23 April 2024

வெண்ணெய்ச்செடி (ஊனுண்ணித் தாவரங்கள் 3)

பயிர்கள் நன்கு செழித்து வளர்வதற்கு தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து என்ற மூன்று இன்றியமையாத சத்துக்கள் தேவை என்று பள்ளிப்பாடங்களில் படித்திருப்போம். தழைச்சத்து என்பது நைட்ரஜனையும், மணிச்சத்து என்பது பாஸ்பரஸையும் சாம்பல் சத்து என்பது பொட்டாசியத்தையும் குறிக்கும். இவை பயிர் வளர மட்டுமல்ல, பொதுவான தாவர வளர்ச்சிக்கே மிகவும் அடிப்படையான சத்துகள். மண்ணில் இருக்கும் கனிம வளம் காரணமாக பல தாவரங்கள் இயற்கையாக மண்ணிலிருந்தே அவற்றைப் பெற்று வளர்கின்றன. அல்லது இயற்கை மற்றும் செயற்கை உரங்களின் மூலம் அவற்றைப் பெற்று பயனடைகின்றன. ஆனால் எந்த வகையிலும் இச்சத்துக்களைப் பெற வழியில்லாத, எரிமலைக் குழம்பினால் உண்டான மண் போன்ற, துளியும் சத்துக்கள் இல்லாத மண்ணில் வளரும் செடிகள்தான் தேவையின் பொருட்டு ஊனுண்ணித் தாவரங்களாக பரிணாம மாற்றம் அடைந்துள்ளன.

வெண்ணெய்ச்செடி

ஊனுண்ணித் தாவர வரிசையில் முதலில் ஜாடிச்செடிகள் பற்றியும் இரண்டாவதாக பனித்துளி பசைச்செடிகள் பற்றியும் பார்த்தோம். பசையைப் பயன்படுத்தி பூச்சிகளைப் பிடிக்கும் இன்னொரு ஊனுண்ணித் தாவரம் பிங்விகுலா (Pinguicula) பேரினத்தைச் சேர்ந்த Butterwort செடிகள். இவற்றின் இலைகள் மினுமினுப்புடனும் தொட்டால் ஒட்டிக்கொள்ளும் எண்ணெய்ப் பசையுடனும் காணப்படுவதால் ‘வெண்ணெய்ச்செடி’ என்று பொருள்படும் ‘பட்டர்வர்ட்’ என்ற பெயர் இடப்பட்டுள்ளது. Pinguis என்றால் லத்தீனில் ‘கொழுப்பு’ என்று பொருள்.  

பிங்விகுலா பேரினத்தில் 80-க்கும் மேற்பட்ட சிற்றினங்கள் உள்ளன. பெரும்பாலானவை தென்னமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவை.

பனித்துளி பசைச்செடி

பசையைப் பயன்படுத்தி பூச்சிகளைப் பிடிப்பவை என்றாலும், பட்டர்வர்ட் செடிகளுக்கும் சென்ற பதிவில் பார்த்த sundew எனப்படும் ட்ரோசெரா இனத் தாவரங்களுக்கும் உருவ அமைப்பிலும் பூச்சிகளைப் பிடிக்கும் உத்தியிலும் வேறுபாடுகள் உள்ளன.

பனித்துளி பசைச்செடிகளின் உணர் இழைகளோடு ஒப்பிடும்போது வெண்ணெய்ச்செடி இலைகளின் உணர் இழைகள் உயரத்தில் மிகவும் சிறியவை. பனித்துளி பசைச்செடியில் உணர் இழைகள் அசையக்கூடியவையாகவும் நாணல் போல் நாலாபக்கமும் வளையக்கூடியவையாகவும் இருக்கும். ஆனால் வெண்ணெய்ச்செடியின் உணர் இழைகள் அந்த அளவுக்கு அசையும் தன்மை அற்றவை.

பட்டர்வர்ட் இனத்திலேயே பல வித்தியாசமான வகைகள் உள்ளன.

  • சில பட்டர்வர்ட் இனங்கள் கோடைக்காலத்தில் பூச்சித்தின்னி இலைகள், குளிர்காலத்தில் பூச்சித்தின்னா இலைகள் என பருவகாலத்துக்கு ஏற்ப மாறுபட்ட இலைகளை உருவாக்கும்.
  • சில பட்டர்வர்ட் இனங்கள் வசந்தகாலத்திலும் குளிர்காலத்திலும் வடிவத்திலும் அளவிலும் மாறுபட்ட இலைகளை உருவாக்கும்.
  • சில பட்டர்வர்ட் இனங்கள் மொக்கு போல சிறுத்து தரைக்குள் அமிழ்ந்து குளிர்கால உறக்கத்தில் ஆழ்ந்துவிடும். அப்போது உணவுக்கான தேவை கிடையாது என்பதால் புதிய தளிரோ இலையோ எதுவும் உருவாகாது. கடுங்குளிர் முடிந்து பருவநிலை சாதகமான பிறகு தரையிலிருந்து மொக்கு கிளம்பி விரிந்து புதிய துளிர்களை உருவாக்கும்.
  • சில பட்டர்வர்ட் இனங்கள் எல்லாக் காலத்திலும் எவ்வித மாற்றமும் இன்றி ஒரே மாதிரியான இலைகளையே வளரச்செய்யும்.

 

வெண்ணெய்ச்செடியின் இலைகள்

பட்டர்வர்ட் செடியின் இலைகள் இரண்டு செ.மீ. முதல் முப்பது செ.மீ. வரை நீளம் இருக்கும். நெருக்கமான உணர் இழைகளின் நுனியில் சுரக்கும் பசைத்திரவத்தால் இலைகள் ஈரத்தின் மினுமினுப்போடு காணப்படும். தண்ணீர் என்று நினைத்து அதைக் குடிப்பதற்காக பூச்சிகள் இலையின் மீது அமரும். அப்போது உணர் இழைகளின் பசையில் ஒட்டிக்கொள்ளும். நைட்ரஜனின் இருப்பு அறியப்பட்ட உடனே செடிக்கு சமிக்ஞை கொடுக்கப்படும். இலையின் மேற்புறம், உணர் இழைகளின் கீழே இருக்கும் என்சைம் சுரப்பிகள் தூண்டப்படும். பூச்சியின் முழுச் சத்துகளும் உறியப்பட்ட பிறகு பூச்சியின் வெளியோடு மட்டுமே எஞ்சியிருக்கும்.  

பூச்சியைப் பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டால் பனித்துளி பசைச்செடி போல அக்கம்பக்க உணர் இழைகள் வளைந்து பூச்சியை இறுகப் பற்ற உதவாது என்றாலும் பட்டர்வர்ட் செடிகளில் இலையே சில வேளைகளில் வளைந்து கொடுத்து பூச்சி தப்பிக்காமல் பலமாக ஒட்டிக்கொள்ள உதவும்.

பட்டர்வர்ட் செடிகள் குறித்த மற்றொரு சுவாரசிய விஷயம் என்ன தெரியுமா? இவை ஊனுண்ணி மட்டுமல்ல, தாவரவுண்ணியும் கூட. புரியவில்லையா? பூச்சிகளிலிருந்து சத்துக்களைப் பெறுவதைப் போன்றே பிற தாவரங்களிலிருந்தும் சத்துக்களைப் பெறுகின்றன. தேடிப்போய் பெறுவதில்லை என்றாலும் பட்டர்வர்ட் இலைகளின் மீது தற்செயலாக விழும் பிற தாவர இலைகள், பூக்கள், மகரந்தம் போன்றவற்றைக் கிரகித்து அவற்றிலிருந்து தங்களுக்குத் தேவையான புரதச்சத்து உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்களைப் பெற்றுக்கொள்கின்றன.

வெண்ணெய்ச்செடி பூக்களுடன்

பட்டர்வர்ட் செடிகள் வணிகநோக்கிலும் பல இடங்களில் பயன்பாட்டில் உள்ளன. ஆர்க்கிட் மலர்த்தோட்டங்களில் செடிகளையும் பூக்களையும் பாதிக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த பட்டர்வர்ட் செடிகளும் கூடவே வளர்க்கப்படுகின்றன.

பூச்சிகளைச் செரித்து முடிப்பதற்குள் அவை அழுகிவிடாமல் இருப்பதற்காக பட்டர்வர்ட் இலைகள் வீரியமான நுண்ணுயிர்க்கொல்லியை உற்பத்தி செய்கின்றன. கால்நடைகளின் காயங்களை விரைவில் குணப்படுத்த, பட்டர்வர்ட் இலைகளை அரைத்து மருந்தாகக் கட்டும் வழக்கம் ஐரோப்பியர்களிடையே நெடுங்காலமாக உண்டு என்று குறிப்பிட்டவர் ஸ்வீடனைச் சேர்ந்த மருத்துவரும், தாவரவியலாளரும் விலங்கியலாளரும் ‘நவீன வகைப்பாட்டியலின் தந்தை’ என்று போற்றப்படுபவருமான கார்ல் லின்னேயஸ் (1707-1778).

கார்ல் லின்னேயஸ் (படம் உதவி - விக்கிபீடியா)

ஸ்வீடன், நார்வே போன்ற நாடுகளில் பட்டர்வர்ட் இலைகளைப் பயன்படுத்தி பாலைத் திரித்தும் புளிக்கவைத்தும் தயிர், மோர், பாலாடைக்கட்டி போன்ற பால்பொருட்களை உருவாக்கினர் என்றும் தெரிகிறது.

வெண்ணெய்ச்செடி


வெண்ணெய்ச்செடியின் பூக்கள் மிக அழகானவை. அவை பார்ப்பதற்கு ஐந்து இதழ்களைப் போல தோற்றமளித்தாலும் உண்மையில் அவற்றுக்கு இரண்டே இதழ்கள்தான் உண்டு. மேல் இதழ் மூன்று பிரிவாகவும் கீழ் இதழ் இரண்டு பிரிவாகவும் பிரிந்திருக்கும். பூக்கள் காய்ந்து விதைகள் உருவாகும். விதைக்கூடு முற்றி வெடித்து காற்றின் மூலம் விதைபரவல் நடைபெறும்.

வெண்ணெய்ச்செடியின் ஈரிதழ்ப் பூ


ஊனுண்ணிச் செடிகளின் பூக்கள் காயாக வேண்டும் எனில் மகரந்தச் சேர்க்கை நடைபெறவேண்டும். மகரந்தச் சேர்க்கை நடைபெற பூச்சிகள் வேண்டும். பூச்சிகளை செடியே பிடித்துத் தின்றுவிட்டால் பிறகு மகரந்தச் சேர்க்கை எப்படி நடைபெறும்? இந்த சந்தேகம் எனக்கும் வந்தது. ஆனால் அதற்கும் பலவிதமான உத்திகளை ஊனுண்ணித் தாவரங்கள் கையாளுகின்றன என்று அறிந்து வியந்தேன். அவை என்னென்ன என்று அடுத்தப் பதிவில் பார்ப்போமா?

தொடரும்.

15 April 2024

பனித்துளி பசைச்செடிகள் (ஊனுண்ணித் தாவரங்கள் 2)

 

பசைச்செடிகள்

உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான ஊனுண்ணித் தாவர இனங்கள் காணப்படும் நாடுகளுள் ஆஸ்திரேலியாவும் ஒன்று என்றும் இதுவரை கண்டறியப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ள 750-க்கும் மேற்பட்ட ஊனுண்ணித் தாவரவினங்களுள் 250-க்கும் மேற்பட்டவை ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்றன என்றும் அவற்றுள் சில வேறெங்கும் காணப்படாத தனித்தன்மை வாய்ந்தவை என்றும் Australian Geographic சஞ்சிகை குறிப்பிடுகிறது.  

“தாவரங்களின் ஊனுண்ணும் செயல், பரிணாமத்தின் கடைசிக் கட்ட முயற்சிதான்” என்கிறார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஊனுண்ணித் தாவர வல்லுநர் Greg Bourke. 

“ஏனெனில் ஒரு தாவரம் ஒளிச்சேர்க்கைக்குத் தேவையான இலைகளை உருவாக்குவதை விடவும் பூச்சிகளைப் பிடிக்கும் இலைகளை உருவாக்க அதிக ஆற்றலைச் செலவழிக்க வேண்டும். அவ்வளவு கஷ்டப்பட்டு அந்த இலைகளை ஏன் உருவாக்கவேண்டும்? ஏன் பூச்சிகளைப் பிடிக்க வேண்டும்? ஏதாவதொரு வழியில் தங்களுக்குத் தேவையான நைட்ரஜனைப் பெற்றுக்கொள்ளவில்லை என்றால் அத்தாவரங்கள் மடிந்துவிடும்” என்கிறார்.

ஊனுண்ணித் தாவரங்கள் பூச்சிகளை ஈர்ப்பதற்குப் பயன்படுத்தும் விதவிதமான உத்திகளுள் நறுமணம் பரப்புதலும் ஒன்று என்று சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன். மாறாக சில ஊனுண்ணித் தாவரங்கள் அழுகிய மாமிச வாடை போன்ற துர்நாற்றத்தைப் பரப்பியும் பூச்சிகளை ஈர்க்கின்றன. மாமிச வாடைக்கு மொய்க்காத ஈக்கள் உண்டா? ஊனுண்ணும் ஆசையோடு வரும் ஈக்களை லபக்கென்று பிடித்து தங்களுக்கு இரையாக்கிக் கொள்கின்றன அந்த ஊனுண்ணித் தாவரங்கள்.

நம்மால் நடக்க முடியும், உடலை அசைக்க முடியும். கழுத்தைத் திருப்ப முடியும். கைகளை இயக்க முடியும். இருந்தாலும் நம்மைச் சுற்றி சுற்றிப் பறந்து தொல்லை செய்யும் ஒரு ஈயையோ கொசுவையோ சட்டென்று அடித்துவிட நம்மால் முடிகிறதா? பெரும்பாலும் எப்படியோ நம்மிடமிருந்து தப்பித்துவிடுகிறது. ஆனால் இந்த ஊனுண்ணித் தாவரங்கள் தாங்கள் இருந்த இடத்திலேயே இருந்துகொண்டு பூச்சிகளை மிக சாமர்த்தியமாகவும் லாவகமாகவும் பிடிக்கும் திறமையை வியக்காமல் இருக்கமுடியவில்லை.


சார்லஸ் டார்வின் (படம் உதவி- விக்கிபீடியா)

இந்தப் பூமியில் தாவரங்களும் ஊனுண்ணும் என்ற உண்மையை ஆய்வுபூர்வமாக நிரூபித்ததோடு அவற்றின் ஊனுண்ணும் உத்திகளையும் உலகறியச் செய்தவர் ‘பரிணாம உயிரியலின் தந்தை’ என்று போற்றப்படும் சார்லஸ் டார்வின். அதுவரை அத்தாவரங்கள் மீதான கூர் கவனிப்பை வேறு யாரும் பெரிய அளவில் மேற்கொண்டிருக்கவில்லை. டார்வினின் கண்டுபிடிப்பும் கூட ஒரு தற்செயல் கண்டுபிடிப்புதான்.

1860 வாக்கில் ஒரு கோடைகாலம். டார்வின் தன் மனைவியோடு இங்கிலாந்தில் ஒரு கிராமத்துக்கு ஓய்வுக்காகச் சென்றிருந்தார். இயற்கை ஆர்வலரும் ஆராய்ச்சியாளருமான அவர் தினமும் உலவச் செல்லும் புதர்ப்பாதையில் Drosera எனப்படும் செடிகளில் பூச்சிகள் ஏராளமாக ஒட்டிக்கிடப்பதைக் கண்டார். அவருடைய ஆய்வுமனம் விழித்துக்கொண்டது. உடனடியாக சில செடிகளை சேகரித்து ஆய்வினைத் தொடங்கினார். தன்னுடைய ஆய்வக நண்பர்களுக்குத் தகவல் அனுப்பினார். இரவும் பகலும் அவற்றைக் குறித்த ஆராய்ச்சியிலேயே கழித்தார்.

டோர்செரா இனம்

டார்வினின் இடைவிடாத ஆராய்ச்சியைக் கண்ட அவர் மனைவி எம்மா தன்னுடைய தோழிக்கு எழுதிய கடிதத்தில், ‘சார்லஸ் தற்போது ட்ரோசெரா தாவரம் குறித்த ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். எந்நேரமும் பதற்றமும் பரிதவிப்புமாகத் தென்படுகிறார். அதை ஒரு உயிருள்ள ஜீவன் போலவே கருதுகிறார். போகிற போக்கைப் பார்த்தால் அந்தத் தாவரம் ஒரு விலங்கு என்று நிரூபிக்காமல் விடமாட்டார் போலிருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.        

ஊனுண்ணி தாவரங்கள் பற்றிய முதல் புத்தகம்

சுமார் பதினைந்து வருடங்களாக Drosera மற்றும் Dionaea என்ற ஊனுண்ணித் தாவரங்களின் இயக்கம் மற்றும் செயல்பாடு குறித்து தாவரவியல் ஆராய்ச்சியாளர்களோடு இணைந்து டார்வின் மேற்கொண்ட தீவிர அவதானிப்புக்கும், பல்வேறு விதமான மாறுபட்ட ஆராய்ச்சிகளுக்கும் பிறகு 1875-ஆம் ஆண்டு 'பூச்சியுண்ணும் தாவரங்கள்' (Insectivorous Plants) என்ற புத்தகத்தை வெளியிட்டார். அதில் இடம்பெற்றுள்ள விளக்கப் படங்களை டார்வினும் அவருடைய மகன்கள் ஜார்ஜும் ஃப்ரான்சிஸும் வரைந்துள்ளனர். 

சார்லஸ் டார்வின் புத்தகத்திலிருந்து (1) (படம் உதவி - விக்கிபீடியா)

சார்லஸ் டார்வின் புத்தகத்திலிருந்து (2) (படம் உதவி - விக்கிபீடியா)


டார்வின் தன்னுடைய நூலில் ஆய்வுமுடிவுகளாகக் குறிப்பிட்டிருக்கும் சில அம்சங்கள்:

  • பூச்சியுண்ணும் தாவரங்கள் பூச்சியைப் பிடிப்பதற்கு வெவ்வேறு உத்திகளைப் பயன்படுத்துகின்றன.
  • பூச்சியுண்ணும் தாவரங்கள் நைட்ரஜன் உள்ள பொருட்களை மட்டுமே பிடிக்கின்றன. நைட்ரஜன் அல்லாத பொருட்களைப் பிடிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.
  • பூச்சியுண்ணும் தாவரங்கள் மழைநீர், பெருங்காற்று, மற்ற இலைகளின் உரசல் போன்ற தேவையில்லாத அசைவுகளுக்கு எந்த எதிர்வினையும் ஆற்றுவதில்லை. அதனால் அவற்றின் சக்தி விரயமாகாமல் பாதுகாக்கப்படுகிறது.
  • பூச்சியுண்ணும் தாவரங்கள் அமிலநீரைச் சுரந்து பூச்சிகளைச் செரிமானம் பண்ணும் செயல் கிட்டத்தட்ட விலங்குகள் தங்கள் இரையைச் செரிமானம் பண்ணும் செயலுக்கு நிகராக உள்ளது. 

******

டார்வினை ஈர்த்து ஆய்வுக்குள்ளாக்கிய ட்ரோசெரா தாவரத்தின் தன்மை என்னவென்று பார்ப்போமா? இவற்றின் உத்தி கிட்டத்தட்ட நம்முடைய எண்ணெய்த் தாள் உத்தி போன்றதுதான்.

அதென்ன எண்ணெய்த் தாள் உத்தி? எங்களுடைய சிறு வயதில் வீட்டுக்கு வீடு காணக்கூடிய காட்சி அது. குண்டு விளக்கோ குழல் விளக்கோ இரவு நேரத்தில் விளக்கைப் போட்டதுமே விட்டில் பூச்சிகள் எனப்படும் அந்துப்பூச்சிகள் விளக்கை வட்டமிடத் தொடங்கும். கொஞ்ச நேரத்தில் சூடு தாங்காமல் பொத் பொத்தென்று ஆங்காங்கே விழும். விரித்து வைத்து படித்துக்கொண்டிருக்கும் பாடப்புத்தகம், தட்டில் பரிமாறப்பட்டிருக்கும் சாப்பாடு, கொட்டாவி விடத் திறந்த வாய் என எங்கு வேண்டுமானாலும் விழுந்து தொல்லை தரும். அதைத் தவிர்க்க யாரோ கண்டுபிடித்த உத்திதான் எண்ணெய்த் தாள். ஒரு காகிதத்தின் இரு பக்கமும் எண்ணெயைத் தடவி ஏதாவதொரு முனையில் ஓட்டை போட்டு அதில் நூலைக் கோர்த்து விளக்கின் கீழே கட்டித் தொங்க விட்டுவிடுவோம். அந்துப் பூச்சிகள் அந்த எண்ணெய்ப்பசையில் பச்சக் என்று ஒட்டிக்கொள்ளும். கூடுதல் போனசாக கொசுக்களும் ஒட்டிக்கொள்ள, நம்மால் நிம்மதியாக நம் வேலையைப் பார்க்க முடியும்.

அதே உத்தியைப் பயன்படுத்திதான் Sundews எனப்படும் பசைத்தாவரங்கள் பூச்சிகளைப் பிடிக்கின்றன. நிச்சயமாக நம்மைப் பார்த்து அவை கற்றுக்கொண்டிருக்க வாய்ப்பு இல்லை. நாம்தான் அவற்றைப் பார்த்துக் கற்றுக்கொண்டிருக்கவேண்டும். ஆனால் நாம் அவற்றுக்கு Flypaper trap plant என்று பெயர் வைத்துவிட்டோம்.

Drosera tracyi

ட்ரோசெரா இனத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சிற்றினங்கள் காணப்படுகின்றன. இலைகள் மண்ணுக்குள் இருக்கும் கிழங்கிலிருந்து நேரடியாக வளர்கின்றன. சிலவற்றின் இலைகள் புல் போன்று நீளமாக இருக்கும். சிலவற்றின் இலைகள் திலக வடிவிலும் சிலவற்றின் இலைகள் கரண்டி வடிவிலும் காணப்படும். சில இனத்தில் தாமரையின் இதழ்களைப் போல வட்டமாக அடுக்காக அமைந்திருக்கும்.

பசைச்செடி இனம் 1

பசைச்செடி இனம் 2

பசைச்செடி இனம் 3

பசைச்செடி இனம் 4

வடிவங்கள் வேறாக இருந்தாலும் அவற்றுக்குள் இருக்கும் ஒற்றுமை பசையோடு கூடிய உணர் இழைகள். இலைகளின் மீது நெருக்கமாக அமைந்திருக்கும் மெல்லிய மயிரிழை போன்ற உணர் இழைகளின் நுனியில் கோந்து போன்ற நுண்ணிய பசைத்துளிகள் சுரந்து காணப்படும். காலை நேரத்தில் புல்வெளியில் மின்னும் பனித்துளிகளைப் போல இந்தச் செடியின் பசைத்துளிகளும் மின்னிக்கொண்டிருக்கும். அதனால்தான் இவற்றுக்கு பனித்துளிகள் என்று பொருள்படும் Sundews என்று பெயரிடப்பட்டுள்ளது. 



உணர்கொம்புகளின் முனையில் பசைத் துளிகள்

இந்தப் பசைத்துளிகள் இனிப்புச்சுவை கொண்டவை என்பதால் பூச்சிகள் அவற்றைத் தேடிவரும். அப்போது பசைத்துளிகளில் ஒட்டிக்கொள்ளும். பூச்சிகள் தப்பிக்க முயற்சி செய்யும்போது அக்கம்பக்கத்திலிருக்கும் மற்ற உணர் இழைகளும் உதவிக்கு வரும். அதாவது இலையே வளைந்தும் குனிந்தும் பூச்சியை இறுக்கமாகப் பற்றிக்கொள்ளும். எல்லாப் பக்கத்திலிருந்தும் தாக்குதல் நடந்தால் பூச்சியால் என்ன பண்ண முடியும்? தப்பிக்க இயலாமல் நன்றாக சிக்கிக் கொள்ளும். அடுத்து பசைத்துளி இருக்கும் உணர் இழைகள் பூச்சியைச் செரிக்கத் தேவையான என்சைம்களைச் சுரக்கும். பூச்சியை முழுவதுமாக செரித்துமுடித்து சத்துக்களை உறிஞ்சி எடுத்த பிறகுதான் உணர் இழைகள் மறுபடியும் நிமிர்ந்து பழைய நிலைக்கு வரும். 

 பிடிபட்டுள்ள பூச்சிகளோடு

பசை உத்தியைப் பயன்படுத்தி பூச்சிகளைப் பிடிக்கும் இன்னொரு ஊனுண்ணித் தாவரமான butterwort பற்றி அடுத்தப் பதிவில் பார்க்கலாம்.  

தொடரும்...