19 October 2019

கூடு பார் கூடு பார் - சிறார் பாடல்






கூடு பார் கூடு பார் பறவைக்கூடு பார்
முட்டையிட்டு அடைகாக்க குட்டி வீடு பார்

கட்டுமானம் வியக்கவைக்கும் காக்கைக் கூடு பார்
கச்சிதமாய் முள்ளும் சுள்ளியும் வைத்துக்கட்டுது பார்

வட்டத்துளை வெட்டிவைத்த அட்டைப் பெட்டி பார்
சிட்டுக்குருவி உள்ளே சென்று கூடு கட்டுது பார்

பனைமரத்தின் உச்சியிலே தொங்கும் கூடு பார்
தூக்கணாங்குருவிகளின் திறமை வியந்து பார்.

மாவிலைகள் சேர்த்து தைக்கும் தையல்சிட்டு பார்
கூர் அலகால் நாரிழுத்து கோக்கும் அழகு பார்

சின்னக்குச்சிகள் கொண்டுவரும் கொண்டைக்குருவி பார்
கிண்ணம்போல வளைத்துக் கட்டும் கூட்டினழகைப் பார்

குழைத்தமண்ணால் கூடுகட்டும் தகைவிலான்கள் பார்
சன்னமான வாசல் வைத்த சாமர்த்தியம் பார்

பொந்துக்குள்ளே முட்டையிடும் பச்சைக்கிளிகள் பார்
பஞ்சும் இறகும் மெத்தையிட்டு குஞ்சைக் காக்குது பார்

உயரக்கிளையில் இருக்குமந்தப் பருந்தின் கூட்டைப் பார்
பெரிய குச்சிகள் அடுக்கிக்கட்டிய பிரமாண்டத்தைப் பார்

ஆட்கள் கண்டால் எச்சரிக்கும் ஆட்காட்டியைப் பார்
வெட்டவெளியில் கூடமைத்து காவல் நிற்பதைப் பார்

பாடுபட்டுக் கூடுகட்டும் பறவைத் திறமை பார்
கூடு கட்டத் தெரியாத குயிலின் நிலையைப் பார்

தேடிப்போய் காக்கைக்கூட்டில் முட்டையிடுது பார்
பாடுகையில் குயிலின் குஞ்சு கொத்துப்படுது பார்

அலகாலே பறவை கட்டும் அழகுக் கூடுகள் பார்
அன்பு அக்கறை திறமை யாவும் அங்கே உண்டு பார்

பறவைக்கூடு பலவிதம் பார் ரசித்துப் பார்
தொந்தரவு செய்திடாமல் தொலைவில் நின்றே பார்!


14 comments:

  1. Replies
    1. நன்றி ராமலக்ஷ்மி.

      Delete
  2. வாவ்! பறவைகள் பலவிதம்! அவற்றின் கூடுகளும் பலவிதம்! உங்கள் பாடல் கற்றுத்தருகிறது அருமையாய்! வாழ்த்துகள் கீதமஞ்சரி

    ReplyDelete
  3. அருமையான பாடல்.
    பறவைகளின் கூடு எத்தனை விதம் !
    சொல்லிய விதம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோமதி மேடம்.

      Delete
  4. பறவைக் கூடுகளை மிகவும் ரசித்து எழுதியது தெரிகிறது

    ReplyDelete
  5. அழகிய சிறுவர் பாடல்.

    ReplyDelete
  6. அற்புதமான சொல்லாட்சிகள் , சிறுவர்களுக்கேற்ற பாடல் . பாராட்டுகிறேன் .

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.