|
1. கடற்கரையோரம் இரைதேடும் கடற்புறா (Silver gull) |
இன்று ஜூலை 28-ஆம் நாள். உலக இயற்கைப் பாதுகாப்பு தினம் (World Nature Conservation Day).
இன்றைய தினம்தான் ஆஸ்திரேலியாவில் தேசிய மரங்கள் தினமாகவும் (National Tree Day) கொண்டாடப்படுகிறது.
2024-உலக
இயற்கைப் பாதுகாப்பு தினத்தின் மையக்கரு இதுதான்: இயற்கைப் பாதுகாப்பில் நவீனத்
தொழில்நுட்பயைப் பயன்படுத்தி, மனிதர்களையும் இயற்கையையும் இணைத்தல்.
இயற்கையைப் பாதுகாப்பது நம் கடமை அல்லவா? அதற்கொரு தினம்
தேவையா? இயற்கையை அதன்போக்கில் இருக்கவிட்டாலே எந்தச் சேதமும் இன்றி சிறப்பும்
செழுமையுமாக இருக்குமே! என்றெல்லாம் எண்ணத் தோன்றும். ஆனால் நாம் அதை அப்படி இருக்கவிட்டால்தானே? ஏற்கனவே காலநிலை மாற்றம், புவி
வெப்பமயமாதல், கரியமில வாயு உமிழ்வு, பனிப்பாறைகள் உருகுதல், சுற்றுச்சூழல்
சீர்கேடு, காடழிப்பு, அழிந்துவரும்
உயிரினங்கள், இயற்கைச் சமன் குலைவு என பூமியின் இயல்புத்தன்மையை சீர்குலைக்கும் பல
ஆபத்தான காரணிகளுக்கு மனிதர்களாகிய நாம் காரணமாக இருக்கிறோம்.
பூமிப்பந்துக்கும் அதைச் சார்ந்து வாழும்
உயிரினங்களுக்கும் ஆபத்தை விளைவித்த, விளைவித்துக் கொண்டிருக்கும் நமக்கே அந்த ஆபத்திலிருந்து
பூமியை, அதன் இயல்பை, இயற்கையைப் பாதுகாக்கும் பொறுப்பு இருக்கிறது. நம்முடைய
காலத்துக்குப் பிறகு இந்தப் பூமியை அதன் இயல்புத்தன்மை கெடாமல் நம்முடைய வருங்கால சந்ததிகளுக்கு ஒப்படைக்க
வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. மாசில்லாத சூழல், சுத்தமான காற்று, நீர்வளம், நிலவளம்,
காட்டுவளம், பல்லுயிர்வளம் என அனைத்து வளங்களையும் எவ்விதச் சேதமுமின்றி
அவர்களிடம் கையளிக்கவேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது.
அதனால்தான் ‘உலக இயற்கைப் பாதுகாப்பு தினம்’ என்று ஒரு
தினத்தை அடையாளப்படுத்தி, அதன்மூலம் இயற்கையைப் பற்றிய புரிதலையும் இயற்கை வளங்களைச்
சிதைக்காமல் பாதுகாக்கவேண்டிய அவசியத்தையும், அவற்றின்மீதான நம் பொறுப்பையும்
நாமும் உணர்ந்து மற்றவர்களுக்கும் உணர்த்தவும் வலியுறுத்தவும் வேண்டியிருக்கிறது.
|
2. மழைக்காடு |
இன்றைய தினம் ஆஸ்திரேலியாவின் ‘தேசிய மரங்கள்
தினமாகவும்’ கொண்டாடப்படுவது தற்செயல் ஒற்றுமை. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் கடைசி
ஞாயிற்றுக்கிழமை இத்தினம் கொண்டாடப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் பூர்வீக மரங்களைப்
பாதுகாக்கும் முயற்சியாகவும், அவற்றைக் குறித்த விழிப்புணர்வை மக்களிடம்
முக்கியமாக குழந்தைகளிடம் உண்டாக்கும் முகமாகவும் இந்நாள் கொண்டாடப்படுகிறது.
வீடுகளிலும் வளாகங்களிலும் புதிய மரக்கன்றுகளை நடுதல், ஓவியம், நடனம் மற்றும்
ஆவணப்படங்கள் மூலம் பூர்வீக மரங்கள் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை
மேற்கொள்ளுதல், தேசியப் பூங்கா மற்றும் வனப்பகுதிகளில் இயற்கை சார்ந்த நடை,
உள்ளூர் பூங்காக்களில் உள்ள பூர்வீக மரங்கள், அவற்றின் பயன்கள் மற்றும் அவற்றைச்
சார்ந்து வாழும் உயிரினங்கள் குறித்து அறிந்துகொள்ளுதல் என பல வகையிலும்
செயல்படுத்தப்படுகிறது.
ஆஸ்திரேலிய தேசிய மரங்கள் தினமான இன்று ஆஸ்திரேலியாவின்
பூர்வீக மரங்கள் மற்றும் அவற்றைச் சார்ந்து வாழும் உயிரினங்கள் சிலவற்றின் படங்களைப் பகிர்ந்து மகிழ்கிறேன்.
|
3. தங்க வாட்டில் மரம் |
|
4. வாட்டில் காய்களைக் கொறிக்கும் Galah பறவைகள் |
|
5. வாட்டில் மரக் காய்களைத் தேடிவந்த காக்கட்டூகள் |
|
6. மேலலூக்கா மரங்கள் |
|
7. மேலலூக்கா மரத்தில் கூடு கட்டி வசிக்கும் பாம்புத்தாரா |
|
8. மேலலூக்கா மரத்தில் ஓய்வெடுக்கும் சிரிக்கும் குக்கபரா |
|
9. யூகலிப்டஸ் மரம்
|
|
10. யூகலிப்டஸ் மரங்கள் |
|
11. யூகலிப்டஸ் மரத்தில் வசிக்கும் பழந்தின்னி வவ்வால்கள்
|
|
12. யூகலிப்டஸ் பூக்களில் தேன்குடிக்க வந்த ரெயின்போ லாரிகீட்கள்
|
|
13. யூகலிப்டஸ் மரப்பொந்தில் முட்டையிட்டுள்ள ரெயின்போ லாரிகீட்
|
|
14. யூகலிப்டஸ் மரத்தில் கூடு கட்டி அடைகாக்கும் ஆஸ்திரேலிய மேக்பை |
|
15. யூகலிப்டஸ் மரத்தின் மீது கட்டப்பட்டுள்ள கரையான் புற்று |
|
16. மகடாமியா மரம் |
|
17. மகடாமியா மரத்தில் வசிக்கும் ஆற்றல்மிகு ஆந்தை |
|
18. வுல்லமி பைன் மரம் |
|
19. குவீன்ஸ்லாந்து பாட்டில் மரம்
|
|
20. ரெட் சில்க்கி ஓக் மரம் |
|
21. மார்ட்டன் பே ஆலமரம் (1) |
|
22. மார்ட்டன் பே ஆலமரம் (2) |
|
23. ஆலம்பழம் தின்னும் கந்தகக்கொண்டை காக்கட்டூ |
|
24. மலைச்சவுக்கு மரம் |
|
25. மலைச்சவுக்கு பூக்களுடன் |
|
26. இலவாரா தீச்சுவாலை மரம் (1) |
|
27. இலவாரா தீச்சுவாலை மரம் (2) |
|
28. நார்ஃபோக் தீவு பைன் மரங்கள் |
|
29. சவுக்கு மரத்தில் வசிக்கும் பழந்தின்னி வவ்வால்கள் |
‘பள்ளிக்கூட மரங்கள் தினம்’ ஜூலை மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. அதன்படி இவ்வாண்டு கடந்த வெள்ளியன்று (ஜூலை 26) கொண்டாடப்பட்டது. இத்தினத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு மரங்களின் முக்கியத்துவம் எடுத்துரைக்கப்பட்டு, மரக்கன்றுகளை உருவாக்குவது, அவற்றை நடுவது, பராமரிப்பது, மரங்களை வகைப்படுத்தி அறிவது போன்ற பல்வேறு செயல்பாடுகளின் மூலம் அவர்களுடைய பங்கும் கடமையும் உணர்த்தப்படுகிறது.
|
30. ஆலமரத்தின் அண்டைவேரில் தலைசாய்த்திருக்கும் குழந்தை |
இயற்கையை நேசிக்கவும் இயற்கையோடு இயைந்து வாழவும் அனுபவத்தின் வாயிலாகவே குழந்தைகள் அறிந்துகொள்ள இது போன்ற தினங்களும் கொண்டாட்டங்களும் நல்லதொரு வாய்ப்பாக அமைகின்றன.
******
இயற்கையோடு இயைந்து வாழவும் நேசிக்கவும் வேண்டும். சிறப்பான தகவல்கள். படங்களும் நன்று.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வெங்கட்.
Deleteஇயற்கையை பாதுகாத்தல் நம் கடமை.
ReplyDeleteஇயற்கையை நேசித்தல் அதோடு இணைந்து வாழ்தல் ஒரு வரம்.
இது போன்ற தினங்கல், கொண்டாங்கள் வேண்டும் தான். ஆடிபெருக்கு வருக்கிறது, ஆற்றுக்கு போய் மண் எடுத்து காவிரி அம்மன் வழிபாடு செய்வதே அதுதான் காரணம். நீர் வரத்து சமையத்தில் மண் எடுத்தல் நல்லது என்பதால் அப்படி செய்தார்கள். நீர் நிலைகளை இப்போது வாழி பாடு என்ர பெயரில் அச்சுத்த படுத்துகிறோம். மரங்களை வழிபட்டார்கள் . செடிகளை வழிபட்டார்கள். (வேப்பு , துளசி) பறவைகளுக்கு உணவு அளித்து உண்டார்கள்.
வாய் இல்லா ஜீவன் என்று கால்நடைகள் குறிப்பாக பசுவுக்கு உணவு அளித்து அதை வழிபட்டார்கள். நாய்களுக்கு உணவு அளித்தார்கள். அவை உணவு இட்டவர்களை பாதுகாத்தது. பறவைகள் மரம், செடி வளர் உதவியது.
இயற்கை ஒரு வட்ட சங்கிலியாக இணைத்து வைத்தது . அதில் ஏதாவது உடைந்தால் அனைவருக்கும் கஷ்டம்.
நீங்கள் பகிர்ந்த படங்கள் எல்லாம் மிக அருமை.
அது மாத்திரமல்ல சகோதரி; பரதநாட்டியட்தின் போது தொடக்கத்திலும் முடிவிலும் பூமி மாதாவுக்கு வழிபாடு செய்து தாங்கள் உதைப்பதை பொறுத்தருள பூமியை வேண்டுவதிலும்; மலையில் சிலை செதுக்கக் கற்களைப் பெயர்த்தெடுக்கும் போது, மலைக்கு வழிபாடும் பூசனைகளும் செய்து தங்களைப் பொறுத்தருள வேண்டும் சிற்பியின் வேண்டுதலிலும் எத்தகைய கண்ணியமும் காருண்யமும் நிறைந்துபோயுள்ளது! இல்லையா?
Deleteஇவற்றை நாம் நம் நாளாந்த வாழ்க்கைமுறையிலும் பிரயோகித்தால் இந்த உலகம் எத்தனை சிறப்பாகவும் இனிமை நிறைந்ததாகவும் பொருள் நிறைந்ததாகவும் இருத்தல் கூடும்!!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோமதி மேம். முன்பெல்லாம் எங்கு போனாலும் வாழை இலையில் அல்லது மந்தாரை இலையில் கட்டுச்சோறு கட்டிக்கொண்டு போவோம். வழியில் சாப்பிட்டு இலையை வீசியெறிந்தால் ஆடு மாடு தின்றுவிடும். பிளாஸ்டிக் பை என்ற பேச்சே அப்போது கிடையாது. டீ வாங்க வீட்டிலிருந்து கூஜா அல்லது ஃபிளாஸ்க் எடுத்துப்போவோம். இப்போது பாலிதீன் பையில் டீ ஊற்றித் தருகிறார்கள். பார்த்தாலே பகீரென்று இருக்கிறது.
Deleteஎப்போது இயற்கையை விட்டு விலகியதோடு அதற்கு கேடு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடத் தொடங்கினோமோ அப்போதே இயற்கையும் தன் இயல்பிலிருந்து மாறத் தொடங்கிவிட்டது. இதை நாம் உணராதவரை நஷ்டம் நமக்குதான் :(
\\பரதநாட்டியட்தின் போது தொடக்கத்திலும் முடிவிலும் பூமி மாதாவுக்கு வழிபாடு செய்து தாங்கள் உதைப்பதை பொறுத்தருள பூமியை வேண்டுவதிலும்; மலையில் சிலை செதுக்கக் கற்களைப் பெயர்த்தெடுக்கும் போது, மலைக்கு வழிபாடும் பூசனைகளும் செய்து தங்களைப் பொறுத்தருள வேண்டும் சிற்பியின் வேண்டுதலிலும் எத்தகைய கண்ணியமும் காருண்யமும் நிறைந்துபோயுள்ளது! இல்லையா?\\ மிகவும் உண்மை யசோ.
Deleteபல அழகியல் சார்ந்த விடயங்களை அறியத்தந்தமைக்கு நன்றி கீதா.
ReplyDeleteகோமதி சொல்லி இருக்கிற விடயங்கள் ஒரு காலத்தில் நாம் எப்படியாக இருந்தோம் என்பதை சொல்லி இருக்கிறது. எவ்வளவு மேன்மையான வாழ்க்கையாக அது இருந்திருக்கிறது!
இந்தப் பூமிப்பந்தில் நமக்கும் ஒரு இடம் இருக்கிறது. அந்த உரிமையோடு நமக்கு ஒரு கடமையும் இருக்கிறது. இந்தப் பூமியை நாம் விட்டுச் செல்லும் போது அதற்கு ( பூமிக்கு) எந்த ஒரு பாதிப்பும் நம்மால் விளையாமல் அடுத்த சந்ததிக்கு அதனைக் கையளித்து விட்டுப் போகவும் நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்.
கனக்க எதுவும் செய்து கஸ்ர[ப்படத் தேவையில்லை. நம் அன்றாட வாழ்வில் கடைப்பிகிக்கக் கூடிய சில பல விடயங்களைச் செய்தாலே போதும்.
1. அருகில் உள்ள இடங்களுக்கு நடந்து போவது.
2. தண்ணீரைச் சிக்கனமாகப் பாவிப்பது.
3. தேவை இல்லாமல் எரிந்து கொண்டிருக்கும் மின்சார பல்ப்புகளை அனைத்து விடுவது.
4. கடைகளுக்குப் போகும் போது பைகளை எடுத்துச் செல்வது.
5.பொருட்களை மீள்சுளற்சிக்கு உள்ளாக்குவது.
6.மரக்கறி உணவுகளுக்கு மாறுவது.
7. தொழில்நுட்ப உபகரணங்களில் இருந்து கண்களை எடுத்து விட்டு அதனை இயற்கையோடும் உயிரினங்களோடும் அருகில் இருப்பவர்களோடும் நம் நேரத்தைச் செலவு செய்வது.
8.வீட்டு வேலைகளில் உடல் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது.
9. தேவையான / அதியாவசியமான பொருட்களை மட்டும் வாங்கி அவற்ரைச் சிக்கனமாகப் பாவிப்பது.
10. மகிழ்ச்சிக்காகவும் சிக்கனத்துக்காகவும் ஆரோக்கியத்துக்காகவும் வீட்டுத்தோட்டம் செய்வது.....
இப்படி எத்தனை எத்தனை விடயங்களை நாம் அன்றாடம் செய்து வரலாம். இவற்றில் ஏதாவது ஒன்றைப் பின்பற்றினாலே மகிழ்ச்சியும் மனநிறைவும் பெருகும்.
சிறு துளி தானே பெருவெள்ளம்!
நான் இவற்றை எல்லாம் செய்கிறேனா என்று கேட்டால், 100 வீதம் இல்லை என்றாலும் அவற்றைச் செய்ய முயற்சிக்கிறேன் என்று நிச்சயமாகச் சொல்வேன்.
நன்றி கீதா. உங்கள் பதிவு எனக்கு மீண்டும் சில விடயங்களை செய்ய நினைவூட்டிச் செல்கிறது. பயனுள்ள பதிவு!
வருகைக்கும் அழகான கருத்துகளை முன்வைத்தமைக்கும் மிக்க நன்றி தோழி.
Deleteசில வருடங்களுக்கு முன்பு வரை நாம் வாழ்ந்திருந்த அந்த எளிய வாழ்க்கை எவ்வளவு மேன்மையானது என்பதை இப்போதைய தலைமுறை அறிய வாய்ப்பே இல்லை. அன்றாட வாழ்வில் நீங்கள் குறிப்பிட்டுள்ளவற்றைப் பின்பற்றினாலே, பரபரப்பான இன்றைய சூழலிலும் கூட இயற்கைக்கு சேதம் விளைவிக்காத வகையில் நம்மால் வாழ முடியும். ஒரு துணிப்பையை (நீங்கள் பரிசளித்தது) எப்போதும் என் கைப்பையில் வைத்து எடுத்துச் செல்வது, உபயோகித்தப் பொருட்களை மீள்சுழற்சியில் பயன்படுத்துவது, இரசாயனம் பயன்படுத்தாதத் தோட்டம் என நானும் என்னால் இயன்ற சிலவற்றைப் பின்பற்றுகிறேன் என்பதே மகிழ்ச்சியும் மன நிறைவும் அளிக்கிறது. நினைவு மீட்டலை இங்கே பகிர்ந்துகொண்டதற்கு அன்பு நன்றி யசோ.