11 February 2020

ஆஸ்திரேலிய நாடும் கொடிகளும் உருவான கதை

தொடர்ந்து மூன்றாம் ஆண்டாக இவ்வாண்டும் 
SBS தமிழ் வானொலியில் 'நம்ம ஆஸ்திரேலியா' தொடரில் 
ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறு அன்று
என் நிகழ்ச்சிகள் தொடர்கின்றன. 
வாய்ப்பளித்த நண்பர் றைசெல் அவர்களுக்கு நன்றி.


ஜனவரி மாத நிகழ்ச்சியைக் கேட்க இங்கு சொடுக்கவும்.


நம்ம ஆஸ்திரேலியா.. இந்த உணர்வை நம்முள் விதைக்கும் பல விஷயங்கள் நம்மிடையே உள்ளன. அவற்றைப் பார்ப்பதற்கு முன் முதலில் ஆஸ்திரேலியா உருவான வரலாற்றைப் பார்ப்போம்.



கிட்டத்தட்ட அறுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனித இனம் தழைத்து பல்வேறு குழுக்களாகப் பிரிந்து தங்களுக்கென தனித்த மொழி, ஆன்மீக, கலாச்சார, பாரம்பரிய வாழ்க்கை முறைகளைக் கொண்டு வாழ்ந்துகொண்டிருந்த மாபெரும் நிலப்பரப்புதான் இன்றைய ஆஸ்திரேலியா. பதினெட்டாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ஜார்ஜ் மன்னர்களின் காலனியாதிக்கப் பேராசையால் உள்நாட்டில் உருவான பொருளாதாரச்சரிவு பல படிக்காத ஏழைகளை திருடர்களாகவும் போராளிகளாகவும் மாற்றியது. அரசால் கைது செய்யப்பட்ட அவர்களுக்கு இங்கிலாந்து சிறைகளில் போதுமான இடமில்லாக் காரணத்தால் நாடுகடத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதற்கு இங்கிலாந்து அரசு தேர்ந்தெடுத்த தீவுக்கண்டம்தான் ஐரோப்பிய கடல்வழி ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த மாபெரும் நிலப்பரப்பான ஆஸ்திரேலியா.



ஜனவரி 26,1788 இல்  இங்கிலாந்திலிருந்து கேப்டன் ஆர்தர் ஃபிலிப் தலைமையிலான முதல் கப்பல் தொகுதி பதினொரு கப்பல்களில் கிட்டத்தட்ட 1500 பேருடன் சிட்னி துறைமுகத்தில் வந்திறங்கியது. அவர்களில் பாதிப்பேர் , ஆண்களும் பெண்களுமான தண்டனைக் கைதிகள். கைதிகள் நிலச்சுவான்தாரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வேலையாட்களாக நியமிக்கப்பட்டனர். பண்ணைகளிலும் விவசாய நிலங்களிலும் வேலைசெய்யப் பணிக்கப்பட்டனர். பெண் கைதிகள் வசதி படைத்தவர்களுடைய வீட்டு வேலைக்காரிகளாகவும், தாதிக்களாகவும், மனைவிகளாகவும், ஆசை நாயகிகளாகவும் ஆக்கப்பட்டனர். மனிதாபிமானமற்ற முறையில் வழங்கப்பட்ட ஓய்வில்லாத பணிகளும் கால்வயிற்று உணவும் வேலைக்கார கைதிகளை முரடர்களாக மாற்றின. தப்பிக்கத்தூண்டின. தப்பித்த கைதிகள் மீண்டும் குற்றவாளிகளாக மாறினர். குதிரைகளைத் திருடுவது, பண்ணைகளைக் கையகப்படுத்துவது, கடைகளையும் வங்கிகளையும் கொள்ளையடிப்பது போன்ற பல்வேறு சட்டவிரோத காரியங்களில் ஈடுபட்டனர். சிலர் காடுகளில் தலைமறைவான வாழ்க்கையை மேற்கொண்டனர். பிடிபட்டவர்கள் தூக்கிலிடப்பட்டனர். 

தண்டனைக்காலம் முடிந்து விடுவிக்கப்பட்ட கைதிகளோ புதிய நாட்டில் இடத்தில் புதிய வாழ்க்கையை எப்படி அமைத்துகொள்வது என்று புரியாமல் தவித்தனர்.  காடுகளில் வீடுகளை அமைத்துக் குடியேறினர். வயிற்றுப் பிழைப்புக்காக தங்களுக்குத் தெரிந்த ஆட்டு ரோமம் கத்தரித்தல், மந்தையோட்டுதல், ஆடுமாடு மேய்த்தல், குதிரைகளைப் பழக்குதல் போன்ற வேலைகளைச் செய்தனர். 

1850-களில் ஆஸ்திரேலிய மண்ணில் தோண்டுமிடமெல்லாம் தங்கம் அதுவும் கட்டி கட்டியாக கிடைக்கிறது என்று செய்தி பரவியவுடன்  பல்வேறு நாட்டினரின் பார்வையும் ஆஸ்திரேலியாவின் பக்கம் திரும்பியது. வந்திறங்கிய பலதரப்பட்ட மக்களாலும் கலவையான கலாச்சாரம், மொழி, பழக்கவழக்கம் கொண்ட பன்முக கலாச்சார சமுதாயமாய் ஆஸ்திரேலியா உருவாகத் தொடங்கியது. தொடர்ந்து உருவாகிக்கொண்டே இருக்கிறது. சரி, ஆஸ்திரேலியா என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? இங்கிலாந்துக்காரர்களுக்கு தெற்கில் இருப்பதால் இப்பெருநிலப்பரப்புக்கு Terra Australis என்று பெயரிடப்பட்டது. லத்தீனில் இதற்கு தென்பகுதி நிலப்பரப்பு என்று அர்த்தம். 

இன்றைய ஆஸ்திரேலியாவுக்கு அடிக்கல் இடப்பட்ட ஜனவரி 26-ஆம் நாளைத்தான் ஆஸ்திரேலிய தினமாக கொண்டாடுகிறோம். First landing day என்றும் foundation day என்றும் ஆரம்பத்தில் ஏடுகளில் குறிக்கப்பட்டது. 1838 ல் தான் அதிகாரபூர்வமாக விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது. அதிலிருந்து ஆண்டுதோறும் அந்நாள் மகிழ்வோடு நினைவுகூரப்பட்டுவருகிறது. ஆஸ்திரேலியாவின் எல்லா மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் பொதுவிடுமுறைதினமான அந்நாளில் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் இப்போதிலிருந்தே துவங்கிவிட்டிருக்கும். ஆண்டுதோறும் விழாக்கள், ஊர்வலங்கள், இசை நிகழ்ச்சிகள், போட்டிகள், விருந்துகள், விருதுகள் என அமர்க்களப்படும். ஆரம்பத்தில் அத்தனை தீவிர கொண்டாட்டம் இல்லை என்றாலும் ஆஸ்திரேலியா என்ற ஒன்றுபட்ட நாடானது முதல் ஆஸ்திரேலியர் என்ற உணர்வும் ஒன்றுபட்டு ஆஸ்திரேலிய தினக் கொண்டாட்டம் களைகட்டத் தொடங்கியது. 

நாம் ஒன்றுபட்ட ஆஸ்திரேலியர் எனும் உணர்வைத் தூண்டும் வண்ணம் காணுமிடமெல்லாம் ஆஸ்திரேலியக் கொடிகள். வீடுகளில், கடைகளில், பெரு வளாகங்களில், வாகனங்களில், உடைகளில், தொப்பிகளில், குளிர்கண்ணாடிகளில், கைகளில், ஏன்.. முகங்களில் என எங்கெங்கும் கொடிவண்ணம் இழைத்து தங்கள் தேசப்பற்றை ஒவ்வொரு ஆஸ்திரேலியரும் வெளிப்படுத்தி மகிழ்வர். பொது இடங்களில் கூடி மகிழ்ந்து கொண்டாடுவர்.


ஆஸ்திரேலிய தேசியக் கொடி

ஆஸ்திரேலியக் கொடி என்பது என்ன? யூனியன் ஜாக் எனப்படும் ஐக்கிய ராஜ்ஜியத்தின் கொடியையும் commonwealth நட்சத்திரத்தையும் southern cross எனப்படும் தென்சிலுவைக் கூட்டத்தையும் கொண்டது. இங்கிலாந்தின் saint George’s cross, ஸ்காட்லாந்தின் saint Andrew’s cross மற்றும் அயர்லாந்தின் Saint Patrick’s cross ஆகிய  மூன்று சிலுவைகளின் சங்கமம்தான் யூனியன் ஜேக். எழுமுனைகளைக் கொண்ட காமன்வெல்த் நட்சத்திரம் ஆஸ்திரேலியாவின் ஏழு மாகாணங்களைக் குறிக்கிறது. தென்கோளப் பகுதியின் வானியல் திசைகாட்டியான தென்சிலுவைக்கூட்டத்தின் ஐந்து பெரும் விண்மீன்களான alpha crucis, beta crucis, gamma crucis, delta crucis, epsilon crucis ஆகியவை இடம்பெற்றுள்ளன. 

ஆஸ்திரேலிய தினக் கொண்டாட்டம் என்பது ஐரோப்பியக் குடியேறிகளால் பெரிதும் பாதிக்கப்பட்டு தங்கள் மண், மரபு, உயிர், வாழ்க்கைமுறை, குழந்தைகள் என பலவற்றையும் இழந்துவிட்டிருந்த  ஆஸ்திரேலிய மண்ணின் பூர்வகுடிகளுக்கு அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. சில வருடங்களுக்கு முன்பு வரையிலும் கூட இந்நாளை துக்க நாள், ஆக்கிரமிப்பு நாள், உய்வு நாள் என்றெல்லாம் குறிப்பிட்டு எதிர்ப்பு தெரிவித்தும் துக்கம் அனுசரித்தும் வந்தனர். ஆனால் காலப்போக்கில் நிலை மாறியது. இந்நாட்களில் ஆஸ்திரேலிய தினக் கொண்டாட்டங்களில் பூர்வகுடிக் குழுக்களும் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர். அவர்கள் மட்டுமல்ல.. பன்னாட்டுப் பின்னணியைச் சார்ந்த அனைத்து மக்களும் தங்கள் கலாச்சார, இன, மொழி, நிற பேதமற்று ஆஸ்திரேலியர் என்ற உணர்வால் ஒன்றிணையும் திருநாளாகவும் இந்நாள் கொண்டாடப்படுகிறது.


ஹெரால்டு தாமஸ்

1995 முதல் ஆஸ்திரேலியாவின் தேசியக் கொடிக்கு இணையாக அங்கீகரிக்கப்பட்ட மற்ற இரண்டு கொடிகளுள் ஒன்று பூர்வகுடிக் கொடி. இக்கொடியை உருவாக்கியவரும் இதன் காப்புரிமையாளருமான Harold Thomas மத்திய ஆஸ்திரேலியாவின் லுரிட்ஜா பூர்வகுடியைச் சேர்ந்தவர். இக்கொடி உருவாக்கப்பட்டு 48 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றும் கூட இதன் காப்புரிமை குறித்த சர்ச்சைகள் எழுந்தவண்ணமே உள்ளன. இக்கொடியை உருவாக்கிய Harold Thomas அனுமதி பெறாமலேயே பல வணிகநோக்கு நிறுவனங்கள் இக்கொடியைப் பயன்படுத்தி லாபம் சம்பாதிப்பதாகவும் அதன் மகிமை அறியாமல் மிகச் சாதாரணமாக வீடியோ விளையாட்டுகள் போன்றவற்றில் சித்தரிக்கப்படுவதாகவும் அறியப்படுகிறது. உதாரணத்துக்கு இந்தோனேஷியாவில் தயாரிக்கப்பட்டப் பொருட்களை ஆஸ்திரேலியப் பூர்வகுடி கலைப்பொருட்கள் என்ற பெயரில் இக்கொடியின் அடையாளத்தோடு வியாபாரப்படுத்திய Birubi Art நிறுவனத்தின் மீது போடப்பட்ட வழக்கில் 2.3 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் அபராதமாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. புனிதமாகவும் பெருமையாகவும் மதிக்கப்படும் இம்மண்ணின் அடையாளமான கொடியை தவறாகப் பயன்படுத்துவது பூர்வகுடி மக்களை அவமதிக்கும் செயலென்று ஹெரோல்டு தாமஸ் ஆதங்கிக்கிறார்.


ஆஸ்திரேலியப் பூர்வகுடிக் கொடி 

மேல்பாதியில் கருப்பும் கீழ்பாதியில் சிவப்பும் நடுவில் மஞ்சள் வட்டமும் கொண்ட இக்கொடி ஆரம்பகாலத்தில் நில உரிமைப் போராட்டத்துக்காக உருவாக்கப்பட்டது. பின்னர் ஒட்டுமொத்த ஆஸ்திரேலியப் பூர்வகுடி மக்களுக்கான அடையாளமாகிப்போனது. தற்போது முழுமையான சட்ட மற்றும் அரசியல் அந்தஸ்துள்ளதாக ஏற்கப்பட்டுள்ளது. கொடியின் கீழ்பாதி சிவப்பு ஆஸ்திரேலியாவின் செம்புழுதி மண்ணின் நிறத்தையும் மேல்பாதி கருப்பு இம்மண்ணில் வாழும் பூர்வகுடி மக்களின் நிறத்தையும் நடுவிலுள்ள மஞ்சள் வட்டம் உயிர்வாழ்வுக்கு ஆதாரமான சூரியனையும் குறிக்கிறது. மத்திய ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்த ஹெரோல்டு தாமஸுக்கு காணுமிடமெல்லாம் காட்சியளித்த சிவப்பு, கருப்பு, மஞ்சள் வண்ணங்களே இக்கொடி உருவாவதற்கான ஆதாரமெனக் குறிப்பிடுகிறார்.

தோரஸ் நீரிணைப்பு தீவுக் கொடி


ஆஸ்திரேலியாவின் அங்கீகாரம் பெற்ற மற்றொரு கொடி Torres Strait தீவுவாசிகளின் கொடி. இக்கொடியின் மேலும் கீழுமுள்ள பச்சை வண்ணம் தீவுகளின் பசுமையான நிலப்பகுதியையும், நடுவிலுள்ள நீலவண்ணம் சூழ்ந்திருக்கும் கடல் வண்ணத்தையும், கருப்புப் பட்டைகள் மக்களின் நிறத்தையும், நடுவிலுள்ள வெள்ளை நட்சத்திரம் அமைதியையும், அதன் ஐந்து முனைகள் ஐந்து தீவுக் குழுமத்தையும், நட்சத்திரத்தைச் சுற்றியுள்ள வெள்ளைத் தலையலங்கார அணி மக்களின் பண்பாட்டுக் கலாச்சாரத்தையும் குறிக்கிறது. 1992-ஆம் ஆண்டு பூர்வகுடி டாரஸ் நீரிணைத் தீவுக்குழுமத்துக்கான கொடியொன்றை உருவாக்கும் போட்டியில் வெற்றி பெற்ற வடிவம் இது. இதை உருவாக்கியவர் பெர்னார்ட் நமோக். குவீன்ஸ்லாந்தின் வடக்கே தனித்த கலாச்சார பண்பாட்டு, மொழி, மதம், வாழ்க்கைமுறை என்னும் அடையாளங்களோடு வாழ்ந்துவரும் இத்தீவுவாசிகள் ஆஸ்திரேலியப் பெருநிலப்பரப்பையும் பாப்புவா நியூகினி தீவையும் ஒருகாலத்தில் நிலவழி இணைந்திருந்தவர்களே. 12,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்நிலப்பரப்போடு இணைந்திருந்த அவர்களையும் இம்மண்ணின் மைந்தர்களென அங்கீகரிக்கும் பொருட்டு அவர்களுக்கான கொடியும் ஆஸ்திரேலியாவின் அங்கீகரிக்கப்பட்ட கொடிகளுள் ஒன்றாக உள்ளது. 

ஒன்றுபட்ட ஆஸ்திரேலியர் எனும் உணர்வோடு இம்மண்ணின் அனைத்து மக்களையும் அவர்தம் நம்பிக்கைகளையும் மதிப்பதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும். ஏனெனில் இது நம்ம ஆஸ்திரேலியா.. இல்லையா 

(ஒலிபரப்பான நாள் 05-01-2010) 
(படங்கள் உதவி - இணையம்)

11 comments:

  1. அறிந்து கொள்ள வேண்டிய கட்டுரை மிகவும் அருமை...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனபாலன்.

      Delete
  2. ஏராளத் தகவல்கள் , தெளிவான உச்சரிப்பு. பாராட்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

      Delete
  3. எத்தனை தகவல்கள்... கட்டுரையை படித்து ரசித்தேன். மாலையில் கேட்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி வெங்கட்.

      Delete
  4. விரிவான தகவல்கள். ஆஸ்திரேலியாவின் வரலாற்றை மிக அருமையாகக் கூறியுள்ளீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி ராமலக்ஷ்மி.

      Delete
  5. இன்று ஒரு தகவல் போல நலல தகவல். சுருக்கமாகவும் ஆழமாகவும் அழகாக தொகுத்துள்ளீர்கள். சிறப்பு.

    நமது வலைத்தளம் : சிகரம்
    இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்

    ReplyDelete
    Replies
    1. தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
      ----- முதல் ஓலை பதிவில் பரீட்சார்த்தமாக ஆறு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

      Delete
  6. விரிவான கட்டுரை அருமை.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.