31 March 2024

ஜாடிச் செடிகள் (ஊனுண்ணித் தாவரங்கள் 1)

 



//உதயசிம்மன் மந்திரவாதி குறிப்பிட்ட அந்தக் காட்டை அடைந்தான். இருள் அடர்ந்த அக்காடு பயங்கர அமைதியுடன் காட்சியளித்தது. உயிரினங்கள் வாழ்வதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை. அவன் முன்னெச்சரிக்கை உணர்வுடன் உடைவாளை உருவிக் கையில் எடுத்துக்கொண்டான். அடிபெருத்த மரங்கள் பெருங்கிளைகளைப் பரப்பி சூரிய ஒளியை உள்ளே வரவிடாது தடுத்துக் கொண்டிருந்தன. பெரிய பெரிய இலைகளுடன் பெயர் தெரியாத பல தாவரங்கள் ஒன்றோடொன்று பின்னிக்கிடந்தன. வாளால் அவற்றை வெட்டித்தள்ளி பாதை உண்டாக்கியபடி முன்னேறினான். ஆங்காங்கே தென்பட்ட எலும்புக்கூடுகளும் அங்கு நிலவிய துர்நாற்றமும் அவனுக்குள் பயத்தை உண்டாக்கின

சட்டென்று ஒரு பெரிய மரக்கிளையொன்று தாழ்ந்து அவன்முன் வந்தது. அவன் சுதாரிக்குமுன்பே யானையின் தும்பிக்கை போல் அவனைச் சுற்றி வளைத்துத் தூக்கியது. ஒரு மலைப்பாம்பு இரையைச் சுற்றி வளைத்து எலும்பை நொறுக்குவது போல மரக்கிளை அவனை இறுக்க ஆரம்பித்தது. தான் காண்பது கனவா நனவா என்று புரியாமல் அவன் தவித்தான். மரக்கிளையின் பிடியிலிருந்து விடுபடுவது அவ்வளவு எளிதாயில்லை

ராட்சஸன் ஒருவன் மர உருவெடுத்து வாழ்ந்துகொண்டிருக்கிறானோ என்ற ஐயம் ஏற்பட்டது. வழியில் கண்ட எலும்புக்கூடுகளுக்கான காரணம் இப்போது புரிந்தது. இனி ஒரு விநாடி தாமதித்தாலும் தன் உயிர் தன்னுடையதல்ல என்று உணர்ந்தவன், முழுபலத்தையும் பிரயோகித்து தன் கையிலிருந்த உடைவாளால் கிளையை ஓங்கி ஒரு போடு போட்டான். மரக்கிளை ஒரே வெட்டில் துண்டாகி கீழே விழுந்தது. அத்துடன் அவனும் கீழே விழுந்து உயிர் தப்பினான்.//

இந்த மாதிரி அம்புலி மாமா கதைகளை நம் சிறுவயதில் எவ்வளவு படித்திருப்போம். எவ்வளவு பயங்கரமான சித்திரத் தொடர்களைப் பார்த்திருப்போம். அவையெல்லாம் உண்மையா பொய்யா என்ற ஆராய்ச்சியிலும் இறங்கியிருப்போம். முடிவில் எல்லாமே பொய், கட்டுக்கதை என்றும், இல்லையில்லை, உண்மைதான், அமேசான் போன்ற காட்டுக்குள் அத்தனையும் சாத்தியம் என்றும் இருவேறு முடிவுகளுக்கு வந்திருப்போம். இரண்டிலுமே உண்மை இருக்கிறது.

மாமிசம் உண்ணும் தாவரங்கள் உலகில் உள்ளன என்பது உண்மை. ஆனால் மனிதர்களை உண்ணக்கூடியவை என்பது பொய். ஊனுண்ணும் தாவரங்கள் எல்லாமே அளவில் மிகவும் சிறியவை. 




புழு, பூச்சிகளையும் அதிகபட்சமாக வௌவால், எலி, தவளை, பறவைகள் போன்ற சிற்றுயிர்களையும் உண்ணும் அளவுக்குச் சிறியவை ஊனுண்ணித் தாவரங்கள் யாவும். கதைகளில் சொல்லப்படுவது போல ஒரு மனிதனைத் தின்பதென்பது அசாத்தியம். ஒருவேளை கீழே உள்ள படத்தில் இருப்பது போன்று ராட்சத வடிவில் இருந்தால் மட்டுமே அது சாத்தியம். 


சிட்னியின் தாவரவியல் பூங்காவில் நான் எதிர்பார்க்காத ஒரு தருணத்தில் அனைத்து ஊனுண்ணித் தாவரங்களையும் அருகில் பார்த்து ரசிக்கும் அரிய வாய்ப்பு கிடைத்தது. ஆசை தீரப் பார்த்து ரசித்து படம் பிடித்ததோடு அவற்றைக் குறித்த தகவல்களையும் அறிந்து வியந்தேன். அங்கே நான் எடுத்த படங்களையும், நான் அறிந்துகொண்ட தகவல்களையும் இங்கே உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறேன்.

*****

ஊனுண்ணித் தாவரங்களும் பிற தாவர இனங்களைப் போலவே முன்னொரு காலத்தில் சைவமாகத்தான் இருந்திருக்கின்றன. எப்போது அசைவமாயின? தேவை ஏற்பட்டபோது. இன்று நேற்றல்ல, பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்ட பரிணாம மாற்றம் இது. மண்ணிலிருந்து உறிஞ்சப்படும் சத்துக்களும், சூரிய ஒளியும், நீரும்தான் தாவர வளர்ச்சிக்கு அடிப்படைத் தேவைகள் என்பதை அறிவோம்.  இலைகளின் வளர்ச்சிக்கு அதிமுக்கியமான நைட்ரஜன் என்னும் கனிமவளம் மண்ணிலிருந்து கிடைக்காமல் போகும் பட்சத்தில் தாவரங்கள் அதற்கான தேடலில் ஈடுபடுகின்றன. தேடலின் முடிவில் மிகவும் புத்திசாலித்தனமாக அவை கண்டறிந்த தீர்வுதான் சிற்றுயிர்களைப் பிடித்து அவற்றின் உடலிலிருந்து சத்துக்களை உறிஞ்சிப் பெற்றுக்கொள்வது.

ஊனுண்ணி என்று எந்த வகையான தாவரங்களைக் குறிப்பிடுகிறோம்? பிரத்தியேகமான உத்திகள் மூலம் இரையைப் பிடிக்கும் அவை, முக்கியமான ஐந்து நிலைகளில் செயல்படுகின்றன.  

  • 1.   ஏதேனுமொரு உத்தியைப் பயன்படுத்தி இரைபிடித்தல்
  • 2.   பிடித்த இரையைக் கொல்லுதல்
  • 3.   கொன்ற இரையைச் செமித்தல்
  • 4.   செமித்த இரையிலிருந்து சத்துக்களை உறிஞ்சுதல்
  • 5.   உறிஞ்சிய சத்துக்களை தன்னுடைய வளர்ச்சிக்குப் பயன்படுத்துதல்

இந்த ஐந்து நிலை செயல்பாடுகளும் ஊனுண்ணித் தாவர இனங்களிடம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இரைபிடிப்பதற்கே அவை வெவ்வேறு உத்திகளைக் கையாளுகின்றன.

ஊனுண்ணி விலங்குகளைப் போல புத்திக்கூர்மையுடனும் மிகுந்த சாதுர்யத்துடனும் செயல்படும் ஊனுண்ணித் தாவரங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இரைபிடிக்கும் உத்தியைக் கொண்டு அவற்றை ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

  • 1.   ஜாடிக்குள் வழுக்கி விழச்செய்து பிடிக்கும் வகை
  • 2.   பசையில் ஒட்டவைத்துப் பிடிக்கும் வகை
  • 3.   படக்கென்று மூடிப் பிடிக்கும் வகை
  • 4.   வெற்றிடத்தால் உறிஞ்சி  உள்ளிழுக்கும் வகை
  • 5.  ஒளியால் திசைதிருப்பி ஈர்க்கும் வகை


முதலில் பூச்சிகளை ஜாடிக்குள் வழுக்கிவிழச் செய்து பிடிக்கும் வகையைப் பார்ப்போம்.

ஜாடியின் நிறமும் அதற்குள் சுரக்கும் பூந்தேன் போன்ற இனிப்புத் திரவமும்தான் பூச்சிகளைக் கவர்ந்திழுக்கும் தூண்டில்கள். இன்னும் சில ஜாடிச் செடிகள் பூக்களைப் போல நறுமணம் பரப்பி, பூச்சிகளை தங்கள் வசம் வரவழைக்கின்றன. சில ஜாடிகளின் விளிம்புகள் மெழுகு தடவியது போன்று வழுவழுவென்று இருக்கும். பூச்சிகள் வந்தமர்ந்த உடனேயே வழுக்கிக்கொண்டு உள்ளே விழுந்துவிடும். உள்ளே விழுந்த பூச்சிகள் என்னாகும்? ஜாடிக்குள் சுரந்து தேங்கியிருக்கும் அமில நீரில் கரைந்து செடிக்கு உணவாகிவிடும்.

ஜாடி சரி. மூடி எதற்கு? என்ற சந்தேகம் வரலாம். மழை பெய்தால் மழை நீர் அதிகப்படியாக உள்ளே வந்து அமில நீரின் வீரியத்தைக் குறைத்துவிடக்கூடாது அல்லவா? அதற்கான பாதுகாப்புதான் மூடி. எவ்வளவு சமயோசிதம்!

ஊனுண்ணித் தாவரம் என்றதுமே நம் நினைவுக்கு வருவது கதைகள் மற்றும் கார்ட்டூன்கள் மூலமாக நாம் அறிந்த ஜாடிச் செடிதான். ஆங்கிலத்தில் Pitcher plant எனப்படும்  ஜாடிச் செடி வகையில் மூன்று குடும்பங்களும் நூற்றுக்கும் மேற்பட்ட பிரிவுகளும் உள்ளன. 

  1Sarraceniaceae குடும்பம்

இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஜாடிச்செடிகள் பெரும்பாலும் ஊதுகுழல் வடிவில் இருக்கும். இந்த வகை ஜாடிச்செடிகளில் வேர்ப்பகுதியிலிருந்து வெளிவரும் ஒவ்வொரு இலையும் ஒரு ஜாடியாக உருவெடுக்கும்.  


Yellow pitcher plant, Hooded pitcher plant & Crimson pitcher plant

White-topped pitcher plant


 Parrot pitcher plant (கிளியின் அலகு போல் இருப்பதால்)

Purple pitcher plant

வாய்ப்பகுதியில் உள்நோக்கி வளர்ந்த ரோமங்கள்

கீழே இருப்பது கோப்ரா லில்லி எனப்படும் ஊனுண்ணி தாவரம். சராசெனியே குடும்பத்தின் டார்லிங்டோனியா பேரினத்தைச் சேர்ந்தது.  லில்லிக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றாலும் நாகம் படமெடுத்திருப்பதைப் போன்ற அதன் தோற்றத்தால் 'கோப்ரா லில்லி' என்ற பெயரைப் பெற்றுள்ளது. கலிஃபோர்னியாவைத் தாயகமாகக் கொண்டதால் 'கலிஃபோர்னியா ஜாடிச்செடி' என்ற பெயரும் உண்டு. 


Cobra lily

2. Nepenthaceae குடும்பம்

இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த தொங்கும் ஜாடிச்செடியில் இலைகளின் நுனியில் வளரும் பற்றிழைகளின் முடிவில் கெண்டி வடிவத்தில் மூடியோடு பிரத்தியேகமான ஜாடிகள் உருவாகும். இவை அளவில் பெரியவை என்பதால் பூச்சிகள் மட்டுமல்லாது எலி, தவளை, சிறு பறவைகள் போன்றவற்றை இரையாக்கிக் கொள்ளக்கூடியவை. 

கெண்டி வடிவ ஜாடிகள்

Nepenthes alata

Great pitcher plant (Nepenthes maxima)

குடுவை அல்லது கெண்டி வடிவிலான ஜாடிச் செடிகள்

மெழுகு தடவியது போன்ற வாய்ப்பகுதி

இலைகளின் நுனியில் ஜாடிகள்

இலைகளும் ஜாடிகளும்

உராங்குட்டான் போன்ற குரங்குகள் இந்தக் கெண்டிச்செடியில் தேங்கியிருக்கும் மழைநீரைக் குடிப்பதால் இந்தச் செடிகளுக்கு 'குரங்கின் கோப்பை' அதாவது  Monkey cups என்ற பெயர் இடப்பட்டுள்ளது. ஃபிலிப்பைன்ஸில் இதற்கு 'யூதாஸின் பணப்பை' என்ற பெயர் இடப்பட்டிருக்கும் காரணம் தெரியவில்லை. 

3. Cephalotaceae குடும்பம்

இந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒரே பேரினமான அல்பேனி ஜாடிச்செடி ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணப்படுகிறது. அதுவும் மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் மட்டுமே காணப்படும் செடியாகும். 

Albany pitcher plant

பொதுவாக ஜாடிச்செடிகளின் மூடிகள் ஜாடியின் விளிம்பில் ஒட்டிக்கொண்டு இருக்கும். அல்பேனி ஜாடிச்செடியிலோ அதன் மூடி ஜாடியின் பின்புறத்தில் இருந்து வளர்ந்திருக்கும். ஜாடியும் உயரமாக இல்லாமல் குள்ளமாக இருக்கும். 

*****

சாதாரண செடிகளைப் போலவே ஜாடிச் செடிகளும் பூக்கும். பூக்கள் காய்ந்து விதைகள் உருவாகும். விதைகளிலிருந்து புதிய செடிகள் முளைக்கும்.



ஊதுகுழல் வடிவ ஜாடிச் செடியின் பூக்கள்

ஜாடிச்செடியின் சிவப்பு நிறப் பூ

ஜாடிச்செடியின் மஞ்சள் நிறப் பூ

ஜாடிச் செடிகள் பற்றிய மேலும் சில சுவாரசியமான தகவல்கள்

  • தென்னமெரிக்காவைச் சேர்ந்த Heliamphora  இனத்தில் ஜாடிகளுக்கு மூடி கிடையாது. அப்படியென்றால் அதிகப்படியான மழைநீர் தேங்கி பூச்சிகளைப் பிடிக்க இயலாமல் போகுமே என்று நினைக்கத் தோன்றும். அதற்கும் அந்தச் செடி ஒரு வழி வைத்திருக்கிறது. அதிகப்படியான மழைநீர் தேங்கினால் அதை வெளியேற்ற ஒரு கழிவுநீர்த் துவாரமும் ஜாடியில் இருக்கிறது. பிறகென்ன கவலை?  

  • சில ஜாடிச்செடிகள் பூச்சிகளைக் கொல்லாமல் வித்தியாசமான முறையில் ஊட்டச்சத்தைப் பெறுகின்றன. எப்படி தெரியுமா? குறிப்பிட்ட பூச்சியினம் ஜாடி நீருக்குள் முட்டையிடும். அந்த ஜாடி நீரில் வளரும் லார்வாக்களின் கழிவுகளிலிருந்து செடிகள் தங்களுக்கான சத்தைப் பெற்றுக்கொள்ளும். லார்வாக்கள் வளர்ந்து பூச்சிகளாகிப் பறந்துபோகும். பிறகு அவை முட்டையிட ஜாடி நீரைத் தேடிவரும். லார்வாக்கள் உருவாகும். செடி வளரத் தேவையான சத்து கிடைக்கும். பூச்சிகளும் ஊனுண்ணிச் செடிகளும் ஒன்றை ஒன்று சார்ந்தும் ஒன்றுக்கொன்று உதவியும் வாழும் வாழ்க்கைச் சுழற்சி வியக்கவைக்கிறது அல்லவா?

  • இன்னொரு வகை உண்டு. இந்தோனேஷியாவில் வாழும் Tupaia montana என்ற மலைவாழ் மரமூஞ்சூறு இனம் குறிப்பிட்ட சில ஜாடிச்செடிகளைத் தேடிவந்து கழிவறையாகப் பயன்படுத்துகின்றன. ஆச்சர்யமாக இருக்கிறதா? அந்த மூஞ்சூறுகளை வரவழைக்க செடி செய்யும் தந்திரம் இன்னும் ஆச்சர்யம். ஜாடிச்செடிகளின் மூடியில் அவை இனிப்பான திரவத்தைச் சுரக்கச் செய்கின்றன. வயிறுமுட்ட அவற்றை உண்ணும் மூஞ்சூறுகள் அப்படியே அந்த ஜாடிக்குள் புழுக்கை போட்டுவிட்டுப் போகும். அந்தப் புழுக்கைகளிலிருந்து தேவையான நைட்ரஜனை செடிகள் பெற்றுக்கொள்ளும். ஊனுண்ணி தாவரங்கள் சாதுர்யமானவை என்பது எவ்வளவு அழகாக நிருபணமாகிறது பாருங்கள்.   
*****

(தொடரும்)

3 comments:

  1. படங்களுக்கும் விரிவான தகவல்களுக்கும் நன்றி. சுவாரஸ்யமாகச் சொல்லியுள்ளீர்கள்.

    ReplyDelete
  2. படங்களும் தகவல்களும் சிறப்பு. தகவல்கள் வியப்பைத் தருகின்றன.

    ReplyDelete
  3. ஆச்சரியமான விஷயங்கள் எல்லாவற்றையும் வண்ணப்படங்களோடு தொகுத்துத் தந்தமைக்கு மிக்க நன்றி கீதா. இந்தப் பதிவைத் தொடங்கிய விதமும் அருமையாக இருந்தது. நம்மைச் சூழ உள்ள உலகில் தான் எத்தனை புதுமைகள் மற்றும் புதிர்கள்! அதை பார்க்கவும் அடையாளம் கண்டுகொள்ளவும் அதனை சீர்தூக்கி அறிந்து கொள்ளவும் உங்களைப் போன்றவர்களின் பதிவுகள் நமக்கு மிகுந்த துணை புரிகின்றன.
    நன்றி தோழி! படங்களோடும், சுவாரிசங்களோடும், ஆச்சரியங்கள் சூழ உள்ள உலகை நீங்கள் அழகாக எடுத்துக் காட்டுகிறீர்கள்!

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.