31 May 2016

நஞ்சூட்டி நாசம் செய்யலாகுமோ?

குடி குடியைக் கெடுக்கும், புகை நமக்குப் பகை, புகை பிடிக்காதீர், மது அருந்தாதீர், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர் என்பதெல்லாம் பெயரளவில் வெறும் அறிவிப்புகளாகி வெகுகாலமாகிவிட்டது. அவற்றைக் கடைப்பிடிப்பார் மிகவும் அருகிவரும் காலமுமாயிற்று. அதற்காக அப்படியே நாம் விட்டுவிட முடியுமா.. ஊதுகிற சங்கை ஊதிக்கொண்டே இருந்தால் என்றாவது அது செவிடென பாவனை செய்யும் செவிப்பறைகளை எட்டிவிடாதா என்னும் நப்பாசை நமக்கு உண்டே.. அப்படியான முயற்சிகளுள் ஒன்றுதான் வருடாவருடம் மே 31 அன்று அனுசரிக்கப்படும் உலக புகையிலை எதிர்ப்புதினம்.  உலக புகையிலை எதிர்ப்பு தினமான இன்று என்னாலான சிறு பங்களிப்பை வழங்கவே இப்பதிவு.

குடியும் புகையும்  உடல்,மன ஆரோக்கியமுள்ள எவருக்கும் ஏற்புடையவையன்று. ஆனால் தற்போது அவையெல்லாம் இன்றைய தலைமுறையின் அடையாளமென ஆகிப்போய்விட்டன. குடியோடு ஒப்பிடுகையில் குடியை விடவும் புகை பல மடங்கு ஆபத்தானது என்பதை நாம் அனைவருமே அறிவோம்.  குடிகாரர்கள் தங்களையும் தங்கள் குடும்பத்தையும்தான் பாதிப்புக்காளாக்குவார்கள். ஆனால் புகைப்பிடிப்பவர்களோ.. தங்களோடும் தங்கள் குடும்பத்தோடும் தங்களைச் சுற்றியிருப்பவர்களையும் தாங்கள் வெளியிடும் நச்சுப்புகையால் நாசமாக்கிக்கொண்டே இருக்கிறார்கள்.

ஆண்டுதோறும் உலகளவில் சுமார் 55 லட்சம்பேர் புகைப்பழக்கத்தால் இறக்கிறார்கள் என்றும் அதில் பத்து லட்சம் பேர் இந்தியர் என்றும் ஆய்வுமுடிவுகள் தெரிவிக்கின்றன. உலக அளவில் இரண்டாமிடம்.. புற்றுநோய், இருதய நோய், சுவாசக்கோளாறு போன்ற ஏராளமான நோய்களுக்கு புகைப்பழக்கம் வழிவகுக்கும் என்று தெரிந்தே எமனை எதிர்கொண்டு அழைப்பவர்கள் ஏராளம். புகைப்பிடிப்பவர் வெளியிடும் நச்சுப்புகையில் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட இராசாயனங்கள் உள்ளன என்றும் அவற்றுள் அறுபதுக்கும் மேற்பட்டவை மனித உடலில் புற்றுநோயை உருவாக்கக்கூடியவை என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

புகைப்பிடிக்க ஆரம்பித்த நொடியே பாதிக்கப்படும் உடலுறுப்புகள், புகைப்பழக்கத்தை விட்டுவிட்டால் அடுத்த நொடியே மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பி ஆரோக்கியம் மீண்டுவிடுகிறதா என்றால் அதுதான் இல்லை.. புகைப்பழக்கத்தை நிறுத்திய பத்துப்பதினைந்து வருடங்களுக்குப் பிறகே உடலுறுப்புகள் பாதிப்பிலிருந்து முழுவதுமாய் விடுபட்டு உடல் ஆரோக்கிய நிலைக்கு வருமாம்..

உலகநாடுகள் பலவற்றிலும் பதினெட்டு வயதுக்கு உட்பட்டோருக்கு சிகரெட் போன்ற புகையிலைப்பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று சட்டம் உள்ளது. ஆனால் பல நாடுகளில் அச்சட்டம் பெயரளவில் மட்டுமே உண்டு. ஆனால்  ஆஸியில் அப்படியில்லை. கடுமையான தண்டனை உண்டு. ஆனாலும் குற்றங்கள் குறைந்துவிடவில்லை.. ஆஸியில் காண்பிக்கப்படும் திருட்டு, கொள்ளை போன்ற செய்திகளில் அடிக்கடி இடம்பிடிப்பவை புகையிலை சமாச்சாரங்களேசில சமயம் சிகரெட் வழங்கும் தானியங்கி எந்திரங்களையே அடியோடு பெயர்த்துக் காரில் கட்டிவைத்துக் கொண்டுபோகிறார்கள். அவ்வளவு புகைவெறி..
இங்குள்ள பங்களாதேஷிக்  கடையொன்றில் சில நாட்களுக்கு முன் ஒரு பெண் வந்து சிகரெட் கேட்டிருக்கிறார். அவருடைய உடை மற்றும் மேக்கப்பைப் பார்த்தால் இருபத்தைந்து வயது மதிக்கலாமாம். எனவே அக்கடையில் பணிபுரிந்த இளைஞன் அப்பெண் கேட்டதைக் கொடுத்துவிட்டான். திடீரென போலீஸ் கடைக்குள் வந்து அவனைக் கைதுசெய்துவிட்டது. காரணம் சிகரெட் வாங்க வந்த பெண் போலீஸ் அனுப்பிய பெண். அப்பெண்ணுக்கு பதினெட்டு வயது இன்னும் பூர்த்தியாகவில்லையாம். சட்டப்படி, ஓட்டுநர் உரிமம் போன்ற புகைப்படத்துடன் உள்ள ஏதாவதொரு அடையாள அட்டையைக் கேட்டுவாங்கி வயதை உறுதி செய்தபின்னர்தான் கடைக்காரப்பையன் அப்பெண்ணுக்கு சிகரெட் விற்றிருக்கவேண்டும். அவன் அப்படி செய்யவில்லை.. வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குற்றம் உறுதிசெய்யப்பட்டுவிட்டால் அவ்விளைஞன் சுமார் ஐம்பதாயிரம் டாலர் வரை அபராதம் செலுத்தவேண்டும்.. குடும்பச்சுமையுள்ள இளைஞன்அந்தக் குடும்பம் புலம்பித்தீர்க்கிறது.. என்ன புலம்பினாலும் சட்டம் சட்டம்தான். அது தன் கடமையைத் தவறாமல் செய்துவிடும்.

இதில் வேடிக்கை என்னவென்றால் புகை சமாச்சாரங்களை பதினெட்டு வயதுக்குட்பட்டோருக்கு விற்பனை செய்வதுதான் சட்டப்படி குற்றம். அப்படி விற்பனை செய்வோருக்கு தண்டனை உண்டு. ஆனால் அதை வாங்கி உபயோகிக்கும் பதினெட்டு வயதுக்குட்பட்டோருக்கு எந்த தண்டனையும் இல்லை.. ஏனெனில் இன்னும் அதற்கான சட்டமேதும் இயற்றப்படவில்லை.

இந்த சமயத்தில் எனக்கொரு விஷயம் நினைவுக்கு வருகிறது. எட்டு, பத்து வயதுகளில் எங்கள் அப்பா எங்களிடம் காசு கொடுத்து சிகரெட் வாங்கிவரச்சொல்லும்போதெல்லாம் தெருமுனை கடைக்கு ஓடிச்சென்று வாங்கிவந்து தருவோம். அதை பெருமையாகக் கூட அப்போது நினைத்திருக்கிறேன். இங்கெல்லாம் அதை நினைத்தும் பார்க்க முடியாது
ஆஸியில் நான் மெச்சும் ஒரு விஷயம் இங்கு  பேருந்து, ரயில், படகு, விமானம் இவற்றினுள் மட்டுமல்லபேருந்து நிலையம், ரயில் நிலையம், படகுத்துறை, விமானநிலையம் போன்றவற்றிலும் புகைப்பிடிக்கக்கூடாது. இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால்.. சிகரெட் புகை மட்டுமல்ல, அடுப்புப்புகையும் ஆகாது எனக்கு. இரும ஆரம்பித்தால் நெஞ்சுக்கூடு வெடித்துவிடும்  அளவுக்கு   இருமிக்கொண்டே   இருப்பேன்சென்னைவாழ் சமயங்களில் சென்னையிலிருந்து திருச்சிக்குப் பயணித்த என் பேருந்து அனுபவங்கள் சில கொடுமையானவைஓடுகிற பேருந்தில் சிலர் சுற்றியுள்ளவர்களைப் பற்றி கவலைப்படாமல் அவர்கள்பாட்டுக்கு புகைப்பிடித்துக்கொண்டு வருவார்கள். நமக்கோ நெஞ்சு எரியும். தாங்கமுடியாமல் நடத்துநரிடம் சொல்லி அவர்களைத் தடுக்க முயன்று   பிரச்சனைகளுக்காளாகி நிறைய சங்கடங்களை எதிர்கொண்டிருக்கிறோம். அதனால்தான் இந்த ஆசுவாசம்.

ஆஸியில் புகைப்பிடித்தல் தடை செய்யப்பட்டுள்ள மேலும் சில இடங்கள்

1. பொது இடங்களான பூங்காக்கள், நீச்சல்குள வளாகங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், போக்குவரத்து நெரிசலான இடங்கள், , அரசு அலுவலகங்கள், பணியிடங்கள், புகை அனுமதிக்கப்பட்ட உணவகங்களைத் தவிர்த்த பிற உணவகங்கள், திறந்தவெளி உணவகங்கள் இவற்றில் புகைப்பிடித்தல் கூடாது.

2. குழந்தைகள் விளையாடும் இடத்திலிருந்து பத்து மீட்டர் சுற்றளவுக்குள் புகைப்பிடித்தல் கூடாது.

3. விளையாட்டரங்குகளில் பார்வையாளர்களோடு இருக்கையில் புகைப்பிடித்தல் கூடாது.

4. காருக்குள் நீங்கள் மட்டுமிருந்தால் தாராளமாய்ப் புகைப்பிடிக்கலாம்.. அதே சமயம் உங்களோடு காரில் பதினாறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயணம் செய்தால் அப்போது புகைப்பிடித்தல் சட்டப்படி குற்றம்.

5. பொதுவளாகங்களின் நுழைவு வாயிலிலிருந்து நான்கு மீட்டர் தொலைவுக்குள் புகைப்பிடித்தல் கூடாது.

 தடையுத்தரவுகளை மீறினால் அபராதம்தான்.ஆஸியின் அதி தீவிர புகைப்பிடிப்பாளர்களின் புகைப்பழக்கத்தைக் குறைக்கவும் முற்றிலுமாய்க் கைவிடவும்  பல விழிப்புணர்வு பிரச்சாரங்களும் உத்திகளும் முன்வைக்கப்படுகின்றன. அவற்றுள் ஒன்று Tobacco Plain Packaging அதாவது சிகரெட் பெட்டிகளின் மேலட்டைகள், கவர்ச்சியற்று.. தயாரிப்பு நிறுவனங்களின் பிரத்தியேக அடையாளமோ நிறமோ ஏதுமற்று.. வெளிறிய நிறத்துடனும் புகைப்பழக்கத்தால் கடுமையாகப் பாதிக்கபட்ட உடலுறுப்புகளின் படங்களையும் தாங்கி வருகின்றன.  கீழே கிடக்கும் வெற்று அட்டைப்பெட்டிகளைப் பார்த்த மாத்திரத்தில் புகைப்பழக்கமில்லாத நமக்கே பகீரென்னும்போது நிச்சயம் அதை நித்தமும் வாங்கிப் பயன்படுத்துவோருக்கு சற்றேனும் பயத்தை அளித்து புகைப்பழக்கத்தினின்று வெளிக்கொணரும் என்பது உண்மை. சில அறிவுஜீவிகள் இருக்கிறார்களாம்.. பாக்கெட்டாய் வாங்கினால்தானே பாதிப்பைப் பார்க்கநேரும் என்று உதிரி உதிரியாய் வாங்கி உல்லாசமாய் புகைப்பிடிக்கிறார்களாம்பூனை கண்ணை மூடிக்கொண்டு பூலோகமே இருண்டுவிட்டது என்று நினைக்குமாம்.. அதைப் போலத்தான் இருக்கிறது இவர்களுடைய செய்கை.

திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது திருடனுக்கு மட்டுமல்ல.. எந்தவொரு தவறான செய்கையில் ஈடுபடும் எவருக்குமே பொருந்தும். தாங்களாக மனம்வைத்து திருந்தினால் ஒழிய தங்கள் தவறுகளைத் திருத்திக்கொள்ள இயலாது.

வரமாய்க் கிடைத்த வாழ்விது. அதற்கு நஞ்சூட்டி நாசம் செய்யலாகுமோ?  புகைப்பிடிப்போரே.. சற்றே சிந்திப்பீர்! புகைதனைத் தவிர்ப்பீர்! நலமாய் வாழ்வீர்! பிறரையும் நலமாய் வாழவிடுவீர்!

(படங்கள் உதவி: இணையம்)


10 May 2016

மகிழ்வும் நெகிழ்வும் 3


ஒரு படைப்பாளிக்கு மகிழ்வும் நெகிழ்வும் தரக்கூடியவை படைப்புகளுக்கான அங்கீகாரங்கள் என்பதில் எந்தப் படைப்பாளிக்கும் மாற்றுக்கருத்திருக்க முடியாது. அப்படியான என் சமீபத்திய சந்தோஷங்கள் சிலவற்றை உங்கள் அனைவருடனும் பகிர்ந்துகொள்ளும்பொருட்டும்  எனக்கான ஆவணச்சேகரிப்பாகவும் இங்கு அவற்றைப் பகிர்கிறேன்.
ஆஸ்திரேலிய காடுறை மாந்தர்களின் வாழ்வை மையமாகக் கொண்டு ஆஸ்திரேலிய சிறுகதை மன்னர் ஹென்றி லாசன் அவர்கள் எழுதிய ஆங்கிலக்கதைகள் சிலவற்றை நான் தமிழில் பெயர்த்ததும், அவை என்றாவது ஒருநாள்என்ற நூலாக அகநாழிகை பதிப்பகம் வாயிலாக வெளியாகியிருப்பதையும் பலரும் அறிவீர்கள். இந்நாள்வரை அந்நூலுக்கான வெளியீட்டு நிகழ்வு எதையும் முறையாக செய்யவில்லை என்றாலும் நட்புகள் பலரையும் சென்றடைந்து அவர்களுடைய அறிமுக உரைகளையும் விமர்சனங்களையும் புகழுரைகளையும் என்னிடத்தில் கொணர்ந்து குவித்தது.


மகிழ்ச்சி 1சென்ற ஞாயிறு (01-05-16) அன்று சிட்னியில் உள்ள ஹோம்புஷ் பள்ளி வளாகத்தில் ஆஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆஸ்திரேலிய தமிழ்ப் படைப்பாளர் விழாவில் நூலறிமுகம் நிகழ்ச்சியில் என்னுடைய நூலும் இடம்பெற்றது ஒரு நல்லங்கீகாரம். 


நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர் அவர்களுடன்...

(புகைப்படங்களுக்காய்
தோழி மணிமேகலாவுக்கு என் அன்பான நன்றி)

என்றாவது ஒரு நாள்நூலை அவ்விலக்கியக்கூட்டத்தில் அறிமுகம் செய்யும் வாய்ப்பினை உருவாக்கித் தந்ததோடு, அந்நூலுக்கான அறிமுக உரையையும் தானே வழங்க முன்வந்த நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர் அவர்களுக்கு என் அன்பான நன்றிஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் வானொலியில் பல வருடங்களாக 'பண்பாட்டுக் கோலங்கள்' என்னும் நிகழ்ச்சியை வழங்கிவரும் இவர், 'என்றாவது ஒரு நாள்' நூலை வாசித்தபிறகுஅவ்வானொலிக்காக என்னை நேர்காணல் கண்டதை நன்றியுடன் இவ்வேளையில் நினைவுகூர்கிறேன். நேர்காணல் நேரலையில் சென்றவருடம் ஒலிபரப்பானது.


மகிழ்ச்சி 2இத்தகு அங்கீகாரங்களால் அகமகிழ்ந்திருக்கும் வேளையில் தற்செயலாய் அறிய நேர்ந்த மற்றொரு தகவல் மகிழ்வை மேலும் கூட்டுவதாக உள்ளதுசிங்கப்பூரில் தலைமை நூலகம் உள்ளிட்ட 21 நூலகங்களிலும், கனடாவில் ஒரு நூலகத்திலும் என்னுடையஎன்றாவது ஒருநாள்நூல் இடம்பெற்றுள்ளது என்பதை ஒரு மாபெரும் அங்கீகாரமாக கருதுகிறேன். இதற்கான முயற்சியில் ஈடுபட்ட முகமறியா தமிழார்வல நெஞ்சங்களுக்கு என் அன்பும் நன்றியும் உரித்தாகட்டும்.


மகிழ்ச்சி 3
பாரீஸில் வசிக்கும் ஃபேஸ்புக் தோழி ஒருவர், சென்றவாரம் அனுப்பிய செய்தியில், தற்சமயம் உங்களுடையஎன்றாவது ஒருநாள்நூலைத்தான் வாசித்துக்கொண்டிருக்கிறேன் என்று குறிப்பிட்டு உங்களுடைய படைப்புகள் மேலும் இருந்தால் வாசிக்கத்தாருங்கள் என்று கேட்டபோது, உவகையின் உச்சம் சென்றேன். வாசக அங்கீகாரம் ஒரு பெரும் அங்கீகாரமன்றோ?


மகிழ்ச்சி 4

(நண்பர் கலாகுமரன் அவர்களுக்கு நன்றி)

ப்ரதிலிபியில் என்னுடைய முதல் மின்னூல் வெளியானது மகிழ்வின் ஏடுகளில் மற்றொன்று. ‘அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ்?’ என்னும் 32 அத்தியாயங்கள் கொண்ட அத்தொடர்கதையின் முகப்பு ஓவியத்தை வழங்கிய ஓவிய நண்பர் கலாகுமரன் அவர்களுக்கு என் அன்பான நன்றி. இவர் இனியவை கூறல் என்ற வலைப்பூ வழியே பதிவுலக நட்புகளுக்கு பரிச்சயமானவர்.  

இவைபோக, பரபரப்பான பதிவுலகில் சகபதிவர்களின் மனத்தில் நமக்குமொரு இடம் ஒதுக்கப்பட்டு நம் கருத்துகளுக்கும் மதிப்பளிக்கப்படுகிறது என்றால் கூடுதல் மகிழ்விற்கு சொல்லவும் வேண்டுமா?


மகிழ்ச்சி 5


சமீபத்தில் ஃபேஸ்புக்கில் நான் பகிர்ந்திருந்த குடி குறித்த என் கவிதையை தன்னுடைய 'அவர்கள் உண்மைகள்' தளத்தில் பகிர்ந்து சிறப்பித்தமைக்காகவும், கோடைவகுப்புகள் குழந்தைகளுக்கு நன்மையா தீமையா என்ற தலைப்பில் மற்றப் பதிவுலகப் பிரபலங்களின் கருத்துகளோடு என்னுடைய கருத்தையும் வெளியிட்டு பெருமைப்படுத்தியமைக்காகவும் நண்பர் மதுரைத்தமிழன் அவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.  
தொடர்ந்துவந்து ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் பதிவுலக நட்புகள் அனைவருக்கும் அன்பான நன்றி.