29 July 2013

பார், பகலும் கழிந்தது இரவும் போனது





பார், பகலும் கழிந்தது  இரவும் போனது,
சூரியன் மேற்கை அடைந்து  மறைந்தது.
அந்திப்பொழுது வந்து ஆக்கிரமித்தது.
முந்தைய அந்திப்பொழுதுகள் போலவே
ந்தப்பொழுதும் இருந்தது.
எழுந்தது முதலாகவே ஏனோ எண்ணியிருந்தேன்,
பகலில் ஏதேனும் புதுமை நிகழுமென்று!
பார், பகலும் கழிந்தது இரவும் போனது.




பையப் பையப் புறப்பட்ட விண்மீன்கள்
மெல்ல மெல்லப் பரவின வானமெங்கும்.
முந்தைய இரவுகளைப் போலவேதான்
அந்த இரவும் இருந்தது.
அந்திவேளையில் ஏனோ சிந்தித்திருந்தேன்,
இரவில் ஏதேனும் அதிசயம் நிகழும் என்று.
பார், பகலும் கழிந்தது இரவும் போனது.




பறவைகள் கீச்சிட்டன,
அரும்புகள் மலர்ந்து மணம்வீசின.
கிழக்கிலிருந்து மீண்டும் கதிரவன் எழுந்தது.
வழக்கம்போல் வைகறைப்பொழுது புலர்ந்து.
உறங்கும்வேளையில் ஏனோ உத்தேசித்திருந்தேன்,
விடியலில் ஏதேனும் விநோதம் நிகழும் என்று.
பார், பகலும் கழிந்தது  இரவும் போனது.


*******************


(மூலம்: ஹரிவம்ஷ்ராய் பச்சன் அவர்கள் எழுதிய ‘lo dhin beetha hai, lo raat gayee’ என்னும் இந்திக் கவிதை,  வல்லமை இதழில் வெளிவந்தது. மூலக்கவிதை கீழே....)


लो दिन बीता, लो रात गई

 लो दिन बीता, लो रात गई,
सूरज ढलकर पच्छिम पहुँचा,
डूबा, संध्या आई, छाई,
सौ संध्या-सी वह संध्या थी,
क्यों उठते-उठते सोचा था,
दिन में होगी कुछ बात नई।
लो दिन बीता, लो रात गई।

धीमे-धीमे तारे निकले,
धीरे-धीरे नभ में फैले,
सौ रजनी-सी वह रजनी थी
क्यों संध्या को यह सोचा था,
निशि में होगी कुछ बात नई।
लो दिन बीता, लो रात गई।

चिड़ियाँ चहकीं, कलियाँ महकी,
पूरब से फिर सूरज निकला,
जैसे होती थी सुबह हुई,
क्यों सोते-सोते सोचा था,
होगी प्रातः कुछ बात नई।
लो दिन बीता, लो रात गई,



26 July 2013

என் கதைமாந்தர்கள்…




காத்திருந்து காத்திருந்து
களைத்துப்போயிருக்கலாம்
என் கதைமாந்தர்கள்!

ஆட்டுவிக்கும் கர்வத்தில் நான்!
அலைக்கழிக்கப்படும் கலவரத்தில் அவர்கள்!

விதியை மாற்றுவதும் வீணே இழுத்தடிப்பதும்
இன்னாருடன் இன்னாருக்கு
இணக்கமா பிணக்கா என்பதை
இடைக்கிடை நிர்ணயிப்பதும்
நிர்ணயித்ததை நிராகரிப்பதும்....

இடைச்செருகல்களாய்
இன்னுஞ்சிலரை இணைப்பதும்,
இணைந்தோரை வலிந்து பிரிப்பதுமாய்
ஒரு பொம்மை விளையாட்டைப்போலத்தான்
ஆரம்பித்தது அது

துல்லியமாய் கணக்கிடவியலா
துளிப்பொழுதொன்றில்
நானும் அங்கோர் அங்கமாகிவிட
நகரமறுக்கிறது கதைக்களம்!

அம்மாந்தரோடு நாளெல்லாம்
செம்மாந்து திரியும் எனக்கு
நாட்பட நாட்பட
புற உலகம் என்பது
புளித்துதான் போய்விட்டது!

*********************


(வல்லமை இதழில் வெளியானது)

24 July 2013

ஏட்டுச்சுரைக்காய் – என் முதல் கணினி அனுபவம்





என்னை இந்தத் தொடர்பதிவில் இணைத்துவைத்த நண்பர் கணேஷூக்கு நன்றி. என்னடா, சிக்கலில் சிக்கவைத்தவருக்கு நன்றி சொல்கிறாளே என்று நினைக்கிறீர்களா? என் ஆரம்பகால கணினி அனுபவங்களையெல்லாம் வெளியில் சொன்னால் வெட்கக்கேடு என்று நினைத்துக்கொண்டிருந்தவளை, அப்படியெல்லாம் நினைக்காதே, பதிவுலகில் இன்று அமர்க்களப்படுத்தும் பலரும் ஆரம்பகாலத்தில் கணினி பற்றி அறியாமலிருந்தவர்கள்தாம் என்ற எண்ணமுண்டாக்கும் வகையில் எழுதி, என்னையும் துணிவுடன் எழுதவைத்த கணேஷுக்கு நன்றி சொல்வது நியாயம்தானே.

நான் படித்தது Diploma in Electronics and communication engineering சுருக்கமாகச் சொன்னால் DECE. இன்னும் சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் பாலிடெக்னிக். பாலிடெக்னிக்கா? அப்படியென்றால்… க்கு கம்ப்யூட்டர் எல்லாம் அத்துப்படியாச்சே என்றுதானே நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை. அப்போது கம்ப்யூட்டரைக் கண்ணாலும் பார்த்ததே இல்லை. கம்ப்யூட்டர் பிரிவு எடுத்திருக்கிற பிள்ளைகளுக்குதான் அந்த பாக்கியமெல்லாம்

இரண்டாம் வருஷத்தில் Introduction to Computer Programming (ICP) என்றொரு பாடம் இருந்தது. அதில் BASIC, COBOL, FORTRAN என்று கம்ப்யூட்டர் மொழிகள் பலவற்றையும் கற்றுக்கொடுத்ததோடு அதில் சில புரோகிராம் எழுதவும் சொல்லிக்கொடுத்தார்கள். சரி, என்றாவது ஒருநாள் நாமும் கம்ப்யூட்டரோடு இந்த மொழியிலெல்லாம் பேசி ஒரு உறவை வளர்த்துக்கொள்ளப்போகிறோம் என்று மனசுக்குள் ஒரு ப்பாசையை வளர்த்துக்கொண்டதுதான் மிச்சம். ம்ஹூம்கடைசி வரைக்கும் கம்ப்யூட்டரைப் படத்தில் மட்டுமேதான் பார்த்திருந்தோம். இன்னொரு ரகசியம் சொல்லவா? அதுவரை பள்ளியிலும் சரி, பாலிடெக்னிக்கிலும் சரி, முதல் ஐந்து இடங்களில் மதிப்பெண்கள் பெற்றிருந்த எனக்கு தோல்வி என்ற வார்த்தையை  அறிமுகப்படுத்தியதும் அந்தப் பாடம்தான். அத்துடன் கம்ப்யூட்டர் என்றாலே சிக்கல்தான் என்ற நினைப்பு ஆழ்மனதில் சம்மணமிட்டு அமர்ந்துகொண்டுவிட்டது.

என்னை வேலைக்கு அனுப்பும் எண்ணம் வீட்டில் இல்லை என்பதால் படிப்பு முடித்தபின் சும்மா வீட்டிலிருக்கப் பிடிக்காமல் type writing வகுப்புகளுக்குப் போக ஆரம்பித்தேன். ஒரே நேரத்தில் தமிழ், ஆங்கிலம், இந்தி அனைத்திலும் பயிற்சி பெற்றுத் தேறினேன். அன்று கற்றுக்கொண்டதுதான் இன்று இத்தனை விரைவாக தட்டச்ச உதவுகிறது. நான் தடதடவென்று தட்டச்சும் வேகத்தில் எங்கே மடிக்கணினியின் விசைகள் பறந்துபோய்விடுமோ என்ற பயத்தில் தனி விசைப்பலகையே ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். எதையோ சொல்ல வந்து எதையோ சொல்லிக்கொண்டிருக்கிறேனே.. சரி, விஷயத்துக்கு வருகிறேன்.

என் கணவர் தன் அலுவலக வேலைகளுக்காகவென்று ஒரு Desktop computer வாங்கி வீட்டில் இறக்கியபோதுதான், கணினியை முதன்முதலில் அருகில் பார்த்தேன். டிப்ளமா படித்த நான், படித்து முடித்து கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்குப் பிறகு வியப்போடு, அட, இதுதான் கம்ப்யூட்டரா என்று கேட்டபோது அவர் என்னை விநோதமாய்ப் பார்த்திருக்கவேண்டும். அவர் அலுவலகம் சென்றிருக்கும் நேரங்களில் என்னைப் பயன்படுத்த அனுமதித்தும் அதைத் தொடவே பயந்தேன். அதில் என்ன செய்யமுடியும் என்றும் தெரியவில்லை. பிறகுதான் இமெயில் அறிமுகமானது. மற்ற நேரங்களில் Encarta வையும்  britannica வையும் புரட்டிக்கொண்டிருந்தேன். இணையப் பத்திரிகைகள் பற்றி அறியவந்தபோது அட, கம்ப்யூட்டரில் தமிழ் எழுத்தும் வருமா என்று இன்னொரு முறை ஆச்சர்யப்பட்டு என்னவரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினேன்.

ஊரை, உறவை, உற்றாரைப் பிரிந்து தனிமையில் தவித்தபோது, தவிப்பின் வேதனையைத் தணித்துக்கொண்டிருந்த என் கவிதைகளைத் தாள்களிலிருந்து கணினிக்கு இடம்பெயர்க்கும் வித்தையைக் கற்றுக்கொடுத்ததோடு, பல இணையதளங்களையும் அறிமுகப்படுத்தி என் படைப்புகளை அனுப்பிவைக்க ஊக்கமளித்தவர் என் நாத்தனார். அப்போது அழகி என்னும் மென்பொருளைத் தரவிறக்கி அதன்மூலம் தட்டச்சு செய்துகொண்டிருந்தேன்.

கணினி உலகம் என்னும் மாயாஜால உலகம் மெல்ல மெல்ல பரிச்சயமானது. எனக்கே எனக்கென்று ஒரு மடிக்கணினி பரிசளித்து அந்த அதிசய உலகத்தின் உள் நுழையும் வழியைக் காட்டினார் கணவர். மகளோ கைப்பிடித்து அழைத்துப்போனாள். கணினி பற்றித் தான் அறிந்தவற்றையெல்லாம் எனக்குக் கற்றுத்தந்தாள். அவளறியாதவற்றைக் கேட்டபோது தேடிக் கொணர்ந்து உதவினாள். கணினிக்காட்டுக்குள் காணாமல் போய்த் தவித்தபோதெல்லாம் கண்டுபிடித்து மீட்டுவந்தாள். எளிதில் புரியாதவற்றை ஒரு குழந்தைக்குக் கற்றுத்தருவதைப் போல பொறுமையுடன் சொல்லிக்கொடுக்கிறாள். சமீபமாய் மகனும் அவளுடன் சேர்ந்துகொண்டு கணினிப்பாடம் கற்பிக்கிறான் எனக்கு.

சந்தேகம் கேட்கும்போதெல்லாம் எரிச்சலுறாமல், எள்ளி நகையாடாமல், அலுத்துக்கொள்ளாமல், அவசரப்படாமல் நிதானமாகத் தெளிவித்து குடும்பமே எனக்கு உதவுகிறது. கொடுத்துவைத்தவளல்லவா நான்! அவர்கள் கொடுத்த உற்சாகம் தான் இந்த வலைப்பூவை எவர் உதவியுமின்றி என் முயற்சியால் நானே ஆரம்பிக்க உதவியது. எனக்கு எப்போதும் துணைநிற்கும் என் குடும்பத்தினருக்கு இந்நேரத்தில் நன்றி சொல்லி, இத்தொடர் பதிவில் கணினியுடனான தங்கள் முதல் அனுபவத்தைப் பகிர்வதற்கு ஐந்து பதிவர்களை அழைக்கிறேன்.

இத்தொடரைத் தொடர நான் அழைப்பவர்கள்…

16 July 2013

அறுந்த செருப்பு






சித்திரை வெய்யில் உச்சி மண்டையைப் பிளந்தது. ஊற்றெடுத்த வியர்வை கண்டு அஞ்சியதுபோல் அவன் அணிந்திருந்த உயர்தர டெரிலின் சட்டை முழுக்க நனைந்து உடம்போடே ஒட்டிக்கொண்டிருந்தது. பல்லைக்காட்டி நின்ற பழஞ்செருப்பும் தலைச்சுமையும் அணிந்திருந்த உடைக்குச் சற்றும் பொருந்தாமல் பார்வைகளைக் கேள்விக்குறி போட்டு வளைத்தனஇத்தனைக்கும் சொந்தக்காரனான வெங்கடேசன் ரயில் நிலையத்தை விட்டு வெளியில் வந்து பேருந்துக்காக காத்திருக்கலானான். நிழற்குடையில் கூட்டம் அதிகமிருந்தது. இவன் ஒரு ஓரமாக குத்துக்காலிட்டு அமர்ந்துகொண்டான்.

இந்த சட்டையை வெயில்காலத்தில் போடலாமா? ஆனால் வேறு வழியில்லை. அவனிடம் இருப்பவை எல்லாமே அண்ணனுடையவைதான். அவனுக்கென்று இருந்தவை இரண்டு செட் சட்டையும் வேட்டியும்தான். அதிலும் நிறமாய் இருக்கவேண்டிய சட்டை வெளுத்துப்போயும், வெளுப்பாய் இருக்கவேண்டிய வேட்டி அழுக்கு நிறத்திலும் இருக்கும்.

அப்படியொரு கோலத்தில்தான் பத்துவருஷங்களாய் பார்க்காத அண்ணனை இரண்டு வருஷத்துக்குமுன் சந்திக்க நேர்ந்தது. உடனேயே வீட்டுக்கு அழைத்துப்போய் ஏராளமாய் சட்டை பேண்ட் கொடுத்தது. அண்ணியும் வசந்தாவுக்கென்று நல்ல நல்ல புடவைகளாகக் கொடுத்தது.

ஏண்டா இப்படி பரதேசி மாதிரி நிக்கிறே? ஒன்ன இந்தக்கோலத்துல பாக்கக்கூடாதுன்னுதான் அப்பா அப்பவே கண்ணமூடிட்டாரா?” என்று அவனைக் கட்டிக்கொண்டு ஓவென்று அழுதது. அண்ணி சமாதானப்படுத்தியது. அண்ணன் கண் கலங்கி அதுவரையிலும் பார்த்ததே இல்லையாதலால் மனம் கனத்துப்போனது.

எந்தெந்த ஊர்களுக்கோ போகும் பேருந்துகள் வந்ததே தவிர அண்ணன் வீடு செல்லும் பேருந்து வந்தபாடில்லை. பீடியை வாயில் வைத்தபடி ஒருவர் இவனருகில் வந்து, "தீப்பெட்டி இருக்கா?" என்றார்.

"இல்லைங்களே!" சங்கடமாய்ச் சொல்லிவிட்டுக் கேட்டான்." ஆத்துப்பாலம் போற பஸ்ஸு எப்பங்க வரும்?"

"வரும் வரும்!" தீப்பெட்டி கிடைக்காத எரிச்சலில் நகர்ந்துசென்றார்.

அண்ணனுக்கு போன் போடலாம் என்றால் போனை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்தது நினைவுக்கு வந்தது.யோசனையுடன் தாடையைச் சொறிய... சவரம் செய்யவும் மறந்துவிட்டது நினைவுக்கு வந்து உறுத்தியது. வெங்கடேசன் ஒன்றும் தினப்படி சவரக்காரன் இல்லை. ஆனால் எப்பாடு பட்டாலும் அண்ணனைப் பார்க்கப்போகுமுன் முடி வெட்டி சவரம் செய்துதான் பார்க்கப்போவான். அவனைப் பரதேசிக் கோலத்தில் பார்க்க அண்ணனுக்குச் சகிக்காது. உடனேயே காசு கொடுத்து கடைக்குப் போய் முடிவெட்டி வாடா என்று அனுப்பிவிடும்.

பேருந்து வருகிறபாடாய்த் தெரியவில்லை. ‘என்ன ஒரு நாலஞ்சு கிலோமீட்டர் இருக்குமா? பொடி நடையா நடந்திடவேண்டியதுதான். காசும் மிச்சம். மாங்கா மூட்டைக்கி லக்கேஜ் போட்டாலும் போடுவானுங்க.’

மனதுக்குள் கணக்குப்போட்டு கனத்த மூட்டையைத் தலையிலேற்றி விடுவிடுவென்று நடக்கத்தொடங்கியவனை  தீப்பெட்டி கேட்டவன் வியப்புடன் பார்த்துக்கொண்டு நின்றான்.

எப்படி எல்லாத்தையும் மறந்துபோனேன்? அதான், கெளம்பும்போதே ஒப்பாரி வச்சாளே.... எதுக்கு இத்தன மாங்காயும் தேங்காயும்? ஒன் அண்ணன் ஊருல பஞ்சமான்னு படுத்தி எடுத்திட்டாளே... பாதகி!  எப்பவோ ஆறுமாசத்துக்கு ஒருக்கா போறானே... ஒண்ணும் வாங்கிட்டுப் போவத்தான் வக்கில்ல... வூட்டுல காச்சதக் கூடவா எடுத்திட்டுப் போற யோக்கியத எனக்கு இல்ல? போயிட்டு சும்மாவா வாரேன்?

குசேலன் அவலு கொடுத்திட்டு அரண்மன வாங்கினமாதிரியில்ல ஆயிரம் ரெண்டாயிரம்னு வாங்கியாறேன். அது எங்க தெரியிது? சொன்னா... அதுக்கும் ஆயிரம் கேள்வி! இன்னும் ரெண்டாயிரம் சேத்துக்குடுத்தா சொத்தா அழிஞ்சி போயிடும்னு. அவ கண்ணெல்லாம் அண்ணன் வாழுற வூட்டு மேலதான். புள்ளயில்லாத சொத்துதானேங்கறா... அண்ணனுக்கு புள்ள இல்லயேங்கிற வெசனம் கொஞ்சமாச்சும் இருக்கா அவளுக்கு?

படிக்கிற வயசில படிக்காம ஊரச் சுத்துனேன்... களவாணிப்பயலுவளோட சிநேகம் வச்சிகிட்டு வூட்டில இருக்கிற சாமானயெல்லாம் களவாடி வித்து தின்னேன். பத்தாததுக்கு கோயிலுக்கு தண்ணி சொமந்துவந்த இந்தக் கடன் காரியக் கணக்குபண்ணி ஒருநாளு இழுத்துகிட்டு ஓடிவந்துட்டேன். கூடவே அண்ணனோட சம்பளப்பணத்தையும், அம்மாவோட  அஞ்சு பவுனு சங்கிலியையும் தூக்கிட்டுவந்து ஆறுமாசம் சொகமா திரிஞ்சோம். புள்ள உண்டாயிடுச்சி. கிடைக்கிற வேலயெல்லாம் பாத்து குடும்பத்த நடத்த ஆரம்பிச்சேன்.

எவ்வளவு குடுத்தாலும் பத்தலம்பா. அப்புறம்தான் இவ லச்சணம் தெரிஞ்சிது. சரியான சோக்குக்காரி. பொம்பளயா லச்சணமா வரவுக்கேத்த மாதிரி செலவழிக்கிறாயில்ல... எப்ப பாரு.... அத வாங்கிக்குடு, இத வாங்கிக்குடுன்னு ஒரே நச்சுதான்…….

இருந்தா அண்ணி மாதிரி இருக்கணும். இன்னைக்கும் மவராசி சோகத்த வெளிய காட்டிக்காம சிரிச்ச மொகத்தோட வளையவருதே. இந்தச் சிடுமூஞ்சிக்காரி மாதிரியா?

புள்ளங்க எக்கேடு கெட்டாலும் கவல இல்ல. தான் சொகமா இருக்கணும். வேளக்கி ஒரு சேல கட்டி மினுக்கணும். கூர ஒழுவுதேன்னு ஓல வேய காசு குடுத்தா எந்தப் பொம்பளயாவது கொலுசு வாங்கிப் போட்டுப்பாளா? இவளப்போயி காதலிச்சி கல்யாணம் கட்டுன என்னச் சொல்லணும்.

ஆச்சி.... எப்படியோ பத்து பன்னெண்டுவருசம் ஓடிப்போச்சி. இன்னும் சொச்ச காலத்த ஓட்டி புள்ளங்கள தன் கையை ஊணி கரணம் போடுற நெலக்கி கொண்டுவந்துட்டா போதும்.... அப்புறம் எவன் இவகூட குடும்பம் நடத்தி குப்ப கொட்டுவான்? நல்லவேள...யார் செஞ்ச புண்ணியமோ.... ரெண்டும் பயல்களா போயிட்டானுங்க. பொட்டப்புள்ளயப் பெறாம போனாளே... அதுக்கே அவளக் கும்புடணும். இவளப் பாத்து அதுவும் சீரழிஞ்சி தெருவுல நிக்காமப் போனிச்சே..... ச்சே….!

தலைச்சுமையுடன் நினைவுச்சுமையும் சேர்ந்ததாலோ என்னவோ பாரம் தாங்காமல் பாதணி அறுந்துவிட்டிருந்தது. எப்போதோ நடந்திருக்க வேண்டியது... இத்தனை நாள் தாக்குப் பிடித்ததே பெரியது. முன் ஜென்மத்தில் மிகுந்த நன்றிக்கடன் பட்டவர் யாரோ…. உன் காலுக்கு செருப்பாவேன் என்று அவனுக்கு வாக்களித்திருக்கவேண்டும். இதற்குமேலும் என்னால் முடியவில்லை என்பதுபோல் உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்ந்துபோயிருந்த அது, இறுதியாய் நட்ட நடுசாலையில் உயிரை விட்டிருந்தது. அதை ஓரமாய் வீசியெறிந்துவிட்டு நடையைத் தொடர்ந்தான்.

ஒரு காலத்தில் அண்ணனின் கால்களை அலங்கரித்திருந்த செருப்பு அது. இப்போது அதை சாலையோரத்தில் அப்படியே விட்டுவிட்டு வர குற்ற உணர்வு பெருகியது. பரதனைப்போல் இவன் அதை தலையில் சுமக்கவில்லை. காலடியில் போட்டு மிதித்திருந்தான். எனினும் பரதனுக்கு எவ்விதத்திலும் குறையாத அளவுக்கு அன்பும் பாசமும் அண்ணனிடத்தில் வைத்திருந்தான்.

தார்ச்சாலையில் நடப்பது தீ மிதிப்பதுபோல் இருந்தது. சுற்றுமுற்றும் பார்த்தான். ஆளரவம் இல்லை. தூரத்தே ஒரு தூங்குமூஞ்சி மரம் இலைச்சாமரங்களை கிளைக்கைகளில் வைத்துக்கொண்டு காற்றிலே அசைத்து  வா வா என்று அழைக்க, கிடுகிடுவென்று தலையிலிருந்த மூட்டையைக் கையால் பற்றிக்கொண்டே இலக்கை நோக்கி ஓடும் ஓட்டப்பந்தய வீரன்போல் ஓடினான். அதற்குள் கால் ஓரளவு வெந்துபோயிருந்தது. இந்தமுறை அண்ணனிடமிருந்து புதுச்செருப்பு கிடைத்துவிடும் என்பது புரிந்தது.

ஒவ்வொருமுறையும்  அண்ணனிடம் யாசகம் வாங்காமல் வரவேண்டும் என்றுதான் நினைக்கிறான். ஆனால் அண்ணனும் அண்ணியும் எதையாவது அவன் கையிலோ சட்டைப்பையிலோ செருகாமல் அனுப்புவதில்லை. சென்றமுறைபோனபோதுஅண்ணன் சொன்னது நினைவுக்கு வந்தது. அண்ணன் தன்னிடம் யாசித்த ஒரே விஷயம் அதுதான்.

"சின்னவனேஒருநட உம்பெண்டாட்டியையும், பிள்ளைகளையும் அழச்சிட்டு வாயேன்டா."

"அவ எதுக்குண்ணே...வந்தா வாய வச்சிகிட்டு சும்மா இருக்கமாட்டா... வயித்தெரிச்சல்காரிண்ணே...."

"டேய், நீயே அவளப்பத்தி இப்படி பேசலாமா? அதுவும் ஒரு பொண்ணுதான? புருஷன் நெறைய சம்பாதிக்கணும், நாமளும் நாலுபேர மாதிரி வூடு வாசல்னு வசதியா இருக்கணும்னு ஆசப்படுறது தப்பில்லயே...."

"அதில்லண்ணே..."

"இங்க பாரு... அப்பா சாவும்போது இந்த வீட்ட என்பேருலதான் எழுதிவச்சாரு.. அப்ப அவருக்கு உன்மேல தீராத கோவம். நான் எவ்வளவோ சொல்லிப்பாத்தேன். மாத்தமாட்டேன்னுட்டாரு."

"அதனால என்னண்ணே.... எனக்கு அதில சந்தோஷம்தாண்ணே"

"அத அப்படியே விடமுடியாதுடா... அன்னைக்கு இந்த வீட்டு மதிப்ப கணக்கு பண்ணி சரிபாதிய பேங்குல  போட்டுவச்சிருக்கேன். நீ எப்ப சொன்னாலும் எடுத்துத் தரேன்!"

"அண்ணே.... அதெல்லாம் வேணாம்ணே... "

"ஏண்டா..... எங்களுக்கென்ன புள்ளயா குட்டியா? நீ உன் குடும்பத்தோட இங்கயே வந்திடு. உன் பிள்ளைங்களை நான் படிக்கவைக்கிறேன்."

"அண்ணே.... "

கண்ணீருடன் அண்ணன் கைகளைப் பற்றிக்கொண்டான். அவமானத்தால் உடல் நடுங்கியது. அப்பாவே இவனை மகனாக நினைக்காமல் தன் சொந்த சம்பாத்யத்தில் கட்டிய வீட்டை அண்ணனின் பேரில் எழுதிக்கொடுத்திருக்கிறார். அண்ணனுக்கு மட்டும் ஏன் தன்மேல் இத்தனை வாஞ்சை?

வாய் திறந்து கேட்டேவிட்டான்.

"நீ எனக்கு புள்ள மாதிரிடா...." அண்ணனால் அதற்குமேல் பேசமுடியவில்லை.

அன்றே முடிவு செய்துகொண்டான் எந்தக் காரணத்தைக் கொண்டும்   அந்தப் பணத்தை வாங்கிவிடக்கூடாது என்று. அப்பாவின் மனம் நோகும்படியான காரியத்தை அவர் இறந்தபின்னாலாவது செய்யாமலிருக்க உறுதி பூண்டான். இந்த விஷயம் எக்காரணம் கொண்டும் வசந்தாவுக்குத் தெரிந்துவிடக்கூடாது என்பதிலும் குறியாய் இருந்தான்.

நேற்று இரவு கனவில் அம்மாவும் அப்பாவும் வந்தார்கள். வந்து இவனைப் பார்த்து கேவிக் கேவி அழுதார்கள். இத்தனை வருடங்களில் இருவரையும் சேர்ந்தாற்போல் பார்த்தது இதுவே முதல்முறை என்பதால் மிகவும் உணர்ச்சிவயப்பட்டிருந்தான். காலையிலேயே அண்ணனுக்கு போன் செய்து விவரம் சொல்ல அண்ணனுக்கும் அளவிலாத மகிழ்ச்சி. அவர்களின் ஆசி உனக்கு எப்போதும் உண்டு என்று சொல்லி வாழ்த்தியது.

சட்டென்று இவனுக்கு ஒரு யோசனை. ஒருநடை அண்ணனைப் போய் பார்த்துவந்தால் என்ன? காய்த்துத் தொங்கிய மாங்காய்களையும், இரண்டு மொந்தன் வாழை சீப்பையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டான்.

மரத்தடி நிழலும் அவ்வப்போது வீசும் காற்றும் இதம் தந்தது. சற்றுநேரம் இங்கேயே உட்கார்ந்திருந்துவிட்டுப் போகலாம் என்று தோன்றியது. தன் காலை வாரிய செருப்பை கடிந்துகொண்டபோதும் இந்நேரத்துக்குப் போய் கதவைத் தட்டினால் அண்ணியின் மதியத் தூக்கம் கெட்டுவிடும் என்பதால் புறப்படுவதை கொஞ்சநேரம் ஒத்திப்போட்டான். தான் இப்படி வீட்டுக்கு வராமல் மரத்தடியில் கிடப்பது அண்ணனுக்கோ அண்ணிக்கோ தெரிந்தால் அண்ணன்  கேட்கும்,  "என்னடா, அத்தனை பெரிய மனுசனாயிட்டியா? தொல்லை கொடுக்கப்படாதுன்னு தெருவோரம் குந்தியிருந்தியாமே?" பதில் சொல்லமுடியாமல் இவன் நெளியப்போகிறான்.

நினைத்துச் சிரித்தபடியே பக்கத்தில் மூட்டையைப் பற்றியபடி லேசாக கண்ணயர்ந்தான். எவனாவது மாங்காய் மூட்டையைத் தூக்கிக்கொண்டுபோய்விட்டால் என்னாவது என்ற பயமும் எழ வெறுமனே வெற்றுச்சாலையை வேடிக்கை பார்த்து அமர்ந்திருந்தான். வெயில் தணிந்ததுபோல் தெரியவும் மறுபடி நடையைக் கட்டினான்.

இதோ வந்துவிட்டான்.

கதவு திறந்தே இருந்தது. உள்ளே யார் யாரோ.... என்னவோ விபரீதமென உணர்ந்தவன் நெஞ்சதிர மூட்டையை இறக்க....அண்ணி தலைவிரிகோலமாக ஓடிவந்தாள்.

"பாவி.... பாவி... அரைமணிநேரம் முன்னால வந்திருக்கக்கூடாதா? பாவி... உன்னப் பாக்கணும்னுதானடா தவிச்சாரு... கடேசியா நெஞ்சப் புடிச்சிட்டு சாயும்போது கூட உம்பேர சொல்லிட்டேதானடா சாஞ்சாரு... இப்படி ஆவும்னு ஒனக்கு காட்டுன கடவுள் ஒன்ன சித்த முன்னாடி அனுப்பி வச்சிருக்கக்கூடாதா......"

தலைமாட்டுத் தீபத்துடன் கூடத்தின் நடுவில் அண்ணன் கிடத்தப்பட்டிருந்தது. எதிர்பாராத அதிர்ச்சியால் ஒருநிமிடம் உறைந்துநின்றவன் அதிர்ச்சியிலிருந்து விடுபட்டு, அண்ணனின் கட்டியிருந்த கால்களைக் கட்டிக்கொண்டு வீடே எதிரொலிக்கும்வகையில் அடிவயிற்றிலிருந்து ஓலமெழுப்பிக் கதறினான். வைக்கோல் கன்றை நக்கி ஏமாந்த பசுவைப்போல் அண்ணனின் அங்கங்களைத் தழுவித் தழுவி துயருற்றான். எத்தனைநேரம் அப்படிக்கிடந்தானோ தெரியாது.

இனி அழுது லாபமில்லை என்பது புரிந்து நிமிர்ந்தெழுந்து அமர்ந்தபோது வராந்தா ஓரமாய்  அண்ணனின் புதுச்செருப்பு ஜதை கண்ணில் பட்டது.. போகும்போது அண்ணியிடம் சொல்லி அவற்றை எடுத்துப்போகவேண்டும். கட்டாயமாய் காலில் மாட்டிச்செல்லக்கூடாது என்று நினைத்துக்கொண்டான்.