முயல்கள் சாதுவான
பிராணிகள். அவற்றால் பெரிதாய் என்ன பாதகம் விளைந்துவிடும் என்றுதானே நினைக்கத்தோன்றுகிறது? ஆனால் ஆஸ்திரேலிய நிலப்பரப்பில் சொந்த மண்ணின் தாவரங்கள் பலவும் அழியும் நிலையில் உள்ளதற்கு
முயல்கள் முக்கியக்காரணம் என்றால் வியப்பாக உள்ளதல்லவா? ஆம். முயல்களின் கொறிக்கும்
குணத்தால் பல அரிய தாவரங்களின் விதைகளும் குருத்துகளும் சிதைக்கப்படுகின்றன. வம்சவிருத்தி
பாதிக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாய் அந்த இனமே அழிந்துபோகிறது. அப்படி அழியக்கூடிய அபாயத்திலிருக்கும்
தாவர இனங்கள் ஒன்றிரண்டல்ல… கிட்டத்தட்ட 121 வகை என்கிறது 2007 இல் எடுக்கப்பட்ட
ஒரு ஆய்வு.
முதல் கப்பற்தொகுதியுடன்
கொண்டுவரப்பட்ட வளர்ப்பு முயல்களை விடவும் வேட்டைக்கென அறிமுகப்படுத்தப்பட்ட பெருமுயல்கள்தாம்
ஆஸ்திரேலிய பொருளாதாரத்தில் பெரும் சரிவை உண்டாக்குவதாக உள்ளன. 1859 இல் இருபத்து நான்கே
நான்கு காட்டுமுயல்கள் விக்டோரியா மாநிலத்தில் விடப்பட்டன. அறுபது வருடங்களுக்குப்
பிறகு 1920 இன் கணக்கெடுப்புப்படி ஆஸ்திரேலியாவில் அவற்றின் எண்ணிக்கை கிட்டத்தட்ட
ஆயிரம் கோடிக்கும் மேலாம். அதன்பிறகு ஒரு நூற்றாண்டு கடக்கவிருக்கும் நிலையில் இப்போது
அவற்றின் எண்ணிக்கை என்னவாக இருக்குமென்று நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள். முயல்களின்
எண்ணிக்கை பெருகும் வேகத்தை கீழே உள்ள வரைபடம் மூலம் அறிந்துகொள்ளலாம்.
முயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு
ஆகும் செலவும், முயல்களால் ஏற்படும் பொருளாதார நட்டமுமாக ஆஸ்திரேலிய அரசுக்கு ஏற்படும்
இழப்பு ஆண்டுக்கு 113 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் 565 கோடி ரூபாய்). நாட்டின்
பல பகுதிகளிலும் மானாவாரியாய் பெருகிக்கொண்டிருந்த முயல்கள் மேலும் பரவுவதைத் தடுக்க
பல யோசனைகள் பலராலும் முன்வைக்கப்பட்டது. ஏற்கனவே முயல்கள் ஏகமாய்ப் பரவிக்கிடக்கும்
குவீன்ஸ்லாந்துக்கும் நியூ சௌத் வேல்ஸுக்கும் இடையில் இனியும் முயல்கள் பரவாமல் தடுக்க
ஒரு பலத்த கம்பிவேலி போடப்படவேண்டும் என்று அப்போதைய (1884) எம்.எல்.ஏ ஒருவர் முன்வைத்த
ஆலோசனையைக் கிண்டல் செய்து ஒரு கேலிச்சித்திரம் வரையப்பட்டது. படத்தைப் பார்த்தால்
உங்களுக்கும் சிரிப்பு வருகிறதுதானே? ஆனாலும் முயல் தடுப்பு வேலி போடப்பட்டது. அதனால்
முயல்கள் கட்டுப்படுத்தப்படவில்லை என்றாலும் டிங்கோ மற்றும் நரிகளின் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது.
கிழக்குப் பகுதி
முழுவதும் ஆக்கிரமித்த முயல்கள் மேற்கு ஆஸ்திரேலியப் பக்கம் படையெடுப்பதைத் தடுக்கவும்
மேற்கு ஆஸ்திரேலியாவின் விளைநிலங்களைப் பாதுகாக்கவும் மாநிலத்தின் குறுக்கே தெற்குக்
கடற்கரையிலிருந்து வடக்கு கடற்கரை வரை நீண்ட இரும்புக் கம்பிவேலி போட முடிவுசெய்யப்பட்டது.
1901 இல் தொடங்கிய அந்த வேலை முடிய ஆறு ஆண்டுகள் பிடித்தன. இன்றும் உலகிலேயே மிக நீளமான
கம்பிவேலி என்ற பெருமைக்குரியது அந்த 1837 கி.மீ. நீளமுள்ள வேலி. கூடுதல் பாதுகாப்புக்காக
அத்துடன் மேலும் இரண்டு கம்பிவேலிகள் கீழே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது போல் போடப்பட்டன.
மொத்தமாக மூன்று
வேலிகளின் நீளத்தையும் கணக்கிட்டால் 3,256 கி.மீ. நீளம் வரும். நூறு வருடங்களுக்கு
முன் இதற்காக செலவு செய்யப்பட்ட தொகை அப்போதைய மதிப்பில் சுமார் நான்கு கோடி ரூபாய்.
பணியில் ஈடுபடுத்தப்பட்ட தொழிலாளர்கள் 120 பேர்,
ஒட்டகங்கள் 350, குதிரைகள் 210, கழுதைகள் 41. இந்த வேலியை அடைத்ததோடு நிம்மதியாக
இருந்துவிட முடியவில்லை. தொடர்ச்சியாய் அந்த வேலிகளைப் பராமரிப்பது பெரும் பிரச்சனையாகவே
இருந்துவந்தது.
myxomatosis என்னும்
வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு வேலிபராமரிப்புக்கான அவசியம் அவசியமற்றுப்போயிற்று.
முயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கோடு இந்த கொடிய வைரஸ் முயல்களிடையே பரப்பப்பட்டது.
வைரஸால் பாதிக்கப்பட்ட முயலைக் கடிக்கும் கொசு மற்றும் உண்ணிகள் மூலம் மற்ற முயல்களுக்கும்
நோய் பரவும். பாதிக்கப்பட்ட முயல்களின் உடலில் கட்டிகள் தோன்றி கண்பார்வை இழந்து, காய்ச்சல்
கண்டு இரண்டுவாரத்தில் இறந்துபோகும். ஒரேயடியாக சாகாமல் சித்திரவதைப்பட்டு சாவது எவ்வளவு
கொடுமை! மனிதர்களின் சுயநலத்துக்கு இதுவும் ஒரு சான்று.
மேற்கு ஆஸ்திரேலியாவின்
முயல்தடுப்பு வேலியையும் கடத்தப்பட்ட மூன்று சிறுமிகளையும் மையமாக வைத்து 2002 இல்
rabbit proof fence என்றொரு திரைப்படம் வெளியானது. தாயிடமிருந்து பிரித்துக் கொண்டுசெல்லப்பட்ட
மூன்று சிறுமிகள், அவர்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் முகாமிலிருந்து தப்பித்து தங்கள்
தாயைத் தேடிவருவதுதான் கதை. கிட்டத்தட்ட 2400 கி.மீ. தூரத்தை உணவின்றி உறக்கமின்றி
பாலையிலும் குளிரிலும் மிகவும் கஷ்டப்பட்டு கிட்டத்தட்ட ஒன்பது வாரங்கள் நடையாய் நடந்து
தாயை வந்தடைகின்றனர் சிறுமிகள். அவர்களுக்கு அடையாள வழிகாட்டியாய் இருப்பது இந்த முயல்தடுப்பு
வேலிதான். இந்தத் திரைப்படம் 1931-இல் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில்
எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முயல்தடுப்பு வேலி முயல்களைத் தடுத்ததோ இல்லையோ…
ஆனால் அந்த அபலைச் சிறுமிகளுக்கு வழிகாட்டியாய் இருந்து தாயிடம் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.
சரி. சிறுமிகள் ஏன் கடத்தப்படவேண்டும்? யார் கடத்தினார்கள்? அதைப் புரிந்துகொள்வதற்கு
ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் தவிர்க்கமுடியாத பக்கமான stolen generation பற்றிக் கொஞ்சம்
தெரிந்திருக்கவேண்டும்.
Stolen generation என்பது
காணாமற்போன ஒரு தலைமுறையைக் குறிக்கும்
சொல். வெள்ளையருக்கும்
பூர்வகுடிகளுக்கும் பிறந்த கலப்பினக் குழந்தைகளை
வலுக்கட்டாயமாக தாய்மார்களிடமிருந்து பிரித்துக்கொண்டு சென்று தனியே வளர்த்து அவர்களுடைய பழக்கவழக்கங்களை, நடை உடை பாவனைகளை வெள்ளையரைப் போலவே மாற்றும் ஒரு
முயற்சி ஆரம்பகால ஐரோப்பிய ஆதிக்கத்தால் மேற்கொள்ளப்பட்டது. அக்குழந்தைகளுக்கு
ஆங்கிலவழிக் கல்வி போதிக்கப்பட்டது. ஆங்கிலேய வழக்கப்படியான வாழ்க்கைமுறை பயிற்றுவிக்கப்பட்டது.
அவர்களது பூர்வகுடி கலாச்சார பாரம்பரிய ஆன்மீக அடையாளங்கள் அனைத்தும் மறக்கடிக்கப்பட்டன. தாய்ச்செடியிலிருந்து ஒடித்து வேறிடத்தில் பதியனிடப்பட்ட செடிகளைப் போல கடைசிவரை தங்கள்
உற்றார் பெற்றோரைக் காணாமலேயே முடிந்துபோனது அவர்களுடைய வாழ்க்கை.
ஒரு குழந்தை காணாமல்
போனாலேயே பதறும் தாய்மனம். ஒரு தலைமுறையே காணாமல் போவதென்றால்…அம்மக்களின் வேதனையை
என்னவென்று சொல்வது? ஆஸ்திரேலிய வரலாற்றில்
கறைபடிந்த காலகட்டமாகவே அது கருதப்படுகிறது. பூர்வகுடி மக்களின் ஆழ்மனத்தில் நீறு பூத்த நெருப்பாக
இன்றளவும் கனன்றுகொண்டிருக்கும் வேதனைமிகு நிகழ்வு அது.
(தொடரும்)
(படங்கள் உதவி; இணையம்)
முந்தைய பகுதி:
ஒண்டவந்த பிடாரிகள் - 12 (ஆடுகள்)
அடுத்த பகுதி
ஒண்டவந்த பிடாரிகள் - 14 (லாண்டானா, பிட்டூ & லிசியம்)
(படங்கள் உதவி; இணையம்)
முந்தைய பகுதி:
ஒண்டவந்த பிடாரிகள் - 12 (ஆடுகள்)
அடுத்த பகுதி
ஒண்டவந்த பிடாரிகள் - 14 (லாண்டானா, பிட்டூ & லிசியம்)