 |
| 1. சிலந்தியின் ஈ வேட்டை |
கடந்த ஒரு வாரமாக பூச்சி வேட்டையில் ஈடுபட்டிருந்தேன்.
பூச்சி வேட்டை என்றதும் பல்லி, தவளை, சிலந்தி போல பூச்சிகளை வேட்டையாடினேனோ என்று எண்ணவேண்டாம். பெயர்தான் Bug Hunt.
ஆனால் பறவைகள்
கணக்கெடுப்பு போல் இதுவும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான முன்னெடுப்புதான். குடிமக்கள்
அறிவியலின் மற்றுமொரு அங்கமாக நவம்பர் 17 முதல் 24-ஆம் தேதிவரை ஆஸ்திரேலியாவில் Bugs in my Backyard week (2025) என்னும் சிற்றுயிர்க் கணக்கெடுப்பு
நடைபெற்றது.
 |
|
நம் வீடு, வீட்டின் சுற்றுப்புறம், தோட்டம், நாம் வசிக்கும் ஊர், சுற்றுவட்டாரம் ஆகிய இடங்களில் காணப்படும் சிற்றுயிர்களைப் படம்பிடித்து அவற்றின் பொதுப்பெயர் அல்லது அறிவியல் பெயர், காணப்பட்ட இடம், உயிருடன் இருந்ததா அல்லது இறந்துகிடந்ததா, வளர்ச்சி நிலை (முட்டை, லார்வா, கூட்டுப்புழு, உருமாற்று நிலையின் இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டம் போன்றவை), வளர்க்கப்படுவதா, இயல் வாழிடத்தில் காணப்படுவதா என்பன உள்ளிட்ட தகவல்களோடு iNaturalist தளத்தில் அல்லது உரிய செயலியில் பதிவேற்ற வேண்டும். பெயர் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை. படத்தையும் இடத்தையும் பதிவு செய்துவிட்டால் போதும், தளத்தில் உள்ள வல்லுநர்கள் பெயரை உறுதி செய்துவிடுவார்கள்.
பறவைக் கணக்கெடுப்பு வாரத்தில் பெரும்பான்மை நேரம் அண்ணாந்துகொண்டு மரத்திலும் கிளையிலும் வானத்திலும் பறவைகளைத் தேடித் திரிந்தேன். பூச்சி வேட்டை வாரத்திலோ குனிந்த தலை நிமிராமல் தரையிலும் புதர்களிலும் செடிகொடிகளிலும் இண்டு இடுக்கிலும் பூச்சிகளைத் தேடிக் கொண்டிருந்தேன்.
பூச்சி வேட்டை என்ற பொதுப்பெயர் கொடுக்கப்பட்டாலும் பூச்சிகளோடு, எறும்பு, வண்டு, சிலந்தி, நிலம்வாழ் நண்டு, நத்தை, ஓடில்லா நத்தை, தேள், மண்புழு, அட்டை, மரவட்டை, கடல் அட்டை போன்ற முதுகெலும்பிலிகள் அனைத்தும் இந்தக் கணக்கெடுப்புக்குள் அடங்கும். கடல் நண்டுகளும் கொட்டலசுகளும் (barnacles) இந்தக் கணக்கெடுப்பில் அடங்கா.
Invasive Species Council என்னும் அமைப்பு Invertebrates Australia மற்றும் Australian Geographic உடன் இணைந்து இந்தக் கணக்கெடுப்பை நடத்துகிறது. இந்தப் புதிய ஆய்வுத்திட்டத்தை ஊக்குவிக்கும் முகமாக இவ்வாண்டு Australian Geographic Society-ன் Gold Tier Award (சுமார் ஐம்பதாயிரம் ஆஸ்திரேலிய டாலர்கள்) என்னும் உயரிய விருதுடன் கூடிய உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
பூச்சி என்றதுமே அலறுபவர் நம்மில் எத்தனைப் பேர்? புழு என்றதுமே அருவருப்பு அடைபவர் எத்தனைப் பேர்? நானே அதற்கு சாட்சி. புழு பூச்சிகளைக் கண்டாலே அய்யே… உவ்வே… என்றெல்லாம் ஒரு காலத்தில் முகம் சுழித்த நான் இப்போது அவற்றை அவ்வளவு ஆர்வமாகக் கூர்ந்து நோக்குகிறேன். உருப்பெருக்கிப் படமெடுக்கிறேன். அவற்றின் பெயர், அறிவியல் பெயர், தாயகம், வாழ்க்கை முறை, உணவுப்பழக்கம், இனப்பெருக்கம், விசித்திரத் திறமைகள், வாழ்வைத் தக்கவைக்கும் உத்திகள் என பூச்சிகள் தொடர்பான பல தகவல்களையும் தேடித்தேடி அறிகிறேன். அந்தக் குட்டி உலகத்துக்குள் எவ்வளவு ஆச்சர்யங்கள், எவ்வளவு கூரறிவுகள், எத்தகைய சாமர்த்தியங்கள், எவ்வளவு நுட்பமான வாழ்க்கைத் தத்துவங்கள் அடங்கிக் கிடக்கின்றன.
 |
| 2. தோட்டத்துச் சிலந்திகள் (1) |
 |
| 3. தோட்டத்துச் சிலந்திகள் (2) |
 |
| 4. தோட்டத்துக் குளவிகள் |
 |
| 5. தோட்டத்துக் கரப்பான்பூச்சிகள் |
 |
| 6. தோட்டத்து வண்ணத்துப்பூச்சிகள் |
கொரோனா தொற்று உலகையே முடக்கிப் போட்டிருந்த சூழலில்தான் எனக்குப் பல புதிய கதவுகள்
திறந்தன. அவற்றுள் ஒன்றுதான் பூச்சிகள் கூர்நோக்கல். புகைப்படப்
பொழுதுபோக்கினாலும், வெளியில் எங்கும் போக முடியாத சூழல்
காரணமாகவும், வீட்டின் பின்புறம் இருக்கிற குட்டித்
தோட்டத்தையே வளைத்து வளைத்துப் படம் பிடிக்கும்போதுதான் நாம் வாழும் இதே பூமியில்
நம்மோடு எவ்வளவு விதவிதமான,
விநோதமான சின்னஞ்சிறு
உயிரினங்களும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன என்பது தெரிய வந்தது. விவரம் தெரிந்த நாள்
முதலாக எத்தனையோ பூச்சியினங்களைப் பார்த்திருக்கிறேன், கேள்விப்பட்டிருக்கிறேன்
என்றாலும் கூட அவற்றையெல்லாம் இவ்வளவு அணுக்கமாகவும் நுணுக்கமாகவும் பார்க்கும்
வாய்ப்பும் அமைந்ததில்லை. ஆர்வமும் இருந்ததில்லை. கட்டாய வீட்டு முடக்கம் அந்த நல்வாய்ப்பினைத் தந்தது. பறவைகளைக் கூர்நோக்குதல் போல்
பூச்சிகளைக் கூர்நோக்குவதும் மிக சுவாரசியமானப் பொழுதுபோக்கு.
இதுவரை தோட்டத்தில் நான் படம்பிடித்த பூச்சியினங்களுள் சிலவற்றின் தொகுப்பைதான் இப்பதிவில் இணைத்திருக்கிறேன். தொகுக்கப்படாதவையும் பெயர் தெரியாதவையும் இன்னும் ஏராளம் உள்ளன.
 |
| 7. தோட்டத்துத் தேனீக்கள் |
 |
| 8. தோட்டத்து ஈக்கள் |
 |
| 9. தோட்டத்து வண்டுகள் |
 |
| 10. தோட்டத்தின் பிற பூச்சியினங்கள் |
 |
| 11. தோட்டத்துத் தட்டான்கள் |
 |
| 12. தோட்டத்து வெட்டுக்கிளிகளும் கும்பிடுபூச்சிகளும் |
 |
| 13. தோட்டத்து அந்துப்பூச்சிகள் |
பூச்சிகளைக்
கணக்கெடுத்து என்னாகப் போகிறது என்று பலருக்கும் தோன்றலாம். சுற்றுச்சூழலைப்
பேணவும் உணவுச்சங்கிலி அறுந்துவிடாமல் பாதுகாக்கவும் பூச்சிகள் முக்கியம்.
பூச்சிகள் இல்லையென்றால் பிற உயிரினங்களும் இருக்காது. அவ்வளவு ஏன்? மனிதகுலமும்
இருக்காது. மகரந்தச்சேர்க்கை, இறந்த உடல்களை மக்க வைத்து உரமாக மாற்றுதல், கேடு
விளைவிக்கும் பூச்சியினங்களைக் கட்டுக்குள் வைத்தல், மண்ணுக்கு வளம் சேர்த்தல் என
இப்பூவுலகில் பூச்சிகளின் பங்கு பெரும்
பங்கு.
நம்
வாழிடத்தில் என்னென்ன பூச்சியினங்கள் காணப்படுகின்றன? அவற்றுள் எவை அந்நிய சிற்றுயிரிகள்? pest என்ற வகைப்பாட்டுக்குள் வருபவை எவை? எந்தெந்த
பூச்சியினங்கள் கட்டுப்படுத்தவேண்டிய சூழலில் உள்ளன? இதுவரை கண்டறியப்படாத புதிய
பூச்சியினங்கள் காணக்கிடைக்கின்றனவா? உள்நாட்டின் எந்தெந்தப் பூச்சியினங்கள்
அழிவுக்கு ஆளாகியுள்ளன? போன்ற பல கேள்விகளுக்கான விடையாகவும், சுற்றுச்சூழல்
பாதுகாப்பில் குடிமக்களின் பங்கை உணர்த்தவும், சின்னஞ்சிறு உயிர்களின் சிறப்புகளை
அறிந்து வியக்கவும் இக்கணக்கெடுப்பு
உதவும் என்கிறார் குடிமக்கள் அறிவியலின் ஒருங்கிணைப்பாளர்.
தோட்டத்தில் கடந்த பத்தாண்டுகளாக நான் நான் படம்பிடித்த
பூச்சியினங்கள் ஐநூற்றுக்கும் மேல் இருக்கலாம். அவற்றில் சுமார் நூறு பூச்சியினங்களையாவது
இந்த ஒரு வார காலத்தில் படம் பிடித்து பதிவு செய்யலாம் என்று எண்ணியிருந்தேன்.
சோதனையாக பல பூச்சிகள் கண்ணில் அகப்படவே இல்லை. கண்ணில் அகப்பட்டாலும் படமெடுக்க
அகப்படவில்லை. சுமார் 72 பூச்சியினங்களை மட்டுமே என்னால் பதிவு செய்ய முடிந்தது.
இன்னும் பல பூச்சியினங்கள் கோடை ஆரம்பித்த பிறகுதான் வரத்தொடங்கும்.
4,521 பேர் கலந்துகொண்ட இந்த ஆய்வுத்திட்டத்தில் நான் 90-ஆவது இடத்தில் இருக்கிறேன். சுற்றுச்சூழல் பேணும் ஒரு ஆய்வுக்கு என்னாலான பங்களிப்பை நல்கினேன் என்பதே பெரும்
மகிழ்ச்சியும் மனநிறைவும் தருகிறது!
 |
| 14. சால்வியா பூக்களைத் தேடிவரும் நீலவரித் தேனீ |
*******
No comments:
Post a Comment
என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...
வணக்கம். வருகைக்கு நன்றி.