25 July 2019

பூக்கள் அறிவோம் - (91 - 100)

91. நித்யகல்யாணி 

Madagascar periwinkle (catharanthus roseus)


நித்யகல்யாணி 


மடகாஸ்கரைத் தாயகமாகக் கொண்டதால் மடகாஸ்கர் பெரிவிங்க்கிள் என்ற பெயர் தவிர rosy periwinkle, vinca, cape periwinkle, old-maid போன்ற பெயர்களும் உண்டு. வருடத்தின் எந்தக் காலத்திலும் எந்தப் பருவத்திலும் பூக்கும் தன்மையால் தமிழில் நித்யகல்யாணி எனப்படுகிறது. இலங்கையில் பட்டிப்பூ என்பர்.


நித்யகல்யாணி 

கல்லறைகளில் உறங்கும் தம் அன்புக்குரியவர்களுக்காக நித்தமும் மலரக்கூடிய நித்யகல்யாணி செடியை கல்லறைத்தோட்டத்தில் வைத்து வளர்க்கும் வழக்கம் ஆங்கிலேயரிடத்தில் இருந்திருக்கிறது. அவ்வழக்கம் இந்தியாவை ஆட்சிசெய்த காலத்தில் இங்கும் தொடர்ந்ததால் இதற்கு கல்லறைப்பூ, சுடுகாட்டுப்பூ, பொணப்பூ, இடுகாட்டுமல்லி என்றெல்லாம் பெயரிடப்பட்டுவிட்டது. வீட்டில் வளர்க்க பலரும் தயங்க அதுவே காரணம்.

நித்யகல்யாணி 

உண்மையில் இச்செடி மிகுந்த மருத்துவகுணம் வாய்ந்தது. நீரிழிவு முதல் இரத்தப் புற்றுநோய் வரை குணப்படுத்தக்கூடிய எழுபதுக்கும் மேற்பட்ட மருத்துவ வேதிப்பொருட்கள் இதிலிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதன் இலை, பூ, தண்டு, வேர் என அனைத்து பாகங்களும் இந்தியா மற்றும் சீனாவின் பாரம்பரிய மருத்துவங்களில் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. 


நித்யகல்யாணி பூவும் மொட்டும்

பிற நாடுகளில் அழகுக்காகவும் இதன் மருத்துவ குணத்துக்காகவும் வீடுகளிலும் தோட்டங்களிலும் விரும்பி வளர்க்கப்படுகின்றன. வங்காள மொழியில் இதன் பெயர் நயன்தாராநட்சத்திரம் போல பிரகாசிக்கும் கண்கள் என்பது பொருள்.

92. அந்திமந்தாரை 

Mirabilis jalapa


அந்திமந்தாரை 


மாலையும் இரவும் சந்திக்கும் அந்தியில் பூப்பதால் இதற்கு அந்திமந்தாரை, நாலுமணிப்பூ, அஞ்சுமணிப்பூ என்ற பெயர்கள். Mirabilis jalapa என்பது இதன் அறிவியல் பெயர். Mirabilis என்றால் லத்தீன் மொழியில் பேரழகு என்று பொருள். Jalapa என்பது மெக்சிகோவின் வெராக்ரூஸ் மாநிலத் தலைநகரின் பெயர். 


அந்திமந்தாரை 

மத்திய மெக்சிகோவில் ஆஸ்டெக் நாகரிகம் தோன்றிய காலந்தொட்டே அங்கு அலங்காரச்செடியாகவும் மருத்துவமூலிகையாகவும் அந்திமந்தாரைச் செடிகள் பயன்பாட்டில் இருந்துவந்துள்ளன.


அந்திமந்தாரை பூவும் மொட்டும்

அந்திமந்தாரைப் பூக்களிலிருந்து எடுக்கப்படும் சிவப்புச் சாயம், கேக், ஜெல்லி போன்ற உணவுப் பொருட்களில் நிறமேற்றியாகப் பயன்படுத்தப்படுகிறது. கொஞ்சம் பெரிய மிளகு போன்ற இதன் விதைகள் மிக அழகானவை. ஆனால் நச்சுத்தன்மை வாய்ந்தவை. இருந்தபோதும் அழகுசாதனப் பொருட்கள் மற்றும் தலைச்சாயம் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன.


மஞ்சள் அந்திமந்தாரை

இலை மற்றும் வேர்க்கசாயம் பாரம்பரிய மருத்துவத்தில் காயங்கள், சீழ்க்கட்டிகள், வீக்கம் போன்றவற்றுக்கு புறமருந்தாகவும், வயிற்றுப்போக்கு, அஜீரணம், மலச்சிக்கல், காய்ச்சல், மாதவிடாய்ப் பிரச்சனைகள் போன்றவற்றுக்கு உள்மருந்தாகவும் கொடுக்கப்படுகின்றன. 

மஞ்சள் அந்திமந்தாரை

மஞ்சள், வெள்ளை, சிவப்பு, பிங்க் வண்ணங்களில் தனித்தோ, வண்ணத் தீற்றல்களுடனோ மலர்ந்து மணம் வீசி அந்தியில் தோட்டங்களை அலங்கரிக்கும் அந்திமந்தாரைப் பூக்கள் மாலைநேரத்து மயக்கம் கூட்டுபவை. ஒரே செடியில் வெவ்வேறு வண்ணத்தில் பூக்களை மலர்த்தி அசத்தக் கூடிய அதிசயத்தன்மையும் இவற்றுக்கு உண்டு.

93. வெட்சி 

Ixora


வெட்சி


நாம் நன்கறிந்த இட்லிப்பூதான் இந்த இக்ஸோரா. வெள்ளை வண்ணத்தில் பந்து பந்தாக மலர்ந்திருக்கையில் பார்ப்பதற்கு இட்லி போலவே இருப்பதால் இட்லிப்பூ என்ற செல்லப்பெயர் வைக்கப்பட்டுவிட்டது. பழந்தமிழ்ப் பாடல்களில் இதன் பெயர் வெட்சி. புறத்திணைகளுள் ஒன்றாக வெட்சித்திணையை தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. பெண்கள் மட்டுமல்லாது, ஆநிரையைக் கவரச் செல்லும் ஆண்களும் முருகக்கடவுளை வழிபடுவோரும் இம்மலர்க்கண்ணியைத் தலையில் சூடியிருப்பர் என்று சங்கப்பாடல்கள் குறிப்பிடுகின்றன. 


வழக்கமான நாலிதழ் வெட்சியும் அபூர்வமான ஐயிதழ் வெட்சியும்

இந்தியில் இதன் பெயர் ருக்மிணி, பெங்காலியில் ரங்கன்.  ஆங்கிலத்தில் flame of the woods, jungle flames, west indian jasmine, jungle gerniums என்றெல்லாம் குறிப்பிடப்படுகிறது.

வெட்சி

உலகின் வெப்பமண்டல நாடுகள் பலவற்றிலும் காணப்படும் இவ்வினத்தில் ஐநூறுக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. நல்ல சூரிய ஒளி இருந்தால் மட்டுமே பூக்க வல்லது. பூக்களின் அழகுக்காக வீட்டுத் தோட்டங்களிலும் பூங்காக்களிலும் விரும்பி வளர்க்கப்படுகின்றன. பூக்கள் வெள்ளை தவிர சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பிங்க் என பல நிறங்களிலும் காணப்படுகின்றன. ஒரு கொத்தில் சுமார் அறுபது பூக்கள் வரை இருக்கலாம்.  


Ixora coccinea

Ixora coccinea- இதன் தாயகம் இந்தியா. இதன் பூ, இலை, வேர் அனைத்தும் ஆயுர்வேத மருத்துவத்தில் பல்வேறு நோய்களுக்கும் நிவாரணமாக பயன்படுத்தப்படுகின்றன. வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்றவற்றுக்கு இதன் வேர்க்கசாயம் மருந்தாகிறது.

Ixora chinensis

Ixora chinensis-வின் தாயகம் சீனா. இதற்கு ஆரஞ்சுவண்ணத்தின் இளவரசன் (prince of orange) என்ற பெயரும் உண்டு. முடக்குவாதம், காயம் போன்றவற்றுக்குக் கைகண்ட மருந்தாக சீன மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.94. ஆகாயத்தாமரை 
water hyacinth


ஆகாயத்தாமரை


ஆகாயத்தாமரைவெங்காயத்தாமரை என்றெல்லாம் குறிப்பிடப்படும் இந்த நீர்த்தாவரம் தென்னமெரிக்காவின் அமேசான் படுகையைத் தாயகமாகக் கொண்டது. Hyacinth மலர்களைப் போன்ற தோற்றத்துடன் நீரில் மலர்வதால் இது water hyacinth என்று குறிப்பிடப்படுகிறது. 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தப்ருஷ்ய நாட்டின் (ரஷ்யா அல்ல) கல்வி அமைச்சர் Friedrich Eichhorn என்பவரை சிறப்பிக்கும் விதமாக இப்பேரினத்துக்கு Eichhornia என்று பெயரிடப்பட்டுள்ளது. 

ஆகாயத்தாமரை


ஆகாயத்தாமரைநீர்ப்பரப்பில் மிதக்கும் மினுமினுப்பான பசிய இலைகளுக்காகவும் அழகிய பூக்களுக்காகவும் உலகின் பலநாடுகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் நீரின் சத்துக்களை உறிஞ்சி தான் நன்கு தழைத்துஉள்நாட்டு நீர்த்தாவர இனங்களை வளரவிடாது அழித்தொழிப்பதுமீன் போன்ற நீர்வாழ் உயிரிகளுக்குத் தேவையான ஆக்ஸிஜனைக் கிடைக்கவொட்டாமல் தடுப்பதுநீர்நிலைகளை முற்றிலுமாய் ஆக்கிரமித்து அவற்றை பயன்பாட்டுக்கு ஒவ்வாமல் செய்துவிடுவதுநீரோட்டத்தைத் தடைசெய்து விவசாயத்தைப் பாதிப்பது போன்ற காரணங்களால் தற்போது அதன் தாயகம் தவிர்த்த உலகநாடுகளில் பெரும் ஆக்கிரமிப்புத் தாவரமாக அறியப்பட்டுள்ளது. 

ஆகாயத்தாமரைக் குளம்

நீர்வழிப் போக்குவரத்து நிறைந்த பகுதிகளில் படகு செலுத்துதல், மீன்பிடித்தல் போன்றவை பெரிதும் பாதிக்கப்படுகின்றன. நியூசிலாந்திலும் ஐரோப்பிய நாடுகளிலும் இதனை விற்பதோ, விதைப்பதோ, பரவச்செய்தலோ சட்டப்படி குற்றமாகும்.

ஆகாயத்தாமரைக்கிடையில் இரைதேடும் குருகு


ஆகாயத்தாமரைகள் பல்கிப் பெருகியிருக்கும் இடங்களில் அவற்றைக் கட்டுப்படுத்த கருவிகள், உயிரியல், வேதியியல் முறைகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தாவரத்தை உயிரியல் முறையில் அழிக்க உதவும் ஒரு வகை அந்துப்பூச்சிக்கு water hyacinth moth என்றே பெயர். ஆக்கிரமிக்கும் காரணத்தால் வேண்டாத தாவரமாக அறியப்பட்டாலும், இதற்கு பல்வேறு நன்மைகள் உண்டு என்பதை மறுக்கவியலாது. ஆகாயத்தாமரை


சில வகை பாக்டீரியா மூலம் இதை மக்கச் செய்து நுண்ணூட்டச்சத்து மிகுந்த இயற்கை உரம் தயாரிக்கமுடியும் என்று அறியப்பட்டுள்ளது. இதிலிருந்து காகிதம், கயிறு, நூல் போன்றவையும் தயாரிக்கப்படுகின்றன. கம்போடிய மக்கள் இதன் நாரிலிருந்து கூடை போன்ற கைவினைப் பொருட்கள் தயாரிக்கின்றனர். சித்த மருத்துவத்தில் இதன் பயன்பாடு பெரிது. நீர்க்கடுப்பு, மூலம், தொழுநோய், கொப்புளம், சொறி சிரங்கு உள்ளிட்ட தோல்நோய்கள் போன்றவற்றுக்கு சிறந்த நிவாரணியாக இதன் இலைகள் பயன்படுத்தப்படுகின்றன.

95. ஊமத்தம்பூ 

Datura metel


கரு ஊமத்தம்பூ


உட்கொண்டால் மயக்கமும் வெறியும் உண்டாகி உன்மத்தமாகும் என்று ஒரு பக்கமும் இப்பூக்களை ஊறவைத்தத் தண்ணீரில் தொடர்ந்து ஒரு வாரம் குளித்துவந்தால் உன்மத்தம், பைத்தியம் போன்றவை குணமாகித் தெளியும் என்று இன்னொரு பக்கமும் சொல்லப்படுகிறது. உன்மத்தம் பீடிக்குமோ விலகுமோ... ஆனால் உன்மத்தம்பூ என்ற பெயர் மருவி ஊமத்தம்பூ ஆனதாக சொல்லப்படுவது ஏற்புடையதாக உள்ளது. 'ஊமத்தம்பூவுனு ஏன் சொல்றோம் தெரியுமா? மோந்து பார்த்தால் ஊமையாயிடுவோம், அதனால்தான்' என்ற பால்யக் கதைகளும் நினைவுக்கு வந்துபோகின்றன.

ஊமத்தங்காய்

ஊமத்தை செடி முழுவதுமே நச்சு உடையது. ஆனாலும் ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் ஊமத்தைக்கு சிறப்பிடம் உண்டு. மூட்டுவலி, வாதவலி, புழுவெட்டு, ஆறாத ரணம், விஷப்பூச்சிக்கடி, வீக்கம் போன்ற பல புறப் பிரச்சனைகளுக்கும் சுவாசப் பிரச்சனைகளுக்கும் ஊமத்தை இலை மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

ஊமத்தையின் தாயகம் சீனா. இதன் ஆங்கிலப்பெயரான Datura  சமஸ்கிருதத்திலிருந்து பெறப்பட்டதாகும். அதற்கு முட்பழம் என்று பொருள். கி.மு.800-ஆம் ஆண்டில் வாழ்ந்திருந்த சுஷ்ருதர் எனும் மருத்துவ முனிவர் எழுதிய ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை குறித்த நூலில் கனகா, உன்மத்தா என்ற பெயர்களில் ஊமத்தையின் சிறப்புகள் விவரிக்கப்பட்டுள்ளனவாம்.  

மலர்ந்தும் மலராத நிலையில்.. ஊமத்தம்பூ

ஊமத்தையில் வெள்ளை ஊமத்தை, பொன்னூமத்தை, கரு ஊமத்தை, மருள் ஊமத்தை என பலவகை உண்டு. படத்தில் இருப்பது கரு ஊமத்தம்பூ. இதுவும் வெள்ளை ஊமத்தை போன்றே மருத்துவக்குணங்கள் உடையது. இது சிவ வழிபாட்டில் பயன்படுத்தப்படுகிறது. திருமணஞ்சேரி எனும் சிவத்தலத்தின் தல விருட்சம் என்னும் சிறப்பும் கரு ஊமத்தைக்கு உண்டு. இதைக் கொண்டு ரசமணி (திரவ பாதரசத்தை வேதிவினையால் திடமான மணி ஆக்குதல்) கட்டி அணிந்தால் வாழ்வில் அளவிட முடியாத நன்மைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் சிலரிடத்தில் உள்ளது.

96. அவரை 
Lablab bean (lablab purpurea)


கண்ணுக்கு மையழகுகவிதைக்குப் பொய்யழகு
அவரைக்குப் பூவழகுஅவருக்கு நானழகு..

என்ற கவித்துவத்தில் கிறங்காதோர் யாருண்டு? அவரைப்பூ என்ன அவ்வளவு அழகா? இல்லாமலா சங்கப் பாடல்களில் சிலாகிக்கப்படுகிறது?  குறிஞ்சிப்பாட்டில் தலைவியும் தோழிகளும் அருவிக்கரையில் பறித்து விளையாடிய 99 மலர்களுள் ஒன்றாக கபிலர் வாயால் பாடப்பெற்றுள்ளது?

அவரைப்பூ


அவரையின் தாயகம் ஆசியாவா ஆப்பிரிக்காவா என ஆராய்ச்சி இன்னமும் நடந்துகொண்டிருக்கிறது. இரண்டுமாகவும் இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. ஆட்டுக் கொம்பவரை, ஆரால் மீனவரை, ஆனைக் காதவரை, கணுவவரை, கொழுப்பவரை, கோழியவரை, சிவப்பவரை, சிற்றவரை, தீவாந்தர அவரை, நகரவரை, பாலவரை, பேரவரை, முறுக்கவரை, கப்பல் அவரை, காட்டவரை, வீட்டவரை, சீமையவரை, சீனியவரை, கொத்தவரை, குத்தவரை, சுடலையவரை (அ) பேயவரை, பட்டவரை, வாளவரை, தம்பட்டவரை, சாட்டவரை என பலவித அவரையின் பெயர்களை மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் குறிப்பிடுகிறார்.

அவரைப்பூ

முன்பு Dolichos பேரினத்தைச் சார்ந்தது என்று அறியப்பட்டிருந்த காரணத்தால் அவரையின் அறிவியல் பெயர் Dolichos lablab என்றிருந்தது. தற்போது Lablab என்ற தனிப் பேரினமாக அறியப்பட்டிருப்பதால் lablab purpurea எனப்படுகிறது. Lablab என்பதன் மூலம் அரபு மொழியாகும். அவரையின் உலர்ந்த காயைத் தட்டும்போது உள்ளிருக்கும் விதைகள் கலகலஎன்றெழுப்பும் மெல்லிய ஒலியை அது குறிக்கிறதாம்.


அவரைப்பூ

அவரையின் பூ, பிஞ்சு, காய், விதைகள், இலை அனைத்தும் உணவாகப் பயன்படுத்தப்படுகின்றன. புரதச்சத்து, நார்ச்சத்து உள்ளிட்ட ஏராள சத்துக்களையும் மருத்துவக்குணங்களையும் கொண்டிருக்கும் காரணத்தால் அவரை சித்த மருத்துவத்தில் மூலிகைத்தாவரமாக சிறப்புப் பெறுகிறது. மலச்சிக்கல், சீதபேதி, வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு, இதயநோய்கள் போன்றவற்றுக்கு அவரையின் காயும் இலையும் நல்ல மருந்தாகும். சொறி சிரங்கு, புண், தோல் நமைச்சல், வேர்க்குரு, முகப்பரு போன்ற சருமப் பிரச்சனைகளுக்கு அவரை இலைச்சாறு நல்ல தீர்வாகிறது. அவரைப்பூக்கள் ஊதாநிற இயற்கை சாயம் தயாரிக்கப் பயன்படுகின்றனவாம்.

97. வாடாமல்லி 
Globe amaranth

வாடாமல்லி


கதம்பத்தில் கட்டாயம் இடம்பெறும் பூக்களுள் வாடாமல்லியும் ஒன்று. இதன் வாடா தன்மையால் வாடாமல்லி என்று குறிப்பிடப்படுகிறது. வண்ணங்களைக் குறிப்பிடும்போது வாடாமல்லி நிறம் என்று குறிப்பிடும் அளவுக்கு அந்த ஒரு நிறம் மட்டுமே நாம் பொதுவாக அறிந்தது. ஆனால் வாடாமல்லி வகையுள் வாடாமல்லி நிறம் தவிரவும் வெள்ளை, சிகப்பு, ஆரஞ்சு, இளஞ்சிவப்பு என பல வண்ணங்களில் காணப்படுகின்றன. உருண்டையாகவும் வாடாமல்லி நிறத்திலும் இருப்பதால் Globe amaranth என ஆங்கிலத்தில் குறிப்பிடப்படுகிறது.


வாடாமல்லி


வாடாமல்லியின் பூர்வீகம் ஆசிய மற்றும் அமெரிக்க நாடுகள். இன்று இவை உலக நாடுகள் பலவற்றிலும் காணப்படுகின்றன. ஹவாய் தீவில் சுற்றுலாப் பயணிகளை பாரம்பரிய முறைப்படி வரவேற்கவும் வழியனுப்பவும் சூட்டப்படும் பலவித மாலைகளுள் இப்பூமாலையும் ஒன்று. நேபாளத்தில் சகோதரர் தினத்தன்று பெண்கள் இப்பூக்களைத் தங்கள் கையாலேயே மாலை கட்டி தங்கள் சகோதரர்களுக்கு அணிவிப்பதும் பண்டுதொட்டு தொடர்ந்து வரும் வழக்கம். என்றும் வாடா தன்மையினால் இது அழியாமையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. அழியாக்காதல் வேண்டும் காதலர் இப்பூக்களைப் பரிசளித்து மகிழ்வார்களாம்.


வாடாமல்லி

தோட்டங்களில் அழகு சேர்ப்பதற்கும் வண்ணத்துப்பூச்சிகள், தேனீக்களைக் கவர்வதற்கும் இப்பூச்செடிகள் பெரிதும் உதவுகின்றன. பூக்கள் புதியனவாக இருக்கும்போது மட்டுமல்ல, உலர்ந்த பிறகும் மலரலங்காரங்களில் பயன்படுத்தப்படுகின்றன. தென்னாப்பிரிக்காவில் இப்பூக்களின் விதைகளை சேகரித்து மாவாக்கி உண்பதுண்டு. இது ஒரு மூலிகைச்செடியாகவும் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. நீரிழிவு, இருமல், வயிற்றுக்கடுப்பு போன்றவற்றுக்கு இப்பூவின் கசாயம் கொடுக்கப்படுகிறது. தினமும் இப்பூவின் தேநீரை அருந்திவந்தால் முதுமை தள்ளிப்போடப்படும் என்று நம்பப்படுகிறது.


98. டேபிள் ரோஸ் / பட்ரோஸ் 
moss rose


பட்ரோஸ்


டேபிள் ரோஸ் என்ற பெயர் ஏன் வந்தது என்று தெரியவில்லை. ஆனால் பட்ரோஸ்? ரோஜாவைப் போல இருப்பதாலும், பட்டுப் போன்ற மென்மையான இதழ்களைக் கொண்டிருப்பதாலும் பட்டு ரோஸ் என்ற பெயர் பெற்று அதுவே மருவி பட்ரோஸ் ஆகிவிட்டது என்று நினைக்கிறேன். பட்டன் ரோஸ், ஜப்பான் ரோஸ் என்றும் சிலர் சொல்கிறார்கள்.


சிவப்பு பட்ரோஸ்

எங்கள் பள்ளிக்காலத்தில் நாங்கள் வளர்த்த முதல் செடி பட்ரோஸ் தான். நண்பர்கள் தங்கள் வீட்டுச் செடியிலிருந்து கிள்ளிக்கொடுக்கும் துளித்தண்டு போதும். தரையாயிருக்கட்டும், சின்னத் தொட்டியாகட்டும், தொங்குதொட்டியாகட்டும் எங்கே வைத்தாலும் தளதளவென்று வளர்ந்து தழைத்துப் பூத்துக் குலுங்கும். வசீகரிக்கும் வாடாமல்லி வண்ணப் பூக்களைக் கசக்கி உள்ளங்கையில் மருதாணி என வண்ணம் பூசிக்கொள்வதும் உண்டு. அபூர்வமாய் வெள்ளைப் பூக்கள் உள்ள செடியும் கிடைக்கும்.

மஞ்சள் பட்ரோஸ்


இதற்கு ஆங்கிலத்தில் moss rose என்று பெயர். சதைப்பற்றுள்ள சக்குலன்ட் வகைத் தாவரமான இது அர்ஜென்டினா, பிரேசில், உருகுவே போன்ற தென்னமெரிக்க நாடுகளைத் தாயகமாகக் கொண்டது. Rose moss, ten o’clock, Mexican rose, Vietnam rose, sun rose, rock rose, moss-rose purslane, Afternoon flower, time flower என இதற்கு எண்ணற்றப் பெயர்கள் உண்டு. பெரும்பாலும் சூரியன் இருந்தால் மட்டுமே விரிந்து காட்சி தருவதால் இந்தியில் இதன் பெயர் nau bajiya (ஒன்பதுமணிப் பூ), பாகிஸ்தானில் gul dopheri (மத்தியானப் பூ), வியட்நாமில் hoa muoi gio (பத்துமணிப் பூ) என்ற காரணப்பெயர்கள். மலையாளத்திலும் இதன் பெயர் பத்துமணிப்பூ.

பலவண்ணங்களில் பட்ரோஸ்

இவற்றுள்  தற்போது ஏராளமான கலப்பின வகைகள் உருவாக்கப்பட்டு சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பிங்க் என பல வண்ணங்களில் ஒற்றையாகவும் அடுக்காகவும் கிடைக்கின்றன. எல்லா வண்ண பூக்களின் விதைகளும் கலந்து கடைகளில் கிடைப்பதால் வண்ணமயமாக கோடைகாலத் தோட்டத்தை அலங்கரிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. பட்ரோஸ், மூக்குத்திக்கீரை, பருப்புக்கீரை, தரைப்பசலை, எல்லாமே ஒரே குடும்பத்து உறுப்பினர்கள்தான்.  

Portulacaceae  குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்கள் அனைத்தும் பொதுவாக  purslanes என்று குறிப்பிடப்படுகின்றன. இது பழைய பிரெஞ்சு வார்த்தையான porcelaine என்பதிலிருந்து பெறப்பட்டதாம்,  எளிதில் நொறுங்கக்கூடிய  பீங்கானைப் போன்று மென்மையானது என்ற பொருளில். இதன் அறிவியல் பெயர் portulaca grandiflora ஆகும். லத்தீனில் Portulaca என்றால் சிறிய கதவு என்று பொருள். இதன் விதைக் குப்பிக்கு கதவு போல் திறப்பு இருப்பதால் இந்தப் பெயராம். Grandiflora என்றால் பெரிய மலர் என்று அர்த்தம்.

99. சங்குப்பூ
Butterfly pea (Clitoria ternatea)

சங்குப்பூ

சங்குப்பூ, பட்டாம்பூச்சிப்பூ (butterfly pea), புறா இறகுப்பூ (pigeon wings), நீலமணிப்பூ (blue bell vine), சிப்பிப்பூ (mussel shell creeper) என இந்த அழகிய பூவின் வடிவத்தால் இதற்கு எவ்வளவு காரணப்பெயர்கள்! அது மட்டுமா? இதன் பேரினப் பெயர் கூட ஒரு காரணப்பெயர்தான். இதன் அறிவியல் பெயர் Clitoria ternatea. இது ஒரு ஏறுகொடியாகும். வீடுகளில் இது அழகுக்காகவும் மருத்துவ உபயோகத்துக்காகவும் வளர்க்கப்படுகிறது.

சங்குப்பூவை காக்கரட்டான் பூ என்பார் என் தாத்தா. காக்கணம், காக்கட்டான் என்றும் சொல்கிறார்கள். இந்தியில் அபராஜிதா எனப்படுகிறது. (அபராஜித வர்ம பல்லவர் நினைவுக்கு வந்து போகிறார்.) இலக்கியங்கள் நீலமலரை கருவிளை என்றும் வெள்ளைமலரை செருவிளை என்றும் குறிப்பிடுகின்றன. மயிற்பீலியின் ஒளிமிகுந்த கண்ணைப் போன்ற கருவிளை மலர் என்கிறது குறுந்தொகை. (பீலி ஒள் பொறி கருவிளை – குறுந்தொகை 110)சங்கு புஷ்பம் என்று பக்தர்களால் கொண்டாடப்படும் நீலம் மற்றும் வெள்ளை மலர்கள் இந்து சமய வழிபாட்டில் சிவன் மற்றும் விஷ்ணுவுக்கு உரிய மலர்களாக பூஜிக்கப்படுகின்றன. தவிர மலர் வழிபாட்டில் ராதாவின் உணர்வு (Radhs’s consciousness) என்ற அடையாளத்துடன் இறையோடு ஒன்றச்செய்யும் இன்மலராய் முக்கிய இடம் பெற்றுள்ளது.சங்குப்பூ

இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைத் தாயகமாகக் கொண்ட இதற்கு இந்திய மற்றும் சீனப் பாரம்பரிய மருத்துவங்களில் பெரிய இடம் உண்டு. இலை, பூ, வேர், விதை என கொடியின் அனைத்துப் பாகங்களும் பல்வேறு நோய் தீர்க்கும் மருந்தாகப் பயன்படுகின்றன. இதன் பூவிலிருந்து தயாரிக்கப்படும் தேநீரை தினமும் அருந்திவருவதன் மூலம் இருதய நோய் வராமல் தடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

100. தாமரைப்பூ 
 lotus (nelumbo nucifera)


தாமரை

இத்தொடரின் நூறாவது மலராய் இந்தியாவின் தேசிய மலரான தாமரை இடம்பெறுகிறது. இது வியட்நாமின் தேசியமலரும் கூட. பண்டைய இந்திய மற்றும் எகிப்திய சிற்ப, கட்டட, கலை வேலைப்பாடுகளிலும் தாமரை மலருக்குத் தனியிடம் உண்டு. தமிழில் கமலம், அரவிந்தம், முளரி, புண்டரீகம், வனசம், அம்போருகம், பங்கயம், பதுமம். பங்கேருகம், கோகனகம், நளினம், சரோருகம், பொன்மனை, சலசம், வாரிசம் என அநேகப் பெயர்கள் உண்டு.

தாமரை

நூற்றுக்கணக்கான ஆண்டுகளானாலும் வறட்சியைத் தாக்குப் பிடித்து நீர் கிடைக்கும் காலத்தில் வளர்ந்து மலரும் அதிசயத்தன்மை தாமரை விதைகளுக்கு உண்டு. அப்படியொரு அதிசயம் சீனாவில் 1300 ஆண்டு  பழமையான விதைகளிலிருந்து நிகழ்ந்திருக்கிறது. சீனாவில்தான் அதிக அளவு தாமரை உணவுப்பயிராக விளைவிக்கப்படுகிறது. அங்கு வயல்களில் மழைக்காலங்களில் தாமரையும் மற்றக் காலங்களில் நெற்பயிரும் மாறிமாறிப் பயிரிடப்படுவது வழக்கம். மழைநீர் தேங்கிநிற்கும் வயல்களில் தாமரை பயிரிடப்படும்போது கூடவே மீன், இறால், நண்டு போன்றவற்றை வளர்த்து இரட்டை லாபம் பார்க்கிறார்களாம். 

தாமரை


Nelumbo குடும்பத்தில் இரண்டே பிரிவுகள்தாம். Nelumbo nucifera ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. வெள்ளை, பிங்க், சிவப்பு நிறங்களில் மலரக்கூடியவை. இந்து மற்றும் புத்த மத ஆன்மீக நம்பிக்கைகளிலும் வழிபாடுகளிலும் சிறப்பிடம் பெறுபவை. அதனால் sacred lotus என்ற சிறப்புப் பெயரும் உண்டு. Nelumbo lutea எனப்படும் மஞ்சள்நிறத் தாமரை வட அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டது. Luteam என்பதற்கு லத்தீனில் மஞ்சள் வண்ணம் என்று பொருள்.

தாமரை பூவும் காயும்

தண்டு, விதை, பூ இவற்றின் பயன்பாட்டில் அடிப்படையில் தாமரைகள் வகைப்படுத்தப்படுகின்றன. தாமரையின் பூ, இலை, தண்டு, கிழங்கு, காய், விதை என அனைத்துப் பகுதிகளுமே உணவுப் பயன்பாட்டில் மட்டுமல்லாது ஆயுர்வேத மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகின்றன. தாமரை விதைகளை உண்டால் இதயநோய் தீரும் என்றும், தாமரை இலையில் சாப்பிட்டால் வியாதிகள் அணுகாது என்றும் கூறப்படுகிறது. தாமரைத் தண்டை விளக்குத்திரியாகப் பயன்படுத்தினால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையும் உண்டு.

(தொடரும்)

25 comments:

 1. பூக்களைப் பற்றிய தகவல் சுரங்கம்...

  படங்களும் விளக்கங்களும் அற்புதம்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பதிவையும் படங்களையும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
  2. உங்களை எப்படி தொடர்பு கொள்வது. என்னிடம் பெயர் தெரியாத பூக்களின் படங்கள் நிறைய உள்ளன. என் மின் அஞ்சல் முகவரி karthialagarmech@gmail.com..தயவு செய்து தொடர்பு கொள்ளவும்

   Delete
 2. அழகிய படங்களுடனும் தகவல்களுடனும் மலர்ந்திருக்கின்றன பூக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் ரசித்தமைக்கும் அன்பும் நன்றியும் மாதேவி.

   Delete
 3. அம்மாடி... எவ்வளவு படங்கள்... எவ்வளவு தகவல்கள்...

  சுவாரஸ்யம்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஸ்ரீராம். இம்முறை படங்கள் சற்று அதிகம்தான். :))

   Delete
 4. பூக்களை பற்றி முன்பு முகநூலில் பகிர்ந்தவைகளை இங்கு சேமிப்பாக போட்டு வருகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

  அனைத்தும் அழகு. விவரங்கள் அருமை.

  ReplyDelete
  Replies
  1. \\பூக்களை பற்றி முன்பு முகநூலில் பகிர்ந்தவைகளை இங்கு சேமிப்பாக போட்டு வருகிறீர்கள் என்று நினைக்கிறேன்.\\ ஆம். அங்கு தினம் ஒன்றாகப் பகிர்ந்தவற்றை மாதம் 10 என்று பதிந்து சேமித்து வருகிறேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மேடம்.

   Delete
 5. ஹையோ படங்கள் அத்தனையும் அத்தனை அழகு. மனம் அப்படியே லயித்துவிடுகிறது. ரொம்ப அழகாக எடுக்கின்றீர்கள்.

  டைட் க்ளோசப் இல்லையா? செமையா இருக்கு கீதா

  தகவல்களும் சிறப்பு.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் உற்சாகம் தரும் பின்னூட்டத்துக்கும் அன்பார்ந்த நன்றி தோழி.

   Delete
 6. அழகான படங்கள். இந்த பதிவில் வெளியிட்ட பல பூக்கள் தெரிந்த பூக்கள் என்பதால் அதிகம் ரசிக்க முடிந்தது.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் ரசித்தமைக்கும் மிகவும் நன்றி வெங்கட்.

   Delete
 7. வணக்கம் கீதமஞ்சரி.
  எப்படி இருக்கீங்க? பலநாட்கள் கழித்து பூவாசனை இழுத்து வந்ததோ, இல்லை பூக்களால் வரவேற்கிறீர்களோ :) படங்கள் பிரமாதம் கீதா..அருமையாக எடுக்கிறீர்கள். ஒரே பதிவில் ஏன் இத்தனைப் பூக்கள்? இரண்டாக கொடுக்கலாமே..
  நன்றி கீதமஞ்சரி

  ReplyDelete
  Replies
  1. ஆஹா.. வாங்க கிரேஸ்.. நலம்தானே? ஏற்கனவே ஃபேஸ்புக்கில் பகிர்ந்தவைதான் எல்லாம். இங்கே பதிவுக்குப் பத்து என்ற கணக்கில் ஒரு தொகுப்பாக இருந்தால் தேடல் எளிதாகும் என்பதால் இப்படி பதிகிறேன். எப்போதும் படம் குறைவாக இருக்கும். இப்போது கூடுதல் என்பதால் பதிவு நீளமாகத் தோன்றுகிறது. வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி கிரேஸ்.

   Delete
 8. ஸ்ரீ அரவிந்த அன்னை சுமார் 1600 பூக்களுக்கு விளக்கம் எழுதியிருப்பதைத் தாங்கள் படித்திருப்பதை, சங்குப் பூவிற்கு Radha's Consciousness என்று அவர் சொன்ன பெயரால் குறிப்பிட்ட உடனே புரிந்துகொண்டேன். எத்தனை முறை எழுதினாலும் இந்த விளக்கங்கள் நிச்சயம் பலருக்கும் பயன்படும்.

  இராய செல்லப்பா (தற்போது நியூ ஜெர்சியில்)

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா. பூக்கள் குறித்த தேடலின்போது அறிந்துகொள்ளும் தகவல்கள்தான். முழுமையான விளக்கம் இன்னும் அறிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

   Delete
 9. அருமையான படங்கள். சிரத்தையுடன் தேடித் தந்துள்ள தகவல்கள்.

  100 வகைகள் நிறைவுக்கு வாழ்த்துகள். நூலாகவோ மின்னூலாகவோக் கொண்டு வந்தால்
  இன்னும் சிறப்பாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் ஊக்கம் தரும் கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி. மின்னூலாக்கும் எண்ணம் உள்ளது. இன்னும் கொஞ்சம் தொகுத்துவிட்டு செயல்படுத்தவுள்ளேன்.

   Delete
 10. Absolutely Amazing Ge etha Aunty...solvadharku vaarthaigal innum thamizhil illaI endre ninaikren...So awesome..Therindha pookal enbadhal rettippu Aanandham...Nan ketukonda pookal anaithum ore padhivil kandadhu migavum magizhchii...அந்தி மல்லி பத்ராக்ஷி என்றும் அழைக்கப்படும்.பாசியின் இலைகளை ஒத்திருப்பதால் பாசி ரோஜா என்றும் ஜப்பான் ரோஜா என்றும் Table rose அழைக்கப்படும்.Allamanda flower um சங்கு புஷ்பம் என்று அழைக்கப்படுவது குழப்பத்தை தருகிறது.தெளிவு படுத்தவும்...படங்கள் யாவும் அபாரம்...தாமரை பற்றி இன்னும் ருசிகரமாக எழுதி இருக்கலாம்...படங்களும் எழுத்தும் ஹப்பப்ப்பப்பா..மனதையும் முகத்தையும் மலரச் செய்துவிட்டது...கர்நாடக இசையில் மட்டமட்டுமின்றி எழுத்திலும் சரஸ்வதி கடாக்ஷத்தை காட்ட முடியும் என்பதை நிதர்சனமகா நிரூபித்து விட்டீர்கள்...சபாஷ்..வாழ்க வளமுடன்...
  என்றும் அன்புடன்..
  ஷ்யாம் தேவ்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் விரிவான பின்னூட்டத்துக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி ஷ்யாம். அந்திமந்தாரைக்கு பத்ராக்ஷி என்ற பெயர் இருப்பதை இப்போதுதான் அறிகிறேன். moss rose என்பதுதான் தமிழில் பாசி ரோஜா எனப்படுகிறது. அலமாண்டாவை சங்கு புஷ்பம் என்று சொல்லிக் கேட்டதில்லை. அதன் வடிவம் மணி போல அல்லவா இருக்கும்?

   Delete
 11. எக்கச்சக்க தகவல்கள் ! பாராட்டுகிறேன் . என் சிறு வயதில் அந்திமந்தாரை இலையை விளக்கெண்ணெய்த் தீயில் லேசாக வாட்டித் தோலின்மேல் தோன்றுங் கட்டிமீது போட்டார்கள் ; கட்டி அமுங்கிவிடும் . தமிழ் இலக்கியத்தில் பூ என்று மட்டும் சொன்னால் அது தாமரையைத்தான் குறிக்கும் .

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் கூடுதல் தகவலுக்கும் மிக்க நன்றி. தாங்கள் குறிப்பிட்டுள்ளது போல எங்கள் சிறு வயதிலும் காயங்களுக்கும் கொப்புளங்களுக்கும் அந்திமந்தாரை இலை அல்லது சோற்றுக்கற்றாழையை தணலில் வாட்டிப் போட்டிருக்கிறார் என் அம்மாச்சி. பாரம்பரிய மருத்துவ முறைகள் இப்போது வழக்கொழிந்துவிட்டதால் தாவரங்களின் பயன்பாடு பலருக்கும் இப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

   Delete
 12. சிறப்பான தொகுப்பு.அழகிய படங்கள்.தக்காளி விளைவிக்கும் முறை குறித்தும் விளக்கினால் பயனுள்ளதாய் இருக்கும்.

  ReplyDelete
 13. முன்பெல்லாம் எங்கள் இடத்தில் வாடாமல்லி செடி ஒவ்வொருவர் வீட்டிலும் உண்டு.. ஆனால் இப்போது காணாமல் போய்விட்டது... படங்களுடன் சிறப்பான தொகுப்பு. நன்றி!!!
  https://www.scientificjudgment.com/

  ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.