('ஆர்வி ஆஸ்பினாலின் கடிகாரம்' என்னும் முந்தைய கதையின் தொடர்ச்சியாகவும் கொள்ளலாம்).
"இது ஆர்வியின் வீடுதானே கிழவி?" தெனாவெட்டுடன் கேட்ட சிறுவனை ஏறிட்டாள் ஆர்வியின் தாய்.
"ஏன் கேட்கிறாய்?"
"உயிரை வாங்காதே! ஒரு சாதாரணக் கேள்விக்குச் சரியான பதில் சொல்ல முடியாதா உன்னால்?"
"என்னிடம் இப்படிப் பேச எவ்வளவு திமிர் உனக்கு! மரியாதையாக ஓடிப் போய்விடு! இல்லையென்றால் போலீஸுக்குச் சொல்லிவிடுவேன்."
"போலீஸ் வந்து என்ன கிழிக்கும்? போலீஸ் என்றால் நான் பயந்துவிடுவேன் என்று நினைத்தாயா? நான் ஒரு உதை விட்டால் உன் குடிசை கலகலத்துப் போய்விடும். கிழட்டுப் பசுவே! ஆர்வி இங்கே வசிக்கிறானா என்றுதானே கேட்டேன்? கடவுளே… ஒரு எளிய தொழிலாளி கேட்கும் ஒரு எளிய கேள்விக்குப் பதில் சொல்லக்கூடவா உன்னால் முடியவில்லை?"
"எதற்கு ஆர்வியைத் தேடுகிறாய்?"
"சரியாப் போச்சு! அவன் கிரைண்டர் பிரதர்ஸில்தானே வேலை பார்க்கிறான்? சும்மா அவனைப் பார்க்கலாமே என்று வந்தேன். இப்போது ஏன்தான் வந்தேனோ என்று நினைக்கிறேன். வந்திருக்காவிட்டால் பாழாய்ப்போன உன்னிடம் மாட்டிக்கொண்டு என் தொண்டை காயும் அளவுக்குக் கத்திக் கொண்டிருக்க மாட்டேன். ஆர்வி நாளைக்கும் வேலைக்கு வராவிட்டால் வேறு யாராவது அந்த வேலைக்கு வந்துவிடுவார்கள் என்று சொல்லிப்போக வந்தேன். என்ன ஆயிற்று அவனுக்கு? உடல்நலக்குறைவா?"
"ஆர்வி இறந்துவிட்டான்."
"ஏசுவே! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? அவனைப் பார்க்க பில் ஆண்டர்சன் வந்திருக்கிறேன் என்று போய்ச் சொல்லுங்கள்."
"கடவுளே!… இப்போது எனக்கிருக்கும் துயரம் போதாதா? சனியன் பிடித்தவனாட்டம் நீ வேறு வந்து தொல்லை தர வேண்டுமா? உனக்குப் புண்ணியமாகப் போகட்டும்! தயவுசெய்து என்னைத் தனியாக விட்டுவிட்டு இங்கிருந்து போய்விடு. நான் உண்மையைத்தான் சொல்கிறேன். குளிர்சுரம் கண்டிருந்த என் பிள்ளை நேற்றிரவு இறந்துவிட்டான்."
"உண்மையாகவா?"
அவன் ஜோன்ஸ் ஆலியின் தெருவில் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு வாயிலிருந்த புகையிலைச் சாற்றைத் துப்பினான்.
"கடவுள் என்னை மன்னிப்பாராக! அம்மா, நான் மிகவும் வருந்துகிறேன்! எனக்கு இந்தச் செய்தி தெரியாது. நீங்கள் சொல்லவில்லையென்றால் எனக்கு எப்படித் தெரியும்?"
அவன் தன் கால்சட்டைப் பையிலிருந்து ஒற்றைக் கையை வெளியிலெடுத்துப் பின்மண்டையைச் சொரிந்தபடி தொப்பியைக் கூடுமானவரை முன்புறம் இழுத்துவிட்டான். மிகவும் மோசமான நிலையிலிருந்த வலதுகால் பூட்ஸின் பக்கம் அவன் பார்வை போனது. காலைத் திருப்பி பூட்ஸின் அடிப்புறத்தைப் பார்வையிட்டான். பின், இடது முழங்கால் வரை உயர்த்தி மீண்டும் அதன் அடிப்புறத்தை ஆராய்ந்து இன்னும் எவ்வளவு நாட்களுக்குத் தாங்கும் என்று கணக்கிடுவதைப் போல் பார்த்தான். பின் ஆயாசம் மேலிட, நடைபாதையில் உமிழ்ந்துவிட்டுச் சொன்னான், "அம்மா, நான் அவனைப் பார்க்கலாமா?"
வளைந்து சென்ற குறுகலான படிக்கட்டுகளில் அவள் முன்னே செல்ல, ஒரு பயந்த போர்வீரனைப் போல் அவன் அவளைத் தொடர்ந்து சென்றான். அறைக்குள் நுழையுமுன்பு தொப்பியை நீக்கிவிட்டிருந்தான்.
அவன் சுற்றிலும் பார்வையை ஓடவிட்டான். எங்கும் வறுமையின் அடையாளம், கிட்டத்தட்ட அவனுடைய வீட்டைப் போலவே. நீளிருக்கையில் கிடத்தப்பட்டிருந்த அந்தப் பையனையும் அவனருகில் இருந்த மிகவும் எளிய சவப்பெட்டியையும் மாறி மாறிப் பார்த்தான்.
தாய், இறந்தவனின் முகத்தை மூடியிருந்த துணியை அகற்றினாள். பில் ஆண்டர்சன் ஸோஃபாவுக்கு அருகில் வந்து நின்று, வெளிறிய அந்த முகத்தைப் பார்த்தான். அனிச்சையாகத் தன் வலது கையைக் காற்சட்டைப் பையிலிருந்து வெளியிலெடுத்து ஆர்வியின் குளிர்ந்திருந்த நெற்றியின் மேல் வைத்துப் பார்த்தான்.
தானே தன் செயலை எண்ணி வெட்கியது போல் முணுமுணுத்தான், "பாவம், சின்னப் பையன்!"
பின்னர் ஏதோ நினைத்துக்கொண்டவன் போல் கேட்டான், "பிரேதப் பரிசோதனை செய்யவில்லைதானே?"
"இல்லை, முந்தின நாள்தான் மருத்துவர் பார்த்துச் சென்றார். அதனால் பிரேதப் பரிசோதனைக்கு அவசியமேற்படவில்லை."
"பிரேதப் பரிசோதனை செய்யாமை நல்லது. ஏனெனில், பிரேதப் பரிசோதனையின் பின்னர் இறந்தவரின் உடலைப் பார்க்கும்போது அவர் மிகுந்த வலியுடன் இருப்பதுபோல் தோன்றும். என் அப்பா இறந்தபோது தூங்குவது போலத்தான் இருந்தார். ஆனால், பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவரைப் பார்த்தபோது அவர் மிகுந்த வலியுடனும் வேதனையுடனும் இருப்பது போல் இருந்தது. யாராலும் அதைப் பார்க்க முடியவில்லை. ஆனால், நான் பார்த்தேன். ஆர்விக்கு இப்போது என்ன வயது?"
"பதினொன்று."
"எனக்குப் பன்னிரண்டு. பதிமூன்றாகப் போகிறது. ஆர்வியின் அப்பா இப்போது உயிரோடு இல்லை. அப்படித்தானே?"
"ஆமாம்."
"எனக்கும்தான். பணியிடத்திலேயே இறந்துவிட்டார் அல்லவா?"
"ஆமாம்."
"என் அப்பாவும் அப்படித்தான். ஆர்வியின் அப்பா இதயக்கோளாறால் இறந்துபோனதாக ஆர்வி சொல்லியிருக்கிறான்."
"ஆமாம்."
"என் அப்பாவும் அப்படித்தான். குடிதானே காரணம்? நீங்கள் அலுவலகங்களைத் துப்புரவு செய்தும் துணி துவைத்தும் வருமானம் ஈட்டுகிறீர்கள் அல்லவா?"
"ஆமாம்."
"என் அம்மாவும் அப்படித்தான். சொற்ப வருமானத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்துவது என்பது இந்நாட்களில் மிகவும் கடினம் இல்லையா?"
"கடவுளே!… ஆமாம்பா… இப்போது என் பிள்ளையும் போய்விட்டான். இனி என் நிலைமை என்னாகுமென்று அந்தக் கடவுளுக்குதான் தெரியும். நான் தினமும் காலையில் ஐந்தரை மணிக்கெல்லாம் எழுந்து அலுவலகங்களை சுத்தம் செய்யப் போய்விடுவேன். அது முடிந்தபின் அன்றாடம் துணி துவைக்கும் வேலை. அப்படியிருந்தும் செலவுக்குத் திண்டாட்டம்தான்."
"என் அம்மாவுக்கும் இப்படிதான். உங்கள் கணவர் உடலை வீட்டுக்குத் தூக்கிவந்தபோது நீங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்திருப்பீர்கள், இல்லையா?"
"கடவுளே… உண்மைதான். நான் சாகும்வரை அதை மறக்க முடியாது. என் கணவர் வெகுநாட்களாக வேலை இல்லாமல் இருந்தார். அவர் இறப்பதற்கு இரண்டு நாள் முன்புதான் அந்த வேலை கிடைத்தது. உன் அம்மாவுக்கும் அந்த நிலை பெரும் அதிர்ச்சியைத் தந்திருக்கும்."
"ஆமாம். அப்பாவைத் தூக்கிக்கொண்டு வந்த சக தொழிலாளி ஒருவர் சொன்னார், 'உங்கள் கணவர் இறந்துவிட்டாரம்மா! எல்லாம் நொடியில் நடந்துவிட்டது'. கேட்டதும் என் அம்மா, 'கடவுளே… கடவுளே…' என்று அரற்றியபடியே மயங்கிவிட்டாள்."
"ஐயோ பாவம்! இப்போது என் ஆர்வியும் போய்விட்டான். இனி நானும் என் பிள்ளைகளும் என்ன செய்யப் போகிறோம்? நான் என்ன செய்யப் போகிறேன்? கடவுளே!… நானும் செத்துப் போயிருக்கலாம்."
"கவலைப்படாதீர்கள் அம்மா! நடந்துபோனதைப் பற்றி அழுது புலம்புவதில் அர்த்தமில்லை," பில் சொன்னான்.
வாயோரம் வழிந்த புகையிலைச் சாற்றைப் புறங்கையால் துடைத்துவிட்டு அந்தக் கறையையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். பின், மீண்டும் ஆர்வியைப் பார்த்தான்.
"நீங்கள் அவனுக்கு மீன் எண்ணெய் கொடுத்திருக்க வேண்டும்." பில் சொன்னான்.
"அவனுக்கு நிறைய ஓய்வும் நல்ல சத்தான உணவும்தான் தேவைப்பட்டன," அவள் சொன்னாள்.
"இவன் அவ்வளவு பலமுள்ளவனாக இல்லை."
"இல்லைதான்… பாவம் சின்னப் பையன்!"
"கிரைண்டர் பிரதர்ஸில் இவனை எப்போதும் மோசமாக நடத்துவார்கள். இவனுக்கு எதையும் கற்றுக்கொடுக்க மாட்டார்கள். எப்போதும் ஒரே வேலையையே கொடுத்துச் செய்யச் சொல்வார்கள். ஊதிய உயர்வு குறித்து இவன் முதலாளியிடம் வாய்திறந்து கேட்பதேயில்லை. கேட்டால் வேலையை விட்டு நிறுத்திவிடுவார்கள். இவன் யாருடனும் வம்புக்குப் போக மாட்டான். அதனால் மற்ற பையன்கள் இவனை எப்போதும் சீண்டிக்கொண்டே இருப்பார்கள். ஆர்வியை கேலி செய்வதற்காகவே பணியிடத்துக்கு வெளியே அவர்கள் இவனுக்காகக் காத்திருப்பார்கள். அவர்கள் என்னிடம் அந்த வம்பைக் காட்டவேண்டும்... இவன் எதிர்த்துச் சண்டையிட மாட்டான். சொல்லப்போனால் அந்த அளவுக்கு இவனிடம் உடல் வலிமையும் கிடையாது. ஒரு பாறாங்கல்லைப் பெயர்த்தெடுக்கும் அளவுக்கு எனக்கு பலமிருந்ததால் யாரும் என்னிடம் வாலாட்டுவது கிடையாது. ஆனால் ஆர்வி பாவம்! அதை அவன் தவறென்று சொல்ல முடியாது. அவனுக்கு தைரியம் அதிகம். ஆனால், உடலில் பலம் கிடையாது."
பில், ஆர்வியின் உடலை ஒரு தந்தையின் பரிவோடு நோக்கினான். தாய் அழுதாள்.
"கடவுளே!… எனக்கு இது முன்பே தெரிந்திருந்தால் நான் பட்டினி கிடந்தாலும் பரவாயில்லையென்று என் பிள்ளையை அந்த நரகத்திலிருந்து காப்பாற்றியிருப்பேனே! அவன் ஒருபோதும் புகார் சொன்னதேயில்லை. என் குழந்தைக்குத்தான் எவ்வளவு மனத்துணிவு! அவன் ஒருபோதும் புகார் சொன்னதேயில்லை. பாவம் என் பிள்ளை!"
"ஒரு தடவை கூடப் புகார் சொன்னதேயில்லையா?!"
“இல்லையப்பா… ஒரு வார்த்தை கூடச் சொன்னதில்லை."
"ஒருவேளை… அவனாலேயே தாங்க முடியாதவற்றை நீங்கள் எப்படித் தாங்குவீர்கள் என்றுதான் சொல்லவில்லையோ? ஆனால், அது அவனுடைய தவறல்ல… அவன் உடலில் பலமில்லை. அதுதான் காரணமென்று நினைக்கிறேன்."
சுவரில் மாட்டப்பட்டிருந்த ஒரு பழைய சித்திரம் அவன் கவனத்தைக் கவர்ந்தது. அவன் அதைக் காட்டிச் சொன்னான், "எங்கள் வீட்டிலும் இதுபோலொரு சித்திரம் உள்ளது. நாங்களும் ஜோன்ஸ் ஆலியின் மேற்குப் பகுதியில்தான் முன்பு வசித்தோம். உங்களுக்கு ஜோன்ஸ் ஆலியில் வசிக்கப் பிடித்திருக்கிறதா?"
"எனக்குத் துளியும் விருப்பமில்லை. இதைப் போன்றதொரு மோசமான வீட்டில் என் பிள்ளைகள் வளர்வதில் எனக்கு விருப்பமில்லை. ஆனால், வேறு இடம் பார்த்துப் போகவோ, இதை விடவும் கூடுதல் வாடகை தரவோ எனக்கு வசதியில்லையே."
"ஆமாம், இங்கே இரவுநேரக் கடைகள் இருப்பது ஒரு வசதிதான். ஆனால், பல இடங்களில் இதுபோன்ற கடைகள் வந்துவிட்டன. மேலும், இங்கே குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. யாரும் எந்தக் கெடுதலும் செய்வதில்லை. ஆனால், நகரத்து மக்களோடு கலந்து வாழ வேண்டுமெனில் குழந்தைகள் மென்குணத்தைக் கொண்டிருப்பதில் பயனில்லை. நீங்கள் சிட்னியில் பிறந்து வளர்ந்தவர் இல்லையென்று நினைக்கிறேன், அப்படித்தானே?"
"இல்லையப்பா… நாங்கள் புதர்க்காடுறை மனிதர்கள். ஐந்து வருடங்களுக்கு முன்புதான் இங்கு வந்தோம். என் கணவர் இங்கே எங்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்குமென்று நம்பி அழைத்து வந்தார். நான் புதர்க்காட்டில் பிறந்து வளர்ந்தவள்."
"உங்களைப் பார்த்தபோதே எனக்குத் தெரிந்துவிட்டது. ம்… ஆண்கள் சில சமயங்களில் முட்டாள்தனமாக முடிவெடுக்கக்கூடியவர்கள். நானும் கூடிய விரைவில் தனியாக வேலை எடுத்துச் செய்யலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆர்வியை எங்கே புதைக்கவிருக்கிறீர்கள்?"
"நாளை ரூக்வுட்டில்!"
"என்னால் வர முடியாது. எனக்கு வேலை இருக்கிறது. நகராட்சியே அவனைப் புதைக்கவிருக்கிறதா?"
"ஆமாம்."
பயபக்தியோடு ஆர்வியின் உடலைப் பார்த்தான்.
"உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்படுகிறதா? எதுவாக இருந்தாலும் தயங்காமல் என்னிடம் கேளுங்கள்."
"மிகவும் நன்றி! ஆனால் எதுவும் தேவைப்படவில்லை."
"சரி, நான் போகிறேன். உங்களுக்குத் தொந்தரவு தந்ததற்காக மன்னியுங்கள்!"
"தொந்தரவு எதுவுமில்லை தம்பி. படிகளில் பார்த்துக் கவனமாக இறங்கிப் போ."
"படிக்கட்டுகள் எல்லாம் பழுதாகிவிட்டன. என்றாவது இரவு வேலை முடித்து வருகையில் ஒரு பலகை கொண்டுவந்து கையோடு பழுது பார்த்துவிடுகிறேன். நான் தச்சுவேலை கற்றுக்கொண்டிருக்கிறேன். ஒரு கதவை உருவாக்கும் அளவுக்குப் பயிற்சி உள்ளது. இன்று இரவு என் அம்மாவை அனுப்பி வைக்கிறேன். அவள் ஆர்வியின் இறுதிச் சடங்குகளைச் செய்ய உங்களுக்கு உதவியாக இருப்பாள்."
"மிகவும் நன்றி! ஆனால், வேண்டாம் தம்பி! உன் அம்மாவுக்கும் வேலை இருக்கும். அவளுக்குத் தொந்தரவு தர வேண்டாம். நானே சமாளித்துக் கொள்கிறேன்."
"பரவாயில்லை, நான் அவளை அனுப்புகிறேன். அவள் சற்று உடலுரம் மிக்கவள். ஆனால் மனத்தளவில் மிக மென்மையானவள். இறுதிச் சடங்குகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வது போல் வேறெதிலும் அவ்வளவு ஆர்வம் காட்ட மாட்டாள். நான் போய்வருகிறேன் அம்மா!"
"போய் வா, மகனே!"
அவன் ஒரு நிமிடம் கதவருகில் தயங்கி நின்றான். பின் சொன்னான்,"அம்மா… என்னை மன்னித்து விடுங்கள். கடவுள் என்னை மன்னிப்பாராக! நான் மிகவும் வருந்துகிறேன்! நான் போய் வருகிறேன். எல்லாவற்றுக்கும் நன்றி!"
துடிப்பான சின்னஞ்சிறுவன் ஒருவன் படிக்கட்டுகளில் நின்றபடி பில்லைத் தன் கலங்கிய கண்களால் பார்த்துக்கொண்டிருந்தான். பில் அவன் தலையில் செல்லமாய்த் தட்டியபடி சொன்னான்,"தைரியமாயிருடா, சின்னப்பயலே… நானிருக்கிறேன்."
*****************************
(பிரபலக் கவிஞரும் கதாசிரியருமான ஹென்றி லாசன் எழுதிய 'A visit of condolence' என்னும் ஆஸ்திரேலிய காடுறை கதையின் தமிழாக்கம் - 17/2/14 நிலாச்சாரல் இணைய இதழில் வெளியானது.)
(பிரபலக் கவிஞரும் கதாசிரியருமான ஹென்றி லாசன் எழுதிய 'A visit of condolence' என்னும் ஆஸ்திரேலிய காடுறை கதையின் தமிழாக்கம் - 17/2/14 நிலாச்சாரல் இணைய இதழில் வெளியானது.)
படம்: நன்றி இணையம்.