29 April 2013

ஆதலினால் செய்த காதலிது!


 
 வீம்பு பிடித்த நம் இருவருக்கிடையில்
தானும் வீறாப்பாய் அமர்ந்துகொண்டு
நம்மைப்பார்த்து நகைத்துக்கொண்டிருக்கிறது
நமக்கே உரித்தான நம் காதல்!
 
சீண்டுவாரற்று சித்தம் சலித்ததோ?
சின்னக்குழந்தை போல் மெல்ல ஊர்ந்து
விளையாடவருகிறது நம்மிடத்தில்!
 
விரட்டலும் விலக்கலுமின்றி
பாராமுகமாய் ஊடித்திரியும் நம்மிடையே
ஒளிந்துவிளையாடும் காதலுக்கு
ஒருவரிடமும் வரவேற்பில்லை.
 
நாளெல்லாம் ஒற்றையாய்
ஆடிக்களைத்து அருகமர்ந்த காதலை
போதும் விளையாட்டென்று
வாரியணைத்துக்கொள்கிறேன் வாஞ்சையுடன்!
 
காத்திருந்தாற்போல் நீயும்....
 கைகொள்ளாது அள்ளிக்கொள்கிறாய்
காதலோடு என்னையும்!
*****************
(படம் உதவி: இணையம்)

23 April 2013

கிருஷ்ணவேணி


 
 
மாநகரத்தின் ஒரு மூலையில் காலம்காலமாய் கவனிப்பாரற்றுக் கிடந்த அந்தச் சிற்றூர் தன் ஜீவாதாரமான வயல்வரப்புகளை, குடியிருப்புகளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாய் தாரை வார்த்துவிட்டு மொத்தமாய் தன் சுயவிலாசம் இழந்து நின்றுகொண்டிருந்தது.  

நகரத்துக்குப் படையெடுப்பவர்களின் பெருக்கம் விஸ்தரிப்புகளுக்கு வழிகோல,  அந்தச் சிற்றூர், கிராமிய நகர வாழ்க்கைக்கு இடைப்பட்ட இரண்டுங்கெட்டான் வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தது. அதன் ஆதிகாலத்தோடு தன் வாழ்க்கையைப் பிணைத்துக்கொண்ட கிருஷ்ணவேணியைப் போல் அதுவும் காலத்துக்கேற்றபடி தன்னை அவ்வாழ்க்கைக்குப் பொருத்திக்கொள்ளத்தான் வேண்டும். கிருஷ்ணவேணியா? யாரது என்கிறீர்களா? 

அவள்தான் அந்த ஊரில் முதன்முதலில் மாடிவீடு கட்டியவள் என்ற பெருமைக்குரியவள். இந்த இருபது வருடங்களில் அவள் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படாதவர்களே அவ்வூரில் இல்லை என்னுமளவு பெயர் பெற்றவள். 

இன்று கிருஷ்ணவேணியின் மகள் வசந்திக்கும் மிராசு கோவிந்தசாமிப்பிள்ளையின் மகனுக்கும் மாநகரின்  பெரிய மண்டபத்தில் விமரிசையான திருமணம். அதற்குதான் கிருஷ்ணவேணியின் தெருவைச்சேர்ந்த இந்த ஏழுபெண்களும் பட்டுப்புடவை சரசரக்க, மல்லிகையும், முல்லையும் மணக்க, உடலெங்கும் பொன்னும் போலியும் தகதகக்க, முகத்தில் சந்தோஷமும் சிரிப்பும் தாண்டவமாட பயணம் செய்துகொண்டிருக்கின்றனர். 

குமாருக்கு இது புது அனுபவம். இதுவரை இப்படி பெண்களுடன் பயணம் செய்யும் சந்தர்ப்பம் அமைந்ததில்லை. கம்பெனியின் ஊழியர்களை அழைத்துப்போகவும், சாமான்கள் ஏற்றிச்செல்லவுமே பயன்பட்டுக்கொண்டிருந்த அந்த மாருதி ஆம்னி இன்று ஏழு பெண்களைச் சுமந்து பிறந்தபயனை அடைந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டான். அதிலும் ஒருத்தி மட்டும் பாவாடை தாவணியில் இருந்தது விசேஷம்.

இருபெண்மணிகள் அறுபதைத்தாண்டியவர்கள் என்பதும் அதில் ஒருத்தி ஐயர் வீட்டம்மாள் என்பதும் பார்த்தவுடனேயே தெரிந்தது. மற்ற பெண்கள் முப்பது நாற்பதுகளில் இருக்கக்கூடும். இந்தப்பெண்களில் கோகிலா மட்டும்தான் பரிச்சயம். இரண்டொருமுறை பார்த்திருக்கிறான். 

நெடுஞ்சாலையில் வேன் சீராகப்போய்க்கொண்டிருந்தது. அவர்கள் ஏதேதோ பேசிச் சிரித்தபடி வந்தனர். குமாரையும் அவர்களது உற்சாகம் தொற்றிக்கொண்டது. பாட்டியைத்தவிர வேறு பெண்களுடன் பேசியதுகூட இல்லை.  

ஏனோ பெண்களைக் கண்டாலே அத்தனை ஈர்ப்பு இதுவரை உண்டானதில்லை. அதற்கு அவனைப் பெற்றவளும் ஒரு காரணமாக இருக்கலாம். அவனது அறியா வயதில் அவனை குடிகாரத் தகப்பனிடம் தனியே விட்டுவிட்டு தற்கொலை செய்துகொண்டவளின் மேல் இன்றுவரை அடங்காத கோபம் அவனுக்கு.  

ஆனால் இன்று அந்தப் பெண்களின் மத்தியில் இருப்பது ஒரு புத்துணர்வைக் கொடுத்தது. அதிலும் அந்த பாவாடை தாவணிக்காரி அடிக்கடி தன் மேல் கண்களை ஊன்றியது என்னவோ போலிருந்தது.  

ஒருகையால் ஸ்டியரிங்கைப் பிடித்துக்கொண்டு மறுகையால் தலைக்கு மேலிருந்த கண்ணாடியை மெதுவாக பக்கவாட்டில் திருப்ப அவள் முகம் பளிச்செனத் தெரிந்தது. அவளும் அவனைப் பார்ப்பதுபோல் தெரிய சட்டென்று கண்ணாடியை சரியாகப் பொருத்தினான். 

"ஏம்ப்பா...டிரைவரு.... கல்யாணமண்டபத்துக்கு வழி தெரியுமா?" வயதானவள் கேட்டாள். 

"தெரியுங்க. சார் சொல்லியிருக்காரு!" 

"ஹும்! கோகிலா வீட்டுக்காரு மனசு வச்சதால சுகமா வேன்ல பயணம். இல்லைனா பஸ் பிடிச்சுதான் போயிருக்கணும். பட்டுப்பொடவையெல்லாம் கசங்கி வேர்த்து வடிஞ்சு போய்ச்சேருவோம். இப்படி அலுங்காம குலுங்காமப் போகமுடியாது. கோகிலா ஒன் வூட்டுக்காருக்கு கோடி புண்ணியம்டீ!" 

"கொத்தமங்கலத்தம்மா! விஷயமில்லாமலா அவர் வேன் ஏற்பாடு பண்ணியிருக்கார்? அக்கா இப்ப முழுகாம இருக்காங்க. அதான் பெண்டாட்டிய எப்படி தனியா அனுப்புறதுன்னு நம்மளையும் துணைக்கி அனுப்பிவச்சிருக்காரு." 

ராஜி கேலி பேச, கோகிலா கண்களாலேயே குமார் இருப்பதைச் சுட்டிக் காட்டி அவளை அடக்கினாள். 

"ராஜிக்கா! இந்த மாசம் ஏலச்சீட்டு கட்டிட்டியாக்கா?" ஈஸ்வரி நினைவூட்டினாள். 

"இல்ல, ஈசு! போனவாரமே கிருஷ்ணவேணியக்கா வந்து கேட்டுச்சு. இப்ப கையில இல்ல, அப்புறமா தரேன்னு சொல்லி அனுப்பிச்சேன். அப்புறம் மறந்தே போச்சு!" 

"எதுக்கும் தயாரா இரு, ராஜி, அது கல்யாணவீடுன்னு கூட பாக்காது. ஈட்டிக்காரன் மாதிரி காசு வசூல்பண்றதிலேயே குறியா இருக்கும். 

"என்ன கோமதி, இப்படி பயமுறுத்தறே?, நான் கையிலே கொண்டுவரலையே?" 

"ஏண்டீ கோமதி, அவளைப் படுத்தறே? கிருஷ்ணவேணி அப்படியெல்லாம் செய்யமாட்டாடீ. மக கல்யாணவேலையில பிஸியா இருப்போ. இப்போ போய்  அவளண்ட பைசா கேட்டு அசிங்கப்படுத்துவாளா என்ன?" 

"மாமி, உங்களுக்குத் தெரியாது. ஒருதடவ எங்க வீட்டுக்காருக்கு மஞ்சக்காமால வந்து முடியாம பத்துநாளு ஆஸ்பத்திரியில கெடந்தாரு தெரியுமா? அப்ப பாக்கவந்தாளே மவராசி, போறபோக்கில பொடவக்காசை ஞாபகப்படுத்திட்டுப் போனான்னா பாத்துக்கோங்க!" 

"அதனாலதான் மாடிமேல மாடிகட்டி மகாராணியாட்டம் இருக்கா. ஒண்ணுமில்லாத ஆளைக் கோபுரத்தில உக்காத்தி வச்சிருக்கா!" கொத்தமங்கலத்தம்மா சொல்லவும் மாமி ஆச்சரியப்பட்டாள். 

"ஒண்ணுமில்லாத ஆளா? யாரு அவ ஆம்படையானையா சொல்றேள், கொத்தமங்கலத்தம்மா?" 

"ஆம்படையானா? மங்களம் மாமி! அது அவ புருஷன்னா நீங்க நெனைச்சுகிட்டிருக்கீங்க? நல்லா நெனச்சீங்க, போங்க!" 

இதுவரை தனக்கென்ன என்று தன் வேலையில் கவனமாய் இருந்த குமாரையும் ஆர்வம் தொற்றிக்கொண்டது. 

கொத்தமங்கலத்தமா தன் மடியிலிருந்த வெற்றிலைப்பெட்டியை எடுத்துத் திறந்தாள். சஸ்பென்ஸ் வைப்பதுபோல் ஏடாகூடமாய் ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு மற்றவர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துவிட்டு இதற்குதான் காத்திருந்ததுபோல் அதைக் கண்டுகொள்ளாதவளாய் தன் வேலையில் ஆழ்ந்தாள்.  

இப்போதைக்கு அவள் வாயைப் பார்ப்பதில் அர்த்தமில்லை என்று உணர்ந்தவர்கள் போல் மற்ற ஐவரும்  தங்களுக்குள் பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். தாவணி போட்டவள் இவர்கள் பேச்சில் ஆர்வம் காட்டாதவளைப்போல் சன்னல் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தாள். 

ச்சீ! இப்படியுமா இருப்பாங்க?” ராஜி வியந்தாள். 

"அப்ப புருஷன் யாரு? ஓடிப்போய்ட்டானா?"
 
ஒரு நிமிடமும் வீணாவதை விரும்பாத ஈஸ்வரி கொத்தமங்கலத்தம்மாவைக் கேட்டாள். 

அவளோ வாய்கொள்ளாத வெற்றிலைச் சாற்றுடன் மேல்நோக்கிப் பார்த்தபடி எதையோ சொல்லமுயல, பக்கத்தில் உட்கார்ந்திருந்த மங்கலம் மாமி சற்று இடம்விட்டு தள்ளி அமர்ந்துகொண்டாள்.  

தலையை வெளியில் நீட்டி அக்கம்பக்கம் பார்த்தபடியே புளிச்சென்று எச்சிலை ரோட்டில் துப்பியவள் தொடர்ந்தாள். 

"ராஜி, அந்தப் பொம்பளயப் பத்தி ஒனக்குத் தெரியாது, நீ எங்க தெருவுக்கு குடிவந்து ஆறுமாசந்தானே ஆவுது? அவளை எனக்கு இருவது வருஷமா தெரியும்.'' 

"இருவது வருஷமாவா?" கொத்தமங்கலத்தம்மாவை நம்பாமல் ராஜி ஏறிட்டாள். 

"அடி நம்புடி! அப்ப இந்த ஊரிலே அங்கொண்ணும் இங்கொண்ணுமாதான் வீடு. எங்க வூட்டுக்குப் பக்கத்திலதான் அந்தாளு...அதான்..... அந்த பரந்தாமன் குடியிருந்தாரு. சின்னப் பொட்டிக்கடை வச்சிருந்தாரு. அவரு பொண்டாட்டிக்கு ரொம்பநாளாவே உடம்பு சரியில்லே... புத்துநோய்... கையில இருந்ததையெல்லாம் செலவுசெஞ்சும் அந்தப்பொம்பள பொழைக்கல. கடையும் கைவிட்டுப்போய்ட்டு. ஆளு அதில ரொம்பவே இடிஞ்சி போயிட்டாரு.  தலைக்கு மேல கடன். நண்டும் சிண்டுமா இந்த முரளியும் முத்துவும்! ஒருநாளு ரொம்பவே மனச வுட்டுட்டாரு போல. தற்கொல பண்ணிக்கலாம்னு ரயில் லைன் பக்கம் போயிருந்திருக்காரு. அப்ப இவளும் அங்க அதே காரணத்துக்காக வந்திருக்கா. கர்ப்பமா வேற இருந்திருக்கா. இவளைப் பாக்கவும்  இவருக்கு சடார்னு எதுவோ தோணி முடிவ மாத்திகிட்டு இவளையும்  அழைச்சிகிட்டு வீட்டுக்கு வந்திட்டாரு. 

"அப்படியா? என்னால நம்பவே முடியலையே? முரளியும் முத்துவும் இவ பிள்ளைங்க இல்லையா?  எப்பவும் எம்மவனுவோன்னு சொல்லிக்கும்!"  

அப்ப…..வசந்தி?” கோகிலா குறுக்கிட்டாள். 

"கேளு! புள்ளதாச்சியா வந்தாளா, இங்க வந்துதான் இந்த வசந்திக்குட்டியப் பெத்தா. ஆச்சி, இருவது வருஷம். இன்னைக்கு அதுக்கு கல்யாணம்! ஆத்தி, என்னாலேயே நம்பமுடியலையே?"  

கொத்தமங்கலத்தமாவே வியந்துகொண்டாள். அனைவரும் அவள் பேச்சில் ஐக்கியமாயிருந்தது புரிந்தது. 

அந்த முரளியும், முத்துவும் இவள அம்மான்னுதான் கூப்புவானுங்க, இவ பேச்சத் தட்ட மாட்டானுங்க. சொன்னவேலய செய்வானுங்க! 

"ஆமாம்! ஆமாம்! அத்தனப் பெரிய பையன் அதுவும் எஞ்சினீயரிங் படிச்ச பையனை சீட்டுப்பணம், பொடவப்பணம் வசூல் பண்ண அனுப்புது, அவனும் வெக்கமில்லாம வந்து கேக்குறானே?" 

"அந்த வசந்திக்குட்டி மட்டும் என்ன? அந்தாளை அப்பன்னுதான் சொல்லிகிட்டுத் திரிவா. ஒரு குடும்பத்திலயே எத்தனை சண்டை சச்சரவு வருது? இது ரெண்டும் கல்யாணமும் கட்டிக்கல. ஆனா பாரு, இருவது வருஷமா எல்லாத்தையும் ஏமாத்திகிட்டுத் திரியுதுங்க. எங்க போனாலும் தம்பதி சமேதராதான் போவாங்க... பார்க்கிறவங்களுக்கு என்னவோ ஆதர்ச தம்பதி மாதிரி தோணும். ஆனா... என்னை மாதிரி அந்தக்காலத்தில இருந்து இதே ஊரில இருக்கிறவங்களுக்குதான் இது வந்த வழி தெரியும். மத்தவங்க எல்லாம் உங்களை மாதிரிதான் அதைப் பத்தி ஒண்ணும் தெரியாம பழக்கம் வச்சிப்பாங்க. இப்ப பொண்ணு குடுக்கிற எடத்தில கூட இதையெல்லாம் மறைச்சிதான் கல்யாணம் பண்ணுவாங்க." 

"கில்லாடிப்பொம்பளதான் அது" 

"ஐயையோ...இப்படியாப்பட்ட பொம்பளையா அது? என்கிட்ட மவனுக்குப் பொண்ணு இருந்தா சொல்லுன்னுச்சே! நல்லவேள, அது லட்சணம் இப்பயாச்சும் தெரிஞ்சிதே! வம்பை வெல கொடுத்து வாங்க இருந்தேனே?" 

கோமதி படபடவென பொரிந்தாள்.  

"அதானே? இனிமே சீட்டு விவகாரத்திலிருந்து வெலகிடவேண்டியதுதான்." கோகிலாவும் பதறினாள். 

"எல்லாம் காலக்கொடுமை! மஞ்சள் பூசி நெத்தி நெறய  குங்குமப்பொட்டு வச்சுகிட்டு என்னமா குடும்பப்பொம்பள மாதிரி நடிக்குது?" 

"அதைதான் சொல்வா, ஒய்யாரக்கொண்டையாம்,தாழம்பூவாம்,  உள்ள இருக்குமாம் ஈரும் பேனும்னு!" மாமி தன் பங்குக்கு சொன்னாள். 

"இந்த கிருஷ்ணவேணி இன்னைக்கு இல்ல...அன்னைக்கே காசுல குறி. சாமர்த்தியக்காரி. மவராசி, தெருவுல ஒரு சாணி கெடக்க வுடமாட்டா. பொறுக்கிட்டு வந்து வறட்டி தட்டி வித்திடுவா. சுள்ளி பொறுக்குவா. முள்ளு வெட்டி அடுப்பெரிப்பா. என் வூட்டுல வீணாக்கெடக்கிற தென்ன மட்டையை வாங்கிட்டுப் போயி வெளக்குமாறு கிழிச்சி எனக்கே வித்திடுவான்னா பாரேன்! நாம தெருவுல வீசுறதை எல்லாம் அவ காசாக்கிடுவா. அத்தன சாமர்த்தியம். ஓய்வு ஒழிச்சல்னு ஒரு நிமிஷம் ஒக்காரமாட்டா." 

"அப்படியெல்லாம் கஷ்டப்பட்டுதான் இவ்வளவு சொத்து சேத்துதா?" 

"அதுமட்டுமில்லடி, இருந்த அத்தனூண்டு எடத்திலயே காய்கறித்தோட்டம் போட்டா. அவ கைராசியா இல்ல தெருவுல கெடக்கிற ஆட்டாம்பிழுக்கையைக்கூட விடாம பொறுக்கி உரமா போட்டதாலயா தெரியல...என்னமா வெளஞ்சிது தெரியுமா? அத்தனையும் காசாக்கினா. அப்புறம் கொஞ்சங்கொஞ்சமா பொடவ யாவாரம், சீட்டுப்புடிக்கிறதுன்னு ஆரம்பிச்சா...இன்னைக்கு வரைக்கும் விடாம நடத்துறாளே, நமக்கு யாருக்காச்சும் அந்த சாமர்த்தியம் வருமா?" 

கொத்தமங்கலத்தம்மா கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டாள். இப்போது எவரும் குறுக்கிடவில்லை. அனைவருமே மலைத்துப்போய் அமர்ந்திருப்பது புரிந்தது. கொத்தமங்கலத்தாம்மாவே தொடர்ந்தாள். 

"அப்புறமும் அவ ஓயலை. சொசைட்டியில மாடு வாங்கி பால் யாவாரம் செஞ்சா. அந்தாளோட மொத்தக் கடனையும் மூணே வருஷத்தில அடைச்சான்னா நம்புவியா நீ? அந்தளவோடயும் நிக்கலயே!  எடம் வாங்கினா, வீடு கட்டினா, மாடி கட்டினா, புள்ளங்கள கான்வென்ட் அனுப்பி படிக்கவச்சா. பரந்தாமன் இன்னைக்கு காரில போறாருன்னா அது அத்தனையும் இவளாலதான். ஆனா ஒரு விஷயத்துல அவளப் பாராட்டணும்டி, ஒரு தகிடுதத்தம் கெடயாது அவகிட்ட. கையும் சுத்தம், வாயும் சுத்தம்!'' 

"அப்புறம் ஏன் பொண்ணை டீச்சராகிட்டு ஒருத்தனை எஞ்சினியராக்கிட்டு ஒருத்தனுக்கு மட்டும் கடை வச்சிக் கொடுத்திட்டுது?" 

"அதுக்கென்னடி பண்றது? அவன் தலையெழுத்து! படிப்பு ஏறல. பத்தாவதில பெயிலாயிட்டான், பள்ளிக்கூடம் போமாட்டேனுட்டான். பாத்தா... அவனுக்கொரு மளியக்கடை வச்சிக்கொடுத்திட்டா. பய பிரமாதமா யாவாரம் பண்றானாமே! எல்லா அவ கொடுத்த ட்ரெயினிங்குதான். 

அந்தம்மா சொல்லி முடித்ததும் பெரும் நிசப்தம். கொஞ்ச நேரம் கழித்து மாமிதான் சொன்னாள். 

"கொத்தமங்கலத்தாமா, நான் கூட நீங்க சொல்ல ஆரம்பிக்கும்போது அவள என்னமோன்னு நெனைச்சேன். அவளை நாமெல்லாம் கையெடுத்துக்கும்பிடணும். சரிஞ்சு நின்ன ஒரு குடும்பத்தையே ஒருத்தி தன் உழைப்பால நிமிர்த்தி இருக்கான்னா அவளை என்னன்னு சொல்றது?” 

கிருஷ்ணவேணியைப் பற்றிய மாயையிலிருந்து ஒவ்வொருவராய் விடுபடத்தொடங்கியிருந்தனர். 

"மாமி சொல்றது சரிதான். பல குடும்பப்பொம்பளைகளே குடும்பத்தைப் பத்திக் கவலப்படாம ஆடம்பரமா செலவு செஞ்சு வாழும்போது எங்கேயோ இருந்து வந்த ஒருத்தி தன்னைக் காப்பாத்தினவன் குடும்பத்துக்காக காலமெல்லாம் உழைக்கிறானா அவ உண்மையிலேயே தெய்வம்தான்." 

"கொத்தமங்கலத்தம்மா! எங்ககிட்ட சொன்னது எங்களோடயே இருக்கட்டும். வேற யாருகிட்டயும் சொல்லாதீங்க. அந்த உத்தமிக்கு நாம செய்யற மரியாதை அதான்." 

கொத்தமங்கலத்தமாவுக்கு என்னவோ போலாயிருக்கவேண்டும். "அட, சொல்லணும்னா சொன்னேன்? ஏதோ பேச்சு வந்திச்சு, அப்படியே சொல்லிட்டேன். இதப்போய் வேற யார்கிட்டயாவது சொல்லுவேனா?" 

"சரி, இவ்வளவு நல்லவங்க, ஏன் தற்கொலை பண்ணிக்கப்போனாங்களாம்?" 

இதுவரை அமைதியாய் இருந்த தாவணிப்பெண் முதன்முறையாய் வாய்திறந்தாள்.

"யாருக்குத் தெரியும்? அவதான் என்ன கேட்டாலும் வாயே தொறக்கமாட்டளே?" கொத்தமங்கலத்தம்மா ஒரு கேள்வியுடன் அவ்விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தாள். 

ஆனால் வேனை ஓட்டிக்கொண்டிருந்த குமார் மனதுக்குள் சொன்னான். 

'எனக்குத் தெரியும். அவ புருஷன் ஒரு குடிகாரனாவும், சந்தேகப்பிராணியாவும் இருந்திருக்கணும், என் அப்பா மாதிரி! கர்ப்பிணின்னும் பாக்காம ராவும் பகலும் அவள அடிச்சி, உதைச்சி, இம்சைப்படுத்தியிருக்கணும். போக்கிடம் இல்லாத அவ, சித்திரவதை தாங்காம தற்கொல பண்ணிக்கிற எண்ணத்தோட ஓடிப்போயிருக்கணும், என் அம்மா மாதிரி!' 

இனி அம்மாவைத் தவறாக நினைக்கக்கூடாது என்ற எண்ணம் அவனுள் வலுப்பெற்றது. வீட்டுக்குப் போனதும் பாட்டியிடம் அம்மாவின் பெயர் என்ன என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்ளும் ஆவல் உந்த, சூழல் மறந்து சீட்டி அடித்தபடியே வாகனத்தைச் செலுத்த, அவன் நாணும் வகையில் பின்னாலிருந்த பெண்கள் களுக்கென்று சிரித்தனர்.
 
படம் உதவி: இணையம்.

18 April 2013

வெறுமையின் சில துளிகள்

 

 

சாத்தியக்கூறுகள் ஏதுமற்று
 சட்டென்று  வெளியேகிய சமரசங்களின் சாடலால்
திகைப்புற்றுக் கிடக்கிறது மனம்.

ஆடல் முடிந்த அரங்கு போல...
அறுப்பு முடிந்த வயல்களைப்போல...
பறவை பிரிந்த கூடு போல...
திருவிழாவுக்குப் பிறகான கடைத்தெரு போல...
இன்னபிற வெற்றுக்களங்களையுமொத்து
வெறிச்சோடிக் கிடக்கும் அதன் வேரில்
வெந்நீர் ஊற்றி வளர்க்கிறது தனிமை!

சித்திரை மாத வெயிலது  உச்சிப்பொழுதுகளில்
வேட்கை மிகுதியோடு தன் வறண்ட நாவை
புழுதி பறக்கும் தெருக்களில் துழாவித் துழாவி
சொச்சமிருக்கும்  ஈரத்தையுறிஞ்சியும்
தன் தாகந்தணியாது திரிவதைப்போல்
நா நீட்டியபடியே அலைகிறது வெறுமை.

இடி கொணரும் கோடைமழையென
எதிர்பாராது அணைத்தூறும் சில
அன்னியோன்னியத் தருணங்களின் தயவால்
வெறுமையின் வேர்முடிச்சுகளினின்று
மெல்லக் கிளைக்கலாம்
வாழ்வின் சுவாரசியத் துளிர்கள்.

அல்லது வெறுமனே திரிந்திருக்கலாம்
வெட்டவெளியில் சில சுவாசத்துளிகள். 

15 April 2013

தனித்து விடப்பட்ட நட்பொன்று....

 
 
காரணம் சொல்லப்படாமல்
கழற்றிவிடப்படும் நட்பு பற்றி
என்ன நினைக்கிறீர்கள்?
ஒரு அகோரவிபத்துக்கொப்பான
அதிரடிப் பின்விளைவுகளைத்தாங்கி,
அகாலமரணமடைந்தவர்களின்
ஆவியைப் போன்றே
அலையத்தொடங்கிவிடுகிறது அது.

திருவிழாவில் தொலைந்துவிட்ட குழந்தைபோல
அழுது திரிந்துகொண்டிருந்த அதற்கு,
அப்படி அந்நியப்படுத்தப்பட்டதற்கான காரணம்
எதுவும் அறிவிக்கப்படவில்லை,
அந்தர்தியானமான நட்பின் தரப்பிலிருந்து
யாதொரு கருணையும் காட்டப்படவில்லை.

அதன் பழைய நண்பர்கள் என அறியப்பட்டவர்கள்
தற்போது புதிய நண்பர்களாய்
இன்னொரு வட்டத்துக்குள் இணைந்திருக்கலாம்.

பத்மவியூகத்தைப் போன்றே நட்பின் வியூகங்களும்
நுழைதற்கு வெகு எளிது.
 அவ்வியூகமுடைத்து வெளியேறுவதென்பது
அசாதாரண நிகழ்வென்று அறிந்தபோதும்
அவ்வித்தை அவர்களுக்கு கைவரப்பெற்றிருப்பதால்
 இன்னும்பலவற்றில்
இணைந்துவெளியேறக்கூடும்.

பழகிய நட்புகளையிழந்து
பாழ்வெளியில் தனித்துவிடப்பட்ட நிலையில்
தன்னைத்தானே நொந்துகொண்ட நட்பு,
கொஞ்சங்கொஞ்சமாய் சுயமுணர்ந்துகொண்டது.

இப்போதெல்லாம்…….
நேர்ந்துவிடப்பட்ட கிடாவினைப்போன்று
இலேசான மமதையுடன்
இலக்கின்றி இருப்பின்றி அலைவதிலேயே
இன்புறத் தொடங்கிவிட்டது அது!
******************************
(பி.கு. இது ஒரு மீள்பதிவு.) 

13 April 2013

கலக்கப்போறது ஆரு?


 
 

(முன்குறிப்பு: இது என்னுடைய முதல் நகைச்சுவை முயற்சி. உனக்கேன் இந்த வேண்டாத வேலை என்று கேட்கும் நண்பர்கள் இந்தமுறை மட்டும் மன்னித்துப் பொறுத்தருளவும். முக்கியமாய் கொங்குத்தமிழ் அன்பர்கள்! :D) 

அல்லாருக்கும் வணக்கமுங்க. இன்னிக்கு என்ற ஊட்டுல ஒரு விசேசமுங்க. அது என்னதுன்னு நீங்க ஓசிக்கங்காட்டியும் நானே சொல்லிப்போடறேனுங்க. என்ற மாமனுக்கும் எனக்கும் கண்ணாலமாயி முழுசா ஒரு வருசம் ஓடியேப் போச்சுங்க. எங்க போச்சி, ஏன் போச்சின்னு எல்லாம் கேக்கப்படாதுங்க. அப்புறம் எனக்கு கெட்ட கோவம் வந்துடுங்க. அதென்னது நல்ல கோவம், கெட்ட கோவமுன்னு அதுக்கும் அகராதி கேக்கப்படாதுங்க. சமாச்சாரத்தக் கேட்டுப்போட்டு செரி, செரின்னு தலையாட்டிப்போட்டுப் போவோணும், என்ற மாமனாட்டமா.

செரியம்மிணி, உன்ற ஊட்டு சமாச்சாரத்த உன்ற ஊட்டோட வச்சிக்காம சபையில என்னத்துக்கு சத்தம்போட்டு சொல்லவந்தேன்னு கேப்பீக. என்னது கேக்கமாட்டீங்களா? அட, கேப்பீகன்னு சொல்லுறேனில்லகேட்டுப்போடுங்க. என்ற வெசனத்தை உங்களவிட்டா வேற ஆருட்ட போய் சொல்லமுடியும்?

என்ற மாமனுக்கு எம்மேல நெம்ப இஸ்டமுங்க. என்ற கையால எது குடுத்தாலும் இனிக்குதும்பாருங்கஎன்னது? பாவக்காப் பொரியலா? அதையுந்தேன் இனிக்குதுன்னு சொல்லிப்போட்டாருங்க. இத்தனைக்கும் பலநா பதமா சோறு வடிச்சதில்லீங். சோறு கொழைஞ்சிபோனா, கூழா நெனைச்சிக் குடிச்சிபோட்டு கம்முனு போயிடுவாருங்க. என்ற மாமனுக்கு எம்மேல எம்புட்டு இஸ்டமுன்னு இப்பவாச்சும் தெரிஞ்சிருப்பீகளே..

இம்புட்டு ஆச வச்சிருக்கிற மாமனுக்கு நெசமாவே என்னமாச்சும் இனிப்பு பண்ணித் திங்கக் குடுக்கோணும்னு ஆசைங்க எனக்கு. இன்னிக்கு கண்ணால நாளா வேறப் போயிட்டுதுங்களா? மளார்னு சோலிய முடிச்சிப்போட்டு பொழுதோட வந்துடுறேங்கண்ணு, பொறவு ஒட்டுக்கா சினிமா பாக்கப்போவலாம்னு சொல்லிப்போட்டு என்ற மாமன் களத்துமேட்டுக்கு போயிருக்காருங்க. 

அவரு வாரதுக்குள்ள எதாச்சி புதுசா பலகாரம் பண்ணிப்போட்டு மாமனை அசத்திப்போடோணும்னு அரக்கப்பரக்க, அப்பத்தாகிட்ட போனு போட்டுக் கேட்டா, ஒப்புட்டு, ஒறப்படை, புக்கை, பணியாரமுன்னு எல்லாம் பழைய பலகாரமா சொல்லுதுங்க. அதுல பாருங்க, பணியாரங்கவும் குபுக்குனு சிரிச்சிப்போட்டேனுங்க 

குண்டப்பன் குழியில வுழுந்தானாம், எழுந்தானாம், அல்லார் வாயிலயும் வுழுந்தானாம் அவன் எவன்னு அப்பத்தா போட்ட விடுகதை அப்பத்தானா நாவகத்துக்கு வரோணும்? அப்பத்தாவுக்கு பொசுக்குனு கோவம் வந்து விசுக்குனு போனை வச்சிப்போட்டுது. அட, கெரவத்தேன்னு அத வுட்டுப்போட்டு அடுத்தத ஓசிச்சேனுங்க.

 நம்ம மெத்தவூட்டக்கா இல்ல, மெத்தவூட்டக்கா…. நல்லா படிச்சவுக, பதவிசானவுக, பாசக்காரவுக. அவிக நான் கேக்கு பண்ணிப்போடுறதுல கில்லாடியாக்கும்னு சொல்லிப்போட்டது நாவகத்துக்கு வந்துச்சி. ஒருக்கா கிறிஸ்மஸ் அப்போ அந்தக்கா குடுத்த கேக்கை என்ற மாமன் ஒட்டுக்கா தின்னதும் நாவகத்துக்கு வந்திடுச்சிங்க.

 செரி மாமனுக்குப் புடிச்ச  கேக்கையே இன்னிக்குப்  பண்ணிப்போடலாம்னு மெத்தவூட்டக்காட்ட வழிமொறயக் கேட்டேனுங்க. அதுக்கென்ன கண்ணு, சுளுவா செஞ்சிபோடலாமுன்னு சொல்லிப்போட்டு என்ற வயித்துல பாலை வார்த்தாக.

 நம்ம நேரம் கேட்ட நேரமாப் போச்சுதுன்னா, முந்திப் போற சனியனையும் முக்குல நிக்கச் சொல்லி வழித்தொணைக்கி அழைக்கச் சொல்லுமாம்.

அப்பிடித்தாங்க, மெத்தவூட்டக்கா விரிச்ச வலையில எண்ணெயில வுழுந்த பணியாரமாட்டம் நானும் தொபுக்கடீர்னு வுழுந்திட்டேனுங்க. சாமானெல்லாம் வாங்கிப்போட்ட பொறவு, கண்ணு எனக்கொரு அவசர சோலி வந்துபோட்டுதுன்னு சொல்லிப்போட்டு, அல்லாத்தையும் காயிதத்துல எழுதிக் குடுத்துபோட்டு, ஒத்தாசைக்கில்லாம, ஒறம்பரயப் பாக்கோணும்னு ஊருக்குப் போயிட்டாக.

 நானும் காலைல புடிச்சி காயிதத்தையே மொறச்சி மொறச்சி பாத்துட்டு நிக்கிறேனாக்கும். பொறவு என்ன பண்ண? நீங்களே படிச்சி ஒரு வழி சொல்லிப்போட்டுப் போங்க. 

எடுத்ததுமே கோளாறுதேன் 

1.   முதலில் அவனை 200 டிகிரிக்கு சூடு செய்யவும். 

எவனைன்னு சொல்லிப்போடணுமல்லோ 

2.   இரண்டு முட்டைகளை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றவும்.
 
பாத்திரமுன்னா போசிதேன்னு தெரியும். எப்பிடியா? மெத்தவூட்டக்கா அப்பிடித்தானே சொல்லுவாக. செரின்னு முட்டைய ஒடைச்சி போசியில ஊத்திப்போட்டேன்.

3.   பீட்டரின் உதவியால் நன்றாக நுரைக்கக் கலக்கவும். 

அடுத்தவடியா மெத்தவூட்டக்காவோட மச்சானை நான் எங்கேனு போய்த்தேடுவேன்? அவரு என்னத்துக்கா? அவரு பேருதானுங்களே பீட்டரு. முட்டையைக் கலக்குறதுக்கும் ஒரு தனித்தெறமை வேணுமாக்கும். அதான் அந்தக்கா ஊட்டு கேக்கு மெத்து மெத்துன்னு பஞ்சாட்டமா இருக்கு.

4.   அப்புறம் பட்டரையும் சேர்த்துக்கொள்ளவும். 

அடக்கெரகமேபீட்டரோட பட்டரையும் சேக்கணுமாமேநான் எந்தப் பட்டரைக் கண்டேன்எனக்குத் தெரிஞ்சதெல்லாம் திருவிளையாடல் படத்துல வார பாணபட்டரு மட்டுந்தானுங்க. அவரையும் எங்கேனு தேடிப்போவேனுங்க?

5.   சுகரை இப்போது சேர்க்கவும். 

ஆருங்க? அந்த பாகவதம் சொன்ன சுகருங்களா? அல்லாத்துக்கும் முன்னால அவன்னு ஒருத்தனை சொல்லிப்போட்டாங்களேஅவனாருன்னு தெரியலீங்க. அவனையும் கண்டுபிடிக்கோணும். ஒரே ஒளப்பலாப் போச்சுதுங்க 

போச்சாது போன்னு நானே நொரைக்கக் கலக்கலாம்னு கலக்குனா, நொரையே வாரலங்க. கலக்கோ கலக்குன்னு கலக்குன வெசையில போசி கவுந்து முட்டையெல்லாம் விசிறி வூடே கந்தர கோலமாயிப்போச்சிதுங்க. அதுக்குதேன் மெத்தவூட்டக்கா பீட்டரை ஒத்தாசைக்கு வச்சிக்கிட்டு முட்டையைக் கலக்குன்னு சொல்லிப்போட்டுருக்கு. அச்சாணியமாப் போச்சேஇது ஆவுற காரியமில்லன்னு கேக்கு ஆசைய அத்துவுட்டுட்டேனுங்க. 

பொழுதும் சாஞ்சிபோச்சி. என்ற மாமன் வார நேரமாயிப் போட்டுதுங்க. கேக்கு பண்ணிப்போடோணும்னு ஆசைப்பட்டு அல்லாம் கோக்குமாக்காயிப் போச்சுது 

என்ற மேலெல்லாம் முட்ட அபிசேகமாயிப்போச்சுதல்லா? மறுக்கா தலைக்கு வாத்துட்டுப் போயிஅன்னாடம் வடிக்கிற சோத்தையாச்சும் ஒழுங்கா வடிச்சிப்போடோணும் ரவைக்குசரி, நான் வாரேனுங்கஇனி ஆராச்சும் கேக்கு பண்ணிப்போடச் சொல்லிக்குடுத்தா…. என்ன பண்ணோணும்? 

அல்லாத்தையும் கலக்குறதுக்கு ஆராரு வேணுமுன்னு முந்தியே கேட்டுப்போடோணும்சொல்லிப்போட்டேன். ஆமா...
********************************************************************************
படம் உதவி: இணையம்