27 February 2012

பொன்மலை என்பது என் ஊராம்....
என் ஊர் பற்றியத் தொடர்பதிவுக்கு எனக்கும் அழைப்பு விடுத்த வசந்த மண்டபம் மகேந்திரன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. என் ஊர் என்று சொல்லும்போதே அதில் தொணிக்கும் பெருமிதத்தை எவராலும் உணரமுடியும். அறியா வயதில் அதுதானே நம் உலகம்.மனம் லயித்து எழுதவேண்டும் என்பதற்காகவே ஒத்திப்போட்டுவந்த என்னை மற்றுமொரு தொடர்பதிவுக்கு அழைத்துவிட்டார் காணாமற்போன கனவுகள் ராஜி. ஆரம்பப் பள்ளி வாழ்க்கையின் அழகிய நினைவுகளுக்குள் நுழையுமுன் ஊருக்குள் நுழையவேண்டாமா? நுழைந்துவிட்டதோடு, உங்களனைவரையும் வரவேற்கிறேன். 

வாருங்கள். திருச்சி மாநகரம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. 

திருச்சி மாநகரத்தில் பிறந்த பல பதிவர்களின் பார்வையில் திருச்சியின் பெருமைகளையும் சிறப்புகளையும் முன்பே அறிந்திருப்பீர்கள்.  அதிலும் வை.கோபாலகிருஷ்ணன் சாரின் ஊரைச்சொல்லவா என்னும் இந்தப் பதிவு ஒன்றே போதும், திருச்சியின் அத்தனைப் பெருமைகளையும் பறைசாற்ற. மிகவும் நன்றி வை.கோ. சார். அம்மாநகரத்தின் ஒரு பகுதியாய் அமைந்த என் ஊரான பொன்மலை பற்றிச் சொல்ல விழைகிறேன்.
பொன்மலை என்றதுமே நினைவுக்கு வருவது பொன்மலை ரயில்வே பணிமனையும் அதனைச் சுற்றிக் கட்டப்பட்டிருக்கும் நேர்த்தியான பணியாளர் குடியிருப்புகளும்தான். இந்தியாவில் மிகப்பெரிய இரயில் கட்டுமாணப் பணிமனையான இது, எழுபத்தைந்து வருடப் பழமை வாய்ந்தது.

சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடக்கும் பொன்மலை ரயில்வே பணிமனை, கிட்டத்தட்ட ஆறாயிரம் ஊழியர்களின் வாழ்க்கையை தன்னுள் அடக்கியது. டீசல் என்ஜின்களைப் பழுதுபார்ப்பதும், நீலகிரி மலைரயில்களை நிர்வகிப்பதும் முக்கியமான வேலை என்றாலும் தென்னக ரயில்வே மற்றுமல்லாது பிற பகுதி ரயில்வேக்களின் பழுது பார்ப்பகமாகவும் இது திகழ்கிறது.  என் அப்பா, சித்தப்பா, அப்பாவழித் தாத்தா, அம்மாவழித்தாத்தா, தாய்மாமாக்கள், இவர்கள் அல்லாது பெரும்பாலான உறவினர்கள் இந்தப் பணிமனையில் பணிபுரிந்ததால் என்னவோ இரயில்வே நிர்வாகமே சொந்தம்போல் ஒரு உணர்வு.

புகைவண்டிப் பயணம் இலவசம் என்பதால் அப்போதெல்லாம் எங்கு செல்வதாக இருந்தாலும் ரயில்தான். பேருந்து என்றப் பேச்சுக்கே இடம் கிடையாது. எத்தனை மணிநேரத் தாமதமானாலும் ரயில்நிலையத்திலேயே காத்திருந்து ரயிலில் அழைத்துச் செல்வதுதான் அப்பாவின் பழக்கம்.

ஆங்கில வழி மற்றும் தமிழ்வழிக் கல்வி பயிற்றுவிக்கும் வகையில் இரு ரயில்வே பள்ளிக்கூடங்கள், ரயில்வே ஊழியர்களுக்கான கல்யாண மண்டபம் மற்றும் சகலவசதிகளையும் உள்ளடக்கிய மருத்துவமனை என ஊழியர்களின் அனைத்துத் தேவைகளையும் தனக்குள் கொண்ட பொன்மலை, பொன்மலைவாசிகளைப் பொறுத்தவரை ஒரு சிற்றுலகம்தான்.  

ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட குடியிருப்புகள், ஊழியர்களின் தகுதிக்கும் வருமானத்துக்கும் ஏற்றபடி A, B, C, D, E, F, G, H என்று வகைப்படுத்தப்பட்டு, படிப்படியாக வசதிப் பெருக்கம் பெறக்கூடிய அளவில் நிர்மாணிக்கப்பட்டிருந்தன. குடிநீர், கழிப்பறை, குளியலறை, சாக்கடைவசதி, தார்ச்சாலை என சகல வசதிகளுடனும் ஒரு மாதிரிக் குடியிருப்பென கட்டப்பட்டிருந்தவை அவை. நாற்சதுர வடிவமைப்பில் கட்டப்பட்டிருக்கும் குடியிருப்புகளில் மத்தியில் உள்ள மைதானங்களில் மாலை வேளைகளில் குழந்தைகளும் பெரியவர்களும் குழுமிப் பேசி, பரஸ்பரம் நட்புறவுடன் கெழுமிய நாட்களை நினைவுகூர்கிறேன். இன்று அப்படிப் பேசுவாரும் இல்லை, தெருவிலும் மைதானத்திலும் ஓடியாடும் குழந்தைகளைக் காணமுடிவதும் இல்லை.

மக்களின் எண்ணங்களை, சிந்தனைகளை மழுங்கடிக்கும் தொலைக்காட்சி, கணினி, அலைபேசி போன்றவை ஆக்கிரமிக்காத காலம் அது. பண்டிகைகள் யாவருக்கும் பொது. பரவசங்கள் பொது. துக்கமும் பொது. துயரங்களும் பொது. 

இந்து, முஸ்லிம், கிறித்துவர் என்று அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும், தமிழர், மலையாளிகள், தெலுங்கர், கன்னடர், ஆங்கிலோ இந்தியர் என்று பலதரப்பட்ட மொழி பேசுவோரும், பல்வேறு சாதியினரும் ஒற்றுமையாய் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போல் ஒருவருக்கொருவர் அன்புடனும் நட்புறவுடனும் பழகிய சூழலில் என் குழந்தைப்பருவமும் இளமைக்காலமும் கழிந்தது என்பதை நினைக்கையிலேயே பெருமிதம் நிறைகிறது.

பொன்மலைவாசிகளுக்குப் பிடித்த விளையாட்டு என்றால் பேட்மிண்டன் என்று சொல்லலாம். சிறியவர் பெரியவர் வேறுபாடு இன்றி, காணும் இடங்களில் எல்லாம் பூப்பந்து விளையாடுவதை இன்றும் பார்க்கலாம். அதிலும் மரத்தால் செய்யப்பட்ட கட்டைபேட் என்று சொல்லப்படும் மட்டையால் அடித்துவிளையாடுவது பலருக்கும் விருப்பம். டேபிள் டென்னிஸ் மட்டையைப் போல் சற்றுப் பெரியதாக இருக்கும் அதை அநேகமாய்த் தாங்களாகவே தயாரிப்பர் என்பதும் ஒரு வியப்பு.

பணிமனையின் அருகிலேயே ஒரு சந்தை. ஞாயிற்றுக்கிழமை சந்தை. சட்டி பானை முதல் காய்கறி, பழம், கோழி, வாத்து (உயிருடன்தான்) இவற்றுடன் மக்கள் கூட்டத்துடன் காட்சியளிக்கும் அது  திருவிழாக்கடைகளை நினைவுபடுத்தும். அங்குக் கிடைக்காதப் பொருட்களே இல்லை என்னும் அளவுக்கு எல்லாமும் கிடைக்கும். அதிலும் சம்பள சந்தை பற்றிச் சொல்லவே வேண்டாம். இங்கு எல்லோருக்கும் ஒரே நாள் சம்பளம் மாதா மாதம் 3 ந்தேதி என்பதால் அன்று மாலைச் சந்தை லாந்தர்களாலும், திரிவிளக்குகளாலும் களைகட்டியிருக்கும். இப்போதும் அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். (மின்சாரம் வருவதும்  தெரியவில்லை,  போவதும் தெரியவில்லை என்று கேள்விப்படுகிறேனே...) முன்பே சொன்னதுபோல் அப்பா, சித்தப்பா, மாமா என்று அத்தனைப்பேரிடமிருந்தும் தின்பண்டங்கள் கிடைக்கும் நாள் அது. இன்று நினைத்தாலும் மகிழ்ச்சியில் புரளவைக்கும் நாட்கள் அவை. 

அடிவாரத்தில் பொன்னேஸ்வரி அம்மனும் உச்சியில் முருகனும் குடிவைத்திருக்கும் மலைக்கோவில் பொன்மலையின் மற்றுமொரு சிறப்பு.  திரும்பிய இடங்களில் எல்லாம் தேவாலயங்களும், பள்ளிவாசல்களும், கோவில்களும் என்று எல்லா மதத்தினருக்கும் வழிபாட்டுத் தளங்கள் இருந்தாலும் எல்லோரும் எல்லா இடங்களுக்கும் சென்றுவரும் வகையில் ஒற்றுமையின் இருப்பிடமாய்த் திகழ்வது குடியிருப்புவாசிகளின் மனம்.  

மாதாகோவிலில் உப்பும் மிளகும் நேர்ந்துகொட்டுவதிலாகட்டும், பயந்த குழந்தைகளுக்கு ஓதி பயந்தெளிவிக்க பள்ளிவாசல்களுக்குப் படையெடுப்பதிலாகட்டும், கோவில் திருவிழாக்களுக்குக் நன்கொடைகள் வழங்குவதிலாகட்டும் மதங்கள் பற்றிய குறுக்கீடு இல்லாமல் மனங்கள் மட்டுமே ஒன்றி வாழ்ந்த அதிசயம் அது 

பொழுதுபோகவும், பண்டிகை நாட்களில் மட்டுமல்லாது, தேவைப்படுபவற்றைத் தேவைப்படும் எந்நேரத்திலும் வாங்கவும் திருச்சி டவுன் சென்று, தெப்பக்குளத்தின் சுற்றுப்புறச் சுவர்களையொட்டி நடைபோட்ட நாட்கள், கால்வலிக்க வலிக்க, ஓடி ஓடி மலைக்கோட்டையின் மேலேறிக் கால்வலி மறந்த பால்ய நாட்கள், பேருந்தேறிவந்து, மலைக்கோட்டையை நித்தமும் தரிசித்தபடியே பட்டயப்படிப்பை முடித்த பருவநாட்கள்... திருமணமாகி சென்னை வந்தபின் தாய்வீடு பயணிக்கும் ஒவ்வொரு முறையும் திருச்சி மலைக்கோட்டையைக் கண்டவுடன் சிறு குழந்தையெனக் குதூகலித்து கணவரையும் குழந்தைகளையும் வியப்புக்குள்ளாக்கிய நாட்கள்... வாழ்வில் என்றுமே மறக்கவியலா நாட்கள்.

தோட்டம் பராமரித்தும் மரங்கள் வளர்த்தும் தம் சுற்றுப்புறங்களைப் பேணுவதில் பெரும் அக்கறை காட்டுவதில் ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளைத் தம் சொந்த வீடு போலத்தான் நினைத்து வாழ்வர். வீடுகளைக் காலி செய்யுமுன் தாம் வளர்த்தவற்றை வெட்டி மரங்களை மொட்டை அடித்து, அடுத்து வருபவரை அனுபவிக்க விடாமல் செய்யும் சில அற்ப மனிதர்களும் உண்டு

காலப்போக்கில் சொந்தவீட்டுக் கனவு ஒவ்வொரு பணியாளருக்குள்ளும் குடியேற, குடியிருப்புகள் மீதான மோகமும் குடியிருப்புகளும் கொஞ்சம் கொஞ்சமாய்க் கைவிடப்பட்டுவிட்டன.  பொன்மலையைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் இருந்த வயல்கள் எல்லாம் இப்போது வீடுகளாகிவிட்டன. சுடுகாட்டுக் கொட்டகையும் கூப்பிடுதூரத்தில் என்னுமளவில் மனைகளின் விற்பனை பெருகிவிட்டது.


இன்றுஅம்மா வீட்டுக்குச் செல்லும்போதெல்லாம் களையிழந்தும் கவனிப்பாரற்றும் இன்னும் சில பகுதிகளில் இடிந்தும் கிடக்கும் குடியிருப்புகளைக் காணும்போது ஏதோ மனத்துக்குள் இனம் புரியாத வலி.  வசதிகள் புகுந்துவிட்டன. மக்களின் வாழ்க்கைமுறை மாறிவிட்டது. ஆனாலும் அந்தப் பழைய நாட்களும் வாழ்க்கையும் மனத்தில் என்றும் இனிக்கும் நினைவுகள்தாமே….

இத்தொடர்பதிவுக்கு நான் அழைக்கவிரும்புபவர்கள்
1. தமிழ்க்கவிதைகள் தங்கச்சுரங்கம் ஸ்ரவாணி
2. தென்றல் சசிகலா
3. சேகர் தமிழ் தனசேகரன்
4. கிராமத்துக் கருவாச்சி கலை
5. காரஞ்சன்(சேஷ்)

தொடரும் அனைவருக்கும் என் உளம் நிறைந்த நன்றி.

23 February 2012

கஸ்தூரிபா காந்திஅறியாப்பேதையென

அவர் வாழ்வில் நுழைந்தாய்!

அறிந்தே ஆயிரம் தியாகங்கள் புரிந்தாய்!அடக்குமுறைக்கு ஆளானாய்!

ஆதிக்கக் காலடியில் நசுங்கித் திமிறினாய்!

அதனாலோ என்னவோ

அவதார மனுஷி என்ற

அரும்பெயரும் பெற்றாய்!கணவன் உள்ளம் கொண்டிருந்த

காமக்காட்டாற்று வெள்ளத்தை

அவரோடு கைகோர்த்து நீந்திக் கடந்தாய்!

பின்னொருநாள்….

பிரம்மச்சரியப் பாலைக்குள்

தன்னிச்சையாய் அவர் புகுந்தபோதும்

பிடி தளராமல் இணையாய் நடந்தாய்!உன் விருப்புகளும், வெறுப்புகளும்

முனை மழுங்கடிக்கப்பட்ட ஆயுதங்களென

புறக்கணிக்கப்பட்டபோதும்

வஞ்சம் கொள்ளாமல் வாழ்ந்துகாட்டினாய்!சகிப்புத் தன்மை நிறைந்தவள் என்றொரு

சான்றிதழ் கொடுக்கப்பட,

பலவந்தமாய் திணிக்கப்பட்டது,

பிறர் மலமகற்றும் பணியுனக்கு!சுயமிழந்த வாழ்விலும்

சுடராக மின்னினாய்!

சிறகொடிக்கப்பட்டும்

தரைநின்று போராடினாய்!காந்தியமலரைத்

தாங்கி நின்ற காம்பானாய்!

கஸ்தூரிபா என்னும் காவியமானாய்!

பெண்மையின் பேரோவியமானாய்!

****************************************************************************

(கஸ்தூரிபாவின் நினைவுநாள் எழுப்பியத் தாக்கம்!
காந்தியின் பெருமை குறைப்பதல்ல நோக்கம்!
கஸ்தூரிபாவை உயர்த்தும் எண்ணமே இவ்வாக்கம்!)

18 February 2012

ஆஸ்திரேலியப் பள்ளிகள் - அறிமுகம் 6

ஆரம்பப்பள்ளிப் பிள்ளைகளுக்குத் தேர்வு இல்லையென்றாலும் அவர்களின் கல்வித்தரத்தைப் பரிசோதித்து, அது குறைந்திருக்கும்பட்சத்தில்  மேம்படுத்துவதற்கான முயற்சியை ஆஸ்திரேலியக் கல்வி நிர்வாகம் கைவிட்டுவிடவில்லை. ஒவ்வொரு ஆண்டும், மூன்றாம், ஐந்தாம், ஏழாம், ஒன்பதாம் வகுப்புப் பிள்ளைகளுக்கு NAPLAN (National Assessment Program — Literacy and Numeracy) என்னும் தேர்வுகள் The Australian Curriculum, Assessment and Reporting Authority (ACARA) மூலம் நடத்தப்படுகின்றன. இந்நிறுவனமானது கல்வி அமைச்சர்களின் வழிகாட்டுதல் படியும், தேர்ந்த கல்வியாளர்களின் ஆலோசனை மற்றும் பங்களிப்புடனும் வெற்றிகரமாக இயங்கிவருகிறது 

இந்த நாப்ளான் தேர்வுகள் மூலம் மாணவர்களின் எழுத்தறிவும் எண்ணறிவும் சோதிக்கப்படுகிறது. ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் நிலைபெறத் தேவையான அறிவல்லவா இவை! 

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்று ஔவையாரும், 

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு

என்று வள்ளுவரும் வாய்மொழிந்தவை இங்கு செயல்படுத்தப்படுகின்றன. 

அந்தந்த வயதின் கல்வியறிவுக்கேற்றபடி பொதுக் கேள்வித்தாள்கள் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் ஒரே நாளில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பாடங்கள் படித்து மனப்பாடம் செய்யும் வேலையில்லை. மொழியறிவும், அடிப்படைக் கணித அறிவும் இருந்தால் போதும் 

மொழியறிவுத் தேர்வில் வாசிப்புத் திறன், வாசித்ததைப் புரிந்துகொள்ளும் தன்மை, எண்ணத்தை எழுத்தாக்கும் திறமை, எழுத்துப்பிழை, இலக்கணப்பிழையின்றி எழுதும் வல்லமை, நிறுத்தற்குறியீடுகளைப் பொருத்தமான இடத்தில் பயன்படுத்தும் அறிவு போன்றவையும், எண்ணறிவுத் தேர்வில் அடிப்படைக் கணக்குகள் பற்றிய அறிவும், புதிர்களை விரைவில் புரிந்துகொள்ளும் திறனும் சோதிக்கப்படுகின்றன. எழுத்துத் தேர்வைத்தவிர வேறு எதற்கும் எழுதவேண்டிய தேவையில்லை. ஒவ்வொரு வினாவுக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் நான்கு விடைகளில் பொருத்தமானதைத் தேர்ந்தெடுத்தால் போதுமானது. (நம் TNPSC தேர்வுகளைப்போல்) 

இத்தேர்வுகளுக்காக மாணவர்களைத் தயார் செய்யவேண்டாம் என்று கல்வித்துறை பெற்றோருக்கு அறிவுறுத்துகிறது. இது வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் தேர்வு அல்லவென்றும், மாணவர்களின் அறிவு வளர்ச்சியைக் கணக்கிடும் அளவுகோலே என்றும் கூறி மேலும் பெற்றோரும் ஆசிரயர்களும் செய்யவேண்டியவை எனக் குறிப்பிடுவதாவது;  பிள்ளைகளுக்கு, தேர்வு பற்றியப் பதட்டத்தை உருவாக்காமல் நல்ல மன அமைதியை உண்டாக்குவதும், தேர்வினை எப்படிச் செய்யவேண்டும் என்னும் வழிமுறையைக் கற்றுத்தருவதுமே! 

தேர்வுகளை மாணவர்கள் அவரவர் பள்ளிகளிலேயே எழுதுவார்கள். இதனால் தேவையற்றப் பயம் குறைகிறது. பழகிய வகுப்பு, பழகிய மாணவர்கள், பழகிய ஆசிரியர் என்னும்போது ஏதோ வகுப்புத் தேர்வு எழுதுவது போலவே உணர்வார்கள். ஆனால் தேர்வுக்கான விதிமுறைகளைப் பள்ளிகள் கட்டாயம் கடைப்பிடிக்கவேண்டியது அவசியம். 

தேர்வுகள் பொதுவாக மே மாதத்தில் நடைபெறும். தேர்வுகள் அனைத்தும் (language convention, reading, writing, and numeracy) ஒரே நாளில் நடத்தப்படாமல் ஒவ்வொன்றும் அடுத்தடுத்த நாளில் நடத்தப்படுவதோடு தேர்வுநேரமும் 40 முதல் 45 நிமிடங்கள் வரை மட்டுமே என்பது சிறப்பு 
தேர்வுத்தாள்கள் அனைத்தும் பலத்தப் பாதுகாப்புடன் அகாரா நிறுவனத்துக்கு அனுப்பப்படும். தேர்வு மதிப்பீடுகள் யாவும் மேற்கண்டப் படத்தில் காட்டப்பட்டுள்ளபடி ஒரே அளவுகோலின் பத்து பிரிவுகளில் கணக்கிடப்படுகின்றன. ஆண்டு இறுதியில் அந்தந்தப் பள்ளிகளுக்கு அனுப்பப்படும் மதிப்பீட்டு அறிக்கையானது பிறர் பார்வைக்கு மறைவாக கனத்த உறையில் இடப்பட்டு ஒட்டி அனுப்பப்படும். தேவைப்பட்டால் பள்ளி நிர்வாகம் மாணவரின் எதிர்கால நலன் கருதி, பிரித்துப் பார்க்க அனுமதி உண்டு. மாணவர்களின் திறன் ஆசிரயர்களுக்குத் தெரியுமாதலால், பெரும்பாலும் உறைகள் பிரிக்கப்படாமலேயே வீட்டுக்குத் தபாலில் அனுப்பப்படுகின்றன 

நாட்டில் பொதுவாக கணக்கிடப்பட்டிருக்கும் சராசரிக்கல்வி நிலையோடு நம் பிள்ளைகளின் கல்வியறிவை ஒப்பிட்டு அறிவதன் மூலம், பின்தங்கிய பாடத்தில் மேலும் சிரத்தை எடுக்கலாம் அல்லது நம்பிள்ளையின் அறிவுத்தகுதி அறிந்து அதற்கேற்றபடி அவனை அனுசரித்துப் போகலாம். 

ஆஸ்திரேலியக் கல்விமுறையிலும் பெரும் மாற்றம் வரும் வாய்ப்பு உள்ளது என்பதை சமீபத்திய நாளிதழ் செய்தியொன்று கோடிகாட்டுகிறது. ஆஸ்திரேலிய மாணவர்களை ஆசிய மாணவர்களோடு ஒப்பிடுகையில் மூன்றுவருடங்கள் கல்விநிலையில் பின்தங்கியிருப்பதாக க்ராட்டன் கல்வி நிறுவனம் ஒன்று தன் ஆராய்ச்சியின் முடிவில் வருத்தம் தெரிவித்துள்ளது. ஆசியர்கள் என்பது ஆஸ்திரேலியர்களின் பார்வையில் எப்போதுமே கிழக்காசிய நாட்டு மக்களையேக் குறிக்கும். மற்ற ஆசிய நாட்டு மக்களை, சீனர், பாக்கிஸ்தானியர், இந்தியர் என்று தனித்துக் குறிப்பிடுவர்.  அதன்படி ஆஸ்திரேலிய மாணவர்களின் கல்வித்தரம்  ஷாங்காய் மாணவர்களின் கல்வித்தரத்தைக் காட்டிலும் மூன்றுவருடங்கள் பின்தங்கியிருப்பதாகவும், ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் தென்கொரிய மாணவர்களைவிடவும் ஒன்றிரண்டு வருடங்கள் பிந்திய நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நாடுகளின் வெற்றிகரமானத் தேர்ச்சிக்குப் பின்னால் இருக்கும் கல்விமுறைக்கான அடிப்படைத் தத்துவங்கள் ஒத்திருப்பது பெரும் வியப்பளிக்கும் செய்தி 

சிங்கப்பூரில் பயிற்சிநிலை ஆசிரியர்கள் யாவரும் சம்பளம் வாங்கினாலும் பொதுநல ஊழியர்களாகவே கருதப்பட்டு சமுதாயத்தில் உயர்மட்ட அந்தஸ்தைப்பெறுகின்றனர். அவர்கள் தேர்ந்த கல்வியாளர்களால் வழிநடத்தப்படுவதுடன், கற்பிக்கும் முறைகளில் திறனாய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்கள் போலவே கருதப்படுகின்றனர் என்றும் அத்தகவற்குறிப்பு மேலும் தெரிவிக்கிறது. 

என் மகன் ஏழாம் வகுப்பு என்பதால் இந்த வருடம் நாப்ளான் தேர்வு உண்டு. தினமும் அதற்கானப் பயிற்சிகளை வகுப்புகளிலேயே பள்ளிகள் கற்றுத்தருகின்றன. பயமின்றித் தேர்வெழுதவும், தேர்வுத்தாளைப் படித்துப் புரிந்துகொள்ளவும், குறிப்பிட்ட நேரத்துக்குள் தேர்வை முடிக்கவும் இப்பயிற்சி வகுப்புகள் உதவுகின்றன 

என் மகன் சராசரி மாணவன் என்றாலும் எனக்கு அதைப்பற்றிய கவலையில்லை. அவனிடம் படிப்புத் தவிர ஓவியங்கள் வரைதல், கற்பனாசக்தி, புதியவற்றை உருவாக்கும் ஆர்வம், பூச்சிகள் பற்றிய நுட்ப அறிவு, கணினியில் வரைதிறன் போன்ற திறமைகளுடன், பாசம், ஒழுக்கம், பெரியோரிடத்தில் மரியாதை, அடுத்தவரை மதிக்கும் குணம், நண்பர்களைக் கொண்டாடும் குணம் போன்ற நல்ல குணங்களும் இருப்பதால் படிப்பில் பின்தங்கியிருப்பது என்னைப் பெரிதும் பாதிக்கவில்லை. இந்தியாவில் இருந்திருந்தால் என்னால் இப்படி நிதானமாக யோசித்திருக்க முடியுமா என்று தெரியவில்லை. நான் அழுத்தம் கொடுக்காவிட்டாலும் பள்ளிகள் அழுத்தம் கொடுத்திருக்கும் என்பது உண்மை. 

இந்தியாவில் தேர்வு சமயங்களில் பள்ளிகளில் அடிக்கடி பார்க்கும் நிகழ்வு ஒன்று உண்டு. அது மாதத்தேர்வாயிருந்தாலும் சரி, காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளாக இருந்தாலும் சரி, வகுப்பு விட்டுப் பிள்ளைகள் (அது ஒன்றாம் இரண்டாம் வகுப்புக்குள்தான் இருக்கும்) வெளியில் வந்தவுடனேயே, அவர்களை அழைத்துச் செல்ல வந்திருக்கும் பெற்றோர், பெரும்பாலும் தாய்மார்கள் அவர்களது கையிலிருந்து கேள்வித்தாளைப் பிடுங்கி, “இதுக்கென்ன எழுதினே? அதுக்கென்ன எழுதினே?” என்று கேள்விகளால் துளைப்பதும், அதற்கு அந்தக் குழந்தைகள் திருதிருவென விழிப்பதும் மீறி, ஏதாவது பதில் சொன்னால், “சனியனேநேத்து விடிய விடிய சொல்லிக்குடுத்தேனேஇப்படி மாத்தி எழுதிவச்சிருக்கியே, முண்டம்முண்டம்என்று ஆவேசத்துடன் அதன் தலையில் குட்டுவதும், அந்தக் குழந்தையை வேறு எதுவும் பேசவிடாமல் தேர்வைப்பற்றியே கேட்டுக் கேட்டு முகம் வாடவைப்பதுமாய் எத்தனை எத்தனை நிகழ்வுகள் 

நானும் இதுபோல் ஒருகாலத்தில் செய்திருக்கிறேன். வீட்டுக்குள் குழந்தைகள் நுழைந்ததும் எப்போதும் பள்ளியில் நடந்தவற்றைப் பற்றி ஆர்வமாகச் சொல்வார்கள். ஆனால் தேர்வு நேரங்களில் அவர்களைப் பேசவேவிடாமல் முடிந்துபோன தேர்வுத்தாளைக் கையில் வைத்துக்கொண்டு அது பற்றியே பேசி பிள்ளைகள் மனத்தை நோகடித்தவள் என்பதை நினைக்கும்போது எனக்கு மிகவும் வெட்கமாக உள்ளது. என் மாமனாரின் அறிவுறுத்தலின் பேரில் ஆரம்பத்திலேயே அப்பழக்கத்தைக் கைவிட்டேன். தக்க நேரத்தில் தக்க அறிவுரை வழங்கிய அவர் ஒரு ஓய்வுபெற்றத் தலைமையாசிரியர் என்பதும் வியப்புதானே 

ஆஸ்திரேலியாவில் இருக்கும் பல இந்தியப் பெற்றோரின் முகத்திலும்  இந்த நாப்ளான் தேர்வுச் சமயம் பதட்டத்தைக் காணமுடியும். இதற்கென்று சிறப்புப் பயிற்சி வகுப்புகளுக்கு பணம் கட்டி அனுப்பும் பெற்றோரையும் பார்த்திருக்கிறேன். எதிலும் முதலாவதாக வரவேண்டும் என்னும் எண்ணம், நம் இந்தியரின் இரத்தத்தில் ஊறியதா என்பது தெரியவில்லை. என் மகளே இதற்கு உதாரணம். அதைப் பற்றி அடுத்தப்பதிவில் சொல்கிறேன்.

17 February 2012

அகோரத்தின் அங்கீகாரம்


மனவிகாரங்கள் மறைத்துவைக்கப்பட்ட
மனித முகங்களின் மத்தியில்
முகவிகாரம் மறைக்காத மனமொன்று
சங்கமிக்க முனையும்போதெல்லாம்.
சட்டென அடங்கிடும் சலசலப்பு போல்
சங்கடமுண்டாக்குவது வேறெதுவும் இல்லை.


பரிச்சயமற்ற முகங்களின் ஏற்றிய புருவங்கள்
வேற்றுக்கிரகவாசியென விதிர்த்து,
படபடக்கும் பார்வைகளால்
தங்கள் திடுக்கிடலை வெளிக்காட்டுமுன்
தன்னைப் பரிச்சயப்படுத்திக்கொள்ள விழைகிறது
அம்முகம் தன் நேசக்கரம் நீட்டி.

பிறக்கும்போதே கூடப்பிறந்தவையோ,
பின்னாளில் வந்து ஒட்டிக்கொண்டவையோ,
திராவகமோ, எரிதழலோ, வன்மமோ, வசையோ
உருவமழிக்க முனைந்த வக்கிரத்தின் உக்கிரமோ..

அகோர வடுக்கள் பற்றிய அக்கோர யூகங்கள்
இன்னும் அந்நியப்படுத்துகின்றன
அம்முகத்துக்கான அங்கீகாரத்தை!

மறுதலிக்கப்படும் சுயமுணராதது போல்
மறுபடியும் பின்னலாடுகிறது நட்பின் இழை!

பாராமுகங்கள் தந்திரமாகத் திருப்பப்படும்
கடைசி நொடியின் துல்லியத்தில் வலிந்திழுக்கப்படுகின்றன,
சுயசங்கடமற்றதொரு மென்புன்னகையால்!,
தொடர்ந்து வெளிப்படும் சம்பிரதாய நலம்விசாரிப்புகளோ
தவிர்க்கும் பார்வைகளின் தவிப்பை
தாறுமாறாய் வெளிப்படுத்தும் விதமாகவே