29 April 2026

டிங்கோ கொலைகள் (3)

ஆஸ்திரேலியாவின் குற்றவியல் வரலாற்றில் கறை படிந்த ஒரு வழக்கு ‘அஸாரியா (Ch)சேம்பலேன் கொலை வழக்கு’.

“என் குழந்தையை டிங்கோ தூக்கிச் சென்றுவிட்டது” என்று தன்னுடைய இரண்டு மாதக் கைக்குழந்தையை இழந்த லிண்டியின் கதறல் அன்று எவராலும் செவிசாய்க்கப் படவில்லை. அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என்றும் தாயே குழந்தையைக் கொன்றுவிட்டு டிங்கோ மீது பழியைப் போடுகிறாள் என்றும் சொல்லி காவல்துறை அவளைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியது. ஆயுள் தண்டனையும் பெற்றுத் தந்தது.

உலுருவில் லிண்டி அஸாரியாவுடன் 

அஸாரியா கொலைவழக்கு நடந்துமுடிந்து நாற்பது வருடங்களுக்கு மேல் ஆன பிறகும் கூட, இன்றளவும் பலருடைய ஆத்திரத்தையும் அதிருப்தியையும் பெற்றிருக்கும் போலித்தனமான குற்ற விசாரணையும், ஆட்சி அதிகாரத்தின் ஒரு தரப்பு வாதமும் அதைத் தொடர்ந்து வழங்கப்பட்ட அநீதியான தீர்ப்பும் என்றைக்குமே சரி செய்ய முடியாத சட்டச் சீர்கேடு என்பதில் சந்தேகமே இல்லை.

நடந்த எல்லாவற்றுக்கும் மௌன சாட்சியாய், மர்மத்தின் நீட்சியாய், மத்திய ஆஸ்திரேலியாவின் செம்மண் பாலையில் ஒற்றையாய் நின்றுகொண்டிருக்கிறது, 3.6 கி.மீ நீளமும், 1.9 கி.மீ அகலமும், 348 மீ. உயரமும், 9.4 கி.மீ. சுற்றளவும் கொண்ட, 600 மில்லியன் ஆண்டுகாலத் தொன்மை வாய்ந்த உலுரு என்னும் பிரமாண்டமான மணற்பாறை. கண்ணுக்குத் தெரியும் பாறையின் உயரம் மட்டுமே கணக்கு. மண்ணுக்குள் புதைந்திருக்கும் மீதத்தின் அளவு பல கி.மீட்டர்கள் இருக்கலாம் என்று அறியப்படுகிறது.

உலுரு (விக்கிபீடியா)

உலுருவின் உண்மை நிறம் சாம்பல்வண்ணம் என்றாலும் ஏராளமான இரும்புத்துகள்களைக் கொண்டிருப்பதால் தொலைவிலிருந்து பார்க்கும்போது துருவேறியது போல செங்காமட்டை நிறம் காட்டுவது இதன் சிறப்பு. செங்காமட்டை வண்ணம் மட்டுமல்லாது, செந்தழல் சிவப்பு, அடர்சிவப்பு, நீலம், ஊதா என ஒரே நாளில் பலவண்ணங்கள் காட்டி வசீகரிக்கும். சூரிய உதயத்தின்போதும் அஸ்தமனத்தின்போதும் இப்பாறை செக்கச்செவேலென்று காட்சியளிக்கும்.

உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஒற்றைப்பாறை என்னும் சிறப்பை உடைய உலுரு அப்பகுதியில் வசித்துவரும் ஆஸ்திரேலியப் பூர்வகுடி இனமான அனங்கு மக்களின் பாரம்பரிய மற்றும் ஆன்மீக நம்பிக்கையோடு தொடர்புடையது. உலுருவில் உள்ள குகைகளில். அனங்கு மக்களின் கனவுக்கால கதைகள் ஓவியங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன. இந்த ஓவியங்களின் வயது ஐயாயிரம் வருடங்கள் இருக்கலாம். தற்போது உலுரு உலகப் பாரம்பரியக் களங்கள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது.

ஏன் உலுருவைப் பற்றி இவ்வளவு பிரஸ்தாபம்? ஏனெனில் லிண்டியின் வாழ்வில் நிகழ்ந்த துயர சம்பவத்துக்கு அதுவே ஆரம்பப்புள்ளி, அதுவே மையப்புள்ளி. அதுவே முற்றுப்புள்ளியும் கூட.

1980-ஆம் ஆண்டு லிண்டியும் மைக்கேலும் ஏடன் (7), ரீகன் (4), அஸாரியா (68 நாள்) என தங்களுடைய மூன்று குழந்தைகளோடு விடுமுறையைக் கொண்டாட குவீன்ஸ்லாந்தின் மவுண்ட் இஸாவிலிருந்து டார்வினுக்குப் புறப்பட்டனர். பதினாறு வருடங்களுக்கு முன்பு தன்னுடைய பதினாறாவது வயதில் ஏற்கனவே ஒரு முறை பார்த்திருந்த உலுருவை மீண்டும் பார்க்க விரும்பினார் லிண்டி. உலுருவின் மீதான ஈர்ப்பு அவரது வாழ்க்கையையே புரட்டிப்போடப் போகிறது என்று அப்போது அவர் அறிந்திருக்கவில்லை.

உலுருவில் மூன்றுநாள் முகாம் திட்டமிடப்பட்டது. இரண்டாம் நாள் (17 ஆகஸ்ட் 1980) இரவுணவை கூடாரத்துக்குச் சற்றுத் தொலைவில் மைக்கேல் தயார் செய்துகொண்டிருந்தார். அங்கு முகாமிட்டிருந்த மற்றவர்களும் உணவுவேளைக்காக அங்கே கூடியிருந்தனர். லிண்டி குழந்தை அஸாரியாவைக் கூடாரத்தினுள் மென்பஞ்சுத் தொட்டிலில் தூங்கவைத்துவிட்டு உணவருந்த வந்த ஒரு நிமிடத்திலேயே குழந்தையின் அலறல் கேட்டது. லிண்டி கூடாரத்தை நோக்கிச் சென்றபோது டிங்கோ ஒன்று எதையோ வாயில் கவ்வியபடி கூடாரத்திலிருந்து வெளியே ஓடியதைப் பார்த்தார். இருட்டில் என்னவென்று புரியாமல் ஓடிப்போய்த் தொட்டிலைப் பார்த்தபோது அங்கே குழந்தை இல்லை. அடுத்த நொடியே லிண்டி கூக்குரலிட்டார், “என் குழந்தையை டிங்கோ தூக்கிச் சென்றுவிட்டது”

எல்லாப் பக்கமும் தேடப்பட்டது. காவல்துறையும் வந்து தேடியது. எங்கு தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. குழந்தையின் உடல்கூட கிடைக்கவில்லை.

ஒரு வாரம் கழித்து கூடாரம் இருந்த இடத்திலிருந்து நான்கு கி.மீ. தூரத்தில் குழந்தை அஸாரியா அணிந்திருந்த ஆடைகள் மட்டும் கிடைத்தன, கழுத்துப் பக்கம் இரத்தக் கறையோடு. அதில் எந்த இடத்திலும் டிங்கோவின் பல் பதிந்த தடயம் இல்லை. எனவே ஆடைகளை ஆய்வு செய்த தடயவியல் அதிகாரிகள், யாரோ குழந்தையின் கழுத்தை அறுத்துக் கொலை செய்திருப்பதாக, தங்களது புதிய கண்டுபிடிப்பைக் கூறினர். லிண்டி மற்றும் மைக்கேல் பக்கம் சந்தேகம் திரும்பியது.

லிண்டி மீண்டும் மீண்டும் சொன்ன டிங்கோ கதையை யாரும் நம்புவதற்குத் தயாராக இல்லை. அதற்கொரு முக்கியக் காரணம் இருந்தது. 

மைக்கேல், செவன்த் டே அட்வென்டெஸ்ட் திருச்சபையில் பாதிரியாராக இருந்தார். லிண்டியும் கடமை தவறாத ஒரு பாதிரியாரின் மனைவியாக திருச்சபைப் பணிகளில் ஈடுபட்டிருந்தார். போதாக்குறைக்கு லிண்டியின் அப்பாவும் செவன்த் டே அட்வென்டிஸ்ட் திருச்சபையின் பாதிரியாராக இருந்தவர்தான். இவ்வளவு போதாதா? மைக்கேல் மற்றும் லிண்டி சார்ந்திருந்த மதக்கோட்பாடு குறித்த ஐயப்பாடுகள் பொதுமக்களிடத்தும் காவல்துறையிடத்தும் புதுப்புது யூகங்களை உருவாக்கத் தொடங்கின. ஊடகங்கள் ஊதி ஊதிப் பெரிதாக்கின. குழந்தையை தாயே கொன்று கடவுளுக்குப் பலி கொடுத்திருக்கலாம் என்ற எண்ணங்கள் வலுப்பெற்றன. வழக்கையும் திசைதிருப்பின. டிங்கோவை அனைவரும் புறங்கையால் ஒதுக்கிவிட்டு லிண்டியையே குற்றவாளியாக்கினர்.

டிங்கோக்கள் ஆபத்தற்றவை என அப்போது கருதப்பட்டன

டிங்கோக்களின் வேட்டைக்குணம் பற்றியும் இதற்கு முன்பு சில டிங்கோக்களிடம் கண்டறியப்பட்ட மூர்க்கவியல்புகளையும் சுட்டிக்காட்டி முன்வைக்கப்பட்ட வாதங்கள் யாவும் ஜூரிகளால் நிராகரிக்கப்பட்டன. 15 டிசம்பர் 1980 முதல் 20 பிப்ரவரி 1981 வரை நடைபெற்ற விசாரணையின் முடிவில் லிண்டி குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டார். ஆஸ்திரேலியாவில் முதன்முதலில் நேரடியாக ஒளிபரப்பான நீதிமன்ற நிகழ்வு அதுதான். ஆனால் காவல்துறையால் அத்தீர்ப்பை ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

மறுவருடமே (13 செப்டம்பர் 1982) இரண்டாவது விசாரணை மேற்கொள்ளப்பட்டது. லிண்டி இந்த முறை தப்பிவிடக்கூடாது என்று அதிகாரிகள் பெருமுயற்சி மேற்கொண்டனர். லிண்டிக்கு எதிராக தடயங்கள் திரட்டப்பட்டன. அல்லது அவர்கள் திரட்டியவற்றைத் தடயங்களாக மாற்றினர். ஒரு பெரிய கதை ஜோடிக்கப்பட்டது.

முதல் விசாரணைக்குப் பிறகு லிண்டியும் மைக்கேலும்

லிண்டி காரில் வைத்துக் குழந்தையைக் கொன்றுவிட்டு, கூடாரத்துக்குச் சென்று ‘டிங்கோ என் குழந்தையைத் தூக்கிச் சென்றுவிட்டது’ என்று கூப்பாடு போட்டு அனைவரையும் திசைதிருப்பிவிட்டு, மீண்டும் காருக்கு வந்து குழந்தையின் உடலை அப்புறப்படுத்தியிருக்கிறார் என்று காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது. முகாமில் அவரோடு இருந்த மற்ற சுற்றுலா பயணிகள், உலுரு பகுதியைச் சேர்ந்த பூர்வகுடி மக்கள், டிங்கோக்களைப் பற்றி நன்கறிந்த அப்பகுதியைச் சேர்ந்த தேசியப்பூங்கா பாதுகாவலர்கள் ஆகியோரது சாட்சியங்கள் எவையும் லிண்டியைக் காப்பாற்ற உதவவில்லை.

வழக்கின் முடிவில் (29 அக்டோபர் 1982) லிண்டி குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டு அவருக்கு கடுமையான ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மைக்கேல் குற்றத்துக்கு உடந்தை என 18 மாதம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.  எனினும் மற்ற இரு குழந்தைகளுக்காக, அது ‘ஒத்திவைக்கப்பட்ட தண்டனை’ என்றானது.

சிறைக்கு அனுப்பப்பட்டபோது லிண்டி நிறைமாத கர்ப்பமாக இருந்தார். இரு வாரங்களுக்குப் பிறகு அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை தாயுடன் இருக்க சட்டம் மறுப்புத் தெரிவித்து, பிறந்த ஒரு மணி நேரத்திலேயே குழந்தையைப் பிரித்து தந்தையிடம் ஒப்படைத்தது. லிண்டி மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டார். லிண்டியின் மேல்முறையீடுகள் நிராகரிக்கப்பட்டன. வழக்கின் உண்மைத்தன்மையில் சந்தேகம் கொண்ட பொதுமக்கள் சிலர் லிண்டிக்கு ஆதரவாக குரல் எழுப்பத் தொடங்கினர். கமிட்டி அமைக்கப்பட்டு, அஸாரியா கொலைவழக்கை மீண்டும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டது.

குழந்தை அஸாரியா காணாமற்போய் ஆறு ஆண்டுகள் கழித்து (1986) நம்பமுடியாத ஒரு அதிசயம் நடந்தது. உலுருவின் மீது ஏறும்போது தவறிக் கீழே விழுந்த சுற்றுலாப் பயணியின் உடலை மீட்கச் சென்றவர்களின் கண்ணில் அகப்பட்டது, மண்ணில் பாதி புதையுண்ட நிலையில் ஒரு குழந்தையாடை.

குழந்தைக்கு தான் அணிவித்திருந்ததாக லிண்டி குறிப்பிட்டிருந்த, ஆனால் மற்ற உடைகளோடு கிடைத்திராத ‘மேட்டினி ஜாக்கெட்’ எனப்படும் அந்த குட்டி ஆடை, அஸாரியா கொலைவழக்கில் மீண்டும் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியது. ஏராளமான டிங்கோக்களின் பதுங்கிடங்கள் காணப்பட்ட இடத்தில் குழந்தையாடை கிடைத்ததாலும், வேறு சில தகவல் சரிபார்ப்பினாலும் லிண்டி குற்றமற்றவர் என நிரூபணமானது. மூன்றரை வருடங்கள் கடுமையான சிறைத்தண்டனை அனுபவித்தப் பிறகு 15 செப்டம்பர் 1988 அன்று லிண்டி விடுதலை செய்யப்பட்டார்.

விடுதலைக்குப் பிறகு லிண்டியும் மைக்கேலும்

ஆனால் ஆண்டுக்கணக்காக நடைபெற்ற வழக்குகளும் வழக்கு தந்த வலிகளும் அனுபவங்களும் சமுதாய அவமதிப்புகளும் அதனால் ஏற்பட்ட மன உளைச்சல்களும்  லிண்டியையும் மைக்கேலையும் வெவ்வேறு திசைகளில் நகர்த்திச் சென்றன. இருவரும் 1991-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று வேறு வேறு திருமண பந்தங்களில் இணைந்தனர்.

நீதியின் பேரில் மக்களுக்கு இருந்த நம்பிக்கை பொய்த்துப்போனதை சரிசெய்ய லிண்டி, மைக்கேல் தம்பதியினருக்கு அரசு தரப்பிலிருந்து 1.3 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் நஷ்ட ஈடாகக் கொடுக்கப்பட்டது. மிக முக்கியமாக, கிட்டத்தட்ட 32 ஆண்டுகளுக்குப் பிறகு அஸாரியாவின் இறப்புச் சான்றிதழில் இறப்புக்கான காரணம் ‘டிங்கோ’ என திருத்தி எழுதப்பட்டது.

திருத்தி எழுதப்பட்ட அஸாரியாவின் இறப்புச் சான்றிதழுடன் லிண்டி

வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு லிண்டி சொன்னது, “டிங்கோவை நாம் தாக்கினால் பதிலுக்கு நம்மைத் தாக்குமே தவிர மற்றபடி அதனால் எந்த ஆபத்தும் இல்லை என்று எந்த ஆஸ்திரேலியரும் இனிமேல் சொல்ல முடியாது. டிங்கோக்கள் எப்போதுமே ஆபத்தானவை.”

அஸாரியா கொலைவழக்கை ஆதாரமாகக் கொண்டு 1985-ஆம் ஆண்டு ஜான் ப்ரைசன் என்னும் ஆஸ்திரேலிய எழுத்தாளர், Evil Angels  என்ற நூலை வெளியிட்டார். அதை அடிப்படையாகக் கொண்டு 1988-ஆம் ஆண்டு 'Cry in the dark'  என்ற திரைப்படம் வெளியானது. அதன் பிறகு ஏராளமான புத்தகங்கள், தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

(படங்கள் ஆஸ்திரேலிய தேசிய அருங்காட்சியக இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளன.)