கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 2-ஆம் நாள், ஃபேஸ்புக்கில் படக்கவிதைப் போட்டி ஒன்று கவிஞரும் கல்கியின் தலைமை உதவியாசிரியருமான அமிர்தம் சூர்யா அவர்களால் நடத்தப்பட்டது.
கவிதை எழுதுவதற்காகக் கொடுக்கப்பட்டிருந்த ஓவியம் குறித்து அவர் தந்திருந்த குறிப்பு - \\ கல்பட்டா நாராயணன் மலையாளத்தில் எழுதி தமிழில் சைலஜா மொழிபெயர்த்த சுமித்ரா என்ற நாவலுக்கு ஓவியர் சீனிவாசன் நடராஜன் மத்தியப் பிரதேசப் பழங்குடிகளை நேரில் சென்று பார்த்து வரைந்த ஓவியம் இது. அந்தப் பழங்குடி பெண்கள் பயன்படுத்தும் தற்காப்பு ஆயுதம்தான் இது. இதைத்தான் தரையில் நட்டு அலங்கரித்து கடவுளாக வழிபடுவார்கள். இதற்கு பலியும் தருவார்கள். அதுவும் முழுக்க பெண்கள் கட்டுபாட்டில் நடத்துவதுதான்.\\
படத்தையும் படம் சொல்லும் குறிப்பையும் வைத்து நான் எழுதியது கீழே:
வனமாள்பவளிடம் வாலாட்டாதீர்கள்
அங்குசமின்றி ஆனை பழக்குவோர் யாம்
பெண்ணுக்கெது அழகென்று பிதற்றாதீர்கள்
பிணமாகிப் பெருங்கழுகுக்கு
இரையாவீர்கள்
அவள் இவள் உவள் என
உங்கள் நாட்டுப்பெண்டிர் கதைகளை
எம் காதுகளில் ஓதாதீர்கள்.
எம் உக்கிரத்தின் ஒரு பிடிபோதும்
உலையரிசியென உலகவிக்க.
நினைவில் கொள்ளுங்கள்..
காலங்காலமாய்
காடணைந்துகிடக்கும் எம்
கார்மேனியை
காவுகொள்ள நீளும் கொடுங்கரங்களைத்
துண்டாடும் ஆயுதங்கள் இம்மண்ணில் அல்ல
எம் இளமார்பின் மத்தியில்
இறுக்கி
நடப்பட்டிருக்கிறது.
உங்கள் அடிவயிற்றில் சொருகியுருவ
அரைநொடியும் அதிகம்.
&&&
எழுதினேனே ஒழிய பிறகு மறந்தேபோய்விட்டேன். சமீபத்தில் ஒரு மகிழ்ச்சியான தகவல் வந்தது. போட்டியில் பங்கேற்ற அனைத்துக் கவிதைகளும் தொகுப்பாக நூலாக்கம் பெற்றுள்ளன என்பதே அது. நா.கோகிலன் அவர்களின் தேநீர் பதிப்பகம் வாயிலாக நூல் வெளியாகியுள்ளது.
நூலின் அட்டைப்படம் கீழே.
கவிதையும் ஓவியமும் வெகு சிறப்பு. நூலில் உங்கள் கவிதையும் இடம் பெற்றிருப்பது அறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
ReplyDeleteநன்றி வெங்கட்.
Deleteஅருமை... வாழ்த்துகள்...
ReplyDeleteநன்றி தனபாலன்.
Delete