Showing posts with label பூச்சிகள். Show all posts
Showing posts with label பூச்சிகள். Show all posts

28 February 2026

என் ஜன்னலுக்கு வெளியே...

கோடைக்காலத்தின் கடைசி நாள் இன்று. கடந்த சில நாட்களாகவே கோடை மழை விட்டுவிட்டுப் பெய்துகொண்டிருக்கிறது. இந்நாட்களில் தினமும் காலையில் சமையலறையின் ஜன்னல்திரையை விலக்கியவுடனேயே நான் காணும் அழகிய காட்சி ஒன்று உண்டு.

1. பெரிய வலைக்கு மத்தியில் தோட்டத்துச் சிலந்தி

ஜன்னலுக்கு மேலே உள்ள sunshade-க்கும் fence-க்கும் நடுவில் இழைகள் இழுக்கப்பட்டு சந்துப்பக்கம் gate போட்டது போல் பின்னப்பட்டிருக்கும் பென்னம்பெரிய சிலந்திவலை. குறுக்களவு சுமார் ஒன்றரை மீட்டராவது இருக்கும். சமைக்கும்போதும், சமையலறைப் பக்கம் வரும்போதும் போகும்போதும் ஜன்னல் வழியே அதை வேடிக்கை பார்ப்பதும் படம் எடுப்பதும் சுவாரசியமான பொழுதுபோக்கு.

2. எவ்வளவு அழகான நுட்பமான பின்னல் திறன்

முன்பெல்லாம் சிலந்திகள் மீது பயம் இருந்தது. ஆனால் அவற்றைப் பற்றி நன்கு அறிந்துகொண்ட பிறகு பயம் போய் பாசம் வந்துவிட்டது. எரிச்சல் போய் எச்சரிக்கை உணர்வு மட்டுமே எஞ்சியிருக்கிறது. 

3. சிலந்தி வலையில் மழைத்துளிகள்

மழை நின்ற பின்னாலும் இலை சிந்தும் துளி அழகு என்றார் கவிஞர். நான் சிலந்திவலைப் பின்னலை அழகென்பேன். லேசான மழையெனில் கடுகு போன்ற நுண்ணிய நீர்த்திவலைகள் மணிமணியாய் ஒட்டிக்கொண்டிருக்கும். சற்றுப் பெருமழை எனில் இன்னும் கொஞ்சம் பெரிய நீர்த்திவலைகள். சில சமயம் பொட்டுப் போல் சொட்டும் நீர்த்துளிகள்!

4. நீர்த்துளிகளின் கனம் தாளாமல் தொங்கும் சிலந்தி வலை

5. மணிச்சரம் போல எவ்வளவு அழகு

6. நீர்த்துளிகளோடு சூரிய ஒளியில் ஒளிரும் சிலந்தி வலை

7. இயற்கையின் அற்புதத்தை என்னவென்று சொல்வது? 

8. மழைத்துளிகளோடு சிலந்திவலையைப் பார்க்கும்போது
இந்த ஆபரணம்தான் நினைவுக்கு வருகிறது
(படம் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது)

முத்துமுத்தாய் நீர்த்துளிகளோடு வலைப்பின்னல் காற்றில் அசையும்போது முத்துச்சரம் கோர்த்த அலங்காரத் தோரணவாயில் போல்... அழகுநடைப் பெண்டிர் இடையணிந்த முத்துமணி மேகலை போல்... அழகோ அழகு.   

9. வலையில் சிக்கிய இரை

சந்துப் பக்கம் போகவேண்டும் என்றால் கவனமாகக் குனிந்துதான் போகவேண்டும். இல்லையென்றால் சிலந்தி வலைப்பின்னலில் நாமும் சிக்கிக்கொள்வோம். சிலந்திக்கு இரையாகும் வாய்ப்பில்லை என்றாலும் கடினமாகவும் ஒட்டும்தன்மையுடனும் இருக்கும் இழைகளை அறுத்து விடுபடுவது அவ்வளவு சுலபமாக இருக்காது. நமக்கே இப்படி என்றால் சிறு பூச்சிகளுக்கு சொல்லவே வேண்டாம். அந்தப் பக்கமாகப் பறக்கும் எந்தப் பூச்சியும் சிலந்திவலைக்குள் சிக்கிவிடும்.

10. சென்ற ஆண்டின் சிலந்தி

பார்க்கத்தான் இந்தச் சிலந்திகள் பயங்கரமாகத் தோற்றம் தருகின்றனவே தவிர, விஷம் கிடையாது. இவற்றால் நமக்கு எந்த ஆபத்தும் கிடையாது. சொல்லப்போனால் மிகப்பெரும் நன்மை உண்டு. இந்தச் சிலந்திகள் வீட்டுக்குள்ளோ கட்டிடங்களுக்குள்ளோ வாழாது. மரம் செடிகள் அடர்ந்த இடங்களிலும், வனப்பகுதிகளிலும் பூங்காக்களிலும் மட்டுமே காணப்படும். பெரிய சக்கரம் போன்ற வலையைப் பின்னுவதாலும் ஆஸ்திரேலியத் தோட்டந்தோறும் தவறாமல் காணப்படுவதாலும் Australian Garden orb weaver என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் அறிவியல் பெயர் Hortophora transmarina. ‘Orb weaver’ வகை சிலந்திகள் தமிழில் ‘வட்ட நெசவுச் சிலந்திகள்’ என்று குறிப்பிடப்படுகின்றன.

பெண் சிலந்தி உருவத்தில் பெரியது. அது சுமார் 2.5 செ.மீ. உடல்நீளம் கொண்டிருக்கும். அதோடு ஒப்பிடும்போது ஆண் சிலந்தி அதில் பாதியளவுதான் இருக்கும்.

11. வித்தியாசமான நிறங்களில் தோட்டச் சிலந்திகள்

இந்தத் தோட்டத்துச் சிலந்திகளிடம் ஒரு சிறப்புத்தன்மை உண்டு. இவை வளர் உருமாற்றத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் புற வன்கூட்டை (exoskeleton) உரிக்கும் தன்மை உடையவை. அதுவல்ல விஷயம். அப்படி புற வன்கூட்டை உரிக்கும் ஒவ்வொரு முறையும், பகல் பொழுதுகளில் தான் மறைந்து வசிக்கும் இடத்தின் பின்னணிக்கேற்ப தன்னுடைய நிறத்தை பழுப்பு, சாம்பல், அடர்பழுப்பு, அடர்சாம்பல் என பொருத்தமாக மாற்றிக்கொள்ளும் வல்லமை படைத்தவை. அப்போதுதானே எதிரிகளின் கண்ணில் படாமல் இருக்க முடியும்? அவ்வளவு பெரிய வலையைப் பின்னி வைத்தாலும் வலையில் காவலுக்கு இல்லாததன் காரணமும் அதுதான். யார் அந்த எதிரி? வேறு யார்? பூச்சி பிடிக்கும் பறவைகள்தாம்.

 

12. உலர்ந்த பூவில் உறங்கும் சிலந்தி

மேலே இருக்கும் படத்தில் காய்ந்த பூ மட்டுமே கண்ணுக்குத் தெரியும். தோட்டத்துச் சிலந்தியும் இருக்கிறது என்று நான் சொல்லாவிடில் உங்களுக்குத் தெரியாது. அவ்வளவு துல்லியமான உருமறைப்புத்திறன்!

13. இவ்வளவு பெரிய வலையை தினமும் பின்னுவதென்றால்
எவ்வளவு ஆற்றல் தேவைப்படும்!

தோட்டத்துச் சிலந்தி ஒவ்வொரு நாளும் மாலை இருள் கவியத் தொடங்கும் நேரத்தில் புதிய வலையைப் பின்னும். இரவுநேரப் பூச்சிகள் அதில் சிக்கி உணவாகும். சிதைவுற்ற வலையை மறுநாள் விடியற்காலையில் பகல்வேட்டைக்குச் சீரமைக்கும் அல்லது புதிதாய்ப் பின்னும். தோட்டத்துச் சிலந்தியை பகல் பொழுதுகளில் எப்போதாவதுதான் வலைக்கு மத்தியில் பார்க்கமுடியும். தரையைப் பார்த்தபடி தலைகீழாகக் காட்சியளிக்கும். பெரும்பாலும் வலையை ஒட்டி ஏதாவது ஒரு செடியில் அல்லது சுவரோரம் அல்லது எங்காவது இடுக்கில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும்.

14. இலைமீது ஓய்வெடுக்கும் தோட்டச் சிலந்தி

15. சுவரோரம் பகல்பொழுது உறக்கம்

ஆண் தோட்டச் சிலந்திகள் இவ்வளவு பெரிய வலை பின்னுவதில்லை. அவை பருவ முதிர்ச்சி வரும்வரை குட்டியாக வலை பின்னி அதில் கிடைக்கும் பூச்சிகளைத் தின்று வளரும். பருவ முதிர்ச்சி அடைந்தவுடன் பெண் சிலந்திகளைத் தேடிச் சென்று அவற்றின் பெரிய வலையின் ஒரு மூலையில் அவற்றுக்குத் தெரியாமலேயே வாழத் தொடங்கிவிடுகின்றன. வலையில் சிக்கும் இரையைத் திருடித் தின்றும் ஈரப்பசையுள்ள வலையின் இழைகளைத் தின்றும் தங்களுக்குத் தேவையான உணவையும் சத்துக்களையும் பெறுகின்றன. 

ஏன் ஒளிந்துவாழ வேண்டும்? ஏன் திருடித் தின்னவேண்டும்? நேருக்கு நேர் சென்றால் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் முன்பே இணைக்கு இரையாகிவிடுவோம் என்பது ஆண் சிலந்திக்கு நன்றாகவே தெரியும். எப்படியும் இரையாகப் போவது உறுதி. அதற்கு முன்பு தன்னுடைய வம்சத்தை விருத்தி செய்யவேண்டும் என்ற இலக்குடனும் பொறுமையுடனும் காத்திருக்கும். தக்க சமயம் வரும்போது செயலில் இறங்கும். கலவியின்போதே ஆண் சிலந்தி பெண் சிலந்திக்கு இரையாகிவிடும். இந்த இயற்கை நியதி பெரும்பாலான சிலந்தி இனங்களிடம் காணப்படுகிறது. தோட்டத்துச் சிலந்தியும் விதிவிலக்கல்ல.

 

16. கௌபாய் வண்டு

படத்தில் காணப்படுவது Cowboy beetle எனப்படும் மிகப்பெரிய வண்டினம். கௌபாய்களின் இடைவார் போலக் காணப்படுவதால் இப்பெயராம். சுமார் ஒரு அங்குல நீளத்தில் பழுப்பு மற்றும் கருப்பு நிறத்தில் காணப்படும். இவற்றின் உணவு பூக்களின் தேன். ஆனால் இவற்றின் லார்வாக்களின் உணவோ மக்கிய பொருட்கள். எனவே இந்த வண்டுகள் மண், மக்கிய இலைதழைகள், மரச்செதில்கள் போன்றவற்றுக்குள் தங்கள் முட்டைகளை இடும். முட்டைகள் பொரிந்து லார்வாக்கள் மண்ணுக்குள்ளேயே மக்கியப் பொருட்களைத் தின்று வளரும். வளர்ந்தபின் கூட்டுப்புழுவாகி கோடைக்காலத்தில் வண்டுகளாக வெளிவரும். 

17. தோட்டச்சிலந்தியின் வலையில் சிக்கிய கௌபாய் வண்டு

கடந்த சில நாட்களாகவே தோட்டத்துப் பக்கம் போகும்போது தலையை ஒட்டி விர்..விர்..என்று இந்த வண்டுகள் பறந்துபோய்க் கொண்டிருந்தன. நம்மை ஒன்றும் செய்யா என்றாலும் அந்தச் சத்தமும் நம் தலையையும் முகத்தையும் ஒட்டி அவை பறக்கும் வேகமும் பயத்தில் உடல் சிலிர்க்கவைக்கும். அப்படிப் பறக்கும் வண்டுகளுள் தினமும் ஒன்றிரண்டாவது இந்தத் தோட்டச் சிலந்தியின் வலையில் மாட்டிக்கொள்ளும். வண்டு சிக்கிய மறு நொடியே சிலந்தி ஓடிவந்துவிடும். இல்லையென்றால் வண்டு தப்பித்துவிடுமே. 

18. இரையை கிடுகிடுவென்று சுருட்டும் சிலந்தி

சிலந்தி வலை பின்னும்போது ஒற்றை இழையையும் இரையைச் சுருட்டும்போது எண்ணற்ற இழைகளையும் பயன்படுத்துவதைக் கவனித்தேன். எத்தனை இழைகள் என்று எண்ண முடியவில்லை. அவ்வளவு வேகம்!

19. எத்தனை இழைகள் என்று கணிக்க முடிகிறதா?

கிடுகிடுவென்று
பொட்டலம் கட்டுவதுபோல் தன் உடலிலிருந்து வெளிப்படும் எண்ணற்ற இழைகளைக் கொண்டு இரையைப் பொட்டலம் கட்டி பத்திரப்படுத்திவைத்துவிட்டு பழையபடி தன்னுடைய மறைவிடத்துக்குத் திரும்பிவிடும். பிறகு வந்து ஆசுவாசமாகத் தின்னும்.

ஒரு தடவை cowboy வண்டு சிக்கிக்கொண்டபோது எப்போதும் போல சிலந்தி பாய்ந்துவந்து இழைகளால் சுற்றிப் பத்திரப்படுத்திவிட்டுச் சென்றுவிட்டது. சிக்கிய வண்டின் கால்கள் அசைந்துகொண்டே இருந்தன. அது உயிருடன் இருப்பது தெரிந்து அதன் காதலனோ நண்பனோ தெரியவில்லை, இன்னொரு வண்டு வந்து அதைக் காப்பாற்ற என்னென்னவோ முயற்சி செய்தது. 

20. சிக்கிய வண்டைக் காப்பாற்றும் முயற்சியில் மற்றொன்று

21. தானும் வலையில் சிக்கிவிடாமல் வெகு கவனமாக...

22. எவ்வளவு முயற்சி செய்தும் பலன் இல்லை

ஒரு பக்கம் பாவமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் ஆச்சர்யமாகவும் இருந்தது. சிலந்தி அந்த இன்னொரு வண்டை எதுவுமே செய்யவில்லை. வெகுநேரம் முயற்சி செய்துவிட்டு எந்தப் பலனும் இல்லாததால் அந்த இரண்டாவது வண்டு பறந்துபோய்விட்டது. 

தோட்டச் சிலந்திகளிடம் சிக்கிய பூச்சிகளுள் 

என் கேமராவில் சிக்கிய சில...

23. இரையாக பூவண்டு

24. இரையாக சில்வண்டு

25. இறக்கை வைத்த எறும்புகள்

26. இரையான ஐரோப்பியத் தேனீ

27. சிலந்தியின் இரையை மொய்க்கும் திருட்டு ஈக்கள்

28. இரையான வண்டும் திருட்டு ஈக்களும்

29. வலையில் சிக்கிய ராணி எறும்பு

30. இரையாக ஐரோப்பியத் தேனீயும் திருட்டு ஈக்களும்
31. வலையில் சிக்கித் தொங்கும் சோல்ஜர் வண்டு

சிலந்திகள் இரையைக் கடித்துத் தின்பதில்லை. திரவ ஆகாரம் மட்டுமே. எனவே பூச்சிகளின் உடலிலுள்ள சாற்றை உறிஞ்சிவிட்டு சக்கையை கீழே போட்டுவிடும்.

கோடைக்காலம் முடியும் தருவாயில் பெண் சிலந்தி பட்டுப்போன்ற இழைகளால் ஒரு பையை உருவாக்கி அதற்குள் முட்டைகளை இடும். முட்டைப்பை கீழே விழுந்துவிடாமல் ஏதேனும் கிளை அல்லது பொருளோடு பசைகொண்ட இழைகளால் இணைக்கப்பட்டிருக்கும். 

32. தோட்டச் சிலந்திக் குஞ்சுகள் கலையும் தருணம்

33. எள்ளளவே ஆன தோட்டச் சிலந்திக் குஞ்சுகள்

இலையுதிர்காலத்தில் முட்டைகள் பொரிந்து ஆயிரக்கணக்கான சிலந்திக் குஞ்சுகள் வெளிவரும். அதற்குள் தாய்ச் சிலந்தி இறந்துபோயிருக்கும். சிலந்திக்குஞ்சுகள் முதலில் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து பந்துபோல் காட்சியளிக்கும். பிறகு அவை தனித்தனியாகப் பிரிந்துசென்று ஏதேனும் மரம் செடிகளுக்கிடையில் குட்டியான வலைகளைப் பின்னி, முடிந்தவரை இரைகளைப் பிடித்து குளிர்காலத்தைக் கழிக்கும். ஆயிரக்கணக்கான முட்டைகளிலிருந்து வந்தாலும் குறிப்பிட்டக் கட்டத்தைக் கடந்து முழு வளர்ச்சி அடையும் சிலந்திகளின் எண்ணிக்கை வெகு குறைவாகவே இருக்கும். வசந்த காலத்தில் அவை விரைவாக வளர்ச்சி அடைந்து கோடைக்காலம் தொடங்கும்போது பருவ முதிர்ச்சி அடைந்திருக்கும். மற்றுமொரு வாழ்க்கைச் சுழற்சி ஆரம்பமாகும்!    

34. அழகிய வட்ட நெசவு வலைப்பின்னல்

கடந்த பத்தாண்டுகளாக தோட்டத்தில் இவற்றைப் பார்க்கிறேன். ஒரு வருட காலம்தான் இவற்றின் வாழ்நாள். அதற்குள் தோட்டத்துக்கு எவ்வளவு நன்மையைச் செய்துவிட்டுச் செல்கின்றன!

இந்தப் பதிவில் வழக்கத்துக்கு மாறாக ஏராளமான படங்களை இணைத்திருக்கிறேன். எல்லாமே தோட்டத்துச் சிலந்தி தொடர்பான படங்கள். இன்னும் கூட ஏராளமாக உள்ளன. சரி, போதும் என்று என்னை நானே கட்டுப்படுத்தி நிறுத்திக் கொள்கிறேன். :)))

*****

25 November 2025

பூச்சி வேட்டை

 

1. சிலந்தியின் ஈ வேட்டை

கடந்த ஒரு வாரமாக பூச்சி வேட்டையில் ஈடுபட்டிருந்தேன். பூச்சி வேட்டை என்றதும் பல்லி, தவளை, சிலந்தி போல பூச்சிகளை வேட்டையாடினேனோ என்று எண்ணவேண்டாம். பெயர்தான் Bug Hunt.  ஆனால் பறவைகள் கணக்கெடுப்பு போல் இதுவும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான முன்னெடுப்புதான். குடிமக்கள் அறிவியலின் மற்றுமொரு அங்கமாக நவம்பர் 17 முதல் 24-ஆம் தேதிவரை ஆஸ்திரேலியாவில் Bugs in my Backyard week (2025) என்னும் சிற்றுயிர்க் கணக்கெடுப்பு நடைபெற்றது. 


நம் வீடு, வீட்டின் சுற்றுப்புறம், தோட்டம், நாம் வசிக்கும் ஊர், சுற்றுவட்டாரம் ஆகிய இடங்களில் காணப்படும் சிற்றுயிர்களைப் படம்பிடித்து அவற்றின் பொதுப்பெயர் அல்லது அறிவியல் பெயர், காணப்பட்ட இடம், உயிருடன் இருந்ததா அல்லது இறந்துகிடந்ததா, வளர்ச்சி நிலை (முட்டை, லார்வா, கூட்டுப்புழு, உருமாற்று நிலையின் இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டம் போன்றவை), வளர்க்கப்படுவதா, இயல் வாழிடத்தில் காணப்படுவதா என்பன உள்ளிட்ட தகவல்களோடு iNaturalist தளத்தில் அல்லது உரிய செயலியில் பதிவேற்ற வேண்டும். பெயர் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை. படத்தையும் இடத்தையும் பதிவு செய்துவிட்டால் போதும், தளத்தில் உள்ள வல்லுநர்கள் பெயரை உறுதி செய்துவிடுவார்கள்.

பறவைக் கணக்கெடுப்பு வாரத்தில் பெரும்பான்மை நேரம் அண்ணாந்துகொண்டு மரத்திலும் கிளையிலும் வானத்திலும் பறவைகளைத் தேடித் திரிந்தேன். பூச்சி வேட்டை வாரத்திலோ குனிந்த தலை நிமிராமல் தரையிலும் புதர்களிலும் செடிகொடிகளிலும் இண்டு இடுக்கிலும் பூச்சிகளைத் தேடிக் கொண்டிருந்தேன்.  

பூச்சி வேட்டை என்ற பொதுப்பெயர் கொடுக்கப்பட்டாலும் பூச்சிகளோடு, எறும்பு, வண்டு, சிலந்தி, நிலம்வாழ் நண்டு, நத்தை, ஓடில்லா நத்தை, தேள், மண்புழு, அட்டை, மரவட்டை, கடல் அட்டை போன்ற முதுகெலும்பிலிகள் அனைத்தும் இந்தக் கணக்கெடுப்புக்குள் அடங்கும். கடல் நண்டுகளும் கொட்டலசுகளும் (barnacles) இந்தக் கணக்கெடுப்பில் அடங்கா.


Invasive Species Council என்னும் அமைப்பு Invertebrates Australia மற்றும் Australian Geographic உடன் இணைந்து இந்தக் கணக்கெடுப்பை நடத்துகிறது. இந்தப் புதிய ஆய்வுத்திட்டத்தை ஊக்குவிக்கும் முகமாக இவ்வாண்டு Australian Geographic Society-ன் Gold Tier Award (சுமார் ஐம்பதாயிரம் ஆஸ்திரேலிய டாலர்கள்) என்னும் உயரிய விருதுடன் கூடிய உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

பூச்சி என்றதுமே அலறுபவர் நம்மில் எத்தனைப் பேர்புழு என்றதுமே அருவருப்பு அடைபவர் எத்தனைப் பேர்நானே அதற்கு சாட்சி. புழு பூச்சிகளைக் கண்டாலே அய்யே… உவ்வே… என்றெல்லாம் ஒரு காலத்தில் முகம் சுழித்த நான் இப்போது அவற்றை அவ்வளவு ஆர்வமாகக் கூர்ந்து நோக்குகிறேன். உருப்பெருக்கிப் படமெடுக்கிறேன். அவற்றின் பெயர்அறிவியல் பெயர்தாயகம்வாழ்க்கை முறைஉணவுப்பழக்கம்இனப்பெருக்கம்விசித்திரத் திறமைகள்வாழ்வைத் தக்கவைக்கும் உத்திகள் என பூச்சிகள் தொடர்பான பல தகவல்களையும் தேடித்தேடி அறிகிறேன். அந்தக் குட்டி உலகத்துக்குள் எவ்வளவு ஆச்சர்யங்கள்எவ்வளவு கூரறிவுகள்எத்தகைய சாமர்த்தியங்கள்எவ்வளவு நுட்பமான வாழ்க்கைத் தத்துவங்கள் அடங்கிக் கிடக்கின்றன.

2. தோட்டத்துச் சிலந்திகள் (1)

3. தோட்டத்துச் சிலந்திகள் (2)

4. தோட்டத்துக் குளவிகள்

5. தோட்டத்துக் கரப்பான்பூச்சிகள்


6. தோட்டத்து வண்ணத்துப்பூச்சிகள்

கொரோனா தொற்று உலகையே முடக்கிப் போட்டிருந்த சூழலில்தான் எனக்குப் பல புதிய கதவுகள் திறந்தன. அவற்றுள் ஒன்றுதான் பூச்சிகள் கூர்நோக்கல். புகைப்படப் பொழுதுபோக்கினாலும், வெளியில் எங்கும் போக முடியாத சூழல் காரணமாகவும், வீட்டின் பின்புறம் இருக்கிற குட்டித் தோட்டத்தையே வளைத்து வளைத்துப் படம் பிடிக்கும்போதுதான் நாம் வாழும் இதே பூமியில் நம்மோடு எவ்வளவு விதவிதமான, விநோதமான சின்னஞ்சிறு உயிரினங்களும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன என்பது தெரிய வந்தது. விவரம் தெரிந்த நாள் முதலாக எத்தனையோ பூச்சியினங்களைப் பார்த்திருக்கிறேன், கேள்விப்பட்டிருக்கிறேன் என்றாலும் கூட அவற்றையெல்லாம் இவ்வளவு அணுக்கமாகவும் நுணுக்கமாகவும் பார்க்கும் வாய்ப்பும் அமைந்ததில்லை. ஆர்வமும் இருந்ததில்லை. கட்டாய வீட்டு முடக்கம் அந்த நல்வாய்ப்பினைத் தந்தது. பறவைகளைக் கூர்நோக்குதல் போல் பூச்சிகளைக் கூர்நோக்குவதும் மிக சுவாரசியமானப் பொழுதுபோக்கு. 

இதுவரை தோட்டத்தில் நான் படம்பிடித்த பூச்சியினங்களுள் சிலவற்றின் தொகுப்பைதான் இப்பதிவில் இணைத்திருக்கிறேன். தொகுக்கப்படாதவையும் பெயர் தெரியாதவையும் இன்னும் ஏராளம் உள்ளன. 

7. தோட்டத்துத் தேனீக்கள்

8. தோட்டத்து ஈக்கள்

9. தோட்டத்து வண்டுகள்

10. தோட்டத்தின் பிற பூச்சியினங்கள்

11. தோட்டத்துத் தட்டான்கள்

12. தோட்டத்து வெட்டுக்கிளிகளும் கும்பிடுபூச்சிகளும்

13. தோட்டத்து அந்துப்பூச்சிகள்

பூச்சிகளைக் கணக்கெடுத்து என்னாகப் போகிறது என்று பலருக்கும் தோன்றலாம். சுற்றுச்சூழலைப் பேணவும் உணவுச்சங்கிலி அறுந்துவிடாமல் பாதுகாக்கவும் பூச்சிகள் முக்கியம். பூச்சிகள் இல்லையென்றால் பிற உயிரினங்களும் இருக்காது. அவ்வளவு ஏன்? மனிதகுலமும் இருக்காது. மகரந்தச்சேர்க்கை, இறந்த உடல்களை மக்க வைத்து உரமாக மாற்றுதல், கேடு விளைவிக்கும் பூச்சியினங்களைக் கட்டுக்குள் வைத்தல், மண்ணுக்கு வளம் சேர்த்தல் என இப்பூவுலகில்  பூச்சிகளின் பங்கு பெரும் பங்கு.

நம் வாழிடத்தில் என்னென்ன பூச்சியினங்கள் காணப்படுகின்றன?  அவற்றுள் எவை அந்நிய சிற்றுயிரிகள்? pest  என்ற வகைப்பாட்டுக்குள் வருபவை எவை? எந்தெந்த பூச்சியினங்கள் கட்டுப்படுத்தவேண்டிய சூழலில் உள்ளன? இதுவரை கண்டறியப்படாத புதிய பூச்சியினங்கள் காணக்கிடைக்கின்றனவா? உள்நாட்டின் எந்தெந்தப் பூச்சியினங்கள் அழிவுக்கு ஆளாகியுள்ளன? போன்ற பல கேள்விகளுக்கான விடையாகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் குடிமக்களின் பங்கை உணர்த்தவும், சின்னஞ்சிறு உயிர்களின் சிறப்புகளை அறிந்து வியக்கவும்  இக்கணக்கெடுப்பு உதவும் என்கிறார் குடிமக்கள் அறிவியலின் ஒருங்கிணைப்பாளர்.

தோட்டத்தில் கடந்த பத்தாண்டுகளாக நான் நான் படம்பிடித்த பூச்சியினங்கள் ஐநூற்றுக்கும் மேல் இருக்கலாம். அவற்றில் சுமார் நூறு பூச்சியினங்களையாவது இந்த ஒரு வார காலத்தில் படம் பிடித்து பதிவு செய்யலாம் என்று எண்ணியிருந்தேன். சோதனையாக பல பூச்சிகள் கண்ணில் அகப்படவே இல்லை. கண்ணில் அகப்பட்டாலும் படமெடுக்க அகப்படவில்லை. சுமார் 72 பூச்சியினங்களை மட்டுமே என்னால் பதிவு செய்ய முடிந்தது. இன்னும் பல பூச்சியினங்கள் கோடை ஆரம்பித்த பிறகுதான் வரத்தொடங்கும். 

4,521 பேர் கலந்துகொண்ட இந்த ஆய்வுத்திட்டத்தில் நான் 90-ஆவது இடத்தில் இருக்கிறேன். சுற்றுச்சூழல் பேணும் ஒரு ஆய்வுக்கு என்னாலான பங்களிப்பை நல்கினேன் என்பதே பெரும் மகிழ்ச்சியும் மனநிறைவும் தருகிறது!

14. சால்வியா பூக்களைத் தேடிவரும் நீலவரித் தேனீ

*******