27 December 2020

ஆஸ்திரேலியப் பூர்வகுடி ஓவியங்கள்

ஒரு இனத்தின் சிறப்பையும், தொன்மையையும், வரலாற்றையும் வாழ்வியலையும் அறிந்துகொள்ள அவ்வினத்தின் மொழியும் அதன்வழி வெளியான இலக்கியங்களுமே நமக்கு உதவுகின்றன. ஆனால் காலங்காலமாக வாய்மொழியாகப் பேசப்பட்டு வந்தாலும் ஆஸ்திரேலியப் பூர்வகுடியினர் தங்கள் மொழிக்கென்று எழுத்துவடிவமோ இலக்கியமோ படைத்திராத சூழலில் அவர்களுடைய தொன்மையையும் சிறப்பையும் எப்படி தங்கள் தலைமுறையினருக்குக் கடத்துகிறார்கள்? எப்படி தங்கள் இனத்தின் தனித்துவத்தை அடையாளப்படுத்துகிறார்கள் என்ற கேள்விகள் நமக்கு எழக்கூடும்.


இயற்கையை இறையாய் வழிபடும் அவர்கள்,  நிலவமைப்புகளைப் புனிதமாய்க் கருதுகிறார்கள். முன்னோர்களின் ஆன்மாக்கள் உலவுவதாக நம்புகிறார்கள். அவர்கள் தங்கள் நம்பிக்கைகளையும் எண்ணங்களையும் சிந்தனைகளையும் வாழ்க்கைமுறைகளையும் கதைகள் மூலம் செவிவழியாகவும், கலைகள் மூலம் காட்சிவழியாகவும் அடுத்தடுத்தத் தலைமுறைகளுக்குத் தொடர்ந்து கடத்திக்கொண்டேதான் இருக்கிறார்கள். தங்களுடைய மொழியை ஓவியங்களாய் வெளிப்படுத்தினர். நடனம், சடங்குகள், வழிபாட்டுமுறை, ஓவியம், வைத்தியம், இசை, கைவேலைப்பாடு, வேட்டை நுணுக்கம் என எத்தனையோ சம்பிரதாயங்களை அவற்றின் பாரம்பரியம் கெடாது தங்கள் வருங்கால சந்ததியினருக்குக் கடத்திவருகின்றனர்.




ஆஸ்திரேலியப் பூர்வகுடி ஓவியங்கள் என்றாலே பாறை ஓவியம், செதுக்கு ஓவியம், புள்ளி ஓவியம், மரப்பட்டை ஓவியம், மணல் ஓவியம், சுவடு ஓவியம், உடல் ஓவியம் என அதில் அத்தனை வகையைக் காணமுடியும்.



உலக மக்களின் பார்வையில் ஆஸ்திரேலியாவை தனித்து அடையாளப்படுத்தும் கலாச்சார வகைமைகளுள் ஆஸ்திரேலியப் பூர்வகுடி மக்களின் புள்ளி ஓவியமும் ஒன்று. ஆஸ்திரேலியப் புள்ளி ஓவியங்கள் இன்று உலகம் முழுவதும் பிரசித்தி பெற்று விளங்குகின்றன. பார்ப்பதற்கு சாதாரணமாய் புள்ளிகள் வட்டங்கள் கோடுகள் என்று தோன்றினாலும் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட அர்த்தமுடையவை. பூர்வகுடி ஓவியங்கள் பல அடுக்கு புரிதல்களைக் கொண்டவை. குழந்தைகளுக்கு எளிமையாகவும் மேலோட்டமாகவும், பொதுமக்களுக்கும் பார்வையாளர்களுக்கும் சற்று விரிவாகவும் அதைச் சார்ந்தோர்க்கு, அதன் புனிதம் மற்றும் ஆன்மீகம் சார்ந்த ஆழமான மற்றும் தீர்க்கமான புரிதலையும் தரக்கூடியவை. ஒரு பூர்வகுடிக் கலைஞர், இந்த மூன்று நிலையிலும் ஓவியத்தை விளக்கும் முறையை அறிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். 




கதைகளுக்குள் ஓவியங்களும் ஓவியங்களுக்குள் கதைகளும் பொதித்துவைக்கப்பட்டு, ஆன்மீக உணர்வுடனும், இனத் தனித்துவத்துடனும்  பாதுகாக்கப்பட்ட ஓவியங்கள் வெளியுலகின் பார்வைக்கு வலம்வரத் தொடங்குவதை அறிந்த அவர்கள் தங்கள் பாரம்பரியத்துக்கும் புனித நம்பிக்கைகளுக்கும் இழுக்கு ஏற்படாதிருக்கவும், இதர பூர்வகுடி இனங்களுக்கு தங்கள் ரகசியங்கள் பகிரப்படாதிருக்கவும் கண்டுபிடித்த உத்திதான் புள்ளி ஓவிய உத்தி. ஓவியங்களை புள்ளிகளாய் வரைவதன் மூலம் அதன் புனிதத்தன்மை நீக்கப்பட்டு விடுவதாகவும் ரகசியங்கள் வெளியுலகுக்குக் கடத்தப்படாமல் தவிர்க்கப்பட்டு விடுவதாகவும் அவர்கள் நம்புகின்றனர்.




கைச்சுவட்டுப் பிரதி ஓவியங்கள் ஆஸ்திரேலியப் பூர்வகுடி ஓவிய வகைமையுள் முக்கியமான ஒன்று. தங்களுடைய வாழ்விட எல்லைகளைப் பறைசாற்றும் வண்ணம் மலைப்பாறைகளிலும் குகைகளிலும் அவ்விடங்களில் வசிக்கும் பூர்வகுடிக் குழுவினர் தங்கள்  கைச்சுவட்டுப் பிரதி ஓவியங்களைப் படியெடுத்து முத்திரை பதிப்பது வழக்கம். படியெடுக்கப்பட்டிருக்கும் கைச்சுவட்டுப் பிரதிகளுள் மேலே உச்சியில் இருப்பது குழுவின் உயர்ந்த பதவியிலிருப்பவர் அதாவது தலைவரின் கைச்சுவட்டுப் பிரதியாகும். அவருக்கு அடுத்தடுத்த நிலையிலுள்ளவர்களின் கைச்சுவட்டுப் பிரதிகள் அந்தந்த வரிசைக்கேற்ப அமைந்திருக்கும்.



இந்த கைச்சுவட்டுப் பிரதிகளை உருவாக்குவதே ஒரு கலை. தண்ணீர், செங்காவி அல்லது சுண்ணாம்புத்தூள், கங்காரு, எக்கிட்னா, ஈம்யு போன்ற விலங்கு அல்லது பறவைகளின் கொழுப்பு இவற்றைக் கலந்து வாய் நிறைய நிரப்பிக்கொண்டு பாறையில் ஊன்றப்பட்டிருக்கும் கையின் மீது மிகுந்த விசையோடு ஊதுவார்கள். தாளில் மை ஊறுவது போல இக்கலவை பாறையில் ஊறி சுவட்டோவியத்தை உருவாக்கும். குழுவின் மூத்த உறுப்பினர்கள் அவர்களுடைய வயதுக்கும் தலைமைப் பண்புக்கும் ஏற்ப மணிக்கட்டு வரை மட்டுமல்லாது முழங்கை வரை தங்கள் கைச்சுவட்டைப் பதிக்கும் பெருமையையும் உரிமையையும் பெற்றிருந்தனர். கைச்சுவட்டுப் பிரதிகள் பெரும்பாலும் இடக்கைகளாகவே உள்ளன. அதற்குக் காரணம், பெரும்பாலானோர் வலக்கை பயன்பாட்டாளர்கள் என்பதால் வலக்கையை வாயருகில் புனல்போல் குவித்து வண்ணக்கலவையை சிதறாமல் ஊதுவதற்குப் பயன்படுத்தினர்.


இந்த கைச்சுவட்டுப் பிரதியெடுக்கும் ஓவிய வகைமை ஆஸ்திரேலியப் பூர்வகுடி மக்களிடத்தில் மட்டுமல்லாது அர்ஜென்டினா, ஃப்ரான்ஸ், ஸ்பெயின், இந்தோனேஷியா, தென்னாப்பிரிக்கா போன்ற உலக நாடுகள் பலவற்றிலும் காணப்படும் தொன்மையான ஓவிய வகைமையாக அறியப்படுகிறது.



ஆஸ்திரேலியாவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பாறை ஓவியங்களும் செதுக்கு சிற்பங்களும் காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சுமார் அறுபதாயிரம் ஆண்டுகாலத் தொன்மை வாய்ந்த ஆஸ்திரேலியப் பூர்வகுடியினரின் சில சுண்ணாம்புப் பாறை செதுக்கு சிற்பங்களின் வயது சுமார் நாற்பதாயிரம் ஆண்டுகள் இருக்கலாம் என்று ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது. பாறை ஓவியங்களுக்கு செங்காவி வண்ணம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆண், பெண்ணைக் குறிக்கும் குறியீடுகளும், நீர்நிலைகள், பழங்கள், கங்காரு, ஈமு போன்ற உணவிருப்பிடம் குறித்த குறியீடுகளும், சந்திக்கும் இடங்கள் பற்றிய அடையாளக் குறியீடுகளுமாய் ஒவ்வொரு இனமும் தமக்கென்று தனித்த குறியீட்டு ஓவியமுறையைக் கைக்கொண்டுள்ளனர்.



நார்வாலா கபன்மேங் குகைகள், கிம்பர்லி, லாரா, உபிர், காக்கடூ தேசியப் பூங்கா, உலுரு என ஆஸ்திரேலியாவின் பல்வேறு இடங்களிலும் கற்பாறை ஓவியங்களும் முருஜுகா, ப்ளூ மவுண்டன்ஸ், குரிங்கை சேஸ் தேசியப்பூங்கா போன்ற இடங்களில் சுண்ணாம்புப்பாறை ஓவியங்களும் காணப்படுகின்றன. இந்த ஓவியங்களில் ஆதி மனிதன் முதல் இன்று அழிந்துபோய்விட்ட தைலாசின் போன்ற பல உயிரினம் வரை வரையப்பட்டுள்ளன என்பதிலிருந்தே அவற்றின் தொன்மையை நம்மால் அறிந்துகொள்ள இயலும்.


ஆஸ்திரேலியப் பூர்வகுடி மக்களின் மரப்பட்டை ஓவியங்களும் மற்றொரு பிரசித்தி பெற்ற ஓவிய முறையாகும். முண்டுமுடிச்சுகள் இல்லாத யூகலிப்டஸ் மரவகையான Stringybark எனப்படும் மரத்தின் பட்டைகளே ஓவியம் தீட்டப் பயன்படுத்தப்படுகின்றன. நுட்பமும் தேர்ச்சியும் பெற்றவர்களால் உரிக்கப்பட்ட மரப்பட்டைகள் தீயில் லேசாக வாட்டப்பட்டு மேலே கற்கள் மரக்கட்டைகள் போன்றவற்றால் அழுத்தம் கொடுக்கப்பட்டு சமதளமாக்கப்படுகின்றன. பிறகு காவி, மஞ்சள் போன்ற மண் நிறமிகள், சுண்ணாம்பு மற்றும் கரித்தூள் போன்றவற்றைப் பயன்படுத்தி ஓவியங்கள் தீட்டப்படுகின்றன. நிறமிகளின் ஒட்டுந்தன்மைக்கு முற்காலத்தில் மரப்பிசின் பயன்படுத்தப்பட்டது. தற்போது இரசாயனப் பசைகள் பயன்படுத்தப்படுகின்றன.   



பூர்வகுடி மக்களின் கலாச்சார நம்பிக்கையின் மையமான கனவுக்காலக் கதைகளை அடிப்படையாய்க் கொண்டே பல ஓவியங்கள் வரையப்படுகின்றன. இந்த உலகம் எப்போது, எப்படி தோன்றியது, இவ்வுலகின் உயிரினங்கள், காடுகள், மலைகள், சூரியன், நிலவு, காற்று, மழை, நெருப்பு, கடல் என ஒவ்வொன்றின் தோற்றம் குறித்தும் ஒவ்வொரு பூர்வகுடிக் குழுவினரிடமும் கதைகள் உள்ளன. படைப்பின் ரகசியங்களை வேற்றுக் குழுவினரோடு பகிர்ந்துகொள்வதைக் குற்றம், இழுக்கு என்று நம்பிய அவர்கள், எப்போதும் தங்கள் கதைகள் மற்றும் கலைகளை புனித நம்பிக்கை காரணமாக தங்களுக்குள் மறைவாகவே பகிர்ந்துவந்தனர். இன்றும் கூட ஒரு பூர்வகுடி ஓவியத்தை நாம் புரிந்துகொள்ளும் விதம் வேறு. அவர்கள் புரிந்துகொள்ளும் விதம் வேறு.


பெரும்பாலான பூர்வகுடி ஓவியங்கள் பறவைப் பார்வை கொண்டு வரையப்படுகின்றன. நிலத்துக்கு மேலே பறந்துகொண்டு நிலத்தைப் பார்ப்பதான பாவனையில் இவ்வோவியங்கள் உருவாக்கப்படுகின்றன. அதன் மூலம் நீர்நிலைகள், புதர்க்காடுகள், பழமரங்கள் மட்டுமல்லாது வேட்டைகான விலங்குகள் பறவைகள் இவற்றின் இருப்பிடங்களும் ஒரு வரைபடம் போல மிகத்தெளிவாக சுட்டப்படுகின்றன.



1930 களில்தான் பூர்வகுடி ஓவியர்கள் கான்வாஸ் மற்றும் காகிதங்களில் வரையத் தொடங்கினர். செங்காவி வண்ணத்துக்குப் பதிலாக நீர்வண்ண ஓவியங்கள் பயன்படுத்தப்பட்டன. 1937-ல் முதன்முதலாக பூர்வகுடி ஓவியக் கலைஞரான ஆல்பர்ட் நமட்ஜிராவின் நிலவமைப்புத் தோற்ற ஓவியங்கள் அடிலெய்டில் காட்சிக்கு வைக்கப்பட்டன. ஆனாலும் பல தனித்துவமிக்க பூர்வகுடி ஓவியங்கள் வெளியுலகின் பார்வைக்குக் கொண்டுவரப்படாமலேயே இருந்தன. காரணம் அவற்றை வெளிப்படுத்துவதில் பல சிக்கல்கள் இருந்தன. முதலாவது தங்களுடைய கனவுகாலக் கதைகளையும் குழு சார்ந்த ரகசியங்களையும் வேற்று மனிதர்களுடன் பகிர்ந்துவிடக்கூடாது என்னும் அவர்களுடைய புனித நம்பிக்கை. இரண்டாவது தங்களுக்கு உரிமை இல்லாத, பிற இனம் சார்ந்த ஓவியங்களை வரைவது தவறு என்னும் தார்மீக எண்ணம். ஓவியக்கதைகளில் மட்டுமல்ல, ஓவிய முறைகளிலும் கூட அவர்கள் தார்மீக ஒழுங்கினைப் பின்பற்றுகின்றனர். உதாரணத்துக்கு குலின் இனத்தைச் சேர்ந்தவர்கள் புள்ளி ஓவியங்களை வரைய மாட்டார்கள். மாறாக தங்களுக்கு உரிமையான குறுக்குக் கோட்டோவியங்களை மட்டுமே வரைவார்கள்.  


தங்கள் குழுவைச் சேர்ந்த, தங்கள் குடும்பத்துக்கு வழிவழியாய் வந்த கதைகளை மட்டுமே அவர்கள் ஓவியங்களாய்த் தீட்டினர். அதன் மூலம் தங்கள் பாரம்பரியப் பெருமையையும், கலாச்சார அடையாளத்தையும் உலகுக்கு உணர்த்தினர். 2007-ஆம் ஆண்டு மே மாதம் Emily Kame Kngwarreye -இன் Earth’s creation என்னும் ஓவியம் ஒன்றரை மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களுக்கு மேல் விற்பனையானது. மில்லியன் டாலர்களுக்கு மேல் விற்பனையான முதல் பூர்வகுடி ஓவியம் என்ற பெருமையைப் பெற்ற அதே வருடம் ஜூலை மாதம் Clifford possum Tjapaltjarri - இன்  Warlugulong ஓவியம் 2.4 மில்லியன் டாலர்களுக்கு விற்பனையானது. 



இன்று ஆஸ்திரேலியப் பூர்வகுடி ஓவியங்களுக்கு சர்வதேச அளவில் பெரும் மதிப்பும் அங்கீகாரமும் கிடைத்துள்ளது. முழுக்க முழுக்க ஆஸ்திரேலியப் பூர்வகுடி கலைவளர்ச்சிக்காகவே செயல்படும் சுவிட்சர்லாந்தில் உள்ள La grange, நெதர்லாந்திலுள்ள The Museum of Contemporary Art, விர்ஜினியா பல்கலைக் கழகத்தின் Kluge-Ruhe Aboriginal Art Collection போன்ற அருங்காட்சியகங்கள், ஆஸ்திரேலியப் பூர்வகுடி கலைகளின் சிறப்பு உலக மக்களை ஈர்த்திருப்பதற்கான பெரும் சாட்சி எனலாம்.



(SBS தமிழ் வானொலியில் 01-11-20 அன்று 'நம்ம ஆஸ்திரேலியா' நிகழ்ச்சியில் ஒலிபரப்பானது. நிகழ்ச்சியைக் கேட்க இங்கு சொடுக்கவும்.)

(படங்கள் அனைத்தும் இணையங்களிலிருந்து எடுக்கப்பட்டவை)

27 November 2020

அசுவினிப் பூச்சிகள்

தோட்டத்துப் பிரதாபம் - 20

பொறிவண்டு

தோட்டம் என்றாலே பூச்சிகள் தொல்லை இருக்கும். இருக்கவும் வேண்டும். ஏனெனில் தோட்டத்துப் பயிரைத் தின்னும் பூச்சிகள் (pests) இருந்தால்தான் அவற்றைத் தின்றுவாழும் நன்மை செய்யும் பூச்சிகளும் (beneficial insects) வாழ முடியும்.   இரசாயனப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும்போது எவ்வளவுக்கு எவ்வளவு தீமை செய்யும் பூச்சிகள் அழியுமோ  அவ்வளவுக்கு அவ்வளவு நன்மை செய்யும் பூச்சிகளும் அதனால் அழிவது உறுதி. அதனால்தான் இரசாயன உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டியது அவசியமாகிறது. சரி, இரசாயனப் பூச்சிக்கொல்லி இல்லையென்றால் எப்படிதான் இந்தப் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது? என்னுடைய சில அனுபவங்களைப் பார்ப்போம்.

எலுமிச்சை இலையில் அசுவினிகள்

1.முதல் தலைவலி அசுவினிகள் (aphids). இலைகளில் ஒட்டிக்கொண்டு அவற்றின் சாற்றை உறிஞ்சி வாழ்பவைஇவற்றின் இனப்பெருக்கம் கற்பனைக்கே எட்டாத அளவில் இருக்கும். இவை செடிகளில் இருந்தால் எறும்புகளின் நடமாட்டமும் இருக்கும். காரணம் என்ன தெரியுமா? எறும்புகள்தான் இவற்றைப் பேணி வளர்க்கின்றன. இவற்றின் உடலிலிருந்து வெளிவரும் இனிப்பான திரவத்தைப் பெறுவதற்காகவே எறும்புகள் இவற்றைப் பாதுகாக்கின்றன. 


அசுவினியும் எறும்பும்

எறும்புகள் தங்கள் முன்னங்கால்களால் அசுவினிகளின் உடல்களில் மெதுவாகத் தட்டுவதன் மூலம் அத்திரவத்தை வெளியேற்றச் செய்கின்றன. அதற்கு milking aphids என்று பெயர். 

ரோஜாவில் அசுவினிகள்

எலுமிச்சையில் மட்டுமல்லரோஜாபரங்கிகத்திரிவெண்டை என தோட்டத்தின் எல்லாச் செடிகளிலும் அசுவினிகள் படையெடுக்கும்ஆனால் இவற்றை அழிக்க நான் பெரிய அளவில் எப்போதுமே மெனக்கெடுவதில்லை. காரணம்பொறிவண்டுகள். 

பொறிவண்டுகள்

அசுவினியின் பாதிப்பு உண்டான இரண்டொரு நாளிலேயே பொறிவண்டுகள் (ladybugs or ladybirds) எங்கிருந்தோ அழைப்பு வைத்தாற்போல தோட்டத்துக்கு வந்துவிடும். ஒன்றிரண்டு வந்தாலும் உடனடியாக இனத்தைப் பெருக்கி இரண்டு மூன்று வாரங்களில் அசுவினிகளை இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிடும். 


அசுவினியைத் தின்னும் பொறிவண்டு

பொறிவண்டு லார்வாவைத் துரத்தும் எறும்புகள்

பொறிவண்டுகள் மட்டுமல்லபொறிவண்டுகளின் லார்வாக்களும் அசுவினிகளைத் தின்பதால் விரைவிலேயே அசுவினிகள் இருந்த இடம் தெரியாமல் ஒழிக்கப்பட்டுவிடும்.


எலுமிச்சை மொட்டுவைத்த வேளையில் எக்கச்சக்கமாகப் பரவிய அசுவினிக் கூட்டத்தை ஒரே வாரத்தில் இருந்த இடம் தெரியாமல் அழித்துவிட்டன பொறிவண்டுகள். 


ஹோவர்ஃப்ளை

அசுவினிகளைக் கட்டுப்படுத்துவதில் hoverfly ஈக்களுக்கும் அவற்றின் லார்வாக்களுக்கும் பெரும் பங்கு உண்டு. எங்கள் தோட்டத்தில் அவை எக்கச்சக்கம்.

ஹோவர்ஃப்ளை லார்வா

அசுவினிக்குளவிகள் (aphid wasps) என்றொரு குளவி வகை இருக்கிறது. மிகவும் நுண்ணிய அளவில்தான் இருக்கும். இவை அசுவினிகளில் உடலில்தான் முட்டையிடுகின்றன. 

அசுவினிக்குளவி

முட்டையிலிருந்து வெளிவரும் லார்வாக்கள் உள்ளிருந்தபடியே அசுவினியைத் தின்றுவளர்ந்து கூட்டுப்புழுவாகிப் பின் குளவியாகி வெளிவருகின்றன. இயற்கை எப்படியெல்லாம் ஒன்றையொன்று கட்டுப்படுத்தும் வித்தையை அறிந்துவைத்திருக்கிறது.

 

படத்தில் மற்ற அசுவினிகளோடு பழுப்பு நிறத்தில் குண்டு குண்டாக இருப்பவை அசுவினிக்குளவிகள் முட்டையிட்ட அசுவினிகள். இவை தவிர lacewings எனப்படும் பூச்சிகளும் அசுவினியைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. கீழே படத்தில் இருப்பது Blue eyes lacewing. 



அசுவினிப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த இயற்கையிலேயே  இத்தனைப் பூச்சிக்கொல்லிகள் இருக்கும்போது இரசாயனப் பூச்சிக்கொல்லிக்கு என்ன வேலை, சொல்லுங்க

எலுமிச்சையைத் தாக்கும் செதில் பூச்சி மற்றும் இலை துளைப்பான் பற்றி அடுத்தப் பதிவில் பார்ப்போம். 

(பிரதாபங்கள் தொடரும்)

29 October 2020

பெரிய விடமே சேரும் பித்தர் முடியேறும்

 தோட்டத்துப் பிரதாபம் - 19




பெரியவிட மேசேரும் பித்தர்முடி யேறும்
அரியுண்ணு முப்புமே லாடும்-எரிகு ணமாம்
தேம்பொழியும் சோலைத் திருமலைரா யன்வரையில் 
பாம்புமெலு மிச்சம் பழம்

இது கவி காளமேகப்புலவரின் சிலேடைப் பாடல். தேன்பொழியும் சோலைகளை உடைய திருமலைராயன் மலையில் பாம்பும் எலுமிச்சம்பழம் என்கிறார்.

பாம்புமிகுந்த விஷத்தை உடையதாயிருக்கும்; பித்தனாகிய சிவனின் முடிமேல் இருக்கும்; காற்றைப் புசிக்கும்; உடல் பருக்கும்; மேலெழுந்து படமெடுத்து ஆடும்; சினமுடையதாகும்.

எலுமிச்சம்பழம்பெரியவர்களிடத்து மரியாதை நிமித்தம் கொடுக்கப்பட்டு கை சேரும்; பித்தர்கள் தலையில் தேய்க்கப்படும்; (ஊறுகாய்க்காக) அரியப்படும்; உப்பு அதன் மேல் தூவப்படும்; அதன் சாறு பட்டால் எரிச்சல் உண்டாகும்.

எவ்வளவு அழகான சிலேடைப்பாடல்! இரண்டுமே நம் தோட்டத்தில் உண்டு என்றாலும் இரண்டாவதைப் பற்றியதுதான் இன்றைய என் பிரதாபம்.

 

மெயர் எலுமிச்சைகள்

படத்தில் இருப்பவை எங்கள் தோட்டத்தின் முதல் ஈட்டு எலுமிச்சம்பழங்கள். பத்துப் பழங்களும் மொத்தமாய் இரண்டு கிலோ இருந்தனபடத்தில் ஒன்பதுதானே இருக்கிறது, இன்னொன்று எங்கே? என்று தேடாதீர்கள். முதல் பழம் சாம்பிள் பார்ப்பதற்காக முதலிலேயே பறித்தாகிவிட்டது. பழத்தின் அளவைப் பார்த்தவுடன் இதென்ன எலுமிச்சம்பழமா? ஆரஞ்சுப்பழமா? என்ற சந்தேகம் உங்களுக்குத் தோன்றும். தவறில்லை. ஏனெனில் இவை மெயர் எலுமிச்சை (Meyer lemon) வகையைச் சேர்ந்தவை. நார்த்தைக்கும் மேண்டரின் ஆரஞ்சுக்கும் (citron and mandarin) பிறந்த பிள்ளையாம். இதன் தாயகம் சீனா. புளிப்பும் இனிப்புமான இதன் சுவை சாதா எலுமிச்சையின் சுவையை விடவும் சற்று வித்தியாசமானது. ஊறுகாயை விடவும் பழரசத்துக்கு மிகவும் ஏற்றது. 

எலுமிச்சை மரம்

எலுமிச்சைதான் என்று உறுதி செய்தாலும் அடுத்த சந்தேகம் வரும், இவ்வளவு சின்ன மரத்தில் இவ்வளவு பெரிய சத்தான சாறு நிறைந்த பழங்கள் எப்படி? இரசாயன உரம் காரணமோ? இல்லவே இல்லை. என் தோட்டத்துக்கு அன்றும் இன்றும் என்றும் உரமென்றால் இயற்கை உரம் மட்டுமே. காய்கறிக்கழிவுகள், இரண்டு மாதங்களுக்கொரு முறை தொழு உரம், மாதமொரு முறை மீன் அமிலம் அவ்வளவுதான். ஒருவேளை பூச்சிகளே அண்டவில்லையோ? அதனால்தான் இவ்வளவு செழிப்பான காய்களோ என்று நினைப்பீர்கள். அதுவுமில்லை. சிட்ரஸ் மரங்களை அண்டாத பூச்சிகளே இல்லை. வழக்கமாய் சிட்ரஸ் வகைகளைத் தாக்கும் எல்லா பூச்சிகளும் எல்லா நோய்களும் எங்கள் தோட்டத்து எலுமிச்சை, ஆரஞ்சு மரங்களைத் தாக்கியிருக்கின்றன. ஆனால் அவை அத்தனையும் சமாளித்து, அவற்றிலிருந்தெல்லாம் மீண்டு வந்திருக்கின்றன என்பதே அவற்றின்பால் எனக்கு அதீதமான பிரியத்தைக் கொடுக்கிறது.




 

மெயர் லெமன், வேலன்சியா ஆரஞ்சு, மாண்டரின் ஆரஞ்சு இரண்டு வருட மரங்களாக மூன்றையும் வாங்கி ஒரே நேரத்தில்தான் தோட்டத்தில் நட்டுவைத்தோம். ஏனோ எலுமிச்சையும் மாண்டரினும் வேர் பிடித்துக்கொண்ட அளவுக்கு வேலன்சியா ஆரஞ்சு வேர் பிடிக்கவில்லை. வைத்த நாளிலிருந்து அப்படியே இருந்த அது கொஞ்சம் கொஞ்சமாய் இலைகளையும் உதிர்த்துவிட்டு குச்சியாய் நின்றது. 'இது அவ்வளவுதான்' என்றார் கணவர். எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்றேன் நான். என் நம்பிக்கை வீண் போகவில்லை. நானே ஆச்சர்யப்படும் விதமாய் அடுத்த ஒரு மாதத்திலேயே துளிர் வைத்து தான் உயிர்ப்புடன் இருப்பதை நிரூபித்தது. அதற்குப் பிறகும் கொப்பும் கிளையுமாகத் தழைத்து வளரவில்லை என்றாலும் பசுமையாய்த் தன்னிருப்பைக் காட்டிக்கொண்டே இருந்தது. இதோ, இப்போது முதன்முறையாக கொத்துக் கொத்தாகப் பூத்திருக்கிறது.


ஆரஞ்சு பூக்கள்

காரணம் என்னவாக இருக்கும்? நான் அதன்மேல் வைத்த நம்பிக்கையா? சில வாரங்கள் முன்பு gall wasp முட்டையிட்டிருந்த கிளைகளை கவனித்து  வெட்டி எறிந்த அக்கறையா? ஃப்ரிட்ஜில் வைத்து, சமைக்க மறந்து, காலாவதியாகிப்போன கோழிக்கறியை குப்பையில் தூக்கிவீசாமல் இந்த ஆரஞ்சு மரத்துக்கடியில் குழிதோண்டி புதைத்த ரகசியமா? எப்படியோ, என் ஆரஞ்சு மரம் தன் வாழ்வின் அடுத்தக் கட்டத்துக்குப் பயணிக்கத் தயாராகிவிட்டது. பூத்திருக்கும் அத்தனையும் காயானால் நிச்சயமாய் கிளை தாங்காது, மரம் தாங்காது. எனினும் சோகையானாலும் சூல்கொண்ட மகளைப் பார்த்துப் பூரிக்கும் தாய்போல நானும் பூரித்து நிற்கிறேன். இனி போதுமான சவரட்சணைகள் செய்து அவளைக் கவனித்துக்கொள்ள வேண்டும்.

மாண்டரின் குறுமரம்

மாண்டரின் குள்ள வகை. இன்னும் காய்க்கத் துவங்கவில்லை என்றாலும் கிளைவிட்டு இலைவிட்டு செழிப்பாக இருக்கிறது. இந்த வருடம் அதுவும் பூத்திருக்கிறது என்பதே ஆனந்தம். தோட்டத்துக்குள் நுழைந்தாலே மூக்கைத் துளைக்கும் எலுமிச்சை, ஆரஞ்சு பூவாசம். தேனீக்களுக்கோ பெரும் கொண்டாட்டம்

எலுமிச்சைப்பூவில் தேனீ



இந்த வருட மழை இன்னொரு கொண்டாட்டம். கடந்த மூன்று வருடங்களாக மழை இல்லாமல் காய்ந்து கிடந்த பூமிக்கு இவ்வருட மழை புத்துயிரூட்டியுள்ளது. தோட்டத்துச்செடிகளும் மரங்களும் உற்சாகத்தோடு துளிர்விட, உன்னை வளரவிடுவேனா பார் என்று படையெடுத்து வந்திறங்குகின்றன பற்பல பூச்சிகள். அவை என்னென்ன, அவற்றுக்கான தீர்வுகள் என்னென்ன என்பது பற்றி அடுத்தடுத்தப் பதிவுகளில் பார்ப்போம். 


(பிரதாபங்கள் தொடரும்)

13 October 2020

வா வா வசந்தமே

தோட்டத்துப் பிரதாபம் - 18


Pic 1

Pic 2

Pic 3

Pic 4

Pic 5

Pic 6

Pic 7

Pic 8

Pic 9

Pic 10

Pic 11

Pic 12

Pic 13

Pic 14

Pic 15

Pic 16
 
Pic 17

Pic 18

Pic 19

Pic - 20