20 April 2019

பூக்கள் அறிவோம் (71 - 80)

71. பெருங்கொன்றை
(Peltophorum pterocarpum)




பெருங்கொன்றை, இயல்வாகை என்று தமிழில் குறிப்பிடப்படும் இது பூக்கள் காரணமாக ஆங்கிலத்தில் yellow-flameboyant, yellow flame tree, yellow Poinciana என்றும் செம்புவண்ணக் காய்கள் காரணமாக copperpod tree என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்தியில் மஞ்சள் குல்மொஹர் எனப்படுகிறது. இதுவும் குல்மொஹரும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவையே. இதன் அறிவியல் பெயர் Peltophorum pterocarpum என்பதாம். Peltophorum என்னும் கிரேக்க வார்த்தைக்குகேடயம் போன்றஎன்று பொருள். பூக்களின் சூல்முடிகளின் வடிவம் கேடய வடிவத்தை ஒத்திருப்பதால் இப்பெயர். Pterocarpum என்னும் லத்தீன் வார்த்தைக்குசிறகுடைய காய்என்று பொருள்.

நீண்ட கொத்தில் மலரத் துவங்கும் பூக்கள், இளவேனிற்காலத் துவக்கத்தில் பொன்மஞ்சள் போர்வை போர்த்தினாற்போன்று மரம் முழுக்க மலர்ந்து அழகியத் தோற்றமளிக்கும். மலர்ந்து உதிரும் பூக்களோ மண்ணில் மஞ்சள் கம்பளம் விரித்தாற்போன்று காட்சியளிக்கும். கண்ணைப்பறிக்கும் பளீர்மஞ்சள்வண்ணப் பூக்களின் அழகுக்காகவும், குடைபோல் விரிந்து பரப்பும் அடர்நிழலுக்காகவும் சாலையோரங்களிலும் பெருவளாகங்களிலும் இம்மரங்கள் வளர்க்கப்படுகின்றன

கட்டிட கட்டுமானப் பணிகளுக்கும் மரச்சாமான்கள் தயாரிக்கவும் மரம் பயன்படுகிறது. இம்மரத்திலிருந்து கிடைக்கும் பழுப்புநிறச்சாயம், பத்திக் எனப்படும் முறையில் துணிகளுக்கு சாயமேற்றப் பயன்படுத்தப்படுகிறது. இம்மரத்தின் பட்டை பாரம்பரிய மருத்துவத்தில் வயிற்றுவலி, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றுக்கு உள்மருந்தாகவும், சுளுக்கு, வீக்கம், காயம், தசைப்பிடிப்பு போன்றவற்றுக்கு வெளிமருந்தாகவும் பயனாகிறது. தவிர தொண்டைப்புண்ணுக்கு கொப்பளிக்கும் மருந்தாகவும், பற்பொடியாகவும் கூட பயன்படுகிறது. இலைகள் கால்நடைத்தீவனமாக உபயோகமாகின்றன. பூக்கள் தேனீ வளர்ப்புக்குப் பெரிதும் உதவுகின்றன.

இலங்கை, மலேசியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்லாந்து உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய தீவுகளையும் ஆஸ்திரேலியாவையும் அதன் வடபகுதித் தீவுகளையும் தாயகமாகக் கொண்ட இம்மரம், இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, நைஜீரியா உள்ளிட்ட உலகின் பல நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டு நிலைகொண்டுள்ளது.

இதன் விதைகள் எளிதில் முளை விடுவதில்லை. சாதாரணமாய் ஒரு விதை முளைப்பதற்கு பல மாதங்கள் தேவைப்படும். விதைகளை, கொதிக்கும் நீரில் இரண்டு நிமிடம் போட்டு எடுத்த பிறகு குளிர்ந்த நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து விதைநேர்த்தி செய்யப்படுகிறது. பெருங்கொன்றை மரங்கள் பொதுவாக சுமார் ஒரு மீட்டர் சுற்றளவுடன் 15 முதல் 25 மீட்டர் உயரம் வரை வளர்கின்றன.  

72. மலைச்சவுக்கு
(Grevillea robusta)





Silver oak, silky oak, Australian silver oak என்றெல்லாம் குறிப்பிடப்படும் இம்மரம் தமிழில் மலைச்சவுக்கு எனப்படுகிறது. க்ரிவிலியா இனத்திலேயே மிகப்பெரியது என்பதால் Grevillia robusta எனப்படுகிறது. இது ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியைத் தாயகமாகக் கொண்டது. 

வசந்த காலத்தில் மரம் முழுக்க பூக்களால் நிறைந்து, ஆரஞ்சு வண்ண கோபுரம் போலக் காட்சியளிப்பது வெகு அழகு. இந்தியாவில் காஃபி, தேயிலைத் தோட்டங்களில் செடிகளுக்கு நிழல் தருவதற்காக இம்மரங்கள் வளர்க்கப்படுகின்றன. 

வருடத்தில் பெரும்பான்மையான மாதங்கள் இலைகளை உதிர்த்தபடியே இருப்பதால் தோட்டங்களுக்கு நல்ல இயற்கை உரம் கிடைக்கிறதாம். ஆனால் வீடுகளில் வளர்ப்பவர்கள் உதிரிலைகளை சுத்தம் செய்தே நொந்துபோகிறார்களாம். 

நன்கு முதிர்ந்த மரத்தின் அடித்தண்டு சுமார் மூன்று மீட்டர் சுற்றளவைக் கொண்டிருக்கும். உறுதியும் திடத்தன்மையும் கொண்ட இம்மரம் மரச்சாமான்கள் தயாரிக்கவும் கிடார் போன்ற இசைக்கருவிகள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இதன் அழகு மற்றும் பயன்பாடு காரணமாக உலகநாடுகள் பலவற்றிலும் அறிமுகப்படுத்தப்பட்டு வளர்க்கப்பட்டுவருகிறது. 

73. மோதகவல்லி
(Sterculia foetida)



விதைகள் வாதுமை போல உண்ணத்தகுந்தவை என்பதால் ஜாவா ஆலிவ், wild almond, Indian almond  என்ற பெயர்கள். முற்றிய காய்களின் வடிவத்தைக் கொண்டு, மோதகவல்லி, கொழுக்கட்டை மரம், குதிரைப்பிடுக்கன் மரம் என்ற பெயர்கள். பூக்கும் பருவத்தில் மரத்தை நெருங்கினாலே விரும்பத்தகாத வாடை வீசுதால் கசங்கம், பீநாறி மரம், skunk tree என்ற பெயர்கள். தோற்றத்தில் இலவமரத்தை ஒத்திருப்பதால் பேரிலவம் என்ற பெயர். இவை தவிர Bastard poon tree என்றொரு விநோதப் பெயரும் இதற்குண்டு. ஒரு மரம் மனிதர்க்குள் எவ்வளவு கற்பனைகளைத் தோற்றுவிக்கிறது. இதன் அறிவியல் பெயர் Sterculia foetida என்பதும் விசித்திரம். எரு போன்ற வாடையடிப்பதால் ரோமானிய எருக்கடவுள் sterquilinus பெயரால் இதற்கு sterculia என்று பெயரிடப்பட்டுள்ளது. Foetida என்றாலும் துர்நாற்றம் என்று பொருள்

நெடுநெடுவென்று சுமார் 25 மீட்டர் உயரத்துக்கு வளர்ந்து கம்பீரம் காட்டுவதாலும் இலைகள் மற்றும் பூக்கள், காய்களின் அழகுக்காகவும் தோட்டங்களிலும் வளாகங்களிலும் விரும்பி வளர்க்கப்படுகின்றன. இதன் காய்கள் மஞ்சளிலிருந்து, செம்மண் நிறம், அரக்குச்சிவப்பு, பழுப்பு என்று வண்ணங்கள் மாறிக்கொண்டே வந்து, முற்றி வெடிக்கையில் கரும்பழுப்பு நிறத்தில் காட்சியளிக்கின்றன. உள்ளே விதைகள் கருப்பு நிறத்தில் காணப்படுகின்றன.

மோதகவல்லியின் விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் மருத்துவக்குணம் உடையது. சமையலுக்கும் உதவுகிறது. இந்த எண்ணெய் சோப்பு தயாரிக்கவும், பயோடீசல் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. விதைகளை அப்படியே வறுத்துத் தின்பதும் உண்டு. இசைக்கருவிகள் செய்யவும், மரச்சாமான்கள் செய்யவும் இம்மரம் பயன்படுகிறது. இதன் மரப்பட்டைகளிலிருந்து நார் தயாரிக்கப்படுகிறது. 

74. சவுக்கு
(Casuarina)

சவுக்கு - பெண் பூக்கள்

சவுக்கு - ஆண் பூக்கள்

ஊசி போல் இலை இருக்கும், உத்திராட்சம் போல் காய் காய்க்கும் அது என்ன என்ற விடுகதைக்கு சட்டென்று விடை சொல்பவர்களுக்கு சவுக்கு மரம் நிச்சயம் பரிச்சயமாயிருக்கும். சவுக்கின் இலையை வைத்து விளையாடும் பள்ளிப்பருவ விளையாட்டு நினைவிருக்கிறதா? ஊசிபோன்ற இலையை ஒரு கணுவில் ஒடித்து மீண்டும் ஒட்டவைத்து கீழே போடவேண்டும். இரண்டு துண்டுகளும் ஒட்டியபடியே விழுந்தால் பரிட்சையில் தேர்ச்சி என்றும் விண்டு விழுந்தால் தோல்வி என்றும் நம்பிக்கை. பரிட்சையில் தேறுகிறோமோ இல்லையோ, பெரும்பாலும் இரண்டு துண்டுகளும் ஒட்டியபடியே விழுந்து அப்போதைக்கு ஆசுவாசம் தந்துவிடும். 
 
ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் பசிபிக் தீவுகளைத் தாயகமாகக் கொண்டவை Casuarina எனப்படும் சவுக்கு வகை மரங்கள். ஓக் மரங்களைப் போல நெடிதோங்கி வளர்ந்திருப்பதால் ஆஸ்திரேலியாவின் ஆரம்பகாலக் குடியேறிகளால் she-oak என்று குறிப்பிடப்பட்டது. ஷீ-ஓக் என்பது மருவி தமிழில் சவுக்கு என்றாகியிருக்கலாம் அல்லது சவுக்கு போன்று விசிறியடிக்கும் இலைகளைக் கொண்டிருப்பதால் சவுக்கு எனப்பட்டிருக்கலாம்.  

கேஸோவரி (cassowary) பறவையின் இறகுகளைப் போன்ற தோற்றத்துடன் இருப்பதால் இம்மரத்துக்கு casuarina என்று பெயரிடப்பட்டதாம். இரண்டுக்கும் மூலம் kasuari என்ற மலாய் வார்த்தைதான். 

சவுக்கு மரத்தில் ஆண்மரம், பெண்மரம் என தனித்தனி உண்டு. பெண்மரம் பூக்கும், காய்க்கும். ஆண்மரம் பூக்கும், காய்க்காது. அதனால் வேடிக்கையாக சிலர் இதனை he-oak என்று குறிப்பிடுவதுண்டு. காற்றின் மூலம் இவற்றில் மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிறது.

சவுக்கு மரங்கள் சுமார் 40 மீ. உயரம் வரை வளரக்கூடும். இவற்றின் ஆயுட்காலம் சுமார் 50 ஆண்டுகள். சவுக்கு மரங்கள் கழிகள், கம்பங்கள் மற்றும் விறகுக்காகவும், காகிதக்கூழ் தயாரிக்கவும் பெருமளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. கடலோர மணற்பாங்கான பகுதிகளில் காற்றுத்தடுப்பானாகவும், மண்சரிவைத் தடுத்து நிறுத்தவும் பெருமளவில் பயிரிடப்படுகின்றன. 



75. துளுக்க வேம்பு
(Melia azedarach)





Pride of India, bead tree, syringa berry tree, china berry tree, Persian lilac, Indian lilac, cape lilac, Texas umbrella tree, Umbrella cedar, white cedar, Ceylon cedar, Ceylon mahogany என்று அநேகப் பெயர்களால் குறிப்பிடப்படும் இது, இஸ்லாமிய நாடுகளிலிருந்து அறிமுகமாகியிருக்கும் என்று நம்பப்படுவதால் தமிழில் துளுக்க வேம்பு என்று குறிப்பிடப்படுகிறது. மலைவேம்புடன் இதைக் குழப்பிக்கொள்ள நிறைய வாய்ப்பு உள்ளது. ஆனால் இது மருத்துவக்குணம் கொண்ட மலைவேம்புக்கு (melia dubia) எதிர்க்குணங்கள் கொண்டது. இரண்டுமே Meliaceae குடும்பத்தைச் சேர்ந்தவை.

melia azedarach மரத்தின் பூக்களும் இலைகளும் வேம்பைப் போல இருந்தாலும் இலைகள் உண்ணத்தகுந்தவை அல்ல. ஆனால் உணவு சேமிப்புக்கிடங்கில் பூச்சிகொல்லியாகப் பயன்படுத்தப்படுகின்றன. பறவைகளுக்கு சற்றே போதை தரும் பழங்கள் மனிதர்களுக்கு விஷமென்று அறியப்படுகிறது

பூக்கும் பருவத்தில் வெள்ளையும் கத்தரியும் கலந்து மரத்தைப் போர்த்தினாற்போல காட்சியளிக்கும் அழகுக்காகவே பல இடங்களில் இம்மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இதன் தாயகம் இந்தோ-மலேயப் பகுதிகளும் ஆஸ்திரேலிய-ஆசிய நாடுகளும் ஆகும். உறுதியான இம்மரத்தின் கட்டைகள் மரவேலைப்பாடுகளுக்குத் தோதானது என்பதால்தான் செடார், மகோகனி போன்றவற்றுக்கு இணையாக சொல்லப்படுகிறது.

ஐந்து அல்லது ஆறு குழிவுகள் கொண்ட அழகான விதைகள் ஆரம்பகாலத்தில் ஜெபமாலைகள் செய்யப் பயன்படுத்தப்பட்டனவாம். வெப்பமண்டலப் பகுதிகளில் விரைவில் வளர்ந்து தழைத்து ஆக்கிரமிப்பு இனமாக மாறி மற்றத் தாவர இனங்களை அழிப்பதாலும் நடைபாதையோர மரங்களிலிருந்து உதிரும் பழங்களால் நடைபாதைகள் வழுக்குத்தரைகளாக மாறி உயிராபத்து விளைவிப்பதாலும் சில நாடுகளில் இதை வளர்ப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

76. காகிதப்பூக்கள்
(Bougainvillea)




காகிதம் போன்ற மெல்லிய மொடமொடப்பாலும் என்றும் வாடாத தன்மையாலும் காகிதப்பூக்கள் என்றும் கடுதாசிப்பூக்கள் என்றும் குறிப்பிடப்படும் போகன்வில்லா பூக்கள் வீடுகளிலும் பெரும் வளாகங்களிலும் அழகுக்காக விரும்பி வளர்க்கப்படுகின்றன. பிரேசில், அர்ஜென்டைனா நாடுகளைத் தாயகமாகக் கொண்ட இத்தாவரம், மரக்கொடி வகையாகும். முட்தாவரமான இது நச்சுத்தாவரமும் ஆகும். செடியின் சாறு பட்டால் தோலில் அரிப்பும் எரிச்சலும் உண்டாகும் என்பதால் கையாளுகையில் எச்சரிக்கை தேவை.

போகன்வில்லாவில் 300-க்கும் மேற்பட்ட வகைகள் இருப்பதாக அறியப்பட்டுள்ளன. வெள்ளை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு, பிங்க், வாடாமல்லி என பல வண்ணங்களில் ஒற்றையாகவோ அடுக்காகவோ காணப்படுபவை உண்மையான பூக்கள் அல்ல.. அவை பூவடி இலைகள் மட்டுமே. அவற்றுக்கு நடுவில் வெண்மஞ்சள் நிறத்தில் குட்டிக்குட்டியாய் இருப்பவைதாம் பூக்கள். முதன்முதலில் இத்தாவரம் பற்றி அறியத்தந்த பிரெஞ்சு நாட்டைச் சார்ந்த கடல்வழி ஆய்வர் Louis Antoine de Bougainville பெயரால் இதற்கு bougainvillea என்று பெயரிடப்பட்டுள்ளது. போகன்வில்லாவும் அந்திமந்தாரையும் Nyctaginaceae என்னும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை.

காகிதப்பூ செடிகளை வளர்ப்பதும் பராமரிப்பதும் எளிது. அலங்கார வளைமரமாகவோ, புதராகவோ, பற்றுக்கொடியாகவோ, போன்சாய் எனப்படும் குறுமரமாகவோ எப்படி வேண்டுமானாலும் நம் விருப்பத்துக்கு வளைத்து வளர்க்கமுடியும். கிளைகளை வெட்டி நடுவதன் மூலமும், பதியன்கள் மற்றும் விதைகள் மூலமும் புதிய செடிகளை வளர்க்கலாம்.

கலிஃபோர்னியா, சீனா, மலேசியா, தைவான், பிலிப்பைன்ஸ் நாடுகளில் உள்ள சில நகரங்கள் தங்கள் நகர மலராக போகன்வில்லாவை அங்கீகரித்துள்ளன. கிரெனடா தீவின் தேசிய மலரும் இதுவே. 

77. ஜகரண்டா
(Jacaranda mimosifolia) 



வசந்தகாலத்தில் லாவண்டர் வண்ணத்தில் மரம் முழுக்க பூவாடை போர்த்துநிற்கும் அழகுக்காகவே ஜகரண்டா மரங்கள் வீடுகளிலும் வீதிகளிலும் வளர்க்கப்படுகின்றன. சாதாரணமாய் பச்சைப் பசேலென்று காட்சியளிக்கும் மரம் இலையுதிர் காலத்தில் இலைகள் பழுத்து மஞ்சள் வண்ணத்தில் காட்சியளிப்பது ஒரு அழகு. வசந்தகாலத்தில் பந்துபந்தாய் பூக்கள் மலர்ந்து காட்சியளிப்பது பேரழகு. பூத்த மலர்கள் உதிர்ந்து ஊதா வண்ணத் தரைவிரிப்பென மண்ணை அலங்கரித்திருப்பது தனியழகு.

ஜகரண்டா பூவின் வடிவத்தை உற்றுக் கவனித்தால் ஒவ்வொன்றும் ஆடும் புறா போல அழகு காட்டும். பூக்கள் தலையில் உதிர்ந்தால் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையும் சில இடங்களில் உண்டு. ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகளில் இவை பூத்துக்குலுங்கும் பருவத்தில் ஜகரண்டா திருவிழா கொண்டாடப்படுகிறது.

ஜகரண்டாவில் சுமார் 50 வகை இருந்தாலும் ஜகரண்டா என்று பொதுவாகக் குறிப்பிடப்படுவது இந்த Jacaranda mimosifolia வகைதான். பிரேசிலைப் பூர்வீகமாகக் கொண்ட இம்மரங்கள் உலக நாடுகள் பலவற்றிலும் அறிமுகப்படுத்தப்பட்டு, சில நாடுகளில் ஆக்கிரமிப்புத் தாவரமாக அறியப்படுகின்றன. ஜகரண்டா என்றால் தென்னமெரிக்கப் பூர்வகுடி மொழியில் நறுமணம் என்று பொருளாம்.

சீனாவில் இதன் இலைகளிலிருந்து ஊதாநிற சாயம் தயாரிக்கப்படுகிறது. சில வகை ஜகரண்டா மரங்கள் மரவேலைப்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. ஜகரண்டா வகையுள் வெள்ளை மலர்களும் உள்ளன என்றாலும் ஊதா அளவுக்கு அவற்றுக்கு வரவேற்பில்லை.


78. பாதிரி 
(Stereospermum tetragonum)




ஜகரண்டா குடும்பத்தைச் சேர்ந்ததுதான் பாதிரியும்பாடலம்பாதிரி என்றெல்லாம் பழந்தமிழ்ப் பாடல்களில் குறிப்பிடப்படும் மலர் இதுவே. இதற்கு அம்புஅம்புவாகினிபுன்காலி என்ற பெயர்களும் உண்டு. கபிலர் பாடிய 99 மலர்களுள் இதுவும் ஒன்று. இந்தியாஇலங்கைசீனா ஆகிய நாடுகளைத் தாயகமாகக் கொண்ட மரம். மஞ்சள் வண்ணத்தில் லேசாக வளைந்தாற்போன்ற சிறிய புனல் வடிவப் பூவின் ஐந்து இதழ்களில் இரண்டு மேல்நோக்கியும் மூன்று கீழே தாழ்ந்தும் இருக்கும்.

வேனிற் பாதிரி கூன் மலரன்ன என்கிறது குறுந்தொகைப் பாடல்.. கூன் விழுந்த மலராம்… என்ன அழகான கற்பனைஅது மட்டுமா.. இதன் காய் பிஞ்சு முருங்கை போல நீண்டு முறுக்கிக் கொண்டிருக்கும். பார்ப்பதற்கு பாம்பு போல இருப்பதால் இதற்கு மஞ்சள் பாம்பு மரம் (yellow snake tree) என்ற பெயரும் உண்டு.

மரத்தின் உறுதித்தன்மையால் மரச்சாமான்கள் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. பூக்கள் கோவில்களில் பூஜையில் பயன்படுத்தப்படுகின்றன. திருப்பாதிரிப்புலியூரில் உள்ள பாடலீஸ்வரர் கோவிலின் தல விருட்சம் பாதிரி மரம்.

79. ஆப்பிரிக்க துலிப் பூக்கள்
(African Tulip spathodea campanulata)






துலிப் போன்று கிண்ணவடிவில் இருப்பதாலும் ஆப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்டிருப்பதாலும் இப்பூக்களுக்கு ஆப்பிரிக்க துலிப் பூக்கள் என்று பெயர். செக்கச்செவேலென்று கொத்துக்கொத்தாய் மலரும் பூக்களின் அழகுக்காக உலகெங்கும் பல நாடுகளில் விரும்பி வளர்க்கப்படுகிறது. உலகின் மிக முக்கிய ஆக்கிரமிப்புத் தாவர இனங்கள் பட்டியலில் முதல் நூறு இடத்தில் இதுவும் இடம்பெறுகிறது. தமிழ்நாட்டிலும் பல இடங்களில் இம்மரங்களைக் காணமுடியும்.

பூக்களில் தேனை நாடிவரும் சிற்றுயிர்கள் பலவும் கிண்ண வடிவ பூக்களில் தேங்கியிருக்கும் மழைநீரிலும் பனித்துளியிலும் சிக்கி அங்கேயே மடிந்துவிடுவது பெரும் ஆச்சர்யம். பூக்கள் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் உயிர்களைக் கொல்லக்கூடுமா? கூடுமெனில் காரணம்?

இப்பூக்கள் தங்களுக்கான மகரந்தச்சேர்க்கையை யார் செய்வது என்று தாங்களே முடிவெடுக்கின்றன. பறவைகளுக்கும் வௌவால்களுக்கும்தான் அந்த முன்னுரிமை. வண்டு, தேனீ போன்ற பூச்சிகளால் மகரந்தச்சேர்க்கை அண்மையிலேயே நடைபெறும் என்பதால் அதைத் தவிர்க்க மேற்கொள்ளும் உத்திதான் இம்மாதிரி நீரில் அமிழ்த்தி மரணிக்கச் செய்வது. மொட்டுகளிலும் கூட நீர்த்தேக்கம் உண்டு. குழந்தைகள் அந்த மொட்டுகளைப் பறித்து உள்ளிருக்கும் நீரைப் பீய்ச்சி விளையாடி மகிழ்வர். அதனாலேயே இதற்கு fountain tree, pichkari என்ற பெயர்களும் தீப்பற்றி எரிவது போல பூத்துக் காணப்படுவதால் Nandi flame, Nile flame என்ற பெயர்களும் உண்டு. (pichkari என்றால் இந்தியில் பீச்சாங்குழல் என்று அர்த்தம்)


80. நாகலிங்கப்பூ
Couroupita guianensis





படமெடுத்தாடும் பாம்பு சிவலிங்கத்துக்கு குடைபிடிப்பது போன்று தோற்றம் காட்டுவதால் இதற்கு நாகலிங்கப்பூ (சில இடங்களில் சிவலிங்கப்பூ) என்று பெயர். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மராத்தி, பெங்காலி, ஒடியா போன்ற பல இந்திய மொழிகளிலும் இம்மரம் நாகலிங்கம் என்ற பெயராலேயே குறிப்பிடப்படுகிறது. பூக்களின் சிறப்புத்தோற்றம் காரணமாக, சிவனுக்கு உகந்த மலர்களாக பூஜிக்கப்படுகின்றன. அதனால் பெரும்பாலான கோவில்களில் முக்கியமாக சிவதலங்களில் இம்மரம் காணப்படுகிறது. 

பாண்டிச்சேரி மாநிலத்தின் மாநில மலர் என்ற சிறப்பும் நாகலிங்கப்பூவுக்கு உண்டு. ஆன்மீகம் சார்ந்திருந்தாலும், அதிசயமாய் நாகலிங்கப்பூ ஒரு திரைப்பாடலிலும் இடம்பெற்றுள்ளது. 

நாகலிங்கப்பூவெடுத்து நாலுபக்கம்
கோட்டை கட்டி வா வா வா...
என்ற போதையூட்டும் சுசீலாம்மாவின் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றனவா?

மத்திய மற்றும் தென் அமெரிக்காவின் மழைக்காடுகளைத் தாயகமாகக் கொண்ட இம்மரம்மலர்களின் அழகு மற்றும் நறுமணத்தாலும்பல்வேறு மருத்துவக் குணங்களாலும் காய்களின் பிரத்தியேகத் தன்மையாலும் கவரப்பட்டுதற்போது உலகின் பல நாடுகளிலும் காணப்படுகிறது. இந்தியாஇலங்கைதென்கிழக்கு ஆசிய நாடுகளில் கலாச்சார மற்றும் ஆன்மீக நம்பிக்கைகளில் பெரும்பங்கு வகிக்கிறது. 

மரப்பட்டைபூகாய் என நாகலிங்க மரத்தின் அநேக பாகங்கள்பூஞ்சைக்கொல்லியாகவும்நுண்ணுயிர்க்கொல்லியாகவும்சளிவயிற்றுவலி உள்ளிட்ட உபாதைகளுக்கும்சருமப் பிரச்சனைகளுக்கும் நிவாரணியாகவும் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இதன் அறிவியல் பெயர் couroupita guianensis  என்பதாகும். couroupita என்பது அமெரிக்காவின் தொன்மையான மரவகையொன்றைக் குறிக்கிறது. guianensis என்பது இம்மரத்தின் பூர்வீகமான கயானாவைக் குறிக்கிறது. 

நாகலிங்க மரம் 35 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. நாகலிங்க மரத்தின் காய்கள் கனிவதற்கு ஒன்று முதல் ஒன்றரை வருடம் ஆகும். காய்கள் சுமார் 25 செ.மீ. குறுக்களவுடன் பீரங்கிக்குண்டு போன்ற தோற்றங்காட்டுவதாலும், பழுத்துக் கீழே விழும்போது டமார் என்ற சத்தத்துடன் வெடித்து சிதறுவதாலும் ஆங்கிலத்தில் cannonball tree என்று குறிப்பிடப்படுகிறது. கோவில் வளாகங்களில் இம்மரங்களை வைப்பதற்கு இதுவும் ஒரு காரணம். காய்கள் வெடித்துச் சிதறும் சத்தம் வெடிவெடிப்பது போலிருப்பதால் திருடர்கள் கோவிலுக்குள் புகுந்து திருடுவதற்கு அஞ்சுவார்களாம். 

நாகலிங்க மலர்கள் வழக்கமான பிற மரங்களைப் போல கிளைகளில் பூக்காமல் உறுதியான அடிமரத்தினின்று நீண்டு வளர்ந்த காம்புகளில் கொத்துக்கொத்தாகப் பூத்துக் குலுங்குகின்றன. நாகலிங்கப்பூக்களில் தேனீ, குளவி போன்ற சிறு பூச்சிகள் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிறது. 

நாகலிங்கப்பூவில் தேன் கிடையாது என்பது ஆச்சர்யம். அதனிலும் ஆச்சர்யம் தேன் இல்லாத பூவில் எப்படி மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிறது என்பது. இப்பூக்களில் இருவகையான மகரந்தம் உள்ளது. ஒன்று கருவுறும் தன்மை கொண்டது, மற்றது கருவுறா தன்மை கொண்டது. கருவுறா தன்மை கொண்ட நறுமண மகரந்தம் பூச்சிகளைக் கவர்ந்திழுக்க, கருவுறும் தன்மை கொண்ட மகரந்தம் அவற்றின் உடலில் ஒட்டிக்கொண்டு மகரந்தச்சேர்க்கைக்கு வழிவகுக்கின்றனவாம்.  

(தொடரும்)