28 July 2024

உலக இயற்கைப் பாதுகாப்பு தினம்

  

1. கடற்கரையோரம் இரைதேடும் கடற்புறா (Silver gull) 

இன்று ஜூலை 28-ஆம் நாள். உலக இயற்கைப் பாதுகாப்பு தினம் (World Nature Conservation Day). இன்றைய தினம்தான் ஆஸ்திரேலியாவில் தேசிய மரங்கள் தினமாகவும் (National Tree Day) கொண்டாடப்படுகிறது. 

2024-உலக இயற்கைப் பாதுகாப்பு தினத்தின் மையக்கரு இதுதான்: இயற்கைப் பாதுகாப்பில் நவீனத் தொழில்நுட்பயைப் பயன்படுத்தி, மனிதர்களையும் இயற்கையையும் இணைத்தல்.

இயற்கையைப் பாதுகாப்பது நம் கடமை அல்லவா? அதற்கொரு தினம் தேவையா? இயற்கையை அதன்போக்கில் இருக்கவிட்டாலே எந்தச் சேதமும் இன்றி சிறப்பும் செழுமையுமாக இருக்குமே! என்றெல்லாம் எண்ணத் தோன்றும். ஆனால் நாம் அதை அப்படி இருக்கவிட்டால்தானே? ஏற்கனவே காலநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல், கரியமில வாயு உமிழ்வு, பனிப்பாறைகள் உருகுதல், சுற்றுச்சூழல் சீர்கேடு, காடழிப்பு, அழிந்துவரும் உயிரினங்கள், இயற்கைச் சமன் குலைவு என பூமியின் இயல்புத்தன்மையை சீர்குலைக்கும் பல ஆபத்தான காரணிகளுக்கு மனிதர்களாகிய நாம் காரணமாக இருக்கிறோம்.

பூமிப்பந்துக்கும் அதைச் சார்ந்து வாழும் உயிரினங்களுக்கும் ஆபத்தை விளைவித்த, விளைவித்துக் கொண்டிருக்கும் நமக்கே அந்த ஆபத்திலிருந்து பூமியை, அதன் இயல்பை, இயற்கையைப் பாதுகாக்கும் பொறுப்பு இருக்கிறது. நம்முடைய காலத்துக்குப் பிறகு இந்தப் பூமியை அதன் இயல்புத்தன்மை கெடாமல் நம்முடைய வருங்கால சந்ததிகளுக்கு ஒப்படைக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. மாசில்லாத சூழல், சுத்தமான காற்று, நீர்வளம், நிலவளம், காட்டுவளம், பல்லுயிர்வளம் என அனைத்து வளங்களையும் எவ்விதச் சேதமுமின்றி அவர்களிடம் கையளிக்கவேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது.  

அதனால்தான் ‘உலக இயற்கைப் பாதுகாப்பு தினம்’ என்று ஒரு தினத்தை அடையாளப்படுத்தி, அதன்மூலம் இயற்கையைப் பற்றிய புரிதலையும் இயற்கை வளங்களைச் சிதைக்காமல் பாதுகாக்கவேண்டிய அவசியத்தையும், அவற்றின்மீதான நம் பொறுப்பையும் நாமும் உணர்ந்து மற்றவர்களுக்கும் உணர்த்தவும் வலியுறுத்தவும் வேண்டியிருக்கிறது.

2. மழைக்காடு

இன்றைய தினம் ஆஸ்திரேலியாவின் ‘தேசிய மரங்கள் தினமாகவும்’ கொண்டாடப்படுவது தற்செயல் ஒற்றுமை. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை இத்தினம் கொண்டாடப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் பூர்வீக மரங்களைப் பாதுகாக்கும் முயற்சியாகவும், அவற்றைக் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் முக்கியமாக குழந்தைகளிடம் உண்டாக்கும் முகமாகவும் இந்நாள் கொண்டாடப்படுகிறது. வீடுகளிலும் வளாகங்களிலும் புதிய மரக்கன்றுகளை நடுதல், ஓவியம், நடனம் மற்றும் ஆவணப்படங்கள் மூலம் பூர்வீக மரங்கள் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மேற்கொள்ளுதல், தேசியப் பூங்கா மற்றும் வனப்பகுதிகளில் இயற்கை சார்ந்த நடை, உள்ளூர் பூங்காக்களில் உள்ள பூர்வீக மரங்கள், அவற்றின் பயன்கள் மற்றும் அவற்றைச் சார்ந்து வாழும் உயிரினங்கள் குறித்து அறிந்துகொள்ளுதல் என பல வகையிலும் செயல்படுத்தப்படுகிறது.

ஆஸ்திரேலிய தேசிய மரங்கள் தினமான இன்று ஆஸ்திரேலியாவின் பூர்வீக மரங்கள் மற்றும் அவற்றைச் சார்ந்து வாழும் உயிரினங்கள் சிலவற்றின் படங்களைப் பகிர்ந்து மகிழ்கிறேன். 

3. தங்க வாட்டில் மரம்

4. வாட்டில் காய்களைக் கொறிக்கும் Galah பறவைகள்
5. வாட்டில் மரக் காய்களைத் தேடிவந்த காக்கட்டூகள்

6. மேலலூக்கா மரங்கள்

7. மேலலூக்கா மரத்தில் கூடு கட்டி வசிக்கும் பாம்புத்தாரா

8. மேலலூக்கா மரத்தில் ஓய்வெடுக்கும் சிரிக்கும் குக்கபரா

9. யூகலிப்டஸ் மரம்

10. யூகலிப்டஸ் மரங்கள்



11. யூகலிப்டஸ் மரத்தில் வசிக்கும் பழந்தின்னி வவ்வால்கள்

12. யூகலிப்டஸ் பூக்களில் தேன்குடிக்க வந்த ரெயின்போ லாரிகீட்கள்

13. யூகலிப்டஸ் மரப்பொந்தில் முட்டையிட்டுள்ள ரெயின்போ லாரிகீட்
14. யூகலிப்டஸ் மரத்தில் கூடு கட்டி அடைகாக்கும் ஆஸ்திரேலிய மேக்பை 
15. யூகலிப்டஸ் மரத்தின் மீது கட்டப்பட்டுள்ள கரையான் புற்று

16. மகடாமியா மரம்

17. மகடாமியா மரத்தில் வசிக்கும் ஆற்றல்மிகு ஆந்தை

18. வுல்லமி பைன் மரம்

19. குவீன்ஸ்லாந்து பாட்டில் மரம்

20. ரெட் சில்க்கி ஓக் மரம்

21. மார்ட்டன் பே ஆலமரம் (1)

22. மார்ட்டன் பே ஆலமரம் (2)

23. ஆலம்பழம் தின்னும் கந்தகக்கொண்டை காக்கட்டூ

24. மலைச்சவுக்கு மரம்

25. மலைச்சவுக்கு பூக்களுடன் 


26. இலவாரா தீச்சுவாலை மரம் (1)

27. இலவாரா தீச்சுவாலை மரம் (2)

28. நார்ஃபோக் தீவு பைன் மரங்கள்

29. சவுக்கு மரத்தில் வசிக்கும் பழந்தின்னி வவ்வால்கள்


‘பள்ளிக்கூட மரங்கள் தினம்’ ஜூலை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. அதன்படி இவ்வாண்டு கடந்த வெள்ளியன்று (ஜூலை 26) கொண்டாடப்பட்டது. இத்தினத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு மரங்களின் முக்கியத்துவம் எடுத்துரைக்கப்பட்டு, மரக்கன்றுகளை உருவாக்குவது, அவற்றை நடுவது, பராமரிப்பது, மரங்களை வகைப்படுத்தி அறிவது போன்ற பல்வேறு செயல்பாடுகளின் மூலம் அவர்களுடைய பங்கும் கடமையும் உணர்த்தப்படுகிறது. 

30. ஆலமரத்தின் அண்டைவேரில் தலைசாய்த்திருக்கும் குழந்தை

இயற்கையை நேசிக்கவும் இயற்கையோடு இயைந்து வாழவும்  அனுபவத்தின் வாயிலாகவே குழந்தைகள் அறிந்துகொள்ள இது போன்ற தினங்களும் கொண்டாட்டங்களும் நல்லதொரு வாய்ப்பாக அமைகின்றன. 

******

23 July 2024

அசத்தும் அழகு ஆர்க்கிட் மலர்கள் -1 (பூக்கள் அறிவோம் 111-114)

 ஆர்க்கிட் மலர்கள் (Orchids) 

உலகின் மிகத் தொன்மையான தாவரங்களுள் ஆர்க்கிட் தாவரமும் ஒன்று. ஆர்க்கிட் தாவரங்கள் நிலத்திலும் வளரும், மரத்திலும் வளரும். பாறை இடுக்கிலும் வளரும். ஒரு ஆய்வுக்கட்டுரையே சமர்ப்பிக்கும் அளவுக்கு அதிசயத்தன்மைகள் நிறைந்த ஆர்க்கிட் மலர்க்குடும்பத்துக்கு கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கும் மேலான வாழ்வியல் வரலாறு இப்புவியில் உண்டு.  அது கண்டறியப்பட்ட விதமே ஆச்சர்யமானது. 

1. விதவிதமான ஆர்க்கிட் மலர்கள் 

சுமார் 15 மில்லியனுக்கு முந்தைய ஆர்க்கிட் மகரந்தம் சுமந்த தேனீயின் புதைபடிமத்தை ஆய்வு செய்ததன் மூலம் ஆர்க்கிட் தாவர இனம் சுமார் நூறு மில்லியன் ஆண்டுகள் தொன்மையானது என்று அறியப்பட்டுள்ளது. மீப்பெரு கண்டமாக கண்டங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து இருந்த காலத்திலேயே ஆர்க்கிட் தாவர இனம் உருவாகியிருக்கலாம் என்றும் அதனால்தான் நீக்கமற அனைத்துக் கண்டங்களிலும் ஆர்க்கிட் தாவரங்கள் காணப்படுகின்றன என்றும் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.  

ஆர்க்கிட் பூக்கள் அழகு மட்டுமல்ல, செழுமை, உறுதி மற்றும் கம்பீரத்தின் அடையாளமாக விளங்குகின்றன. அன்பு, காதல் உள்ளிட்ட பல்வேறு உணர்வுகளின் தீவிர வெளிப்பாட்டுக்கு ஆர்க்கிட் பூக்கள் பரிசாக அளிக்கப்படுகின்றன. 

அண்டார்டிகா தவிர்த்து உலகின் எந்தப் பகுதியிலும் வாழும் தன்மையிலும், இரண்டு மி.மீ. முதல் இரண்டரை மீ. வரையிலுமாக பூக்களின் அளவுகளிலும்சில மாதங்கள் முதல் நூறு வருடங்கள் வரையிலான செடிகளின் ஆயுட்காலத்திலும்சில மணி நேரங்கள் முதல் ஆறு மாதங்கள் வரையிலான பூக்களின் வாடா இயல்பிலும்... என பல்லாயிரக்கணக்கான வகைகள் ஆர்க்கிட் குடும்பத்தில் இயற்கை மற்றும் செயற்கை வழிகளில் உருவாகியுள்ளன. இப்போதும் கூட வருடத்துக்கு நூறு புதிய கலப்பின வகைகளாவது உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

நாம் இனிப்புகளில் சுவையும் மணமும் கூட்டப் பயன்படுத்தும் வெனிலா எசன்ஸ் தயாரிக்கப் பயன்படும் வெனிலா மலரும் ஆர்க்கிட் மலரினம்தான். Orchid என்பதன் மூலவார்த்தையான orkhis கிரேக்க மொழியில் ஆணின் விதைப்பையைக் குறிக்கிறதாம். இதன் வேர்க்கிழங்குகளின் வடிவம் விதைப்பையை ஒத்திருப்பதால் இப்பெயர் இடப்பட்டுள்ளது. ஆர்க்கிட் செடியின் ஒரே ஒரு விதைநெற்றுக்குள் கோடிக்கணக்கான விதைகள் இருந்தாலும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் சில மட்டுமே அடுத்த தலைமுறையை உருவாக்கும் வீரியமுள்ளவை.  இந்த விதைகளை நுண்ணோக்கி மூலம் மட்டுமே பார்க்க முடியும். அந்த அளவுக்கு மிகவும் நுட்பமானவை. 

பூக்கள் அறிவோம் தொடரின் தொடர்ச்சியாக, இப்பதிவில் அசத்தும் அழகு ஆர்க்கிட் மலர்கள் பற்றி அறிந்துகொள்வோமா? இப்பதிவில் இடம்பெற்றுள்ள படங்கள் அனைத்தும் சிட்னி & வுல்லங்காங் தாவரவியல் பூங்காக்களில் 2018 முதல் தற்போது வரை அவ்வப்போது என்னால் எடுக்கப்பட்டவை. 


111. லேடீஸ் ஸ்லிப்பர் ஆர்க்கிட்


குட்டிக் குழந்தைகளின் பாதணி போல அழகான பையுடன் வசீகரிக்கும் இந்த வகை ஆர்க்கிட் பூக்களுக்கு "Ladies slipper orchid" என்று பெயர்இவை பெரும்பாலும் உள்ளரங்க அலங்காரச் செடியாக வளர்க்கப்படுகின்றன. தேனெடுக்க வரும் பூச்சிகள் இந்தப் பைக்குள் விழுந்து எழுந்து தடுமாறி வெளியேறுவதற்குள் மகரந்தப் பொடிகளைத் தந்தும் பெற்றும் மகரந்தச் சேர்க்கையை வெற்றிகரமாக்கிவிடுகின்றன.

2. வீனஸ் ஸ்லிப்பர் ஆர்க்கிட் (1)

3. வீனஸ் ஸ்லிப்பர் ஆர்க்கிட் (2)

4. வீனஸ் ஸ்லிப்பர் ஆர்க்கிட் (3)

5. வீனஸ் ஸ்லிப்பர் ஆர்க்கிட் (4)

6. வீனஸ் ஸ்லிப்பர் ஆர்க்கிட் (5)

7. வீனஸ் ஸ்லிப்பர் ஆர்க்கிட் (6)

8. வீனஸ் ஸ்லிப்பர் ஆர்க்கிட் (7)

லேடீஸ் ஸ்லிப்பர் ஆர்க்கிட் இனத்தில் ஐந்து பெரும் பிரிவுகள் உள்ளன. படத்திலிருப்பதுவீனஸ் ஸ்லிப்பர் ஆர்க்கிட்இது paphiopedilum பேரினத்தைச் சேர்ந்தது. வீனஸுக்கு நிகரான காதற்கடவுள் அப்ரோடிட் அவதரித்த இடத்தின் பெயர் paphos என்பதாகும். கிரேக்க மொழியில் pedilon  என்றால் பாதணி என்று பொருள். இரண்டையும் சேர்த்து இவ்வழகிய பூக்களுக்கு paphiopedilum என்ற பெயர் இடப்பட்டுள்ளது. 

9. வீனஸ் ஸ்லிப்பர் ஆர்க்கிட் (8)

பொதுவாக ஆர்க்கிட் பூக்களில் ஒரே ஒரு மகரந்தப்பை தான் இருக்கும். ஆனால் லேடீஸ் ஸ்லிப்பர் வகை ஆர்க்கிட் பூக்களில் இரண்டு மகரந்தப்பைகள் இருக்கும். இவற்றின் பூர்வீகம் இந்தியாசீனாதென்கிழக்காசிய நாடுகள் போன்றவை. இவற்றின் விநோதமான அமைப்பால் கவரப்பட்டுதோட்ட ஆர்வலர்களால் விரும்பி வளர்க்கப்படுகின்றன.


112. சிட்னி ராக் ஆர்க்கிட்

ஆஸ்திரேலிய ஆர்க்கிட் வகையான இது, சிட்னி சார்ந்த பகுதிகளில் காணப்படுவதாலும் உயரமான மலைகளிலும் பாறைப்பகுதிகளிலும் காணப்படுவதாலும் இது 'சிட்னி ராக் ஆர்க்கிட்' என்று குறிப்பிடப்படுகிறது. இதற்கு cane orchid, rock lily என்ற பெயர்களும் உண்டு. 

10. சிட்னி ராக் ஆர்க்கிட் (1)

11. சிட்னி ராக் ஆர்க்கிட் (2)

12. சிட்னி ராக் ஆர்க்கிட் (3)

13. சிட்னி ராக் ஆர்க்கிட் (4)

14. சிட்னி ராக் ஆர்க்கிட் (5)

15. சிட்னி ராக் ஆர்க்கிட் (6)

இதன் இலைகள் பன்னிரண்டு வருடம் வரை வாடாதவை. ஒரு பூந்தண்டில் சுமார் இருநூறு பூக்கள் வரை பூக்கும். முதலில் வெள்ளை நிறத்தில் காணப்படும் பூக்கள் மெல்ல மெல்ல மஞ்சள் நிறத்துக்கு மாறும். இது Dendrobium பேரினத்தைச் சேர்ந்தது. இதன் அறிவியல் பெயர் Dendrobium speciosum என்பதாகும். Speciosum என்றால் லத்தீனில் 'வசீகரமான' என்று பொருள். இவை தொங்குதொட்டியில் வளர்க்கவும் தோதானவை. 

113. காக்‌ஷெல் ஆர்க்கிட்

பார்ப்பதற்கு வாய் திறந்திருக்கும் சிப்பி போன்றிருப்பதால் cockleshell orchid, clamshell orchid என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறது. Prosthechea பேரினத்தைச் சேர்ந்தது. இப்பேரினத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சிற்றினங்கள் உள்ளன. படத்தில் இருப்பது Prosthechea cochleata மலராகும்.

மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த Belize நாட்டின் தேசிய மலர் என்ற சிறப்பு இதற்கு உண்டு. அங்கு இதன் பெயர் கருப்பு ஆர்க்கிட்.

16. காக்‌ஷெல் ஆர்க்கிட் (1)

17. காக்‌ஷெல் ஆர்க்கிட் (2)

18. காக்‌ஷெல் ஆர்க்கிட் (3)

19. காக்‌ஷெல் ஆர்க்கிட் (4)

நறுமணமிக்க இந்த வகை ஆர்கிட் மலர்கள் மாதக்கணக்காக வாடாதவை என்பதோடு எளிதில் பூச்சித்தாக்குதலுக்கு ஆளாகாதவை என்ற சிறப்பும் உடையவை. பூங்கொத்தின் பூக்கள் ஒரே சமயத்தில் பூக்காமல் ஒவ்வொன்றாகப் பூப்பதால் வருடம் முழுவதும் செடி பூக்களுடனேயே காட்சியளிக்கும். அதனாலேயே உள் அலங்காரச்செடிகளாக விரும்பி வளர்க்கப்படுகின்றன.  

114. போட் ஆர்க்கிட்

Cymbidium பேரினத்தைச் சேர்ந்த இவை ‘Boat orchids’ என்றழைக்கப்படுகின்றன. ‘cymba’ என்றால் லத்தீன் மொழியில் 'படகு' என்று பொருள். இந்தப் பேரினத்தில் சுமார் அறுபது சிற்றினங்கள் உள்ளன. 

பொதுவாக கடைகளில் சரியான தட்பவெப்பத்தில் முறையான பராமரிப்போடு, விற்பனைக்கென பொத்திப் பொத்தி வைக்கப்பட்டிருக்கும் ஆர்க்கிட் பூந்தொட்டிகளையும் ஆர்க்கிட் பூங்கொத்துகளையும் பார்த்திருக்கிறேன். ஆனால் இயற்கைச்சூழலில் காற்று, மழை, புழுதி, வெயில், பூச்சித்தாக்குதல் எல்லாவற்றையும் தாங்கி, மண்ணில் வளர்ந்து கொத்துக்கொத்தாய்ப் பூத்துக் காட்சியளிக்கும் ஏராளமான போட் ஆர்க்கிட் செடிகளைப் பூங்காவில் பார்த்தபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.  

20. போட் ஆர்க்கிட் (1)

21. போட் ஆர்க்கிட் (2)

22. போட் ஆர்க்கிட் (3)

23. போட் ஆர்க்கிட் (4)

24. போட் ஆர்க்கிட் (5)

25. போட் ஆர்க்கிட் (6)

26. போட் ஆர்க்கிட் (7)

27. போட் ஆர்க்கிட் (8)

28. போட் ஆர்க்கிட் (9)

29. போட் ஆர்க்கிட் (10)

30. போட் ஆர்க்கிட் (11)

போட் ஆர்க்கிட் செடிகள் ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளைத் தாயகமாகக் கொண்டவை. கொத்துக் கொத்தாகப் பூக்கும் இவற்றின் அழகு காரணமாக உலக நாடுகள் பலவற்றிலும் விரும்பி வளர்க்கப்படுகின்றன. 

திருமணத்துக்கான மலர் அலங்காரங்களிலும் பூங்கொத்துகளிலும் இவை பெரிதும் இடம்பிடிக்கின்றன. செடியில் இருந்தால் பல வாரங்களுக்கு வாடாமல் அன்றலர்ந்த மலர் போலவே காணப்படுவது இவற்றின் சிறப்பு. உள்ளரங்கத்திலும் வெளியிலும் வளரும் தன்மை இவற்றின் இன்னொரு சிறப்பு.

படகு ஆர்க்கிட் பூக்கள் காதல், அழகு, செழுமை, வனப்பு போன்றவற்றின் குறியீடாகப் பார்க்கப்படுகின்றன. ஆர்க்கிட் மலர்களைப் பரிசாகப் பெறுவதென்பது நற்பேறாகவும் வளமையின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.

31. போட் ஆர்க்கிட் (12)

32. போட் ஆர்க்கிட் (13)

33. போட் ஆர்க்கிட் (14)

34. போட் ஆர்க்கிட் (15)

35. போட் ஆர்க்கிட் (16)

அழகு மட்டுமல்லாது, ஆசிய நாடுகளின் கலாச்சாரத்தோடு மிகத் தொன்மையான தொடர்புடைய படகு ஆர்க்கிட், சீனா, ஜப்பான் போன்ற தென்கிழக்காசிய நாடுகளின்  கலாச்சார அடையாளமாகவும், பாரம்பரிய மருத்துவத் தாவரமாகவும் விளங்குகிறது.

******

டான்சிங் லேடி ஆர்க்கிட், பைன் கூம்பு போன்ற ஆர்க்கிட், மோத் ஆர்க்கிட், கைட் ஆர்க்கிட் என இன்னும் சில வித்தியாசமான ஆர்க்கிட் மலர்களைப் பற்றி அடுத்தப் பதிவில் பார்க்கலாம். 
(தொடரும்)