கு வேலை வைக்காமல் நீங்களே இந்த இடத்தை சுத்தம் செய்ததுக்கு ரொம்பவும் நன்றி, கண்களா! எல்லாரும் கொல்லைப்புறம் போய் கை கால் கழுவிட்டு வாங்க! எல்லாருக்கும் குடிக்க ஜூஸ் தரேன்." என்ற மாதவியைப் பார்த்து, கண் சிமிட்டி, கட்டைவிரல் உயர்த்தி வெற்றிச் சமிக்ஞை செய்தாள் காவியா.

****************************