31 October 2019

வரகரிசிச்சோறும் வழுதுணங்காய் வாட்டும்

தோட்டத்துப் பிரதாபம் - 7

தோட்டத்து விளைச்சல்

கத்தரிக்காய் சாப்பிடுவதென்பது எனக்கு அல்வா சாப்பிடுகிற மாதிரி. எனக்காகவே அம்மா மீன் குழம்பில் தக்காளிக்காய் போடுவாங்க என்று சொன்னேன் அல்லவா? இலவச இணைப்பாக கத்தரிக்காய், மாங்காய் போடுவதுண்டு. கத்தரிக்காய் எனக்கே எனக்கு மாத்திரம். கத்தரிக்காய் கேட்டு அடம்பிடித்து ஆத்தாவிடம் மொத்து வாங்கிய கதையைக் கேட்டாலே உங்களுக்குத் தெரிந்துவிடும் கத்தரிக்காய் எனக்கு எவ்வளவு இஷ்டம் என்பது.

பள்ளியில் என்னைச் சேர்க்கும் வரை தாத்தா வீட்டில்தான் வளர்ந்தேன். முதல் பேத்தி என்பதால் பயங்கர தாத்தா செல்லம். அப்போது எனக்கு மூன்று அல்லது நான்கு வயதிருக்கலாம். அன்று வீட்டில் மீன்குழம்பு. மதிய உணவுக்காக தாத்தா வழக்கம்போல் வீட்டுக்கு வந்தார். "பாப்பா சாப்பிட வாம்மா" என்று அழைத்து அவரது தட்டில் பரிமாறப்பட்ட மீனை முள் நீக்கி வாஞ்சையுடன் எனக்கு ஊட்ட, நான், "எனக்கு மீனு வேணாம், கத்திரிக்காதான் வேணும்" என்றேன். கொடுப்பதைச் சாப்பிடாமல் அந்த வயதில் எத்தனை நாக்கு ருசி பாருங்க! எல்லாம் தாத்தா கொடுக்கிற இடம்தான்!

மீன்குழம்புக்குத் தயாராக.. 

அடுத்த நொடியே தாத்தாவிடமிருந்து ஆணை பறந்தது. "யாரங்கே, உடனடியாய் என் பேத்திக்குக் கத்தரிக்காய் சமைத்துக் கொடுங்கள்" கிட்டத்தட்ட அப்படிதான் ஆனது நிலைமை. அணைக்கப்பட்டிருந்த விறகடுப்பு மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு... அவசர அவசரமாய் ஒரு கத்தரிக்காய் எங்கிருந்தோ வருவிக்கப்பட்டுநாலைந்து துண்டமாய் நறுக்கப்பட்டு... உப்பு சேர்த்து அவிக்கப்பட்டு... பின் குழம்பிலிடப்பட்டு... இவ்வாறாக பல பாடுபட்டு இறுதியாக என் நாவுபட்டு... தன் பிறவிப்பயனை அடைந்தது அன்று ஒரு கத்தரிக்காய்!

கத்தரிக்காய் வேகும்வரை பணிக்குத் திரும்பாமல் 'இன்னுமா வேகல? இன்னுமா வேகல?' என்று ஆத்தாவையும் கத்தரிக்காயையும் ஒருசேர மிரட்டிக்கொண்டிருந்தார் தாத்தா.

தாத்தா வேலைக்குப் போனபிறகு ஆத்தா என் கன்னத்தில் இடித்து, "ஏண்டி, மீனு வேணாம்னு கத்திரிக்கா கேட்டே, வீட்டுல இருந்துச்சி, ஆக்கித் தந்தாச்சி, கத்திரிக்கா இருக்கையிலே மீனு கேட்டா என்னாடி பண்ணியிருப்பாரு உங்க தாத்தா? தூண்டிலை எடுத்துகிட்டு ஏரிக்கரையப் பாக்கப் போயிருப்பாரோ? போனாலும் போவாரு, சொல்லமுடியாது" என்று அலுத்துக்கொண்டார். அந்த ருசி என்னவோ இன்று வரை மாறவே இல்லை.

கத்தரிப்பூவில் ஐரோப்பியத் தேனீ

கத்தரிப்பூவில் ஆஸ்திரேலியத் தேனீ


வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்
முரமுரென வேயினித்த மோரும் திறமுடனே
புல்வேளூர்ப் பூதன் புகழ்ந்துபரிந் திட்டசோ(று)
எல்லா உலகும் பெறும்.

என்று ஔவையையே தன் பெருமை பாடவைத்த கத்தரிக்காய்க்கு முன் நான் எம்மாத்திரம்? 

வரகரிசிச்சோறும் வழுதுணங்காய் வாட்டும்
கூடவே வீட்டு மோர்மிளகாயும்

புல்வேளூர் என்ற ஊரில் வாழ்ந்துவந்த பூதன் என்பவன், ஒரு சமயம் ஔவைக்கு அளித்த விருந்தானது இந்த உலகையே பரிசாக நல்கியதற்கு இணையாக மதிக்கத்தக்கதாம். அப்படி என்ன பெரிய விருந்தாம்? வழுதுணங்காய் என்றால் கத்திரிக்காய். வரகரிசிச்சோறும் கத்திரிக்காய்ப் பொரியலும் மோரும்தான் அந்த விருந்து. பசியோடிருப்பவர்க்கு மனமுவந்து அளிக்கும் உணவு எளியதாய் இருந்தாலும் அதற்கு இந்த உலகும் ஈடில்லைதானே

வரகரிசிச்சோறும் வழுதுணங்காய் வாட்டும் எப்படியிருக்கும்? சாப்பிட்டுப் பார்த்தாலென்ன என்ற ஆசை வந்துவிட்டது. வழுதுணங்காய் கைக்கெட்டும் தூரத்தில் வீட்டுத் தோட்டத்தில் இருக்கிறது. வரகரிசி

வரகரிசி

கிடைக்குமோ கிடைக்காதோ என்று நினைத்தேன். அதுவும் கடையில் கையெட்டும் தூரத்தில் கிடைத்தது. வாங்கி வந்து ஆக்கி ருசித்தாயிற்று. ஔவை சும்மா சொல்லவில்லை, சொர்க்கம்தான்.

ஏழெட்டு கிலோ இருக்கலாம்

இவர்கள் எங்க வீட்டுக் கருப்பழகிகள். புரியவில்லையா? Black beauty எனப்படும் கத்தரியினம். ஒவ்வொன்றும் சுமார் அரைக்கிலோ இருக்கும். இவ்வளவு பெரிதாகும் என்று எனக்கு முதலில் தெரியவே இல்லை. ஓரளவு வளர்ந்தவுடனேயே பறித்து சமைத்துவிடுவேன். கத்தரிக்காய்கள் பிஞ்சு விட்டிருந்த சமயம் கணவரும் நானுமாக மூன்று வாரங்களுக்கு ஒரு திடீர்ப் பயணம்.  வெண்டைகளின் காய்ப்பும் உச்சத்தில் இருந்த நேரம். தவிர்க்கமுடியாத பயணம் என்பதால் தோட்டத்துப் பக்கம் எட்டிக்கூட பார்க்காத மகனைக் கெஞ்சி வாரமொருமுறையாவது தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சச் சொல்லிவிட்டுச் சென்றிருந்தேன். சரி சரி என்றான். ஊரிலிருந்து எப்போது பேசினாலும் 'மழை பெய்யுதும்மா.. மழை பெய்யுதும்மா' என்பான். எனக்கோ ஆச்சர்யம். நான் இருக்கும் வரை மழைக்கான சிறு அறிகுறி கூட தென்படவில்லை. என் தோட்டத்துச் செடிகளை வாழ்வித்த இயற்கைக்கு நன்றி சொல்லி ஆனந்தித்தேன்.

அறுநூறு கிராம்

ஊரிலிருந்து திரும்பியது இரவு நேரம் என்பதால் ஆர்வத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு விடியக் காத்திருந்தேன். விடிந்ததும் விடியாததுமாக தோட்டத்துக்கு ஓடிப்போய்ப் பார்த்தால், என் கண்களையே நம்ப முடியவில்லை. கத்தரிக்காய்கள் எல்லாம் குண்டு குண்டாய்க் காய்த்து, செடிகள் பாரந்தாங்காமல் எல்லாம் தரையோடு தரையாய்க் கிடந்தன

குண்டு கத்தரிக்காய்

ஒவ்வொன்றும் அரைக்கிலோ தேறும். சில காய்கள் மழைநீரிலேயே ஊறிக்கிடந்து அழுகிவிட்டிருந்தன. எல்லாவற்றையும் பறித்துவிட்டு செடிகளுக்கு முட்டுக்கொடுத்து நிமிர்த்துவைத்தேன்அன்றைக்குப் பறித்தவை மட்டுமே ஏழெட்டு கிலோ இருக்கலாம்

முற்றவே இல்லை

கத்தரிக்காய்கள் நிச்சயம் முற்றியிருக்கும் என்று நினைத்து ஒன்றை அரிந்து பார்த்தால், அங்கேயும் ஓர் ஆச்சர்யம். முற்றலுக்கும் முந்தைய பருவத்தில் இருந்தது. எல்லாவற்றையும் அரிந்துபார்த்தேன். ஒன்றும் சோடைபோகவில்லை. உடனே உப்புநீரில் அரை அவியலாய் அவித்தெடுத்து வற்றல் போட்டு பத்திரப்படுத்திவிட்டேன்.

கத்தரி வற்றல்

குளிர்காலத் துவக்கத்தில் காய்ப்பும் குறைந்துவிட்டது. செடிகளில் பூச்சித்தொற்றும் ஏற்பட ஆரம்பித்துவிட்டது. குளவிகளையும் பொறிவண்டுகளையும் காணவில்லை. குளிர்காலம் முடியும்வரை அவற்றின் வருகை குறைவாகத்தான் இருக்கும் என்பதால் பூச்சிகளைக் கட்டுப்படுத்தவும் வழியில்லை. நன்றாக இருந்த ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றை வெட்டியெறிந்துவிட்டேன். அந்த ஒன்றும் கூட முடிந்தவரை ஒன்று இரண்டு என காய்த்துக்கொண்டு என் கத்தரிக்காய் ஆவலை அவ்வப்போது பூர்த்தி செய்துகொண்டிருக்கிறது. விதைக்காக சில காய்களைப் பழுக்கவிட்டிருக்கிறேன்.

கத்தரிப்பழம்? 

கத்தரிக்காய் காய்க்காவிட்டாலும்தான் என்ன, அதுதான் கத்தரி வற்றல் கைவசம் இருக்கிறதே. அடுத்த சீசன் வரை அசத்திவிடலாம்.

(பிரதாபங்கள் தொடரும்)


  

19 October 2019

கூடு பார் கூடு பார் - சிறார் பாடல்


கூடு பார் கூடு பார் பறவைக்கூடு பார்
முட்டையிட்டு அடைகாக்க குட்டி வீடு பார்

கட்டுமானம் வியக்கவைக்கும் காக்கைக் கூடு பார்
கச்சிதமாய் முள்ளும் சுள்ளியும் வைத்துக்கட்டுது பார்

வட்டத்துளை வெட்டிவைத்த அட்டைப் பெட்டி பார்
சிட்டுக்குருவி உள்ளே சென்று கூடு கட்டுது பார்

பனைமரத்தின் உச்சியிலே தொங்கும் கூடு பார்
தூக்கணாங்குருவிகளின் திறமை வியந்து பார்.

மாவிலைகள் சேர்த்து தைக்கும் தையல்சிட்டு பார்
கூர் அலகால் நாரிழுத்து கோக்கும் அழகு பார்

சின்னக்குச்சிகள் கொண்டுவரும் கொண்டைக்குருவி பார்
கிண்ணம்போல வளைத்துக் கட்டும் கூட்டினழகைப் பார்

குழைத்தமண்ணால் கூடுகட்டும் தகைவிலான்கள் பார்
சன்னமான வாசல் வைத்த சாமர்த்தியம் பார்

பொந்துக்குள்ளே முட்டையிடும் பச்சைக்கிளிகள் பார்
பஞ்சும் இறகும் மெத்தையிட்டு குஞ்சைக் காக்குது பார்

உயரக்கிளையில் இருக்குமந்தப் பருந்தின் கூட்டைப் பார்
பெரிய குச்சிகள் அடுக்கிக்கட்டிய பிரமாண்டத்தைப் பார்

ஆட்கள் கண்டால் எச்சரிக்கும் ஆட்காட்டியைப் பார்
வெட்டவெளியில் கூடமைத்து காவல் நிற்பதைப் பார்

பாடுபட்டுக் கூடுகட்டும் பறவைத் திறமை பார்
கூடு கட்டத் தெரியாத குயிலின் நிலையைப் பார்

தேடிப்போய் காக்கைக்கூட்டில் முட்டையிடுது பார்
பாடுகையில் குயிலின் குஞ்சு கொத்துப்படுது பார்

அலகாலே பறவை கட்டும் அழகுக் கூடுகள் பார்
அன்பு அக்கறை திறமை யாவும் அங்கே உண்டு பார்

பறவைக்கூடு பலவிதம் பார் ரசித்துப் பார்
தொந்தரவு செய்திடாமல் தொலைவில் நின்றே பார்!


15 October 2019

குகனொடும் ஐவரானோம்


கடந்த வருடம் கம்பன் விழாவில் வாய் தந்தன கூறுதியோ என்ற தலைப்பில் நான் வாசித்த கவிதை கேட்டு நடுவர் திரு. பிரசாந்தன் அவர்கள் அம்மேடையிலேயே “வருவாயா உன்தமிழை வருடந்தோறும் வந்தெமக்குத் தருவாயா” என வேண்டுகோள் விடுத்தார். நானும் மகிழ்வோடு ஆமோதித்தேன். இந்த வருடம் அழைப்பும் வந்தது. தலைப்பும் கொடுக்கப்பட்டது.

கவிதையுள் கிடக்கும் கவிதைகள் என்ற பெருந்தலைப்பில் ஒருவனைத் தந்திடுதி, ஏய வரங்கள் இரண்டு, மும்மைசால் உலகு, நாலு வேதமும், குகனொடு ஐவரானோம் எனத் தரப்பட்ட உப தலைப்புகள் ஐந்தினுள் குகனொடு ஐவரானோம் என் தெரிவு. 

கம்பராமாயணத்தைக் கரைத்துக் குடித்தவர்கள் மத்தியில் அவ்வப்போது தொட்டு நா தடவி சப்புக்கொட்டும் எனக்கு இக்கவியரங்கம் மிகப்பெரிய சவால். மிகுந்த பிரயாசையோடு, வாசிக்கவேண்டிய கவிதையைத் தயார் செய்தேன். வாசிக்கும் நாளை ஆவலோடு எதிர்பார்த்திருந்த வேளையில் எதிர்பாராத உடல்நலக்குறைவு. நெஞ்சு சளியும் கடுமையான இருமலும் காய்ச்சலும் வாட்ட வேறுவழியில்லாமல் பங்கேற்கவியலாமற்போயிற்று. பெருத்த வருத்தத்தோடு கவிதையை மட்டும் (ஒருவேளை வேறு எவரைக் கொண்டேனும் அரங்கில் வாசிக்க வைக்கக்கூடும் என்றெண்ணி) அமைப்பாளர்களுக்கு அனுப்பிவைத்தேன். ஆனால் வாசிக்கப்படவில்லை. எழுதிய அதை ஏன் வீணாக்க வேண்டும், ஒரு பதிவாக்கிவிடலாம் என்ற எண்ணத்துடனும் ஆவணப்படுத்தவும் வேண்டி இங்கே பகிர்கிறேன்.


குகனொடும் ஐவரானோம்
ஆழிமூழ்கி மூச்சடக்கி முக்குளித்து
தாழிநிறைக் கொணர்ந்து தரைகுவித்த
பாழிமுத்துக்களாம் பைந்தமிழ்ப்பாக்களால்
கேழில் பெருங்காப்பியந்தனைப்
கேடின்றிப் படைத்த… 
ஏழில் முதல்வனை எழிலுடை ஐயனை
மையோ மரகதமோ மறிகடலோ
மழை முகிலோவென்று
மயக்கும் அழியா அழகுடையானை
ஏத்தித் துதித்த
பாழில் கவி கம்பநாடனை
பார் புகழும் கவிப்பெம்மானை
வாழியென்று வாழ்த்தி வணங்கி
சூழ்சான்றோர் தாள்பணிந்திவள்
அரங்கேற்றும் சிறு கவி இது.

ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று
ஒரு பூசை முற்றவும் நக்குபு புக்கென
ஆசை பற்றி அறையலுற்றேன் - மற்று
இக்காசில் கொற்றத்து இராமன் கதைஅரோ என
கவிச்சக்கரவர்த்தி கம்பனும் பணிவாய்
ராமகாவியப் பாற்கடலை தன் நாவால்
நக்கப்புகுந்த பூனையென தன் பாவால்
தருக்கின்றி செருக்கின்றி செப்பிடும்போழ்
ஒற்றைத் துளியும் உயர்பாற்கடலாகும்
சிற்றெறும்பினும் சிறியாள் அகம்
கற்றவர் முன் கவி புனையப் புகும்
பெரும்பேராசையை என் சொலத் தகும்?
எண்ணிப்பார்க்கின் என்மனம் தன்னுள் நகும்.

எனினும் விட விரும்பா உள்ளம்
எந்நாளும் விடம் விரும்பாதுள்ளம்
அமிழ்ந்திடினும் பருகிடலாம்
அமிழ்தில் ஒரு துளியேனும் என்று
அவை முன் எழுந்தேன்
அடியேன் துணிவோடு இன்று.

கம்பன் எமக்களித்த காப்பியக் கருவூலத்தில்
கண்கள் பறிக்கின்றன கோடிக்கவி முத்துக்கள்
இதையோ அதையோ உதையோவென்று
அலையும் நெஞ்சை ஆசுவாசங்கொள்ளென்று
ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்தென்று
எண்களால் சுட்டியது தானே கவிமன்று.
எட்டியெடுக்க எம் கையிலே கிட்டியது
ஆங்கு கொட்டிவைத்த ஐந்திலே ஒன்று. 

அஞ்சிலே ஒன்றைத் தோண்டவில்லை
புவி அகழ்ந்து புதையுண்டதைப் பெறவில்லை    
அஞ்சிலே ஒன்றைத் தாண்டவில்லை
கடல் கடந்து உடல் வருத்திப் பெறவில்லை
அஞ்சிலே ஒன்றைத் தீண்டவில்லை
அனல் புகுந்து தணல் வெந்து அடையவில்லை
அஞ்சிலே ஒன்றை வேண்டவில்லை
ஆகாயம் பாய்ந்து அரும்பாடுபட்டுப் பெறவில்லை
அஞ்சிலே ஒன்றை சீண்டவில்லை
காற்றைத் துரத்திக் கடிந்து கையிற் பெறவில்லை

எனினும்
அஞ்சிலே ஒன்றைப் பெற்றேன்
அஞ்சலிலே அதனைப் பெற்றேன் அதனால்
குகனோடும் ஐவரானோம் என்னும் குளிர்முத்து
என் குவிந்த கரங்களுக்குள் வசமாயிற்று இன்று.

அண்ணல் வாய்மொழி கூறும் கன்னல் கவிமொழியிது
அன்பை வழிமொழியும் அழகுக் கவிதை இது.
பத்தெழுத்தில் வடித்த பைந்தமிழ்ப் பாவரி இது.
உத்தம நற்குணங்காட்டும் உயரிய குறும்பா இது.

குகனொடும் ஐவரானோம் முன்பு
பின் குன்று சூழ்வான் மகனொடும் அறுவரானோம்
எம்முழை அன்பின் வந்த அகனமர் காதல் ஐய!
நின்னொடும் எழுவரானோம்
புகலரும் கானம் தந்து
புதல்வரால் பொலிந்தான் நுந்தை என்று
புகழ்கிறான் அன்பின் உரு அண்ணல்.

சகலரும் தம் சகோதரம் என்று
பகிர்கிறான் பாசத்தின் பெரும் விள்ளல்.
இகமதில் இவனை சரணடைந்தோர்க்கு
இதந்தருகிறான் பரிவில் உயர் வள்ளல்.

உடன்பிறந்தவன் உயர் அறம்பிறழ்ந்து
பிறன்மனை கவர்ந்து பிழைத்தமை கண்டு
போதித்தும் வாதித்தும் உபதேசித்தும்
சாதிக்க ஏலாது சங்கடம் மிகக்கொண்டு 
அடங்கொண்டானை விட்டகன்று
அறங்கொண்டானை அண்டிநின்றபோழ்
உரங்கொண்ட உருவாய் நின்றவன்
திறங்கொண்ட திருவாய் மலர்ந்து
உனையும் ஏற்றேன் உடன்பிறந்தானென்ற கணமே
உந்தையென உரிமையும் தந்து உயர்கிறான் மனமே

அண்ணன் என்னடா தம்பி என்னடா என்று
ஓர் உதரம் தோன்றியோர்க்குள்ளும் உருவாகும்
உயிரிற் பிணக்கம் உறவிற் சுணக்கம்
குறையும் இணக்கம் உறையும் நுணக்கம்

ஒத்திசையும் நல் உள்ளங்களும்
ஒத்திசையா பல் இல்லுள்ளும்
அழுதாலும் தொழுதாலும்
அணையேனென்று ஆணையிடும்
விழுந்து மடிந்தாலும் நின்முகத்தில்
விழியேனென்று சூளுரைக்கும்

ஆத்ம நண்பனென நயக்கும் நெஞ்சும்
அண்ணன் தம்பியென ஏற்க அஞ்சும்
ஒத்த உணர்வால் ஒருமிக்கும் உள்ளம்
உறவென்கையில் ஓரடி பின்செல்லும்

சொத்திற் பங்கு குறையுமோவென்று
சொந்தங்கொள்ளத் தயங்கும் வையம்
மடியிலிடங்கொடுத்தால் பையத்
தலையேறிவிடுமோ என்னும் ஐயம்.

உடைந்தவர்க்கு உதவான் ஆயின்,
உள்ளது ஒன்று ஈயான் ஆயின்
அடைந்தவர்க்கு அருளான் ஆயின்
அறம் என் ஆம்? ஆண்மை என் ஆம்?
எனும் ராமனின் வாய்மொழி வழியே
அன்பும் கருணையும் கைப்பொருள் ஈதலும்
பண்பும் அறமும் ஆண்மையுமென்றே
கம்பன் காட்டிய வாழ்வியல் வழியே
சத்திய தர்மத்துக்கு சான்றானவன்
சகோதரத்துவத்துக்கும் சாட்சியானான்.

மாற்றாந்தாய்களும் மெச்சும் தனயனானவன்
அவர்தம் மக்களுக்கு உயிரொக்கும் தமையனானவன்
இளவல் மூவரையும் இளவலெனாது
புதல்வரெனவே போற்றிப் பொலிந்தனன்
அருள்தரு கமலக் கண்ணன் வானின்
திரள்மேகமென கனிவைப் பொழிந்தனன்

போதும் போதுமெனும் மனமிலாது
காணும் உயிர்க்கெலாம் கருணை வார்த்தனன்
பாதம் பற்றிய கரங்களை பேதமிலாது
ஆரத்தழுவி அன்பைப் போர்த்தினன்.

கங்கைத்துறை விடும் தொன்மையான்
கற்காணும் திண்மையான்
குகனென்னும் நல்லானின்
குணம் மெச்சி மனம் கொண்டான்
நாவாய் வேட்டுவன் நாயடியேன் என்றோனை
யாதினும் இனிய நண்பென பிரேமை கொண்டான்.
நான் உளதனையும் நீ இனிதிரு என்றோனை
என் உயிரனையாய் நீயென்று தயை கொண்டான்
நொடியும் உம்மைப் பிரிகிலேன் ஐயனென
அடிபணிந்தானோடு ஐவரென உருக்கொண்டான்.

வாலியின் பின்னால் வந்துதித்தவன்
சுக்ரீவன் எனும் வானரத்தலைவன்
சரண் என புகுந்தான் திருவடி தஞ்சம்
அரண் எனக் காக்க
ஐயனவன் கொண்டான் நெஞ்சம்
அரண்ட வானரத்தின் விசனம் போக்கி
செற்றாரும் உற்றாரும் பொதுவென்றாக்கி
இன்னுயிர்த் துணைவன் நீ எனும் உறவாக்கி
ஆறாம் பிறப்பாய் ஆற்றினான் அன்பைத்தேக்கி.

ஆறோடு ஆறாத அன்புமனம் அது
ஆரோடும் அன்புறவாட ஏங்கும் குணம் அது.
பாசறையிலும் பாசங்காட்டும் நற்பண்பு அது
எதிரியானாலும் இரங்கியருளும் உயர்மாண்பு அது.

அறவினை இறையும் இல்லா
அறிவிலா அரக்கர் குல வீடணனோடு
எழில்நம்பியும் உடன்பிறந்தார்
எழுவரென்று ஏம்பலுற்றான்.

தாம் ஏற்றோம் தம்மவராய் ஏற்றோம்
தம்பிகள் ஏற்பரோ தந்தைக்கு ஏற்போவென்று
ஐயங்கொள்ளவில்லை ஐயன்
மாறாய் புதல்வரால் பொலிந்தான் நுந்தை
என கவிமொழியால் கவர்கிறான் நம் சிந்தை

பரமன் என்றாலும் பாதம் பற்றிய கரங்களைத்
தானும் பற்றிக் கொள்கிறான் பாசமாய்.
அரசன் என்றாலும் அடி பணிந்த தலைகளை
கரமேந்திக் கொள்கிறான் பிரியமாய்.

மனமொப்பி அணைத்துக்கொள்ளும் அவ்வாதுரம்
மனுதர்மம் மீறிய மானுடத்தின் பேரறம்.
சினந்தப்பியோரைச் சேர்த்தணைக்கும் சீர்குணம்
இனங்காக்கும் சீர்மை செப்பும் சிறப்பறம்

ஆள் ஐயா..
உனக்கு அமைந்தன
மாருதம் அறைந்த பூளை ஆயின கண்டனை..
இன்று போய் போர்க்கு நாளை வா என
அன்று அவன் நல்கிய நன்மொழியை
நன்றென உணர்ந்து இலங்கைவேந்தன்
ஒருவேளை
ஒருவேளை

தாள்பணிந்து தண்டனிட்டு சரணடைந்திருந்தால்
விழிதிறந்து வேற்றுமனையாளை விட்டிருந்தால்
பழியுணர்ந்து பாவத்தினின்று மீண்டிருந்தால்
பிழையுணர்ந்து பரிகாரம் கோரியிருந்தால்

நின்னோடு நாம் எண்மரானோமென்று
இன்னகையோடு இயம்பியிருப்பான்
தன்னிகரில்லா தமையனென்று
பொன்வரிகளைப் பொறித்திருப்பானோ
கவிப்பெருமானும் பெருங்கருணை கொண்டு.

&&&&&&