16 March 2022

பூச்சி வீடும் புல் தூக்கிக் குளவியும்

தோட்டத்துப் பிரதாபம் - 25

உடலளவில் திடமில்லாது வாய்ப்பேச்சில் வீரம் காட்டுபவர்களை ‘புல் தடுக்கி பயில்வான்’ என்று கேலியாகச் சொல்வதுண்டு. பெரும்பாலும் குழந்தைகளைச் செல்லமாகச் சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஆனால் இது என்ன, புல் தூக்கிக் குளவி? நீங்கள் எவரேனும் கேள்விப்பட்டிருக்கிறீர்களோ இல்லையோ தெரியவில்லை. ஆனால் எனக்குப் புதிய தகவல் இது.

படம் 1 - புல் தூக்கிக் குளவி 

வாயில் காய்ந்த புல் துண்டைக் கவ்விக் கொண்டு பறக்கும் இந்தக் குளவியைப் பாருங்கள். ஒரு குளவி எதற்காக புல்லைத் தூக்கிக்கொண்டு போகவேண்டும்? 

படம் 2 - பூச்சிகளின் வருகைக்கு முன் பூச்சி வீடு

முதலில் பூச்சி வீட்டைப் பற்றி சொல்லவேண்டும். வெகு நாளாகவே எனக்கு தோட்டத்தில் பூச்சி வீடு (insect house) வைக்கவேண்டும் என்று ஆசை. ஆஸ்திரேலியத் தேனீக்கள் பலவும் தனித்த வாழ்க்கை வாழ்பவை. ஐரோப்பியத் தேனீக்களைப் போல கூட்டுவாழ்க்கை வாழ்பவை அல்ல.  தேனீ இனத்தின் ஒவ்வொரு பெண் தேனீயும் கூடு கட்டி முட்டையிடக்கூடியது. அதற்கேற்ற இண்டு இடுக்குகள் இல்லாமற் போவதால் தேனீக்கள் அருகும் நிலை ஏற்படுகிறது என்றும் அதனால் பூச்செடிகளும் தேனீ விடுதிகளும் (bee hotel) அமைத்து தேனீக்களுக்கு வாழ்வாதாரங்களை உருவாக்கித்தர வேண்டும் என்றும் அறிந்தேன்.

படம் 3 - தோட்டத்து மூலையில் பூச்சி வீடு

சில மாதங்களுக்கு முன்புதான் அதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஒரு பூச்சி வீட்டை தோட்டத்தின் மூலையில் கட்டித்தொங்கவிட்டேன். ஐரோப்பியத் தேனீக்கள் அல்லாமல் நீல வரித் தேனீ (blue banded bee), இலைவெட்டுத் தேனீ (leaf cutter bee), முகமூடித் தேனீ (masked bee) என பல ஆஸ்திரேலியத் தேனீக்கள் தோட்டத்துக்கு வருகை புரிந்தாலும் பூச்சி வீட்டை எதுவுமே கண்டுகொள்ளவில்லை. எந்தத் தேனீயின் கண்ணிலாவது என் பூச்சி வீடு பட்டுவிடாதா என்று ஏக்கத்தோடு காத்திருந்தேன்.

படம் 4 - அறைகளைப் பார்வையிடும் புல் தூக்கிக் குளவி

ஒருநாள் ஏதோ ஒரு பூச்சி, பூச்சி வீட்டின் அறைகளை ஆராய்ந்துகொண்டிருந்தது. தேனீ என்று நினைத்து ஆர்வத்தோடு பார்த்த எனக்கு கொஞ்சம் ஏமாற்றம். அது ஒரு குளவி. சரி, சரி, பூச்சி வீடு என்று இருந்தால் தேனீயும் வரும், குளவியும் வரும். இதற்கெல்லாமா சஞ்சலப்படுவது? வந்தாரை வாழவைப்பதுதானே நமது பண்பாடு என்று மனதைத் தேற்றிக்கொண்டேன்.  

 
படம் 5 - கூடு கட்டத் தயாராகும் புல் தூக்கிக் குளவி

பூச்சி வீட்டின் (insect house) துளைகளை ஒவ்வொன்றாக உள்ளே நுழைந்து நுழைந்து பார்வையிட்டுக்கொண்டிருந்த அந்தக் கருப்புக் குளவியை முதலில் பார்த்தபோது அதன் சிறப்பு என்னவென்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. சற்று நேரத்தில் எங்கோ போய் எதையோ தூக்கிக்கொண்டு வந்தது. இதென்ன, பல்லி வால் போல இருக்கிறதே என்று பார்ப்பதற்குள் சட்டென்று ஒரு துளையின் உள்ளே அதை இழுத்துக்கொண்டு போய்விட்டது. பிறகு குளவி மட்டும் வெளியே வந்தது. மறுபடியும் எதையோ நீளமாகத் தூக்கிக்கொண்டு வந்தது. அதே துளைக்குள் போனது. சற்றுநேரத்தில் குளவி மட்டும் வெளியில் வந்தது.
படம் 6 - புல் தூக்கிக் குளவியின் முதல் கூடு

என்னதான் நடக்கிறது என்று கேமரா கண்களைக் கொண்டு ஊன்றிப் பார்த்தபோதுதான் விஷயம் பிடிபட்டது. காய்ந்த புற்களைக் கொண்டு அது கூடுகட்டிக் கொண்டிருக்கும் விஷயம். உடனே தேடல் புத்தி தன் வேலையை ஆரம்பித்தது. ஆபத்பாந்தவனான கூகுளை நாடினேன். Sphecidae குடும்பத்தைச் சேர்ந்த இது grass-carrying wasp என்ற காரணப்பெயரால் குறிப்பிடப்படுகிறது என்று அறிந்து வியந்தேன். ஆஸ்திரேலிய வகையின் பெயர் Brown-legged grass-carrying wasp என்றும் உயிரியல் பெயர் Isodontia auripes என்றும் அறிந்தேன்.

படம் 7 - நான்காவது கூடு கட்டப்படுகிறது 

பொதுவாக புல் தூக்கிக் குளவிகள் வட அமெரிக்காவைச் சேர்ந்தவை என்றும் வீடுகளின் ஜன்னல் சட்டங்களில் (storm window frames) வைக்கோல் திணிக்கப்பட்ட இவற்றின் கூடுகள் சர்வ சாதாரணம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஆஸ்திரேலியாவில் இந்த வகைக் குளவிகள் இருப்பது இங்கிருக்கும் பலருக்கும் தெரியவில்லை என்பது நான் இதைப் புகைப்படமெடுத்து ஆஸ்திரேலியப் பூச்சிகள் குழுமத்தில் பகிரும்வரை எனக்கும் தெரியவில்லை.

படம் 8 - காய்ந்த புற்களால் அடைக்கப்பட்டிருக்கும் வாசல்

புல் தூக்கிக் குளவி, மற்றக் குளவிகளைப் போல மண் அல்லது அரக்கால் கூடு கட்டி முட்டையிடுவதில்லை. சிறிய துவாரங்களுக்குள்தான் முட்டையை இடுகிறது. கூடவே முட்டையிலிருந்து வெளிவரும் லார்வாவுக்கான இரையையும் வைக்கிறது. இவற்றை மற்ற பூச்சிகளிடமிருந்தும் குளவிகளிடமிருந்தும் பாதுகாக்க வேண்டாமா?  அதனால்தான் மெனக்கெட்டு வைக்கோல் மற்றும் காய்ந்த புற்களைக் கொண்டுவந்து திணித்து துவாரத்தின் வாயிலை அடைத்து வைக்கிறது. ஒரு சின்னஞ்சிறிய பூச்சிக்கு எவ்வளவு புத்திசாலித்தனம்!

அது மட்டுமல்ல, பொதுவாக குளவிகள் முட்டையிட்ட பின் முட்டையிலிருந்து வெளிவரும் லார்வாவுக்கு உணவாக புழுக்களை வைத்து கூட்டை மூடும். சில குளவிகள் சிலந்திகளை வேட்டையாடி உணவாக வைக்கும். ஆனால் இந்த புல் தூக்கிக் குளவி, தன் லார்வாவுக்கு மரவாழ் வகை வெட்டுக்கிளிகளைப் பிடித்துவந்து தன் விஷத்தால் அதை செயலிழக்கவைத்து உயிரோடு உணவாக வைக்குமாம். ஆச்சரியம் கூடுகிறதல்லவா?

நான்கைந்து நாள் கழித்து முட்டையிலிருந்து வெளிவரும் லார்வா, அம்மா தயாராக வைத்துவிட்டுப் போயிருக்கும் இரையைத் தின்று வளர்ந்து பெருத்து, கூட்டுப்புழுவாகி பிறகு குளவியாகி கூட்டை உடைத்து வெளியில் வரும். குளவியான பிறகோ இதன் உணவு பூக்களின் தேன் மட்டுமே.

படம் 9 - புல் தூக்கிக் குளவியின் ஐந்தாவது கூடு கட்டப்படுகிறது

கடந்த ஒரு மாத காலமாக கவனித்துக் கொண்டிருக்கிறேன். ஓயாத சுறுசுறுப்போடு ஒற்றை ஒற்றைப் புல்லாகக் கொண்டுவந்து கூட்டைக் கட்டிக் கொண்டிருக்கிறது இந்தக் குளவி. பூச்சிவீட்டின் நான்கு அறைகளில் கூடுகளைக் கட்டி முடித்துவிட்டு தற்போது ஐந்தாவது அறையில் கூட்டைக் கட்டிக்கொண்டிருக்கிறது இந்த சின்னஞ்சிறு குளவி.

கண்ணிமைக்கும் நேரத்தில் வருவதும் போவதுமாக இருப்பதால் தெளிவான படங்களை எடுக்க முடியவில்லை.

படம் 10 - ஆஸ்திரேலிய மண்குளவி

பூச்சி வீட்டின் மற்றொரு குடியிருப்பாளர் Australian hornet (Abispa ephippium) எனப்படும் மண்குளவி. ஆஸ்திரேலியாவைத் தாயகமாகக் கொண்ட எந்தக் குளவியும் Hornet எனப்படும் கடுங்குளவி வகைக்குள் வராது என்ற போதும் எப்படியோ இந்த மண்குளவிக்கு தவறுதலாக இப்பெயர் இடப்பட்டுவிட்டது. 

படம் 11 - மண்குளவி இடத்தைத் தேர்வு செய்கிறது

இதுவும் பூச்சி வீட்டின் நான்கு அறைகளில் மண்கூடு கட்டி முட்டையிட்டு முடித்துவிட்டு இப்போது ஐந்தாவது அறையில் கூடு கட்டிக் கொண்டிருக்கிறது. 

படம் 12 - சேற்று மண்ணைத் திரட்டும் மண்குளவி

படம் 13 - புழுவைக் கவ்விச் செல்லும் மண்குளவி

பூச்சி வீட்டுக்குக் கீழேயே சேற்று மண் இருக்கிறது. நாலு எட்டுப் பறந்தாலே புழுக்கள் கிடைத்துவிடுகின்றன. அதனால் அதிக மெனக்கெடல் இல்லாமல் வேலை சீக்கிரமாகவே முடிந்துவிடுகிறது இந்தம்மாவிற்கு.

படம் 14 - கூட்டின் வாசலை மண்ணால் மூடுகிறது

பார்க்கலாம், இன்னும் வேறு யார் யாரெல்லாம் வருகை தரவிருக்கிறார்கள் இந்த வாடகை வீட்டுக்கு என்று.  


படம் 15 - பூச்சி வீடு தற்போது


16 February 2022

சீனாவின் லாந்தர் திருவிழா

 


 லாந்தர் விளக்கை சின்ன வயதில் மின்சாரம் இல்லாத வீடுகளில் வசித்தபோது  பார்த்திருக்கிறேன். அரிக்கேன் விளக்கு என்றும் சொல்வார்கள்(HURRICANE விளக்கு என்று பின்னாளில் புரிந்தது).  கொல்லைக்கு, தோட்டத்துக்கு, தொழுவத்துக்கு  இரவுநேரத்தில் போகும்போது கையில் எடுத்துப் போவார்கள்.  எவ்வளவு காற்றடித்தாலும் அணையாமல் எரியும். இரவுப் பயணத்தின்போது மாட்டுவண்டிக்கு அடியில் கட்டியிருப்பார்கள். வண்டியின் ஆட்டத்துக்கேற்ப அதுவும் ஆடிக்கொண்டே போகும். நமக்குத் தெரிந்த  லாந்தர் அதுதான். 

சீனாவில் பாரம்பரிய சிவப்பு லாந்தர் விளக்குகள் மிகவும் பிரசித்தம். இன்று கூகுள் இந்த சிவப்பு லாந்தர் விளக்கு படத்துடன் lantern festival என்று குறிப்பிட்டு சிறப்பித்துள்ளது. அதைப் பார்த்தவுடன் அட, நாமும் சிட்னியில் உள்ள சீனப் பூங்காவிலும், கான்பெராவின் மலர்க்காட்சியிலும் ஒளித்திருவிழாவிலும்  இதுபோல லாந்தர்களின் படங்களை எடுத்திருக்கிறோமே என்று நினைவுக்கு வந்தது. வெறுமனே படங்களைப் போடாமல் லாந்தர் திருவிழா பற்றியும் எழுதினால் என்ன என்று தோன்றவே அதைப்பற்றிய தகவல்களைத் திரட்டி பதிவாக்கிவிட்டேன்.  

நாம் திருக்கார்த்திகை தினத்தன்று கொண்டாடும் தீப விளக்குத் திருவிழா போல சீனர்களுக்கு லாந்தர் விளக்குத் திருவிழா. சீனாவில் மட்டுமல்லாது உலகின் பல பகுதிகளிலும் வாழும் சீனர்கள் இந்த ஒளித்திருவிழா அன்று சீனாவின் பாரம்பரிய லாந்தர் விளக்குகளை ஏற்றிக் கொண்டாடுகின்றனர். பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கேற்ப, பழைய கவலைகள், பிரச்சனைகளை விடுத்து, புத்துணர்வுடன் புதிய வாழ்க்கையைத் தொடங்கும் அடையாளமாக லாந்தர் திருவிழா கொண்டாடப்படுகிறது. 

சீனாவின் சூரிய சந்திர நாட்காட்டியின் அடிப்படையில் வருடத்தின் முதல் பௌர்ணமி அன்று இந்த ஒளித் திருவிழா கொண்டாடப்படுகிறது. சீனப் பாரம்பரியத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த இத்திருவிழா சீனப் புத்தாண்டு கொண்டாட்டம் முடிவுக்கு வருவதை உணர்த்தும் ஒரு சங்கேதக் கொண்டாட்டமும் கூட. கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இத்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறதாம்.


விதவிதமான லாந்தர்கள்
விதவிதமான லாந்தர்கள் (கான்பெரா மலர்க்காட்சி)

சீனக் கலாச்சாரத்தில் அதிர்ஷ்டத்தின் அடையாளமென கருதப்படும் சிவப்பு வண்ணத்தில்தான் முற்காலத்தில் லாந்தர்கள் ஏற்றப்பட்டு வந்தன. ஆனால் தற்போது விதவிதமான வடிவங்களில், வசீகரிக்கும் வண்ணங்களில், உலோகம், கண்ணாடி, காகிதம் போன்றவற்றால் தயாரிக்கப்பட்டு கண்ணைப் பறிக்கும் அழகுடன் அலங்கரிக்கப்பட்ட லாந்தர் விளக்குகளை நாம் காணமுடியும்.    

சீனத்தோட்டத்தில் எடுத்த சில படங்கள் 

(சிட்னியில் உள்ள இத்தோட்டத்தைப் பற்றி அறிய இங்கு சொடுக்கவும்)







இந்த லாந்தர் திருவிழா கொண்டாடுவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. இது கொண்டாடப்படும் தினமானது, புத்த மதத்தைப் பின்பற்றுவோர் மனதையும் உடலையும் சுத்திகரிக்கும் பொருட்டு, உபவாசம் இருந்து புத்தரின் எட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கும் புனித நோன்பு தினமாகும். அதனால் புத்த மதத்தோடு பெரிதும் தொடர்புடைய விழாவாக பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.

பண்டைய சீனக் கலாச்சார நம்பிக்கையின்படி, சொர்க்கத்தின் கடவுள் வசம் பசி, பஞ்சம், வறட்சி, வெள்ளம், கொள்ளை நோய் போன்று பல டிராகன்கள் இருப்பதாகவும், கடவுளுக்குக் கோபம் வந்தால் அவற்றை மனிதர்களின் மேல் ஏவிவிடுவதாகவும் நம்பினர். அதனால் ஒவ்வொரு ஆண்டும் கடவுளைக் குளிர்வித்து, நல்ல பருவநிலை மற்றும் உடல் ஆரோக்கியத்தைத் தர வேண்டி, லாந்தர் திருவிழா கொண்டாடப்பட்டது என்கிறது ஒரு தகவல்.  

சங்க கால இந்திர விழா போல... இன்றைய காதலர் தினக் கொண்டாட்டத்தைப் போல அந்தக் காலத்தில் இளைஞர்களும் இளம்பெண்களும் அழகழகான லாந்தர்களை ஏந்தியபடி  தங்கள் வாழ்க்கைத் துணையைக் கண்டறிந்து கவரும் நாளாகவும் இத்திருவிழா இருந்திருக்கிறது. இப்போதும் கூட இளம் தலைமுறையினரிடையே இது மிகுந்த உற்சாகத்துடன் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. மாளிகைகள், வீடுகள், வளாகங்கள், தெருக்கள், பூங்காக்கள் என அனைத்து இடங்களும் பிரகாசிக்கும் லாந்தர்களால் அலங்கரிக்கப்படுகின்றன. டிராகன் நடனம், சிங்க நடனம், படகு நடனம், விடுகதை விளையாட்டுகள், வாணவேடிக்கை என்று ஊரே களைகட்டுகிறது. லாந்தர்கள் கூடவே புதிர்கள் அடங்கிய தாள்களும் தொங்கவிடப்படுகின்றன. புதிரை விடுவிப்பவர்களுக்குத் தக்க சன்மானங்களும் வழங்கப்படுகின்றன. 

கான்பெரா மலர்க்காட்சியிலும் ஒளித்திருவிழாவிலும் எடுத்தவை













இந்தத் திருவிழாவில் முக்கிய உணவாக நம்முடைய மோதகக் கொழுக்கட்டை போன்றதொரு பாரம்பரியப் பலகாரம் இடம்பெறுகிறது. Tangyuan எனப்படும் இது, அரிசிமாவால் செய்யப்பட்ட மேல்மாவுக்குள் எள், கொழுப்பு, சர்க்கரை கலந்த பூரணம் வைத்து செய்யப்படுகிறது. நீராவியில் வேகவைப்பதற்கு பதிலாக கொதிக்கும் தண்ணீரில் வேகவைக்கப்பட்டு, பிறகு குலாப் ஜாமூன் போல சர்க்கரைப்பாகுடன் பரிமாறப்படுகிறது. 

இந்த லாந்தர் திருவிழா, நம்முடைய தீபத்திருவிழா (விளக்கு), இந்திரவிழா (இளைஞர் கொண்டாட்டம்), போகி (பழையன கழிதல்), விநாயகர் சதுர்த்தி (கொழுக்கட்டை), தீபாவளி (வாணவேடிக்கை) என எத்தனை விழாக்களை நினைவுபடுத்துகிறது!  

23 January 2022

கொக்கரக்கோ மற்றும் மழை நிலாக் கதைகள்

 

அனைவருக்கும் வணக்கம். இந்த வருடத்தின் முதல் பதிவை என்னுடைய இரு புதிய நூல்களின் அறிமுகத்தோடு வெளியிடுவதில் மகிழ்கிறேன். கொக்கரக்கோ மற்றும் மழை நிலாக் கதைகள். முதலாவது சிறார் இலக்கியம், இரண்டாவது ஜப்பானிய செவ்விலக்கியம். இரண்டும் இரு வேறு வகைமை என்பதோடு எனக்குப் புதிய உள்நுழைவுகளும் கூட.




‘கொக்கரக்கோ’ சிறுவர் பாடல் தொகுப்பு சிறார் இலக்கியத்தில் என் முதல் முயற்சி. 2021-ஆம் ஆண்டு மே மாதம் ஞா.கலையரசி (https://unjal.blogspot.com/) அக்காவால் தொடங்கப்பட்ட சிறார் வலைக்களஞ்சியமான ‘சுட்டி உலகம்’ (https://chuttiulagam.com/) இதற்கானக் களத்தை உருவாக்கிக்கொடுத்தது. சுட்டி உலகத்தை முன்னிட்டு நான் எழுதிய சிறார் பாடல்கள் சுட்டி உலகம் வாயிலாகவே தொகுப்பாக வெளியிடப்படுவது, அதுவும் குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது வெளியிடப்படுவது எனக்குப் பெருமை.  

சிறுவர் பாடல்கள் எழுதுவதற்கானக் களத்தை அமைத்துக் கொடுத்தது மட்டுமின்றி இந்நூல் உருவாக்கத்துக்கு முக்கியக் காரணமாக விளங்கும் கலையரசி அக்காவுக்கு இந்நேரத்தில் என் அன்பையும் நன்றியையும் தெரிவித்து மகிழ்கிறேன். அவருடைய அணிந்துரையிலிருந்து சில வரிகள்...

\\இக்காலத் தலைமுறையை ஈர்க்கும் விதமாகப் புதிய பாடுபொருள்களுடன், தமிழில் பாடல் நூல்கள் பல படைக்க வேண்டியது, மிகவும் அவசியம். இந்நூலின் முதல் பாடலே “தமிழில் பாட்டுப் பாடுவோம்” என்று அமைந்திருப்பது மிகவும் சிறப்பு!  

“அன்னைத் தமிழில் பாடுவோம்

அனுதினமும் பாடுவோம்

தீந்தமிழில் பாடுவோம்

தித்திக்கத்  தித்திக்கப்  பாடுவோம்”

“குழந்தைப்பாடல் படைப்போர்க்குக் குழந்தை உள்ளம் இருப்பது மிக அவசியம்; மனதளவில் குழந்தைகளாகவே மாறி, அவர்களைப் போலவே சிந்தித்து எழுத வேண்டும்” என்பதற்கேற்ப, இந்நூலின் ஆசிரியரும் குழந்தை உள்ளத்துடனும், அவர்கள் பாடுவதற்கேற்றபடி எளிமையான சொற்களுடனும், இனிமையான சந்தத்துடனும் பல பாடல்களை எழுதியுள்ளார்.

“சன்னச் சிறகை விரிக்குது

விரித்து விரித்து மூடுது

வண்ணம் காட்டி மயக்குது

வா வா என்று அழைக்குது!” 

என்ற வண்ணத்துப்பூச்சி பாடல் வரிகள்,  இதற்கோர் எடுத்துக்காட்டு.\\

‘கொக்கரக்கோ’ சிறுவர் பாடல்கள் தொகுப்பை நேர்த்தியாகவும் அழகாகவும் வடிவமைத்து தரமாகவும் மிகச்சிறப்பாகவும் அச்சாக்கியுள்ள கன்னிக்கோவில் இராஜா (http://kannikoilraja.blogspot.com/) அவர்களுக்கும் லாலிபாப் சிறுவர் உலகத்துக்கும் என் மனமார்ந்த நன்றி. 

மழை நிலாக் கதைகள்


இரண்டவது கனலி கலை இலக்கிய இணையதளத்தின் (https://kanali.in/) கனலி பதிப்பகம் வாயிலாக வெளியாகியுள்ள ‘மழை நிலாக் கதைகள்’. பதினெட்டாம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க ஜப்பானிய இலக்கியப் படைப்பாளியான யுடா அகினாரி (Ueda Akinari (1734-1809)) எழுதிய Tales of Rain and the Moon (or Tales of moonlight and rain) என்ற நூலில் இடம்பெற்றுள்ள கதைகளின் தமிழாக்கம்தான் ‘மழை நிலாக் கதைகள்’.

இந்நூல் உருவாக்கத்துக்கு முக்கியக் காரணமாக இருந்த நண்பர் விக்னேஷ்வரனுக்கு என் முதல் நன்றி. கனலியின் ஜப்பானிய கலை இலக்கியச் சூழலியல் சிறப்பிதழுக்காக யுடா அகினாரியின் Tales of Rain and the Moon நூலிலிருந்து ‘The Carp of my dreams’ என்ற கதையை மொழிபெயர்க்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்திருந்தார். அதை ‘என் கனவுகளின் கெண்டைமீன்’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருந்தேன். அது நல்ல வரவேற்பைப் பெற்றது. முக்கியமாக, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் இச்சிறப்பிதழில் தனக்குப் பிடித்தக் கதைகள் எனக் குறிப்பிட்ட மூன்றில் 'என் கனவுகளின் கெண்டை மீன்' முதலாவதாக இருந்தது. அந்த அங்கீகாரமே பெரும் மகிழ்வளித்தது. 



அந்நூலிலுள்ள மீதி 8 கதைகளையும் மொழிபெயர்க்கும் வாய்ப்பும் கனலியால் வழங்கப்பட்டது. அதுவரை ஜப்பானின் தொன்மை, வரலாறு, இலக்கியம், கலாச்சாரம், ஆன்மீகம், வாழ்க்கைமுறை ஆகியவற்றைக் குறித்த பரிச்சயம் மிகக் குறைவான அளவே எனக்கு இருந்தது. பண்டைய ஜப்பானின் வரலாற்றையும் வாழ்வியலையும் அடிநாதமாகக் கொண்டு படைக்கப்பட்ட கதைகளின் நுணுக்கமும் நுட்பமும் என் பரிச்சயத்துக்கும் புரிதலுக்கும் அப்பாற்பட்டவையாக இருந்தன. எனவே அவை குறித்து மிக ஆழமான தேடலும் அடிப்படை அறிவும் பரந்துபட்ட புரிதலும் தெளிவாக விளக்கங்களும் தேவைப்பட்டன. பண்டைய ஜப்பானிய வரலாற்றிலக்கியம் மட்டுமல்லாது அதில் தனது தாக்கத்தைச் செலுத்தியிருந்த சீனாவின் வரலாற்றிலக்கியத்தின் பரிச்சயமும் அவசியமாக இருந்தது. ஆறு மாதங்களுக்கு மேல் அவற்றைக் குறித்த ஆய்வில் ஈடுபட்டிருந்தேன். ஒருவழியாக, என்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை திருப்தியுற முடித்தபிறகு, என் முயற்சியில் ஓரளவு வெற்றி பெற்றதாகவே எண்ணி மகிழ்கிறேன். 

யுடா அகினாரி பற்றி அறியாதவர்களுக்காக

அவரைப் பற்றிய சிறு அறிமுகம்:



யுடா அகினாரி சிறந்த இலக்கியவாதியும் கவிஞருமாவார். இவரது பெரும்பாலான புனைகதைகள் அமானுஷ்யம் சார்ந்தவை. யுடா அகினாரியின் இயற்பெயர் யுடா சென்ஜிரோ. 1770-களின் துவக்கத்தில்தான் அகினாரி என்ற புனைபெயரை சூட்டிக்கொண்டார். இவர் நான்கு வயதுக் குழந்தையாயிருக்கும்போது செல்வரான ஒரு வணிகரால் தத்தெடுக்கப்பட்டார். கன்ஃபூஷிய சித்தாந்தங்களைப் போதிக்கும் தலைசிறந்த பள்ளிகளுள் ஒன்றில் சிறப்பான முறையில் கல்வியறிவு பெற்றார். குழந்தையாயிருக்கையில் பெரியம்மையால் கடுமையான பாதிப்புக்குள்ளானார். அதன் காரணமாக அவருடைய விரல்கள் பலவும் வளைந்து கோணலாகிப்போய்விட்டன. அவரது பெற்றோர் காஷிமா இனாரி ஆலயத்தின் தெய்வத்திடம் பிரார்த்தனை செய்தனர். அந்தக் கடவுளின் கிருபையாலேயே தான் உயிர்பிழைத்ததாக யுடா அகினாரி நம்பினார். அன்றிலிருந்து அவர் அமானுஷ்யத்தின்பால் பெருத்த நம்பிக்கை உடையவரானார். அதனாலேயே பின்னாளில் அவரது படைப்புகள் யாவும் இயற்கைக்கு அப்பாற்பட்டக் கூறுகளை உடையவையாகவும் அமானுஷ்யம் சார்ந்தும் அமைந்தன. அவர் புனைகதைகளோடு தத்துவம் மற்றும் ஜப்பானிய செவ்விலக்கியம் சார்ந்து Kokugaku எனப்படும் ஆய்விலும் ஈடுபட்டார்.

பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த இலக்கிய மேதைகளுள் இன்றியமையாதவரான யுடா அகினாரி, தன் வாழ்நாளில் சமகாலத்து அறிஞர்களோடு கருத்தியல் ரீதியான பல மோதல்களை எதிர்கொண்டார். அகினாரி ஜப்பானின் பண்டைய இலக்கியங்களோடு சீனாவின் பண்டைய இலக்கியங்களிலும் ஈர்க்கப்பட்டிருந்தார். Tales of Moonlight and Rain தொகுப்பில் அதைக் கண்கூடாகக் காணமுடியும். இத்தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதையிலும் ஜப்பானிய செவ்விலக்கியங்களிலிருந்து மட்டுமல்லாது, சீன இலக்கியங்களிலிருந்தும் மேற்கோள்களும் நிகழ்வுகளும் காட்டப்பட்டுள்ளன. Waka, Renga, Haikai கவிதைகள் எழுதுவதில் கைதேர்ந்த அவர், தன் வாழ்நாள் முழுமையும் அவற்றைத் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டே இருந்தார். எண்ணற்றக் கவிதைளையும் புனைவுகளையும் எழுதிக் குவித்திருந்தாலும் முக்கியப் படைப்புகளான Tales of Rain and the Moon, Tales of Spring rain இரண்டும் ஜப்பானின் செவ்விலக்கியப் படைப்புகளாக இன்றளவும் கொண்டாடப்படுகின்றன.

சுழலும் சக்கரங்கள், காஃப்காவின் நுண்மொழிகள், பத்து இரவுகளின் கனவுகள் உள்ளிட்ட நூல்களின் மொழிபெயர்ப்பாளரான முனைவர் கே.கணேஷ்ராம் அவர்கள் மழைநிலாக் கதைகள் நூலுக்கு மிகச் சிறப்பான அணிந்துரை வழங்கியுள்ளார். அதிலிருந்து சில வரிகள்...

\\கீழை இலக்கியங்களுக்கு உரிய Didactic (அறநெறி) மரபு அமானுஷ்ய பின்புலத்தோடு மிகசுவாரசியமாக இணையும் இணை கோடுகளாக "மழைநிலாக் கதைகள்" நீள்கின்றன. இத்தொகுப்பின் ஏழு கதைகளும் பௌத்தம் வலியுறுத்தும் அறநெறிசாரத்தைவாழ்வியலோடு விரித்துரைக்கும் தன்மையுடையவை. புனிதத் துறவிகளும், சாமுராய்களும், சாமானிய மனிதர்களும், அமானுஷ்ய சக்திகளும் ஊடாடும் கதைகள் இவை.\\

மழை நிலாக் கதைகள் தவிர கனலியின் பிற வெளியீடுகளான ஜப்பானிய (மொழிபெயர்ப்புச்) சிறுகதைகள் மற்றும் அமெரிக்கச் சிறுகதைகள் நூல்களிலும் என் மொழிபெயர்ப்புக் கதைகள் இடம்பெற்றுள்ளன. 

புத்தகக் கண்காட்சி தள்ளிப்போகும் சூழலில் இந்நூல்களை தொடர்புடைய பதிப்பகங்கள் வாயிலாகப் பெறலாம்.



கொக்கரக்கோ..

(சிறுவர் பாடல்கள்)

லாலிபாப் சிறுவர் உலகம் வெளியீடு

விலை – ரூ.75/-

இந்நூலைப் பெற தொடர்பெண் - 98412 36965

மின்னஞ்சல் – lollipopchildrensworld@gmail.com

 


மழை நிலாக் கதைகள் 

(ஜப்பானியப் படைப்பாளி யுடா அகினாரி சிறுகதைகள்)

கனலி வெளியீடு

விலை ரூ.200/-


ஜப்பானிய (மொழிபெயர்ப்புச்) சிறுகதைகள்

கனலி வெளியீடு

விலை ரூ.400/-



அமெரிக்கச் சிறுகதைகள்

கனலி வெளியீடு

விலை ரூ.500/-

கனலி பதிப்பக நூல்களைப் பெற தொடர்பெண்கள்:

90800 43026

99401 48832

 

ஆர்வமுள்ளவர்கள் நூல்களை வாங்கி வாசித்து தங்கள் கருத்துகளை அறியத் தருமாறு அன்போடு வேண்டுகிறேன். 

நன்றி.