இலைகளை உதிர்த்துக் கொண்டிருந்தது மரம்;
எள்ளி நகையாடினேன்,
'இப்படி எல்லாவற்றையும் உதிர்க்கிறாயே,
உனக்கு வெட்கமில்லையா?' என்று!
இறுமாப்புடன் மரம் பேசியது,
'என்னிடமிருந்து உதிரும் எதற்காகவும்
நான் வெட்கப்படுவதுமில்லை;
வருத்தப்படுவதுமில்லை!
கோடையிலும், கடும்பனிப் பொழிவிலும்
நீரெனக்குக் கிடைக்காதென்று
ஊருக்கு முன்னே உணர்ந்து
உதிர்க்கிறேன் என் இலைகளை!
மீண்டும் உதிப்பேன் பின்வரும் நாட்களில்!
இது, என்னை நானே தற்காக்கும் முயற்சி!
சாதாரண நாட்களில் கூட
சருகுகளை உதிர்ப்பேன்;
சத்தமின்றி நித்தம் துளிர்க்கும்
சிறுதளிர்கள் அவ்விடத்தில்!
இது, என் வாழ்க்கைச் சுழற்சி!'
'ஆ'வென வாய் பிளந்தேன்.
தொடர்ந்தது மரம்,
'இன்னும் கேள்!
உதிர்ப்பேன் என் மலர்களை......
அவை பூத்துக் குலுங்கிய
வசந்தத்தின் முடிவில்!
அதற்காக எனக்குக் கவலையில்லை;
ஏனெனில்,
பூ உதிர்ந்தால்தானே பிஞ்சு வெளிப்படும்!
இது, என் வாழ்க்கைத் தத்துவம்!'
'அப்படியா?' அதிசயித்தேன் நான்!
'அது மட்டுமன்று;
உதிர்ப்பேன் என் பிஞ்சுகளை!'
'என்ன, பிஞ்சுகளையுமா?'
'ஆம், வாழ்வின் நோக்கம் அறியாமல்
பிஞ்சிலே பழுத்த அந்த வெம்பல்களை
உதிர்க்கவே செய்வேன்;
இது, என் வளமான வாழ்வின் யுக்தி!'
'அவ்வளவுதானா?'
'இல்லை; இன்னும் முடியவில்லை; கேள்!
உதிர்ப்பேன் என் முதிர்ந்த கனிகளை!
முற்றியவை மண்ணில் விழுந்தால்தானே
மற்றும் பல விருட்சங்கள் தோன்றி
என்றும் என் பெயர் சொல்லி
என் இனத்தை வாழ்விக்கும்;
இது, என் வாழ்க்கைச் சூத்திரம்!
என்னிலிருந்து உதிர்பவை எவையும்
என்னை வெறுப்பதில்லை; அறிவாயா?
என் ஆணி வேருக்கு அவை யாவும்
அடியுரமாகிப்போகும் அதிசயம் காண்!
உதிர்ப்பதால் உயிர் வாழ்கிறேன்;
உதிர்ப்பவற்றால் உயிர் வாழ்கிறேன்;
உதிர்த்து உயிர்ப்பிக்கிறேன்!'
'இத்தனையும் உதிர்ப்பதால் உனக்கு
எத்தனை நன்மையுண்டு!
எனக்கு நன்மை வேண்டின்,
எதையுதிர்ப்பேன் நான்?'
'அதையும் நானறிவேன், கேள்!
நீ உதிர்க்க வேண்டியவை,
சோம்பலும், சுயநலமும்!
உதிர்க்கக் கூடாதவை,
மானமும், மனித நேயமும்!'
'புரிந்தது, நண்பனே!
புத்தனுக்கோர் போதிமரம் போல்
புத்துயிர் பெற்றேன் உன்னிடத்தில்!
புறப்பட்டுவிட்டேன் இப்போதே,
புதியதோர் வாழ்க்கை வாழ!'
'சற்றே நில்!'
தடுத்தது மரம்!
'முக்கியமாக நீ உதிர்க்கவேண்டிய ஒன்றை
உன்னிடம் சொல்ல மறந்துவிட்டேன்;
போகிறபோக்கில் உன் இதழ்விரித்து
சிறுபுன்னகை ஒன்றை உதிர்த்துப் பார்!
ஒன்றல்ல; இரண்டல்ல;
ஓராயிரம் நல்லிதயங்கள்
உன் நலம் நாடும் நட்பாகும்!'
இலையுதிர்த்த கிளைகளை அசைத்து
விடை கொடுத்த மரத்துக்கு
நன்றி தெரிவித்தேன்,
மென்புன்னகை உதிர்த்து!