26 October 2014

ஒரு வருத்தமும் ஒரு மகிழ்ச்சியும்!


பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். 


சில நாட்களாக நான் வலைப்பூ வருவதில் சிறு இடைவெளி விழுந்துவிட்டது. தொடர்ந்து இந்த வலைப்பூவுக்கு வந்து கருத்திட்ட நட்புகள் அனைவருக்கும் என் அன்பான நன்றி. பலருடைய பதிவுப்பக்கமும் வரவில்லை. வந்து வாசித்தாலும் கருத்திடவில்லை. அதற்காக என்னை மன்னிக்கவும். எதையும் எழுதவும் வாசிக்கவும் இயலாததொரு விரக்தியான சூழலில் சிக்கிக்கொண்டேன்.  

காரணங்கள் ஒன்றா இரண்டா? சில மாதங்களுக்கு முன் என் கணினியில் ஏற்பட்ட கோளாறால் நான் சேமிக்காமல் வைத்திருந்த என்னுடைய படைப்புகள் பலவும் அழிந்துபோய்விட்டன என்பது முதற்காரணமும் முக்கியக் காரணமும். வேறெந்த வெளிக்கலனிலும் சேமிக்காமல் கணினியிலேயே வைத்திருந்தது. முழுக்க முழுக்க என்னுடைய முட்டாள்தனமே என்பதால் என்னை நானே நொந்துகொள்கிறேன். யாராவது என்னைப்போல் படைப்புகளை பத்திரப்படுத்தாமல் இருந்தால் உடனடியாக ஏற்பாடுகளை செய்து பத்திரப்படுத்தவும்.

சமீபத்தில் தோழி தேன்மதுரத்தமிழ் கிரேஸின் கணினி பழுதாகிவிட, நல்லவேளையாக கூகுள் ட்ரைவில் அவர் சேமித்துவைத்திருந்ததால் பெரும்பான்மையைக் காப்பாற்ற முடிந்ததாக சொல்லியிருந்தார். இது பற்றிய ஞானோதயம் இல்லாத காரணத்தாலும் அப்படியெதுவும் நடந்துவிடாது என்னும் அலட்சியத்தாலும் பல அரிய சேமிப்புகளை இழந்துவிட்டிருக்கிறேன். Hard drive –இலிருந்து உள்ளடக்கங்களை மீட்க இங்கு ஆகும் செலவுக்கு புதிதாக இரண்டு மடிக்கணினி வாங்கிவிடலாம். அவ்வளவு செலவு செய்து மீட்கவேண்டுமா என்ற யோசனை முன்னடத்த, முயற்சியைக் கைவிட்டேன்.

அழிந்தவற்றுள் பல இதுவரை நான் வெளியிடாத ஆஸ்திரேலிய மொழிபெயர்ப்புக் கதைகளும், ஆஸ்திரேலிய உயிரினங்கள் பற்றிய என் தமிழாக்கப் பதிவுகளும் கவிதைத்துளிகளும் சில புகைப்படங்களுமாகும். என்னுடைய பல மாதகால உழைப்பும் வீணாகிவிட்டதை எண்ணும்போது மேற்கொண்டு எழுதுவதற்கு மனம் உடன்படவில்லை. எழுத்தில் பெரும்தொய்வு உண்டாகிவிட்டது. ஆனால் வை.கோபாலகிருஷ்ணன் சார் நடத்தும் விமர்சனப்போட்டிக்கு மட்டும் நேரம் ஒதுக்கி எப்படியோ எழுதி அனுப்பிவிடுமளவுக்கு உள்ளத்தில் திடம் இருந்துகொண்டு இருக்கிறது. அந்த திடமும் வாய்க்கப்பெற்றது கோபு சார் அவர்களுடைய ஊக்குவிப்பாலும் உந்துதலாலுமே என்றால் மிகையில்லை. கோபு சார் அவர்களுக்கு இவ்வேளையில் என் அன்பான நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறேன்.  


அழும் குழந்தையைத் தேற்றி, வேடிக்கை காட்டி, சமாதானப்படுத்தி இயல்பு நிலைக்குக் கொண்டுவர முயல்வது போல் என் மனக்குழந்தையை வேறுவழிகளில் திசைதிருப்பி சமாதானப்படுத்திக் கொண்டிருக்கிறேன். ஏதுவாய் ஒரு வாய்ப்பு தற்செயலாகவே அமைந்திருக்கிறது.

அட்சயப்பாத்திரம் வலைப்பூ பதிவர் தோழி மணிமேகலா அவர்கள் மாதாமாதம் சிட்னியில் நடத்தும் உயர்திணை என்னும் இலக்கியச்சந்திப்பில் கலந்துகொள்ள சென்றபோது புதிய தோழி திருமதி கார்த்திகா கணேசர் அவர்கள் மூலம் ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் இணைய வானொலியில் பங்காற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த இணைய வானொலி முழுக்க முழுக்க தமிழார்வலர்களாலும் தன்னார்வலர்களாலும் நடத்தப்படுவது. இதில் எனக்கும் ஒரு வாய்ப்பு அமைந்தமைக்கு என்னிரு தோழியர்க்கும், வாய்ப்பளித்த வானொலியின் நடத்துனர் திரு. இளலிங்கம் ஐயா அவர்களுக்கும் என் கனிவான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை ஆஸ்திரேலிய நேரம் இரவு 10.10 முதல் 11.10 வரையிலும் காற்றினிலே வரும் கீதம் என்ற பெயரில் நான் தொகுத்து வழங்கும் திரையிசைப் பாடல்கள் தொகுப்பொன்று கடந்த மூன்று வாரங்களாக ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. மறு ஒலிபரப்பு மறுநாள் புதன் கிழமை ஆஸ்திரேலிய நேரம் மாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை ஒலிபரப்பாகிறது. நிகழ்ச்சியின் நேரம் நாட்டுக்கு நாடு மாறுபடும் என்பதால் மற்ற சில நாடுகளில் ஒலிபரப்பாகும் நேரத்தை இங்கு பகிர்கிறேன்.

ஆஸ்திரேலியா
செவ்வாய்க்கிழமை - இரவு 10.10 முதல் 11.10 மணி வரை
மறு ஒலிபரப்பு மறுநாள் புதன் மாலை 4.00 மணி முதல் 5.00 மணிவரை

இந்தியா
செவ்வாய்க்கிழமை மாலை 4.40 முதல் 5.40 வரை
மறு ஒலிபரப்பு -  புதன் முற்பகல் 11.00 முதல் 12.00 வரை

லண்டன்
செவ்வாய் -  மதியம் 12.10 முதல் 1.10 வரை
மறு ஒலிபரப்பு - புதன் அதிகாலை 2.00 முதல் 3.00 வரை

கனடா
செவ்வாய் -  காலை 7.10 முதல் 8.10 வரை
மறு ஒலிபரப்பு -  நள்ளிரவு 1.00 முதல் 2.00 வரை

டென்மார்க்
செவ்வாய் -  பிற்பகல் 1.10 முதல் 2.10 வரை
மறு ஒலிபரப்பு  - புதன் காலை 7.00 முதல் 8.00 வரை


வானொலியைக் கேட்க www.atbc.net.au என்ற தளத்துக்குச் சென்று உரிய player –ஐத் தரவிறக்கிக்கொண்டால் தேவையான நேரத்தில் கேட்டு மகிழலாம். இது இணைய வானொலி என்பதால் கணினி, ஐபேட் மற்றும் மொபைல்களில் மட்டுமே கேட்க இயலும். வரும் வாரங்களில் நிகழ்ச்சியைக் கேட்க முடிந்தால் கேட்டு உங்கள் கருத்துக்களை இங்கு வலையில் பதிவு செய்யுங்கள். முகநூலிலும் பகிர்ந்துள்ளேன். அங்கும் உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாம். உங்கள் அனைவரின் ஆதரவையும் வேண்டுகிறேன். 


நன்றி நட்புறவுகளே.

60 comments:

 1. கஷ்டப்பட்டு நாம் சேமித்தது அழியும்போது வருத்தம் இருக்கத்தான் செய்யும். இதுவும் நன்மைக்கே.. வேறு நல்ல பல பதிவுகள் கிடைக்கலாம். தொடர்ந்து எழுதுங்கள். இணைய வானொலியில் தாங்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை கேட்கிறேன். வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் ஆறுதலான பதிலுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி விச்சு.

   Delete
 2. வணக்கம்
  தகவலை முகநூலில் பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி சகோதரி இங்கும் தகவல் தந்தமைக்கு நன்றிகள் பல. நிச்சயம் கேட்கின்றேன்...

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 3. பல மாதகால உழைப்பும் வீணாகிவிட்டதை எண்ணும்போது வருத்தமாய் தான் இருக்கிறது கீதமஞ்சரி.
  மனம் தளராமல் மீண்டும் எழுதுங்கள். முடியும் உங்களால்.இணைய வானொலியில் கேட்கிறேன் நீங்கள் தொகுத்து வழங்குவதை.
  வாழ்த்துக்கள்.
  உற்சாகமாய் எழுதுங்கள், மனசுரங்கத்திலிருந்து மீண்டும் உயிர்பெற்றுவரும் மறைந்தவை.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் ஆறுதலான வார்த்தைகளுக்கு என் அன்பான நன்றிகள் மேடம்.

   Delete
 4. மனமார்ந்த வாழ்த்துகள் கீதா. மனம் சோர்ந்திருந்த வேளையில் உற்சாகமளிக்கும் விதமாக வந்து சேர்ந்த வாய்ப்பு. அவசியம் கேட்கிறேன்.
  மற்றவர்களுக்கும் இதே போன்ற பிரச்சனை வந்து விடக் கூடாதென எச்சரித்திருப்பது பாராட்டுக்குரியது. நான் அவ்வப்போது எனது ஒளிப்படங்களை ஒரு external hard disc_ல் எடுத்து வைத்து விடுவேன். இணையத்தில் சேமிப்பதும் நல்ல ஆலோசனை. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. இப்போதுதான் எனக்கும் external hard disk -இன் அவசியம் புரிகிறது. கையிலிருந்தும் பயன்படுத்தாமல் விட்டுவிட்ட மடமையை நொந்துகொள்கிறேன். எல்லோருமே புரிந்து கவனமாக இருப்பது நல்லது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 5. .எச்சரிக்கைகளுக்கு நன்றிகள்.

  இணைய வானொலியில் தாங்கள் தொகுத்து வழங்கும்
  நிகழ்ச்சிகளுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் அன்பான நன்றி மேடம்.

   Delete
 6. தங்கள் இந்த எச்சரிக்கை மிகவும் பயனுள்ளது. என் பிள்ளைகள் இவ்விடம் வரும்போது, இதை சேமிப்பது எப்படி என்று கேட்டுக்கொண்டு செய்ய வேண்டும் என நானும் நினைக்கிறேன். அதற்குள் அவை அழியாமல் இருக்க வேண்டுமே என்ற பயமும் எனக்குள் ஏற்படுகிறது. பார்ப்போம். நல்லதையே நினைப்போம். நல்லதாகவே நடக்கட்டும்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. ஆம் நல்லதையே நினைப்போம், நல்லதாகவே நடக்கும். இருப்பினும் பிள்ளைகள் வரும்வரை காத்திருக்காமல் யாராவது கணினியறிந்தவர்கள் அருகில் இருந்தால் உதவக் கேளுங்களேன்.

   Delete
 7. தங்களின் அரிய பெரிய படைப்புகளும், வெளியிடப்பட வேண்டிய பல மிகச்சிறந்த சேமிப்புக்களும் காணாமல் போய் உள்ளது கேட்க எனக்கு மனதுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது.

  அவைகளைத் தயாரிக்க எவ்வளவு கடும் உழைப்புகள் உழைத்திருப்பீர்கள் !

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், உழைப்பு என்பதை விடவும் முதன்முறை எழுதும்போது இருந்த உற்சாகமும் உடன்பாடான மனநிலையும் மறுபடியும் அமையுமா என்பது சந்தேகமே. இருப்பினும் மறுபடியும் கட்டாயம் எழுத முயல்வேன் சார்.

   Delete
 8. தங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த மனவருத்தமான சூழலை சற்றே மாற்ற இந்தப் புதியதொரு வாய்ப்பு தங்களைத் தேடிவந்துள்ள கேட்க சற்றே ஆறுதலாக உள்ளது.

  புதிதாகக் கிடைத்துள்ள பொறுப்புக்களில் தங்களின் வழக்கமான சாதனைகளை முத்திரையாகப் பதிப்பீர்கள் என்ற முழு நம்பிக்கை எனக்கும் உள்ளது.

  தங்களின் புதிய வாய்ப்புக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் + வாழ்த்துகள் + ஆசிகள்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. தங்கள் நம்பிக்கைமிகு வார்த்தைகளுக்கும் பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் அன்பான நன்றி கோபு சார்.

   Delete
 9. //பல மாதகால உழைப்பும் வீணாகிவிட்டதை எண்ணும்போது மேற்கொண்டு எழுதுவதற்கு மனம் உடன்படவில்லை. எழுத்தில் பெரும்தொய்வு உண்டாகிவிட்டது. ஆனால் வை.கோபாலகிருஷ்ணன் சார் நடத்தும் விமர்சனப்போட்டிக்கு மட்டும் நேரம் ஒதுக்கி எப்படியோ எழுதி அனுப்பிவிடுமளவுக்கு உள்ளத்தில் திடம் இருந்துகொண்டு இருக்கிறது.//

  மிக்க மகிழ்ச்சி. நல்லவேளையாக என் தளத்தினில் என்னால் நடத்தப்படும் சிறுகதை விமர்சனப்போட்டிகளும், நிறைவுக்கு வந்துவிடும் நாள் நெருங்கி விட்டது. அதில் தாங்கள் காட்டியுள்ள ஆர்வமும், உழைப்பும் அபாரமாக உள்ளன என்பதில் எனக்கோர் தனி மகிழ்ச்சி உண்டு.

  //அந்த திடமும் வாய்க்கப்பெற்றது கோபு சார் அவர்களுடைய ஊக்குவிப்பாலும் உந்துதலாலுமே என்றால் மிகையில்லை. கோபு சார் அவர்களுக்கு இவ்வேளையில் என் அன்பான நன்றியைத் தெரிவித்து மகிழ்கிறேன். //

  விமர்சன வித்தகியாகவே மாறி, மிகப்பெரிய சாதனையே புரிந்துள்ளீர்கள் என்பதில் எனக்கு மேலும் மகிழ்ச்சியே.

  இதுவரை வெளியிடப்பட்டுள்ள 38 பரிசு முடிவுகளில் தாங்களே முதலிடம் வகித்து வருகிறீர்கள் என்பதைப் பெருமையுடன் கூறிக்கொள்கிறேன்.

  மேலும் 2 கதைகளுக்கான விமர்சனப் பரிசு முடிவுகள் தெரிந்ததும், அதிலும் ஒருவேளை தாங்களே வெற்றி வாய்ப்புகளை மேலும் பெற்று, இறுதியில் உறுதியாக NUMBER ONE சாதனையாளர் என்ற புகழிடத்தையும் அடையக்கூடும் என்ற நம்பிக்கையும் எனக்கு உள்ளது. பார்ப்போம். நாம் நல்லதையே நினைப்போம். நல்லதே நடக்கக்கூடும்.

  இவ்வளவு சிரமங்கள் + மன வேதனைகளுக்கு இடையேயும் என் போட்டிகளில் விடாமல் தொடர்ந்து கலந்துகொண்டுள்ள தங்களுக்குத்தான் நான் நன்றி கூறிக்கொள்ள வேண்டும்.

  VGK-38 சிறுகதை விமர்சனப்போட்டி முடிவுகள் சற்று நேரம் முன்பு என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ளது. அதிலும் தாங்களே முதல் பரிசினை வென்று மற்றொரு பதிவருடன் பகிர்ந்துகொண்டுள்ளீர்கள் என்ற மகிழ்ச்சியான தகவலை தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  அதற்கான இணைப்பு இதோ:
  http://gopu1949.blogspot.in/2014/10/vgk-38-01-03-first-prize-winners.html

  பிரியமுள்ள கோபு [VGK]

  ReplyDelete
  Replies
  1. நான் குறிப்பிட்டது போல தங்களுடைய ஊக்கமும் உந்துதலும்தான் என்னைத் தொடர்ந்து போட்டிக்களத்தில் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. பரிசுகளைப் பெறுமளவு எழுதவும் தூண்டுகிறது. தங்களுடைய அன்புக்கு மனமார்ந்த நன்றி கோபு சார்.

   Delete
 10. அடடா! பல மாத உழைப்பு வீணாகிவிட்டதை எண்ணும் போது மிகவும் வருத்தமாய் உள்ளது. ஆனால் இதுவும் நமக்கு ஒரு பாடம். இனிமேல் எழுதிய பிறகு உடனுக்குடன் அதைப் பத்திரமாகச் சேமிக்க வேண்டும் என்ற படிப்பினையை இதன் மூலம் நாம் கற்றுக்கொள்கிறோம் அல்லவா? அதற்கான விலை இது என்று தான் நாம் மனதைத் தேற்றிக்கொள்ள வேண்டும். அறிவியல் அறிஞர்கள் பலரது வாழ்க்கை சரிதத்தைப் படிக்கையில் அவர்கள் பல்லாண்டு காலம் உழைத்து அரிதின் சேமித்து வைத்த தகவல்கள், ஆராய்ச்சி முடிவுகள், தீ, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் அழிந்து போயிருக்கின்றன. அத்துடன் அவர்கள் சோர்ந்திருப்பார்களேயானால், அவர்கள் பெயர் வரலாற்றில் இடம் பெற்றிருக்காது. எனவே மனதைத் தேற்றிக் கொண்டு இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற உற்சாகத்துடன் மீண்டும் எழுதத் துவங்கு. ஏற்கெனவே எழுதியதை விட இன்னும் சிறந்த ஆக்கங்களை உன்னால் உருவாக்க முடியும். ஆஸ்திரேலிய வானொலியில் உன் திரைப்படப்பாடல் தொகுப்பு ஒலிபரப்பாவது அறிந்து மகிழ்ச்சி. சமயம் வரும் போது கேட்டுக் கருத்துக்களை எழுதுவேன்.

  ReplyDelete
  Replies
  1. உற்சாகமும் மனத்துக்கு இதமும் தரும் தங்களுடைய ஆறுதலான வார்த்தைகளுக்கு மிகவும் நன்றி அக்கா. நிச்சயமாக மறுபடியும் அவற்றை எழுத முயல்வேன். வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்க நேரம் உங்களுக்குத் தோதாக அமையாது என்று நினைக்கிறேன். முடியும்போது கேட்டுச் சொல்லுங்கள்.

   Delete
 11. உடனடியாக எனது கிறுக்கல்களையும் சேமித்து வைக்க வேண்டும்...அறிவுரைகளுக்கு மிக்க நன்றிகள்...மனக்கவலையை விடுங்கள் தொடர்ந்து படைப்புக்களை எழுதுங்கள் .

  ReplyDelete
  Replies
  1. உடனே சேமித்துவையுங்கள் புத்தன். உற்சாகம் தரும் உங்கள் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி.

   Delete
 12. வானொலியில் இணைந்தமைக்கு வாழ்த்துக்கள்! கணிணியின் குறைகளுல் ஒன்று இப்படி நம் சேமிப்புக்கள் வீணாவது. சி ட்ரைவில் சேமிக்காமல் மற்ற டிரைவ்களில் சேமித்தால் நிறைய பாதிப்பு வராது. திரும்பவும் மீட்டுவிடலாம்!

  ReplyDelete
  Replies
  1. மீட்கலாம் என்றுதான் ஓரிடத்தில் சொன்னார்கள். ஆனால் அதற்கான செலவைக் கேட்டபோது வேண்டாம் என்று தோன்றிவிட்டது. நான் சொன்னது போல் அந்தப் பணத்தில் இரண்டு மடிக்கணினிகள் வாங்கிவிடலாம். அவ்வளவு அதிகம். தங்கள் வாழ்த்துக்கு நன்றி சுரேஷ்.

   Delete
 13. அன்பு கீதா, நடந்ததை எண்ணி வருந்தாமல் இருக்க முடியாது. இனியாவது நல்ல கவனத்துடன் இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். வானொலி தேவதை உங்களுக்கு உற்சாகம் தரட்டும்.நம்பிக்கையுடன் இருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் ஆறுதல் மொழிகளுக்கும் மனமார்ந்த நன்றி வல்லிம்மா.

   Delete
 14. வணக்கம் தோழி !

  இழப்பை எண்ணி வருந்தாமல் மீண்டும் உங்கள் படைப்புகளில் புதுமையைப் புகுத்தும் நோக்குடன் மனதில் தைரியத்தை வளர்த்துக் கொண்டு செயற்படுங்கள் நிட்சயம் வெற்றி பெறுவீர்கள் !மிக்க நன்றி தோழி தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டு எமக்கு வழங்கிய நல்ல அறிவுரைக்கும் .

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ஆறுதல் தரும் வார்த்தைகளுக்கும் அன்பான நன்றி தோழி.

   Delete
 15. இதுபோல் சில வேளைகளில் எழுதியவற்றை இழக்க நேரிட்டு விடுகிறது. உங்கள் வருத்தத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. கையால் எழுதிக் கொண்டிருந்த அந்த நாட்களில் கஷ்டமாக இருந்தாலும் இப்படிப்பட்ட பிரசினைகள் இல்லை. மீண்டும் அருவியாக உங்கள் எழுத்துக்கள் பாயட்டும்!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஜனா சார், முன்பெல்லாம் நோட்டுப்புத்தகத்தில் எழுதிவைத்துதான் தட்டச்சிக் கொண்டிருந்தேன். இப்போது நேரத்தை மிச்சப்படுத்துவதாய் நினைத்து நேரடியாக தட்டச்சு செய்துகொண்டிருக்கிறேன். அதன் விளைவுதான் இது. இனி கவனமாக இருப்பேன். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

   Delete
 16. ஆம் சகோதரி இதுபோல் இழக்கும் போது மிகவும் வேதனையாக இருக்கும் தான் . அது என்றும், தொலைத்த குழந்தை போல் வருத்தம் தாங்காமல் திரும்ப எப்படியாவது கிடைக்காதா என நினைப்பிருக்கும்.
  என்னுடைய முதல் சேமிப்பான டைரியை படிக்க கேட்டார்கள் என கொடித்திருந்தேன். அவர்கள் தந்து விட்டேன் என்று விட்டார்கள். பெரியவர்கள் மறந்து விட்டார்கள். என்ன செய்வது..? தேடிப்பாருங்கள் என சொல்லி சொல்லி விட்டு விட்டேன். கவிதைகள், கிருஷ்ணன் பாட்டு, யோகிராம் சூரத்குமார் மகானின் பாடல்கள் என 88 பதிவுகள் பல வருட உழைப்பு காணாமல் போய் விட்டது. சில பாடல்கள் யோகிராம் சூரகுமார் பஜனைப் பாடல் புத்தகத்தில் இடம் பெற்று இருக்கிறது. அது மட்டுமே ஆறுதல். என்றாவது திரும்ப கிடைக்காதாஎன தவிப்போடு இருக்கிறேன், தொலைந்ததை மனம் ஏற்கவில்லை. 6 வருடங்கள் ஆகிவிட்டது.
  இப்போது வலைப்பூவில் எழுத ஆரம்பித்து இருக்கிறேன்.

  புதுமையான படைப்புக்கள் ஊற்றாய் வரும் சகோதரி. தங்களின் பாடல் தொகுப்பைக் கேட்கிறேன். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. நாம் பார்த்துப் பார்த்துப் படைத்த படைப்புகளின் அருமை நமக்குத்தானே தெரியும். உங்கள் வேதனையை உணர்ந்துகொள்ள முடிகிறது. இனி கவனமாக இருங்கள். தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி உமையாள்.

   Delete
 17. வேதனையான செய்தி. கோமதி அரசு மூலம் விஷயம் அறிந்தேன். உழைப்பு வீணாகி விட்டது வருத்தத்துக்கு உரியது. நினைவிருப்பவனவற்றை மீண்டும் எழுதிப் பாருங்கள். பலருக்கும் இம்மாதிரி இழப்பு நேரிடும். உங்கள் ஆலோசனையை ஏற்று நானும் முக்கியமானவற்றைச் சேமித்து வைக்க வேண்டும். மிக்க நன்றி.

  ReplyDelete
  Replies
  1. உடனடியாக சேமித்துவைத்துவிடுங்கள் கீதா மேடம். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

   Delete
 18. ஆஸ்த்ரேலிய வானொலியில் பங்காற்றுவதற்கு வாழ்த்துகள். நொந்து போன மனதுக்கு ஆறுதலாக இருப்பது அறிந்தும் மகிழ்ச்சி.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வாழ்த்துக்களுக்கு அன்பான நன்றி மேடம்.

   Delete
 19. அவ்வப்போது Back up செய்து கொள்வது நல்லது - உங்கள் அனுபவம் மற்றவர்களுக்கும் ஒரு பாடம்......

  ஆஸ்த்ரேலிய வானொலியில் பங்காற்றுவது குறித்த தகவல் மகிழ்ச்சி தந்தது. வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் வெங்கட். இப்போது அன்றன்று Back up செய்வது போல் ஏற்பாடு செய்துவிட்டேன். உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

   Delete
 20. தங்கள் உள்ள வேதனை புரிகிறது.
  முற்காப்பாகப் பிரதி எடுப்பது நன்று.
  கணினியில் c drive சேமிக்காது d or e drive இல் சேமித்தால் அழிய வாய்ப்பிருக்காது.
  இந்நிலை எல்லோருக்கும் நல்ல பாடமாகும்
  மிக்க நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் யோசனைக்கு மிக்க நன்றி ஐயா. இனி கவனமாக இருப்பேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

   Delete
 21. எனக்கும் இரண்டு வருடம் முன் நிறைய படங்கள் அழிஞ்சி போனது கீதா அதுவும் சமையல் குறிப்பு படங்கள் ஸ்டேப் பை ஸ்டேப் எடுத்தவை ..இன்னொருமுறை செஞ்சாலும் அதே போல வருமான்னு எனக்கே சந்தேகம் :)
  இனி நீங்க எழுதும் பதிவுகளை பத்திரப்படுத்துங்க .

  வானொலியில் நான் கேட்டேனே உங்க குரலை :) வாழ்த்துக்கள் .

  ReplyDelete
  Replies
  1. உங்களுடைய சமையல் செய்முறை படங்கள் அழிந்துபோனது பெரும் சோகம்தான் ஏஞ்சலின். என்னதான் மறுபடி முயன்றாலும் முதன்முறை போல் சில சமயங்களில் வருவதில்லை. உண்மைதான். வானொலியில் என் நிகழ்ச்சியைக் கேட்டு ரசித்த உங்களுக்கு என் அன்பான நன்றி ஏஞ்சலின்.

   Delete
 22. மிகவும் வருத்தமடைய வைக்கும் செய்தி. தங்களின் இந்த பதிவு பலருக்கு ஒரு படிப்பினையாகும்.

  வாழ்த்துக்கள், ATBC வானொலியில் பங்காற்றுவதற்கு. புதன் கிழமை கேட்பதற்கு இயலாது. செவ்வாய்க்கிழமைகளில் கேட்பதற்கு முயற்சிக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சொக்கன். வானொலி நிகழ்ச்சியை இயன்றபோது கேட்டுப் பாருங்கள்.

   Delete
 23. இழப்பை எண்ணி வருந்தாமல் மீண்டும்....புது பொழிவுடன் உங்கள் எழுத்துக்கள் மிளிர வாழ்த்துக்கள்..வானொலியில் பங்காற்றுவதற்கும் வாழ்த்துகள்....

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றி அனுராதா.

   Delete
 24. மனம் தளராமல் மீண்டும் எழுதுங்கள்.

  வாழ்த்துகள்....

  ReplyDelete
  Replies
  1. மிகவும் நன்றி ரிஷபன் சார்.

   Delete
 25. சில அனுபவங்கள் தரும் பாடங்களுக்கு நாம் தரும் விலை சற்று அதிகமாகவே இருந்து விடுகிறது. மறு உருவாக்கம் சாமான்யமானது அல்ல. மனதை தேற்றிக் கொள்ளவே புதிய வாய்ப்பு கிடைத்ததாக எண்ணவும். புதிய தளத்தில் பிரகாசிக்க எனது பிரார்த்தனையும் பாராட்டும் தோழி.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் அன்புக்கு மிகவும் நன்றி நிலாமகள்.

   Delete
 26. செதுக்கி செதுக்கி எழுதியவை
  இழந்தால் ?
  கொடூரமாகத்தான் இருக்கும் ...
  தேறுதல்கள்

  ReplyDelete
 27. சில நாட்களாக நான் வலைப்பூ வருவதில் சிறு இடைவெளி விழுந்துவிட்டது. தொடர்ந்து இந்த வலைப்பூவுக்கு வந்து கருத்திட்ட நட்புகள் அனைவருக்கும் என் அன்பான நன்றி. பலருடைய பதிவுப்பக்கமும் வரவில்லை. வந்து வாசித்தாலும் கருத்திடவில்லை. அதற்காக என்னை மன்னிக்கவும்

  உங்களைப்பொலவே நானும் வலை ப்பக்கம் வந்து வெகு நாட்கள் ஆகி விட்டன.
  சில அனுபவங்கள் தரும் பாடங்களுக்கு நாம் தரும் விலை சற்று அதிகமாகவே இருந்து விடுகிறது.

  இழப்பை எண்ணி வருந்தாமல் மீண்டும்....புது பொழிவுடன் உங்கள் எழுத்துக்கள் மிளிர வாழ்த்துக்கள்..வானொலியில் பங்காற்றுவதற்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி ஸ்ரீவத்ஸன்.

   Delete
 28. உங்கள் இழப்பின் வலியை உணர்கிறேன் . விட்டதை ஈடுசெய்யும் உத்வேகம் கண்டிப்பாக உங்களுக்கு எழும் என்று அறிவேன். நலமே விளைக !

  வானொலி வாய்ப்புக்கு வாழ்த்துக்கள். சகலகலாவல்லியை எனக்குத்தெரியும் என்பதே பெருமை தானே! வானவில்லுக்கும் வந்து செல்லுங்கள்

  ReplyDelete
  Replies
  1. வானவில்லுக்கு வந்தேனே மோகன்ஜி. உங்களை மறுபடியும் உற்சாகமாக பதிவுலகில் பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

   Delete
 29. மிகுந்த மன வேதனை தரும் ஒன்று தான். இனியாவது நாம் எழுதும் பதிவுகளை பத்திரப்படுத்துவது எப்படி என்பதை முதலில் கற்க வேண்டும். வானொலி வாய்ப்புக்கு வாழ்த்துக்கள் தோழி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சசி. நீங்கள் குறிப்பிட்ட பதிவு மிகவும் பயனுள்ளதாயுள்ளது. உடனே வலைப்பக்கத்தை பேக்கப் செய்துவிட்டேன். மிகவும் நன்றி தோழி.

   Delete
 30. http://www.tnmurali.com/2014/05/how-to-backup-blog.html

  தோழி நம் நண்பர் முரளிதரன் அவர்கள் பதிவைப்பாருங்கள் உதவியாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. நண்பர் முரளிதரன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

   Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.