15 April 2013

தனித்து விடப்பட்ட நட்பொன்று....

 
 
காரணம் சொல்லப்படாமல்
கழற்றிவிடப்படும் நட்பு பற்றி
என்ன நினைக்கிறீர்கள்?
ஒரு அகோரவிபத்துக்கொப்பான
அதிரடிப் பின்விளைவுகளைத்தாங்கி,
அகாலமரணமடைந்தவர்களின்
ஆவியைப் போன்றே
அலையத்தொடங்கிவிடுகிறது அது.

திருவிழாவில் தொலைந்துவிட்ட குழந்தைபோல
அழுது திரிந்துகொண்டிருந்த அதற்கு,
அப்படி அந்நியப்படுத்தப்பட்டதற்கான காரணம்
எதுவும் அறிவிக்கப்படவில்லை,
அந்தர்தியானமான நட்பின் தரப்பிலிருந்து
யாதொரு கருணையும் காட்டப்படவில்லை.

அதன் பழைய நண்பர்கள் என அறியப்பட்டவர்கள்
தற்போது புதிய நண்பர்களாய்
இன்னொரு வட்டத்துக்குள் இணைந்திருக்கலாம்.

பத்மவியூகத்தைப் போன்றே நட்பின் வியூகங்களும்
நுழைதற்கு வெகு எளிது.
 அவ்வியூகமுடைத்து வெளியேறுவதென்பது
அசாதாரண நிகழ்வென்று அறிந்தபோதும்
அவ்வித்தை அவர்களுக்கு கைவரப்பெற்றிருப்பதால்
 இன்னும்பலவற்றில்
இணைந்துவெளியேறக்கூடும்.

பழகிய நட்புகளையிழந்து
பாழ்வெளியில் தனித்துவிடப்பட்ட நிலையில்
தன்னைத்தானே நொந்துகொண்ட நட்பு,
கொஞ்சங்கொஞ்சமாய் சுயமுணர்ந்துகொண்டது.

இப்போதெல்லாம்…….
நேர்ந்துவிடப்பட்ட கிடாவினைப்போன்று
இலேசான மமதையுடன்
இலக்கின்றி இருப்பின்றி அலைவதிலேயே
இன்புறத் தொடங்கிவிட்டது அது!
******************************
(பி.கு. இது ஒரு மீள்பதிவு.) 

53 comments:

 1. கவிதை மிக அருமை

  ReplyDelete
 2. நல்ல வரிகள்... ஆனால்... கழற்றி விடப்படும் நட்பு... நட்பு அல்ல...

  ReplyDelete
 3. மீள் பதிவாக இருப்பினும் அருமையான பகிர்வுங்க கீதா. முன்பு படித்தபோது நான் அடைந்த அதே உணர்வுகளை இப்போதும் தரத் தவறவில்லை- கவிதை சொன்னதைப் போல தொலைத்த நட்புகள் சில என்னிடமும் உண்டு என்பதால்!

  ReplyDelete
 4. நட்பைப்பற்றி மிகவும் அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.

  //பழகிய நட்பு களையிழந்து
  பாழ்வெளியில் தனித்து விடப்பட்ட நிலையில்
  தன்னைத்தானே நொந்துகொண்ட நட்பு//

  ;))))

  பாராட்டுக்கள். வாழ்த்துகள். பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்>

  ReplyDelete
 5. இலக்கின்றி இருப்பின்றி அலைவதிலேயே
  இன்புறத் தொடங்கிவிட்டது அது!//சில நேரங்களில் எல்லோருமே இப்படித்தான் இருப்பதுண்டு

  ReplyDelete
 6. கடைசி நான்கு வரிகள் உண்மை ஒரு விரக்தி நிலைமையில் நடக்கும் விஷயம் அருமையான கவிதை சிலநேரங்களில் சில மனிதர்கள் இப்படி உங்கள் கவிதை உறவுக்கும் பொருந்தும்

  ReplyDelete
 7. அசத்தலான ஆரம்பத்துடன்
  "காரணம் சொல்லப்படாமல்
  கழற்றிவிடப்படும் நட்பு பற்றி
  என்ன நினைக்கிறீர்கள்?"
  அருமையான கவிதை

  ReplyDelete
 8. //காரணம் சொல்லப்படாமல்
  கழற்றிவிடப்படும் நட்பு பற்றி// - அது நட்பே இல்லை தோழி, நட்பு என்று சாயம் பூசி நம்மை ஏமாற்றிய ஒன்று...

  //பழகிய நட்புகளையிழந்து
  பாழ்வெளியில் தனித்துவிடப்பட்ட நிலையில்
  தன்னைத்தானே நொந்துகொண்ட நட்பு,
  கொஞ்சங்கொஞ்சமாய் சுயமுணர்ந்துகொண்டது.// அருமையான வரிகள்...பலபேருக்கு இதனோடு தொடர்புபடுத்திப் பார்க்க முடியும் என்று நினைக்கிறேன்..

  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. இப்படியானதொரு சுழலில் மன உளைச்சலோடு அலைந்து கொண்டிருக்கையில் உங்க கவிதையொரு ஒத்தடம் தோழி.

  பட்ட மரத்தை வெட்டி விடுவது போல்...
  கெட்ட பாலைக் கொட்டி விடுவது போல்...
  மாத்திரைக்கு காலாவதி நேரம் போல்
  மனித உறவுக்கும் நட்புக்கும் கூட...?!

  வீட்டு வரவு செலவுக் கணக்கு மாதிரி தானா
  உறவும் நட்பும்...?!

  நீ தோளில் தட்டினால் என்ன;
  தலையில் தட்டினால் என்ன...
  நங்கூரமிட்ட மனசு நகர மறுக்கிறதே...!

  நிலையங்களில் பெட்டிகளைக்
  கோர்ப்பதும் கழற்றுவதுமாக இரயில் எஞ்சின்கள்
  எந்திரத் தனமாய்...
  நாமும்...?

  புதினத்தின் இடைச் செருகலாய்
  சில பாத்திரங்கள்
  நிலைப்பதில்லை கடைசி அத்தியாயம் வரை.
  அன்பு ஆவியாகுமா ஆல்கஹால் போல...?!

  எத்தனை எழுதியும் ஆற்றாமை அடங்கவில்லையே தோழி....

  ReplyDelete
 10. பழகிய நட்புகளையிழந்து
  பாழ்வெளியில் தனித்துவிடப்பட்ட நிலையில்
  தன்னைத்தானே நொந்துகொண்ட நட்பு,//

  நட்பு அருமையானது, நட்பை இழப்பது வெகு கொடுமை.
  காரணம் தேடி நம்மை நொந்து கொள்வது அதைவிட கொடுமை.
  நல்ல கவிதை கீதமஞ்சரி.

  ReplyDelete
 11. மீள் பதிவு என்றாலும் அருமையான பகிர்வு.....

  நல்ல கவிதை சகோ.

  ReplyDelete
 12. மிக அருமையான கவிதை.

  ReplyDelete
 13. let it go Geetha!not worth it.

  Happy New Year!

  ReplyDelete
 14. “நேர்ந்துவிடப்பட்ட கிடாவினைப்போன்று இலேசான மமதையுடன் இலக்கின்றி இருப்பின்றி அலைவதிலே” இனிமை காண முற்படுவது மிகவும் ஆபத்தானது என்று அதற்குச் சொல்லி வையுங்களேன், ப்ளீஸ்!

  ReplyDelete
 15. பத்மவியூகத்தைப் போன்றே நட்பின் வியூகங்களும்
  நுழைதற்கு வெகு எளிது.

  முழுக் கவிதையும் என்னை புரட்டிப் போட்டது. இந்த அவஸ்தைகள் எல்லோரிடமும் வலுவான கவிதையாய் உங்களால் ஆக்க முடிந்திருக்கிறது. மிக அருமை.

  ReplyDelete
 16. வணக்கம் தோழி!

  வந்ததும் பார்த்ததும்
  உணர்ந்ததும் வலிப்பதுமான
  உணர்வுகளோடு...

  மிடறுக்குள் அடம்பிடிக்கும்
  வார்த்தைகளை மென்றுகொண்டு
  மௌனத்தை மட்டும்....

  மதிப்பும், மரியாதையுடனும்
  மனதாரச் சொல்கின்றேன்...

  மிகமிக அருமையான உணர்வோட்டமான அழகிய வலிமிகும் கவிதை. வாழ்த்துக்கள் பல!!!

  ReplyDelete
 17. @Avargal Unmaigal

  வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி அவர்கள் உண்மைகள்.

  ReplyDelete
 18. @பால கணேஷ்

  வருகைக்கும் கவிதையின் கருத்தோடு ஒட்டியப் பின்னூட்டத்துக்கும் மிகவும் நன்றி கணேஷ்.

  ReplyDelete
 19. @வை.கோபாலகிருஷ்ணன்

  தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி சார்.

  ReplyDelete
 20. @திண்டுக்கல் தனபாலன்

  உண்மைதான் தனபாலன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 21. @கவியாழி கண்ணதாசன்

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி ஐயா.

  ReplyDelete
 22. @poovizi

  அழகான கண்ணோட்டம். நன்றி பூவிழி.

  ReplyDelete
 23. @Muruganandan M.K.

  தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி டாக்டர்.

  ReplyDelete
 24. @கிரேஸ்

  உண்மை கிரேஸ். தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி.

  ReplyDelete
 25. @நிலாமகள்

  என்ன சொல்வதென்று தெரியாமல் விக்கித்து நிற்கிறேன் தோழி. மனக்காயங்களை ஆற்றும் மாமருந்தாய் காலம் அமைந்தாலும் சில கவிதைகளும் சிறுமருந்தாய் சிலநேரம் செயல்படக்கூடும் போலும்.

  ஆற்றாமையில் வடித்த வரிகளில் தெறிக்கும் ஆதங்கம் உணர்த்துகிறது ஆறா ரணத்தை. விரைவில் காயம் ஆறும் என்று நம்புவோம்.

  ReplyDelete
 26. @கோமதி அரசு

  ஆழ்ந்த அலசல். தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி மேடம்.

  ReplyDelete
 27. @வெங்கட் நாகராஜ்

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்.

  ReplyDelete
 28. @ராமலக்ஷ்மி

  தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 29. @மணிமேகலா

  ஒற்றையாய்ப் புலம்பாமல் ஊரோடு புலம்புவதிலும் ஒரு லாபம் உண்டு பாருங்கள். அட நமக்கு மட்டுமில்லையா என்று...அதான் இப்படி.... :)

  நன்றி மணிமேகலா...

  தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 30. @Chellappa Yagyaswamy

  சொல்லிவிடுகிறேன் சார். தங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி.

  ReplyDelete
 31. @ரிஷபன்

  தங்களிடமிருந்து கிடைக்கும் இப்பாராட்டு கண்டு மனம் மகிழ்கிறது. நன்றி ரிஷபன் சார்.

  ReplyDelete
 32. @இளமதி

  நெகிழவைத்தப் பின்னூட்டம். வருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி இளமதி.

  ReplyDelete
 33. வணக்கம் கீதாக்கா, எப்படி இருக்கேங்க? சமீபமாய் வலைத்தளம் விட்டு ஒதுங்கியே இருந்ததில் உங்களைப்போன்றவர்களின் பதிவை தவறவிட்டு விட்டேன், மீண்டும் உங்களோடு இணைந்ததில் எனக்கு மகிழ்ச்சியே, தனித்து விடப்பட்ட நட்பு எத்தனை துயருமென்று வரிகளில் காட்டத்தவரவில்லை..முடிவும் தனக்கென நட்பாய் இலக்கின்றி, இருப்பின்றி அலைவதில் இன்புறுவதைச்சொல்லி எதார்த்ததையும் வலியை வழியாய் மாற்றிக்கொண்டவையென தெரிகிறது..

  ReplyDelete


 34. எடுத்துக்காட்டு அனைத்து உவமைகளும் நன்று

  ReplyDelete
 35. Anonymous17/4/13 16:33

  ''..ஒரு அகோரவிபத்துக்கொப்பான
  அதிரடிப் பின்விளைவுகளைத்தாங்கி,
  அகாலமரணமடைந்தவர்களின்
  ஆவியைப் போன்றே
  அலையத்தொடங்கிவிடுகிறது அது...''
  இன்னும் பல.
  மிக அனுபவ வரிகள:
  வலி புரிகிறது.
  இதை நானும் அனுபவித்துள்ளேன்.
  இறுதி வரிகள் சூப்பர்...சூப்பர் arumai.
  Vetha. Elangathilakam.

  ReplyDelete
 36. நட்பு பற்றிய சில இலக்கணங்களை மீறி இருக்கிறது உங்கள் நட்பு பற்றிய கணிப்பு. திண்டுக்கல் தனபாலனுடன் உடன் படுகிறேன். “ உடுக்கை இழந்தவன் கை போல் இடுக்கண் களைவதாம் நட்பு” கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பு படித்திருப்பீர்களே.ஒருவருக்கொருவர் அறிதலை நட்பு என்று எண்ணினால் நீங்கள் சொல்லும் எல்லாம் மிகச் சரி. வித்தியாசக் கோணத்தில் சிந்தித்து எழுதி இருக்கிறீர்கள். கவிதை சொன்ன விதம் அருமை. வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

  ReplyDelete

 37. என் பதிவுகள் சிலவற்றுக்கு நீங்கள் அளித்துள்ள பின்னூட்டங்கள் எனக்கு உற்சாகத்தையும் பெருமையையு ம் அளிக்கிறது . உங்கள் மின் அஞ்சல் முகவரி இல்லாததால் இதன் மூலம் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நேரம் இருக்கும்போது நீங்கள் படிக்க நான் விரும்பும் பதிவுகளை முகவரி கொடுத்து ஓக்கே சொன்னால் அனுப்புகிறேன். மீண்டும் நன்றி.

  ReplyDelete
 38. கவிதை அருமை கீதமஞ்சரி!

  காரணம் இல்லாமல் கழற்றி விடும் நட்பின் துரோகமும் கழற்றிவிடப்பட்ட நட்பு அனுபவிக்கும் வலியும் இன்றைய நாட்களில் நிறைய‌ பேரிடம் பார்க்க முடிகிற‌து ! ஒருத்தருக்கு புனிதமாக்த்தோன்றிய நட்பு இன்னொருத்தருக்கு ரயில் பயண உறவு போல, பயணம் முடிந்ததும் தூக்கி எறியும் சாதாரண உற‌வாகி விடுகிறது! வலியை ஒதுக்கிப் பின்னுக்குத் தள்ள மனத்திண்மை வேண்டும்! கடினம் தான் என்றாலும் !

  ReplyDelete
 39. அந்தர்தியானமான நட்பு
  அகோரவிபத்தின் துன்பத்தைப் பிரதிபலிக்கிறது ..

  ReplyDelete
 40. @ரேவா

  நலமே ரேவா. மறுபடியும் உங்களை இங்கு பார்ப்பதில் மகிழ்ச்சி. கவிதையின் கருவை ஆழமாய் வெளிப்படுத்தும் வார்த்தைக் கோர்ப்பில் உங்களை விஞ்ச இயலாது எனினும் உங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சியே எனக்கு. நன்றி ரேவா.

  ReplyDelete
 41. @புலவர் இராமாநுசம்

  தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஐயா.

  ReplyDelete
 42. @kovaikkavi

  தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி தோழி.

  ReplyDelete
 43. @G.M Balasubramaniam

  நட்பின் இலக்கணம் ஒன்றே என்றாலும் அதுகுறித்த அனுபவங்கள் ஆளுக்கு ஆள் வேறுபடலாம் அல்லவா?

  தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி ஐயா.

  ReplyDelete
 44. @G.M Balasubramaniam

  தங்களுக்கு மின்னஞ்சல் முகவரி அனுப்பியுள்ளேன்.

  ReplyDelete
 45. @மனோ சாமிநாதன்

  மிகச்சரியாக சொன்னீர்கள் மேடம். நட்பின் பார்வையில் நானாவித அனுபவங்கள்! தங்கள் வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றி மேடம்.

  ReplyDelete
 46. @இராஜராஜேஸ்வரி

  தங்கள் வருகைக்கும் புரிதலுடனான பின்னூட்டத்துக்கும் மனமார்ந்த நன்றி மேடம்.

  ReplyDelete

 47. வணக்கம்!

  தமிழ்மணம் 7

  வருவதும் போவதும் வாழ்க்கைதன் நீதி!
  உருகுதல் ஏனோ உணா்!


  ReplyDelete
 48. ஆழமான அர்த்தம் கொண்ட
  படிப்பவர்கள் அனைவரையும் ஒருமுறை
  இழந்தவைகளை கணக்கெடுத்து
  மனம் கனக்கச் செய்து போகும்
  அற்புதமான கவிதை
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 49. @கி.பாரதிதாசன் கவிஞர்

  தங்கள் வருகைக்கும் இதமான மறுமொழிக்கும் மனமார்ந்த நன்றி ஐயா.

  ReplyDelete
 50. @Ramani S

  தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் ரசித்து இட்டப் பின்னூட்டத்துக்கும் உளமார்ந்த நன்றி ரமணி சார்.

  ReplyDelete
 51. //காரணம் சொல்லப்படாமல்
  கழற்றிவிடப்படும் நட்பு பற்றி
  என்ன நினைக்கிறீர்கள்?.. :)
  என்ன நினைப்பது!
  பதில் எல்லாமே உங்கள் கவிதையில் இருக்கிறதே. உங்கள் இந்த வரிகள் கவிதைக்கும் மேலே.

  ReplyDelete
 52. @இமா

  உற்சாகம் தரும் பின்னூட்டத்துக்கு மிகவும் நன்றி இமா.

  ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.