Showing posts with label கங்காரு. Show all posts
Showing posts with label கங்காரு. Show all posts

26 October 2025

ஆஸ்திரேலியப் பறவைகள் கணக்கெடுப்பும் ஆச்சர்யம் தந்த கங்காரூக்களும்

1. அண்டங்காக்கை (Australian raven)

ஊரே தீபாவளிக் கொண்டாட்டத்தில் தீவிரமாக இருக்க, எனக்கோ கடந்த ஏழு நாட்களும் கண்ணும் கவனமும் பறவைகளின் மீது மட்டும்தான்.  பறவைகள் என்றால் சும்மாவே ஆடுவேன். இதில் கணக்கெடுப்பு என்ற சலங்கையைக் கட்டிவிட்டால் ஆட்டத்துக்கு கேட்கவேண்டுமா? கிளை உரசும் சத்தம் கூட கிளிச்சத்தமோ என்று எண்ணும் அளவுக்கு பறவைப் பித்து ஆட்கொண்டிருந்தது. :) 

வீட்டின் கொல்லைப்புறத்தில் ஆரம்பித்து, சவுக்கும் யூகலிப்டஸ் மரங்களும் அடர்ந்த நடைபாதை, ஓடைக்கரை, சதுப்புநிலம், ஏரிகள், குளங்கள், பூங்காக்கள், இயற்கைக் காப்பகங்கள் என வெவ்வேறு இடங்களுக்குச் சென்று ஒரு நாளைக்குக் குறைந்தது மூன்று பட்டியலாவது சமர்ப்பித்தேன்.

2. என்னுடைய கணக்கெடுப்பின் முடிவு

ஒரு வார காலத்தின் இறுதியில் 62 பறவையினங்களும் 2016 பறவைகளும் என்னுடைய ஆவணப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.  

மேலும் 20-25 பறவையினங்களை அறிவேன். ஏற்கனவே பார்த்து படங்களும் எடுத்திருக்கிறேன். சோதனையாக இந்த ஒரு வார காலத்தில் அவை கண்களுக்கு அகப்படவில்லை. சரி, அடுத்த முறை இன்னும் கூடுதல் முயற்சி செய்தால் பார்த்துவிடலாம். 

இந்த வாரம் கேமராவில் சிக்கிய பறவைகளுள் சில:
3. மைனா (Common myna)

4. பெரிய நீர்க்காகம் (Great cormorant)

5. குட்டிக் கொரெல்லா கூட்டம்  (Little corellas)

6. வெள்ளைக்கண் வாத்து - ஆண் (Hardhead or white-eyed duck)

7. தேவதைச் சிட்டு (Superb fairy wren -male)

8. ஆஸ்திரேலியக் கூழைக்கடா (Australian pelican)

9. கருப்பு அன்னம் (Black swan)

10. பெரிய கருப்பு வெள்ளை நீர்க்காகம் (Australian pied cormorant)

11. பாம்புத்தாரா- ஆண் (Australian darter-male)

12. நெடுங்கால் உள்ளான் (Pied stilt)

13. பெரிய கொக்கு -ஆண் (Great egret - male)

14. மஞ்சள் தாடை ஆள்காட்டி (Masked lapwing)

ஆஸ்திரேலியப் பறவைகள் கணக்கெடுப்பு வாரத்தின் ஐந்தாம் நாள் அன்று, பக்கத்தில் இருக்கும் nature reserve-ஐத் தெரிவு செய்திருந்தேன். ஏற்கனவே இரண்டு முறை போன வனப்பகுதிதான். ஆனால் அதற்குள் கங்காரூக்களும் வல்லபிகளும் வசிக்கின்றன என்பது அன்றுதான் தெரிந்தது. இயல் வாழிடத்தில் அதுவும் வீட்டிலிருந்து மூன்று கி.மீ. தூரத்திலேயே அவை வசிக்க, இத்தனை வருடங்களாக நான் அவற்றைத் தேடி காடு காடாக அலைந்ததை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது. காற்று வாங்கப் போய் கவிதை வாங்கி வந்ததுபோல் பறவை பார்க்கப் போய் கங்காரூக்களைப் பார்த்து ரசித்து வந்தேன். ☺️☺️

ஒரு ஆச்சரியமான தற்செயல் ஒற்றுமை என்ன தெரியுமா? அக்டோபர் 24-ஆம் நாள் உலக கங்காரூ தினமாம். சரியாக அதே நாளில் எதிர்பாராதவிதமாக கங்காரூக்கள் தரிசனம் தந்து என்னை மகிழ்வின் எல்லைக்கே கொண்டுசென்றுவிட்டன.

கேமரா கொண்டுபோகாததால் மொபைலில் முடிந்தவரை zoom செய்து எடுத்திருக்கிறேன்.

14. சாம்பல்நிறக் கங்காரூக்கள் (Eastern grey kangaroos)

15

16

17

18. சதுப்புநில வல்லபி (swamp wallaby)

குடிமக்கள் அறிவியலின் ஒரு பகுதியான பறவைகள் கணக்கெடுப்பில் கலந்துகொள்வது இதுவே முதல்முறை. ஒரு சூழலியல் ஆர்வலராக மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இம்முறை நிறையக் கற்றுக்கொண்டேன். அடுத்த வருடம் இன்னும் அதிகமான பறவையினங்களை ஆவணப்படுத்துவேன் என்று நம்புகிறேன்.

******

22 October 2018

கஸ்தூரி எலிக்கங்காரு







பார்ப்பதற்கு எலி போலவே இருப்பதாலும் இவற்றின் உடலிலிருந்து கஸ்தூரியின் மணம் வீசுவதாலும் இவை கஸ்தூரி எலிக்கங்காரு (Musky rat-kangaroo) எனப்படுகின்றன. இதன் உயிரியல் பெயர் Hypsiprymnodon moschatus என்பதாகும். Moschatus என்றால் லத்தீன் மொழியில் கஸ்தூரி என்று பொருள். கங்காரு இனத்திலேயே மிகச்சிறிய கங்காருகள் இவைதான். வால் உள்ளிட்ட உடலின் நீளம் 40 - 50 செ.மீ. தான் இருக்கும். எடை அதிகபட்சம் 680 கிராம். Hypsiprymnodontidae குடும்பத்தின் ஒரே உறுப்பினர் என்பதோடு சுமார் 20 மில்லியன் ஆண்டுகாலமாய் ஆஸ்திரேலிய மண்ணில் வாழ்ந்துவரும் தொன்மப் பெருமையும் இவற்றுக்கு உண்டு.

மற்ற கங்காருகளிடமிருந்து வேறுபடுத்தும் மேலும் பல சிறப்பியல்புகள் இவற்றுக்கு உண்டு. முக்கியமாய் இவை பகல்விலங்குகள். பகலில் இரைதேடி உண்டு இரவில் உறங்கி ஓய்வெடுக்கும். இவற்றால் எளிதில் மரமேற முடியும். இவற்றின் பாதங்களின் பின்புறம் அமைந்திருக்கும் பெருவிரல்கள் அதற்கு உதவுகின்றன. கோரைப்பற்களும் தாடை அமைப்பும் மட்டுமல்ல, பிற கங்காருகளைப் போல பின்னங்கால்களை மட்டும் ஊன்றித் தாவிப் போகாமல் முயல் போல நான்கு கால்களாலும் தத்திப்போகும் இயல்பிலும் மற்ற கங்காருகளிடமிருந்து வேறுபடுகின்றன.

இவை ஒரு ஈட்டுக்கு இரண்டு அல்லது மூன்று குட்டிகள் ஈனக்கூடியவை. பிற கங்காருகள் ஒரு குட்டிதான் ஈனும் என்பது குறிப்பிடத்தக்கது. 19 நாள் கர்ப்பத்துக்குப் பிறகு பிறக்கும் குட்டிகள் தாமே ஊர்ந்து சென்று தாயின் வயிற்றுப்பையை அடைகின்றன. அங்கே ஆறு மாதங்கள் பாலைக் குடித்து வளர்ந்து முழு வளர்ச்சி அடைகின்றன. பிற கங்காரு இனத்தைப் போல அடுத்தக் கருவை கருப்பையில் உறைநிலையில் பத்திரப்படுத்திவைக்கும் தன்மை இவற்றுக்குக் கிடையாது. அதனால் குட்டிகள் பையை விட்டு நிரந்தரமாக வெளியேறிய பிறகே அடுத்த ஈட்டுக்கான இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. குட்டிகள் ஒரு வருடத்தில் பருவ முதிர்ச்சி அடைகின்றன. இவற்றின் ஆயுட்காலம் சுமார் நான்கு வருடங்கள். 

இவை மழைக்காட்டுப் பகுதிகளில் அடர்த்தியான புதரில் காய்ந்த இலைகளைக் கொண்டு கூடு கட்டி அதில் வசிக்கின்றன. கூடுகட்டத் தேவையான பொருட்களை போஸம்களைப் போலவே இவையும் வாலால் சுருட்டி எடுத்து வருகின்றன. கீழே விழுந்து கிடக்கும் பழங்கள், கொட்டைகள், பூஞ்சைகள் மற்றும் புழு பூச்சி போன்ற சிற்றுயிர்கள்தான் இதன் உணவு

அதிகமாய்ப் பழங்கள் பழுத்துதிரும் காலங்களில் தேவைக்குப்போக எஞ்சிய பழங்களையும் கொட்டைகளையும் எடுத்துக் கொண்டுபோய் ஆங்காங்கே மண்ணில் குழிதோண்டிப் புதைத்து வைப்பதோடு வேறு யாரும் கவர்ந்து செல்லாதிருக்க, மேலே, இலைதழைகளைப் போட்டு மூடிவிடுகின்றன. கண்டுகொள்ளப்படாத பல, காலப்போக்கில் முளைவிட்டு வளர்ந்து பெருமரங்களாகி வனத்தை வளப்படுத்துகின்றன. மழைக்காடுகளின் தோட்டக்காரர்கள் என்று காஸோவரி பறவையையும் கஸ்தூரி எலிக்கங்காருவையும் தாராளமாகச் சொல்லலாம்.


படம் உதவி - விக்கிபீடியா

18 March 2015

வல்லபிகளும் கங்காருகளும்


விலங்கியல் பூங்காவொன்றில்
வல்லபிகள்











கங்காருகள்