28 January 2014

காஸோவரி - ஆஸ்திரேலியாவின் அதிசயம் (5)


விலங்குகளில் ஆடு, மாடு, மான் போன்றவற்றுக்குக் கொம்புண்டு என்பதை அறிவோம். அழகுக்கொண்டை வைத்த மயில், கிளி, மரங்கொத்திகளை அறிவோம். கொம்பு வைத்தப் பறவை? இருக்கிறதா என்ன? இருக்கிறதே


ஆஸ்திரேலியாவிலும் அதற்கு அக்கம்பக்கமுள்ள பப்புவா நியூகினியா, நியூபிரிட்டன், யாப்பென், ஆரு போன்ற தீவுகளிலும் காணப்படும் காஸோவரி பறவைதான் அது. ஒரு ஆள் உயரத்தில் வாலிறகுகள் அற்று, பளபளக்கும் கருநிற உடலும் இறகுகளும், பளீர் நீலநிறக் கழுத்தும் செக்கச்சிவந்து தொங்கும் தாடைச்சதையும், தடித்த கால்களும், கத்தி போன்ற நகங்களும், தலையில் பழுப்புநிறக் கொம்பும் கொண்ட ஒரு விநோதப் பறவை காஸோவரி (Cassowary). காஸோவரி என்றால் பப்புவன் மொழியில் கொம்புத்தலை என்று பொருளாம். கொம்பு கொம்பு என்று சொல்கிறோமேஉண்மையில் அது கொம்புதானா? இல்லை இல்லை


அப்பறவையின் உச்சந்தலையில் உள்ள பல்லாயிரக்கணக்கான நுண்துளை காற்றறைகளின் மேலே அமைந்துள்ள தோலடுக்குதான் அப்பறவைக்குக் கொம்பு போன்ற தோற்றத்தைத் தருகிறது. அந்தத் தோலடுக்கு காரட்டீன் எனப்படும் நார்ப்புரதத்தால் ஆனது. விலங்குகளின் கொம்பு போன்று கடினமாகவும் கூராகவும் இல்லாமல் சற்றே மிருதுவாகவும் மழுங்கையாகவும் அதேசமயம் ஆமை ஓட்டைப்போன்று அழுத்தமாகவும் உள்ள உறுப்புதான் அந்த ஏழங்குல உயரக் கொண்டையழகு. இந்தக் கொம்பானது காஸோவரியின் வாழ்நாள் முழுவதும் வளர்ந்துகொண்டே இருப்பதால் இதைக்கொண்டு பறவையின் வயதைக் கண்டறிந்துவிடலாம்.

அடர்ந்த மழைக்காடுகளில் வாழும் இப்பறவைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ள பூம்ம்ம்ம்ம்ம்என்று கொம்பூதுவது போல் ஒலியெழுப்பவும் பிற காஸோவரிகள் உண்டாக்கும் மிகக்குறைந்த அலைவரிசையுள்ள அதிர்வொலிகளைக் கேட்கவும் இந்தக் கொம்பு உதவுகிறதாம். மழைக்காடுகளில் உள்ள அடர்ந்த மரஞ்செடி கொடிகளினூடே இப்பறவை சிரமமின்றிப் புகுந்து புறப்பட ஏதுவாய் அமைந்திருப்பது அந்தக் கொம்பின் மற்றொரு சிறப்பு.


காஸோவரியில் மூன்று பிரிவுகள் இருந்தாலும் ஆஸ்திரேலியாவில் காணப்படுவது மூன்றிலும் பெரிய பறவையான தென்பிராந்திய காஸோவரி இனம் மட்டுமே. இது குவீன்ஸ்லாந்து மாகாணத்தில் அருகிவரும் பறவையினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் இவற்றின் எண்ணிக்கை 1500 இலிருந்து 2000 க்குள்தான் இருக்குமென்று அறியப்பட்டுள்ளது. மற்ற இரு பிரிவுகளான வடபிராந்திய காஸோவரியும் குள்ளக்காஸோவரியும் பப்புவா நியூ கினியா, ஆரு, நியூபிரிட்டன்யாப்பென் போன்ற தீவுகளில் காணப்படுகின்றன.

காஸோவரியின் பிரதான உணவு பழங்கள்தாம். கிட்டத்தட்ட 26 வகையான பழங்களையும் 238 வகைத் தாவர உணவுகளையும் உண்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. Cerbera floribunda என்ற தாவரவியல் பெயர் கொண்ட மரத்தின் பழங்களை காஸோவரி பறவைகள் மிகவும் விரும்பி உண்பதால் அது காஸோவரி ப்ளம் மரம் (cassowary plum tree) என்றே அழைக்கப்படுகிறது.

காஸோவரி ப்ளம் பழம்

இப்பறவை பெரும்பாலான நேரத்தை பழமரங்களின் கீழேயே கழிக்குமாம். அதுவும் பழங்கள் பழுத்து உதிரும் சமயமென்றால் சொல்லவே வேண்டாம். முழுநேரமும் மரத்தின் அடியிலேயே சுற்றிக்கொண்டிருக்குமாம். கிட்டத்தட்ட முப்பது மீ. உயர மரங்களிலிருந்து கீழே விழும் பெரிய பழங்கள் இதன் தலையில் விழுந்தால் என்னாவது? தலைக்கு சேதமுறா வண்ணம் இயற்கை அளித்த ஒரு தலைக்கவசம் அதன் கொம்பு என்பது இன்னொரு விநோதம். ஆம். கொம்பின் உள்ளே எலும்புக்கு பதில் காற்றறைகள் இருப்பதால் கொம்பு ஒரு அதிர்வுத்தாங்கியாகவும் (shock-absorber) செயல்படுகிறது.

பறக்கவியலாத பறவையினத்தில் தற்போது உலகிலுள்ள மூன்றாவது பெரிய பறவை இது. முதலாவது பெரிய பறவை ஆப்பிரிக்காவில் உள்ள ஆஸ்ட்ரிச் (Ostrich) எனப்படும் தீக்கோழி, இரண்டாவது, ஆஸ்திரேலியப் பறவையான ஈமு (Emu). ஆனால் ஈமுவை விடவும் உடல் எடை அதிகமுள்ள பறவையினம் இது. சிறகிருந்தும் இப்பறவைகள் பறக்க இயலாமைக்குக் காரணம், வற்றின் சிறகெலும்புகளை மார்புக்கூட்டோடு பிணைக்கும் இணைப்பெலும்பு இல்லாமையே. பறக்கவியலாத பறவையினம் ராட்டைட் (ratite) இனம் என்று குறிப்பிடப்படுகிறது. ராட்டைட் என்றால் லத்தீன் மொழியில் மிதவைத்தெப்பம் என்று பொருளாம். நியூஸிலாந்தைச் சார்ந்த மோவா பறவையும் மடகாஸ்கரைச் சார்ந்த யானைப்பறவையும் இந்த ராட்டைட் இனத்தின் அழிந்துபோன உயிரினங்கள். 


காஸோவரி பறவைகள் பொதுவாக 1.5 மீ. முதல் 1.8 மீ உயரம் வரை வளரும் என்றாலும் சில பெண்பறவைகள் 2 மீ. உயரம் கூட வளரக்கூடியவை. பெண் காஸோவரியின் எடை 75 கிலோ வரையிலும் ஆண் காஸோவரியின் எடை 55 கிலோ வரையிலுமாக இருக்கும். வற்றின் ஆயுட்காலம் தோராயமாக நாற்பது முதல் ஐம்பது வருடங்கள் வரை இருக்கும். காஸோவரியால் 1.5 மீ உயரத்தைத் தாண்டவும், மணிக்கு ஐம்பது கி.மீ. வேகத்தில் ஓடவும் முடியும். பெருநதிகளிலும் கடலிலும் நன்றாக நீந்தவும் முடியும். 

காஸோவரி பறவையின் பிரதான உணவு பழங்கள் என்று முன்பே பார்த்தோம். வாழை, ஆப்பிள் போன்ற பழங்களை அப்படியே முழுங்கக்கூடியது. பழங்களை அப்படியே உண்பதால் விதைகள் எச்சத்தின் மூலம் வெளியேறி, மழைக்காடுகளில் விதை பரவுதல் சிறப்பான முறையில் நடைபெறுகிறதாம். பல கி.மீ. பரப்பளவில் இவை உலவுவதால் மழைக்காடுகளின் தாவரப்பெருக்கத்துக்கு இவற்றின் பங்கு மிக முக்கியமாம். ஏனெனில் மிகப்பெரிய அளவு பழங்களின் கொட்டைகள் பல இடங்களிலும் பரவுவதற்கு வேறு எந்த வழியும் இல்லையே. அது மட்டுமல்ல, இவற்றின் கழிவு மழைக்காட்டுக்கு நல்ல இயற்கை உரமாகிறது.


இப்பறவைகள் ஆப்பிள், காஸோவரி ப்ளம், காட்டுத் திராட்சை, பனம்பழம் போன்ற அநேக பழங்களோடு இதர உணவுகளாக துளிர்கள், பூக்கள், காளான், நத்தை, பூச்சிகள், தவளைகள், பறவைகள், மீன், எலி மற்றும் இறந்து அழுகிய பிராணிகளையும் தின்னக்கூடியவை. காஸோவரி பறவைகளுக்கு சீரணத்திறன் அதிகம். அவற்றின் சீரணத்திறனானது நச்சுப் பொருட்களையும் சீரணிக்கவல்லது. எனவே எதையாவது ஒரு காஸோவரி பறவை தின்றால் நாமும் அதைத் தின்னலாம் என்று முடிவெடுத்துவிடக்கூடாது. அது ஆபத்தில் முடியலாம்.

பொதுவாக காஸோவரி கூச்ச சுபாவமுள்ள பறவை என்றாலும் தாக்கப்படும்போது முழு வேகத்தையும் பிரயோகித்து எதிரியை வீழ்த்தக்கூடியதுஆபத்து வேளையில் தற்காத்துக்கொள்ள, மனிதர்களையும் விலங்குகளையும் தன் வலிமையான காலால் ஒரு உதை விடும்போது கால்விரலிலுள்ள ஐந்தங்குல நீள நகத்தால் தாக்கப்பட்டு உயிரிழப்பு நேர்வதுமுண்டு. 2004 ஆம் ஆண்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் ‘உலகிலேயே மிகவும் ஆபத்தானப் பறவை’ என்று காஸோவரியின் பெயர் இடம்பெற்றுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.


பூர்வகுடி மக்களிடையே காஸோவரி பறவைகள் அவற்றின் மூர்க்கத் தாக்குதலுக்குப் பிரசித்தம் பெற்றவை. இரண்டாவது உலகப்போரின்போது நியூ கினியாவில் முகாமிட்டிருந்த அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலிய வீர்ர்களுக்கு இப்பறவை பற்றி அறிவிக்கப்பட்டு, அவற்றிடமிருந்து எப்போதும் விலகியிருக்குமாறு பெரும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாம்.

‘Living Birds of the World from 1958’ என்ற புத்தகத்தை எழுதிய பறவையியலாளர் தாமஸ் இ.கிலியார்ட், காஸோவரிப் பறவையைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதன் கால்களிலுள்ள நடுவிரல் நகமானது ஒரு குத்துவாளைப் போன்று மிக எளிதாய் பிற உயிரினங்களின் கை கால் போன்ற உடலுறுப்புகளைத் துண்டிக்கவோ, வயிற்றில் குத்திக் குடலை உருவவோ இயலுமளவுக்கு மிக நீளமாகவும் வெகு கூர்மையாகவும் உள்ளது. இங்குள்ள பூர்வகுடி மக்களில் பலர் இப்பறவையால் தாக்கிக் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.காஸோவரி பறவை இனப்பெருக்க காலத்தைத் தவிர மற்ற சமயங்களில் ஒரு தனிமை விரும்பி. ஒரு ஆண் பறவை தனக்கான எல்லையாக சுமார் ஏழு சதுரகிலோமீட்டர் பரப்பை நிர்ணயித்துக்கொள்கிறது. பெண்ணோ பல ஆண்களின் எல்லைப்பரப்பிலும் ஊடுருவும் அளவுக்கு தன் எல்லைப் பரப்பை விரிவாக நிர்ணயிக்கிறது.

இரண்டு ஆண் பறவைகள் எதிரெதிரே சந்திக்க நேர்ந்தால், தங்கள் எதிர்ப்பைக் காட்டும்வண்ணம் உடலை நிமிர்த்தி சிறகுகளை சிலிர்ப்பியும் உறுமியும் ஒன்றையொன்று ஆக்ரோஷத்துடன் எதிர்கொள்ளும். முடிவில் ஏதாவதொன்று பின்வாங்கிவிடும். ஆணும் பெண்ணும் எதிர்கொண்டாலோ பெண்ணின் ஆளுமைக்கு அடங்கி, ஆண் அமைதியாக விலகிச்சென்றுவிடும். 

ஈமு இனத்தைப் போலவே காஸோவரி இனத்திலும் ஆணாதிக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை. எல்லாமே பெண்ணாதிக்கம்தான். முட்டையிடுவது மட்டுமே பெண்ணின் வேலை. கூடு கட்டுவது, முட்டைகளை அடைகாப்பது, குஞ்சுகளை வளர்ப்பது, பாதுகாப்பது யாவும் ஆணின் வேலை.


இனப்பெருக்க காலம் மே, ஜூன் மாதங்களில் துவங்கும். ஆண்பறவை தரையில் இலைதழைகளைக் குவித்துக் கட்டிய கூட்டில் பெண் பறவை முட்டையிடும். ஒரு ஈட்டுக்கு மூன்று முதல் எட்டு முட்டைகள் வரை இடும். முட்டைகள் அளவில் பெரியனவாய் கரும்பச்சை நிறத்திலோ, வெளிர் நீலப்பச்சை நிறத்திலோ இருக்கும். முட்டையிட்டபிறகு தாய் திரும்பியும் பார்ப்பதில்லை. அது தொடர்ந்து பல ஆண்பறவைகளோடு இணைந்து பல ஈடு முட்டைகளை இடும். முட்டை ஒவ்வொன்றும் 600 கிராம் எடையிருக்கும்.


முட்டைகளை அடைகாக்கும் பொறுப்பு இனி தந்தைகளுக்கானது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் அடைகாத்த பிறகு, முட்டையிலிருந்து மஞ்சள் நிறத்தில் பழுப்பு வரிகளைக் கொண்ட காஸோவரிக் குஞ்சுகள் வெளிவரும். ஒன்பது மாதங்கள் தந்தையின் அரவணைப்பிலும் பாதுகாப்பிலும் வளரும் அவை அதன்பின் தனித்து வாழத் துவங்கும்.

காஸோவரி பறவைகளுக்கு ஞாபகத்திறன் அதிகம். அவை தங்களுடைய எல்லைக்குட்பட்டப் பரப்பை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளக்கூடியவை. முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிவந்ததும் அப்பா பறவை அவற்றை அழைத்துக்கொண்டு நீர்நிலைகள், பழமரங்கள் அதிகமுள்ள பகுதிகள் போன்ற பல்வேறு இடங்களுக்கும் அழைத்துச்செல்லும். பின்னாளில் குஞ்சுகள் தனித்து வாழத்தொடங்கும்போது எவ்வித சிரமமுமின்றி தங்கள் உணவைத் தேடிக்கொள்ள இந்தப் பயிற்சி உதவும்.


பண்டைக்காலத்தில் பூர்வகுடி மக்கள் இந்த காஸோவரிக் குஞ்சுகளைப் பிடித்துவந்து தங்கள் இடங்களில் வளர்த்து வந்தார்களாம். அவை வேலியடைக்கப்பட்ட மேய்ச்சல் நிலங்களில் தன்னிச்சையாக சுற்றித்திரிந்து குப்பைகளையும் பிற தாவரக்கழிவுகளையும் உண்டு உயிர்வாழுமாம். பறவைகள் வளர்ந்து பிறரைத் தாக்க ஆரம்பிக்கும்பொழுது முளைக்குச்சியில் கட்டப்பட்டு வளர்க்கப்பட்டனவாம். இவற்றை வளர்க்கக் காரணம்உணவுக்காகவா? அதுதான் இல்லை.  

காஸோவரியின் மாமிசம் உண்பதற்கு ஏதுவானதல்ல என்பதை வேடிக்கையாக இப்படிச் சொல்வதுண்டு, ‘காஸோவரி மாமிசத்தை சமைக்கவேண்டுமெனில் ஒரு பானையில் காஸோவரியின் மாமிசத்தையும், ஒரு கல்லையும் போட்டுக் கொதிக்கவிடவேண்டும். கல் எப்போது வெந்து உண்பதற்குத் தயார்நிலையில் உள்ளதோ, அப்போது காஸோவரியின் மாமிசமும் உண்ணத்தயாராக இருக்கும்.’
கல்லைப்போன்று கடினமான மாமிசத்தை எவரும் விரும்பப்போவதில்லை. பின் எதற்காக அவற்றை வளர்த்தார்களாம்? 

நாணயப்புழக்கம் அறிமுகப்படுத்தப்படாத முந்தைய காலத்தில் பூர்வகுடி இனங்களிடையே சோழிகள், கிளிஞ்சல்கள் மற்றும் பறவையிறகுகளே மதிப்பிடுபொருளாக பயன்படுத்தப்பட்டு வந்தன. பழங்குடி மக்களிடையே இந்த காஸோவரி பறவையிறகுக்கு மிகுந்த மதிப்புண்டாம். அதன் காரணமாகவே இப்பறவைகள் வீடுகளில் வளர்க்கப்பட்டனவாம். நியூகினியாவின் ஒருசில பழங்குடியினத்தினர் காஸோவரி மாமிசத்தையும் விடுவதில்லையாம்.


காஸோவரி பறவையினத்துக்கு ஆபத்து என்றால் வேட்டைநாய்கள், நரிகள், பன்றிகள், இயற்கை சீற்றங்கள், வியாதிகள் தவிர மனிதர்களாலும் நேர்கிறது. காடுகளை அழித்து சாலைகள் அமைக்கப்படுவதால் வாகனங்களில் அடிபட்டு பல பறவைகள் இறக்கின்றன. மேலும் மனிதர்கள் அவற்றுக்கு ஒருமுறை உணவளித்துப் பழக்கிவிட்டால் அவை உணவுக்காக மனிதர்களைத் தொடர ஆரம்பித்துவிடுகின்றன. பின் குடியிருப்புகளைச் சுற்றிவரத்தொடங்கி, வாகனங்களில் அடிபட்டும், நாய்களிடம் சிக்கியும் இறந்துபோகின்றன. சில சமயங்களில் மனிதர்கள் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். இவ்வாறு இருதரப்பிலும் ஆபத்து உண்டாவதால் காஸோவரி பறவைகளுக்கு இயற்கைக்கு மாறாக மனிதர்கள் உணவளிப்பது கூடாதென்று வனத்துறை அறிவுறுத்துகிறது.காஸோவரி பற்றி பூர்வகுடி மக்களின் கதை என்னவென்று பார்ப்போமா?  முன்னொரு காலத்தில் கூண்டோயீ (Goon-doy-ee) என்றொரு மனிதன் இருந்தான். அவன் பலசாலியாகவும் அதிவேகத்தில் ஓடக்கூடியவனாகவும் இருந்தாலும் சோம்பேறியாக இருந்ததால் வேட்டையாடி உணவுண்ணாமல் அவன் கூட்டத்தைச் சார்ந்த சிறுகுழந்தைகளைப் பிடித்து எவரும் அறியாமல், கொன்று தின்றுவந்தான்.


குழந்தைகள் தொடர்ந்து தொலைந்துபோவதை அறிந்தவர்கள் காரணம் கூண்டோயீதான் என்பதையும் கண்டறிந்துகொண்டார்கள். அவனை அவன் விழித்திருக்கும் நிலையில் எதிர்கொள்வது கடினம் என்பதால் தூங்கும்போது அதைச் செய்ய நினைத்தார்கள். ஆனால் அவன் தலையில் நிறைய பேன்கள் இருந்தமையால் இரவில் சரிவரத் தூங்கமுடியாமல் விழித்தே இருந்தான்.

கூட்டத்தினர் ஒரு யோசனை செய்தனர். அவனுடைய நிலையைக் கண்டு அவனுக்கு இரங்குவது போல் நடித்து காரியத்தை முடிக்க எண்ணினர். அவனிடம் சென்று அவன் தலையில் பேன்பார்த்துவிடுவதாக சொன்னார்கள். முதலில் அவன் சந்தேகத்தோடு மறுத்துவிட்டாலும் தொடர்ந்த பேன்தொல்லையால் அவனால் துளியும் கண்ணை மூடமுடியவில்லை. வேறுவழியில்லாமல் இறுதியில் இறங்கிவந்தான். அவர்கள் அவன் தலையிலிருந்து பேன்களை முழுவதுமாய் அகற்றினர்.


அவன் நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்த இரவொன்றில் அனைவரும் பாய்ந்து அவனை அமுக்கி அவனிரு கைகளையும் வெட்டிவிட்டனர். அதன்பின் அவன் காட்டுக்கு ஓடிப்போய்விட்டான். அவன்தான் பிறகு காஸோவரியாக மாறிப்போனான். அதனால்தான் காஸோவரியால் இறகிருந்தும் பறக்க இயலவில்லை. காட்டில் தனிமை வாழ்வு வாழ்வதற்கும் அதுதான் காரணம். மேலும் குழந்தைகளைக் கொன்று தின்ற கொடுஞ்செயலுக்கு தண்டனையாகவே வாழ்நாள் முழுவதும் அதன் குஞ்சுகளைப் பராமரிக்கும் பொறுப்பு கடவுளால் அதற்குக் கொடுக்கப்பட்டது. கதை மிகவும் சுவாரசியமாக உள்ளதல்லவா?


******************************************

(படங்கள் நன்றி: இணையம்)

20 January 2014

மீண்டும் வலைச்சரத்தில்....

கடந்த மார்ச் 2012- இல் அன்புக்குரிய திரு.வை.கோபாலகிருஷ்ணன் ஐயாவின் பரிந்துரை மற்றும் மதிப்புக்குரிய திரு.சீனா ஐயாவின் அழைப்பின் பேரில் வலைச்சர ஆசிரியர் பொறுப்பை ஏற்றேன். ஏற்றுக்கொண்ட பொறுப்பை ஓரளவு சரியாகவே நிறைவேற்றினேன் என்று நம்புகிறேன்

கிட்டத்தட்ட இரண்டாண்டுகள் ஆகவிருக்கும் நிலையில் மறுபடியும் அந்தப் பொறுப்பு என்னைத் தேடிவந்துள்ளது. மீண்டும் என்னை வலைச்சர ஆசிரியராகப் பணியாற்ற அழைப்பு விடுத்துள்ள திரு.சீனா ஐயா அவர்களுக்கும் என்மேல் அவர் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் என் உளமார்ந்த நன்றி

புதியவர்களையும் பழகியவர்களையும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தி உற்சாகமாய் கைகுலுக்கும் வகையில் ஒரு அற்புதப் பாலமாய் அமைந்த வலைச்சரத்துக்கும் அதன் நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்! 

இந்த வாரம் முழுவதும் வலைச்சரம் வழியே சந்திப்போம். 
நன்றி. வணக்கம்.


இரண்டாம் நாள்
பாரம்பரியம் காட்டும் பைந்தமிழ்ச் சான்றுகள்

தமிழரின் மொழி, வாழ்க்கை, கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாடு போன்றவற்றின் அடிப்படையிலான பதிவுகள் இன்று.
மூன்றாம் நாள்
சாதிக்க ஏதுவாய் சில சவடால்கள்

வாசிப்பு, விமர்சனங்கள் தொடர்பான பதிவுகள் இன்று.
நான்காம் நாள்
காலமணற்பரப்பில் சில காலடிச்சுவடுகள்

வாழ்வியல் தொடர்பான பல அரிய சிந்தனைகளை
முன்வைக்கும் பதிவுகள் இன்று.

இயற்கை மற்றும் சூழலியல் போற்றும் பதிவுகள் இன்று.

புதிய இடங்கள், பயண அனுபவங்கள் குறித்த  சுவாரசியப் பதிவுகள் இன்று

 குழந்தைகள், குழந்தைநலம் பற்றிய பதிவுகள் இன்றுஇதுவரை என்னுடன் பயணித்து எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்து ஆதரவளித்தமைக்கு 
அனைவருக்கும் என் அன்பான நன்றி
வணக்கம்.

12 January 2014

கற்பூரம்            


நடுக்கூடத்தில் கிடத்தப்பட்டிருந்தது, அந்தப் பிரேதம். அதன் உறவுகள் யாவும் அது, அவளாய் இருந்தகாலத்து அருமை பெருமைகளைச் சொல்லி வாய் ஓயாமல் அழுதுகொண்டிருந்தன. அதன் அருகில் கண்ணீர் விட்டபடி அதன் இரு மகள்களும், அவர்களை அணைத்தபடி அதன் தாயும். இந்த இரண்டு தலைமுறைகளின் இணைப்புப்பாலமான அவள் மட்டும் இன்று ஆவியாய்! ஆம்! ஆவியாய்தான்!

நிறைவேறாத ஆசைகளுடன் அல்பாயுசில் இறந்துவிடுபவர்களின் ஆவி அது நிறைவேறும்வரை நிம்மதியற்று அலைந்துகொண்டிருக்குமாமே! அவளும் அலைகிறாள் அப்படி!

நேற்றுவரை நன்றாக இருந்தவள், காலையில் எழுந்து, வாசல் தெளித்து, கோலமிடவந்தபோது, கால் வழுக்கி, தடாரென்று நிலைப்படியில் மண்டை மோதி விழுந்தவள், விழுந்தவள்தான். அதன்பின் எழவேயில்லை.

சாவு வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்தாள் அவள். பல்லக்குப் பாடை தயாராகிக்கொண்டிருக்கிறது. உறவுகள் ஒருவர் விடாது அனைவரும் வந்திருந்தனர். அனைவரையும் பார்க்க அலாதி ஆனந்தமாய் இருந்தது. பெரியவள் திருமணத்தின்போதுதான் எல்லோரையும் பார்க்கமுடியும் என்று நினைத்திருந்தாள். அப்போது கூட இத்தனைப் பேரும் வந்திருப்பார்களா என்பது சந்தேகமே..

கொல்லைப்புறம் மூன்றாவது வீட்டில் அப்பா மேற்பார்வையில் இழவுக்கு வந்திருக்கும் அனைவருக்கும் டிபன் காஃபி, குழந்தைகளுக்குப் பால் எல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டு தடங்கலின்றி நடந்துகொண்டிருக்கிறது. அவளுக்கு திருப்தியாக இருந்தது.

அழுது ஓய்ந்து அமர்ந்திருக்கும் மகள்களைப் பார்த்தாள். அவர்களைப் பற்றிய கவலை அவளுக்குத் துளியும் இல்லை. அம்மா இருவரையும் பார்த்துக்கொள்வாள். நல்ல இடத்தில் திருமணம் செய்துவைத்துவிடுவாள்.  போதுமென்ற அளவுக்குப் பொருளாதாரம் உள்ளது. கல்லூரியை முடித்தவுடன் கல்யாணம் செய்துவிடலாம். இப்போதைக்கு விடுதியில் தங்கிப் படிப்பதால் இவளுடைய தேவையும் தேவையில்லை. 

எல்லாம் சரியாக இருப்பதுபோல் தோன்றினாலும் ஏதோவொரு நெருடியது.  அ.. அவன் எங்கே? சுமங்கலியாய் பூவோடும் பொட்டோடும் போயிருக்கிறாளே அந்தப் பெருமையை அள்ளித்தந்த அந்த அருமைக் கணவன் எங்கே?

கூட்டத்துக்குள் புகுந்து திணறி வெளியில் வந்தாள். இதோ, வாசற்புறப்பந்தலில், நாற்காலியில் அமர்ந்தபடி...எ...என்ன...என்ன செய்துகொண்டிருக்கிறான்?

அடப்பாவி! செய்தித்தாள் படிக்கிற நேரமா இது? இருபது வருடங்களாய், உன்னுடன் வாழ்ந்து, உனக்காகவே வாழ்ந்து, பொட்டென்று போய்ச்சேர்ந்தவளைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல்...எப்படி இவனால் இருக்கமுடிகிறது?
ஆமாம்! அவள் உயிருடன் இருந்தபோது மட்டும் என்ன அவளைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடிக்கொண்டா இருந்தான்? அவள் விசனத்துடன் நொடித்துக்கொண்டாள்.

எத்தனைக் கல்யாணக்கனவுகளோடு அவன் கரம்பற்றினாள். அவளாகவா பற்றினாள்சுற்றி நின்ற தோழிகள் கேலியுடன் பற்றச்செய்தனர்.  எத்தனை சினிமா பார்த்திருக்கிறாள். அச்சமும், நாணமும் பின்னிப் பிணைந்து அவளைப் பாடாய்ப் படுத்தினாலும், தோழியர் தந்த உற்சாகத்தில், கரம்பற்றத் துணிந்தவேளை, அவளை மட்டுமல்ல; அனைவரையுமே அதிர்ச்சியில் உறையச்செய்தன, அவன் வார்த்தைகள்.

"என்ன விளையாட்டு இது? எனக்கு இதெல்லாம் சுத்தமாப் பிடிக்கலை"

சட்டென அங்கு நிலவிய அமைதி அவளைச் சங்கடப்படுத்தியது. சுற்றத்தின் பரிதாபப் பார்வைகளும் அவளைக் கூர்வாளாய்க் குடைந்தன.

புஸ்ஸென்று காற்றுப்போன பலூனாய் ஆனது, அவளது கல்யாணக்கனவு! சுய ஏமாற்றத்தைவிடவும், அத்தனைப் பேர் மத்தியில் சொன்னதுதான் ஆழமான காயத்தை அவள் அடிமனதில் உண்டாக்கியது. அதுதான் முதல் காயம்!

விருந்துண்ணும்போது யாரோ சொன்னார்கள், "மாப்பிள்ளை! நீங்க பொண்ணுக்கு ஊட்டுங்க, பொண்ணு  உங்களுக்கு ஊட்டட்டும்"

வீடியோ எடுப்பவர் தயாராக நிற்க, அவன் சொன்னான், "இதென்ன பழக்கம்? ஒருத்தர் இலையிலிருந்து இன்னொருத்தருக்கு ஊட்டிகிட்டு? அதெல்லாம் வேண்டாம்!"

வீடியோ அணைக்கப்பட்டது.  இது இரண்டாவது.  முத்தாய்ப்பாய் முதலிரவின் கனவுகளை முறியடித்தான், அவளுக்கு முழு சுதந்திரம் தருவதாய் நினைத்து. அதன்பின் தொடர்ந்து எண்ணற்ற காயங்கள். புதிதாய்க் கொத்தின அம்மிபோல் அத்தனை வடுக்களைச் சுமந்து சுமந்து சோர்ந்து போயிருந்தது, மனம்.

ஒருவேளை இஷ்டமில்லாமல் திருமணம் செய்துகொண்டானோ?. அதுவும் இல்லையாம். இஷ்டப்பட்டுதான் திருமணமாம். இதற்குமுன் எவரையும் காதலித்ததும் இல்லையாம். இதுவரை போகட்டும். இப்போதுதான் ஒருத்தி அதற்காகவே வந்துவிட்டாளே.. உரிமையுடன் காதலிக்கலாமேஅதுதான் இல்லை. உணர்த்தத் தலைப்பட்ட இவள் காதலும் அலட்சியப்படுத்தப்பட்டது. காதல் என்ற உணர்வே அவன் அணுக்களில் இல்லை என்னும் அளவுக்கு கருங்கல்லாக இருந்தான். ஆனால் என்ன குறை வைத்தான் அவளுக்கு!


அவனொரு யதார்த்தவாதியாய்த் தன்னைக் காட்டிக்கொண்டான். வாழ்வியல் நுட்பம் அறிந்தவனாயிருந்தான். இருந்தால் அனுபவிக்கணும்; இல்லை என்றால் அதை நினைத்துக் கவலைப்படக்கூடாது. இதுதான் அவன் கொள்கை. இது பொருட்களோடு நின்றிருந்தால் பிரச்சனையில்லை. பெண்டாட்டிக்கும் அல்லவா பொதுவாகிவிட்டது. நீயில்லாத வாழ்வை என்னால் நினைத்துகூட பார்க்க முடியாது!" என்பது போன்ற வசனங்களை அவனிடம் எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்தாள்.

குடும்பம் நடத்துவதும் அலுவலகத்தில் பணியாற்றுவதும் இரண்டும் இரண்டு கடமைகள் என்று நினைப்பவனிடம் காதலை எதிர்பார்ப்பது அவள் தவறுதானே…  கண்ணே மணியே என்று காதல்மொழி பேசி பிதற்றவேண்டாம்அன்பாய் ஆதரவாய் ஒரு புன்னகை போதுமேசிறு குறும்புப் பேச்சுசின்னச் சின்ன சில்மிஷங்கள்…. ம்ஹூம்எப்போதும் உணர்ச்சியற்ற அந்த முகத்தின் மூலம் அவன் உள்ளாடும் உணர்வுகளை உணரமுடியாமல் இவளுக்கும் பல நேரம் கல்லாகிப்போனது மனம்.

அவன் வார்த்தைகளில் சொல்வதானால் இவள் ஒரு சுதந்திரப் பறவை.  இவள் வார்த்தைகளில் சொல்வதானால் அவன் ஒரு விட்டேத்தி.

உள்ளுக்குள் அரிக்கும் வேதனையை அம்மாவிடம் சொல்லஅவளை அதிசயமாய் பார்த்தாள்.

உளறாதேடிஉனக்கென்ன குறை? உன்புருஷன்தான் என்ன குறை வச்சார்? உன்னை இங்க விட்டுட்டுப் போகும்போது என்ன சொன்னார்உன் இஷ்டம் போல எத்தனை நாள்வேணும்னாலும் தங்கிட்டு வான்னாரேஅது எத்தனைப் புருஷன்மார் வாயிலிருந்து வரும்? தங்கம்டீ அவர்! நான்தான் பார்த்தேனேபிறந்தநாள், கல்யாண நாள் எல்லாத்தையும் எவ்வளவு சரியா நினைவு வச்சிருந்து புடவை நகைன்னு வாங்கித்தரார்உனக்கு தலைவலின்னால் கூட உடனே டாக்டரிடம் அழைச்சிட்டு ஓடறார்..இதை விடவுமா நல்ல புருஷன் கிடைச்சிடப்போகிறான் ஒரு பொண்ணுக்கு போடி பைத்தியம்கிடைச்சதை அனுபவிக்கத் தெரியாத மண்டு”  என்று ஆத்துப்போனாள்..

அவளுக்கு எப்படி புரியவைப்பது? தான் எதிர்பார்ப்பது அவனிடம் புடவையோ நகையோ அல்ல, அன்பாய் ஆசையாய் ஒரு முத்தம் போதும்... தலைவலி என்றால் டாக்டர் எதற்கு? கொஞ்சம் அமிர்தாஞ்சன் கொஞ்சம் கரிசனம் போதுமே

முதல் கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட அன்று மாலை வரை பொறுமையில்லாமல் உடனே அவன்  அலுவலகத்துக்கு தொலைபேசினாள். ஆசையும் வெட்கமுமாய் திக்கித் திணறி ஒருவழியாய் விஷயத்தை சொல்லிமுடிக்க, அவன் கேட்டான்.

"அப்படியா? சரி, இதைச் சொல்லவா வேலை நேரத்தில் கூப்பிட்டே?"

அவள் அதிர்ந்துபோனாள். இது ஒரு பெரிய விஷயமே இல்லை என்பதுபோல் என்ன பதில் இது? இதைவிடவும் முக்கியமான விஷயம் என்றால் எதை எதிர்பார்க்கிறான். அவனைப் பொறுத்தவரை எதுவுமே முக்கியச் செய்தியில்லை என்று போகப்போகத்தான் புரிந்தது. இதோ இன்று தன் மரணம் கூட எத்தனை இயல்பாய் எடுத்துக்கொள்ளப்பட்டுவிட்டது அவனால்! அவள் பழைய நினைவுகளால் புழுங்கிக்கொண்டிருந்தாள்.

எத்தனைப்பேர் குழந்தைப்பேறு இல்லாமல் கோயில் கோயிலாய் அலைகிறார்கள்? கோடி கோடியாய் மருத்துவத்துக்கு செலவழிக்கிறார்கள்? அப்படியும் எல்லோருக்கும் கிடைத்துவிடுகிறதா, அந்தப் பாக்கியம்? இப்படி எந்தத் தொல்லையும் தராமல், இயல்பாய்த் தரித்ததற்காக எத்தனை சந்தோஷப்படவேண்டும்? வம்சம் தழைக்க துளிர் விட்ட வயிற்றை தன் அன்புவார்த்தைகளால் நீவி ஆனந்திக்கவேண்டாமா? குதூகலப்பகிர்வால் அவளை குஷிப்படுத்த வேண்டாமா? அவளது பரவசத்துள்ளலைப் பகிர்ந்திருக்கவேண்டாமா?

என்ன பிறவி இவன்?

பிரசவம் பற்றிய பயத்தைப் பகிரும்போதெல்லாம் என்ன சொன்னான்?

"என்ன, நீ? இப்படி பயப்படுறே?ஆடு, மாடு எல்லாம் தானாதான் குட்டி ஈணுது. அதுக்கெல்லாம் யாரு பிரசவம் பாக்குறா? அதுங்களுக்கெல்லாம் ஸ்கேன் உண்டா, மாசாமாசம் செக்கப் உண்டா? இருந்தாலும் அதது இயல்பா நடக்குதில்லே? என்னமோ நீ மட்டும்தான் அதிசயமா பெறப்போறவ மாதிரி கவலைப்படுறே! மருத்துவம் முன்னேறின இந்தக்காலத்திலே தேவையில்லாத பயம் எதுக்கு?"

ஆறுதலாய்தான் சொன்னான். ஆனாலும் தன்னை ஒரு ஆட்டுடனும், மாட்டுடனும் ஒப்பிட்ட அவனை அவளால் மன்னிக்கவே இயலவில்லை. தன் மனைவி தாயாகப்போகிறாள்  என்கிற அதீத கர்வத்தோடும் அக்கறையோடும், அவள் தலைகோதி,"கவலைப்படாதேம்மா! நான் உன்கூடவே இருக்கிறேன்!" என்றொரு வார்த்தை சொல்லியிருந்தால் எவ்வளவு தைரியமாக இருந்திருக்கும்? இப்படி அநியாயத்துக்கு பயமும், படபடப்பும் அதிகரித்து பிரசவத்தில் சிக்கல் ஏற்பட்டு அறுவை சிகிச்சைக்கு கொண்டுபோய் விட்டிருக்குமா?

போகட்டும் தன் விஷயத்தில்தான் இப்படி.. பிள்ளைகள் விஷயத்திலாவது தன் உள்ளார்ந்த உணர்வுகளைக் காட்டியிருக்கிறானா? மூத்தவள் பூப்பெய்திய நாளன்று அவனைத் தனியே அழைத்து சேதி சொன்னபோதும், தலைகால் புரியாமல் பரபரப்புடன் வளையவந்தபோதும், அக்கம்பக்கத்தை, உறவுகளை அழைத்து சடங்கு, சம்பிரதாயங்கள் செய்தபோதும் இப்படித்தான்! சற்றும் அலட்டிக்கொள்ளவில்லை.'இயல்பாய் நடக்கிற விஷயத்துக்கு இத்தனை ஆர்ப்பாட்டமா?' என்றொரு அலட்சியப்போக்குதான் இருந்தது.

என்னதான் தந்தை என்ற முறையில் பொறுப்பாய் பாடம் சொல்லிக்கொடுத்தாலும், அறிவு வளர ஆயிரம் உபகரணங்கள் வாங்கித் தந்தாலும், ஊர் ஊராய் உல்லாசப்பயணம் அழைத்துச் சென்றாலும் இதுபோன்ற ஒரு தருணத்தில், மகளின் அருகில் அமர்ந்து, "அம்மா! நீ வளர்ந்திட்டாயா? என்னால் நம்பவே முடியலையே! நேற்றுதான் பிறந்தமாதிரி இருக்கு!" என்று ஆதங்கத்துடன், ஆதுரத்துடன் அவள் கன்னம் வழித்துச் சொன்னால் எத்தனைச் சந்தோஷம் வரும் அந்தச் சின்னப்பெண்ணுக்கு?

சரி, அவனுக்குதான் தெரியவில்லை, அவளாவது எடுத்துச் சொல்லியிருக்கலாமே என்று தோன்றும்ஆனால் எடுத்துச் சொன்னால் புரிந்துகொள்ளும் நிலையிலா அவன் இருந்தான்? தான் நினைப்பதே சரி; தான் சொல்வதே நியாயம் என்று திடமாய் நம்புபவனிடம் எதைச் சொல்லி புரியவைப்பது? ஆனாலும் என்ன குறை வைத்தான் குடும்பத்துக்கு?

சொந்த வீட்டுக்கு அதிபதி! சொகுசுக்கார் வாசலில்! அவள் பீரோ, பட்டுப்புடவைகளாலும், தங்க நகைகளாலும் நிரம்பி வழிகிறது. இரண்டு பெண்களுக்கும் சீர் செய்யப் போதுமான செல்வம் சேர்த்தாகிவிட்டது. எல்லாம் யாரால்? அவனது கடின உழைப்புதானே காரணம்? மாங்கு மாங்கென்று உழைத்ததுதானே இத்தனை வசதிக்கும் அடிப்படை?

இத்தனை செய்திருக்கிறானேஇன்னும் அவனைக் குறைப்பட்டுக்கொண்டிருப்பதில் என்ன லாபம் என்று தோன்றினாலும் ஏன் குறைபடக்கூடாது என்பதற்கும் காரணங்களை வைத்திருந்தாள் அவள்.

எல்லாவற்றையும் விட்டுவிடுவோம்!  உயிரோடு இருந்தபோதுதான் அவள் உணர்வுகள் மதிக்கப்படவில்லை. இப்போது பிணமாய்க் கிடக்கிறாளேஅந்தப் பிணத்துக்குரிய மரியாதையைக் கொடுக்கிறானா அவன்? மரியாதை வேண்டாம்அவமரியாதையாவது செய்யாமல் இருக்கவேண்டாமா? யார் வீட்டிலோ இழவு விழுந்தது போல் எனக்கென்ன என்று இறுகிப்போன முகத்துடன் ஏடு படிப்பவனை என்னென்று சொல்வது?

இதோ, பாடை கட்டும் வேலை முடியப்போகிறது. இந்த இறுதி வேளையிலாவது அவள் பக்கம் வந்தமர்ந்து அவளது துவண்ட கைகளைப் பற்றி, ஒரு துளிக்கண்ணீர் விடுகிறானா? ஒரு துளி போதுமே, குமுறிக்கொந்தளித்துக் கொண்டிருக்கும் அவள் ஆன்மாவைக் குளிரவைப்பதற்கு!

உறவுகள் கூட அவனது இந்த நடவடிக்கை கண்டு அசூயையுடன் பார்த்தபடி தங்களுக்குள் தாறுமாறான கதைகளை அசைபோட்டுக்கொண்டிருந்தனர்.

இத்தனைவருடம் தன் சுகதுக்கங்களைப்  பொருட்படுத்தாமல், அவனுக்காகவே சிரித்து, அவனுக்காகவே உடுத்தி அவனுக்காகவே வாழ்ந்தவளுக்கு அவன் செய்யும் இறுதி மரியாதை இதுதானா? இதையெல்லாம் பார்க்கவா இன்னும் அலைந்துகொண்டிருக்கிறேன்? அவள் ஆன்மா புலம்பியது.

முடிந்துவிட்டது. எல்லாம் முடிந்துவிட்டது. கொள்ளி வைத்து பதினாறாவது நாள் துக்கமும் கொண்டாடி முடித்தாகிவிட்டது. அம்மா, மாடு கன்றுகளைப் பராமரிக்கவேண்டும் என்று அடித்துப் பிடித்துக்கொண்டு ஓடிவிட்டாள். மகள்கள் அவ்வப்போது நினைவு வந்து அவள் படத்தின் முன் நின்று அழுதனர். பின் இருவரும் அவர்கள் அப்பாவிடம் விடை பெற்றுக்கொண்டு ரயிலேறிவிட்டனர்.

நாட்கள்வாரங்களாகி மாதங்களாயின. இவள் மட்டும் இன்னும் இங்கேயே அலைந்துகொண்டிருக்கிறாள். பிரிய மனமில்லாதவளைப்போல் வீட்டைச் சுற்றி சுற்றி வருகிறாள்.

வீடு நிசப்தமாயிருந்தது. அவளிருந்த காலத்தில் இப்படி  ஒருநாளும் இருந்ததில்லை. சன்னமாய் ஏதாவதொரு பாடலை எப்போதும் தன்னையறியாமலேயே முணுமுணுத்துக்கொண்டிருப்பாள். பிசிறில்லாத தேன்குரலில் மனம் தழுவும் பழைய பாடல்களைத்தான் பெரும்பாலும் பாடுவாள். அது வீடெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கும். அதையும் அவன் ஒருநாளும் சிலாகித்துப் பாராட்டியதில்லை. அவளுக்கு வேதனை ஊற்றெடுத்துக் கழிவிரக்கம் பெருகியது..

'சே! ஏன் இப்படி எல்லாமே தொடர்ச்சியாய் நினைவுக்கு வந்து வந்து என்னை வாட்டுகின்றன? இப்படிப் பேயாய் அலையவா, நான் உன் தாயென வலம் வந்தேன்? உன்னையே என் உலகமென்று ஓயாமல் சுற்றிச் சுற்றி வந்தேன்? நான் இருந்ததும், இல்லாததும் உன்னை எந்த விதத்திலும் பாதிக்கவில்லையா? ஒரு நாற்காலிக்கால் உடைந்துபோனால் கூட அய்யோ, உடைந்துவிட்டதே! என்று உச்சு கொட்டுகிறோமே! எனக்கு அந்த நிலையும் இல்லையா? நான் என்ன அந்த ஜடப்பொருளினும் கீழானவளாய்ப் போய்விட்டேனா? என் முக்கியத்துவம் என்று எதுவுமே இல்லையா? இதுவரை நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம்தான் என்ன? எனக்கு விமோசனமே கிடையாதா? நரிகளும், நாய்களும் ஊளையிடும் நள்ளிரவில் நிறைவேறாத ஆசைகளைத் தாங்கி இப்படியே அலையவேண்டியதுதானா?

ஆற்றாமையால் வெம்பிய அவள் குமுறலை, மெல்லிய விசும்பல் கலைத்தது. யார்? யார் இந்நேரத்தில்? ஏன்? எதற்காக

கூடத்துத் தரையில் குப்புறக்கிடந்தவனைக் கண்டு துணுக்குற்றாள். தலைக்கடியில் கோர்த்திருந்த கைகளின் வழியே கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. சின்ன சின்னதாய் எழுந்த தேம்பல் சட்டென வேகமெடுத்து பெருங்கேவலாய் எழ, இவள் பதறிப்போனாள். கண்ணீர் ஆறாய்ப் பெருக, அரவணைப்பார் இல்லாத குழந்தை போல் தொடர்ந்து கேவிக்கொண்டிருந்தான். அவள் அதிர்ச்சியுடன் அவனை நோக்கினாள்.

அவன் கைகளுக்கடியில் அவள் புகைப்படம்! அவனைச் சுற்றிலும் அவள் கட்டி ஓய்ந்த புடவைகள்அவள் வரைந்த திரைச்சீலை ஓவியம், அவள் சேகரித்துத் தொகுத்த தபால்தலை ஆல்பம், அவள் உபயோகப்படுத்திய பேனா, அவள் ரசித்த பாட்டு டிவிடிக்கள்…. இன்னும் இன்னும் அவள் புழங்கிய அவள் நினைவுகளைத் தாங்கிய அவனை உறுத்திக்கொண்டிருக்கும் ஏராளப் பொருட்கள்.... கரைகாண முடியாத தூரத்தில் துக்கத்தின் நடுக்கடலில் அவன் பிடிப்பற்று நீந்தித் தவித்துக்கொண்டிருப்பதைப் போல் தோன்றியது.

அவனைப் பார்க்கப் பரிதாபமாய் இருந்தது. வாய்விட்டு எதையும் உரைக்காதபோதும் அவன் மனமொழி புரிந்தது அவளுக்கு. ஊமை வலியின் வேதனை அவள் அறியாததா? இன்பம், துன்பம் எதையுமே வாய்மொழி சொல்லியறியாதவன். அது அவன் குறையல்ல. அவனை சரியாய்ப் புரிந்துகொள்ளாத தன் குறையே என்பது அப்போதுதான் அவளுக்குப் புரிந்தது. தன்னை, தன் உணர்வுகளை அவன் புரிந்துகொள்ளவில்லையென்று அவனைக் குறை சொல்லியே சுற்றிய மனம், இப்போது, அவனை, அவன் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத தன்னைத் தானே குறைசொல்லி முறையிட்டது. குற்ற உணர்வின் பிடியில் அகப்பட்டவளுக்கு அவனழுத கண்ணீர் ஆறுதல் சொன்னது. காலங்கடந்து உணரப்பட்ட காதலை அவன் உணர்த்தும் காலமும் காலனால் பறிக்கப்பட்டிருந்தது.  அழுபவனைத் தேற்ற இயலாமல் தவித்தவள்காலத்தின் கையிலேயே அந்தப் பொறுப்பை ஒப்படைத்து அகன்றாள்.

தனக்குத்தானே சுவர்கள் எழுப்பி அதற்குள் அடைபட்டுக்கிடந்த அவன் உள்ளம் இப்போது தன் இருப்பை வெளிப்படுத்தும் எண்ணத்தோடு சுவருடைத்து வெளிவந்து உணர்த்துகிறது தான் ஒரு கல் அல்ல, கற்பூரம் என்பதை!

கற்பூரம் எரிந்துதான் தன் இருப்பைக் காட்டவேண்டுமென்ற அவசியம் இல்லையேகாற்றிலும் கரைந்து நிரூபிக்கலாம் அவனைப் போல. இவளும் காற்றோடு காற்றாய் மெல்லக் கரையத் தொடங்கினாள் அந்த கற்பூரம்போலவேஇனி அவளுக்கு அங்கென்ன வேலை?


                                                ******************
(ஜூன் 14, 21 ஆகிய தினங்களில் வெளியான தினமலர் பெண்கள் மலரில் வெளிவந்த கதை என்பதும் அச்சிலேறிய என் முதல் படைப்பு என்பதும் மகிழ்வு தரும் செய்திகள்.)