5 July 2016

கேப் பாரென் பெருவாத்து – ஆஸ்திரேலியாவின் அதிசயம் (18)

பெருவாத்தினங்களில் இப்படியொரு இனம் இருப்பதே உலகுக்குத் தெரியவராத நிலையில் ஆரம்பகாலத்தில் ஐரோப்பியர் இவற்றை கருப்பு அன்னங்களின் முதிராத இளம்பருவக் குஞ்சுகள் என்றே எண்ணியிருந்திருக்கின்றனர். பிறகுதான் இவை தனியினம் என்று அறியவர, முதன்முதலாகக் கண்டறிந்த இடத்தின் பெயரையே இப்பறவைக்குச் சூட்டி கேப் பாரென் பெருவாத்து (cape barren goose) என்று அழைக்க ஆரம்பித்துவிட்டனர். பன்றி போன்ற அகன்ற வாய்ப்புறத்தைக் கொண்டிருப்பதால் பன்றிவாத்து என்ற பட்டப்பெயரும் உண்டு. ஆஸ்திரேலியாவின் குறிப்பிட்டப் பகுதிகளில் மட்டுமே காணப்படும் கேப் பாரென் பெருவாத்தினம் பற்றி இப்போது பார்ப்போம்.


அலகின் நுனியிலிருந்து வால் நுனிவரையிலான இதன் நீளம் 75 செ.மீ முதல் 1 மீ. வரை இருக்கலாம். எடை மூன்று முதல் ஏழு கிலோ வரையிலும் சிறகுவிரி நீளம் 1.5மீ முதல் 2மீ வரையிலும் இருக்கும். இதன் உடலோடு ஒப்பிடுகையில் தலையின் அளவு சிறியது. வெளிர்சாம்பல் நிற உடல், சிறகுப்பகுதியில் மட்டும் காணப்படும் சற்றே அடர்சாம்பல் நிறப்புள்ளிகள், இளஞ்சிவப்பு நிறக்கால்கள், கருமையான பாதங்கள் மற்றும் அலகின் மேற்புறத்தைப் போர்த்தியிருக்கும் வெளிர்பச்சை நிற தோல்சவ்வு இவற்றைக்கொண்டு இதை எளிதில் அடையாளம் காணமுடியும். பெரும்பாலான சமயம் அமைதியாக இருந்தாலும் ஆபத்து வருவதாக உணர்ந்தால் கொம்பூதுவது போன்று கர்ணகடூரக் குரலெடுத்து எச்சரிக்கும்


இவை வாத்தினம் என்றாலும் நீரை விடவும் நிலத்தையே பெரிதும் சார்ந்து வாழ்கின்றன. கால்நடைகளைப் போல புல்மேயும் இப்பெருவாத்துகளுக்கு விருப்ப உணவு கோரைப்புற்கள், புல்பூண்டுகள்,  இலைகள், விதைகள், சதைப்பற்றான தாவரங்கள் போன்றவை. இவற்றோடு உணவுப்பயிர், தீவனப்பயிர் போன்றவை கிடைத்தால் இன்னும் கொண்டாட்டம்தான். உவர்நீரையும் அருந்தக்கூடிய தன்மை இருப்பதால் இந்தப் பெருவாத்துகள் தீவுகளின் கரையோரங்களில் பெருமளவு காணப்படுகின்றன. இனப்பெருக்கக் காலம் அல்லாத சமயத்தில் ஊருக்குள் விளைநிலம் சார்ந்த பகுதிகளில் கூட்டம் கூட்டமாகக் காணப்படுகின்றன

கேப் பாரென் பெருவாத்துகள் ஒருமுறை ஜோடி சேர்ந்தால் வாழ்நாள் முழுவதும் இணைபிரியாது வாழ்கின்றன. இனப்பெருக்கக் காலத்தில் கோரைப்புல்வெளியின் திறந்தவெளியில் கூடுகட்டி முட்டையிடுகின்றன. கூடுகட்டுவது ஆண்பறவையின் வேலைகுச்சிகளையும் கோரைப்புற்களையும் கொண்டு தரையில் கிண்ணிபோன்ற ஒரு பெரிய கூடு கட்டி அதனுள் மென்பஞ்சு இறகுகளால் மெத்தை அமைக்கும். பெண்பறவை ஒரு ஈட்டுக்கு நான்கு முதல் ஆறு முட்டைகள் வரை இடும். முட்டைகளை அடைகாப்பது பெண்பறவையின் வேலை. கூடு கட்டும் காலத்தில் ஒவ்வொரு இணையும் தமக்கென்று எல்லை வகுத்துக்கொண்டு அதைப் பாதுகாப்பதில் மூர்க்கமாய் செயல்படும். கூடிருக்கும் பகுதியில் நுழைய முற்படும் நாய், நரிகளை மட்டுமல்ல மனிதர்களையும் மூர்க்கமாய்த் துரத்திவெளியேற்றும்.

படம் உதவி இணையம்

ஐந்து வாரங்களுக்குப் பிறகு குஞ்சுகள் பொரிந்து வெளிவரும்குஞ்சுகள் தாய்தந்தையைப் போல் இல்லாமல் கருப்பு வெள்ளைக்கோடுகளுடன் காட்சியளிக்கும். தாய், தந்தை இரண்டும்  இணைந்து அவற்றை வளர்க்கும்கோழிக்குஞ்சுகளைப் போல முட்டையிலிருந்து பொரிந்து வந்தநாளிலிருந்தே குஞ்சுகள் தாமாக மேயக்கற்றுக்கொள்கின்றன. பத்து வாரங்களில் பறக்கக் கற்றுக்கொள்கின்றன. 17-ஆவது வாரத்தில் தாய்தந்தையைப் பிரிந்து தன்னிச்சையாய் வாழத்தொடங்குகின்றன. மூன்று வருடத்தில் முழுமுதிர்ச்சி அடைந்து இனப்பெருக்கத்துக்குத் தயாராகின்றன. இவற்றின் ஆயுட்காலம் சுமார் 15 ஆண்டுகள்.

ஆரம்பகாலத்தில் உணவுக்காகப் பெரிதும் வேட்டையாடப்பட்டுவந்த காரணத்தால், இவற்றின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்து, ஒரு கட்டத்தில் இவ்வினமே அழியும் நிலைக்கு வந்துவிட்டது. நல்லவேளையாக 1950 ஆம் ஆண்டின் பறவைக்கணக்கெடுப்பு, அபாயமணி அடித்து ஆபத்தைத் தெரியப்படுத்த, அதன்பின் போதுமான  பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஆஸ்திரேலியாவின் கரையோரத்தீவுகள் பலவற்றிலும் அறிமுகப்படுத்தப்பட்டுஅதன் காரணமாக, இன்று ஓரளவுக்கு இவற்றின் எண்ணிக்கை பெருகியிருந்தாலும் இப்போதும் இவை அரிய உயிரினங்களின் பட்டியலில்தான் உள்ளன என்பது  கவனத்தில் கொள்ளவேண்டிய தகவல்.