31 October 2014

வானரக்கண்ணே... என் காதல் பெண்ணே!

நண்பர் இரவீ அவர்கள் சமீபத்தில் ஆனைமலை புலிகள் சரணாலயத்திற்கு சென்றிருந்தபோது, தான் கண்ட காட்சியைப் புகைப்படமாகப் பதிவு செய்து முகநூலில் பதித்திருந்தார். கருவுற்ற பெண் குரங்கை ஆண் குரங்கு பரிவுடன் பார்த்துக்கொள்ளும் காட்சி அது. அந்தப்படத்துக்கான என் வரிகளும் படமும் கீழே....  வம்சம் தழைக்க வாரிசு சுமக்கும்
வானரக்கண்ணே…
என் காதல்பெண்ணே…
இம்சைகளென்று எண்ணிவிடாதே…
இனியவளே என் பணிவிடைகளை!

ஓடும் கால்களை ஒய்யாரமாய் நீட்டிடு
நீவிக்கொடுத்து என் நேசம் காட்டுவேன்.
தள்ளிய வயிற்றையும் தடவிட அனுமதி
உள்ளிருக்கும் என் செல்லத்துக்கு
உன்மத்தமிகு நன்முத்தங்கள் பதிப்பேன்.

இலையான் கொசுக்கள் அண்டாது
இலையால் விசிறிப் பார்த்திருப்பேன்.
பசியென்று நீ உணருமுன்னே
புசியென்று நான் பலவும் தருவேன்.

இழையோடும் நம் காதல் பெயரால்
இன்னுஞ்செய்யக் காத்திருக்கிறேன்
மழையும் குளிரும் வாட்டுமுன்னே
மகன் பிறந்திடுவானோ சொல்லடி என் கண்ணே!

மெல்போர்ன் மாநகரின் மாகடிகாரம்


மணிக்கொரு முறை 
மாகடிகாரத்தினின்று இறங்கி
மதுர கீதம் இசைக்கிறார் 
 இசைச்சிறார்!26 October 2014

ஒரு வருத்தமும் ஒரு மகிழ்ச்சியும்!


பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். 


சில நாட்களாக நான் வலைப்பூ வருவதில் சிறு இடைவெளி விழுந்துவிட்டது. தொடர்ந்து இந்த வலைப்பூவுக்கு வந்து கருத்திட்ட நட்புகள் அனைவருக்கும் என் அன்பான நன்றி. பலருடைய பதிவுப்பக்கமும் வரவில்லை. வந்து வாசித்தாலும் கருத்திடவில்லை. அதற்காக என்னை மன்னிக்கவும். எதையும் எழுதவும் வாசிக்கவும் இயலாததொரு விரக்தியான சூழலில் சிக்கிக்கொண்டேன்.  

காரணங்கள் ஒன்றா இரண்டா? சில மாதங்களுக்கு முன் என் கணினியில் ஏற்பட்ட கோளாறால் நான் சேமிக்காமல் வைத்திருந்த என்னுடைய படைப்புகள் பலவும் அழிந்துபோய்விட்டன என்பது முதற்காரணமும் முக்கியக் காரணமும். வேறெந்த வெளிக்கலனிலும் சேமிக்காமல் கணினியிலேயே வைத்திருந்தது. முழுக்க முழுக்க என்னுடைய முட்டாள்தனமே என்பதால் என்னை நானே நொந்துகொள்கிறேன். யாராவது என்னைப்போல் படைப்புகளை பத்திரப்படுத்தாமல் இருந்தால் உடனடியாக ஏற்பாடுகளை செய்து பத்திரப்படுத்தவும்.

சமீபத்தில் தோழி தேன்மதுரத்தமிழ் கிரேஸின் கணினி பழுதாகிவிட, நல்லவேளையாக கூகுள் ட்ரைவில் அவர் சேமித்துவைத்திருந்ததால் பெரும்பான்மையைக் காப்பாற்ற முடிந்ததாக சொல்லியிருந்தார். இது பற்றிய ஞானோதயம் இல்லாத காரணத்தாலும் அப்படியெதுவும் நடந்துவிடாது என்னும் அலட்சியத்தாலும் பல அரிய சேமிப்புகளை இழந்துவிட்டிருக்கிறேன். Hard drive –இலிருந்து உள்ளடக்கங்களை மீட்க இங்கு ஆகும் செலவுக்கு புதிதாக இரண்டு மடிக்கணினி வாங்கிவிடலாம். அவ்வளவு செலவு செய்து மீட்கவேண்டுமா என்ற யோசனை முன்னடத்த, முயற்சியைக் கைவிட்டேன்.

அழிந்தவற்றுள் பல இதுவரை நான் வெளியிடாத ஆஸ்திரேலிய மொழிபெயர்ப்புக் கதைகளும், ஆஸ்திரேலிய உயிரினங்கள் பற்றிய என் தமிழாக்கப் பதிவுகளும் கவிதைத்துளிகளும் சில புகைப்படங்களுமாகும். என்னுடைய பல மாதகால உழைப்பும் வீணாகிவிட்டதை எண்ணும்போது மேற்கொண்டு எழுதுவதற்கு மனம் உடன்படவில்லை. எழுத்தில் பெரும்தொய்வு உண்டாகிவிட்டது. ஆனால் வை.கோபாலகிருஷ்ணன் சார் நடத்தும் விமர்சனப்போட்டிக்கு மட்டும் நேரம் ஒதுக்கி எப்படியோ எழுதி அனுப்பிவிடுமளவுக்கு உள்ளத்தில் திடம் இருந்துகொண்டு இருக்கிறது. அந்த திடமும் வாய்க்கப்பெற்றது கோபு சார் அவர்களுடைய ஊக்குவிப்பாலும் உந்துதலாலுமே என்றால் மிகையில்லை. கோபு சார் அவர்களுக்கு இவ்வேளையில் என் அன்பான நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறேன்.  


அழும் குழந்தையைத் தேற்றி, வேடிக்கை காட்டி, சமாதானப்படுத்தி இயல்பு நிலைக்குக் கொண்டுவர முயல்வது போல் என் மனக்குழந்தையை வேறுவழிகளில் திசைதிருப்பி சமாதானப்படுத்திக் கொண்டிருக்கிறேன். ஏதுவாய் ஒரு வாய்ப்பு தற்செயலாகவே அமைந்திருக்கிறது.

அட்சயப்பாத்திரம் வலைப்பூ பதிவர் தோழி மணிமேகலா அவர்கள் மாதாமாதம் சிட்னியில் நடத்தும் உயர்திணை என்னும் இலக்கியச்சந்திப்பில் கலந்துகொள்ள சென்றபோது புதிய தோழி திருமதி கார்த்திகா கணேசர் அவர்கள் மூலம் ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் இணைய வானொலியில் பங்காற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த இணைய வானொலி முழுக்க முழுக்க தமிழார்வலர்களாலும் தன்னார்வலர்களாலும் நடத்தப்படுவது. இதில் எனக்கும் ஒரு வாய்ப்பு அமைந்தமைக்கு என்னிரு தோழியர்க்கும், வாய்ப்பளித்த வானொலியின் நடத்துனர் திரு. இளலிங்கம் ஐயா அவர்களுக்கும் என் கனிவான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை ஆஸ்திரேலிய நேரம் இரவு 10.10 முதல் 11.10 வரையிலும் காற்றினிலே வரும் கீதம் என்ற பெயரில் நான் தொகுத்து வழங்கும் திரையிசைப் பாடல்கள் தொகுப்பொன்று கடந்த மூன்று வாரங்களாக ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. மறு ஒலிபரப்பு மறுநாள் புதன் கிழமை ஆஸ்திரேலிய நேரம் மாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை ஒலிபரப்பாகிறது. நிகழ்ச்சியின் நேரம் நாட்டுக்கு நாடு மாறுபடும் என்பதால் மற்ற சில நாடுகளில் ஒலிபரப்பாகும் நேரத்தை இங்கு பகிர்கிறேன்.

ஆஸ்திரேலியா
செவ்வாய்க்கிழமை - இரவு 10.10 முதல் 11.10 மணி வரை
மறு ஒலிபரப்பு மறுநாள் புதன் மாலை 4.00 மணி முதல் 5.00 மணிவரை

இந்தியா
செவ்வாய்க்கிழமை மாலை 4.40 முதல் 5.40 வரை
மறு ஒலிபரப்பு -  புதன் முற்பகல் 11.00 முதல் 12.00 வரை

லண்டன்
செவ்வாய் -  மதியம் 12.10 முதல் 1.10 வரை
மறு ஒலிபரப்பு - புதன் அதிகாலை 2.00 முதல் 3.00 வரை

கனடா
செவ்வாய் -  காலை 7.10 முதல் 8.10 வரை
மறு ஒலிபரப்பு -  நள்ளிரவு 1.00 முதல் 2.00 வரை

டென்மார்க்
செவ்வாய் -  பிற்பகல் 1.10 முதல் 2.10 வரை
மறு ஒலிபரப்பு  - புதன் காலை 7.00 முதல் 8.00 வரை


வானொலியைக் கேட்க www.atbc.net.au என்ற தளத்துக்குச் சென்று உரிய player –ஐத் தரவிறக்கிக்கொண்டால் தேவையான நேரத்தில் கேட்டு மகிழலாம். இது இணைய வானொலி என்பதால் கணினி, ஐபேட் மற்றும் மொபைல்களில் மட்டுமே கேட்க இயலும். வரும் வாரங்களில் நிகழ்ச்சியைக் கேட்க முடிந்தால் கேட்டு உங்கள் கருத்துக்களை இங்கு வலையில் பதிவு செய்யுங்கள். முகநூலிலும் பகிர்ந்துள்ளேன். அங்கும் உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம். உங்கள் அனைவரின் ஆதரவையும் வேண்டுகிறேன். 


நன்றி நட்புறவுகளே.

6 October 2014

கங்காரு பாத மலர்கள் (kangaroo paws)கட்டுக்குள் அடக்கப்பட்ட கங்காரு பாதமலர் செடி


பூங்கொத்துகளில் பயன்படுத்தப்படும் இந்தப் பூக்கள் பார்ப்பதற்கு ரோமத்துடன் கங்காருவின் விரிந்த பாதவிரல்களைப் போன்று இருப்பதால் கங்காரு பாதங்கள் (Kangaroo paws) என்றே குறிப்பிடப் படுகின்றன.

கங்காரு பாதமலர்கள் (kangaroo paws)

 ஆஸ்திரேலியத் தாவரமான இவற்றின் பூக்கள் அமெரிக்கா, இஸ்ரேல், ஜப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 

கங்காரு பாதமலர் மொட்டுகள்

தாவரவியல் பெயரான Anigozanthos என்பதற்கு 
ஒழுங்கற்றப் பூக்கள் என்று பெயராம்.

கங்காரு பாதமலர் மொட்டுகள்

இவ்வினத்தில் உள்ள ஏராள வகையில் எங்கள் வீட்டில் வளர்ந்தவை yellow mist மற்றும் bush lantern வகை பூக்கள். 

 கங்காரு பாதமலர் பூங்கிளை

  கொத்துக்கொத்தாய் மலர்ந்து நிற்கும் அவற்றில் தேன்குடிக்க எங்கிருந்தோ பறவைகள் தேடிவரும். இவற்றுள் பச்சையும் சிவப்பும் கலந்த வகைப்பூக்கள் மேற்காஸ்திரேலிய மாநிலத்தின் மாநிலப்பூக்களாகும். 

2 October 2014

பால்டி தாம்ஸன் - ஆஸ்திரேலியக் காடுறை கதை
கரடுமுரடான சதுரவடிவ முகம், சுருள் சுருளான செம்பழுப்பு மயிர் டோப்பா, அடர்புதரென நரைமயிர்ப் புருவங்கள், குறுகுறுக்கும் கண்கள்அனைத்தும் நடிகர் டாம்பியரை நினைவுபடுத்தின. வந்தேறியாய் வந்து, நாடோடியாய் அலைந்துதிரிந்து, கிடைக்கும் வேலையைச் செய்யும் எடுபிடியாளாகி, மந்தையோட்டி, ரோமக்கத்தரிப்பாளன், மேற்பார்வையாளன், தொழில்முனைவோன், புதுப்பணக்காரன், பெரும் நிலச்சுவான்தாரர் என்று கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ந்து இறுதியில் வங்கிமோசடியால் பாதிக்கப்பட்டவரானார். அவர் நுழைந்து வெளியேறிய அத்தனைத் தொழில்களைப் பற்றியும் நன்கு அறிந்திருந்தார். அவர்தான் பால்டி தாம்ஸன்.

அவர் முன்பொருமுறை பாராளுமன்றத்திற்கும் தேர்வாகியிருந்திருக்கிறார். அவருக்கு மறுபடியும் பாராளுமன்றம் போகும் ஆசை இருந்தது. தான் ஒரு முன்னாள் எம்.பி. என்று அவர் சத்தியம் செய்தாலும், மக்கள் நம்பமறுத்தனர். அவருடைய பொழுதுபோக்கு அரசியல் என்றாலும் அவருடைய அரசியலறிவு குறுகியதாக இருந்தது. அவர் எந்நேரமும் எதையாவது எவரையாவது தூற்றிக்கொண்டிருந்தார். அரசையும் வங்கிகளையும் தூற்றாத நேரங்களில் அவர் நாட்டைத் தூற்றிக்கொண்டிருந்தார். தொழிற்சங்கங்களை, அதன் தலைவர்களை விடவும் தன்னால் நன்றாக நடத்தமுடியும் என்று அவர் எண்ணுவதைப் போல் தொழிலாளர்களின் தலைவர்களை அவ்வப்போது தூற்றிக்கொண்டிருந்தார். மேலும் பாராளுமன்றத்தை, பிரதமரை விடவும் தன்னால் நேர்த்தியாக நடத்தமுடியும் என்றும் அவர் நினைப்பதைப் போன்று இருந்தது.

அவர் ஆளுங்கட்சி பற்றி எப்போதும் அதிருப்தி தெரிவித்துக்கொண்டிருந்தார். ஒரு ரோமக்கத்தரிப்பாளனோ எடுபிடியாளனோ நல்ல வாதத்திறமையும் அரசியலில் மிதமான ஈடுபாடும் கொண்டிருந்தவனாயிருந்தால், அவனுக்கு தாம்ஸனின் ரோமக்கத்தரிப்புக் கொட்டகையில் ஒரு அடிமையைப் போல் நாளெல்லாம் வேலை செய்யவேண்டிய அவசியமிருக்காது. ஏனெனில் தாம்ஸன் நாள் முழுவதும் அவனை வேலைசெய்யவிடாமல் அவனுடன் வாதிட்டுக் கொண்டிருப்பதோடு, முடிவில் அவனுக்கு அன்றையக் கூலியையும் கொடுத்தனுப்புவார்.

அவரிடம் யாராவது வேலை கேட்டு வந்தால் அவர்களிடம் சொல்வார், “இனிமேல் யாரையும் என்னால் வேலைக்கு எடுக்கமுடியாது. வங்கியிலே பணமில்லாதபோது நான் வேலைக்கு எடுக்கும் ஆட்களுக்கு என்னாலும் பணம் தர இயலாது. என் குடும்பத்துக்கு உணவிட மட்டும்தான் எனக்கு வசதியிருக்கிறது. சென்றவருடம் என்னால் சில சுக்கான் பாறைகளையும் புல்விதைகளையும் மட்டுமே விற்பனைக்கு அனுப்பிவைக்க முடிந்தது. அதுவும் வண்டிக்கூலிக்கே போதவில்லை. இப்போது செம்மறியாட்டு மந்தையொன்றை அனுப்பவிருக்கிறேன். அதிலொன்றும் பெரிதாய்க் கிடைத்துவிடப் போவதில்லை, தலைக்கு மூன்று பென்சுகள் கிடைக்கலாம். வங்கி திவாலாகுமுன் என்னிடம் இருபதாயிரம் இருந்தது, ஆனால் இப்போது ஒன்றுகூட இல்லை. நானும் என் பெட்டி படுக்கையை சுருட்டிக்கொண்டு வேலைதேடிப் போகவேண்டிய நிலைமையில்தான் இருக்கிறேன்.” என்பார்.

சரி, பால்டி, ங்களுடைய அழகான படுக்கையை சுருட்டி எடுத்துக்கொண்டு எங்களுடன் வாருங்கள், நாங்கள் உங்கள் கூடவே இருந்து உங்களைக் கடைசிவரை பார்த்துக்கொள்கிறோம்.” என்பார்கள் அவர்கள்.

நீங்கள் நம்பவில்லையென்று தெரிகிறது. நிலைமை என்னவென்று உங்களுக்கு நாளை சுற்றிக்காட்டுகிறேன். நீங்கள் கடைக்குச் சென்று என் கணக்கில் உங்களுக்குத் தேவையான உணவைப் பெற்றுக்கொள்ளுங்கள். இன்றிரவு இந்தக் குடிசையில் தங்கிக்கொள்ளுங்கள். நாளைக் காலை உங்களை சந்திக்கிறேன்.” என்பார்.

ஆனால் பெரும்பாலும் தேநீருக்குப் பிறகு அவர் அந்தக் குடிசைக்கு வெளியே குத்துக்காலிட்டு அமர்ந்து அந்த வழிப்போக்கருடன் தொழிற்சங்கங்கள் பற்றியும் அரசியல் பற்றியும் விவாதிக்க ஆரம்பித்துவிடுவார். அவருடைய கருத்துடன் ஒத்துப்போய், ஆமோதிக்கும்வரை விடியவிடிய வாதிட்டுக் கொண்டிருப்பார்.

பால்டி தாம்ஸனின் ரோமக்கத்தரிப்பு நிலையத்துக்கு அழைத்துச் செல்லும் பாதையானது, பலருக்கும் ஒரு நல்ல உணவிடம் அழைத்துச் செல்லும் பாதையாகிப்போனது, முக்கியமாக, பாராளுமன்றம் கலைக்கப்படக்கூடிய அச்சுறுத்தல் இருக்கும் நாட்களில்! இலக்கின்றி வேலைதேடிச் செல்லும் வழிப்போக்கன், பால்டி தாம்ஸனிடம் பேச்சோடு பேச்சாக தன் பெயர் வாக்காளர் பட்டியலில் இருப்பதாகச் சொல்லி, பால்டியின் அரசியல் கருத்துகளில் தனக்கு ஆர்வமிருப்பதாக காட்டிக்கொள்வான். முதலில் அவருடைய கருத்துக்களை எதிர்ப்பான், நிறைய குறைநிறைகளை அலசுவான், இறுதியாக பால்டியின் கோணத்தில் யோசித்துப்பார்த்து, அவற்றை ஏற்றுக்கொள்வதாய் சொல்வான். முடிவில் கையில் உணவுப்பொட்டலத்தோடும் வாய் நிறைய சிரிப்போடும் தோழனிடம் மகிழ்வோடு விடைபெற்றுச் செல்வான்.

குளிர்காயும் நேரங்களில் பேசப்படும் கதைகளில் முதிய பால்டி தாம்ஸனைப் பற்றிய கதைகள் நிறைய பேசப்பட்டன. ஒரு புத்தாண்டு தினத்தின் நள்ளிரவில் ரோமக்கத்திரிப்பாளர்கள், பால்டி தாம்ஸனை எழுப்பி ரோமக்கத்தரிப்புக் கொட்டகை தீப்பற்றி எரிவதாக பொய் சொன்னார்களாம். சட்டையை அணிந்துகொண்டு வெளியே ஓடிவந்த பால்டி தாம்ஸன், டோப்பா அணிய மறந்துபோயிருந்தாராம். தொழிலாளிகள் செய்த குறும்புவேலைக்காக அவர்களனைவரையும் அங்கேயே அப்போதே வேலைநீக்கம் செய்தாராம். ஆனால் மறுநாள் அவர்கள் அதை அலட்சியப்படுத்தி அவருடைய ரோமக்கத்தரிப்புக் கொட்டகைக்கு வழக்கம்போல வேலை செய்யச்சென்றனராம்.

காடுறை வாழ்க்கையின் நகைச்சுவைகள் யாவுமே இதுபோன்று வருத்தமும் பச்சாதாபமும் வரவழைக்கும் நையாண்டி வேடிக்கைகள்தாம். தற்செயலாகவோ, வலிந்தோஎல்லா காடுறை நகைச்சுவைகளிலும் ஒரு மெல்லிய சோகம் இழையோடுவதைக் காணலாம்.

பால்டி தாம்ஸன் பற்றிய மற்றொரு கதை. ரோமக்கத்தரிப்புத் தொழிலில் பயிற்சிபெற்ற புதியவன் ஒருவன், பால்டி தாம்ஸனை ரோமக்கத்தரிப்பு நிலையத்தின் தொழிலாளி என்று நினைத்து அவரிடம் பால்டி தாம்ஸனைப் பார்க்கவிரும்புவதாக சொல்லியிருக்கிறான். இவர் கேட்டிருக்கிறார்,

நீ ஏன் அவரைப் பார்க்கவேண்டும்? வேலை தேடிக்கொண்டு வந்திருக்கிறாயா?”

ஆமாம். எனக்கு ஏதாவது வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறதா? பால்டி தாம்சன் எப்படிப்பட்ட முதலாளி?”

நீ இங்கிருந்து அடிலெய்டுக்கு நடையைக் கட்டு. அங்கிருந்து வடக்கில் ஏதேனும் ஒரு வளைகுடா நாட்டுக்குப் போனாலும் அவ்வளவு கஷ்டமிருக்காது. பால்டி தாம்ஸன்தான் ஆஸ்திரேலியாவிலேயே மிகவும் மோசமான ஒரு முதலாளி. பாழாய்ப்போன கிழ ஜந்து! ஒரு அடிமையைப் போல ஐம்பது வருடங்களுக்கும் மேலாக அவன் கூடவே இருந்திருக்கிறேன். (பால்டியின் வயது அறுபதுக்கு மேல்) ஆனாலும் அந்த கிழட்டு கஞ்சன் எனக்குத் தரவேண்டிய இரண்டு காசோலைகளைத் தராமல் இழுத்தடிக்கிறான். கேட்டால் அவனுடைய பணத்தையெல்லாம் வங்கி எடுத்துக்கொண்டுவிட்டது என்கிறான். இதையே தான் பலவருடங்களாக சொல்லி அழுதுகொண்டிருக்கிறான், நாசமாய்ப்போன நயவஞ்சகன். அவனுடைய மனைவி, குடும்பம், உறவு அனைத்தையும் வசதியாக வைத்துக்கொள்ள நான் இதுவரை தேவைப்பட்டேன். கடவுள் கிருபையால் நான் கடந்த முப்பது நாப்பது வருடங்களை ஓட்டிவிட்டேன். ஒருபோதும் நாடோடியாய்த் திரிந்து கஷ்டப்பட்டு வேலைசெய்திருக்காத அந்த அற்பத்தனமான கிழட்டுத் திமிங்கலத்திடமிருந்து வெளியேறி, நாளை நானும் நடையைக் கட்டப் போகிறேன். நான் இவ்வளவு சொன்னபிறகுமா நீ அந்த நீசன் தாம்ஸனிடம் வேலைகேட்கப் போகிறாய்? அதற்காக நீ மிகவும் வருத்தப்படுவாய். அவனிடம் வேலைசெய்வதற்கு பதில் நீ நரகத்துக்குப் போகலாம்.”

நல்லது.. நான் இங்கிருந்து போய்விட எண்ணுகிறேன். எனக்கு இங்கு  ஏதாவது உண்ணக் கிடைக்குமா?”

அவனா? அவன் நாய்க்கு ஒரு காய்ந்த ரொட்டித்துண்டு கூட போடமாட்டான். நீ இங்கு இருப்பதைப் பார்த்தாலே அவனுடைய இடத்தில் நீ அத்துமீறி நுழைந்துவிட்டதாக சொல்வான். நீ என்னோடு கடைக்கு வா, நான் உனக்கு நீ தொடர்ந்து செல்வதற்குப் போதுமான அளவு உணவை வாங்கித் தருகிறேன்.” இப்படித் தொடரும் கதைகள் ஏராளம்.

அவர் கலை இலக்கியத்திலும் ஆர்வமுள்ளதுபோன்று காட்டிக்கொள்வார், ஆனால் எல்லாமே அரைகுறை! ஒருமுறை நாங்கள் வேலையின்றியிருந்தபோது எங்கள் உணவுத் தட்டுப்பாட்டைப் போக்க, பால்டி தாம்ஸனின் ரோமக்கத்தரிப்பு நிலையத்தில் அவரை சந்தித்து, அவருடைய சொந்தக் கருத்துக்களையே எங்கள் கருத்துக்களென சொல்லி அவரை மகிழ்வித்த நிகழ்வை நினைத்துக் கொள்கிறேன். அவருடைய நிலையத்தில் பணிபுரிந்த எங்கள் தோழன் ஒருவனால் அவை முன்பே எங்களுக்கு எடுத்துரைக்கப்பட்டவை. அவர் எங்களுக்கான உணவை வாங்கித் தந்ததோடு அன்றிரவு குடிசையில் தங்க அனுமதித்து மறுநாள் காலை எங்களை வந்து பார்ப்பதாக சொல்லிச் சென்றார்.

மறுநாள் காலை அவரைப் பார்த்தபோது மறுபடியும் பேச்சு தொடர்ந்ததுஅவருடைய கருத்துக்களோடு ஒத்துணர்வு கொண்டு உடனடியாக ஏற்றுக்கொண்டோம். ஒன்றிரண்டு கேள்விகளுக்கான பதில்களிலேயே சமாதானமாகிப்போனோம். அவருடன் சேர்ந்து ஒத்த குரலில் எல்லாவற்றையும் தூற்றினோம். பேச்சோடு பேச்சாக, ஒரு அரசியல் பத்திரிகையில் கூடிய சீக்கிரமே எங்களுக்கு ஏதாவது வேலை கிடைக்குமென்று எதிர்பார்ப்பதாக சொன்னோம்

இறுதியாக அவர் உள்ளே சென்று ஒரு பவுண்டு நாணயத்தைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு சொன்னார், “இதை ஒரு தாளில் மடித்துப் பத்திரமாய் சட்டைப்பையில் வைத்துக்கொள்ளுங்கள். தொலைத்துவிடாதீர்கள்.”

பால்டியின் நன்மதிப்பைப் பெற்று, அவரிடம் வேலையும் பெற்று அவர் கூடவே இருக்க ஒரே வழி, அவரது கருத்துகளுக்கெல்லாம் மாற்றுக்கருத்து சொல்லி எதிர்ப்பைத் தெரிவிப்பதொன்றுதான் என்பதை பின்னாட்களில்தான் புரிந்துகொண்டோம்.


**********
(படம்: நன்றி இணையம்)