நறுமணமிக்க மலர்களையும் வாசனைமிக்க சாந்துப் பூச்சுகளையும், அழகையும், ஒளிமிக்க மணிகளாலான ஆபரணங்களையும் சுமக்க முடியாமல் சுமந்து பூத்துக்குலுங்கும் மலர்க்கொடிபோல் அசைந்தும் துவண்டும் நிலத்தில் பாதங்களை ஊன்றுவதற்கே பயந்து பயந்து அவள் நடப்பதைப் பார்க்கும்போது, ஆண்யானையின் பின்னே நாணத்தோடு நடந்துசெல்லும் பெண்யானையைப் போலவும் மென்னடைபோடும் அன்னப்பேட்டைப் போலவும் இருக்கும்.. பாதங்களைத் தரையில் ஊன்றுவதற்கே அஞ்சி அடியெடுத்துவைப்பாளெனில் அவள் பாதங்களின் மென்மையும் தன்மையும் புரிகிறதல்லவா?
கடிகமழ்
மலரும் கலவையும் அழகும்
கதிர்மணிப்
பணிகளும் சுமந்து
கொடியென
இசைந்து நிறைவுறப் பூத்த
கொம்பென
அசைந்து அசைந்து ஒல்கி
அடியிணை
படியிற் படப்பொறாது அஞ்சி
அன்புறு
கடகரிப் பின்போம்
பிடியெனக்
கன்னி நடைபயில் அன்னப்
பெடையென
மடநடை பெயர்வாள்.
(பாடல் இடம்பெற்றத் திரைப்படம் - பூவும் பொட்டும்
பாடியவர் - பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்கள்
பாடலாசிரியர் - கவிஞர் கண்ணதாசன்)
இதுவரை
நாங்கள் வர்ணித்த இனிய தன்மையளுக்கு, அமிர்தத்தில்
பிறந்தாற்போன்ற அருஞ்சிறப்பு கொண்ட பெண்ணவளுக்கு, இன்னுமொரு
சிறப்பு இருக்கிறது. அது என்ன தெரியுமா?
சந்திரமதி சிவபெருமானின் அருளால் பிறந்தவள் அல்லவா?
அவளுடைய மணவாளன் இன்னார் என்பது
இறைவனின் அருளால் மாத்திரமே தெரியவருமாம்.
எனவேதான் அவளை மணம் பேச
வந்த மன்னர்களுக்கெல்லாம் அவளைக் கொடுக்காமல் உரிய
மணாளனுக்காகக் காத்திருப்பதாகவும் தாங்கள் கேள்விப்பட்டதாக அம்முனிவர்கள்
கூறுகின்றனர். அது மட்டுமா? இத்தனை
அழகும் அம்சமும் பொருந்திய சந்திரமதி உன்னைச் சேர்வதற்கே உரியவள்
என்றும் சொல்லி அரிச்சந்திரனுக்கு சந்திரமதியின்
மீதான மோகத்தைத் தலைக்கேற்றுகின்றனர்.
அன்ன தன்மையளை, அமிர்தினில் பிறந்த
அணங்கு அபிடேகத்தை, அனந்த
மன்னர் தம் தமக்கு மணம்செயக் கருதி
மணம் மொழிந் தவர்க்கெலாம் கொடாது
முன்னம் எம் பெருமான் மொழிந்தவர்க் கன்றி
முடிக்கிலேன் கடிமணம் என்னச்
சொன்னதோர் மொழியும் கேட்டனம் அவள் நின்
தோள்களுக்கு இசைந்தவள் என்றார்.
(பாடல் இடம்பெற்றத் திரைப்படம் - பாவமன்னிப்பு
பாடியவர் - பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்கள்
பாடலாசிரியர் - கவிஞர் கண்ணதாசன்)
காதல் பித்தம் தலைக்கேறிய அரிச்சந்திரன்
தன்னிடம் சந்திரமதியை வர்ணித்த முனிவர்களையே தனக்காக தூது அனுப்பியதும்,
சுயம்வரத்தில் கலந்துகொண்டதும், சந்திரமதியின் கழுத்தில் முன்பே ஒரு மாங்கல்யம்
இருக்க, மறுதிருமணத்துக்கு ஏன் இந்த ஏற்பாடு
என்று கேட்டதும், அவள் சிவபெருமான் அருளால்
பிறந்தவள் என்றும் பிறக்கும்போதே மங்கல
அணியுடன்பிறந்தவள் என்றும் அது யார்
கண்களுக்குத் தெரிகிறதோ அவரே அவளை மணக்கும்
தகுதியுடைய மணாளன் என்றும் அவளுடைய
தந்தை சொல்லக்கேட்டு மகிழ்ந்து அவளை மணமுடித்ததும் அடுத்தடுத்துத்
தொடரும் கதைகள். உண்மைக்கு உதாரண
புருஷனாய் வாழ்ந்து அவன் பட்ட அவதிகள்
ஒருபக்கம் எனில் உத்தம புருஷனான
அவனை மணமுடித்தக் காரணமாய் சந்திரமதியும் அவள் மகனும் பட்ட
துயரங்கள் அளவிலாதவை… அறிவோமல்லவா?
(சந்திரமதி குறித்த வர்ணனைப் பாடல்கள் நிறைவுற்றன. ரசித்த அனைவருக்கும் அன்பான நன்றி.)