3 March 2024

உலக காட்டுயிர் தினம்

 



ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 3-ஆம் நாள் World wildlife day - உலக காட்டுயிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அழிந்துவரும் காட்டுயிர்களை அழிவிலிருந்து பாதுகாப்பதும் அவற்றைக் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு உண்டாக்குவதும் இந்நாளின் முக்கிய நோக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஏதேனுமொரு மையக்கருவை முன்வைத்து காட்டுயிர்ப் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. காட்டுயிர்ப் பாதுகாப்பில் நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி மனிதர்களையும் மண்ணுலகையும் இணைத்தல் என்பதுதான் இந்த ஆண்டின் (2024) மையக்கரு.

காட்டுயிர் என்றால் காடுகளில் வாழும் உயிரினங்கள் மட்டுமல்ல, மனிதர்கள் அல்லாத, மனிதர்களால் வளர்க்கப்படாத அல்லது மனிதர்களைச் சார்ந்துவாழாத, இயல்வாழிடத்தில் வாழும் எந்த உயிரும் காட்டுயிரே. பறவைகள், விலங்குகள், பூச்சிகள், காட்டில் வாழும் விலங்கினங்கள், மீன்கள், கடல்வாழ் உயிரிகள், தாவரங்கள் அனைத்துமே காட்டுயிர்தான்.

சிப்பி பிடிப்பான் (Sooty oystercatcher)

காட்டுயிர்களின் அழிவைத் தடுத்து அவற்றைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் அறிவுறுத்தலையும் பொதுமக்களிடத்தும் குழந்தைகளிடத்தும் உண்டாக்கும் விழிப்புணர்வு நோக்கோடு இத்தினம் 2014-ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. காலநிலை மாற்றம், உலகமயமாக்கம், இயற்கைச் சேதம், காடழிப்பு, வாழ்விட அபகரிப்பு, கரியமில வாயு வெளியேற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் சுற்றுச்சூழலும் இயற்கைச் சமநிலையும் பாதிக்கப்பட்டு, ஒவ்வொரு நிலப்பரப்பிலும் தனித்தன்மையோடு வாழும் காட்டுயிர்கள் பலவும் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுவருகின்றன. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதும் அதன் மூலம் காட்டுயிர்களைக் காப்பதும் நமது கடமை என்ற உணர்வு ஒவ்வொருவருக்குள்ளும் உருவாக வேண்டும். எனவே தான் நாடுவாழ், காடுவாழ், கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதற்கான அனைத்து முயற்சிகளும் பல்வேறு வழிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சொல்லப்போனால் காட்டுயிரிகளின் வழியில் மனிதர்களாகிய நாம் குறுக்கிடாமல் இருந்தாலே போதும், அவை தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ளும்.



சாம்பல் தலை பழந்தின்னி வௌவால் (Grey headed flying fox)

சுற்றுச்சூழல் குறித்து குறைந்தபட்ச அடிப்படையறிவு கூட நம்மில் பலருக்கு இல்லை என்பதுதான் பெரும் வருத்தம். ஒரு இடத்துக்கு சுற்றுலாவோ, சிற்றுலாவோ சென்றுவந்தால், நாம் போவதற்கு முன்பு அந்த இடம் எப்படி இருந்ததோ அதைப் போலவே நாம் திரும்பி வரும்போதும் இருக்கவேண்டும். ஆனால் நாம் என்ன செய்கிறோம்? குரங்குகளுக்கு உணவளிப்பது, பிளாஸ்டிக் பைகளையும், தண்ணீர் பாட்டில்களையும் விசிறிவிட்டு வருவது, மதுவருந்திவிட்டு கண்ணாடி பாட்டில்களை அடித்து நொறுக்குவது, சத்தமாய்ப் பாடல்களை ஒலிக்கவிடுவது, கத்திக் கூப்பாடு போடுவது, மரக்கிளைகளை ஒடிப்பது, அங்கே வாழும் விலங்குகளையும் பறவைகளையும் கலவரப்படுத்துவது என சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஆபத்தான விஷயங்களைச் செய்து, நம்முடைய தடத்தை மிக ஆழமாக விட்டுவிட்டு வருகிறோம். 

பறவைகளுக்கு  எண்ணெயில் பொரித்த, உப்பு சேர்த்த உணவுகளைத் தருவது அவற்றுக்கு செய்யும் நன்மை அல்ல, கெடுதலே என்பதை நாம் உணரவேண்டும். இயற்கையாக அவை உணவு தேடி உண்ணும் பழக்கத்தை மாற்றி மனிதர்களைச் சார்ந்திருக்கும் நிலைக்குத் தள்ளுவதோடு அவற்றின் ஆரோக்கியம் கெடவும் நாம் காரணமாகிறோம். உண்மையில் அவற்றுக்கு உதவ விரும்பினால் வீட்டைச் சுற்றி மரம், செடிகளை வளர்த்து அவற்றுக்கு உறைவிடமும் உணவும் இயற்கையான முறையில் கிடைக்க வழிசெய்ய வேண்டும்.  சிலர் தங்கள் வீட்டுத் தோட்டத்தில் உள்ள மா, மாதுளை, கொய்யா  மரங்களின் பழங்களை பிளாஸ்டிக் பை போட்டுக் கட்டி அணில், பறவை போன்றவற்றிடமிருந்து பத்திரப்படுத்திவிட்டு, அவற்றுக்கு மிக்சரும் காராசேவும் பரிமாறி மகிழ்வதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது.  இந்தியாவில் மட்டுமல்ல, ஆஸ்திரேலியாவிலும் நான் அப்படியான பல விஷயங்களைப் பார்க்கிறேன். 

ஆஸ்திரேலியாவில் இயல்வாழிடப் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உணவளிக்கக்கூடாது என்பது பொதுவிதி. ஆனால் பலர் அதைப் பொருட்படுத்துவதே இல்லை. விளைவு? 


ரொட்டித் துண்டுகளுக்காகக் குழுமி நிற்கும் பறவைகள்

கடற்கரையோரங்களில் வசிக்கும் கடற்புறா இனமான silver gull பறவைகள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்கும் வழக்கத்தையே மறந்து கரையோரக் கடைகளின் உருளைக்கிழங்கு சிப்ஸ்களை மட்டுமே நம்பி வாழத் தொடங்கிவிட்டன. 

கரையோரக் கடைகளில் கடற்புறாக்கள் (silver gulls)

மண்ணைக் கிளறி புழு பூச்சிகளைத் தேட வேண்டிய அன்றில் பறவைகள் குப்பைத்தொட்டிகளைக் கிளறி மீந்துபோன உணவைத் தின்று கொண்டிருக்கின்றன. அவற்றின் பெயர் Ibis என்பது கூட ஆஸ்திரேலியாவில் பலருக்கும் தெரியாது. Bin chicken என்றால்தான் தெரியும். 

குப்பைத் தாளுடன் வெள்ளை அன்றில் (Australian white ibis)

பூங்காக்களில் பெருவாத்துகளுக்கு பாக்கெட் பாக்கெட்டாக ரொட்டித்துண்டுகளைத் தூவுவதால், அவற்றின் பெருத்த அடிவயிறுகள் தரைதட்டிக் காணப்படுகின்றன.

பூங்காவின் பெருவாத்துகள் (Geese)


வயிறு பெருத்த பெருவாத்து (Goose)

மீன்கொத்தி இனத்தைச் சேர்ந்த குக்கபரா பறவைகளோ, குழந்தைகளின் கையிலிருந்து உணவைப் பிடுங்கித் தின்னும் அளவுக்கு மூர்க்கமாகிவிட்டன. 


இயற்கைச் சமநிலை குலைய நாமே காரணமாகிவிட்டு, அதன் காரணமாகப் பின்னாளில் நாமும் பாதிப்புக்கு ஆளாகும்போது இயற்கை நம்மைப் பழிவாங்குவதாகப் புலம்புவது எவ்வளவு முரண்!



இனியேனும் காட்டுயிர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வைப் பெறுவோம். உதவி என்ற பெயரில் உபத்திரவம் செய்துகொண்டிருப்பதை அறிந்து தவிர்ப்போம். சுற்றுச்சூழல் வளம் பெருக்குவோம். காடு வளர்ப்போம். காட்டுயிர்களைப் பாதுகாப்போம்.

*****

உலக காட்டுயிர் தினத்தை முன்னிட்டு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு:

இன்று (03-03-24) இந்திய நேரம் பிற்பகல் 1.30 மணி முதல் நாளை (04-03-24) பிற்பகல் 1.30 வரை என்னுடைய மூன்று மின்னூல்கள் இலவசம்.


ஆஸ்திரேலியாவின் அற்புதப் பறவைகள் - தொகுப்பு 1

https://www.amazon.in/dp/B098XVX17X


கங்காரூ முதல் வல்லபி வரை

(ஆஸ்திரேலியாவின் அதிசய விலங்குகள் – தொகுப்பு 1)

https://www.amazon.in/dp/B0B19NXLLN



மார்சுபியல், பாலூட்டி & மோனோட்ரீம் ஊனுண்ணிகள்

(ஆஸ்திரேலியாவின் அதிசய விலங்குகள் - தொகுப்பு 2)

https://www.amazon.in/dp/B0C5JR1S72


ஆர்வமுள்ளவர்கள் தரவிறக்கி வாசித்து மகிழலாம். 

*****

6 comments:

  1. அருமையான விழிப்புணர்வு பதிவு. வயிறு பெருத்த பெரு வாத்து, குழந்தைகளிடம் பறித்து தின்னும் குக்கப்பரா பறவை இவைகளை கேட்கும் போதே நாம் எப்படி எல்லாம் பறவைகளை கெடுத்து விட்டோம் என்று வேதனையாக இருக்கிறது.

    போகும் இடமெல்லாம் சுற்றுச்சூழலை நாசபடுத்துகிறோம். குரங்க்குகள், பறவைகள் எல்லாம் தேடி உணவு தின்னும் முறையை கெடுத்து விட்டோம்.
    இனி அவைகளின் நிலையை மாற்ற முடியுமா? காட்டு விலங்குகள் எல்லாம் நாட்டுக்கு படையெடுத்து கொண்டு இருக்கின்றன. உணவு, த்ண்ணீர் தேடி.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது சரியே. சுற்றுச்சூழல் குறித்து பலருக்கும் அக்கறை இல்லாதது உண்மையில் மிகவும் வருத்தமாக உள்ளது கோமதி மேம். இயற்கையைப் பாதுகாக்காவிடினும் பரவாயில்லை. அதற்குக் கெடுதல் பண்ணாமலாவது இருக்கலாம்.

      Delete
  2. மிக அவசியமான பதிவு. பறவைகள் தம் இயல்பினை மறந்து மனிதர்கள் அளிக்கும் உணவுக்கு அடிமையாகி வருவது வேதனை.

    ReplyDelete
    Replies
    1. உண்மை ராமலக்ஷ்மி. அங்கே இங்கே என்றில்லாமல் உலகம் முழுவதும் இப்படியான காட்சிகள் வேதனை தருகின்றன.

      Delete
  3. தேவையான விழிப்புணர்வு பதிவு. படங்கள் அனைத்தும் நன்று.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.