28 April 2016

காதல் சிறகை காற்றினில் விரித்து...


எங்கே அவள் என்றே மனம் 
தேடுதே ஆவலால் ஓடிவா.. 
அங்கே வரும் என் பாடலைக் 
கேட்டதும் கண்களே பாடிவா...




தூது செல்ல ஒரு தோழியில்லையென்று
துயர் கொண்டாளோ தலைவி...






உன்னை நான் சந்தித்தேன் - நீ
ஆயிரத்தில் ஒருவன்...




ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா..
உண்மைக்காதல் மாறிப்போகுமா..




காதல் சிறகைக் காற்றினில் விரித்து
வானவீதியில் பறக்கவா... 




உன்னிடம் மயங்குகிறேன்..
உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தனுயிர்க் காதலியே..
இன்னிசை தேவதையே...




உண்ணும்போதும் உறங்கும்போதும்
எண்ணம் முழுதும் கண்ணன்தானே...




காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ...
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ...




உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
உன்னை உள்ளமெங்கும் அள்ளித்தெளித்தேன்
உறவினில் விளையாடி
வரும் கனவுகள் பல கோடி...




நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்
அன்புமணி வழங்கும் சுரங்கம் 
வாழ்க.. வாழ்க... 




யாதும் ஊரே.. யாவரும் கேளிர்..
அன்பே எங்கள் உலக தத்துவம்..
நண்பர் உண்டு பகைவர் இல்லை..
நன்மை உண்டு தீமை இல்லை.. 


24 April 2016

என்னைக் கவர்ந்த பதிவுகள் - 2 (தொடர்பதிவு)

என்னைக் கவர்ந்த பதிவுகள் என்னும் தொடர்பதிவுக்காக சில எழுத்தாளுமைகளைப் பற்றி சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன். ஏராளமான பதிவர்களும் பதிவுகளும் என் மனம் கவர்ந்திருந்தாலும் இதுவரை அதிகம் அடையாளங்காட்டப்படாத வலைத்தளங்களையே இத்தொடரில் குறிப்பிட்டு வருகிறேன். அந்த வரிசையில் இன்னும் சில…




ஆஸியில் எனக்கமைந்த அற்புதமான தோழி மணிமேகலா. இவரது தளம் அட்சயப்பாத்திரம். தமிழின்மீதும் தமிழர் சமுதாயம் மீதும் அளவிலாப்பற்று கொண்டவர் என்பதோடு தமிழின் வளர்ச்சிக்காக அதன் மொழிச்சிறப்பையும், பாரம்பரியப் பெருமைகளையும் தொடர்ந்து வரும் தலைமுறைக்குக் கடத்த தன்னால் என்னென்ன செய்ய இயலும் என்று எந்நேரமும் யோசிப்பவர். எந்தக் கருத்தை எடுத்துக்கொண்டாலும் அதன் ஆழம் வரை சென்று அலசுபவர். உயர்திணை என்ற அமைப்பின்மூலம் மாதாந்திர இலக்கியக்கூடல்களை நிகழ்த்திக்கொண்டிருப்பவர். இன்னும்கூட இவரைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். இவருடைய பதிவுகளில் சமீபமாய் என் மனம் கவர்ந்தவை கண்டறியாத கதைகள் என்ற தலைப்பில் இவர் பதிவிடும் அருமையானதொரு தொடர்பண்டையப் பாரம்பரியப் பொருட்களின் அமைப்பு, பயன்பாடு, மாற்றம், அழகியல் இவற்றை இலக்கிய மேற்கோள்களோடு அவர் எடுத்துரைப்பது சிறப்பு.










குடும்ப மருத்துவர் டாக்டர் எம்.கே.முருகானந்தன் அவர்களை நம் குடும்பத்தில் ஒருவராகவே எண்ணிக்கொள்ளலாம். மனம் விட்டு அவரிடம் நம் நோய்கள் குறித்துப் பேசி ஆலோசனைகள் கேட்கலாம். தினக்குரலில் மருத்துவரைக் கேளுங்கள் என்ற பகுதியில் அவரிடம் கேட்கப்படும் அந்தரங்கமான உடல் மனப் பிரச்சனை குறித்த கேள்விகளும் அதற்கான அவர் பதில்களும் கூட நம்மில் பலருக்கும் பயன்படக்கூடும். அவர் தொடாத உடற்கோளாறுகள் ஏதுமில்லை என்னுமளவுக்கு அவர் தளத்தில் கொட்டிக்கிடக்கின்றன  நோய் மற்றும் உடற்கோளாறுகள் குறித்த விழிப்புணர்வும், மருத்துவ ஆலோசனைகளும், முன்னெச்சரிக்கைக் குறிப்புகளும், நோயாளிகளின் சந்தேகங்களும் தீர்வுகளும், பயம் போக்கும் தெளிவுகளும்மருத்துவம் தவிரவும் தமிழிலக்கிய ஆர்வலர், கவிஞர், பதிவர், புகைப்பட ஆர்வலர் என்று பன்முகங்கொண்ட மருத்துவரின் தமிழ்ச்சேவை முக்கியமாய் நோய்கள் குறித்து எளிய தமிழில் விளக்கும் அவரது திறம் மிகுந்த பாராட்டுக்குரியது.










இப்போது நான் குறிப்பிடப்போகும் பதிவரை முன்பே பலமுறை பல பதிவுகளில் குறிப்பிட்டிருக்கிறேன் என்றாலும் இப்போதும் குறிப்பிடுவதில் பெருமையே எனக்கு. சமீபத்தில் தன்னுடைய தொண்ணூறாவது பிறந்தநாளைக் கொண்டாடியவரும் எங்கள் குடும்பத்தின் மூத்த வழிகாட்டியும் எங்கள் அனைவரின் அன்புக்கும் மதிப்புக்கும் உரியவருமான சொ.ஞானசம்பந்தன் ஐயா அவர்கள். எழுத்துச்சோர்வு ஏற்படும்போதெல்லாம் அவரை எண்ணிக்கொண்டால் போதும், சோர்வு பறந்துவிடும் என்று நான் உரைப்பதெல்லாம் வெற்றுப் புகழாரமன்று. உண்மை. அவருடைய அற்புதமான பல பதிவுகள் இன்னும் பலரைச் சென்றடையவேண்டும் என்னும் பேராசையின் உந்துதலோடு இலக்கியச்சாரல் என்னும் அவரது தளத்திலிருந்து சில பதிவுகளை இங்கு குறிப்பிடுகிறேன்.








கட்டுப்பெட்டித்தனமான சமூக நடவடிக்கைகளுக்கு எதிராக நேர்மையுடனும் துணிச்சலுடனும் தன் எழுத்துகளை முன்வைக்கும் பெண் எழுத்தாளர், பல்கலைக்கழக விரிவுரையாளர், தமிழிலும் சிங்களத்திலும் தேர்ந்த புலமை வாய்ந்தவர், சிறந்த மொழிபெயர்ப்பாளர், கவிஞர், சிறுகதையாசிரியர், பாடகர், பாடலாசியர், ஆய்வறிஞர், ஏராளமான இலக்கிய விருதுகளுக்கு சொந்தக்காரர் என்னும் ஏராளமான சிறப்புகளுக்கு உரியவர் இலங்கையைச் சேர்ந்த தோழி லறீனா அப்துல் ஹக் அவர்கள்.  அவருடைய காத்திரமான கருத்தாழமிக்கப் பதிவுகளிலிருந்து சில..

(முக்கியக்குறிப்பு – இத்தளத்துக்குச் செல்லுமுன் நம்முடைய கணினியின் ஒலியளவைக் குறைத்துக்கொண்டு செல்வது நலம். சட்டென்று எங்கிருந்தோ பாடல் ஒலித்துத் திடுக்கிடச்செய்கிறது. தங்களுடைய தளங்களில் தானியங்கியாக இதுபோன்று பாடல்களை ஒலிக்கவிடும் பதிவர்கள்,  பதிவினை ஊன்றிப்படிக்க இயலாமல் வாசகர்க்கு ஏற்படும் சங்கடத்தை உணர்ந்தால் நல்லது. )







இத்தொடரில் நான் குறிப்பிட்டுள்ள பதிவர்களுள் ஓரிருவர் தவிர மற்றவர்கள் மற்றத் தளங்களுக்கு வருகை புரிவதோ கருத்திடுவதோ இல்லை என்றாலும் நான் வியந்து வாசிக்கும் பதிவர்கள் என்ற வகையில் அவர்களைக் குறிப்பிட்டுள்ளேன். இங்கே குறிப்பிடப்பட்டவர்களோடு, என் நட்பு வட்டத்தில் உள்ள நான் தொடரும், அனைத்துப் பதிவர்களும் எனக்குப் பிடித்த, என் மனம் கவர்ந்த பதிவர்கள்தாம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.  


வாசிக்கும் வலைப்பூ வழியே நான் தொடரும் பதிவர்கள் ஒவ்வொருவரிடமும் என்னைக் கவர்ந்த அம்சங்களாக அழகிய எழுத்துவன்மை, படைப்பாற்றல், தமிழார்வம், கவித்திறம், சமூக நலன் சார்ந்த சிந்தனை, நட்புறவு, சுவாரசியமான அனுபவப்பகிர்வு, பயணக்குறிப்புகள் என ஏராளமுண்டு. அனைவரைப் பற்றியும் எழுதத் தொடங்கினால் இத்தொடருக்கு முடிவே இராது. எனவே நட்புகள் அனைவருக்கும் என் அன்பினைத் தெரிவித்து இத்தொடரை நிறைவு செய்கிறேன். என் எழுத்தை வாசித்தும் ஊக்கந்தரும் பின்னூட்டங்கள் அளித்தும் என்னைத் தொடர்ந்து எழுதவைத்துக் கொண்டிருக்கும் அன்புள்ளங்கள் அனைவருக்கும் அன்பான நன்றி. 




இத்தொடரில் என்னை இணைத்த ஊஞ்சல் கலையரசி அக்காவுக்கு என் சிறப்பு நன்றி. 

17 April 2016

என்னைக் கவர்ந்த பதிவுகள் - 1 (தொடர் பதிவு)

என்னைக் கவர்ந்த பதிவுகள் என்னும் தொடர்பதிவுக்கு எனக்கு அழைப்பு விடுத்த கலையரசி அக்காவுக்கு என் அன்பான நன்றி.  அவர் தம்முடைய ஊஞ்சல் வலைப்பூவில் மூன்று தொடர் பதிவுகளில் தம்மைக் கவர்ந்த பல அருமையான பதிவர்களை அடையாளங்காட்டியமைக்காக அவருக்கு என் இனிய பாராட்டு.  அவர் அடையாளங்காட்டிய பதிவர்கள் பலரும் என்னையும் கவர்ந்த பதிவர்கள்தாம் என்பதில் எனக்குப் பெருமகிழ்ச்சி. 

என்னைக் கவர்ந்த வலைப்பூக்கள் அனைத்தையும் ஒரு பூமாலையாக்கி வாசிக்கும் வலைப்பூ என்ற பெயரில் சேகரித்து வைத்துக்கொண்டிருக்கிறேன். அவ்வலைப்பூவை எனக்கான பிரத்தியேக சேகரிப்பென்றுதான் ஆரம்பத்தில் எண்ணிமகிழ்ந்திருந்தேன். ஆனால் என்னைத் தொடரும் பதிவர்கள் சிலருக்கும் அது உபயோகமாக இருப்பதாக அறிந்தபிறகு மகிழ்ச்சி பன்மடங்காகிவிட்டதுஇத்தொடர் பதிவில் நான் தொடரும் பதிவர்கள் அனைவரையும் அடையாளங்காட்டத்தான் ஆசை.. ஆனால்… அவர்களுள் பலரையும் எனக்கு முன்பு தொடர்ந்த நட்புகள் அடையாளங்காட்டிவிட்டமையால் பதிவுலகில்  எனக்குத்தெரிந்து இதுவரை குறிப்பிடப்படாத  பதிவர்களுள் என்னைக் கவர்ந்த சில எழுத்தாளுமைகளை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.




பெண்ணியல்புகளை மிகத் தீர்க்கமாகவும், நுண்மையாகவும், பொருண்மையாகவும் கையாளக்கூடிய எழுத்தாளுமைகளுள் குறிப்பிடத்தக்கவர் தோழி சக்திஜோதி கருத்தாழமிக்க கவிதைகளால் பரிச்சயமானவர்.  தற்சமயம் குங்குமம் தோழியில் தொடர்ந்து எழுதிவரும் சங்ககாலப் பெண்பாற்புலவர்களின் பாடல்கள் வாயிலாய் இவர் வெளிப்படுத்தும் பெண்களின் உடல், மனம், மொழி சார்ந்த இவரது  சிந்தனைகளும் ஆய்வுகளும் அனுபவம் சார்ந்த கருத்தோட்டங்களும் அவசியம் வாசிக்கப்படவேண்டியவை. தற்காலப் பெண்களின் வாழ்வியலையும் அனுபவச் செறிவுகளையும் சங்ககாலப் பெண்டிர் வாழ்வியலோடு பிணைத்து மிக அழகாக அறியத்தருகிறார்.  சான்றுக்கு சில




இதுவரை சுமார் 18  பதிவுகள் குங்குமம் தோழியில் வெளிவந்திருந்த போதும் வலையில் ஏனோ எட்டே பதிவுகள்தாம் பதிவேற்றப்பட்டுள்ளனஅதுமட்டுமல்லாமல் கடந்த வருடம் ஜூன் மாதத்தோடு வலையேற்றம் நிறுத்தப்பட்டிருக்கிறது. ஃபேஸ்புக்கில் பல அற்புதமான கவிதைகளை வழங்கும் இவர் வலையிலும் அவற்றைப் பதிவு செய்து பலருக்கும் வாசிக்கத்தரவேண்டும் என்பதே என் விருப்பம்.




நாம் எளிதில் கடந்துபோகும் ஒரு எளிய விஷயத்தைக்கூட  அழகியலாக்கும் அல்லது மனத்தை நெகிழ்விக்கும் எழுத்துக்கு உரிய  எழுத்தாளுமை வண்ணதாசன்வர்கள். கல்யாண்ஜி என்றும் அறியப்படும் இவரது எழுத்துகளை வாசிப்பது ஒரு வரம் என்பேன். சமவெளி என்ற இவரது தளத்தில் அவ்வப்போதுதான் எழுதுகிறார். ஃபேஸ்புக்கில் தொடர்ச்சியாக இவரது படைப்புகளை வாசிக்க முடிகிறதுஇயற்கையின் படைப்புகள் ஒவ்வொன்றையும் நேசிக்கும் அவற்றோடு உரையாடும் அதியற்புத நேசமனம் இவருடையது.  அந்த நேசமனம் இவரது படைப்பின் ஒவ்வொரு வரியிலும் வெளிப்படுவது அழகு.








நம் மதிப்புக்குரிய ஜீவி சார் எழுதிய ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா வரை என்னும் நூலின் அறிமுகத்தை நம் பதிவுலக நட்புகள் பலரும் எழுதியிருந்தாலும் அந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள எழுத்தாளர்கள் குறித்த விரிவான தொடராக தம்முடைய வலைப்பூவில் நம் அன்புக்குரிய வை.கோபாலகிருஷ்ணன் சார் எழுதிவருவதை நம்மில் பலரும் அறிவோம். அற்புதமான அப்படைப்பாளிகளோடு இன்னும் சில அரிய எழுத்தாளர்களின் எழுத்து குறித்தும் படைப்புகள் குறித்தும் அறிய விரும்புவோர்க்கு அழியாச்சுடர்கள் தளம் ஒரு வரப்பிரசாதம்.








பல்லுயிர்ப் பாதுகாப்பின் அவசியத்தை எளிய வகையில் அவரவர்  தாய்மொழியில் அனைவருக்கும் எடுத்துச் சொல்வது ஒவ்வொரு இயற்கை ஆர்வலர்களின், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்களின்  கடமை எனக் குறிப்பிடும் காட்டுயிர் ஆராய்ச்சியாளரான பி.ஜெகநாதன் அவர்கள் தம் வலைப்பதிவான உயிரியின் நோக்கமும் அதுதான் என்கிறார்.







சிறந்த சிந்தனாவாதி, நல்லதொரு எழுத்தாளர் & மொழிபெயர்ப்பாளர்புத்தகப்பிரியர், தயாளகுணம் மிக்கவர், நட்புக்கு நல்லிலக்கணம், நகைச்சுவை உணர்வு மிக்கவர், சமூக அக்கறை மிகுந்த மனிதர் என்று ஏராளமான நல்லியல்புகளைக் கொண்டு, ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பலருக்கும் பரிச்சயமான பெயர் டெல்லி ஷாஜகான் அவர்கள்.  சமீபத்திய சென்னை வெள்ளப் பேரிடரின்போது மத்திய அரசு வழங்கிய டோல் தொகை ரத்துரயில் குடிநீர் போன்ற  பல உதவிகளுக்கு முக்கியக் காரணகர்த்தாவாக,  முன்னின்றும் பின்னணியில் இருந்தும் செயல்பட்டவர்.

கல்வி சார்ந்த எந்த உதவியானாலும் தயங்காமல் இவரைக் கோரும் நெஞ்சங்கள் ஏராளம். தன்னால் இயன்றவற்றை சத்தமின்றி தனியாகவும், இயலாதவற்றை மற்ற நட்புகளின் உதவிக்கரங்களோடு இணைந்தும் செயலாற்றுவதில் வல்லவர். பிரிவினைவாத அரசியலுக்கு எதிராகவும், சமூக நலன் குறித்த அக்கறையுடனும் பகிரப்படும் இவரது கருத்துகள் வீச்சும் விவேகமும் நிறைந்தவை. புதியவன் பக்கம் என்ற இவரது வலைப்பூவிலிருந்து சான்றுக்கு சில பதிவுகள்...








என்னைக் கவர்ந்த மேலும் சில பதிவுகளின் அறிமுகம் அடுத்த பதிவில்...