13 April 2013

கலக்கப்போறது ஆரு?


 
 

(முன்குறிப்பு: இது என்னுடைய முதல் நகைச்சுவை முயற்சி. உனக்கேன் இந்த வேண்டாத வேலை என்று கேட்கும் நண்பர்கள் இந்தமுறை மட்டும் மன்னித்துப் பொறுத்தருளவும். முக்கியமாய் கொங்குத்தமிழ் அன்பர்கள்! :D) 

அல்லாருக்கும் வணக்கமுங்க. இன்னிக்கு என்ற ஊட்டுல ஒரு விசேசமுங்க. அது என்னதுன்னு நீங்க ஓசிக்கங்காட்டியும் நானே சொல்லிப்போடறேனுங்க. என்ற மாமனுக்கும் எனக்கும் கண்ணாலமாயி முழுசா ஒரு வருசம் ஓடியேப் போச்சுங்க. எங்க போச்சி, ஏன் போச்சின்னு எல்லாம் கேக்கப்படாதுங்க. அப்புறம் எனக்கு கெட்ட கோவம் வந்துடுங்க. அதென்னது நல்ல கோவம், கெட்ட கோவமுன்னு அதுக்கும் அகராதி கேக்கப்படாதுங்க. சமாச்சாரத்தக் கேட்டுப்போட்டு செரி, செரின்னு தலையாட்டிப்போட்டுப் போவோணும், என்ற மாமனாட்டமா.

செரியம்மிணி, உன்ற ஊட்டு சமாச்சாரத்த உன்ற ஊட்டோட வச்சிக்காம சபையில என்னத்துக்கு சத்தம்போட்டு சொல்லவந்தேன்னு கேப்பீக. என்னது கேக்கமாட்டீங்களா? அட, கேப்பீகன்னு சொல்லுறேனில்லகேட்டுப்போடுங்க. என்ற வெசனத்தை உங்களவிட்டா வேற ஆருட்ட போய் சொல்லமுடியும்?

என்ற மாமனுக்கு எம்மேல நெம்ப இஸ்டமுங்க. என்ற கையால எது குடுத்தாலும் இனிக்குதும்பாருங்கஎன்னது? பாவக்காப் பொரியலா? அதையுந்தேன் இனிக்குதுன்னு சொல்லிப்போட்டாருங்க. இத்தனைக்கும் பலநா பதமா சோறு வடிச்சதில்லீங். சோறு கொழைஞ்சிபோனா, கூழா நெனைச்சிக் குடிச்சிபோட்டு கம்முனு போயிடுவாருங்க. என்ற மாமனுக்கு எம்மேல எம்புட்டு இஸ்டமுன்னு இப்பவாச்சும் தெரிஞ்சிருப்பீகளே..

இம்புட்டு ஆச வச்சிருக்கிற மாமனுக்கு நெசமாவே என்னமாச்சும் இனிப்பு பண்ணித் திங்கக் குடுக்கோணும்னு ஆசைங்க எனக்கு. இன்னிக்கு கண்ணால நாளா வேறப் போயிட்டுதுங்களா? மளார்னு சோலிய முடிச்சிப்போட்டு பொழுதோட வந்துடுறேங்கண்ணு, பொறவு ஒட்டுக்கா சினிமா பாக்கப்போவலாம்னு சொல்லிப்போட்டு என்ற மாமன் களத்துமேட்டுக்கு போயிருக்காருங்க. 

அவரு வாரதுக்குள்ள எதாச்சி புதுசா பலகாரம் பண்ணிப்போட்டு மாமனை அசத்திப்போடோணும்னு அரக்கப்பரக்க, அப்பத்தாகிட்ட போனு போட்டுக் கேட்டா, ஒப்புட்டு, ஒறப்படை, புக்கை, பணியாரமுன்னு எல்லாம் பழைய பலகாரமா சொல்லுதுங்க. அதுல பாருங்க, பணியாரங்கவும் குபுக்குனு சிரிச்சிப்போட்டேனுங்க 

குண்டப்பன் குழியில வுழுந்தானாம், எழுந்தானாம், அல்லார் வாயிலயும் வுழுந்தானாம் அவன் எவன்னு அப்பத்தா போட்ட விடுகதை அப்பத்தானா நாவகத்துக்கு வரோணும்? அப்பத்தாவுக்கு பொசுக்குனு கோவம் வந்து விசுக்குனு போனை வச்சிப்போட்டுது. அட, கெரவத்தேன்னு அத வுட்டுப்போட்டு அடுத்தத ஓசிச்சேனுங்க.

 நம்ம மெத்தவூட்டக்கா இல்ல, மெத்தவூட்டக்கா…. நல்லா படிச்சவுக, பதவிசானவுக, பாசக்காரவுக. அவிக நான் கேக்கு பண்ணிப்போடுறதுல கில்லாடியாக்கும்னு சொல்லிப்போட்டது நாவகத்துக்கு வந்துச்சி. ஒருக்கா கிறிஸ்மஸ் அப்போ அந்தக்கா குடுத்த கேக்கை என்ற மாமன் ஒட்டுக்கா தின்னதும் நாவகத்துக்கு வந்திடுச்சிங்க.

 செரி மாமனுக்குப் புடிச்ச  கேக்கையே இன்னிக்குப்  பண்ணிப்போடலாம்னு மெத்தவூட்டக்காட்ட வழிமொறயக் கேட்டேனுங்க. அதுக்கென்ன கண்ணு, சுளுவா செஞ்சிபோடலாமுன்னு சொல்லிப்போட்டு என்ற வயித்துல பாலை வார்த்தாக.

 நம்ம நேரம் கேட்ட நேரமாப் போச்சுதுன்னா, முந்திப் போற சனியனையும் முக்குல நிக்கச் சொல்லி வழித்தொணைக்கி அழைக்கச் சொல்லுமாம்.

அப்பிடித்தாங்க, மெத்தவூட்டக்கா விரிச்ச வலையில எண்ணெயில வுழுந்த பணியாரமாட்டம் நானும் தொபுக்கடீர்னு வுழுந்திட்டேனுங்க. சாமானெல்லாம் வாங்கிப்போட்ட பொறவு, கண்ணு எனக்கொரு அவசர சோலி வந்துபோட்டுதுன்னு சொல்லிப்போட்டு, அல்லாத்தையும் காயிதத்துல எழுதிக் குடுத்துபோட்டு, ஒத்தாசைக்கில்லாம, ஒறம்பரயப் பாக்கோணும்னு ஊருக்குப் போயிட்டாக.

 நானும் காலைல புடிச்சி காயிதத்தையே மொறச்சி மொறச்சி பாத்துட்டு நிக்கிறேனாக்கும். பொறவு என்ன பண்ண? நீங்களே படிச்சி ஒரு வழி சொல்லிப்போட்டுப் போங்க. 

எடுத்ததுமே கோளாறுதேன் 

1.   முதலில் அவனை 200 டிகிரிக்கு சூடு செய்யவும். 

எவனைன்னு சொல்லிப்போடணுமல்லோ 

2.   இரண்டு முட்டைகளை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றவும்.
 
பாத்திரமுன்னா போசிதேன்னு தெரியும். எப்பிடியா? மெத்தவூட்டக்கா அப்பிடித்தானே சொல்லுவாக. செரின்னு முட்டைய ஒடைச்சி போசியில ஊத்திப்போட்டேன்.

3.   பீட்டரின் உதவியால் நன்றாக நுரைக்கக் கலக்கவும். 

அடுத்தவடியா மெத்தவூட்டக்காவோட மச்சானை நான் எங்கேனு போய்த்தேடுவேன்? அவரு என்னத்துக்கா? அவரு பேருதானுங்களே பீட்டரு. முட்டையைக் கலக்குறதுக்கும் ஒரு தனித்தெறமை வேணுமாக்கும். அதான் அந்தக்கா ஊட்டு கேக்கு மெத்து மெத்துன்னு பஞ்சாட்டமா இருக்கு.

4.   அப்புறம் பட்டரையும் சேர்த்துக்கொள்ளவும். 

அடக்கெரகமேபீட்டரோட பட்டரையும் சேக்கணுமாமேநான் எந்தப் பட்டரைக் கண்டேன்எனக்குத் தெரிஞ்சதெல்லாம் திருவிளையாடல் படத்துல வார பாணபட்டரு மட்டுந்தானுங்க. அவரையும் எங்கேனு தேடிப்போவேனுங்க?

5.   சுகரை இப்போது சேர்க்கவும். 

ஆருங்க? அந்த பாகவதம் சொன்ன சுகருங்களா? அல்லாத்துக்கும் முன்னால அவன்னு ஒருத்தனை சொல்லிப்போட்டாங்களேஅவனாருன்னு தெரியலீங்க. அவனையும் கண்டுபிடிக்கோணும். ஒரே ஒளப்பலாப் போச்சுதுங்க 

போச்சாது போன்னு நானே நொரைக்கக் கலக்கலாம்னு கலக்குனா, நொரையே வாரலங்க. கலக்கோ கலக்குன்னு கலக்குன வெசையில போசி கவுந்து முட்டையெல்லாம் விசிறி வூடே கந்தர கோலமாயிப்போச்சிதுங்க. அதுக்குதேன் மெத்தவூட்டக்கா பீட்டரை ஒத்தாசைக்கு வச்சிக்கிட்டு முட்டையைக் கலக்குன்னு சொல்லிப்போட்டுருக்கு. அச்சாணியமாப் போச்சேஇது ஆவுற காரியமில்லன்னு கேக்கு ஆசைய அத்துவுட்டுட்டேனுங்க. 

பொழுதும் சாஞ்சிபோச்சி. என்ற மாமன் வார நேரமாயிப் போட்டுதுங்க. கேக்கு பண்ணிப்போடோணும்னு ஆசைப்பட்டு அல்லாம் கோக்குமாக்காயிப் போச்சுது 

என்ற மேலெல்லாம் முட்ட அபிசேகமாயிப்போச்சுதல்லா? மறுக்கா தலைக்கு வாத்துட்டுப் போயிஅன்னாடம் வடிக்கிற சோத்தையாச்சும் ஒழுங்கா வடிச்சிப்போடோணும் ரவைக்குசரி, நான் வாரேனுங்கஇனி ஆராச்சும் கேக்கு பண்ணிப்போடச் சொல்லிக்குடுத்தா…. என்ன பண்ணோணும்? 

அல்லாத்தையும் கலக்குறதுக்கு ஆராரு வேணுமுன்னு முந்தியே கேட்டுப்போடோணும்சொல்லிப்போட்டேன். ஆமா...
********************************************************************************
படம் உதவி: இணையம்

46 comments:

 1. நன்றாகவே கலக்கி இருக்கிறீர்கள்...

  ReplyDelete
 2. ஓஹோ... ஒரு வருடம் ஓடிப் போனதால் இந்த சந்தோஷ முயற்சியா...?

  கேக்கு பண்ற ஐடியாவே இல்லைங்க... ஹிஹி...

  என்றும் மகிழ்ச்சி தொடர எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. நல்ல நகைச்சுவை! தொடரட்டும் பகிர்வுகள்...

  ReplyDelete
 4. உங்களுக்கு இந்த பாசை இவ்வளவு பரிச்சியமாங்க ,போசி என்றால் என்ன ?அதுமட்டும் புரியலங்க ,இடையில் வந்த பழமொழிகளும் சூப்பர் வலைப்பதிவுக்கு வர ஆரமிச்சிடிங்களா ,நல்லது.

  ReplyDelete
 5. @Avargal Unmaigal

  ரசித்தீங்களா? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அவர்கள் உண்மைகள்.

  ReplyDelete
 6. @திண்டுக்கல் தனபாலன்

  வாங்க தனபாலன். உங்க அன்பான வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 7. @வெங்கட் நாகராஜ்

  வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி வெங்கட்.

  ReplyDelete
 8. @thirumathi bs sridhar

  அதெல்லாம் இல்லை ஆச்சி. ஒரு இணையதளத்தில் கொங்குத்தமிழ் வார்த்தைகளுக்கு அர்த்தம் கொடுத்திருந்தாங்க. அதைப் பார்க்கவும் எழுந்த முயற்சிதான் இது. போசி என்றால் கொங்குத்தமிழில் பாத்திரம் என்று பொருளாம்.

  மகளைக் கல்லூரியில் சேர்த்தாச்சு. மிச்சமிருந்த சில கடமைகளையும் ஓரளவுக்கு முடிச்சாச்சு. அதான் மறுபடியும் வலைப்பக்கம் எட்டிப்பார்க்கிறேன். நீங்க, குழந்தைகள் நலம்தானே?

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆச்சி.

  ReplyDelete
 9. கீதமஞ்சரி அருமையாக கொங்குதமிழிலில் நகைச்சுவை பதிவு கொடுத்து விட்டீர்கள் குழி பணியார விடுகதை அருமை.
  கேக் செய்யும் செய்முறை சிரிப்பை வரவழைத்து விட்டது.

  புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. நல்ல நகைச்சுவை! புத்தாண்டு வாழ்த்துகள்.

  ReplyDelete
 11. கொங்கு நாட்டு மொழிநடை கொடிகட்டிப் பறக்குதே! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 12. சிரிக்கச் சிரிக்க சொல்லியிருக்கிறீர்கள்
  நிதம் சிரிக்கவைக்கும் புத்தாண்டு ஆகட்டும்

  ReplyDelete
 13. Anonymous13/4/13 16:45

  சகல நலங்களும், மகிழ்வும் நிறைய
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.
  ReplyDelete
 14. நகைச்சுவை நல்லா இருக்குது. இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 15. எனக்கு குளிப் பணியாரம் ரொம்ப பிடிக்கும் .ஆசையை தூண்டி விட்டீர்கள்

  ReplyDelete
 16. சூப்பர் அம்மணி எல்லாதேன் நகைசுவையுந்தேன் நல்ல இருந்ததுங்கோ இம்புட்டு சுலபமான வேலைல்லாம் நீ எடுத்தா எப்படி அம்மணி சரிவரும் நாமெல்லாம் உழைக்க பிறந்தவங்க இல்லையா கண்ணு போட்டும் விடு உன்ற கையாள ஒரு டம்பளர் தண்ணிய கொடுத்தாலும் தேனாட்டும் இனிக்கும் உன் மாமனுக்கு கேக்காம் கேக்கு அதுக்கு அவ்னவேற தேடனும யாருனே தெரியாம ம்க்கும்

  ReplyDelete
 17. @கோமதி அரசு

  ரசித்தமைக்கும் கருத்திட்டமைக்கும் மிகவும் நன்றி மேடம்.

  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 18. @Kanchana Radhakrishnan

  ரசித்தமைக்கு நன்றி காஞ்சனா. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 19. @புலவர் இராமாநுசம்

  வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா. சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 20. @Muruganandan M.K.

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி டாக்டர். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 21. @kovaikkavi

  வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழி. இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 22. @வை.கோபாலகிருஷ்ணன்

  ரசித்தமைக்கு நன்றி வை.கோ.சார். தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 23. @கவியாழி கண்ணதாசன்

  ரசித்தமைக்கு மிகவும் நன்றி ஐயா. இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 24. @poovizi

  உங்க பின்னூட்டத்தை ரொம்பவே ரசித்தேன் பூவிழி. இதிலிருந்தே கதையை நீங்க ரசித்திருப்பது தெரிகிறது. மிக மிக நன்றி பூவிழி.

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 25. அருமையான நகைச்சுவைதான்! வாழ்த்துக்கள்! இனிய தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 26. ஏனுங்க கீதா... இம்மா நாளா இம்புட்டு நகைச்சுவை உணர்ச்சிய எங்க பரணியில போட்டு வெச்சிருந்தீங்களாங் காட்டியும்? ‌நல்லாவே சிரிக்க வைச்சுப் போட்டீங்க போங்க...! நானும் என்ற வூட்டுக்காரியும் உனும கேக்கு பண்றதானா உங்கட்ட ஒரு வார்த்தை கேட்டுபோட்டுத்தான் பண்ணுவோமுங்க...!

  ReplyDelete
 27. அய்ய...! கதைய ரசிச்சேன்னு சொல்ற சந்தோசத்துல இந்த கெரவம் புடிச்சவன் உங்களுக்கும் உங்க வூட்டாருங்க, ஒறம்பொறைங்க அல்லாத்துக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை சொல்லி வாழ்த்தறதுக்கு மறந்து போயிட்டேனுங்க...! (சிரிக்க வைச்சு மறக்க வெச்ச உங்க மேல தானுங்களே தப்பு? என்னைய மொ‌றக்காதீங்க...)

  ReplyDelete
 28. நகைச்சுவை நடையில் கலக்கிட்டீங்க!

  ReplyDelete
 29. //குண்டப்பன் குழியில வுழுந்தானாம், எழுந்தானாம், அல்லார் வாயிலயும் வுழுந்தானாம் அவன் எவன்னு// நல்லா சிரிச்சுப்போட்டேனுங்க
  ஏனுங்க முதல் நகைச்சுவை முயற்சியாங்க? அப்டித் தெர்லீங்க..வவுறு வலிக்கச் சிரிக்கவச்சுப்புட்டீங்க :)

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 30. அன்புள்ள

  உங்களிடம் நகைச்சுவை உணர்வு இருக்கிறது,

  கொங்குத்தமிழ் அதைக் காப்பாற்றித் தந்திருக்கிறது. இன்னும் முயலுங்கள். படைப்பாளிக்கு முடியாத ஒன்று இருக்கிறதா என்ன?

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 31. beater ஐ peter ஆக்கிட்டீங்க :))

  அம்மிணி வாழ்த்துக்கள்

  ReplyDelete
 32. @s suresh

  நன்றி சுரேஷ். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தங்களுக்கும் குடும்பத்தினருக்கும்.

  ReplyDelete
 33. @பால கணேஷ்

  அட, நீங்களே ரசித்தேன்னு சொன்னபிறகு உள்ளுக்குள் இருந்த கொஞ்சநஞ்ச பயமும் போய்விட்டது கணேஷ்.கலக்கல் நகைச்சுவை மன்னராச்சே நீங்க!

  தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கணேஷ்.

  ReplyDelete
 34. @கிரேஸ்

  உங்களது வாய்விட்ட சிரிப்பும் மனந்திறந்த கருத்தும் கண்டு மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் கிரேஸ்.

  இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 35. @ஹரணி

  தங்களது உற்சாகமிகுப் பின்னூட்டத்துக்கு மனமார்ந்த நன்றி சார்.

  தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 36. @angelin

  என்ன பண்றது ஏஞ்சலின்? நம்ம அம்மிணிக்கு தமிழ்தானே தெரியும்? மெத்தவூட்டக்காவுக்கு இங்கிலிஷ் தண்ணி பட்ட பாடு. அதான் அதுவும் இதுவுமா கலந்து இப்படி எல்லாமே கோளாறாப்போச்சி.

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிப்பா.

  இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete

 37. கலக்கப் போவது யாரு....? அதான் கலக்கிப் புட்டீங்களே அம்மணீ....! இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 38. அருமை. இரசித்தேன். இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

  ReplyDelete

 39. வணக்கம்

  நகைச்சுவை மின்னும் நறுந்தமிழைத் தந்தீா்!
  இவைசுவைத் தேனின் இணையாம்! - தவத்தமிழைப்
  போற்றிப் புனைவதிலே கீத மஞ்சரியார்
  ஆற்றுப் பெருக்கின் அழகு!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
 40. @G.M Balasubramaniam

  வருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி ஐயா.

  தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 41. @ராமலக்ஷ்மி

  வருகைக்கும் ரசித்தமைக்கும் மனமார்ந்த நன்றி ராமலக்ஷ்மி.

  தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 42. கலக்கிட்டீங்க! இன்னமும் நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டிருக்கிறேன்..

  ReplyDelete
 43. கலக்கிட்டீங்க! இன்னமும் நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டிருக்கிறேன்..

  ReplyDelete
 44. @கவிஞர் கி.பாரதிதாசன் கி.பாரதிதாசன்

  வலையின் வழிவந்து வண்டமிழ்ப் பாக்கள்
  அலையின் எழுச்சியென அளித்தீர் அன்பாய்
  விலையில் மறுமொழியால் வீறுகொள்ளும் நெஞ்சம்
  கலையுமே சூழ்ந்திடும் சோர்வு.

  நன்றி ஐயா. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 45. @ரிஷபன்

  தங்கள் வருகைக்கும் ரசித்திட்டப் பின்னூட்டத்துக்கும் மிகவும் நன்றி ரிஷபன் சார்.

  ReplyDelete
 46. ;)) ரசித்துப் படித்தேன். இன்னும் எழுதியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். தேடிப் பார்க்கிறேன்.

  ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.