Showing posts with label பெண். Show all posts
Showing posts with label பெண். Show all posts

31 August 2021

மிதக்கும் சொற்களுள் எனதும்

கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 2-ஆம் நாள், ஃபேஸ்புக்கில் படக்கவிதைப் போட்டி ஒன்று கவிஞரும் கல்கியின் தலைமை உதவியாசிரியருமான அமிர்தம் சூர்யா அவர்களால் நடத்தப்பட்டது. 

கவிதை எழுதுவதற்காகக் கொடுக்கப்பட்டிருந்த ஓவியம் குறித்து அவர் தந்திருந்த குறிப்பு - \\ கல்பட்டா நாராயணன் மலையாளத்தில் எழுதி தமிழில் சைலஜா மொழிபெயர்த்த சுமித்ரா என்ற நாவலுக்கு ஓவியர் சீனிவாசன் நடராஜன் மத்தியப் பிரதேசப் பழங்குடிகளை நேரில் சென்று பார்த்து வரைந்த ஓவியம் இது. அந்தப் பழங்குடி பெண்கள் பயன்படுத்தும் தற்காப்பு ஆயுதம்தான் இது. இதைத்தான் தரையில் நட்டு அலங்கரித்து கடவுளாக வழிபடுவார்கள். இதற்கு பலியும் தருவார்கள். அதுவும் முழுக்க பெண்கள் கட்டுபாட்டில் நடத்துவதுதான்.\\

படத்தையும் படம் சொல்லும் குறிப்பையும் வைத்து நான் எழுதியது கீழே:


  

வனமாள்பவளிடம் வாலாட்டாதீர்கள்

அங்குசமின்றி ஆனை பழக்குவோர் யாம்

பெண்ணுக்கெது அழகென்று பிதற்றாதீர்கள்

பிணமாகிப் பெருங்கழுகுக்கு இரையாவீர்கள்


அவள் இவள் உவள் என

உங்கள் நாட்டுப்பெண்டிர் கதைகளை

எம் காதுகளில் ஓதாதீர்கள்.

எம் உக்கிரத்தின் ஒரு பிடிபோதும்

உலையரிசியென உலகவிக்க.


நினைவில் கொள்ளுங்கள்..

காலங்காலமாய் 

காடணைந்துகிடக்கும் எம் கார்மேனியை

காவுகொள்ள நீளும் கொடுங்கரங்களைத்

துண்டாடும் ஆயுதங்கள் இம்மண்ணில் அல்ல

எம் இளமார்பின் மத்தியில் 

இறுக்கி நடப்பட்டிருக்கிறது.

உங்கள் அடிவயிற்றில் சொருகியுருவ 

அரைநொடியும் அதிகம்.

&&&

எழுதினேனே ஒழிய பிறகு மறந்தேபோய்விட்டேன். சமீபத்தில் ஒரு மகிழ்ச்சியான தகவல் வந்தது. போட்டியில் பங்கேற்ற அனைத்துக் கவிதைகளும் தொகுப்பாக நூலாக்கம் பெற்றுள்ளன என்பதே அது. நா.கோகிலன் அவர்களின் தேநீர் பதிப்பகம் வாயிலாக நூல் வெளியாகியுள்ளது. 

நூலின் அட்டைப்படம் கீழே. 





கொசுறுத் தகவல்:

2014-ஆம் ஆண்டு அமிர்தம் சூர்யா அவர்கள் நடத்திய படக்கவிதைப் போட்டியில் கலந்துகொண்டு அசோகவனத்து ராமனாட்டம் என்ற கவிதையை எழுதியிருந்தேன். போட்டிக்கு வந்திருந்த கவிதைகளுள் அவருடைய ரசனை சார்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு கவிதைகளுள் என்னுடையதும் ஒன்று. பரிசாக தேவதச்சன் கவிதைகள் புத்தகத்தைப் பெற்றேன். இம்முறை என் கவிதையும் ஒரு  புத்தகத்தில் இடம்பெற்றிருப்பது அளப்பரிய மகிழ்ச்சி. 

&&&&

11 April 2019

வீடு சுமந்தலையும் வித்தை




இடித்தலும் புடைத்தலும் அரைத்தலும்
இன்னபிற அடுக்களைப்பணி யாவும்
கையெந்திரம் விடுத்து மின்னெந்திரமானது.
இடுப்பொடிந்த காலம் விடுப்பெடுத்துப்போனது.

உடுப்பு கசங்கா அடுப்பு வேலை கண்டு
உள்ளம் கசங்கிப்போகும் உருவம் பலவுண்டு.
பொருள் கொணர அவளும் புறப்பட்டப்பின்னரும்
அருள்கூர்ந்து அடுக்களையேக அன்பாய்ப் பணிக்கிறது.
அன்று போல் இன்று அத்தனை ருசியில்லையென்று
தின்றுமுடித்து தினம்தினம் பாட்டு படிக்கிறது.

கூட்டுக்குள் புழுவாய் வீட்டுக்குள் முடங்காது
திறமையும் பெருமையும் உரிமையும் வளர்த்தும்
கூடு சுமந்தலையும் நத்தை போல் பெண்டிர்
வீடு சுமந்தலையும் வித்தை கண்டு வியக்கிறது.

&&&&&

(புகைப்படம் - ஆச்சி)

5 August 2018

ஒருபொழுதும் நிறையா ஓடேந்தி...




பிறவியெடுத்தக் காரணம் தேடித்தேடி சலித்தவள்
பிச்சி பேதையெனும் அழைப்புகளால்
மனம் பிறழ்த்தப்பட்டவள்.

ஆடைமுதற்கொண்டு
அத்தனையும் தானமருளியவள்
மனிதாபிமானத் தேடலில்
மானாபிமானங்கள் துறந்தவள்..

தனிமைச்சுழியில் சுழன்றுகிடப்பவள்..
சிறுசுவாசத்தில் பூக்களை மலர்த்துபவள்.
பெருமூச்சில் மலைகளைத் தகர்ப்பவள்..
கண்ணீரால் நதிகளைப் பெருக்குபவள்..

ரோமச்சிலிர்ப்பில் வனமசைப்பவள்..
விரல்வீச்சில் வானமளப்பவள்
அரூபவெளியில் ஆனந்தித்திருப்பவள்..

ஒருபொழுதும் நிறையா ஓடேந்தி
பேரன்பைப் பிச்சையென வேண்டிநிற்பவள்.
*******

(தோழி கவிதாவின் ஓவியம் தோற்றுவித்த வரிகள். நன்றி Kavitha Jeyakumar)