26 February 2020

கட்டித்தங்கம் வெட்டியெடுத்து...


இந்தியாவில் குறிப்பிட்ட நிலப்பகுதியில் டன் கணக்கில் தங்கத்தின் இருப்பு உள்ளதாக வதந்திகள் பரவிக் கொண்டிருக்கும் நிலையில், தங்கம் தங்கம் என்று பலரும் பேசிக் கொண்டிருக்கும் நிலையில், ஆஸ்திரேலியாவின் தங்கம் மற்றும் இதர கனிம வளங்கள் குறித்து எழுதிய பதிவு நினைவுக்கு வந்தது. 2018-இல் SBS தமிழ் வானொலியில் ஒலிபரப்பான 'நம்ம ஆஸ்திரேலியா' நிகழ்ச்சியின் எழுத்தாக்கத்தை இங்கே பகிர்கிறேன்.

&&&&& 

கட்டித்தங்கம் வெட்டியெடுத்து 
காதல் என்னும் சாறுபிழிந்து
தட்டித்தட்டி சிற்பிகள் செய்த உருவமடா

காதலன் காதலியை வர்ணிக்கும் இந்தக் கணக்குப்படி ஒரு பெண்ணை உருவாக்கவேண்டுமெனில் எத்தனை கிலோ கட்டித்தங்கம் தேவைப்படும்.. அப்படியெல்லாம் கிடைக்க வாய்ப்பே இல்லை, ஏதோ கவித்துவத்துக்காக கவிஞர் சொல்லியிருக்கிறார் என்று எண்ணத்தோன்றும். ஆனால் கிலோ கணக்கில் கட்டிக்கட்டியாக தங்கம் கிடைக்கும் ஆஸ்திரேலிய மண்ணில் அது சாத்தியமே.

ஆஸ்திரேலியப் பொருளாதாரத்தில் பெரும்பங்கு வகிப்பவை தங்கச்சுரங்கங்கள். தங்கச்சுரங்கங்களில் தங்கம் மண்ணோடு மண்ணாக கலந்து பொடியாகவோ துகள்களாகவோ, கிடைப்பது இயல்பு. மிஞ்சிப்போனால் 2 கிலோ, 3 கிலோ என்ற அளவில் கிடைக்கும். ஆனால் ஆஸ்திரேலியாவில் தூக்கமுடியாத எடையுடன் கட்டிக்கட்டியாகக் கிடைத்தது. ஆம். ஆஸ்திரேலியாவின் அடையாளங்களுள் தனித்துவமானவை golden nuggets எனப்படும் தங்கக்கட்டிகள்.



தங்கம் மட்டுமாவைரம், வெள்ளி, யுரேனியம், அலுமினியம், இரும்பு, ஈயம், துத்தநாகம், செம்பு, நிக்கல், குரோமியம், லித்தியம், கோபால்ட், படிகப்பாறைகள் முதல் நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு வரை ஆஸ்திரேலிய மண்ணை அகழ அகழக் கிடைக்கும் கனிமங்கள் ஏராளம்.

1851-ல் தொடங்கியது Gold rush எனப்பட்ட தங்க ஓட்டம். அதை ஓட்டம் என்பதை விடவும் பாய்ச்சல் எனலாம். உலகெங்கிலுமிருந்து ஏராளமான மக்கள் புலம்பெயர்ந்து ஆஸ்திரேலிய மண்ணில் குவிந்தனர். தங்கம் முதலில் கண்டறியப்பட்டது பல்லாரட் பகுதியில்தான். தோண்டுமிடமெல்லாம் தங்கம் அகப்பட்டது. மவுன்ட் அலெக்ஸாண்டர் பகுதியோ முன்னதை விடவும் அதிகமான தங்கத்தை வாரிவழங்கியது. இந்தப்பகுதியிலிருந்து மட்டும் ஏழு மாதங்களில் 1200 கிலோ எடையுள்ள தங்கம் சந்தைக்கு அனுப்பப்பட்டது. 1856-ல் மட்டும் ஆஸ்திரேலியாவில் வெட்டியெடுக்கப்பட்ட தங்கத்தின் அளவு சுமார் 97 டன்.


இன்றைய நிலவரப்படி உலகில் பாக்ஸைட், நிக்கல், ஓபல் கற்கள் உற்பத்திகளில் முதலிடத்திலும், தங்கம், இரும்பு உற்பத்திகளில் இரண்டாமிடத்திலும், வைரம், யுரேனியம், இயற்கைவாயு உற்பத்திகளில் மூன்றாமிடத்திலும் ஆஸ்திரேலியா இருப்பதைக் கொண்டே இம்மண்ணின் கனிம வளத்தை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறதல்லவா? ஆஸ்திரேலியாவின் சுரங்கங்களில் வேலைவாய்ப்பு மூலம் சுமார் 1,30,000 குடும்பங்கள் நேரடிப்பயன் பெறுகின்றன.




தங்கம் உற்பத்தியில் சீனாவுக்கு (400 டன்) அடுத்த இடத்தில் வருடத்துக்கு சுமார் 312 டன் அளவென்னும் சிறப்போடு ஆஸ்திரேலியா இரண்டாமிடத்தில் உள்ளது. விக்டோரிய மாநிலத்தின் பல்லாரட்டும் பென்டிகோவும் ஆஸ்திரேலியாவின் தங்க நகரங்கள் என்ற பெருமைக்குரியவை

Replica of Welcome nugget

உலகின் மிகப்பெரிய தங்கக்கட்டி முதலில் பல்லாரட்டில்தான் கிடைத்தது. 1858-ல் கண்டெடுக்கப்பட்ட அதன் எடை 69 கிலோ. இந்தக் கட்டித் தங்கத்தை எந்த சிற்பியும் தட்டித்தட்டி பெண்ணுருவாக்கவில்லை. முதலில் கிடைத்த தங்கக்கட்டி என்பதால் அதை வரவேற்கும் முகமாக அதற்கு Welcome nugget என பெயரிடப்பட்டது. அதுவரை இவ்வளவு பெரிய தங்கக்கட்டியை எவருமே பார்த்ததில்லை என்பதால் அதைப் பார்த்த முதல் இரண்டு தொழிலாளிகளும் நம்பமுடியாத அதிர்ச்சியில் மயங்கி விழுந்துவிட்டனராம். இயற்கையாகக் கிடைத்த முதல் பெரிய தங்கக்கட்டி என்ற சிறப்பைப் பெற்ற அது, லண்டன் சந்தையில் உருக்கப்பட்டு நாணயங்களாக மாற்றப்பட்டதாம். ஆனால் அதற்குமுன் அச்சுஅசலாக அதன் நகலுரு தயாரிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுவிட்டது.




அதன்பின் பதினொரு வருடங்கள் கழித்து 1869-ல் விக்டோரியா மாநிலத்தின் டுனாலி பகுதியில் மீண்டும் அதுபோல ஆனால் அதை விடவும் மூன்று கிலோ அதிகமாக 72 கிலோ எடையில் பூமிக்குக் கீழே கையெட்டும் தூரத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டது. உலகிலேயே மிகப்பெரிய தங்கக்கட்டி என்ற பெயரை இன்றுவரை தக்கவைத்துக்கொண்டிருக்கும் அதற்கு welcome stranger nugget என்று பெயரிடப்பட்டது. ஆனால் அதன் அருமை உணரப்படுமுன்னரே உருக்கப்பட்டு தங்கப்பாளமாக்கப்பட்டு இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டுவிட்டது என்பது ஏமாற்றம் தரும் செய்தி. உருக்கினால் பெறப்படும் தங்கத்தின் மதிப்பு மூலத்தங்கத்துக்கு இருக்காது எனினும் இப்படி பெருங்கட்டியாக மண்ணிலிருந்து நேரடியாகக் கிடைக்கும் அரிய பொருள் என்பதால் அது நிச்சயம் விலைமதிக்கவியலாத ஒன்றுதான்.


Hand of faith

மூன்றாவது இடத்தைப் பெறுவது 1980-ல் விக்டோரியா மாநிலத்தின் Wedderburn பகுதியில் கண்டெடுக்கப்பட்ட hand of faith என்று பெயரிடப்பட்டுள்ள 27 கிலோ எடையுள்ள தங்கக்கட்டியாகும். இது கிடைத்த கதை மிக சுவாரசியம். நம்ப முடியாததும் கூட. மாங்கு மாங்கென்று இரவு பகலாக சுரங்கம் வெட்டித் தங்கம் தேடும் தொழில்முறைப் பணியாளர்களைத் தவிர்த்து, சுரங்கத்தொழிலில் அனுபவமும் பயிற்சியும் இல்லாத சிலரும் பொழுதுபோக்காகத் தங்கத்தேடலில் ஈடுபடுவதுண்டு. கைவிடப்பட்ட சுரங்கங்களிலும் மலையெனக் குவிக்கப்பட்ட மண்ணிலும் தங்கள் அதிர்ஷ்டத்தைத் தேடியலைவர். அப்படி ஒருவர் metal detector எனப்படும் உலோகத்தைக் கண்டறியும் கருவியைக் கொண்டு மண்ணை ஆராய்ந்துகொண்டு வந்தபோது ஓரிடத்தில் தங்கம் இருப்பதாக கருவி காட்ட, தோண்ட ஆரம்பித்தார். ஒரு அடிக்கும் குறைவான ஆழத்திலேயே 27 கிலோ எடையுள்ள இந்தப் பெரிய தங்கக்கட்டியைக் கண்டறிந்தார். இதுதான் அதிர்ஷ்டம் என்பது போலும். இன்னும் மூல வடிவம் சிதைவுறாமல் பாதுகாக்கப்பட்டுவரும் அது, பத்தாண்டுகளுக்கு முன்புதான் லாஸ் வேகாஸில் உள்ள கோல்டன் நக்கட் கஸீனோவுக்கு ஒரு மில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்டதாம். இப்போது உருவளவில் மாறாதிருக்கும், இயற்கையாய்ப் பெறப்பட்ட தங்கக்கட்டிகளில் இதுவே மிகப்பெரியது என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.

 Holtermann with Holtermann's nugget 

இதற்கிடையில் 1872 இல் நியூ சௌத் வேல்ஸின் ஹாக்கின்ஸ் மலைப்பகுதியில் 286 கிலோ அளவிலான தங்கக்கட்டி கிடைத்தது. Holtermann’s nugget என்று பெயரிடப்பட்ட அது, அவ்வளவு பெரியதாக இருந்தும் உலகின் மிகப்பெரிய தங்கக்கட்டி என்ற சிறப்பை இழந்தமைக்குக் காரணம், அதன் மொத்த எடையில் 32% அதாவது 93 கிலோ மட்டுமே சுத்தமான தங்கம், மற்றவையெல்லாம் குவார்ட்ஸ் கற்கள் என்பதால்.   

ஆஸ்திரேலியாவின் பொருளாதாரத்தில்மக்கள் பெருக்கத்தில்.. வாழ்க்கை முறையில்.. அரசியலில்.. என யாவற்றிலும் பெருந்தாக்கத்தை உண்டாக்கிய தங்க ஓட்டம் பற்றி சொல்லும்போது தங்கச்சுரங்கத் தொழிலாளிகள் நடத்திய யுரேகா போராட்டம் பற்றி சொல்லாமல் இருக்கமுடியாது

தங்க ஓட்டம் ஆரம்பித்த பிறகு சுரங்கத்தொழிலாளிகளுக்கு சுரங்க வரி விதிக்கப்பட்டது. மாதம் 30 ஷில்லிங் என்பது தங்கம் கிடைக்குமா கிடைக்காதா என்று தெரியாமல் தெளிவற்ற எதிர்காலத்தை நோக்கி அயராது பாடுபட்டுக்கொண்டிருந்த ஏழைத் தொழிலாளிகளுக்கு எட்டாப்பணம். நான்கு மாதங்களில் அது 60 ஷில்லிங் என்றானது. மண்ணைத் தோண்டித் தோண்டி சுரங்க ஏற்றங்கால்களை இறக்கி இறக்கி தங்கம் கிடைக்காமல் வெற்றுக்கைகளோடு வேறிடம் தேடிக் களைத்து, வரிகட்டவும் வக்கற்றுத் தொய்ந்திருந்த ஏழைத் தொழிலாளிகளின் நெஞ்சம், வெடிக்கும் நாளை எதிர்பார்த்திருந்தது. சுரங்க அனுமதிக்கான வரி ரசீதுகளோடு தொழிலாளிகளும் அரசால் அடிக்கடி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். 1854 அக்டோபர் ஆறாம் நாள் அரசுக்கெதிரான போராட்டத்துக்கான வித்து விதைக்கப்பட்டது. பல்லாரட்டின் யுரேகா விடுதியில் தங்கியிருந்த ஜேம்ஸ் ஸ்கோபீ என்ற சுரங்கத் தொழிலாளி மூன்று காவலர்களாலும், விடுதி முதலாளியாலும் அடித்துக் கொல்லப்பட்டார். நால்வரும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். செல்வாக்காலும் பண பலத்தாலும் விடுதி முதலாளி குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டார்.

யுரேகா போராட்டம்

ஆத்திரமடைந்த சுரங்கத் தொழிலாளிகள் யுரேகா விடுதிக்கு தீவைத்துக் கொளுத்தினர். சுமார் பன்னிரண்டாயிரம் சுரங்கத் தொழிலாளிகள் ஒன்றிணைந்தனர். தங்களுக்கென ஒரு அமைப்பையும் கொடியையும் உருவாக்கினர். தங்கள் உரிமைக்காகவும் சுதந்திரத்துக்காகவும் இறுதிவரை உண்மையாகப் பாடுபடுவோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். சுரங்க அனுமதித்தாள்கள் கொளுத்தப்பட்டன. இவர்களுக்கு எதிராக பெரும் காவல்படை கொண்டுவரப்பட்டது. போராட்டம் பெரிதாய் வெடித்தது. தொழிலாளர்கள் உருவாக்கி வைத்திருந்த தடுப்பரண்கள் தகர்க்கப்பட்டன. தடியடிகளும் துப்பாக்கிச் சூடுகளும் நடத்தப்பட்டன. காயமுற்றவர்கள் மேலும் மேலும் காயமுறுவதைக் காணப்பொறுக்காதப் பெண்களும் போராட்டக்களத்தில் இறங்கினர். காயமுற்றவர்களைக் காப்பாற்றி அடிகளைத் தங்கள் உடல்களில் தாங்கிக்கொண்டனர். தொழிலாளிகள் மற்றும் அவர் குடும்பத்தார் மீதான இக்கடுமையான தாக்குதலை, கொஞ்சமும் மனித்தன்மையற்ற செயலென்று பிற்பாடு விசாரணைக் கமிஷன் கருத்துரைத்தது.

கிளர்ச்சியா புரட்சியா என்று இன்றும் வாதத்துக்குரிய விஷயமாகப் பார்க்கப்படும் இப்போராட்டத்தின் இறுதியில் கைதாகி தண்டனை அனுபவித்தவர்கள் அநேகம். போராட்டத்தில் உயிரிழந்தவர்கள் 27 பேர் என்று ஆவணப்பதிவில் இருந்தாலும் உண்மையான எண்ணிக்கையில் இன்னும் மர்மம் நீடிக்கிறது. குறைந்தது 60 பேராவது இருக்கக்கூடும் என்கிறார் க்ளேர் ரைட் என்னும் வரலாற்று ஆசிரியர்.

மண்வளம் ஒரு பக்கம்.. மனிதவளம் மறு பக்கம்.. இரண்டுக்கும் இடையிலான பிணைப்பும் போராட்டமும் எல்லாக் காலத்தும் உண்டென்பதன் சாட்சியாய் வரலாற்றில் பதிவுசெய்யப்பட்ட கடந்தகால நிகழ்வது.   
&&&&   


11 February 2020

ஆஸ்திரேலிய நாடும் கொடிகளும் உருவான கதை

தொடர்ந்து மூன்றாம் ஆண்டாக இவ்வாண்டும் 
SBS தமிழ் வானொலியில் 'நம்ம ஆஸ்திரேலியா' தொடரில் 
ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறு அன்று
என் நிகழ்ச்சிகள் தொடர்கின்றன. 
வாய்ப்பளித்த நண்பர் றைசெல் அவர்களுக்கு நன்றி.


ஜனவரி மாத நிகழ்ச்சியைக் கேட்க இங்கு சொடுக்கவும்.


நம்ம ஆஸ்திரேலியா.. இந்த உணர்வை நம்முள் விதைக்கும் பல விஷயங்கள் நம்மிடையே உள்ளன. அவற்றைப் பார்ப்பதற்கு முன் முதலில் ஆஸ்திரேலியா உருவான வரலாற்றைப் பார்ப்போம்.



கிட்டத்தட்ட அறுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனித இனம் தழைத்து பல்வேறு குழுக்களாகப் பிரிந்து தங்களுக்கென தனித்த மொழி, ஆன்மீக, கலாச்சார, பாரம்பரிய வாழ்க்கை முறைகளைக் கொண்டு வாழ்ந்துகொண்டிருந்த மாபெரும் நிலப்பரப்புதான் இன்றைய ஆஸ்திரேலியா. பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஜார்ஜ் மன்னர்களின் காலனியாதிக்கப் பேராசையால் உள்நாட்டில் உருவான பொருளாதாரச்சரிவு பல படிக்காத ஏழைகளை திருடர்களாகவும் போராளிகளாகவும் மாற்றியது. அரசால் கைது செய்யப்பட்ட அவர்களுக்கு இங்கிலாந்து சிறைகளில் போதுமான இடமில்லாக் காரணத்தால் நாடுகடத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதற்கு இங்கிலாந்து அரசு தேர்ந்தெடுத்த தீவுக்கண்டம்தான் ஐரோப்பிய கடல்வழி ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த மாபெரும் நிலப்பரப்பான ஆஸ்திரேலியா.



ஜனவரி 26,1788 இல்  இங்கிலாந்திலிருந்து கேப்டன் ஆர்தர் ஃபிலிப் தலைமையிலான முதல் கப்பல் தொகுதி பதினொரு கப்பல்களில் கிட்டத்தட்ட 1500 பேருடன் சிட்னி துறைமுகத்தில் வந்திறங்கியது. அவர்களில் பாதிப்பேர் , ஆண்களும் பெண்களுமான தண்டனைக் கைதிகள். கைதிகள் நிலச்சுவான்தாரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வேலையாட்களாக நியமிக்கப்பட்டனர். பண்ணைகளிலும் விவசாய நிலங்களிலும் வேலைசெய்யப் பணிக்கப்பட்டனர். பெண் கைதிகள் வசதி படைத்தவர்களுடைய வீட்டு வேலைக்காரிகளாகவும், தாதிக்களாகவும், மனைவிகளாகவும், ஆசை நாயகிகளாகவும் ஆக்கப்பட்டனர். மனிதாபிமானமற்ற முறையில் வழங்கப்பட்ட ஓய்வில்லாத பணிகளும் கால்வயிற்று உணவும் வேலைக்கார கைதிகளை முரடர்களாக மாற்றின. தப்பிக்கத்தூண்டின. தப்பித்த கைதிகள் மீண்டும் குற்றவாளிகளாக மாறினர். குதிரைகளைத் திருடுவது, பண்ணைகளைக் கையகப்படுத்துவது, கடைகளையும் வங்கிகளையும் கொள்ளையடிப்பது போன்ற பல்வேறு சட்டவிரோத காரியங்களில் ஈடுபட்டனர். சிலர் காடுகளில் தலைமறைவான வாழ்க்கையை மேற்கொண்டனர். பிடிபட்டவர்கள் தூக்கிலிடப்பட்டனர். 

தண்டனைக்காலம் முடிந்து விடுவிக்கப்பட்ட கைதிகளோ புதிய நாட்டில் இடத்தில் புதிய வாழ்க்கையை எப்படி அமைத்துகொள்வது என்று புரியாமல் தவித்தனர்.  காடுகளில் வீடுகளை அமைத்துக் குடியேறினர். வயிற்றுப் பிழைப்புக்காக தங்களுக்குத் தெரிந்த ஆட்டு ரோமம் கத்தரித்தல், மந்தையோட்டுதல், ஆடுமாடு மேய்த்தல், குதிரைகளைப் பழக்குதல் போன்ற வேலைகளைச் செய்தனர். 

1850-களில் ஆஸ்திரேலிய மண்ணில் தோண்டுமிடமெல்லாம் தங்கம் அதுவும் கட்டி கட்டியாக கிடைக்கிறது என்று செய்தி பரவியவுடன்  பல்வேறு நாட்டினரின் பார்வையும் ஆஸ்திரேலியாவின் பக்கம் திரும்பியது. வந்திறங்கிய பலதரப்பட்ட மக்களாலும் கலவையான கலாச்சாரம், மொழி, பழக்கவழக்கம் கொண்ட பன்முக கலாச்சார சமுதாயமாய் ஆஸ்திரேலியா உருவாகத் தொடங்கியது. தொடர்ந்து உருவாகிக்கொண்டே இருக்கிறது. சரி, ஆஸ்திரேலியா என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? இங்கிலாந்துக்காரர்களுக்கு தெற்கில் இருப்பதால் இப்பெருநிலப்பரப்புக்கு Terra Australis என்று பெயரிடப்பட்டது. லத்தீனில் இதற்கு தென்பகுதி நிலப்பரப்பு என்று அர்த்தம். 

இன்றைய ஆஸ்திரேலியாவுக்கு அடிக்கல் இடப்பட்ட ஜனவரி 26-ஆம் நாளைத்தான் ஆஸ்திரேலிய தினமாக கொண்டாடுகிறோம். First landing day என்றும் foundation day என்றும் ஆரம்பத்தில் ஏடுகளில் குறிக்கப்பட்டது. 1838 ல் தான் அதிகாரபூர்வமாக விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது. அதிலிருந்து ஆண்டுதோறும் அந்நாள் மகிழ்வோடு நினைவுகூரப்பட்டுவருகிறது. ஆஸ்திரேலியாவின் எல்லா மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் பொதுவிடுமுறைதினமான அந்நாளில் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் இப்போதிலிருந்தே துவங்கிவிட்டிருக்கும். ஆண்டுதோறும் விழாக்கள், ஊர்வலங்கள், இசை நிகழ்ச்சிகள், போட்டிகள், விருந்துகள், விருதுகள் என அமர்க்களப்படும். ஆரம்பத்தில் அத்தனை தீவிர கொண்டாட்டம் இல்லை என்றாலும் ஆஸ்திரேலியா என்ற ஒன்றுபட்ட நாடானது முதல் ஆஸ்திரேலியர் என்ற உணர்வும் ஒன்றுபட்டு ஆஸ்திரேலிய தினக் கொண்டாட்டம் களைகட்டத் தொடங்கியது. 

நாம் ஒன்றுபட்ட ஆஸ்திரேலியர் எனும் உணர்வைத் தூண்டும் வண்ணம் காணுமிடமெல்லாம் ஆஸ்திரேலியக் கொடிகள். வீடுகளில், கடைகளில், பெரு வளாகங்களில், வாகனங்களில், உடைகளில், தொப்பிகளில், குளிர்கண்ணாடிகளில், கைகளில், ஏன்.. முகங்களில் என எங்கெங்கும் கொடிவண்ணம் இழைத்து தங்கள் தேசப்பற்றை ஒவ்வொரு ஆஸ்திரேலியரும் வெளிப்படுத்தி மகிழ்வர். பொது இடங்களில் கூடி மகிழ்ந்து கொண்டாடுவர்.


ஆஸ்திரேலிய தேசியக் கொடி

ஆஸ்திரேலியக் கொடி என்பது என்ன? யூனியன் ஜாக் எனப்படும் ஐக்கிய ராஜ்ஜியத்தின் கொடியையும் commonwealth நட்சத்திரத்தையும் southern cross எனப்படும் தென்சிலுவைக் கூட்டத்தையும் கொண்டது. இங்கிலாந்தின் saint George’s cross, ஸ்காட்லாந்தின் saint Andrew’s cross மற்றும் அயர்லாந்தின் Saint Patrick’s cross ஆகிய  மூன்று சிலுவைகளின் சங்கமம்தான் யூனியன் ஜேக். எழுமுனைகளைக் கொண்ட காமன்வெல்த் நட்சத்திரம் ஆஸ்திரேலியாவின் ஏழு மாகாணங்களைக் குறிக்கிறது. தென்கோளப் பகுதியின் வானியல் திசைகாட்டியான தென்சிலுவைக்கூட்டத்தின் ஐந்து பெரும் விண்மீன்களான alpha crucis, beta crucis, gamma crucis, delta crucis, epsilon crucis ஆகியவை இடம்பெற்றுள்ளன. 

ஆஸ்திரேலிய தினக் கொண்டாட்டம் என்பது ஐரோப்பியக் குடியேறிகளால் பெரிதும் பாதிக்கப்பட்டு தங்கள் மண், மரபு, உயிர், வாழ்க்கைமுறை, குழந்தைகள் என பலவற்றையும் இழந்துவிட்டிருந்த  ஆஸ்திரேலிய மண்ணின் பூர்வகுடிகளுக்கு அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. சில வருடங்களுக்கு முன்பு வரையிலும் கூட இந்நாளை துக்க நாள், ஆக்கிரமிப்பு நாள், உய்வு நாள் என்றெல்லாம் குறிப்பிட்டு எதிர்ப்பு தெரிவித்தும் துக்கம் அனுசரித்தும் வந்தனர். ஆனால் காலப்போக்கில் நிலை மாறியது. இந்நாட்களில் ஆஸ்திரேலிய தினக் கொண்டாட்டங்களில் பூர்வகுடிக் குழுக்களும் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர். அவர்கள் மட்டுமல்ல.. பன்னாட்டுப் பின்னணியைச் சார்ந்த அனைத்து மக்களும் தங்கள் கலாச்சார, இன, மொழி, நிற பேதமற்று ஆஸ்திரேலியர் என்ற உணர்வால் ஒன்றிணையும் திருநாளாகவும் இந்நாள் கொண்டாடப்படுகிறது.


ஹெரால்டு தாமஸ்

1995 முதல் ஆஸ்திரேலியாவின் தேசியக் கொடிக்கு இணையாக அங்கீகரிக்கப்பட்ட மற்ற இரண்டு கொடிகளுள் ஒன்று பூர்வகுடிக் கொடி. இக்கொடியை உருவாக்கியவரும் இதன் காப்புரிமையாளருமான Harold Thomas மத்திய ஆஸ்திரேலியாவின் லுரிட்ஜா பூர்வகுடியைச் சேர்ந்தவர். இக்கொடி உருவாக்கப்பட்டு 48 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றும் கூட இதன் காப்புரிமை குறித்த சர்ச்சைகள் எழுந்தவண்ணமே உள்ளன. இக்கொடியை உருவாக்கிய Harold Thomas அனுமதி பெறாமலேயே பல வணிகநோக்கு நிறுவனங்கள் இக்கொடியைப் பயன்படுத்தி லாபம் சம்பாதிப்பதாகவும் அதன் மகிமை அறியாமல் மிகச் சாதாரணமாக வீடியோ விளையாட்டுகள் போன்றவற்றில் சித்தரிக்கப்படுவதாகவும் அறியப்படுகிறது. உதாரணத்துக்கு இந்தோனேஷியாவில் தயாரிக்கப்பட்டப் பொருட்களை ஆஸ்திரேலியப் பூர்வகுடி கலைப்பொருட்கள் என்ற பெயரில் இக்கொடியின் அடையாளத்தோடு வியாபாரப்படுத்திய Birubi Art நிறுவனத்தின் மீது போடப்பட்ட வழக்கில் 2.3 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் அபராதமாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. புனிதமாகவும் பெருமையாகவும் மதிக்கப்படும் இம்மண்ணின் அடையாளமான கொடியை தவறாகப் பயன்படுத்துவது பூர்வகுடி மக்களை அவமதிக்கும் செயலென்று ஹெரோல்டு தாமஸ் ஆதங்கிக்கிறார்.


ஆஸ்திரேலியப் பூர்வகுடிக் கொடி 

மேல்பாதியில் கருப்பும் கீழ்பாதியில் சிவப்பும் நடுவில் மஞ்சள் வட்டமும் கொண்ட இக்கொடி ஆரம்பகாலத்தில் நில உரிமைப் போராட்டத்துக்காக உருவாக்கப்பட்டது. பின்னர் ஒட்டுமொத்த ஆஸ்திரேலியப் பூர்வகுடி மக்களுக்கான அடையாளமாகிப்போனது. தற்போது முழுமையான சட்ட மற்றும் அரசியல் அந்தஸ்துள்ளதாக ஏற்கப்பட்டுள்ளது. கொடியின் கீழ்பாதி சிவப்பு ஆஸ்திரேலியாவின் செம்புழுதி மண்ணின் நிறத்தையும் மேல்பாதி கருப்பு இம்மண்ணில் வாழும் பூர்வகுடி மக்களின் நிறத்தையும் நடுவிலுள்ள மஞ்சள் வட்டம் உயிர்வாழ்வுக்கு ஆதாரமான சூரியனையும் குறிக்கிறது. மத்திய ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்த ஹெரோல்டு தாமஸுக்கு காணுமிடமெல்லாம் காட்சியளித்த சிவப்பு, கருப்பு, மஞ்சள் வண்ணங்களே இக்கொடி உருவாவதற்கான ஆதாரமெனக் குறிப்பிடுகிறார்.

தோரஸ் நீரிணைப்பு தீவுக் கொடி


ஆஸ்திரேலியாவின் அங்கீகாரம் பெற்ற மற்றொரு கொடி Torres Strait தீவுவாசிகளின் கொடி. இக்கொடியின் மேலும் கீழுமுள்ள பச்சை வண்ணம் தீவுகளின் பசுமையான நிலப்பகுதியையும், நடுவிலுள்ள நீலவண்ணம் சூழ்ந்திருக்கும் கடல் வண்ணத்தையும், கருப்புப் பட்டைகள் மக்களின் நிறத்தையும், நடுவிலுள்ள வெள்ளை நட்சத்திரம் அமைதியையும், அதன் ஐந்து முனைகள் ஐந்து தீவுக் குழுமத்தையும், நட்சத்திரத்தைச் சுற்றியுள்ள வெள்ளைத் தலையலங்கார அணி மக்களின் பண்பாட்டுக் கலாச்சாரத்தையும் குறிக்கிறது. 1992-ஆம் ஆண்டு பூர்வகுடி டாரஸ் நீரிணைத் தீவுக்குழுமத்துக்கான கொடியொன்றை உருவாக்கும் போட்டியில் வெற்றி பெற்ற வடிவம் இது. இதை உருவாக்கியவர் பெர்னார்ட் நமோக். குவீன்ஸ்லாந்தின் வடக்கே தனித்த கலாச்சார பண்பாட்டு, மொழி, மதம், வாழ்க்கைமுறை என்னும் அடையாளங்களோடு வாழ்ந்துவரும் இத்தீவுவாசிகள் ஆஸ்திரேலியப் பெருநிலப்பரப்பையும் பாப்புவா நியூகினி தீவையும் ஒருகாலத்தில் நிலவழி இணைந்திருந்தவர்களே. 12,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்நிலப்பரப்போடு இணைந்திருந்த அவர்களையும் இம்மண்ணின் மைந்தர்களென அங்கீகரிக்கும் பொருட்டு அவர்களுக்கான கொடியும் ஆஸ்திரேலியாவின் அங்கீகரிக்கப்பட்ட கொடிகளுள் ஒன்றாக உள்ளது. 

ஒன்றுபட்ட ஆஸ்திரேலியர் எனும் உணர்வோடு இம்மண்ணின் அனைத்து மக்களையும் அவர்தம் நம்பிக்கைகளையும் மதிப்பதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும். ஏனெனில் இது நம்ம ஆஸ்திரேலியா.. இல்லையா 

(ஒலிபரப்பான நாள் 05-01-2010) 
(படங்கள் உதவி - இணையம்)