14 December 2013

ஒருவேளை... (இந்திக் கவிதை - கமலேஷ் பாண்டே)




நானே புரிந்துகொள்ள இயலாத
சில திரைமறைவு ரகசியங்களை
விளக்கப்படாத விவரங்களை
ஒருவேளை
உனக்கு நான் புரியவைக்கக்கூடும்.

உன் பார்வை துளைத்த
வினாக்களுக்கான விடைகளை
ஒருவேளை..
என்றேனும் நான் உனக்குக் கையளிக்கக்கூடும்.

உள்ளுக்குள் பின்னிப் பின்னி
குமைந்துகொண்டிருக்கும் கனவுகளின்
முறுக்கிழைச் சிக்கல்களை
ஒருவேளை…..
என்றேனும் நான் எளிதாய் விடுவிக்கக்கூடும்.

மின்மினிகள் சிதறிக்கிடக்கும்
நிலாக்கால இரவுகளில்
கையோடு கை பிணைத்திருந்த
அத்தருணங்களோடு மற்றுமிரண்டை
ஒருவேளை….
நான் மறுபடியும் பெறக்கூடும்.

நான் காணும் சொப்பன உலகின்
கண்கவர் காட்சியழகை
மனமயக்கும் மாட்சியழகை
ஒருவேளை
உன்னையும் நான் காணச்செய்யக்கூடும்.

திருப்பமொன்று வந்துவிட,
இணைந்திருந்த நாமிருவரும்
தனித்தனியாய் ஆனோம் என்னும்
அந்த கசப்பான உண்மையை
ஒருவேளை
நான் பொய்யென மறுக்கவும் கூடும்.

*******************

(கமலேஷ் பாண்டே அவர்கள் எழுதிய ‘காஷ்என்னும் இந்திக்கவிதையின் தமிழாக்கம். அதீதம் இதழில் வெளிவந்தது.)
படம்: நன்றி இணையம்.

8 December 2013

இருத்தலும் இல்லாமையும்



தேவையின் நிமித்தம் தேடப்படும்போதுதான்
தெரியவருகிறது இருத்தலும் இல்லாமையும்.
ஏனெனில்….
கண்டுபிடிக்கும் தருணங்களுக்கு நிகராக
கவனங்களை ஈர்ப்பதில்லை
காணாமற்போகும் தருணங்கள்!

இன்னவிடத்தில் இன்ன நேரத்தில்
இன்னாரால் இன்னவாறாக 
காணாமற்போய்விட்டதென்பதை
கண்டிப்பாய் வரையறுக்கவியலாநிலையில்
அவநம்பிக்கையும் அசிரத்தையுமான தேடலின் முடிவில்
அயர்ந்தமரவைக்கிறது இயலாமை.

கவனிப்பாரின்றி நலிந்து மெலிந்து நாளடைவில்
காலாவதியாகிப்போயிருக்கலாம்.
அதன் சொல்லொணாத் துயர்மிகு சோகக்கூவல்
உடையவரைச் சேரமுடியாமல் ஓய்ந்துபோயிருக்கலாம்.
உள்ளேகும் புத்துருப்படிகளால் உதாசீனப்படுத்தப்பட்டு
புறவாசல் வழியே போக்கடிக்கப்பட்டிருக்கலாம்.

கண்ணெதிரே இருக்க நேர்ந்திடினும்
வசீகரமிழந்த அதனிருப்பு அதுதான் இதுவென்று
வகையாய் அடையாளங்காட்டத் தவறிப்போகலாம்.
இருத்தலும் இல்லாமையும் ஒன்றென
உணரப்படுவதான வலி சாதாரணமானதல்ல.

வரிகளை வாசித்துக் களைத்தோர்
காணாமற்போனதெதுவென்று அறியவிரும்புவீராயின்
கிலேசத்துக்காளாக வேண்டாம்.
உயிராகவோ…. உறவாகவோ…. உடமைப் பொருளாகவோ
ஊகித்தலும் உருவகப்படுத்தலும் உங்கள் உரிமையே!

********************************